முன்னோக்கு

சீன கம்யூனிஸ்ட் கட்சி "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையை நோக்கி நகர்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சீனாவின் செயல் விரைவான பூஜ்ஜிய-கோவிட் கொள்கையைச் சீர்படுத்தும் போர்வையில், ஜி ஜின்பிங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP), மக்களிடையே பாரியளவில் நோய்தொற்றைப் பரப்புவதற்கான மற்றொரு வார்த்தையான “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' கொள்கையை ஏற்க வேகமாக நகர்ந்து வருகிறது. உள்நாட்டில் பொருளாதார நெருக்கடியை முகங்கொடுத்தும், சர்வதேச நிதி மூலதனத்தின் ஒருங்கிணைந்த அழுத்தங்களாலும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ ஆத்திரமூட்டல்களாலும், ஜி அரசாங்கம் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை கைவிட்டு வருகிறது.

சீனாவில் பூஜ்ஜிய-கோவிட் நடவடிக்கைகளை நீக்குவது, அந்நாட்டு மக்களுக்கு பாரியளவில் மரணத்தை ஏற்படுத்தும். சீனாவில் 'வைரஸுடன் வாழ்வதன்' விளைவு குறித்து சந்தேகிக்க எதுவும் இல்லை. அத்தகைய ஒரு கொள்கையால் மிகப் பெரியளவில் பாதிப்புகளும் மரணங்களும் இருக்கும் என்பதைக் கடந்த மூன்றாண்டுகள் எடுத்துக் காட்டியுள்ளன, மருத்துவமனைகள், பிணங்களை வைப்பதற்கான குளிர்சாதன அறைகள், மக்களை எரிக்கும் தகன மேடைகள் நிரம்பி வழிவதையும், உயிர்பிழைத்திருக்கும் மக்கள் கவலையாலும் நீண்டகால கோவிட் தொற்றாலும் அலைக்கழிக்கப்படுவதையும் அக்கொள்கை தவிர்க்கவியலாதவாறு உள்ளடக்கி உள்ளது. 1.1 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களின் இறப்புகள், உலகளவில் 20 மில்லியனுக்கும் அதிகமானவர்களின் மரணங்கள் என்ற இந்தப் புள்ளிவிபரங்கள், 1.4 பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாட்டை இந்தப் பெருந்தொற்றின் சூறையாடலுக்கு திறந்து விட்டால் என்ன ஆகும் என்பதற்கு முன்னறிவிப்பாக உள்ளன.

“கோவிட் கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தினால் எத்தனை பேர் இறக்கக்கூடும்” என்று வாரயிறுதியில் ராய்ட்டர்ஸில் வெளியான ஓர் அறிக்கை, இந்த திகிலூட்டும் தலைப்பு முன்னிறுத்தும் கேள்விக்குப் பதில் அளிக்கும் விதத்தில், மூன்று விஞ்ஞானபூர்வ மதிப்பீடுகளை வழங்கியது. அதன்படி, மதிப்பிடப்பட்ட இறப்பு எண்ணிக்கை 1.3 முதல் 2.1 மில்லியன் மக்கள் வரை இருந்தது.

சீனத் தொழிலாள வர்க்கம் மீது முழு அளவிலான சுரண்டலை மீண்டும் தொடங்கவும், சீனாவின் பரந்த நுகர்வுச் சந்தைகள் மீதான அணுகலை மீட்டமைக்கவும், சீனா பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை நீக்க வேண்டுமென சர்வதேச நிதி மூலதனம் இரண்டாண்டுகளுக்கும் மேலாக கோரி வந்துள்ளது. மில்லியன் கணக்கான இறப்பு எண்ணிக்கை பற்றி எச்சரித்த அந்தக் கட்டுரை வெளியானதற்கு மறுநாள், “கோவிட்-19 கட்டுப்பாடுகளைச் சீனா தளர்த்துவது வெறித்தனமாக ஆனால் வேகமாக இருக்குமென முதலீட்டாளர்கள் வாதிடுகிறார்கள்' என்று ராய்ட்டர்ஸ் நிதிய கட்டுரை ஒன்றை வெளியிட்டது.

