பிலிப்பைன்ஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் ஜோஸ் மா. சிஸன் தனது 83 வயதில் காலமானார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிலிப்பைன்ஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் (CPP) நிறுவனரும் வாழ்நாள் தலைவருமான ஜோஸ் மா. சிஸன் டிசம்பர் 16 அன்று தனது 83வது வயதில் காலமானார். கடந்த அரை நூற்றாண்டில், பிலிப்பைன்ஸ் தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் காட்டிக் கொடுப்பதில் எந்த ஒரு நபரும் சிஸனைப் போல் கருவியாக இருந்ததில்லை.

பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜோஸ் மரியா சிஸன் [AP Photo/Andrew Medichini]

54 ஆண்டுகளுக்கு முன்பு சிஸனால் நிறுவப்பட்டதில் இருந்து, பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி (CPP) பிலிப்பைன்ஸ் கிராமப்புறங்களில் புதிய மக்கள் இராணுவம் (NPA) மூலம் ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருகிறது. டிசம்பர் 17 அன்று, கட்சி தனது தலைவரின் மறைவுக்கு 10 நாட்கள் உத்தியோகபூர்வ துக்கம் அனுஷ்டிப்பதை அறிவித்தது.

உள்ளூர் கம்யூனிஸ்ட்டுகளின் ஆயுத மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தேசிய பணிக்குழுவுடன் (NTF-ELCAC) தொடர்புடைய பல்வேறு பொது நபர்கள் சிஸனின் மரணம் குறித்து அறிக்கைகளை வெளியிட்டனர். அவை முட்டாள்த்தனமான தூற்றல்களையும் இழிவான கொண்டாட்டத்தின் கூறுகளையும் கொண்டிருந்தன. NTF-ELCAC என்பது ஜனாதிபதி பேர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர் தலைமையிலான ஒரு உத்தியோகபூர்வ அரசாங்க குழுவாகும். இது கம்யூனிஸ்டுகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களை துன்புறுத்துவதற்கும் பலிகடாவாக்குவதற்கும் இராணுவம், உளவுத்துறை மற்றும் பொலிஸ் முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கு பொறுப்பான ஒன்றாகும். NTF-ELCAC இன் செய்தித் தொடர்பாளர் லோரெய்ன் படோய், 'நரகத்தில் ஓய்வெடுங்கள்' என மூர்க்கமாக எழுதினார்.

பிரதான ஊடகங்கள் தயாரித்த செய்தி அறிக்கைகள் மற்றும் முன்னணி ஆளும் வர்க்க அரசியல்வாதிகளால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் முற்றிலும் மாறுபட்ட தொனியைக் கொண்டிருந்தன. நாட்டின் இரண்டாவது பெரிய ஊடகக் குழுமத்தின் முதன்மையான GMA News, 'நீங்கள் நினைவில் இருப்பீர்கள்' என்ற தலைப்புடன், சிஸனைக் கௌரவிக்கும் படத்தை வெளியிட்டது.

பாசிச முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுரேற்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 'திரு. சிஸனுக்கும் எனக்கும் பல கருத்து வேறுபாடுகள் இருந்தன,' என்று அவர் கூறினார். 'இறுதியில், ஒவ்வொரு பிலிப்பைன் மக்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் அதே கனவை நாங்கள் பகிர்ந்து கொண்டோம் என்று நான் நம்ப விரும்புகிறேன்... அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்' என்றார்.

பிலிப்பைன்ஸில் உள்ள ஆளும் உயரடுக்கிலுள்ள பலருக்கு, சிஸனின் மரணத்துடன் தாங்கள் ஒரு மிகுந்த பயனுள்ள கூட்டாளியை இழந்துவிட்டோம் என்பதை அறிந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

மூலங்கள்

ஜோமா சிஸன் என்று அழைக்கப்படும் ஜோஸே மரியா சிஸன், 1939 இல் மிகவும் பணக்கார குடும்பத்தில் பிறந்தார். நூற்றாண்டின் தொடக்கத்தில் வடக்கு லூசோனில் அக்குடும்பம் மிகப்பெரிய நில உரிமையாளராக இருந்தது. சிஸன் தேசிய சட்டமன்றத்திலிருந்து மணிலா தேவாலயம் வரை பரவியிருந்த குடும்ப இணைப்புகளின் ஒரு பகுதியாக இருந்தார். அவருடைய மாமாக்களில் இருவர் காங்கிரஸ் அங்கத்தவர்கள். மற்றொருவர் நியூவா செகோவியாவின் பேராயர். இது இலோகோஸ் சுர் மாகாணம் முழுவதையும் உள்ளடக்கியிருந்தது. மேலும் அவரது மாமா மாகாணத்தின் ஆளுனராக இருந்தார்.

