மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
புதனன்று ஐக்கிய வாகன தொழிலாளர் (UAW) இன் தலைவர் பதவிக்கான வேட்பாளர் வில் லெஹ்மனின் வழக்கை ஒரு கூட்டாட்சி நீதிபதி தள்ளுபடிசெய்ததன் முடிவு UAW இன் தேர்தல்கள் இரண்டு நாட்களில், நவம்பர் 28 திங்கள் அன்று முடிவடையும் என்பதாகும். நவம்பர் 29ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகின்றது.
UAW மற்றும் தேர்தலை நடத்தும் கண்காணிப்புக் குழு ஆகியவற்றை மேற்பார்வையிடும் மிச்சிகனின் கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் லெஹ்மன் தனது வழக்கின் கோரிக்கைகளை முன்வைத்தார், 1) காலக்கெடுவை 30 நாட்கள் நீட்டிக்க வேண்டும், 2) கட்டுப்பாட்டாளர் மற்றும் UAW தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்; தேர்தல் குறித்து அனைத்து தொழிலாளர்களுக்கும் தெரிவித்து அவர்கள் வாக்களிக்க முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டும், என்பதால் அவசரத் தடை உத்தரவைப் பிறப்பிக்கும்படி அவர் நீதிபதியிடம் கேட்டார்.
வாக்களிப்பிற்கான காலக்கெடுவுக்கு முன்னதாக, ஒரு சிறுபான்மையான தொழிலாளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர் என்று வழக்கில் குறிப்பிடப்பட்டது. கண்காணிப்புக் குழுவின் இணைய தளத்தில் வெளியிடப்பட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ஒரு மில்லியன் UAW உறுப்பினர்களில் (தற்போது வேலையில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள்) 900,000 பேர் வாக்களிக்கவில்லை. லெஹ்மனின் வழக்கு விளக்கி ஆவணப்படுத்தியது போல், அங்கு ஒரு தேர்தல் நடக்கிறது என்பதை தொழிலாளர்களுக்கு தெரியாமல் தடுக்கவும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாக்குச் சீட்டைப் பெறாமலிருக்கவும் UAW தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தது.
UAW எந்திரம் காலக்கெடுவை 30 நாட்கள் நீட்டிப்பதை எதிர்த்தது. ஏனெனில் அது எதிர்த்தரப்பினரது வாக்குகளில் கணிசமான அதிகரிப்பை ஏற்படுத்தும் என்றும், அந்த வாக்குகளில் பல சோசலிச வேட்பாளரான வில் லெஹ்மனுக்கு இருக்கும் என்றும் சரியாகக் கருதியது. உண்மையில், இதுவே அவர்கள் முதலில் வாக்காளர்களை அடக்க முயன்றதற்கான முக்கிய காரணமாகும்.
UAW இன் வழக்கறிஞர்கள் வழக்கின் உட்பொருளை விட சட்ட தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு அபத்தமான வாதத்தை முன்வைத்தனர். அவர்கள் லெஹ்மன் வழக்கு தொடர்வதற்கு 'தகுதியை' கொண்டிருக்கவில்லை, ஏனெனில் அவரே ஒரு வாக்குச்சீட்டைப் பெற்றுள்ளதுடன் மற்றும் தேர்தல் நடைமுறையினால் எந்த 'பாதிப்பும்' அடையவில்லை என வற்புறுத்தினார்கள். லெஹ்மனின் வழக்கறிஞர் வாதிட்டது போல், தனிப்பட்ட தொழிலாளி வாக்குச் சீட்டுப் படிவத்தைப் பெறுவதால் அவனது ஜனநாயக உரிமைகள் பூர்த்திசெய்யப்பட்டுவிட்டதாக அர்த்தமல்ல. ஒவ்வொரு தொழிலாளிக்கும் 'அர்த்தமுள்ள' தேர்தலில் பங்கேற்க உரிமை உண்டு. அதாவது, முறையாகவும், நியாயமாகவும் நடத்தப்பட்டு வாக்காளர்களின் விருப்பத்தை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். தொழிலாளர்கள் தனித்தனியாகவும் கூட்டாகவும் பெற்றுள்ள இந்த உரிமை, அவர்களில் பெரும்பாலான தொழிலாளர்கள் வாக்களிக்காததாலும் மற்றும் தேர்தல் நடைபெறுவது கூட அவர்களுக்குத் தெரிவிக்கப்படாததாலும் மீறப்படுகிறது.
