முன்னோக்கு

அமெரிக்கா-நேட்டோவும் ரஷ்யாவும் அணுஆயுத அச்சுறுத்தல்களை அதிகரிக்கின்றன

உக்ரேனில் போரை நிறுத்துங்கள்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அக்டோபர் 1962 கியூப ஏவுகணை நெருக்கடிக்குப் பின்னர், இன்று இருப்பது போல் உலகம் அணுஆயுத போருக்கு இந்தளவுக்கு நெருக்கத்தில் ஒருபோதும் இருந்ததில்லை.

அந்த நெருக்கடியின் பிற்போக்குத்தனத்திற்கும் உலகை இன்று பீடித்துள்ள நெருக்கடிக்கும் இடையே ஓர் ஆழமான வித்தியாசம் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ள, அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடியையோ, ஸ்ராலினிசத் தலைவர் நிகிதா குருஷேவ்வையோ பெருமைப்படுத்திக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

கியூப ஏவுகணை நெருக்கடி பற்றி சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு புத்தகமான அணுவாயுத முட்டாள்த்தனம் (Nuclear Folly) என்பதில், வரலாற்றாசிரியர் செர்ஹி ப்ளோகி (Serhii Plokhy) பின்வருமாறு எழுதினார். அங்கே இரண்டு தரப்பிலும் பெரியளவில் தவறான கணக்கீடுகளும் பிழையான முடிவுகளும் இருந்தாலும், “அந்த நெருக்கடி ஒரு மோதிக்கொள்ளும் போராக அபிவிருத்தி அடையவில்லை. ஏனென்றால் கெனடியும் சரி குருஷேவ்வும் சரி இருவருமே அணுஆயுதங்கள் குறித்து அஞ்சியதோடு, அவற்றைப் பயன்படுத்துவதற்கான யோசனையையே கூட பயங்கரமானதாகக் கருதினார்கள்.”

கெனடியும் குருஷேவ்வும் “ஓர் அணுஆயுதப் போரில் ஜெயித்து விடலாம் என்று நம்பவில்லை, அதேபோல அதுபோன்றவொரு வெற்றிக்கு ஒரு விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இல்லை என்பதால், அவர்களே உருவாக்கிய மிகவும் திறமையான அந்தப் பொறிக்குள் அவர்கள் இறங்கவில்லை. அணுஆயுதங்களைப் பயன்படுத்துவதில் அந்த இரண்டு தலைவர்களும் இன்னும் தீவிரமான அணுகுமுறையை எடுத்திருந்தால், கியூபா நெருக்கடியின் விளைவு என்னவாக இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்ய முடியாது,” என்பதையும் ப்ளோகி குறிப்பிட்டார்.

ஒரு புதிய உலகளாவிய அணுவாயுத நெருக்கடியின் மத்தியில், அமெரிக்கா/நேட்டோ மற்றும் ரஷ்யா ஆகியவை கற்பனை செய்ய முடியாத இந்த விளைவு உண்மையில் என்னவாக இருக்கும் என்பதை நிரூபிப்பதை நோக்கமாகக் கொண்ட விதத்தில் நடந்துகொண்டிருப்பதாக தெரிகிறது. அங்கு அணுஆயுதப் போரின் விளைவுகள் குறித்தும் அதிர்ச்சியூட்டும் அலட்சியமும் உள்ளது.

அவரின் மேற்கத்திய 'பங்காளிகளை' அவரால் பேச்சுவார்த்தைக்கு நிர்பந்திக்க முடியும் என்ற அப்பாவித்தனமான மற்றும் அவநம்பிக்கையான அனுமானத்துடன் உக்ரேன் படையெடுப்பு தொடங்கி உள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உக்ரேனில் அவரின் திவாலானதும், பிற்போக்குத்தனமானதுமான மூலோபாயத்தின் அதிர்ச்சிகரமான தோல்வியை சந்தித்துள்ளார். கார்கிவ் தோல்வியை தொடர்ந்து ரஷ்யா இப்போது தனக்குச் சொந்தமானதாக உரிமைகோரும் எல்லைக்குள் உக்ரேனிய இராணுவம் கூடுதலாக முன்னேறியது உட்பட, சமீபத்திய வாரங்களில் ரஷ்ய இராணுவம் தொடர்ச்சியான தோல்விகளைக் கண்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் நேட்டோவின் திட்டங்களைக் குறைத்து மதிப்பிட்டு, தயாரிப்பின்றி இருந்த ஒரு போருக்குள் ரஷ்யா அமெரிக்காவினால் இழுத்து வரப்பட்டது. ரஷ்ய செல்வந்தத் தன்னலக் குழுவுக்குள் உள்நெருக்கடி மற்றும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள புட்டின் ஆட்சி, அணுஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்று தவறுக்கிடமில்லா அச்சுறுத்தல்களைக் கொண்டு விடையிறுத்து வருகிறது.

