மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை முற்றிலுமாக நீக்கியுள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) தலைமை, கணக்கிட முடியாதளவில் சீன மக்கள் மீது நனவுபூர்வமாக ஒரு பேரழிவைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும், சீனாவில் இருந்து வரும் செய்திகள் அந்த அரசாங்கத்தின் கொள்கை மாற்றங்கள் சமீபத்தில் எந்தளவுக்கு சென்றுவிட்டன என்பதையும், அதனால் எவ்வளவு ஆழமான நெருக்கடி ஏற்பட்டு வருகிறது என்பதையும் வெளிப்படுத்துகின்றன. கடந்த இரண்டு வாரங்களில், வெகுஜன பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன, தொடர்புகளைக் கண்காணிப்பதற்கும் மற்றும் கோவிட்-19 தொடர்புக்குள் சென்றிருப்பதைக் கண்காணிப்பதற்குமான மொபைல் பயன்பாடு நிறுத்தப்பட்டது. சீனா, அறிகுறி இல்லாத நோயாளிகளைக் கணக்கில் எடுப்பதை புதன்கிழமையோடு நிறுத்தியது. இரண்டாண்டுகளுக்கும் மேலாக கோவிட்-19 பற்றிய மிகவும் துல்லியமான தரவுகளைக் கொண்டிருந்த சீனாவின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள், இப்போது யதார்த்தத்தை பிரதிபலிப்பதாக இல்லை. தனிமைப்படுத்தும் நெறிமுறைகளும் நீக்கப்பட்டு வருகின்றன, கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இப்போது வேலைக்குத் திரும்ப நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
அமெரிக்கா மற்றும் மற்ற மேற்கத்திய சக்திகளின் அனைத்து பொய்களையும் ஏற்றுள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ சொல்லாடல்கள், யதார்த்தத்தை தலைகீழாக நிறுத்துகின்றன. இந்தப் பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தீர்வாக அது இப்போது பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை முன்வைக்கவில்லை, மாறாக பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இந்தப் பெருந்தொற்று ஒரு தீர்வாக முன்வைக்கப்படுகிறது. “இலேசாக பாதிக்கும்' ஓமிக்ரோன் வெகுஜனங்களிடையே பரவுவது நோய்தொற்றுகளின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்றாலும், இது உத்தியோகபூர்வ அரசு ஊடகங்களில் 'கோவிட் வெளியேறும் அலை' (COVID exit wave) என்ற வார்த்தைகளில் குறிப்பிடப்படுகிறது. நுரையீரல் நோய் நிபுணரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கோவிட் கொள்கையின் முன்னணி உத்தியோகபூர்வ குரலுமான Zhong Nanshan, 2023 நடுப்பகுதிக்குள் இந்த அலை குறைந்து, சீனா 'தொற்றுநோய்க்கு முந்தைய நிலைமைகளுக்கு' திரும்பும் என்கிறார்.
உண்மையில் சீனா 'என்றென்றும் கோவிட்' என்ற கற்பனை உலகில் தன்னையும் ஒருங்கிணைத்து வருகிறது, இதில் SARS-CoV-2 உருமாறவும் மற்றும் அதிகரித்தளவில் தொற்றக்கூடிய மற்றும் நோயெதிர்ப்பு சக்தியையே விஞ்சும் வகைகளாக பரிணமிக்கவும், உலக மக்களிடையே வெகுஜன நோய்தொற்று பரவல் அனுமதிக்கப்படுகிறது. உலகளவில் ஒவ்வொரு புதிய அதிகரிப்பின் போதும், மில்லியன் கணக்கானவர்கள் இந்த வைரஸால் மீண்டும் மீண்டும் தொற்றுக்கு உள்ளாவதுடன், அவர்களின் உடல்களில் பல்வேறு பாதிப்புகளை அனுபவித்து வருகின்றனர், அத்துடன் மக்களில் அதிகரித்த பிரிவினர் நீண்ட காலக் கோவிட் ஆல் உயிரிழக்கின்றனர் அல்லது ஊனமாகின்றனர்.
