மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவானுக்கான இந்த வாரப் பயணம், சீனாவுடனான அமெரிக்க மோதலைப் பெரியளவில் தீவிரப்படுத்தி இருப்பதுடன், இது ஒரு தலைமுறையில் இல்லாத வகையில் தைவான் ஜலசந்தியில் மிகப் பெரிய இராணுவ நெருக்கடியை தூண்டியுள்ளது.
இன்று அந்தத் தீவைச் சுற்றிச் சீனா நிஜமான போர் ஒத்திகைகளை நடத்துகின்ற நிலையில், தைவான் நடைமுறையளவில் ஓர் இராணுவ முற்றுகைக்கு உள்ளாக்கப்படும். அங்கே அருகிலுள்ள கடற்பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஓர் அமெரிக்க விமானந்தாங்கிப் போர்க் கப்பல் படைப் பிரிவுக்கும் மற்றும் கடல்வழி தரைவழி தாக்குதலுக்கான இரண்டு தயார் நிலைக் குழுக்களுக்கும் (Amphibious Ready Groups - ARG)) நேரெதிராக, இரண்டு சீன விமானந்தாங்கிப் போர்க் கப்பல்கள் தைவானை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.
உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான ஆக்ரோஷமான போரையே விஞ்சி விட அச்சுறுத்தும் ஓர் இராணுவ நெருக்கடிக்கு மத்தியில், எந்த அமெரிக்க ஊடகப் பிரமுகரும் பின்வரும் வெளிப்படையான கேள்வியை ஆகக் குறைவாகக் கூட கேட்கவில்லை என்பது ஒருபுறம், அதைத் தீவிரமாக விளங்கப்படுத்தக் கூட முற்படவில்லை: அதாவது, வெள்ளை மாளிகையின் ஆதரவுடன், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் எதற்காக தைவான் சென்றுள்ளார்?
இந்தப் பயணம் சீனாவுடனான அமெரிக்க உறவுகளில் 'எதையும்' மாற்றவில்லை என்று வெள்ளை மாளிகைச் செய்தித் தொடர்பாளர் ஜோன் கெர்பி கூறுவது முற்றிலும் அபத்தமாக உள்ளது.
ட்ரம்ப் மற்றும் பைடென் நிர்வாகங்கள், 1970 களில் இருந்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளை இயல்பாக வைத்திருந்த ஒரே சீனா கொள்கையைத் திட்டமிட்டுக் கலைத்து விட்டு, சீனா அதன் இறையாண்மை மீது ஓர் ஏற்றுக் கொள்ளவியலாத மீறல்களாகப் பார்க்கும் நடவடிக்கைகளை அடையாளம் கண்டு, ஒன்று மாற்றி ஒன்றாக, அவற்றையே செய்தன.
ஒரே சீனா கொள்கையை அமெரிக்கா கைத்துறந்தால், அதை முன்னிட்டு திறம்பட தைவானை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரித்தால், சீனா அத்தீவை இராணுவரீதியில் மீட்டெடுக்கும் என்பது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனுக்கு நன்கு தெரியும், மேலும் சீனா பகிரங்கமாக எச்சரித்துள்ளது. அவ்வாறு நடந்தால் சீனாவுக்கு எதிராகப் போருக்குச் செல்ல பைடென் அவரே சூளுரைத்துள்ளார்.
வேறு வார்த்தைகளில் கூறினால், உலகின் மிகவும் மக்கள்தொகை மிகுந்த நாட்டுடன் ஓர் இராணுவ மோதலுக்கு இட்டுச் செல்லும் என்று நனவுபூர்வமாகத் தெரிந்தே பைடென் நிர்வாகம் அதே நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு வாஷிங்டன் மிகப் பெரும் அச்சுறுத்தலாகக் கருதும் சீனாவுடன், நடைமுறையளவிலோ அல்லது சட்டபூர்வமாகவோ, பைடென் ஒரு போர் நிலையை விரும்புகிறார்.
