மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
தொற்றுநோய்களின் நிலையைப் பற்றிய ஒரு பார்வையைத் தொடர்ந்து வழங்கும் சில கோவிட் தரவுத் தளங்களின்படி, கோவிட் நோய்தொற்றுக்கள், மருத்துவமனை அனுமதிப்புகள் மற்றும் இறப்புகளின் ஒரு புதிய எழுச்சியுடன் அமெரிக்கா தனது மூன்றாவது குளிர்காலத்தில் நுழைகிறது. ஏழு நாள் சராசரி நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை அக்டோபர் நடுப்பகுதியில் இருந்து 61,570 என்றளவிற்கு இருமடங்காக அதிகரித்துள்ளது, இருப்பினும் இந்த புள்ளிவிபரங்கள் நம்பகத்தன்மையற்றதாகவும் பரிதாபகரமாக குறைத்து மதிப்பிடப்பட்டவையாகவும் உள்ளன.
இன்னும் மோசமாக, கோவிட் இறப்புக்களின் ஏழு நாள் சராசரி மீண்டும் கூர்மையாக மேல்நோக்கி அதிகரித்துள்ளது. நன்றி தெரிவித்தல் விழாவுக்கு முந்தைய நாளாந்த இறப்பு எண்ணிக்கைகள் 300 க்கு கீழ் இருந்து வந்தபோதிலும், விடுமுறைக்கு பின்னர் நாளாந்த ஏழு நாள் சராசரி இறப்பு எண்ணிக்கை 560 க்கு அதிகமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் ஆதார மையம் டிசம்பர் 7 அன்று 1,000 க்கும் மேற்பட்ட கோவிட் இறப்புக்களைப் பதிவு செய்தது.
இறப்புக்களின் போக்கைப் போலவே மருத்துவமனை அனுமதிப்புகளும் கடுமையாக அதிகரித்துள்ளன, கடந்த இரண்டு வாரங்களில் 25 சதவீதம் அதிகரித்து கிட்டத்தட்ட 38,000 ஆக அது உயர்ந்துள்ளது. இவை காய்ச்சல் மற்றும் RSV தொற்றுநோயுடன் சேர்ந்து சுகாதார அமைப்புகளுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கின்றன.
கோவிட் இறப்புக்கள் ஏற்கனவே ஏற்றுக்கொள்ள முடியாத மட்டத்திலிருந்து இன்னும் மேல்நோக்கி அதிகரிப்பதால், ஒரு பெரும் மக்கள்தொகை பிரச்சினை மேலும் மேலும் முன்னுக்கு வருகிறது: அதாவது, பெரும்பகுதி தடுப்பூசி போடப்பட்ட பிரிவினராக இருந்தபோதிலும், வயோதிபர்கள், பெருமளவில் குறிப்பிடப்பட முடியாத எண்ணிக்கையில் இறக்கின்றனர்.
நவம்பர் 19 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அமெரிக்காவின் மொத்த கோவிட் இறப்புக்களில் 92 சதவீத அளவிற்கு 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயோதிபர்களின் இறப்புக்கள் இருந்ததாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) தெரிவித்துள்ளது.
2021 கோடையில், தடுப்பூசி பிரச்சாரம் வயோதிபர்களிடையே அதன் உச்சத்தை எட்டியபோது, இந்த பிரிவினரின் இறப்பு எண்ணிக்கை 58 சதவீதமாக மட்டும் இருந்தது, மேலும் இவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி போடப்படாமல் இருந்தனர். குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகளின் உயிர்காக்கும் அம்சங்கள் தேவை என்பதை இந்த எண்ணிக்கை நிரூபித்தது. இருப்பினும், வைரஸ் தொடர்ந்து பரிணமித்து, அதிக நோயெதிர்ப்பு சக்தி தவிர்க்கும் திறன் கொண்டதாக மாறியதுடன், வயோதிபர்களை அவர்களின் தடுப்பூசி நிலையைப் பொருட்படுத்தாமல் ஆபத்தான விகிதத்தில் கொன்று குவித்தது.
Statista நிறுவனத்தின் சமீபத்திய தரவின்படி, மொத்தத்தில், ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 16.8 சதவீதமாகவுள்ள 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயோதிபர்கள், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள 1.07 மில்லியன் கோவிட் இறப்புக்களில் 75 சதவீத அளவிற்கு அல்லது 808,113 வரை உள்ளனர்.
