இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கை ஜனாதிபதியாக பதவியில் இருந்து விலகும் கோட்டாப இராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இராஜினாமா கடிதம் கொழும்புக்கு அனுப்பப்பட்டு, அது அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இன்று காலை தலைநகரில் அறிவிக்கப்பட்டது. இராஜபக்ஷ மூன்று வருடங்களுக்கு முன்னர் அதிக பெரும்பான்மையுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும் மற்றும் அவரது அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி மூன்று மாதங்களுக்கும் மேலாக நாடு தழுவிய மாபெரும் போராட்டங்கள் மற்றும் மூன்று பொது வேலைநிறுத்தங்களைத் தொடர்ந்து அவர் செவ்வாய்கிழமை அதிகாலை மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார்.
இராஜபக்ஷ நேற்று மதியம் சிங்கப்பூர் பறந்தார். நேற்றிரவு அவர் தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளார். இராஜபக்ஷ தனிப்பட்ட விஜயத்தில் இருப்பதாக அறிவித்த சிங்கப்பூர், புகலிடம் வழங்கப்படவில்லை அல்லது கோரப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியது.
முன்னர் இராஜபக்ஷவினால் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட, பரந்தளவில் அதிருப்திக்கு உள்ளான ரணில் விக்கிரமசிங்க, 'ஒழுங்கை மீட்டெடுப்பதற்கு தேவையானதை' செய்யுமாறு இராணுவத்திற்கும் பொலிஸாருக்கும் உடனடியாக அறிவுறுத்தினார். 'உடமைகள் மற்றும் உயிர் சேதங்களைத் தடுக்க' பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவ முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் உட்பட ஒரு குழுவை அவர் நியமித்துள்ளார்.
முதல் நாள் அவர் நாடளாவிய ரீதியில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி, மேல் மாகாணத்திற்கு 24 மணி நேர ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியதைத் தொடர்ந்து, விக்கிரமசிங்க நேற்று நண்பகல் முதல் இன்று அதிகாலை 5 மணி வரை கொழும்பு நிர்வாக மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தினார். நேற்றிரவு ஆயிரக்கணக்கான மக்கள் இராஜபக்ஷவின் இராஜினாமாவைக் கொண்டாடிய நிலையில், இந்த ஊரடங்குச் சட்டம் பெருமளவில் புறக்கணிக்கப்பட்டது.
எதிர்ப்புகளுக்கு எதிராக இராணுவத்தை கட்டவிழ்த்து விடுவதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கீழ் விக்கிரமசிங்க பரந்த அளவிலான அதிகாரங்களைக் கொண்டிருந்தாலும், இந்த நேரத்தில் முழு அளவிலான வன்முறையான அரச அடக்குமுறை, பின்விளைவுகளை ஏற்படுத்தி, அரசாங்க எதிர்ப்புக் கிளர்ச்சி மேலும் தீவிரமடைய வழிவகுக்கும் என்ற பதட்டமான கவலைகள் ஆளும் வர்க்கத்திற்குள் காணப்படுகின்றன.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது போல், “இணுவம் பலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று ரணில் விரும்புகிறார், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டாம் என்று இலங்கை இராணுவம் கூறுகிறது.”
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் நேற்று டுவிட்டரில் விடுத்த எச்சரிக்கையில், “எல்லா வன்முறைகளையும் நாங்கள் கண்டிக்கிறோம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு அழைப்பு விடுக்கிறோம்,” என்றார். 'நீண்ட கால பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை கொண்டு வரும் தீர்வுகளை செயல்படுத்த' அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த தருணத்தில் இராணுவமும் பொலிசும் கட்டவிழ்த்துவிடப்படக்கூடாது, மற்றும், எதிர்க்கட்சிகள், சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த ஒரு இடைக்கால ஆட்சியைத் தயாரிக்கும் அதே வேளை, வெகுஜன இயக்கத்தைக் கட்டுப்படுத்தவும் சிதறடிக்கவும் தங்கள் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும், என்பதாகும்.
புதனன்று செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜெனரல் சவேந்திர சிவா, 'புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் வரை சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முப்படை மற்றும் பொலிசுக்கு உதவுமாறு பொதுமக்களுக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கும்' வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோள்கள் ஒருபக்கம் இருக்க, எதிர்ப்பாளர்கள் மீதான இராணுவ மற்றும் பொலிஸ் தாக்குதல்கள் தொடர்கின்றன, குறைந்தபட்சம் 84 எதிர்ப்பாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த வாரத்தில் பாதுகாப்புப் படையினருடனான மோதல்களில் காயமடைந்த ஒரு இளைஞர் கொல்லப்பட்டார்.
