மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஜனாதிபதி பைடென் வியாழக்கிழமை இரவு நிதி திரட்டும் நிகழ்வு ஒன்றில் பில்லியனர்களின் ஒரு குழுவிடம், 'கென்னடி மற்றும் கியூப ஏவுகணை நெருக்கடிக்குப் பின்னர் இந்தப் பேரழிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறை நாம் முகம் கொடுத்ததில்லை,” எனக் கூறியதாக நியூ யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது
பைடென் தொடர்ந்து கூறினார்: “புட்டின் எதை நோக்கிச் செல்கிறார்? அவர் எங்கே பாதையைக் காண்கிறார்? அவர் மதிப்பை மட்டுமல்ல, மாறாக குறிப்பிடத்தக்க அதிகாரத்தையும் இழக்காத பாதையை அவர் எங்கே காண்கிறார்?” இதை நாங்கள் கண்டறிய முயன்று வருகிறோம். இந்தக் கேள்விகளை பைடென் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும்.
அமெரிக்கா-நேட்டோ அதன் பினாமிப் போரைத் தூண்டி விட்டுள்ள நிலையில், உக்ரேனுக்கு வரம்பின்றி ஆயுதங்கள் மற்றும் பணத்தை வழங்கி, கிரிமியாவை மீட்டெடுப்போம் என்று உறுதிமொழி அளித்து, ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ள, பைடென், எதை 'நோக்கிச் செல்கிறார்?” “அவர் மதிப்பை மட்டுமல்ல மாறாக குறிப்பிடத்தக்க அதிகாரத்தை இழக்காமல்?” எவ்வாறு இவர் தீவிரப்பாட்டைக் குறைக்க முடியும்?
விஷயத்தைக் குறைத்துக் காட்டும் பணிவடக்கமான ஒரு முக்கிய அறிக்கையில் டைம்ஸ் குறிப்பிடுகிறது, “பேரழிவு குறித்து திரு. பைடெனின் கருத்துக்கள் அமெரிக்க ஜனாதிபதி என்ற முறையில் மிகவும் அசாதாரணமானது.” வெறுமனே அசாதாரணமானது இல்லை, முற்றிலும் தனித்துவமானது. அனைத்துக்கும் மேலாக, ஒரு அழிவைத் தடுக்க அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் விவரிக்கவில்லை.
இன்னும் அதிக அசாதாரணமானது என்னவென்றால், இந்த எச்சரிக்கையை பைடென் ஓவல் அலுவலகத்தில் இருந்து, நாடெங்கிலுமான பார்வையாளர்களுக்கும் மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்குமான ஒரு பொது உரையில் அல்ல, ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பில்லியனர்களின் ஒரு குழுவிடம் தெரிவித்தார். நடைமுறையளவில் பார்த்தால், அவருடைய பெரும் பணக்கார ஆதரவாளர்கள் அவர்களின் பதுங்குக் குழிகளைத் தயார் செய்து கொள்ள அவர்களுக்கு அவர் முன்கூட்டிய எச்சரிக்கை வழங்குவதாக இருந்தது.
ஆபத்தை மிகைப்படுத்திக் காட்டவில்லை என்று பைடென் எச்சரித்தார். புட்டின் 'என்ற நபரை எனக்கு நன்றாகத் தெரியும். புட்டினின் இராணுவம் குறிப்பிடத்தக்களவில் சிறப்பாகச் செயல்படவில்லை என்று நீங்கள் கூறலாம் என்றாலும், அவர் தந்திரோபாய அணுஆயுதங்கள் அல்லது உயிரியல் ஆயுதங்கள் அல்லது இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தும் சாத்தியக்கூறைக் குறித்து பேசும் போது, அவர் அதை விளையாட்டாக கூறவில்லை,” என்றார்.