கடந்த ஆண்டு மார்ச்சில், அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கென் கூறுகையில், 'சீனாவை நெருங்கிக் கொண்டிருக்கும் அதன் உடனடி சவாலாக வைத்திருக்குமாறு பாதுகாப்புத் துறைக்கு' பைடென் அறிவுறுத்தினார். பிளிங்கென் தொடர்ந்து கூறினார், “சீனா மட்டுந்தான் பொருளாதார பலத்துடன், இராஜாங்க, இராணுவ மற்றும் தொழில்நுட்ப பலத்துடன் ஸ்திரமான மற்றும் வெளிப்படையான இந்தச் சர்வதேச அமைப்பு முறையைத் தீவிரமாகச் சவால் செய்யக் கூடிய ஒரே நாடாக உள்ளது.”
சீனாவுடன் போருக்குச் செல்வதற்கான அமெரிக்கப் புவிசார் அரசியல் உள்நோக்கங்கள், 2018 தேசிய பாதுகாப்புத் துறை மூலோபாயத்தின் தலைமை ஆசிரியரான எல்பிரிட்ஜ் கோல்பெயால் (Elbridge Colby) வெளியிடப்பட்டது, தைவான் சம்பந்தமாக சீனா உடனான ஓர் மோதல் 'அமெரிக்காவின் திடமான பொருளாதார நலன்களுக்கு அர்த்தமுள்ளதாக' இருப்பதாக அவர் செவ்வாய்கிழமை ட்வீட்டரில் அறிவித்தார்.
சீனா இராணுவ ரீதியில் கட்டுப்படுத்தாவிட்டால், 'உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்திற்கும் அதிகமானதைச் சீனா கட்டுப்படுத்தும் அளவுக்குச் செல்வாக்கு பெற்றுவிடும். அது உலகளாவிய பொருளாதாரத்தின் நுழைவாயிலாக மற்றும் மையமாக ஆகிவிடும்' ஒரு எதிர்காலத்தைக் குறித்து கோல்பெ எச்சரிக்கிறார். மேலும், 'யுவான் மேலாதிக்கம் செலுத்தும் செலாவணியாக ஆகி விடும்,” என்றார்.
அவரின் The Strategy of Denial என்ற 2021 நூலில், சீனாவை இராணுவ நடவடிக்கை எடுக்கத் தூண்டிவிடும் ஒரு கொள்கையை அறிவுறுத்துகிறார். “அது முதலில் தாக்குதல் நடத்துவதை உறுதிப்படுத்துவதன் மூலம் சீனாவை இந்த விதத்தில் [ஆக்கிரமிப்பாளராக] பார்க்கப்படுவதை உறுதிப்படுத்துவது தான், அனேகமாக, தெளிவான மற்றும் சில வேளைகளில் மிகவும் முக்கியமான வழியாக உள்ளது. சில மனித தார்மீக உள்ளுணர்வுகள் அதைத் தொடங்கியவர் ஆக்ரோஷமானவர் என்பதை விட அடிப்படையில் அவர் தார்மீகப் பொறுப்பில் அதிக பங்கு வகிக்கிறார் என்பதில் அதிக ஆழமாக வேரூன்றி உள்ளன,” என்றார்.
வேறு வார்த்தைகளில் கூறினால், அமெரிக்கா சீனாவின் அனைத்து 'எச்சரிக்கைக் கோடுகளையும்' அடையாளம் கண்டு, அவற்றைக் கடக்க முயன்று வருகிறது, பின்னர் இராணுவ நடவடிக்கை மூலம் சீனா பதிலடி கொடுக்கும் போது ஆச்சரியப்படுவது போல பாசாங்கு செய்யும்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார் அரசியல் நோக்கங்கள், அமெரிக்க போர் முனைவின் ஒரேயொரு அம்சம் மட்டுந்தான். கட்டுப்படுத்தவியலா மருத்துவ, பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை எதிர்கொண்டு வரும்அமெரிக்க ஆளும் வர்க்கம், இராணுவ மோதலை 'தேசிய ஒற்றுமையை' பாதுகாப்பதற்கான ஒரு வழிவகையாகப் பயன்படுத்தும் ஆர்வத்தில் உள்ளது.
தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் பொருளாதார உரிமைகள் மீதான பெரும் தாக்குதல்களும் மற்றும் போர் முயற்சி என்ற பெயரில் தொழிலாளர்கள் அவர்களின் வாழ்க்கைத் தரங்களைத் தியாகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் சீனாவுடனான மோதலை விரிவாக்குவதில் உள்ளடங்கி உள்ளன.
பைடெனின் பைத்தியக்காரத்தனமும் கொலைபாதகப் போர் திட்டமும் ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் ஆதரவைச் சந்தித்துள்ளன.
செவ்வாய்கிழமை குடியரசுக் கட்சியின் செனட் சபைத் தலைவர் மிட்ச் மெக்கொன்னலும், அவருடன் ஏனைய 25 செனட் சபை குடியரசுக் கட்சி பிரதிநிதிகளும், “நாங்கள் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணத்தை ஆதரிக்கிறோம்,” என்று அறிவித்து ஓர் அறிக்கை வெளியிட்டனர்.
குடியரசுக் கட்சி பக்கம் சாய்ந்துள்ள வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தலையங்கம் ஒன்று 'தைவான் நெருக்கடி முற்றுகிறது' என்று அறிவித்ததுடன், “ஆயுத வினியோகங்கள் வேகமாக நகர வேண்டும், அதுவும் ஒரு சாத்தியமான படையெடுப்பைத் தடுக்கும் அளவுக்கு இருக்க வேண்டும்,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது.
செனட் சபை வெளியுறவுத் துறைக் குழுவின் தலைவர் செனட்டர் பாப் மெனெண்டஸ், பெலோசியின் பயணத்தைப் பாராட்டி நியூ யோர்க் டைம்ஸின் பொதுத் தலையங்கப் பக்கத்தில் எழுதுகையில், “தைவானுக்கு யார் செல்ல வேண்டும் யார் செல்லக் கூடாது என்று தீர்மானிப்பதைச் சீனாவிடம் விட்டு வைக்காத விஷயத்தில், திருமதி. பெலோசி சரியாக இருந்தார்,” என்று குறிப்பிட்டார்.
2022 தைவான் கொள்கைச் சட்டம் என்ற தலைப்பில் அவரும் குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாமும் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்த உள்ளதாக மெனெண்டஸ் அறிவித்தார், அது தைவானுக்கு ஆயுதம் வழங்குவதற்கான அமெரிக்க இராணுவச் செலவினங்களின் அளவை ஒழுங்குமுறைப்படி அதிகரிக்கும்.
மெனெண்டஸ் எழுதினார்:
எங்கள் சட்ட மசோதா அடுத்த நான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 4.5 பில்லியன் டாலர் பாதுகாப்பு உதவிகளை வழங்குவதன் மூலமும், தைவானை 'நேட்டோ அல்லாத முக்கிய கூட்டாளியாக' அங்கீகரிப்பதன் மூலமும் தைவானின் பாதுகாப்பை மீளவலுப்படுத்தும் — இது நெருக்கமான இராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகளை எளிதாக்கும் சக்தி வாய்ந்த அந்தஸ்தாகும். சர்வதேச அமைப்புகளில் அதன் பங்களிப்பு மற்றும் பன்முக வர்த்தக உடன்படிக்கைகள் மூலம் தைவானின் இராஜாங்க இடத்தையும் இது விரிவாக்கும்.
இது நடைமுறையளவில் அமெரிக்காவினது ஒரே சீனா கொள்கையின் முடிவைக் குறிக்கும். வேறு வார்த்தைகளில் கூறினால், ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்ப் நிர்வாகத்தின் முத்தாய்ப்பான கொள்கையை ஏற்று வருகிறார்கள்.
