ஏன் UAW பல்கலைக்கழக ஊழியர்கள் வில் லெஹ்மன் UAW இன் தலைவராவதற்கு வாக்களிக்க வேண்டும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐக்கிய வாகனத் தொழிலாளர் (United Auto Workers - UAW) தொழிற்சங்கத்தின் தலைமைக்கான வேட்பாளர் வில் லெஹ்மனால் UAW இல் உள்ள பட்டதாரி மாணவர் தொழிலாளர்கள் மற்றும் பிற பல்கலைக்கழக ஊழியர்களுக்கு பின்வரும் அறிக்கை வெளியிடப்பட்டது. உலக சோசலிச வலைத் தளம் (WSWS) லெஹ்மனின் பிரச்சாரத்தை ஆதரிக்கிறது. மேலதிக தகவலுக்கு, WillforUAWPresident.org வலைத் தளத்தை பார்வையிடவும்.

செப்டம்பர் 11, ஞாயிற்றுக்கிழமை கிழக்கத்தைய நேரம் பிற்பகல் 2 மணிக்கு, லெஹ்மன் தனது பிரச்சாரம் பற்றிய நேரடி கலந்துரையாலை சூம் செயலியில் நடத்தவிருக்கிறார். மேலும் அறிய இங்கே பதிவு செய்யுங்கள்.

வில் லெஹ்மன்

அன்பான பல்கலைக்கழக ஊழியர்களே,

எனது பெயர் வில்லியம் லெஹ்மன். நான் பென்சில்வேனியாவின் மாக்கன்கியில் உள்ள மாக் ட்ரக்ஸ் ஆலையில் பணிபுரியும் 34 வயதான இரண்டாம் அடுக்கு வாகனத் தொழிலாளியாவேன், மற்றும் நான் ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். நான் ஏன் UAW தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறேன் என்பதை UAW இல் உள்ள 100,000 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக ஊழியர்களுக்கு விளக்கி உங்கள் வாக்குகளைக் கோர விரும்புகிறேன்.

பல தசாப்தங்களாக நமது வாழ்க்கைத் தரங்கள் மீது பெருநிறுவனங்கள் நடத்தி வரும் தாக்குதல்களை தலைகீழாக மாற்றுவதற்கான போராட்டத்தில் UAW உறுப்பினர்களையும் முழு தொழிலாள வர்க்கத்தையும் அணிதிரட்டுவதற்கே எனது பிரச்சாரம் போராடுகிறது.

எவ்வாறாயினும், பெருநிறுவனங்களுக்கு எதிரான ஒரு தீவிரமான போராட்டத்திற்கு, பெருநிறுவன சார்பு UAW எந்திரத்திடமிருந்து (அதன் மொத்த சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலருக்கு அதிகமாகவும், ஆண்டு ஊதியச் செலவு 75 மில்லியன் டாலராகவும் உள்ளது) அதிகாரத்தை கைப்பற்றி அதை தொழிலாளர்களின் வசம் திருப்பித் தர வேண்டும். இதற்கு, எங்கள் நலன்களுக்காக போராட தொழிற்சாலையில் சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களின் வலையமைப்பை உருவாக்குவது தேவை.

அதே நேரத்தில், எனது பிரச்சாரம் UAW மற்றும் அதற்கு அப்பால் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தை கொண்டு வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிலான சமூக சமத்துவமின்மை, தீவிரமாக அதிகரித்து வரும் உலகளாவிய போர், பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தின் ஆபத்து, சுற்றுச்சூழல் சீரழிவு போன்ற நாம் எதிர்கொள்ளும் அனைத்து பெரிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு முதலாளித்துவத்திற்கு எதிராக முழு தொழிலாள வர்க்கத்தையும் அணிதிரட்டுவது அவசியமாகும்.

இந்த ஆண்டு UAW தலைமைக்கு நாங்கள் நேரடித் தேர்தல்களை நடத்துகிறோம், ஏனென்றால் எங்களின் சந்தா பணத்தை திருடியதற்காக அல்லது பெருநிறுவனங்களிடமிருந்து இலஞ்சம் வாங்கியதற்காக ஏராளமான அதிகாரிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த ஊழல் விவகாரம் ஒரு சில ‘மோசமான’ தலைவர்களைப் பற்றியது அல்ல. மாறாக, முழு அதிகாரத்துவ மட்டத்தின் மையத்தில் உள்ள அழுகலை அம்பலப்படுத்துகிறது.