'ரஷ்யா தந்திரோபாய ஆயுதத்தைப் பயன்படுத்த சாத்தியம் உள்ளது, 'அணுஆயுதப் பேரழிவில் போய் முடியாது' என்றவர் நினைக்கவில்லை என்பதாக திரு. பைடென் தெரிவித்தார்,” என்று டைம்ஸ் குறிப்பிட்டது. அமெரிக்க ஜனாதிபதியிடம் இருந்து வரும் இந்த வார்த்தைகள், நடைமுறையில், இதைத் தான் அர்த்தப்படுத்துகின்றன, அதாவது:
- ரஷ்யா ஒரு தந்திரோபாய அணுஆயுதத்தைப் பயன்படுத்தினால், அதற்கு எதிராக முழு அளவிலான அணு கதிர்வீச்சு தாக்குதலைக் கொண்டு அமெரிக்கா விடையிறுக்கும்; அல்லது
- தந்திரோபாய ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துவது உடனடியாக நிகழலாம் என்று வாதிடும் பைடென், ரஷ்யாவுக்கு எதிராக முன்கூட்டியே ஓர் அணுகுண்டு தாக்குதலை நடத்த உத்தர விடுவார்.
இந்த இரண்டு விருப்பத் தெரிவுகளும், குறிப்பாக இரண்டாவது, தர்க்கரீதியில் பைடெனின் கருத்துக்களில் இருந்து வருகின்றன. சர்வதேச பத்திரிகைகளில் முக்கியத்துவத்துடன் அறிவிக்கப்பட்ட ஓர் அறிக்கையில் உக்ரேனிய ஜனாதிபதி செலென்ஸ்கி ரஷ்யாவுக்கு எதிராக 'முன்கூட்டிய தற்காப்பு நடவடிக்கைகள், முன்கூட்டிய தற்காப்பு தாக்குதல்களுக்கு' அழைப்பு விடுத்த வெறும் ஒரு சில மணி நேரங்களில் பைடெனின் கருத்துக்கள் வந்தன.
பைடெனின் வியாழக்கிழமை அறிக்கையின் உண்மையான மற்றும் பயங்கரமான தாக்கங்களை மறுப்பதற்கு அங்கே ஒரு சிறிய வாய்ப்புக் கூட இல்லை என்ற அளவுக்கு அது மிகவும் பொறுப்பற்றதாக உள்ளது. இதை விட பெரிய தவறு இருக்க முடியாது. ஒவ்வொரு களத்திலும், ஆளும் உயரடுக்குகள் பொறுப்பற்றத் தன்மையை மட்டுமல்ல, மாறாக மனித வாழ்க்கை மீது திகைப்பூட்டும் அளவில் அலட்சியத்தை வெளிப்படுத்துகின்றன.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களின் மரணத்தையும், உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்களின் மரணங்களையும், வேண்டுமென்றே ஏற்றுக் கொண்ட கொள்கைகளைக் கொண்டு கோவிட்-19 பெருந்தொற்றுக்கு விடையிறுத்த ஓர் ஆளும் வர்க்கம், கணக்கின்றி மில்லியன் கணக்கானவர்களின் மரணங்களுக்கு இட்டுச் செல்லும் இராணுவ நடவடிக்கைகளை எடுக்க தயாராகி உள்ளது.
இன்னும் அடிப்படையாக கூறுவதானால், முதலாளித்துவத்தின் தீர்க்கவியலாத பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியின் அழுத்தத்தின் கீழ் ஆளும் உயரடுக்குகள் அவற்றின் சொந்தக் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் தூண்டிவிடும் சம்பவங்களின் விளைவுகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக, 1938 இல் லியோன் ட்ரொட்ஸ்கி எழுதியது போல, ஆளும் வர்க்கம் 'இப்போது ஒரு பொருளாதார மற்றும் இராணுவப் பேரழிவை நோக்கி கண்களை மூடி பயணித்துக் கொண்டிருக்கிறது.” இப்போது உலக அரசியல், மனிதகுலத்தை விலையாகக் கொடுத்தாவது தங்களின் இலாபங்கள் மற்றும் செல்வ வளத்தை அழியாமல் காப்பாற்ற பெரும் பிரயத்தனப்படும் வெறிப் பிடித்தவர்களின் கரங்களில் உள்ளது.
மனிதகுலம் வாழ வேண்டுமானால், தொழிலாள வர்க்கம் ஆளும் வர்க்கத்தை நிராயுதபாணியாக்கி, அரசியல் அதிகாரத்தைப் பறித்து, முதலாளித்துவ அமைப்பு முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, சோசலிசத்தின் அடிப்படையில் சமூகத்தை மறுசீரமைக்க வேண்டும். இந்த வரலாற்று நெருக்கடியில் இருந்து வெளியேற வேறு எந்த வழியும் இல்லை.
எதிர்காலம் வேண்டுமானால், அதற்காக போராட வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுங்கள்!