ஞாயிறு பிரார்த்தனையில், சிஸனின் குடும்பத்திற்கு முன் பீடங்கள் ஒதுக்கப்பட்டன. அவர்களது தோட்டத்தின் விவசாயக் குத்தகைதாரர்கள் ஒவ்வொரு நாளும் அவரது வீட்டிற்கு 'நில வாடகையை வழங்குவதற்கும், விதைகளைக் கேட்பதற்கும், வீட்டைச் சுற்றி கீழ்த்தரமான பணிகளைச் செய்வதற்கும் அல்லது ஏதாவது சிறப்பு தேவைகளுக்காக கெஞ்சுவதற்கும்' வந்தனர். வேலையாட்கள் இளம் சிஸனுக்காகக் காத்திருந்து, அவருக்கு ஆடை அணிவித்து, குளியலறையில் அவருடைய துடைக்கும் துண்டைக் கொடுத்தார்கள்.[1]

சிஸன் மணிலாவில் உள்ள உயரடுக்கினருக்கான மத உயர்நிலைப் பள்ளிகளில் பயின்றார். அங்கு அவர் ஜேசுயிட்ஸ் மற்றும் டொமினிகன்களால் பயிற்றுவிக்கப்பட்டார். அவரது குடும்பத்தின் சொத்துக்களினால் வளர்க்கப்பட்ட பயிர்கள் படிப்படியாக உலக சந்தையில் மதிப்பை இழந்தன. மேலும் சிஸன் பல்கலைக்கழகத்தை அடையும் நேரத்தில் பணக்கார குடும்பம் மேல் நடுத்தர வர்க்கத்தின் தரவரிசைக்கு தள்ளப்பட்டது. 1960 அளவில், சிஸன் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் பட்டதாரி மாணவராக இருந்தார். அதற்கு அவருக்கு USAID அமைப்பிற்கு முன்னோடியான சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (ICA) உதவித்தொகை கிடைத்தது.

செனட்டர் கிளாரோ எம். ரெக்டோவால் (Claro M. Recto) வெளிப்படுத்தப்பட்ட அதன் நலன்களைக் கொண்ட ஒரு சமூக அடுக்கின் முதன்மையான பிரதிநிதியாக சிஸன் ஆனார். ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது ஒரு முன்னணி ஒத்துழைப்பாளரான ரெக்டோ 1950 களின் பிற்பகுதியில் பிலிப்பைன்ஸ் முதலாளிகளுக்கு ஆதரவாக பொருளாதார தேசியவாதத்தின் ஒரு வேலைத்திட்டத்தை ஆதரித்தார்.

1957 இல் ஆற்றிய உரையில், ரெக்டோ 'பிலிப்பைன்ஸ் முதலாளிகளால் நாட்டின் தொழில்மயமாக்கலுக்கு அழைப்பு விடுத்தார். வெளிநாட்டு முதலாளிகளால் தொழிற்துறைமயமாக்கலைத் தடுப்பது மட்டுமல்ல; வெளிநாட்டு முதலாளித்துவத்தால் அல்லாது பிலிப்பைன்ஸ் மூலதனத்தால் நமது இயற்கை வளங்களை சுரண்டுதல்; பிலிப்பைன்ஸ் முதலாளித்துவத்தின் வளர்ச்சி மற்றும் வலுப்படுத்துதல்; தேசிய வருமானத்தின் அதிகரிப்பு, ஆனால் அது பெரும்பாலும் பிலிப்பைன்ஸ் அல்லாதவர்களின் நலனுக்காக செல்ல அனுமதிக்கவில்லை.”[2] இந்த முன்னோக்கு சிஸனின் வாழ்நாள் முழுவதிற்குமான விடயமாக மாறியது.