மக்கள்தொகையில் 10.1 சதவீதத்தை (33.67 மில்லியன்) பிரதிநிதித்துவப்படுத்தும் 65 முதல் 74 வயதுடையவர்கள், 22.7 சதவீதம் (244,086) கோவிட் இறப்புகளுக்குக் காரணமாக உள்ளனர் அல்லது அவர்களின் பிரதிநிதித்துவத்தை விட மூன்று மடங்கு அதிகமாக அவர்களின் இறப்பு விகிதம் உள்ளது. மேலும், 0.7 சதவீத அளவிற்கு அல்லது இந்த வயதினரில் ஒவ்வொரு 138 பேருக்கு ஒருவர் வீதம் கோவிட் அழித்துவிட்டது.
மக்கள்தொகையில் 4.9 சதவீதத்தை (16.21 மில்லியன்) பிரதிநிதித்துவப்படுத்தும் 75 முதல் 84 வயதுடைய பிரிவினர், ஒட்டுமொத்த கோவிட் இறப்புக்களில் கிட்டத்தட்ட 26 சதவீதத்தைக் (279,276) கொண்டுள்ளனர், இது ஐந்து மடங்கு அதிகமாகும். இந்தப் பிரிவினரில், ஒவ்வொரு 58 பேருக்கு ஒருவர் வீதம் கோவிட் இறப்புகள் நிகழ்ந்துள்ளன.
85 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் அதிக விலை கொடுத்துள்ளனர். அமெரிக்க மக்கள்தொகையில் வெறும் 1.8 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த வயது மக்கள்தொகையில் உள்ள சுமார் 6 மில்லியன் மக்கள், 26.5 சதவீத கோவிட் இறப்புகளுக்கு (284,751) காரணமாக உள்ளனர், இது மக்கள்தொகையில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை விட கிட்டத்தட்ட 15 மடங்கு அதிகமாகும். 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் இதுவரை கிட்டத்தட்ட 5 சதவீதம் பேர், அதாவது ஒவ்வொரு 20 பேருக்கு ஒருவர் வீதம் கோவிட் நோயால் இறந்துள்ளனர்.
பொருள் தெளிவாக உள்ளது: கோவிட் விகிதாச்சாரத்தை மீறி சமூகத்தில் வயோதிபர்களை கொன்றுவிடுகிறது, மேலும் வயோதிபர்களுக்கு தொற்றுநோய் பீடித்தால் அது மிகுந்த அபாயகரமானதாக இருக்கும். கோவிட் இன் பாரிய தொற்றுநோயை ஊக்குவிக்கும் இருகட்சி ட்ரம்ப்-பைடென் கொள்கையானது ‘இனப்படுகொலை’ ஆகும், இது வயோதிபர்களை வேண்டுமென்றே பாரியளவில் கொல்லும்.
இது ஒரு விபத்து அல்ல, ஆனால் திட்டமிட்ட கொள்கையாகும், மேலும் இது முதலாளித்துவ சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க நன்மைகளைக் கொண்டிருப்பதாகவும், ‘சமூகத்தின் வளங்களில்’ ‘வடிகால்’ என கருதப்படுபவர்களை, அதாவது முதலாளிகள், இனி தங்களுக்கு வேலை செய்ய முடியாத மற்றும் தங்கள் இலாபத்திற்கு பங்களிக்க முடியாத மக்களை பெருமளவில் இதன் மூலம் அகற்றுவதாகவும் பார்க்கப்படுகிறது.
‘என்றென்றும்’ கோவிட் என்பது, அதன் நோயெதிர்ப்பு சக்தி தவிர்க்கும் திறன் எதுவாக இருந்தாலும், அது வைரஸ் பரிணாமத்தின் துணை தயாரிப்பு அல்ல. இது பொருளாதார நடவடிக்கைகளில் எந்த தடைகளையும் தடை செய்யும் கொள்கைகளின் துணை தயாரிப்பாகும், மேலும் வெள்ளை மாளிகை மற்றும் CDC மூலம் தொடரும் கோவிட் ஆபத்தின் மூலமான பொதுமக்கள் குறைப்பை இது கோருகிறது.
டாக்டர். ஆஷிஷ் ஜா மற்றும் டாக்டர். ரோச்செல் வாலென்ஸ்கி போன்ற அரசியல் புல்லுருவிகள், இன்னும் நிலவும் வாழ்வா சாவா அச்சுறுத்தலுக்கு எதிராக பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் தங்கள் பொதுநலப் பணிகளில் தோல்வியடைந்துள்ளனர்.