இராஜபக்ஷவின் ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.), புதனன்று ஒரு அறிக்கையை வெளியிட்டு, பதில் ஜனாதிபதி விக்கிரமசிங்க மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளை, 'சட்டம் மற்றும் ஒழுங்கை உடனடியாக மீட்டெடுக்க' அழைப்பு விடுத்துள்ளது. 'ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உட்பட பல நபர்களைக் கொன்ற மற்றும் பொது மற்றும் தனியார் சொத்துக்களை அழித்த' போராட்டக்காரர்களை சட்டத்தை மீறுபவர்கள் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இதற்கிடையில், ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. வட்டாரங்கள், ஜனாதிபதி பதவிக்கான கட்சியின் முதல் தெரிவு விக்கிரமசிங்கவே என்று ராய்டர்ஸ் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளன. இந்த நகர்வுகள், எதிர்ப்பாளர்கள் மீதான எதிர்கால இராணுவ-பொலிஸ் அடக்குமுறை மற்றும் நீண்டகால அரசு அடக்குமுறையை முன்னெடுக்க இராஜபக்ஷவின் கட்சிக்கும் விக்கிரமசிங்கவிற்கும் இடையே நடந்து வரும் ஒத்துழைப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன, நேற்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஆர்ப்பாட்டக்காரர்களுடனான மோதலில் 16 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக தெரிவித்தார். இரண்டு இராணுவ சிப்பாய்கள் 'கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாகவும் அவர்களின் ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் எதிர்ப்பாளர்களால் திருடப்பட்டதாகவும்' அவர் குற்றம் சாட்டினார். இந்த ஆயுதங்கள் வன்முறையைப் பரப்புவதற்கு எதிர்ப்பாளர்களால் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறியது, இது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான எதிர்கால அரச ஆத்திரமூட்டல்கள் தயாராகி வருகின்றன என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.
புதன்கிழமை ஒரு தொலைக்காட்சி உரையில், விக்கிரமசிங்க ஆக்கிரமிப்பாளர்களைக் கண்டித்ததோடு, அவர்களை அகற்றுமாறு பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தியதாகவும் கூறினார். போராட்டக்காரர்கள் அலரி மாளிகையை (பிரதமரின் இல்லம்), ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையை ஆக்கிரமிக்க அனுமதிக்கக்கூடாது, ஏனெனில் அவர்கள் ஆவணங்களை எடுத்துச் செல்வார்கள் அல்லது அழிப்பார்கள், என அவர் கூறினார். இந்த கட்டிடங்களில் ஆக்கிரமிப்புகளை முடித்துக் கொள்வதாக அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் நேற்று அறிவித்தனர்.
நேற்று, இராஜபக்ஷவின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவரும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. சிரேஷ்ட உறுப்பினரும் பாராளுமன்ற சபாநாயகர் அபேவர்தன இன்று நடைபெறவிருந்த பாராளுமன்ற அமர்வை இரத்து செய்தார். ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைத்த பின்னர் மூன்று நாட்களுக்குள் அது மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார். ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19 சமர்ப்பிக்கப்படவிருந்தன மற்றும் ஜூலை 20 ஆம் திகதி பாராளுமன்றத்தால் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படவிருந்தார்.
எதிர்க்கட்சிகள் உட்பட அரசியல் ஸ்தாபனத்தின் இந்தக் கட்சிகள் எதுவும் விக்கிரமசிங்கவின் சர்வாதிகார நகர்வுகளை கண்டிக்கவில்லை. அதிக பட்சம், அவர்கள் இராணுவம் மற்றும் பதில் ஜனாதிபதியிடம் பலவீனமான வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
இராணுவத்திடம் வேண்டுகோள் விடுத்து, பிரதான பாராளுமன்ற எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாச, 'ஒடுக்கும் ஆட்சியின் கைக்கூலிகளாக இருக்க வேண்டாம் என்று எங்கள் அன்பான பாதுகாப்புப் படையினரை நான் கேட்டுக்கொள்கிறேன்' என்று பிரகடனம் செய்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவை விரைவில் பதவி விலகுமாறு கடவுளின் பெயரால் மன்றாடுகின்றேன் என விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் இதே கோரிக்கைகளை விடுத்தார்.
இதற்கு மாறாக, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) இலங்கையின் அரசியலமைப்பின் பிற்போக்கு தன்மையையும் அது ஜனாதிபதிக்கு வழங்கும் சர்வாதிகார அதிகாரங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது.
திரைக்குப் பின்னால் சர்வாதிகார ஆட்சிக்கான தயாரிப்புகள் செய்யப்பட்டு வரும், ஒரு இடைக்கால சர்வகட்சி அரசாங்கம் என்ற பொறியை நிராகரித்து, தொழிலாள வர்க்கம் பிரச்சினைகளை தன் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.
தொழிலாள வர்க்கம் தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து விடுபட்டு சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை நிறுவுவது அவசியமாகும். இவை இப்போது விக்கிரமசிங்க தலைமையிலான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கக் கோருவதுடன், சோசலிசக் கொள்கைகளுக்காகவும், அவசரத் தேவைகளான உணவு, சமையல் எரிவாயு, பெற்றோல், சுகாதாரம் மற்றும் பிற சமூகத் தேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காகவும் போராட வேண்டும்.
தொழிலாள வர்க்கத்தின் இந்த சுயாதீனமான ஐக்கியப்பட்ட இயக்கம், தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, சோசலிசக் கொள்கைகளுக்கு அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவ கிராமப்புற ஏழைகளையும் இளைஞர்களையும் அணிதிரட்ட வேண்டும்.
மேலும் படிக்க
- இலங்கையில் ஜூலை 9 ஆர்ப்பாட்டம்: தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு சோசலிச வேலைத்திட்டம்
- இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி "அனைத்து கட்சி" பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்கான வேண்டுகோளை நிராகரிக்கிறது
- "ஒழுங்கை மீட்டெடுக்க தேவையானதைச் செய்யுங்கள்" என்று இலங்கையின் பதில் ஜனாதிபதி இராணுவத்திற்கு உத்தரவிடுகிறார்