சீனாவுடன் ஒரு போரைத் தூண்டுவதற்கான பைடெனின் முயற்சிகளுக்கு மத்தியில், ஜனநாயகக் கட்சியின் 'முற்போக்கு' அணி செனட்டர்களான பேர்ணி சாண்டர்ஸூம் மற்றும் எலிசபெத் வாரனும் நிருபர்கள் கேட்ட நேரடி கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து, பெலோசியின் பயணம் குறித்து மௌனம் சாதிக்கின்றனர்.
ஆனால் சாண்டர்ஸின் மனோபாவம், அவருக்குத் துணை இருக்கும் அவரின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் மாட் டஸ்ஸின் (Matt Duss) அறிக்கைகளால் தெளிவாக்கப்பட்டது, அவர் The Intercept க்கு அளித்த ஒரு பேட்டியில் அமெரிக்க இராணுவக் கட்டமைப்பின் நோக்கங்களை முழுமையாக ஆதரித்தார்.
'தைவானுக்கான பாதுகாப்பை மேம்படுத்துமாறும்,' மற்றும் 'தைவானின் பாதுகாப்பு மற்றும் தற்காப்புக்கு … முன்னுரிமை அளிக்குமாறும்' டஸ் அறிவுறுத்தினார்.
பெலோசியின் தைவான் பயணத்தின் விளைவுகள் குறித்து எச்சரிப்பவர்களால் 'பணவீக்க அச்சுறுத்தல் அதிகரிப்பதாக' கண்டனம் செய்த அவர், 'தைவான் தொடர்பாக பணவீக்க அச்சுறுத்தல் வடிவத்தில் ஈடுபடுவது ஆக்கபூர்வமானது இல்லை' என்றார்.
வேறு வார்த்தைகளில் கூறினால், பெலோசியின் நடவடிக்கைகள் மொத்த மனிதகுலத்தையும் அச்சுறுத்துவதாக எச்சரிப்பவர்கள் தான் உண்மையான பிரச்சனையே தவிர, எரியூட்டும் பெலோசியோ மற்றும் அமெரிக்க இராணுவமோ பிரச்சினை இல்லை என்றாகிறது. 'உங்களுக்கே தெரியும், சீனாவில் எதேச்சதிகாரம் அதிகரித்து வருகையில், அமெரிக்க-சீனா உறவு பிரதானமாக அமெரிக்க நடவடிக்கைகள் சம்பந்தப்பட்டது' என்று ஜோடிக்கும் 'முற்போக்குவாதிகளை' The Intercept இல் பேட்டி எடுத்தவர் கண்டிக்கிறார்.
வெள்ளை மாளிகையின் நடவடிக்கைகள் எவ்வளவு தான் பொறுப்பற்றதாக அல்லது ஆபத்தானதாக இருந்தாலும், ஜனநாயகக் கட்சியிலோ அல்லது அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்திலோ அமெரிக்க இராணுவவாதத்தைத் தீவிரமாக எதிர்க்கும் எந்தப் பிரிவும் இல்லை என்பதையே இந்த அறிக்கைகள் மீண்டும் ஒருமுறைத் தெளிவாக்குகின்றன.
ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் ஸ்தாபகமும் சீனாவுக்கு எதிரான விரிவாக்கத்திற்கு ஆதரவாக அணி வகுத்து நிற்கும் நிலையில், தொழிலாள வர்க்கமே போருக்கு எதிரான போராட்டத்திற்குச் சமூக அடித்தளத்தை அமைக்கிறது. ஏற்கனவே பாரியளவில் வாழ்க்கைச் செலவு நெருக்கடியையும் மற்றும் மந்தநிலையையும் முகங்கொடுத்து வரும் தொழிலாளர்கள், அமெரிக்காவின் வெளிநாட்டவர் விரோதப் போக்கு கொண்ட சீன-விரோத பிரச்சாரத்தின் பெயரில் 'தியாகங்களை' நிராகரித்து, போருக்கு எதிரான போராட்டத்தில் தங்களின் சகச் சீனத் தொழிலாளர்களுடன் ஐக்கியப்பட வேண்டும்.