வெள்ளை மாளிகையின் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமானதான ஈரிணைத் திறம் உடைய தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வது மிகவும் மோசமாக உள்ளது. அதாவது இந்த தடுப்பூசிகள் செப்டம்பரில் கிடைக்கத் தொடங்கியதிலிருந்து அனைத்து தகுதியான நபர்களில் வெறும் 13.5 சதவீதத்தினர் மட்டுமே இதைப் பெற்றுள்ளனர். வயதானவர்களில், மூன்றில் ஒரு பகுதியினருக்கு சற்று அதிகமானோர் மட்டுமே இத்தடுப்பூசியை பெற்றுள்ளனர். இது அவர்களின் தனிப்பட்ட முயற்சியின் தோல்வி அல்ல.
நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள அனைத்து தணிப்பு நடவடிக்கைகளையும் நீக்குதல், பாதுகாப்பான சுத்தமான காற்றை உறுதி செய்வதற்கான உள்கட்டமைப்பு முன்முயற்சிகள் எதையும் மேற்கொள்ளாமல் நேரடி கற்பித்தலுக்கு பள்ளிகளை மீளத்திறத்தல், மற்றும் தொற்றுநோய் முடிந்துவிட்டது என்றும், தொற்றுநோயை நமக்கு பின்தள்ளி இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான நேரம் இது என்றும் செப்டம்பர் மாதம் பைடென் வெளியிட்ட இழிவான கருத்து ஆகியவை கொரோனா வைரஸ் தொடர்ந்து கட்டுப்பாடற்று பரவும் நிலையை உருவாக்கியுள்ளன.
சமூக-பொருளாதார குறியீடுகளின் நுண்ணோக்கி மூலம் கோவிட் இறப்புக்கள் மதிப்பிடப்பட்டபோது, 2022 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, குறைந்த சமூகப் பொருளாதார நிலைகளில் உள்ள பெரியவர்களிடையே கோவிட் இறப்பு விகிதம் ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது, அதாவது 100,000 பேருக்கு 14.6 பேர் வீதம் இறக்கும் பணக்காரர்களின் இறப்பு விகிதத்துடன் ஒப்பிடுகையில், இவர்களின் இறப்பு விகிதம் 100,000 பேருக்கு 72.2 பேர் என்றளவிற்கு மிக அதிகமாக உள்ளதைக் கண்டறிந்துள்ளது. மேலும், இந்த 72 சதவிகித வேறுபாடுகள், ‘குறிப்பாக, உடலுழைப்பு, சேவை, மற்றும் சில்லறை விற்பனைத் தொழிலாளர்கள்’ போன்ற ஒருபோதும் தொலைதூரப் பகுதிகளில் வேலை செய்யாத நபர்களுக்கு பொருந்தியது.
இந்த வேறுபாடுகள் இனம் சார்ந்தவை அல்ல, ஆனால் ஆக்கிரமிப்புடன் தொடர்புடையவை, வெள்ளையர்கள், கறுப்பர்கள் மற்றும் ஹிஸ்பானியர்களுக்கான கோவிட் இறப்பு மொத்த எண்ணிக்கை மக்கள்தொகையில் உள்ள ஒவ்வொரு குழுவின் விகிதத்திற்கும் தோராயமாக ஒத்திருக்கிறது.
ஜாமா வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வானது, குறைந்த மற்றும் உயர் சமூகப் பொருளாதாரக் குழுக்களுக்கு இடையே தொற்றுநோய்க்கு முன்னர் ஆயுட்கால ஏற்றத்தாழ்வுகள் இருந்ததை மட்டும் நிரூபிக்கவில்லை, மாறாக, தொற்றுநோயின் இரண்டு ஆண்டுகளாக, ஏழ்மையானவர்களின் ஆயுட்காலம் கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் சரிவைக் கண்டுள்ளன, அதே சமயம் வயதான பணக்காரர்கள் தங்கள் சலுகை பெற்ற ஆயுட்காலத்தை 85 வயது வரை தக்க வைத்துக் கொண்டுள்ளனர் என்பதையும் நிரூபித்தது. எனவே, தொழிலாள வர்க்கம் ஓய்வு பெற்று உடனடியாக புதைகுழியில் விழுவதை எதிர்பார்க்கலாம்.
கோவிட் நோய்தொற்றுக்கள் அதிகரிக்கும் நிலையில், வயோதிபர் பராமரிப்பு இல்லங்களில் உள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீண்டும் ஒருமுறை ஆபத்துக்கு ஆளாகியுள்ளனர். நீண்டகால பராமரிப்பு வசதிகளில் நிகழும் இறப்புக்கள் பற்றி கைசர் குடும்ப அறக்கட்டளை சமீபத்தில் மதிப்பிட்டுள்ளது. அவர்களில் பாதிக்கும் குறைவானவர்கள், மற்றும் வயோதிபர் பராமரிப்பு இல்லங்களின் ஊழியர்களில் 23 சதவீதம் பேர் மட்டுமே முழுமையாக கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர். கூடுதலாக, முதன்மை பராமரிப்பு மருத்துவர்களும் மற்றும் பரிந்துரைப்பாளர்களும் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் பாக்ஸ்லோவிட் போன்ற வைரஸ் எதிர்ப்பு சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதில் அவர்கள் எச்சரிக்கையாக உள்ளனர்.
