சீனாவுக்கு எதிராக அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனத்தைப் பலப்படுத்த அமெரிக்க செனட் மின்னணு சிப்கள் மற்றும் விஞ்ஞான சட்டம் நிறைவேற்றுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க செமிகண்டக்டர் தொழில்துறைக்கும் மற்றும் பல மூலோபாய உயர்-தொழில்நுட்ப துறைகளில் விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் ஐந்து ஆண்டுகளில் 280 பில்லியன் டாலர் வழங்கும் ஒரு சட்ட மசோதாவை இரு கட்சிகளின் ஒருமனதான ஒப்புதலுடன் அமெரிக்க செனட் புதன்கிழமை நிறைவேற்றியது. இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக வந்த 64 க்கு 33 வாக்குகள், சீனாவுக்கு எதிரான அமெரிக்கப் பொருளாதார மற்றும் இராணுவ ஆக்ரோஷத்தை தீவிரப்படுத்துவதை ஆதரிப்பதில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியினரின் ஒற்றுமையை வெளிப்படுத்தின.

'சிப்ஸ் அண்ட் சயின்ஸ் ஆக்ட்' (CHIPS and Science Act) என்று அழைக்கப்படும் இந்தச் சட்டம், அமெரிக்காவில் புதிய ஆலைகளைக் கட்டமைக்கவும் விரிவாக்கவும் சிப் உற்பத்தியாளர்களுக்கு மானியங்களாக மற்றும் வரிச் சலுகைகளாக 52 பில்லியன் டாலர் வழங்கும் என்பதோடு, செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ் மற்றும் குவாண்டம் கணினியியல் அத்துடன் பிற தொழில்நுட்பங்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக 200 பில்லியன் டாலர் வழங்கும்.

இந்த மசோதாவை ஆமோதித்து அதைப் பிரதிநிதிகள் சபைக்கு நகர்த்த 47 ஜனநாயகக் கட்சியினருடன் பதினேழு குடியரசுக் கட்சியினர் வாக்களித்தனர், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி அது விரைவில் சட்டமாக்கப்படும் என்றார். மின்னணுச் சிப்கள் மற்றும் விஞ்ஞானச் சட்டம் நிர்வாகத்தின் உயர் முன்னுரிமையில் இருப்பதாகவும், சாத்தியமானளவு விரைவில் அதில் அவர் கையெழுத்திடுவார் என்றும் ஜனாதிபதி பைடென் தெரிவித்துள்ளார்.

சீனாவுடனான வல்லரசு மோதலுக்கு அமெரிக்க ஆளும் ஸ்தாபகத்தின் உள்நாட்டுக் கொள்கை மற்றும் வெளியுறவுக் கொள்கை இலக்குகளை நேரடியாக வெளிப்படுத்தும் இந்த மசோதாவை ஆதரிப்பதில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியினர் கூட்டுச் சேர்ந்திருந்தனர்.

மூன்றாண்டுகளாக இந்த மசோதாவுக்காக பணியாற்றி வந்துள்ள செனட் பெரும்பான்மைத் தலைவர் சார்லஸ் ஷுமர் (ஜனநாயகக் கட்சி, நியூ யோர்க்), 1970 கள் மற்றும் 1980 களில் செமிகண்டக்டர் நிறுவனங்கள் 'சொந்தமாக அவை' சிறப்பாக இருந்ததாகத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், “ஆனால் 21 ஆம் நூற்றாண்டில், சீனா மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் அதிகமாக முதலீடு செய்வதால், நாம் ஓரங்கட்டப்பட்டு பின்னால் விடப்படலாம், யாருக்கு நஷ்டம்? அமெரிக்க தொழிலாளர்களுக்கு, அமெரிக்க பொருளாதார மேலோதிக்கத்திற்கு மற்றும் நம் தேசிய பாதுகாப்புக்கு.”

Senate Majority Leader Chuck Schumer, D-N.Y. (AP Photo/Jose Luis Magana)

அமெரிக்கத் தொழிலாளர்கள் பற்றி ஷுமர் குறிப்பிடும் கருத்து, ஒளிவுமறைவின்றி, முற்றிலும் எரிச்சலூட்டுவதாக உள்ளது. அமெரிக்க உயர் தொழில்நுட்பத் தொழில் துறையில் பாரியளவிலான முதலீடுகள் தொழிலாள வர்க்கத்திற்கு அல்ல, பெருநிறுவன அமெரிக்காவுக்கும் பென்டகனுக்குமே பயனளிக்கும் என்பது அவருக்கு முழுமையாகத் தெரியும். அதிநவீனச் செமிகண்டக்டர்களின் இடைவிடாத வினியோகமானது, 'சமயோசிதமான' உயர்-தொழில்நுட்ப ஆயுத அமைப்புகளின் உற்பத்தியாளர்களுக்கும், அத்துடன் மிகவும் பொதுவாக வாகனத் தொழில் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கும் தேவைப்படுகிறது.

