காணொளி: தேர்தலில் வாக்களிக்கும் உறுப்பினர்களின் உரிமையை மீறியதற்காக UAW மற்றும் கண்பாணிப்பாளருக்கு எதிரான வழக்கு தொடர்பாக வில் லெஹ்மனின் அறிக்கை பற்றி அவரது வழக்கறிஞர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வியாழனன்று, ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத்தின் (UAW) தலைவர் பதவிக்கான வேட்பாளர் வில் லெஹ்மன், UAW தலைமைக்கான முதல்முதலான நேரடித் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறும், ஒரு தேர்தல் நடைபெறுகிறது என்பதை அங்கத்தவர்களுக்கும் உண்மையாக அறியப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் UAW மீதும், நீதிமன்றம் நியமித்த கண்காணிப்பாளர் மீதும் வழக்கு தொடர்ந்தார்.

மிச்சிகனில் உள்ள மத்திய நீதிமன்றத்தில் லெஹ்மனின் UAW இற்கு எதிரான வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது உறுப்பினர்களின் விருப்பத்தின் உண்மையான மற்றும் ஜனநாயக வெளிப்பாடான தேர்தலில் வாக்களிக்க அனைத்து சாமானிய உறுப்பினர்களின் உரிமையை பாதுகாக்கிறது.

லெஹ்மனின் வழக்கறிஞர் எரிக் லீ, மிச்சிகனின் கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தின் முன் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

வாக்குச் சீட்டுகளை அனுப்புவதற்கான காலக்கெடு இன்று முடிவடைந்த நிலையில், தகுதியுள்ள UAW உறுப்பினர்களில் அண்ணளவாக 9 சதவீதமான 91,000 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

“தொண்ணூற்றொரு சதவீத UAW உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை மற்றும் தபால் வாக்குகளை அனுப்புவதற்கான காலக்கெடு நாளை [வெள்ளிக்கிழமை, நவம்பர் 18] ஆகும். UAW தேசிய அதிகாரிகளுக்கான முதல் நேரடித் தேர்தல் இதுவாகும். மேலும் இது நடைபெறுவது தொடர்பாக அதன் உறுப்பினர்களுக்குத் தெரியாது. அவர்களால் எளிதில் வாக்குச் சீட்டுகளை வழங்குமாறு கோர முடியாது என லீ கூறினார்.

“அர்த்தமுள்ள தேர்தலில் பங்கேற்கும் ஒவ்வொரு UAW உறுப்பினரின் உரிமைகளும் மீறப்பட்டுள்ளன. UAW இன் வேரூன்றிய தலைமையானது, இந்த குறைந்த வாக்குப்பதிவிற்கு தொழிலாளர்களின் அக்கறையின்மைதான் காரணம் என குற்றம் சாட்ட முயற்சிக்கும். ஆனால் உண்மை என்னவென்றால், அதன் பதவியிலிருந்து ஒரேயடியாக அகற்றுவதற்கு நியாயமாக வாக்களிப்பதை தலைமைத்துவம் விரும்பவில்லை.'

ஒரு தற்காலிக தடை உத்தரவு மற்றும்/அல்லது பூர்வாங்க தடை உத்தரவுக்கான லெஹ்மனின் பிரேரணையில், தற்போதைய UAW தலைமையும், கண்காணிப்பாளரும் தேவையான நடவடிக்கையை எடுக்கத் தவறியதன் மூலம், லெஹ்மனும் பிற சாமானிய UAW உறுப்பினர்களும் அவர்களின் விருப்பத்தை உண்மையாக வெளிப்படுத்தும் ஒரு தலைமைத்துவ தேர்தலில் அர்த்தமுள்ள வகையில் வாக்களிப்பதற்கான உரிமையை மறுத்துள்ளனர் என்று லெஹ்மன் வலியுறுத்துகிறார்.

வாக்களிக்கும் உரிமைக்கு உத்தரவாதம் அளிக்க நடவடிக்கை விரைவாக எடுக்கப்படாவிட்டால், இந்தத் தேர்தலில் இருந்து வெளிப்படும் எந்தத் தலைமையும் சட்டபூர்வமனதாகவோ, 'முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவோ' அல்லது லெஹ்மன் போன்ற தொழிற்சங்கத்தின் சாமானிய உறுப்பினர்களின் பிரதிநிதியாகவோ இருக்காது என லீ விளக்கினார்.

கண்காணிப்பாளரிடம் இருந்து வாக்குச் சீட்டைக் கோரிய பின்னரும் வாக்குச் சீட்டைப் பெறாத பல தொழிலாளர்களின் வாக்குமூலங்களும், அறிக்கைகளும் லெஹ்மனின் வழக்கில் உள்ளடங்கியுள்ளது.

Loading