பூஜ்ஜிய-கோவிட் கொள்கை நீக்கப்பட்டால் 'வெறித்தனமான' வளர்ச்சி இருக்குமென எதிர்நோக்கி, ஊக முதலீடுகளாக சீன நுகர்வு சந்தைகளுக்குள் மிகப் பெருமளவில் பணம் பாய்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அத்தகைய வளர்ச்சி நீடிக்காது. பாரிய நோய்தொற்றுக் கொள்கையால் ஏற்படும் மருத்துவத் துறை குழப்பங்களும் மரண எண்ணிக்கையும் ஒரு கூர்மையான பொருளாதார சுருக்கத்தை ஏற்படுத்தும். ஆரம்ப நுகர்வு கொண்டாட்டங்களுக்குப் பின்னர், முதலீட்டாளர்கள் புத்திசாலித்தனமாக அவர்களின் பணத்தை நோயெதிர்ப்பு சக்தி மருந்து பரிசோதனை நிறுவனங்களை நோக்கி திருப்பி விடலாம் என்று அந்த ராய்ட்டர்ஸ் கட்டுரை சுட்டிக் காட்டியது. முதலாளித்துவம் மனித அவலத்தைப் போல மிகவும் இலாபகரமாக வேறெதையும் பார்க்கவில்லை.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை நீக்குவதற்கான அதன் நியாயப்பாட்டில், மேற்கத்திய சக்திகளின் அதுவும் குறிப்பாக அமெரிக்காவின் கையேட்டைப் பின்பற்றுகிறது. மேற்கத்திய ஊடகங்களில் தம்பட்டம் அடிக்கப்பட்டவாறு, ஓமிக்ரோன் வகை 'மிதமானது' என்ற பொய்யான வாதத்தையே சீன அரசாங்கமும் திரும்பக் கூறுகிறது. அது போலி-விஞ்ஞானத்தை விஞ்ஞானமாக முன்வைக்கிறது, நோயைக் குணமாக்கும் ஐவர்மெக்டின் (Ivermectin) மருந்துக்குப் பதிலாக அது பாரம்பரிய சீன மருத்துவத்தை ஒரு சிகிச்சையாக ஊக்குவிக்கிறது. பொருளாதார கட்டாயங்களால் உந்தப்பட்டு, பொது சுகாதாரத்தைப் பொருட்படுத்தாமல், அவர்கள் வழக்கமான வேலை மற்றும் வர்த்தகத்திற்கு முழுமையாகத் திரும்புமாறு அழுத்தம் கொடுக்கிறார்கள்.

பூஜ்ஜிய-கோவிட் கொள்கையைக் கைவிடுவதை நோக்கிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துவத்தின் நகர்வுகள், அனைத்து மேற்கத்திய ஊடகங்களாலும் பாராட்டப்படும் சமீபத்திய போராட்டங்களுக்கும் முன்பிருந்தே நடந்து வருகின்றன. இந்தப் போராட்டங்கள் மிகவும் சிறியளவில் இருந்தன, பேரணிகளில் நூற்றுக் கணக்கானவர்களே கலந்து கொண்டனர், அதுவும் ஏறக்குறைய பெரும்பாலும் அந்நாட்டின் உயரடுக்குப் பல்கலைக்கழகங்களின் உயர்மட்ட நடுத்தர வர்க்க மாணவர்களே பிரத்யேகமாக அவற்றில் ஈர்க்கப்பட்டிருந்தனர். பாரிய பரிசோதனையை நிறுத்த வேண்டுமென கோரியும், பொது சுகாதார நடவடிக்கைகளை 'சுதந்திரத்திற்கு' எதிரானவை என்று முன்வைத்தும், வெற்று காகிதத்தில் அவர்களின் கையெழுத்துக்களும் கோஷங்களும் வெறும் குழப்பத்திற்கும் மேலானதைப் பிரதிபலிக்கின்றன. இவை, தங்களின் செல்வ செழிப்பான வாழ்க்கை முறையை அனுபவிக்க முடியாமல் இருப்பதைக் காணும் தனிச்சலுகை கொண்ட சமூக அடுக்குகளின் நலன்களையும் ஏமாற்றங்களையுமே வெளிப்படுத்துகின்றன.

இந்த சமூக அடுக்கு தான் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துவத்தினது முக்கிய ஆதரவு வட்டமாக உள்ளது. இவர்களில் பலர் கட்சியின் உறுப்பினர்களாக உள்ளனர் அல்லது உறுப்பினர்கள் ஆக விருப்பம் கொண்டவர்கள், இது அவர்களின் சமூக முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய பாதையாக உள்ளது, இதனால் பூஜ்ஜிய-கோவிட் நடவடிக்கைகளை அவர்கள் சகிக்கவியலாத சமூகமீறலாக பார்க்கிறார்கள்.