மறுபுறம், அவற்றின் புவிசார் அரசியல் நோக்கங்களைத் தொடர்வதில் அவற்றின் ஆதாயங்களுக்கு அழுத்தம் அளிக்க உறுதியாக உள்ள அமெரிக்காவும் நேட்டோவும், அணுஆயுதப் போர் அச்சுறுத்தலைக் கொண்டு தங்களைத் 'தடுத்து விட முடியாது' என்று அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

அமெரிக்க பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், அங்கே அணுஆயுதப் போரின் சாத்தியக்கூறு குறித்து வெளிப்படையாக விவாதிக்கப்படுகின்றன. “புட்டினின் அச்சுறுத்தல்கள் வாஷிங்டனில் எச்சரிக்கை மணியை எழுப்புகின்றது' என்ற தலைப்பில் நியூ யோர்க் டைம்ஸ் ஞாயிற்றுக்கிழமை பின்வருமாறு எழுதியது: “ஜனாதிபதி விளாடிமீர் வி. புட்டின் உக்ரேனில் ரஷ்ய துருப்புகளின் தோல்விகளை சமாளிக்க தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்த முடிவெடுத்தால், ஏற்படக்கூடிய சூழல்கள் குறித்து வாஷிங்டனில் அதிகாரிகள் ஊகித்து வருகிறார்கள்… உக்ரேனிய மண்ணில் ரஷ்யா ஒரு தந்திரோபாய அணுஆயுதத்தை வெடிக்க செய்தால், … சிலவகைப்பட்ட இராணுவ விடையிறுப்பும் விருப்பத் தெரிவுகளில் உள்ளடங்கும் என்று பல அதிகாரிகள் அறிவுறுத்தினர்.”

ரஷ்யா அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால் அமெரிக்கா என்ன செய்யும் என்று ABC இன் “Face the Nation” நிகழ்ச்சியில் கேட்ட போது, முன்னாள் சிஐஏ இயக்குநர் டேவிட் பெட்ரீயஸ் கூறுகையில், “நாங்கள் ஒரு கூட்டு முயற்சியில் நேட்டோவை முன்நகர்த்துவதன் மூலம் விடையிறுப்போம். உக்ரேனிலும் மற்றும் கிரிமியா போர்க்களங்களிலும் நாங்கள் பார்க்கும் மற்றும் அடையாளம் காணும் ஒவ்வொரு மரபுவழி ரஷ்ய படைகளையும், மற்றும் கருங்கடலின் ஒவ்வொரு கப்பலையும் அது முடிவிற்குகொண்டுவரும்” என்றார்.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்த இனப்படுகொலையில் அமெரிக்கப் படைகளை வழிநடத்திய ஜெனரல் பெட்ரீயஸ், அமெரிக்காவும் நேட்டோவும் பதிலடியின்றி நூறாயிரக் கணக்கானவர்களை கொன்று ரஷ்ய இராணுவப் படைகளை அழிக்க முடியும் என்று நம்புகிறார். ரஷ்ய இராணுவப் படைகள் மீதான நேட்டோவின் இத்தகைய தாக்குதல் கிரெம்ளினின் அணு ஆயுத நிர்மூலமாக்கலின் ஆபத்திற்கு உட்படுத்தாது என்று யாராவது நம்புவதற்கு முட்டாள்த்தனத்தின் அதியுயர் மட்டத்தில் இருக்கவேண்டும். இது மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் உள்ள ஒவ்வொரு பெரிய நகரித்திலும் கொடூரமான உயிர் இழப்புடன் முழு அழிவையும் விளைவிக்கும்.

'ரஷ்யாவின் இணைப்பு, உலகை அணு ஆயுதப் போரில் இருந்து 'இரண்டு அல்லது மூன்று அடிகளே தள்ளி' நிறுத்தி உள்ளது' என்ற தலைப்பில் வாஷிங்டன் போஸ்டில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், பெயர் வெளியிடாத ஐரோப்பிய அதிகாரி ஒருவர் பொறுப்பற்றத் தன்மையின் அளவைப் பின்வருமாறு தொகுத்தளித்தார்: “புட்டின் என்ன முடிவெடுப்பார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவர் முற்றாக ஒரு மூலையில் தள்ளப்பட்டு நிற்கிறார், அவர் பைத்தியக்காரத்தனமானவர் … அவருக்கு அங்கே வெளியேறுவதற்கு வழி இல்லை. முழு வெற்றி அல்லது முழுமையான தோல்வி என்பது மட்டுமே அவருக்கு இருக்கும் ஒரே வழி. அவரின் முழுமையான தோல்வி ஒன்றுக்காக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். எங்களுக்கு உக்ரேன் ஜெயிக்க வேண்டும், ஆகவே உக்ரேன் ஜெயிக்க உதவுவதன் மூலம் மிக மோசமான சூழலைத் தடுக்க நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.”