1960 இல், சிஸன் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தின் மாணவர் கலாச்சார சங்கம் (SCAUP) என்ற ஒரு பல்கலைக்கழக அமைப்பை நிறுவினார். இது ரெக்டோவின் யோசனைகளை ஊக்குவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் முதலாளிகளுக்கு ஆதரவாக ரெக்டோவின் நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவதற்கு வெகுஜன ஆதரவு தேவை என்று அவர்கள் நம்பினர். இது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அவர்களின் தேசிவாதத்தின் அடிப்படையில் முதலாளிகளின் பிரிவிற்கு உற்சாகத்தைத் தூண்டியது. இங்கு ஸ்ராலினிசத்தின் இந்த வேலைத்திட்டம் முக்கியமானதாக இருந்தது.

சிஸன் தலைமையிலான SCAUP, ரெக்டோ பற்றிய வருடாந்திர கருத்தரங்கை நடத்துகிறது (Philippine Collegian, 15 February 1961)

ஸ்ராலினிசம் தேசியவாதத்தைப் பயன்படுத்தி, மார்க்சிசம் மற்றும் புரட்சிகர வார்த்தைகளால் மூடிமறைத்து, முதலாளித்துவத்தின் ஒரு பகுதியுடன் கூட்டணி அமைக்க தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அறிவுறுத்தியது. தனியொரு நாட்டில் சோசலிசம் என்ற அதன் பிற்போக்கு தத்துவத்தின்படி, அவர்களின் தனிச்சலுகைகளுக்கான பொருளாதார அடித்தளத்தினை நியாயப்படுத்த மாஸ்கோ மற்றும் பெய்ஜிங்கில் உள்ள ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள் ஒவ்வொரு நாடுளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் பலத்தைப் பயன்படுத்தி பல்வேறு முதலாளித்துவ சக்திகளுடன் வர்த்தக மற்றும் இராஜதந்திர உறவுகளைப் பாதுகாக்க முயன்றன.

இந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டு கட்ட புரட்சி நிலைப்பாட்டை பழைய மென்ஷிவிக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. அக்டோபர் 1917 புரட்சியால் தீர்க்கமாக செல்தகமை அற்றுப்போன அந்தக் கருத்தின்படி, தாமதமான முதலாளித்துவ வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பணிகள் பிரத்தியேகமாக தேசிய மற்றும் ஜனநாயக தன்மை கொண்டவையே தவிர இன்னும் சோசலிசத் தன்மை கொண்டவையல்ல என்று வாதிடுகின்றன. இந்த முதல் புரட்சிகர கட்டத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பிரிவு முற்போக்கான பாத்திரத்தை வகிக்கும், தொழிலாளர்கள் அவர்களுடன் கூட்டணி அமைத்து அவர்களுக்கு விமர்சன ஆதரவை வழங்க வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர்.

தனியொரு நாட்டில் சோசலிசம் என்ற ஸ்ராலினிச வேலைத்திட்டம், ட்ரொட்ஸ்கிசத்திற்கும் மற்றும் நிரந்தரப் புரட்சிக்கும் வரலாற்று ரீதியில் எதிராக நிற்கிறது. இந்த முன்னோக்குகளுக்கு இடையிலான மோதல், மார்க்சிசத்தினை தீர்மானிக்கும் போராட்டமாக மாறியதுடன், ஒரு இரத்த ஆறு அவற்றைப் பிரிக்கிறது. ஸ்ராலினிசம் முதலாளித்துவ வர்க்கத்துடன் தேசியவாத அடிப்படையில் சந்தர்ப்பவாத கூட்டணிகளை உருவாக்குகையில், 1917ல் ரஷ்யாவில் உலகின் முதல் தொழிலாளர் அரசை நிறுவுவதற்கான அடிப்படையான சோசலிசத்திற்கான சர்வதேசப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயயாதீனத்திற்காக ட்ரொட்ஸ்கிசம் போராடியது. ஸ்ராலினிசத்தின் வலியுறுத்தலான, புரட்சியின் முதல் கட்டம் பிரத்தியேகமான தேசிய மற்றும் ஜனநாயகத் தன்மையானது என்பது தொழிலாள வர்க்கத்திடம் இயற்கையான முறையில் வளரும் போராட்டங்களைத் தடுப்பதோடு, எதிர்ப்புரட்சிக்கான பாதையையும் திறக்கிறது.