இது வரையிலான அவர்களின் சமூக சூழல் மற்றும் வளர்ச்சியில், சீனாவில் இந்த வெற்றுக் காகித போராட்டங்கள், 2020 மற்றும் 2021 இல் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடாவில் நடத்தப்பட்ட முகக்கவசத்திற்கு எதிரான மற்றும் தடுப்பூசிகளுக்கு எதிரான வலதுசாரி போராட்டங்களை ஒத்திருக்கின்றன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் அதே விதத்தில் விடையிறுத்து வருகிறது, அது பாரிய நோய்தொற்று கொள்கையை நோக்கிய கூடுதல் நகர்வுகளுக்கு இவற்றை ஒரு சாக்குபோக்காக பயன்படுத்திக் கொள்கிறது.

சீனாவை உலக முதலாளித்துவப் பொருளாதாரத்துடன் மீண்டும் ஒருங்கிணைக்க எதிர்நோக்கி, ஜி அரசாங்கம் முதலில் பூஜ்ஜிய-கோவிட் கொள்கைக்கான மக்கள் ஆதரவைப் பலவீனப்படுத்தியது, பின்னர் அதைக் கைவிடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது. மே 2022 இல், அந்த அரசாங்கம் வெகுஜன கோவிட் பரிசோதனைக்கான தேசிய காப்பீட்டு நிதியைக் குறைத்தது, நாட்டின் எல்லைப் பகுதிகளில் பெரிதும் பாதிக்கப்பட்ட நகராட்சிகளுக்கு ஏற்பட்ட நிதிச் சுமைகளுக்கான உதவிகளில் பில்லியன் கணக்கான டாலர்களை நிறுத்தியது. இதனால் இத்தகைய பல நகரங்களும் பகுதிகளும் பரிசோதனைக்கான செலவைப் பரிசோதிக்கப்பட்டவர் மீதே சுமத்தின.

அக்டோபரில் நடத்தப்பட்ட 20 வது கட்சி மாநாட்டில் அரசியல் அதிகாரம் முழுமையாக ஜி ஜின்பிங்கின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அந்நாட்டின் பொருளாதார வாழ்வின் மீது பூஜ்ஜிய-கோவிட் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான பல நடவடிக்கைகளைச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நடைமுறைப்படுத்த இருந்தது.

நவம்பர் 11 இல், அந்தக் கட்சி அதன் 'இருபது ஷரத்துக்களை' அறிமுகப்படுத்தியது, ஏற்படவிருந்த பாரிய நோய்தொற்றுக்கு நாட்டை தயாராக வைக்கும் விதத்தில் மருந்துகளைக் கையிருப்பில் வைப்பது உட்பட, பூஜ்ஜிய-கோவிட் கொள்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் அந்த ஷரத்துக்கள் தளர்த்தின. இந்த நடவடிக்கைகள் ஜி20 உச்சி மாநாட்டுக்கு முன்னதாக எடுக்கப்பட்டன, அந்த மாநாட்டில் ஜி சூசகமாக எடுத்துக்காட்டும் விதத்தில் முகக்கவசம் அணியாமல் கலந்து கொண்டார். வணிகத்திற்காக சீனா மீண்டும் திறக்கப்படுகிறது என்பதை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உலக முதலாளித்துவத்திற்குச் சமிக்ஞை செய்தது.

பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை இப்போது CCP அபாயகரமான வேகத்தில் நீக்கி வருகிறது. இன்னும் அடிப்படை தணிப்பு நடவடிக்கைகளும் கைவிடப்பட்டு வருகின்றன என்பதற்கு அறிகுறியாக, தனிமைப்படுத்தல்கள் குறைக்கப்பட்டு இருப்பதாகவும், வெகுஜன பரிசோதனைகள் நிறுத்தப்படுவதாகவும், பரிசோதனைகளுக்கு மக்களை ஊக்கப்படுத்தாமலும், சில நாட்களுக்கு ஒருமுறை புதிய அறிவிப்புகள் வருகின்றன.