நீதிமன்றம் UAW க்கு பக்கசார்பாக இருந்தபோதும் இது ஒரு சாத்தியமற்ற இரண்டும்கெட்டான் என்ற சூழ்நிலையை உருவாக்கியது. அதாவது தேர்தல் நடைபெறுவதை அறியாததால் வாக்குச் சீட்டைப் பெற முடியாத தொழிலாளர்கள் மட்டுமே வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்பதாகும். ஆனால், நிச்சயமாக, இந்தத் தொழிலாளர்கள் தங்களுக்கு தெரியாத தேர்தலை நடத்துவதை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்ய மாட்டார்கள்.
மேலும், தேர்தல் முடிந்த பின்னரே தேர்தல் நடைமுறைக்கு சவால் விட முடியும் என்றும், அதனை தொழிலாளர் அமைச்சரான UAW மாநாட்டில் கலந்துகொண்ட மார்ட்டி வால்ஷுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜூலையில், வேட்பாளர்களில் ஒருவரான UAW தலைவர் ரே கரியை வெளிப்படையாக வால்ஷ் பாராட்டி, அவருடைய 'நட்புக்கும்', 'ஆதரவுக்கும்' நன்றி தெரிவித்தார்.
வழக்கு விசாரணையின் போது வெளிப்பட்ட ஒரு முக்கிய உண்மை என்னவென்றால், UAW மற்றும் கண்காணிப்புக்குழு ஆகியவை உள்ளூர் தொழிற்சங்க தகவல் அமைப்பிற்கு (LUIS) தகவல் தொடர்புகளுக்காக நம்பியிருந்தன. இது UAW இன் தலைமையகமான Solidarity House அதிகாரத்துவத்திற்கும் உள்ளூர் தொழிற்சங்கத்திற்கும் இடையிலான தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். அந்த வழக்கின் நீதிபதியே 'இது ஒரு வகையான உறுப்பினர் எண்ணிக்கையை தவிர்த்துவிடுகிறது' என்று குறிப்பிட்டார்.
உலக சோசலிச வலைத் தளம் எப்போதுமே விளக்கியிருப்பதை இது நிரூபிக்கிறது: நேரடித் தேர்தலை முதலில் விரும்பாத Solidarity House, இயன்றவரை சாமானிய தொழிலாளர்களை தவிர்த்து, தனது அமைப்பிற்குள்ளேயே ஒரு அழகுப் போட்டியாக நடத்த முயற்சித்தது.
தேர்தல் நிகழ்ச்சிப்போக்கில் ஊழல் பற்றிய பிரச்சினையை ஒருவர் ஒதுக்கி வைத்தாலும் கூட, 85 முதல் 90 சதவீதம் பேர் வரையிலான பெரும்பான்மையான வாகனத் தொழிலாளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. இது தொழிற்சங்கங்க எந்திரத்தை சாமானிய தொழிலாளர்களிலிருந்து பிரிக்கும் பரந்த சமூகப் பிளவை அம்பலப்படுத்துகிறது. UAW அதிகாரத்துவம் தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு பொலிஸ் படையாக உள்ளது. நிறுவனங்களிடம் இலஞ்சம் வாங்கியதற்காகவும், தொழிலாளர்களின் சந்தாப் பணத்தை திருடியதற்காகவும் பல உயர் அதிகாரிகள் சிறைக்கு அனுப்பப்பட்ட பெரும் ஊழல் காரணமாகவே தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த தொழிற்சங்க அமைப்பில் இருக்கும் தனிநபர்களைப் பொறுத்தவரையில், உறுப்பினர்கள் என்பது ஏமாற்றப்படக்கூடிய பொருட்களாகவும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சம்பள காசோலைகளை அவர்களின் சந்தாப் பணத்திலிருந்து தன்னியல்பாகவே பெற்றுக்கொள்ளலாம் என்ற கருத்தே நிலவுகின்றது.
இந்த எந்திரம் என்பது, சாமானிய தொழிலாளர்களுடன் உண்மையில் நாளாந்த தொடர்புமற்ற ஒரு தனித்த சமூகப்பிரிவாக உள்ளது. அதன் உறுப்பினர்களின் சமூக அந்தஸ்தும் வருமானமும் முற்றிலும் 'தொழிலாளர்களின்' மீதான காவல்துறை போன்ற கட்டுப்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இவர்களை தொழிற்சங்க எந்திரம் அதன் அதிகபட்ச சுரண்டலுக்கு உதவ பயன்படுத்திக்கொள்கின்றது.