நாம் வாகன ஆலைகளில் அல்லது வகுப்பறைகளில் எங்கு வேலை செய்தாலும், UAW அதிகாரத்துவத்தின் பல தசாப்த கால பெருநிறுவன சார்பு காட்டிக்கொடுப்புக்களின் தாக்கத்தை நாம் அனைவரும் எதிர்கொள்கிறோம். நாம் மேலும் மேலும் கஷ்டங்களை எதிர்கொள்ளும் நிலையில், பெருநிறுவன இலாபங்கள் பெருகுகின்றன, பல்கலைக்கழக உதவித்தொகைகள் அதிகரிக்கின்றன, மேலும் பெருநிறுவன மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் மேலும் மேலும் பணக்காரர்களாகின்றனர்.

வாழ்க்கைச் செலவுகள் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் பட்டதாரி மாணவர்களை குறிப்பாக கடுமையாக பாதிக்கிறது. உங்களில் பலர் வாஷிங்டன் மாநிலம், கலிஃபோர்னியா, மற்றும் நியூயோர்க்கில் வசிக்கிறீர்கள், அங்கு பட்டதாரி மாணவர் சம்பளத்தை பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. UAW, கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் ஆண்டுக்கு 3 சதவீத உயர்வுகளுக்கான ஒப்பந்தங்களை ஒப்புக்கொண்டுள்ளது. வருடாந்திர பணவீக்கம் 8-9 சதவிகிதத்திற்கு இடையே இயங்கும் நிலையில், இது ஒரு பெரிய ஊதியக் குறைப்பு ஆகும், அதிலும் குறிப்பாக உலகின் மிக விலையுயர்ந்த நகரங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு இது பொருந்தும்!

எல்லா இடங்களிலும் இதே நிலைதான் உள்ளது. UAW இல் உள்ள தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் போது —அதாவது, UAW எந்திரம் நிறைவேற்ற முயன்ற ஒப்பந்தங்களை எப்போதும் நிராகரித்ததன் பின்னர்— நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு வறுமை நிலை வேலைநிறுத்த ஊதியத்தில் தள்ளப்படுகிறோம். 2021 ஆம் ஆண்டில், UAW இல் உள்ள பட்டதாரி மாணவர்கள் ஹார்வாட், கொலம்பியா மற்றும் நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் வேலைநிறுத்தம் செய்தபோது, உங்களை ஆதரிக்க எங்களை அணிதிரட்டுவது ஒருபுறம் இருக்க, வாகனத் தொழிலாளர்களுக்கு உங்கள் வேலைநிறுத்தம் பற்றி தெரிவிக்கக்கூட UAW எதையும் செய்யவில்லை. மேலும், வாகன மற்றும் பிற உற்பத்தித் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களின் போதும் இதுதான் நடக்கிறது.

UAW பெரளவில் மட்டுமே ஒரு தொழிற்சங்கமாக உள்ளது. உங்களில் பலர் UAW க்கு புதியவர்கள், என்றாலும் எந்திரம் எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றிய முக்கியமான அனுபவங்கள் உங்களுக்கு ஏற்கனவே உள்ளது. நீங்கள் ஒரு வாகன ஆலைக்கு வெளியே நின்று தொழிலாளர்களிடம் பேசினால், அங்கே நிலையாக சொல்லப்படும் வசனம்: 'UAW ஒரு வணிகம்” இது நிறுவனங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உதவுகிறது. இது, நமது உழைப்பிலிருந்து 100,000 டாலருக்கு அதிகமாக இலாபமீட்டும் 450 க்கு மேற்பட்ட அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு எந்திரத்தால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது.

ஆனால் UAW எந்திரத்தின் செயல்பாடுகள், முதலாளித்துவத்திற்கான அதன் ஆதரவுடனும் அதன் தேசியவாத முன்னோக்குடனும் பிணைக்கப்பட்டுள்ளன என்பதையும் நாம் அங்கீகரிக்க வேண்டும்.