பூஜ்ஜிய-கோவிட் கொள்கையின் அடித்தளமே வழக்கமான வெகுஜன பரிசோதனை ஆகும். நோய்தொற்று விகிதங்கள் மற்றும் சமூக பரவல் பற்றிய விஞ்ஞானபூர்வ மதிப்பீடு இல்லாமல், சீனாவில் இருந்து வெளியாகும் நோயாளிகள் எண்ணிக்கை மீது நம்பிக்கை வைக்க முடியாது. நோய்த்தொற்றுகளும் மரணங்களும் இரண்டுமே இப்போது சந்தேகத்திற்கிடமின்றி குறிப்பிடத்தக்களவில் குறைவாகவே பதிவிடப்படும்.

பெய்ஜிங்கில் நடந்துவரும் கொள்கை மாற்றம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஏகாதிபத்திய அதிகாரங்களாலும் உலக நிதிய மையங்களாலும் கோரப்பட்டது. போர் மொழியைப் பயன்படுத்தி, அவர்கள் சீனாவின் பொது சுகாதார நடவடிக்கைகளை பாரிய அட்டூழியங்களாகவும், மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வாதிகாரம் என்றும் பேசினார்கள். நியூ யோர்க் டைம்ஸ் இந்தாண்டு ஜனவரியில் சீனாவின் வெள்ளை சீருடை அணிந்த சுகாதார பணியாளர்களை நாஜிகளுடன் ஒப்பிட்டு ஒரு கட்டுரை வெளியிட்டது. சீனா அதனை டாலருக்கும் நோய்க்கும் திறந்து விட வேண்டுமென அமெரிக்க ஏகாதிபத்தியம் வலியுறுத்துவது, போதைப் பொருட்கள் விற்பதற்காக ஏகாதிபத்திய சக்திகள் சீனாவைத் துப்பாக்கி முனையில் நிறுத்திய 19 ஆம் நூற்றாண்டு அபின் போர்களின் (Opium Wars) போது வலியுறுத்திய கதிகலங்க வைக்கும் வலியுறுத்தல்களுக்கு ஒத்திருக்கிறது.

பூஜ்ஜிய-கோவிட் எதிர்ப்பு போராட்டங்களை மேற்கத்திய ஊடகங்கள் மும்முரமாகக் கைப்பற்றி, அவற்றை 'சுதந்திரத்திற்கான' சாட்சியம் என்று கொண்டாடுகின்றன. இந்தப் போராட்டங்களை ஆதரிப்பது தங்களின் 'தார்மீக கடமை' என்று கூறும் ஒரு தலையங்கத்தை டைம்ஸ் ஞாயிற்றுக்கிழமை பிரசுரித்தது, ஆனால் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளின்படி செயல்பட்டால் ஏற்படக்கூடிய மரண எண்ணிக்கை குறித்து அது எதுவும் குறிப்பிடவில்லை. சீனா ஒரு பேரழிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது, மேற்கத்திய ஊடகங்களின் பக்கங்களிலோ ஒரு திருவிழா சூழல் நிரம்பி உள்ளது. அவை இந்தப் பிரளய சீரழிவை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகையில் உள்ள சக்திகளைப் பொறுத்த வரையில், பூஜ்ஜிய-கோவிட் கொள்கை கைவிடப்படுவது வெறுமனே வினியோகச் சங்கிலிகளை மீட்டமைப்பதற்கும் மேலாக, அதிகளவில் தேவைப்படும் இலாபத்திற்கான ஆதாரவளத்தை மீட்டமைப்பதை அர்த்தப்படுத்துகிறது. சீனாவில் இந்தப் பெருந்தொற்று கட்டுப்பாடின்றி பரவுவதையும், அதில் மில்லியன் கணக்கானவர்கள் இறப்பதையும், ஆழ்ந்த சமூக நெருக்கடி தூண்டப்பட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை நிலைகுலைப்பதற்கான ஒரு வழிவகையாக இதை அவை பார்க்கின்றன. மனித உரிமைகள் மொழியைப் போர்த்தி உள்ள வாஷிங்டனின் வலியுறுத்தல், அதாவது கோவிட் ஐ கட்டுப்படுத்த முடியாது — கட்டுப்படுத்தக் கூடாது என்பது ஓர் உயிரி போர்முறை வடிவமாகும், அதாவது புதிய B-21 குண்டுவீச்சுக்கான தயாரிப்பைப் போல ஒவ்வொரு விஷயமும் பகிரங்க இராணுவ மோதலுக்கான ஒரு தயாரிப்புக்கு முக்கியமானதாக உள்ளது.