சீன மக்களிடையே கோவிட் பரவுவது இந்த வைரஸுக்கு ஒரு பரந்த புதிய பரவல் களத்தை வழங்குகிறது, இதில் அது புதிய, அனேகமாக இன்னும் அதிக வீரியமுள்ள வடிவங்களில் உருமாறலாம். பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வருவது, புதுப்பிக்கப்பட்ட மிகவும் மோசமான உலகளாவிய நோய்தொற்று அலைகளின் வடிவில் உலகில் பேரழிவை ஏற்படுத்தலாம்.
உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் இப்போது துல்லியமானவை இல்லை என்றாலும், சீனாவின் பொது சுகாதார உள்கட்டமைப்பு ஏற்கனவே கடுமையான நோயாளிகளால் நிரம்பி வருகின்றன என்பதற்கு வலுவான ஆதாரம் உள்ளது. “இலேசான' நோய்தொற்று இருப்பதாகக் கருதுபவர்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றாலும், மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களால் பெருமளவிலான நோயாளிகளின் வருகையைக் கையாள இயலவில்லை. கோவிட்-19 இன் “இலேசான அறிகுறிகள்' உள்ள மருத்துவர்கள் வேலைக்கு வர வேண்டும் ஆனால் வயதான நோயாளிகளுடன் தொடர்பைத் தவிர்க்க வேண்டும் என்பதே நிலைமையின் மோசமான தன்மையை எடுத்துக்காட்டப் போதுமானதாக உள்ளது. இத்தகைய ஒரு கொள்கை மருத்துவ சிகிச்சையை வைரஸ் பரவலுக்கான முதன்மை காரணியாக மாற்றிவிடும்.
குளோபல் டைம்ஸின் ஒரு தலையங்கம் இந்த புதிய கொள்கைக்கான நியாயப்பாட்டை முன்வைத்தது. 'நோய்தொற்றைத் தடுக்க முடியாதளவிற்கு இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடியது என்பதில் அங்கே ஒருமித்தக் கருத்து உள்ளது. ஒவ்வொருவருக்குமான அறிகுறிகள் அவர்களின் அதிருஷ்டத்தைப் பொறுத்தது என்றாலும், ஏறக்குறைய ஒவ்வொருவரும் வைரஸிடம் இருந்து உயிர் பிழைக்க முடியும், உயிரிழப்பதற்கான ஆபத்து மிகவும் குறைவாகவே உள்ளது.”
இந்த 'மிகக் குறைவான' ஆபத்தை Zhong வெள்ளிக்கிழமையன்று பத்திரிகைகளுக்கு அளவிட்டுக் கூறினார், நோய்தொற்றுக்கு உள்ளானவர்களில் 'வெறும்' 0.1 சதவீதத்தினர் மட்டுமே உயிரிழப்பார்கள் என்றார். 1.4 பில்லியன் மக்கள் உள்ள ஒரு நாட்டில் 'தடுக்க முடியாத மிகவும் பரவக்கூடிய' ஒரு வைரஸால் ஏற்படும் 0.1 சதவீத இறப்பு விகிதம் என்பது ஒரு மில்லியன் அல்லது அதற்கு அதிகமான இறப்பு எண்ணிக்கையைக் குறிக்கும்.
ஆனால் 0.1 சதவீதம் என்ற மதிப்பீடே கூட குறைவாகும். உலகிலேயே தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் அதிக விகிதம் கொண்ட சிங்கப்பூர், 2022 இல் ஓமிக்ரோனால் 0.45 சதவீத இறப்பு விகிதத்தைச் சந்தித்தது. கடந்தாண்டு அமெரிக்காவில் கோவிட்-19 ஆல் மில்லியனில் ஒரு கால்வாசி பேர் இறந்துள்ளனர். நோயெதிர்ப்பு சக்திரீதியில் ஒப்பீட்டளவில் ஆரம்ப நிலையில் உள்ள 1.4 பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாடு இந்த வைரஸின் கோரப்பிடிக்குத் திறந்து விடப்பட்டால் இன்னும் எத்தனை பேர் இறக்கக்கூடும்? வியாழக்கிழமை ஹாங்ஹாங் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஓர் ஆய்வு உட்பட எண்ணற்ற விஞ்ஞானபூர்வ ஆய்வுகள் கடந்த மாதங்களில் வெளியிடப்பட்டன. பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை நீக்குவதன் விளைவாக நூறாயிரக் கணக்கானவர்கள், அனேகமாக ஏறக்குறைய இரண்டு மில்லியன் பேர் உயிரிழப்பார்கள் என்ற அவற்றின் கணிப்புகளில் எந்த குழப்பமும் இருக்கவில்லை.