லெஹ்மன் பிரச்சாரம் அம்பலப்படுத்தியுள்ளபடி, சாமானிய தொழிலாளர்களின் எந்தவொரு தலையீடும் இந்த எந்திரத்தால் அதன் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. இந்த அச்சுறுத்தல், அனைத்து சமூக சக்திகளாலும் மற்றும் நலன்களாலும் உணரப்படுவதுடன், அவற்றின் நலன்களுக்கு பெருநிறுவனங்களின் கோரிக்கைகளை எதிர்க்கும் அனைத்து அர்த்தமுள்ள திறனும் பறிக்கப்பட்ட மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் படை தேவைப்படுகிறது. UAW இன் 87 ஆண்டுகால வரலாற்றில் பரந்த வாக்கெடுப்பை உள்ளடக்கிய முதல் தேர்தல்கள் பற்றி ஊடகங்களில் கிட்டத்தட்ட அறிவிக்கப்படாமல் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சோசலிச வேட்பாளர் கணிசமான ஆதரவைப் பெற்ற தொழிற்சங்கத் தேர்தல் குறித்து முதலாளித்துவ ஊடகங்கள் செய்தி வெளியிடத் துணியவில்லை.
இதில் குறிப்பாக போலி-இடது அமைப்புகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. லெஹ்மன் தனது வழக்கைத் தாக்கல் செய்தபோது, தேர்தல் முழுவதும் தாங்கள் கடைப்பிடித்த மௌனத்தையே அவர்கள் கடைப்பிடித்தார்கள் அல்லது வெளிப்படையாகக் கண்டித்தனர். அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள், Labor Notes போன்ற இந்த அமைப்புகள் அதிகாரத்துவத்தின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கின்றன. அவர்களின்படி எந்த நிபந்தனையின் கீழும் தொழிற்சங்க எந்திரத்தின் தனிச்சிறப்பை கேள்விக்குள்ளாக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
இந்த பிரதிபலிப்பிற்கு, ஒரு புறநிலைரீதியான வர்க்க அடித்தளம் உள்ளது. 'போலி-இடது' என்ற வார்த்தையை உலக சோசலிச வலைத் தளம், தொழிலாள வர்க்கத்தின் அடிபணிதல் மற்றும் வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குதல் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு தமது செல்வத்தை பெற்றுக்கொள்ளும் செல்வந்த நடுத்தர வர்க்கத்தின் ஒரு அடுக்கைக் குறிக்கப் பயன்படுத்தியது.
தத்துவரீதியாக, அவர்களின் பிற்போக்கு அரசியல் மார்க்சிசம், இயங்கியல்சடவாதம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரம் ஆகியவற்றின் மீதான எண்ணற்ற தாக்குதல்களால் நியாயப்படுத்தப்படுகிறது. இக் கொள்கையானது, இன மற்றும் பாலின பிரிவின் அரசியலை ஊக்குவிப்பதன் மூலம் அது அடையாள அரசியலால் பிரதியீடு செய்யப்படுகிறது.
இந்த அமைப்புகள் தொழிற்சங்க எந்திரத்தின் ஒரு பகுதியாகவும் செயல்பட்டு அதில் உள்ள பதவிகளையும் மற்றும் அந்த பதவிகளில் இருந்து வரும் வருமானம் ஆகியவற்றை பெற்றுக்கொள்ள முயல்கின்றன. UAW தேர்தல்களில், அவர்கள் நீண்டகால UAW அதிகாரத்துவ அதிகாரியான ஷான் ஃபைனின் பிரச்சாரத்தை ஆதரித்தனர். அவரைப் பற்றி சாமானிய தொழிலாளர்கள் மத்தியில் அறிந்திருக்கப்படவில்லை. போலி-இடதுகள் இந்த எந்திரத்தை அதன் முடிவில்லா துரோகங்களின் காரணமாகவே ஆதரிக்கின்றன.