பிலிப்பைன்ஸ் முதலாளித்துவத்தின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட சிஸன், தொழிலாள வர்க்கத்தின் மீதான இந்தக் கட்டுப்பாட்டிற்கு ஸ்ராலினிசத்தின் பெரும் பயனுள்ள தன்மையைக் கண்டார். ஸ்ராலினிசத்தின் வார்த்தைகளும், வேலைத்திட்டமும் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்குப் பின்னால் பிலிப்பைன்ஸ் தொழிலாள வர்க்கத்தின் ஆதரவைக் கொண்டுவருவதற்கான கருத்தியல் வழிமுறையை சிஸனுக்கு வழங்கியது. தேசிய முதலாளித்துவத்தின் மீதான இந்த வர்க்க நோக்குநிலையே, ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான சிஸனின் ஆழமான மற்றும் உள்ளார்ந்த விரோதத்தை விளக்குகிறது.

மாவோயிசம் என்பது ஸ்ராலினிசத்தின் சீன வகையறாவாகும். அது சிறிய சிகப்பு புத்தகம் மற்றும் கிராமப்புறங்களில் ஆயுதமேந்திய போராட்டத்தின் தீவிரவாதம் ஒலிக்கும் முழக்கங்களை சமூக அமைதியின்மையின் மீது ஒரு கட்டுப்பாட்டைப் பெறுவதற்கும், முதலாளித்துவத்தின் ஒரு பகுதியுடன் உறவுகளை பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் பயன்படுத்தியது. 1967 வாக்கில் சிஸன் மாவோயிசத்தின் முன்னோக்கை ஏற்றுக்கொண்டார் மற்றும் துப்பாக்கிக் குழல் வழியாக வலது தேசியவாதத்தை அடைய முயன்றார். தேசிய முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கான அவரது நோக்குநிலை, அவரது வாழ்க்கை முழுவதும் மாறாமல் இருந்தது. ஜனவரி 1965 இல் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வெகுஜன ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய உரையில் சிஸன்: 'நாங்கள் பிலிப்பைன்ஸ் முதலாளிகளுக்கு பக்கபலமாக இருக்கிறோம்' என அறிவித்தார்.

வாழ்நாள் காட்டிக்கொடுப்புகள்

சிஸன் இந்தோனேசியாவில் ஸ்ராலினிசத்தின் வேலைத்திட்டத்தைக் கற்றுக்கொண்டார். அவர் 1961 இன் பிற்பகுதியில் ஜகார்த்தாவிற்குப் பயணம் செய்து, அங்கு அவர் டி.என். ஐடிட் மற்றும் இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி (பார்ட்டாய் கொமுனிஸ் இந்தோனேஷியா - Partai Komunis Indonesia, PKI) இன் பிற தலைவர்களைச் சந்தித்தார். இது பின்னர் ஜனாதிபதி சுகார்னோவின் நிர்வாகத்துடன் நெருக்கமாக இருந்த ஒரு வெகுஜன ஸ்ராலினிசக் கட்சியாகும். 1962 இல் பிலிப்பைன்ஸுக்குத் திரும்பியதும், சிஸன் ஸ்ராலினிச பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி (பார்டிடோ கொமுனிஸ்டா என் பிலிபினாஸின் -Partido Komunista ng Pilipinas, PKP) நிர்வாகக் குழுவில் உறுப்பினரானார். இது பொய்கள், படுகொலைகள், அவதூறுகள் மற்றும் வர்க்கத் துரோகம் போன்ற அவரது 60 ஆண்டுகால வாழ்க்கையின் ஆரம்பமாகும்.

1963 மணிலா துறைமுக வேலைநிறுத்தத்தின் தலைப்புச் செய்திகளும் படங்களும்

லாபியங் மங்ககாவா (தொழிலாளர் கட்சி - LM) ஜனவரி 1963 இல் நூறாயிரக்கணக்கான தொழிற்சங்கமயமாக்கப்பட்ட தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சுயாதீன அரசியல் கட்சியாக உருவாக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டியோஸ்டாடோ மக்காபகல் சுகார்னோவுடன் நெருங்கிய உறவைப் பெறுவதற்காக, சிஸன் தொழிலாளர் கட்சியை மக்காபாகலின் ஆளும் லிபரல் கட்சியுடன் இணைக்க ஏற்பாடு செய்தார். மணிலாவின் துறைமுகத் தொழிலாளர்களின் வெடிக்கும் வேலைநிறுத்தத்தை முறியடிக்க சிஸன் ஏற்பாடு செய்த ஆதரவை மக்காபகல் பயன்படுத்திக் கொண்டார். மக்காபகலின் துருப்புக்கள் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை சுட்டுக் கொன்றபோது சிஸன் மக்காபகலுக்கு ஆதரவாக தலையங்கங்களை எழுதி, அவர் 'முடிவடையாத புரட்சியை' நடத்தி வருவதாகக் கூறினார். [3]