வழக்கமான வாஷிங்டனின் பேரம்பேசல் இல்லாமல் செனட்டில் இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை. செனட் சபையின் சிறுபான்மை அணித் தலைவர் மிட்ச் மெக்கொன்னலின் (குடியரசுக் கட்சியாளர், கென்டக்கி) ஒப்புதலைப் பெறுவதற்காக, 2017 இல் அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்ட குடியரசுக் கட்சியின் வரி வெட்டுக்களைத் திரும்பப் பெறுவதற்கான எந்த முயற்சியையும் ஜனநாயகக் கட்சியினர் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கே மேற்கு வேர்ஜீனியாவின் வலதுசாரி ஜனநாயகக் கட்சியாளர் ஜோ மன்சின் உடனும் பேரம்பேசல்கள் இருந்தன, இவர் அமெரிக்க சமூகத்தின் செல்வச் செழிப்பான அடுக்குகளுக்கு ட்ரில்லியன்களை வாரி வழங்கிய ட்ரம்பின் வரி வெட்டுக்களைத் தூக்கிப் பிடிப்பதில் மெக்கொன்னலை ஆதரித்தார்.

இந்த மசோதாவை எதிர்த்த ஒரே ஜனநாயகக் கட்சியாளர், 'சுதந்திரமான' வேர்மாண்ட் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் ஏற்கனவே பெரும் இலாபத்தில் உள்ள தொழில்துறைக்கு வழங்கப்படும் கையளிப்பாக இதைத் தாக்கினார். செனட்டர் ரிக் ஸ்காட் (குடியரசுக் கட்சி, புளோரிடா) போன்ற வலதுசாரி குடியரசுக் கட்சியாளர்களும் சாண்டர்ஸூடன் இணைந்திருந்தார்கள், இவர் இந்தத் தொகுப்பைக் குறித்துக் கூறுகையில் 'நான் இது வரைப் பார்த்ததிலேயே பெருநிறுவன அமெரிக்காவுக்கான மிகப் பெரிய வெகுமதிகளில் ஒன்று' என்றார்.

பொருளாதாரத் தேசியவாத நிலைப்பாட்டில் இருந்தும் சாண்டர்ஸ் செமிகண்டக்டர் தொழில்துறையை விமர்சித்தார், “அமெரிக்க மக்களின் தேவைகளைப் புறக்கணித்து, வெளிநாட்டுக்குச் செல்லத் தயாராக இருக்கும் எந்த நிறுவனமும், பின்னர் காங்கிரஸிடம், 'ஹே, நாங்கள் இங்கே இருக்க வேண்டுமானால், நீங்கள் எங்களுக்கு ஒரு கையளிப்பு வழங்குவது நல்லது' என்று கோரும்,” என்றார்.

பைடென் ஓர் அறிக்கையில் கூறுகையில், இந்த மசோதா அமெரிக்கப் பொருளாதார நிலைக்கும் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கும் ஒரு பதிலாக உள்ளது என்றார். இரண்டு கட்சிகளின் ஒருமனதான இந்த நடவடிக்கையின் மூலோபாய நோக்கத்தில் இறங்கிய அமெரிக்க ஜனாதிபதி கூறுகையில் அது 'அமெரிக்க வினியோகச் சங்கிலிகளை' மேம்படுத்தும் என்றும், “ஆகவே அமெரிக்க வாடிக்கையாளர்கள் மற்றும் தேசிய பாதுகாப்புக்காக நமக்குத் தேவைப்படும் முக்கியத் தொழில்நுட்பங்களுக்காக நாம் வெளிநாடுகளை நம்பி இருக்க வேண்டியதில்லை,” என்றார்.

வெள்ளை மாளிகையில், வர்த்தகத் துறைச் செயலர் ஜினா ரைமொண்டோ, அமெரிக்கத் தொழில்நுட்பத் துறை அதன் தலைமை இடத்தைச் சீனர்களுக்கு விட்டுக் கொடுத்து விட்டதாக ஆளும் வட்டாரங்களுக்குள் நிலவும் பரவலான கவலைகளை வெளிப்படுத்தினார். உலகளாவிய மின்னணு சிப்கள் உற்பத்தியில் அமெரிக்காவின் பங்கு 40 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைந்து விட்டதாகவும், அதிநவீன மின்னணு சிப்கள் அனைத்தும் தைவானில் தயாரிக்கப்படுவதாகவும் அப்பெண்மணி கூறினார்.