பெய்ஜிங்கிலும் ஏனைய முக்கிய நகரங்களிலும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வணிகங்கள் வெகுஜன நோய்தொற்றாலும் பயத்தாலும் வெறிச்சோடி உள்ளன. புதிய செய்திகளில் வேலையிடங்களைக் குறித்த விபரங்கள் நிரம்பி உள்ளன, 90 சதவீத தொழிலாளர்கள் காய்ச்சல் அறிகுறிகளோடு வீடுகளில் தங்கி இருப்பதாக அவை குறிப்பிடுகின்றன, நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்களை வேலைக்குத் திரும்புமாறு வணிகங்கள் நிர்பந்திப்பதைக் குறித்தும், அரசாங்கமும் அதே பாணியைத் தொடரத் தயாராகி வருவதைக் குறித்தும் அதிகளவில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
அமெரிக்கா மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் குற்றவியல் கொள்கையான 'நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' கொள்கையையே சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் மேற்கொண்டு வருகிறது என்றாலும், அங்கே ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது: அதாவது, அதன் பாரிய நோய்தொற்று கொள்கையைச் செயல்படுத்த, சீன அரசாங்கம் அதன் வெற்றிகரமான மற்றும் பிரபலமான முற்றிலும் ஒழிக்கும் மூலோபாயத்தைத் திரும்பப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, இந்த மூலோபாயத்தை CCP அதிகாரத்துவம் மக்கள் மீது திணிக்கவில்லை, மாறாக அது பல வழிகளில் தலைகீழாக நடந்திருந்தது.
வெகுஜன நோய்தொற்று மற்றும் மரணத்தைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மக்கள் தீர்மானகரமாக இருந்ததன் திட்டமிட்ட மற்றும் ஒருங்கிணைந்த வெளிப்பாடாக பூஜ்ஜிய-கோவிட் கொள்கை இருந்தது. அந்தக் கொள்கையின் வெற்றியானது, நோய் பரவலைத் தடுப்பதற்காக — வழமையான வெகுஜன பரிசோதனைகள் மற்றும் அவ்வப்போது மதிப்பார்ந்த சமூக அடைப்புகள் உட்பட — தொழிலாள வர்க்க சமூகங்கள் ஒருமித்து தியாகங்களைச் செய்ய தேர்ந்தெடுத்ததில் தங்கியிருந்தது.
பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை நீக்குமாறு சீன மக்கள் கோரவில்லை, மாறாக சர்வதேச நிதி மூலதனமும் மேற்கத்திய ஊடகங்களில் உள்ள அதன் ஊதுகுழல்களும் தான் அதைக் கோரியது; அவை இதற்காக அழுத்தமளித்து, சீனாவின் பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச பொதுக் கருத்தில் நஞ்சூட்ட அவற்றால் ஆன அனைத்தையும் செய்தன.
நியூ யோர்க் டைம்ஸ், சீனாவின் 'சர்வாதிபத்திய' சுகாதார நடவடிக்கைகளைக் கண்டித்தும், தனிமைப்படுத்தும் வசதிகளை வதை முகாம்களாக சித்தரித்தும், பொது சுகாதாரத் தொழிலாளர்களை நாஜிக்களுடன் ஒப்பிட்டும், “சுதந்திரம்,” “மனித உரிமைகள்,” “ஜனநாயகம்' என்ற பெயரிலும், தலையங்கங்கள், பொது தலையங்கங்கள் மற்றும் கட்டுரைகளை வெளியிட்டு வெகுஜன நோய்தொற்றைக் கோரியது. உலகளாவிய இந்தப் பெருந்தொற்றில் இருந்து விடுபட சீனா போராடிக் கொண்டிருந்த அதேவேளையில், வாஷிங்டனோ உலகையே நிலைகுலைய செய்து, உக்ரேனில் போரைத் தூண்டிவிட்டு, தைவான் விவகாரத்தில் போரைக் கொண்டு அச்சுறுத்தி, சீனா மீது வர்த்தகப் போர் நடவடிக்கைகளைத் திணித்தது.