இந்த அறிக்கைகளை வெளியிடும் டாக்டர். ஸ்ட்ராஞ்ச்லோவ்ஸ் தங்கள் சொந்த கொள்கைகளின் தாக்கங்களை பற்றி யோசித்தார்களா? பின்விளைவுகள் எதுவாக இருந்தாலும், அமெரிக்கா மற்றும் நேட்டோ சக்திகள் ரஷ்யாவின் 'மொத்த தோல்விக்கு' வழிவகுக்கும் ஒரு போக்கை தொடர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். 'மோசமான சூழ்நிலையை' தடுப்பதற்குப் பதிலாக, அவர்களின் வார்த்தைகளும் செயல்களும் 'மோசமான' விளைவுக்கு இட்டுச் செல்லும் நெருப்பிற்கு எரியூட்டுகின்றன. படுகுழியின் விளிம்பில் உள்ள ஏகாதிபத்திய சக்திகளின் நிலைப்பாடு: 'முழுமையான வெற்றி வரை முன்னோக்கி' என்பதாகவே உள்ளது.

எப்பொழுதும் போல, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான புட்டினின் அச்சுறுத்தல்களைக் கண்டிக்கும் ஏகாதிபத்திய போர்வெறியர்கள், பெரும் சக்தி அறநெறியின் முன்னோடியில்லாத மீறலாக தங்கள் கடந்தகால செயல்களைப் பற்றி வியக்கத்தக்க மறதியை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் அமெரிக்கா அணு ஆயுதங்களை (ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் பாதுகாப்பற்ற மக்களுக்கு எதிராக) மட்டும் பயன்படுத்தவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். ஆனால் அதுவும் மற்ற ஏகாதிபத்திய சக்திகளும் இராணுவ தோல்வி ஏற்படும் என்று அச்சுறுத்தப்பட்டபோது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு நெருங்கி வந்தன.

1950 இல், ஜெனரல் டக்ளஸ் மெக்ஆர்தர், எல்லை தாண்டி கொரியாவுக்குள் நுழைந்த சீனப் படைகளுக்கு எதிராக 30 அணுகுண்டுகளைப் பயன்படுத்த அனுமதி கோரினார். 1954 இல், Dien Bien Phu இல் சுற்றி வளைக்கப்பட்ட அதன் துருப்புக்களைக் காப்பாற்ற அணுகுண்டுகளைப் பயன்படுத்துமாறு பிரான்ஸ் அமெரிக்க ஜனாதிபதி ஐசன்ஹோவரிடம் மன்றாடியது. 1962 இல், கியூப ஏவுகணை நெருக்கடியின் போது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக கென்னடியே கூட அச்சுறுத்தினார். 1973 இல், Yom Kippur போரின் ஆரம்ப நாட்களில் போது தோல்வியை முகங்கொடுத்த இஸ்ரேல், எகிப்துக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு நெருங்கி வந்தது.

விரக்தியும் பொறுப்பற்ற தன்மையும் வாஷிங்டனையும் மாஸ்கோவையும் பிடித்துள்ள மனநிலையை விவரிக்கலாம். ஆனால் அவற்றிகான மூலகாரணத்தையல்ல. இவ்வாறான நடத்தைக்கு ஒரு அரசியல் விளக்கம் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

புட்டின் ஆட்சியின் விரக்தியானது சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் விளைவுகளை எதிர்கொள்கிறது என்ற உண்மையிலிருந்து எழுகிறது. இந்த ஒரு வரலாற்றுத் துரோகம் அடுத்தடுத்த அனைத்து சமூக-பொருளாதார மற்றும் அரசியல் பேரழிவுகளுக்கும் வழிவகுத்தது. சோவியத் ஒன்றியத்தை கலைத்ததில், ஸ்ராலினிச அதிகாரத்துவம் ஏகாதிபத்தியம் பற்றிய லெனினின் பகுப்பாய்வு ஒரு மார்க்சிச கட்டுக்கதையைத் தவிர வேறொன்றுமில்லை என்று தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டது. ஆனால் இந்த 'கட்டுக்கதை' உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. சோவியத் ஒன்றியத்தின் சரிவுக்கு முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், ரஷ்யா அதனை துண்டுதுண்டாக உடைக்க முனையும் ஏகாதிபத்தியங்களின் ஒரு போரை எதிர்கொள்கிறது.

ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியாவின் படையெடுப்புகளால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள் இருந்தபோதிலும், அமெரிக்க ஆளும் வர்க்கம் போரின் மூலம் தங்களை வேட்டையாடும் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் வளர்ச்சியை எப்படியாவது தடுக்க முடியும் என்று நம்புகிறது.

இவை அனைத்திற்கும் மத்தியில், அணுசக்தி போரின் சாத்தியமான விளைவுகளின் தாக்கங்கள் பற்றிய வெளிப்படையான அறிக்கைகள் எதுவும் இல்லை. இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களை அழித்தொழிக்கக் கூடிய ஒரு நிகழ்வைப் பற்றி அரசியல்வாதிகளும், உயர்மட்ட இராணுவ அதிகாரிகளும், ஊடகங்களும் அலட்சியமாகப் பேசுகின்றன.

கியூபா ஏவுகணை நெருக்கடிக்கான விடையிறுப்புக்கும் இன்றைய சூழ்நிலைக்கும் உள்ள வித்தியாசத்திற்கும் காரணமாக இருப்பது என்ன? இறுதியில், கியூபா ஏவுகணை நெருக்கடி அணு ஆயுதப் போருக்கு வழி வகுக்காததற்கான காரணத்தை அந்த அரசியல் காலகட்டத்தின் குணாம்சத்திலிருந்துதான் எடுத்துக்கொள்ள முடியும். 1960 களில் அமெரிக்க ஏகாதிபத்தியம், போருக்குப் பிந்தைய முதலாளித்துவ வளர்ச்சியின் சகாப்தத்தின் ஊடாக சென்று கொண்டிருந்தது. உலக நிலப் பரப்பில் ஆறில் ஒரு பங்கைக் கொண்டிருந்த சோவியத் ஒன்றியம், இப்போது சுற்றி வளைக்கப்பட்டு விரக்தியாக உள்ள ரஷ்ய நிலைமையை விட அளவிட முடியாதளவில் பலமான நிலையில் இருந்தது.

புட்டினின் தேசிய பேரினவாதமும், இனவெறியும் அமெரிக்க ஏகாதிபத்தியம் உருவாக்கி உள்ள இந்த நெருக்கடிக்கு மாற்றீட்டை வழங்காது. ஓர் ஒட்டுண்ணித்தனமான ரஷ்ய செல்வந்தத் தன்னலக் குழுவின் சார்பாகப் பேசும் புட்டின், அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளைக் குறித்து அஞ்சுவதை விட அதிகமாக ரஷ்யத் தொழிலாள வர்க்கத்தைக் குறித்து அஞ்சுகிறார். சோவியத் ஒன்றியக் கலைப்பால் ஏற்பட்டுள்ள பேரிடருக்கு அவரின் விடையிறுப்பில், எதிர்புரட்சிகர ஸ்ராலினிச பாரம்பரியங்களும் ஜாரிச ரஷ்யாவின் இடைக்கால குருட்டு நம்பிக்கைவாதமும் கலந்துள்ளது.

அமெரிக்க அல்லது ரஷ்ய செல்வந்தத் தன்னலக் குழுவின் 'பகுத்தறிவு' மீது நம்பிக்கை வைக்க முடியாது. தொற்றுநோயின்போது ரஷ்யாவில் 400,000 பேரின் மரணத்தை ஏற்றுக் கொண்ட ரஷ்ய தன்னலக் குழு, ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்களின் மரணத்திற்கு வழி வகுத்த ஒரு கொள்கையை நடைமுறைப்படுத்தி உள்ள அமெரிக்க, ஐரோப்பிய ஆளும் வர்க்கம் ஆகியவை மனித உயிர்கள் மீது கொண்டிருக்கும் அலட்சியத்தை ஏற்கனவே எடுத்துக் காட்டி உள்ளது. அதன் 'சமூக நோய் எதிர்ப்புசக்தி' கொள்கைகள் உலகளவில் மில்லியன் கணக்கான இறப்புகளுக்கு வழிவகுத்தன.

உலகை பேரழிவிற்கு இட்டுச் செல்லும் அரசாங்கங்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் உலகளாவிய வெகுஜன போர் எதிர்ப்பு இயக்கத்தால் எதிர்கொள்ளப்பட வேண்டும்.

தொழிலாள வர்க்கம் இந்த பிற்போக்குத்தனமான போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர கோர வேண்டும். தொழிலாளர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை போருக்கு எதிரான போராட்டத்துடன் ஐக்கியப்படுத்துவது அவசியம்.

சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் ஒரு புதிய போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும். இது அனைத்து வகையான தேசியவாதம் மற்றும் இனவெறியையும் நிராகரித்து ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காக போராட வேண்டும்.

Loading