செமிகண்டக்டர் உற்பத்தித் துறையில் அமெரிக்கா 'அடுத்து ஒன்றுமில்லை' என்பதாக முதலீடு செய்திருப்பதாகவும், அதற்கு எதிர்விதமாகச் சீனா, உள்நாட்டுத் திறனில் 150 பில்லியன் டாலர் செலவிட்டிருப்பதாகவும் செயலர் ரைமண்டோ தெரிவித்தார். மற்ற நாடுகளுடன் போட்டியிடவும் மற்றும் அவற்றின் உற்பத்தி வசதிகளை அதிகரிக்க ஊக்கமூட்டவும் அரசாங்கம் மானியங்கள் வழங்க வேண்டும் என்றவர் கூறினார்.

மானியத் தொகையை ஏற்றுக் கொண்ட பின்னர் 10 ஆண்டுகளுக்குச் சீனாவிலோ 'அல்லது விவகாரமான வேறெந்த நாட்டிலோ' உற்பத்தி ஆலைகளைக் கட்டமைப்பதில் இருந்து அமெரிக்க நிதி பெறும் எந்த நிறுவனத்திற்கும் தடை விதிக்கும் விதிமுறைகளையும் அந்தச் சட்ட மசோதா கொண்டிருக்கிறது.

செனட்டர் ரோஜர் விக்கர் (குடியரசுக் கட்சி, மிசிசிப்பி) கூறுகையில், சீனா மீது அமெரிக்காவின் 'தொழில்நுட்ப மேலாதிக்கம்' ஏற்படுத்துவதே இந்த மசோதாவின் நோக்கம் என்றார். உலகளாவிய இராணுவ மற்றும் பொருளாதார மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் உந்துதலுக்குப் பின்னால் உள்ள பொறுப்பற்றத் தன்மையை அடிக்கோடிடும் அச்சம் மற்றும் அவநம்பிக்கையின் அம்சங்களை வெளிப்படுத்தும் விதமாக, விக்கர் கூறுகையில், “இந்தத் தருணத்தில், வருந்தத்தக்க வகையில், பல்வேறு வகையான முக்கியத் தொழில்நுட்பங்களில் நாம் வழிநடத்தும் இடத்தில் இல்லை. அந்த இடத்தில் சீனா உள்ளது. சீனாவும் மற்ற நாடுகளும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளில் அதிகரித்தளவில் மேலாதிக்கம் செலுத்துகின்றன, இது நம் பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல மாறாக நம் தேசிய பாதுகாப்புக்கும் ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தலை முன்நிறுத்துகிறது,” என்றார்.

அரசாங்க நிதியுதவிக்காக வரிசையில் நிற்கும் நிறுவனங்களில் இன்டெல் கார்ப்., தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம், குளோபல் பவுண்டரீஸ், மைக்ரோன் டெக்னாலஜி மற்றும் அப்லைட் மெட்டீரியல்ஸ் ஆகியவை உள்ளடங்கி உள்ளன. 2021 இல் 556 பில்லியன் டாலரை எட்டிய உலகளாவிய செமிகண்டக்டர் சந்தையில் சுமார் 46 சதவீதம், அல்லது 258 பில்லியன் டாலர் அமெரிக்க நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பல வழிகளில், செமிகண்டக்டர் தொழில்துறை உலகளாவிய பொருளாதாரத்தின் ஒருங்கிணைந்த தன்மையையும், மின்னணு தொலைதொடர்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைச் சாத்தியமாக்கும் அடிப்படை அமைப்புகளை நவீன சமூகம் சார்ந்திருப்பதையும் வெளிப்படுத்துகிறது. பொருளாதாரத்தின் ஒவ்வொரு பிரிவும் அத்துடன் புவியில் பில்லியன் கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையும் இத்தகைய சின்னஞ்சிறிய சிப்களின் அபிவிருத்தி, வினியோகம் மற்றும் உற்பத்தியை அதிகரித்தளவில் சார்ந்துள்ளன.

எந்தவொரு தேசத்தின் எல்லைக்குள்ளும் உற்பத்தியைப் பின்னுக்கு இழுப்பதன் மூலம், இந்தத் தொழில்நுட்பங்களை இருப்புக்குள் கொண்டு வந்த சர்வதேசமயப்பட்ட நிகழ்வுபோக்கை தலைகீழாக மாற்றும் ஒரு முயற்சியானது, ஆழ்ந்த பிற்போக்குத்தனமான மற்றும் பேரழிவுகரமான முயற்சியாகும். ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் வரலாற்று வீழ்ச்சியைத் தடுப்பதற்கான மற்றும் அதன் மேலாதிக்க நலன்களுக்கு ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் அணிபணிய செய்வதற்கான முனைவை அது பின்தொடர்வதற்கு துல்லியமாக அது இந்தத் திசையில் தான் சென்றாக வேண்டும்.

Loading