நவம்பர் மாத இறுதியில், மேற்கத்திய ஊடகங்கள் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை நீக்க கோருவதற்காக சீனாவில் நடந்த சிறியளவிலான உயர்மட்ட நடுத்தர வர்க்கப் போராட்டங்களைக் கைப்பற்றின. சீனாவின் உயரடுக்கு பல்கலைக்கழக வளாகங்களில் நடத்தப்பட்ட வெற்றுக் காகித ஆர்ப்பாட்டங்கள் சீன மக்களின் வலிமையான எதிர்ப்பின் எழுச்சி அல்ல, மாறாக அவை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மூலோபாயத்திற்கும் மேற்கத்திய பிரச்சார கோரிக்கைகளுக்கும் இடையிலான இடைமுகமாக செயல்பட்டன. பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை நீக்குவதற்கான 'மக்கள் கோரிக்கை' என்று காட்டுவதற்காக அந்த ஆர்ப்பாட்டங்கள் உலகப் பத்திரிகைகளின் கேமராக்கள் முன்னால் நடத்தப்பட்டன, ஆனால் அதற்கு முன்னரே சர்வதேச நிதி மூலதனத்தின் வற்புறுத்தலின் பேரில் CCP அந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருந்தது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கவனமாக திட்டமிட்டு, அந்தப் போராட்டங்களுக்கு நீண்ட காலத்திற்கு முன்னரே பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை நீக்கத் தொடங்கி இருந்தது. நவம்பர் தொடக்கத்தில், இந்த நிகழ்வுபோக்குக்காக அது ஹாங்காங்கில் இருந்து ஆலோசகர்களை அழைத்து வந்தது, வரவுசெலவு திட்டக்கணக்கில் முன்னுரிமைகளை மாற்றியது, நவம்பர் 11 இல் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையைத் திரும்பப் பெறுவதற்கான முதல் கட்டமாக 20 நடவடிக்கைகளை அறிவித்தது. அதற்கு ஒரு மாதத்திற்குப் பின்னர், இப்போது, சீன மக்களால் கவனமாக உருவாக்கப்பட்ட பரந்த பாதுகாப்பு உள்கட்டமைப்புகள் இடிபாடுகளாக கிடக்கின்றன.
2020 இன் தொடக்கத்தில் இந்தப் பெருந்தொற்று பரவலைத் தடுக்க வூஹான் மற்றும் அதற்கு அருகிலுள்ள நகரங்களில் செய்யப்பட்ட அடிமட்ட முயற்சிகளின் விளைவாக உருவான நடவடிக்கைகளே, ஒழுங்கமைக்கப்பட்டு, திட்டமிடப்பட்டு, பூஜ்ஜிய-கோவிட் கொள்கையாக வகுக்கப்பட்டது. உலகின் பிற பகுதிகளின் முதலாளித்துவ சக்திகள் ஒரு பெருந்தொற்று மூலோபாயத்தை ஏற்பதற்கு முன்னர் இருந்தே, சீனாவில் இதை அகற்றுவதற்கான அணுகுமுறை நடைமுறையில் இருந்தது.
பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியம் இலாபங்களை நிலைநிறுத்துவதற்கான சேவையில் வெகுஜனங்களிடையே நோய் பரப்புவதற்கும் மற்றும் மரணத்திற்குமான நுட்பங்கள் மற்றும் பொய்களை முன்னிலைப்படுத்தி, உலகளாவிய முதலாளித்துவத்திற்கான திட்டநிரலை அமைத்தது. “நோயெதிர்ப்பு சக்தி பெருக்குதல்' மற்றும் 'வைரஸூடன் வாழ்தல்' என்ற ஒரு கொள்கையில், ஒரு நாடு மாற்றி ஒரு நாடு முதலில் அகற்றுதலையும் பின்னர் தணிப்பு நடவடிக்கைகளையும் நீக்கி, வாஷிங்டனின் அடியொற்றி சென்றன. சீனாவைத் தனிமைப்படுத்தியது பூஜ்ஜிய-கோவிட் கொள்கை அல்ல, இந்த “என்றென்றும் கோவிட்' கொள்கை எனும் நோயைப் பரப்பும் இந்த முறை தான் சீனாவைத் தனிமைப்படுத்தியது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையின் அதிகாரமும் தனிச்சலுகைகளும், உலக முதலாளித்துவம் சுரண்டுவதற்காக பரந்த சீனத் தொழிலாள வர்க்கத்தின் உழைப்பு சக்தியை வாரி வழங்குவதற்கும் மற்றும் அதன் மீது பொலிஸ் வேலை செய்வதற்குமான அதன் திறனைச் சார்ந்துள்ளன. கட்சி உயர்மட்ட தலைவர்களது அதிகாரத்திற்கான அரசியல் அடித்தளமாக தேசிய இறையாண்மையைக் காப்பாற்றி வரும் அவர்கள், அதேவேளையில் அவர்கள் அரசு அதிகாரத்தைச் சீன தொழிலாளர் சக்தியை வெற்றிகரமாக ஏகாதிபத்திய நிதி மூலதனத்திற்கு இடைமுகமாக உறுதிப்படுத்துவதற்காகப் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் அரசியல் கண்ணோட்டம் இந்தச் செயல்பாட்டின் ஒரு வெளிப்பாடு என்பதோடு, முற்றிலும் தேசியவாதமாகும்.
ஓர் உலகளாவிய பெருந்தொற்றுக்கு, சாத்தியமான எந்த தேசிய தீர்வும் கிடையாது. ஒன்று ஒரு சோசலிச கொள்கையின் அடிப்படையில் பூஜ்ஜிய-கோவிட் கொள்கை ஓர் உலகளாவிய மூலோபாயமாக வெற்றி அடையும் அல்லது கருதிப் பார்க்கத்தக்க எதிர்காலத்திற்கு கோவிட்-19 உலகளவில் தொடர்ந்து பரவும். சீனாவின் தனிமைப்படலில் இருந்து வெளியே வர சீனக் கம்யூனிஸ்ட் கட்சியிடம் எந்த வழியும் இல்லை, அது உலக ஏகாதிபத்தியத்திடம் அடிபணிந்து வருகிறது.
பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை நீக்குவதற்கு மக்கள் ஆதரவு இல்லை என்றும் அது வெடிப்பார்ந்த வர்க்க மோதலுக்கான ஆதாரமாகக் கூட ஆகக்கூடும் என்றும் தெரிந்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமைத் திட்டமிட்டு அரைகுறை நடவடிக்கைகளைக் கூட கைவிட தீர்மானித்தது. எதிர்ப்புகள் ஒழுங்கமைக்கப்படுவதற்கு முன்பே, அசாதாரண வேகத்துடன், சர்வதேச நிதி மூலதனத்திற்கு மீண்டும் திறந்து விடுவதற்கான பாதையில் இருந்த அனைத்து தடைகளையும் அவர்கள் அகற்றி விட்டனர். சீனத் தொழிலாள வர்க்கத்தைத் துண்டாடி அதன் சமூக நல்லிணக்கத்தை உடைக்கும் முயற்சியில், “உங்கள் உடல்நலனுக்கு நீங்களே பொறுப்பான முதல் நபராக இருங்கள்' என்ற புதிய முழக்கத்தை அரசாங்கம் ஏற்றுள்ளது.
சீன மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை நீக்குவதை எதிர்ப்பதும், சீனாவில் மட்டுமல்ல மாறாக உலகெங்கிலும் அதை மீண்டும் நடைமுறைப்படுத்த போராடுவதும் இன்றியமையாததாகும். மில்லியன் கணக்கான மக்களை மரணம் மற்றும் உடல்நல நலிவில் இருந்து காப்பாற்றுவதற்காக, ஒரு பொதுவான இலக்காகவும் மற்றும் ஒரு கூட்டு உரிமையாகவும் திட்டமிட்ட மற்றும் ஒருங்கிணைந்த பொது சுகாதாரமே, ஓர் உலகளாவிய தொழிலாள வர்க்க இயக்கத்தை வழிநடத்தும் கொள்கைகளாக இருக்க வேண்டும்.