இதற்கிடையில், உலக மக்கள் தொகை சமீபத்தில் எட்டு பில்லியனைத் தாண்டிய நிலையில், முதலாளித்துவ பத்திரிகைகளில் நடைபெறும் விவாதங்கள் வயோதிபர்களைப் பராமரிப்பதற்கான செலவு பற்றிய பிரச்சினைக்கு திரும்பியுள்ளன. எக்னாமிஸ்ட் பத்திரிகை சமீபத்தில் ‘வயோதிபர்களுக்கான உண்மையான செலவுகள்’ என்ற தலைப்பில் ஒரு மெருகூட்டப்பட்ட, உயர் தயாரிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டது, இது “மக்கள் ஓய்வு பெறும்போது, அதிக பணம் செலவழிக்கத் தொடங்குகிறார்கள் மற்றும் விரைவில் அவர்களால் செலவைச் சமாளிக்க முடியாத நிலை உருவாகிவிடும். வயோதிபர்களை பராமரிப்பதற்கான தற்போதைய அணுகுமுறைகள் சமூகத்தின் வளங்களை வடிகட்டுவதாக உள்ளது” என்ற வரிகளுடன் தொடங்கியது.
தொழிலாளர் சக்தி குறைக்கப்பட்டு, ஓய்வூதியங்களும் சுகாதாரப் பராமரிப்பு செலவினங்களும் மேற்கொள்ளப்படுவது பேரழிவை ஏற்படுத்தும், காரணம் வயோதிபர்கள் ‘குறைவாக செலவு செய்கிறார்கள், குறைவாக வரி செலுத்துகிறார்கள், அதேவேளை அவர்களுக்கு அதிகம் செலவு செய்யப்படுவது,’ மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் குறைத்து, பொருளாதாரத் தேக்கநிலைக்கு வழிவகுக்கிறது என்பது பற்றி ஆசிரியர்கள் விவாதிக்க முற்பட்டனர். அவர்கள் மேலும், “இதை பொருளாதாரக் கண்ணோட்டத்தில் நீங்கள் பார்த்தால், தவறான காரியத்தைச் செய்வதற்கு நாம் அதிக பணம் செலவு செய்கிறோம்… மேலும் தவறுகளுக்கு பணத்தை விட அதிகம் செலவாகும்” என்றும் கூறினர்.
RBC Wealth நிர்வாகத்தின் கூற்றுப்படி, “ஆரோக்கியமான 65 வயதான ஒருவரின் வாழ்நாள் பராமரிப்பு செலவு 404,253 டாலர் ஆகும் – மேலும் இது நீண்டகால பராமரிப்பு செலவினங்களில் காரணியாக இல்லை, இது வருடத்திற்கு 100,000 டாலர் வரை இருக்கலாம். அத்தகைய 800,000 பேரை (அமெரிக்காவில் கோவிட் நோயால் கொல்லப்பட்ட 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை) அகற்றுவது என்பது, அமெரிக்க அரசாங்கத்திற்கு 320 பில்லியன் டாலர் சேமிப்பை வழங்கும், மேலும் ஆண்டுக்கு 80 பில்லியன் டாலரை மிச்சப்படுத்தும், மேலும் கூடுதல் இறப்புக்களிலிருந்து கூடுதல் ‘சேமிப்பை’ வழங்கும். இத்தகைய கணக்கீடுகள் சந்தேகத்திற்கு இடமின்றி அரசாங்கம் மற்றும் வோல் ஸ்ட்ரீட் அலுவலகங்களில் செய்யப்படுகின்றன.
சர்வதேச நாணய நிதியம் (IMF), ‘வயோதிபர்களுக்கான செலவு’ என்பது, ‘புதிய மக்கள்தொகை உண்மைகள்’ காரணமாக அதிக வருமானம் கொண்ட நாடுகள் தங்கள் மக்கள்தொகை நுகர்வை கணிசமாகக் குறைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
தொற்றுநோய், நிதியத் துறைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்து வருகிறது, அதேவேளை தொழிலாள வர்க்கம், அதன் ஆயுட்காலத்தில் பாரிய சரிவு ஏற்பட்ட நிலையில், பெரும் விலை கொடுத்துள்ளது.