ஆனால் UAW அதிகாரத்துவத்தின் ஊழல் இருந்தபோதிலும், தேர்தல் நிகழ்ச்சிப்போக்கின் மிக முக்கியமான விளைவு என்னவென்றால், அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் பேரினவாதிகள் மற்றும் சோசலிஸ்டுகளுக்கு சமரசமற்ற விரோதிகள் என்ற பிற்போக்குத்தனமான கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தியுள்ளதாகும். வில் லெஹ்மன் தனது சோசலிச நம்பிக்கைகளை வெளிப்படையாகக் கூறினார். தன்னை சோசலிச சமத்துவக் கட்சியினதும் மற்றும் சாமானிய தொழிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் ஆதரவாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கு அழைப்பு விடுத்ததுடன் முதலாளித்துவத்தை கண்டனம் செய்து மற்றும் அதிகாரத்தை தொழிலாள வர்க்கத்தின் கைகளில் மாற்றுவதற்காக வாதிட்டார்.
காலக்கெடுவை நீட்டிப்பதைத் தடுப்பதில் தொழிற்சங்க எந்திரம் வெற்றி பெற்றது. ஆனால் அது ஒரு பெருஞ்செலவிலான போலி வெற்றி என்பதை நிரூபிக்கும். ஒரு முதலாளித்துவ நீதிபதியை தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கச் செய்வது, நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களின் அவநம்பிக்கை மற்றும் விரோதப் போக்கை சமாளிப்பதற்கு சமமானதல்ல என்பதை ரே கார்ரியும் அவருடைய சக ஆதரவாளர்களும் கண்டுகொள்வார்கள்.
வாக்களிக்கும் தகுதியுள்ள சாமானிய தொழிலாளர்களிடையே லெஹ்மனுக்கு மகத்தான ஆதரவு இருப்பது மட்டுமல்லாமல், எந்திரத்தால் கட்டுப்படுத்த முடியாத ஒரு நிகழ்ச்சிப்போக்கை தேர்தல் பிரச்சாரம் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
முரண்பாடானமுறையில், UAW இன் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முன்வைத்த வாதங்களில் ஒன்று, தேர்தல் தாமதமாவது UAW அதன் பணிநிலைமைகள் தொடர்பான பேரம் பேசும் மாநாட்டை மார்ச் மாதத்தில் நடத்துவதற்கான திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்பதால் மேலும் தொழிற்சங்கத்தின் 'ஸ்திரத்தன்மையை' உறுதிப்படுத்த குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்பதாக இருந்தது. எவ்வாறாயினும், எந்திரம் அதன் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் வெற்றி பெற்றால், அடுத்த ஆண்டு முடிவடையும் ஒப்பந்தங்களில் கூடுதல் விட்டுக்கொடுப்புக்களை வழங்குவதற்கான அதன் முயற்சிகளை ஏற்காத தொழிலாளர்களின் பார்வையில் அது மேலும் மதிப்பிழந்துபோகும்.
இந்தப் பிரச்சாரத்திற்கு தொழிலாளர்களின் சக்திவாய்ந்த பிரதிபலிப்பு அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியின் ஒரு பகுதியாகும். வில் லெஹ்மன் பிரச்சாரத்தால் தொடங்கப்பட்ட இயக்கம், தொழிற்சங்க எந்திரத்தின் சர்வாதிகாரத்தை உடைத்து அகற்றுவது, அதிகாரத்தை சாமானிய தொழிலாளர்களிடம் மாற்றுவது, தொழிலாள வர்க்கத்தின் அதிகாரத்தை கட்டவிழ்த்துவிடுவது, வர்க்கப் போராட்டத்தின் நோக்கத்தை பரந்த அளவில் விரிவுபடுத்தி முதலாளித்துவத்திற்கு எதிராக அதை திருப்புவது, என்பதன் மூலம் தொடர்ந்து வலுப் பெறும்.
மேலும் படிக்க
- நீதித்துறை கேலிக்கூத்து: பெடரல் நீதிபதி UAW எந்திரத்தின் பக்கம் நிற்பதோடு வாக்குச் சீட்டுக்கான காலக்கெடுவை நீட்டிப்பதற்கான வில் லெஹ்மனின் கோரிக்கையை மறுக்கிறார்
- UAW இன் தேர்தலை நீட்டிக்கக் கோரும் வில் லெஹ்மனின் வழக்கை பெடரல் நீதிபதி விசாரிக்கிறார்
- "யாராவது இதற்கெல்லாம் எதிராக எழுந்து நிற்க வேண்டும்": UAW தேர்தலில் வாக்களிக்கும் காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி வில் லெஹ்மனின் வழக்கை தொழிலாளர்கள் ஆதரிக்கின்றனர்