நான் வசிக்கும் மற்றும் பணிபுரியும் கிழக்கு பென்சில்வேனியா, தொழில்துறை நடவடிக்கைகளின் அடிப்படையில் உலகின் மிகவும் உற்பத்தி செய்யும் பிராந்தியங்களில் ஒன்றாக இருந்து வந்தது, மேலும் தொழிலாளர்கள் இங்கு மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவித்தனர். இது நிறுவனங்கள் தாராளமாக இருந்ததால் நிகழ்ந்தது அல்ல, மாறாக, 1941 ஆம் ஆண்டின் புகழ்பெற்ற பெத்லஹேம் எஃகு ஆலை வேலைநிறுத்தம் உட்பட, சக்திவாய்ந்த மற்றும் அடுத்தடுத்த வன்முறை வேலைநிறுத்தங்களை தொழிலாளர்கள் நடத்தினர், மற்றும் முழுமையாக வழங்கப்படும் ஓய்வூதியங்கள், சிறந்த ஊதியங்கள் மற்றும் தேவையான பாதுகாப்பு தரங்களை பெறுவதற்கான உரிமைகளை வென்றெடுத்தனர்.

எவ்வாறாயினும், கடந்த நான்கு தசாப்தங்களாக, UAW மற்றும் பிற தொழிற்சங்கங்கள் நமது வாழ்க்கை நிலைமைகளின் அழிவுக்கு தலைமை தாங்கின. ஆலைகள் மூடப்பட்டன, ஊதியங்கள் குறைக்கப்பட்டன, மற்றும் உயிர்கள் அழிக்கப்பட்டன, ஏனென்றால் தொழிற்சங்க அதிகாரிகள், மற்ற நாடுகளில் உள்ள தொழிலாளர்களுடன் போட்டியிடுவதற்கு ஊதிய வெட்டுக்களை ஏற்க வேண்டும் என்று தொழிலாளர்களிடம் கூறினர். இது நாட்டின் அனைத்து தொழில் மையங்களிலும் நடந்துள்ளது. ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் உள்ளூர், மாநில மற்றும் கூட்டாட்சி மட்டத்தில் நிலைகளை மாற்றினர், ஆனால் நிலைமைகள் இன்னும் மோசமாகின்றன.

இதனால்தான் நான் சோசலிச தளத்தில் போட்டியிடுகிறேன். அமெரிக்க முதலாளித்துவ சமூகம் வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிந்து கொண்டிருக்கும் நிலையிலும், ஊடகங்களில் அதுபற்றி எதுவும் தெரிவிக்கப்படாமல் உள்ள நிலையிலும், பைடென் நிர்வாகமும் ட்ரம்ப் நிர்வாகத்தின் கோவிட் கொள்கைகளை அப்படியே தொடர்கின்றது. ட்ரம்பும் குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகத்திற்கு எதிரான தங்கள் பாசிச சதியை தொடர்கின்றனர். ஜனநாயகக் கட்சி ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிரான ஒரு போரை வழிநடத்துகிறது, கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பின்னர் உலகை எந்த நேரத்திலும் நிகழக்கூடிய அணு ஆயுதப் போருக்கு நெருக்கமாக கொண்டுவருகிறது, மேலும் ஆயுதங்களுக்காக பில்லியன்களை வீணடிக்கிறது. சுற்றுச்சூழல் பேரழிவு மீள முடியாத நிலையை நெருங்குகிறது. மூன்று பில்லியனர்கள் உலகின் பாதியளவு ஏழை மக்களிடம் இருக்கும் மொத்த செல்வத்தைக் கொண்டுள்ளனர்.

மிச்சிகன், ஓஹியோ, கென்டக்கி, மற்றும் வேர்ஜீனியா மாநிலங்களில் உள்ள வாகன ஆலைகளில் பிரச்சாரம் செய்வதற்காக நான் நாடு முழுவதும் பயணம் செய்தேன், அங்கு நான் சோசலிசம் பற்றி வாகனத் தொழிலாளர்களுடன் பேசினேன். சோசலிசம் என்பது சமூகத்தின் செல்வத்தை தொழிலாள வர்க்கம் கட்டுப்படுத்த வேண்டும், ஏனென்றால் நாம் தான் அதை உற்பத்தி செய்கிறோம் என எனது சக ஊழியர்களிடம் நான் கூறுகிறேன். இதன் பொருள், உலகப் பொருளாதாரம் என்பது மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும், மாறாக பெருநிறுவன இலாபத்தை அல்ல. அதாவது, தொழிலாள வர்க்கம் சமூகத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இதன் பொருள். மேலும், குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி இரண்டையும் சாராத ஒரு அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே இதன் பொருள்.