கடந்த மூன்றாண்டுகளில் சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையின் அனுபவம் இரண்டு கோட்பாடுகளுக்கு மறுக்க முடியாத சான்றாக உள்ளது. முதலாவதாக இந்தக் கொரோனா வைரஸை அகற்றவும் மற்றும் பாரிய மரணங்களைத் தடுக்கவும் ஒருங்கிணைந்த சமூக திட்டமிடல் சாத்தியம் என்பதையும், இரண்டாவதாக, ஒரு தேசிய அடித்தளத்தில் இத்தகைய ஒரு கொள்கையை மேற்கொள்வது சாத்தியமில்லை என்பதையும் நிரூபித்துள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துவம், அடிப்படையிலேயே, தேசியவாதமாகும். தொழிலாள வர்க்கம் மீதான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆம் நூற்றாண்டு காட்டிக்கொடுப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஸ்ராலினிசத்தின் தேசியவாதமே வழிவகுத்தது. தனியொரு நாட்டில் வைத்து சோசலிசத்தைக் கட்டியெழுப்புவதோ அல்லது ஒரு பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதோ சாத்தியமே இல்லை. CCP எந்திரம் உலக முதலாளித்துவத்திடம் சரணடைகையில், அதன் அதிகாரம் மற்றும் தனிச்சலுகைகளைப் பாதுகாக்க அதற்கு எந்த முன்னோக்கிய பாதையும் இல்லை. 1980கள் மற்றும் 90களில் அந்நாட்டின் பொருளாதாரத்தை உலக முதலாளித்துவச் சுரண்டலுக்குத் திறந்து விட்டதைப் போலவே, இன்றும் அது சீனாவை நோய்க்கும் பாரிய வெகுஜன மரணங்களுக்கும் திறந்து விட்டு வருகிறது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்று வரும் 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' கொள்கையால் மில்லியன் கணக்கானவர்கள் உயிரிழப்பார்கள். அனைத்திற்கும் மேலாக சீனாவில் இந்த வைரஸ் பரவல் புதிய வகை வைரஸ்களைப் பரிணமிக்கச் செய்யும், அவை ஒட்டுமொத்தமாக உலகெங்கிலும் பரவும். எவ்வாறிருப்பினும் இந்த பேரழிவு தவிர்க்கவியலாதது.

சீனத் தொழிலாள வர்க்கத்தினரிடையே, குறிப்பாக உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் வெற்றுக் காகித போராட்டங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட தன்மையோடு தெற்கு உற்பத்தி நகரங்களில் உள்ள சீனத் தொழிலாள வர்க்கத்திடையே போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. ஃபாக்ஸ்கான் ஐபோன் தொழிற்சாலை மற்றும் குவாங்சோ ஆயத்த ஆடைத் தொழில்துறையின் பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்கள் அரசுடன் வெளிப்படையான ஒரு மோதலுக்கு வந்துள்ளனர். அவர்கள் சுரண்டல் வேலை நிலைமைகளுக்கு, சம்பள நிலுவைகளுக்கு எதிராகவும், கோவிட்-19 பரவலுக்கு ஆலைகளில் போதுமானளவுக்கு பாதுகாப்பு செய்யப்படவில்லை என்ற உண்மைக்காகவும் போராடி வருகிறார்கள்.

இந்தப் போராடி வரும் சீனத் தொழிலாளர்கள், வரவிருக்கும் பேரழிவை நிறுத்துவதற்குத் தகைமை கொண்ட ஒரு சமூக சக்தியைப் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை நீக்குவதற்கு எதிராக, ஒரு சர்வதேசியவாத சோசலிச முன்னோக்குடன், ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பைக் கட்டியெழுப்புவதே மிக முக்கிய பணியாகும். முதலாளித்துவம் இந்தக் கொள்ளை நோயில் இலாபமீட்ட பார்க்கிறது, மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் மரணங்களைத் தடுக்க அது ஒன்றும் செய்யாது, மாறாக சீனாவை இந்தப் பெருந்தொற்று சீரழிப்பதைத் தடுப்பதில் உலகெங்கிலுமான தொழிலாள வர்க்கம் ஒவ்வொன்றையும் பணயத்தில் வைத்துள்ளது. பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை நீக்குவதற்கு எதிரான ஓர் அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதில் அவர்கள் சீனத் தொழிலாள வர்க்கத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்க வேண்டும்.