இந்தத் திட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களிடமிருந்து எனக்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. ட்ரம்பிற்கு வாக்களித்த பல தொழிலாளர்கள் கூட இதை ஒப்புக்கொள்கிறார்கள். உங்களில் தொழிலாள வர்க்கப் பின்னணியில் இருந்து வராதவர்கள் இருக்கலாம், ஆனால் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவது அவசியம் மற்றும் சாத்தியம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், ஒரு சர்வதேச முன்னோக்கிற்கு தொழிலாளர்களிடமிருந்து ஒரு சக்திவாய்ந்த பதில் கிடைக்கிறது. எனது பிரச்சாரம், நமது பொதுவான வர்க்க நலன்களைப் பாதுகாப்பதற்காக உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவது பற்றியதாகும். பல பட்டதாரி மாணவர்கள் அமெரிக்காவிற்கு வெளியே இருந்து வருகிறார்கள், மேலும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் எதிர்கொள்ளும் அதே நிலைமைகளைத்தான் இங்குள்ள தொழிலாளர்களும் எதிர்கொள்கிறார்கள் என்பதை நீங்கள் அங்கீகரிப்பீர்கள்.

நான் அனைத்து வகையான தேசியவாதத்தையும் எதிர்க்கிறேன். பெருநிறுவன ஸ்தாபனம் மற்றும் ஊடகங்களால் தொற்றுநோய் காலம் முழுவதும் ஊக்குவிக்கப்பட்டு, மற்றும் போருக்கான அடித்தளத்தை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டு வரும் சீன-விரோத இனவெறியை நான் குறிப்பாக கண்டிக்கிறேன் மற்றும் நிராகரிக்கிறேன்.

பல்கலைக்கழகங்களில் உழைக்கும் வர்க்கம் பற்றி ஏராளமான தவறான எண்ணங்கள் நிலவுகின்றன. மக்கள்தொகையில் மிகவும் வசதியான பிரிவினர், தொழிலாளர்கள், குறிப்பாக வெள்ளைத் தொழிலாளர்கள் ‘சலுகை பெற்றவர்கள்’, பிற்படுத்தப்பட்டவர்கள், இனவாதிகள் மற்றும் வலதுசாரிகள் என்று நினைக்கின்றனர். இந்த கட்டுக்கதைகளை நம்பும் சிலர் தங்களை ‘சோசலிஸ்டுகள்’ என்று கூட அழைக்கிறார்கள், இருப்பினும் இதற்கு இடதுசாரி அரசியலுடன் எந்த தொடர்பும் இல்லை.

நிஜ உலகில், ஒவ்வொரு இனம், பாலினம் மற்றும் பாலின நோக்குநிலையைச் சேர்ந்த தொழிலாளர்கள் பெரிதும் சுரண்டப்படுகிறார்கள் மற்றும் ஒன்றுபடுவதற்கும் ஒன்றாகப் போராடுவதற்கும் ஒரு வழியைத் தேடுகிறார்கள். அதாவது இன மற்றும் பாலின அடையாள அரசியல் என்பது, நாம் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடுவதற்கும், நம்மை பிரிப்பதற்கும் பெருநிறுவனங்கள் பிரயோகிக்கும் ஒரு கருவியாகும். நாம் போராடுவது சலுகைகளுக்காக அல்ல, மாறாக சமத்துவத்திற்காக.

வளாகத்தில் உள்ள உண்மையான சோசலிசத்தில் ஆர்வமுள்ள உங்களுக்கு நான் இதைக் கூறுகிறேன்: உங்கள் அரசியல் நடவடிக்கையை தொழிலாள வர்க்கத்தை நோக்கிச் செலுத்துங்கள், உங்கள் பல்கலைக்கழகத் துறைகளில் உள்ள பின்நவீனத்துவம் மற்றும் அடையாள அரசியலின் ஆதிக்கத்திற்கு சவால் விடுங்கள், மேலும் இனம் மற்றும் பாலினம் பாராமல் தொழிலாள வர்க்க ஒற்றுமைக்காகப் போராடுங்கள். அதைத்தான் தொழிலாள வர்க்கம் விரும்புகிறது, அதற்காகத்தான் எனது பிரச்சாரமும் போராடி வருகிறது.

எனவே, எனக்கு வாக்களிக்குமாறும், இன்று ஒரு பாரிய சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் இணையுமாறும் நான் உங்களைக் கேட்கிறேன்.

இப்படிக்கு உண்மையுள்ள,

வில் லெஹ்மன்

Loading