சிஸன் தனது 1963 ஆம் ஆண்டு நிலச் சீர்திருத்த புத்தகத்தை ஜனாதிபதி டியோஸ்டாடோ மக்காபகலுக்கு அர்ப்பணிக்கிறார் (நில சீர்திருத்தக் குறியீடு குறித்த கையேடு [Manila: M. Colcol, 1963]

1965 ஜனாதிபதி தேர்தலில் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி (PKP) அதன் ஆதரவை மக்காபகலில் இருந்து பேர்டினென்ட் மார்க்கோஸிற்கு மாற்றியது. மார்க்கோஸுக்கு ஆதரவளிக்க பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிதாக நிறுவப்பட்ட இளைஞர் அமைப்பான காபாடாங் மக்காபயான் (Nationalist Youth, KM) இற்கு சிஸன் தலைமை தாங்கினார். அவர் ஆகஸ்ட் 19 அன்று காபாடாங் மக்காபயான் இன் தேசியக் குழுவிடம் ஒரு அறிக்கையை அளித்தார். அதில் அவர் மார்கோஸின் நேஷனலிஸ்டா கட்சி (Nacionalista Party - NP) முற்போக்கானது என்று அறிவித்தார். ஏனெனில் 'அதன் அணிகளுக்குள் தேசிய தொழில்முனைவோரின் நலன்களைப் பாதுகாக்க விரும்புபவர்கள் உள்ளனர்.'[4.] எதிர்கால சர்வாதிகாரி பேர்டினாண்ட் மார்க்கோஸின் முதல் ஜனாதிபதித் தேர்தல் வெற்றியைப் பாதுகாப்பதில் சிஸன் முக்கிய பங்கு வகித்தார். மார்கோஸை ஒரு முற்போக்கான நபராக அவர் முன்வைத்தார்.

1967 இல் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிரிந்தது. 1968 இல் பெய்ஜிங்கின் மாவோவாத முன்னோக்கில் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி (CPP) என்ற ஒரு புதிய கட்சியை நிறுவுவதற்கு பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் (PKP) இளைஞர்களின் ஒரு சிறிய பகுதியை சிஸன் வழிநடத்தினார். பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிரமான வார்த்தையாடல்கள், 1970 களின் முற்பகுதியில் சமூக அமைதியின்மையின் போது அதற்கு பெரும் செல்வாக்கைக் கொடுத்தது. பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆளும் வர்க்கக் கூட்டாளிகளான நினோய் அக்கினோவிற்குப் பின்னால் உள்ள எதிர்ப்புகளைத் திசைதிருப்ப சிஸன் இந்த செல்வாக்கைப் பயன்படுத்தினார்.

பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்கால தலைமையின் மையத்தில் ஜோஸ் மா. சிஸன் நிற்கிறார் (Graphic Weekly, 13 March 1968)

மார்க்கோஸிற்கான ஆளும் வர்க்க எதிர்ப்பாளர்களான சிஸனால் ஆதரிக்கப்பட்ட சக்திகள் ஜனநாயகப் பிரமுகர்கள் அல்ல. அவர்கள் மார்க்கோஸைப் போலவே இராணுவ சர்வாதிகாரத்தையும் சுமத்த முயன்றனர். ஆனால் அவர்கள் இராணுவச் சட்டத்தை திணிப்பதற்கு முன்பு மார்க்கோஸை வெளியேற்றுவதற்கு அதிகரித்து வரும் அமைதியின்மையை பயன்படுத்த வேண்டியிருந்தது. 1972 செப்டம்பரில் அமெரிக்க தூதரக அதிகாரிகளை அக்கினோ இரகசியமாக சந்தித்து, இராணுவத்தின் ஒரு பகுதி மற்றும் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி (CPP) ஆகிய இரு பிரிவினரின் ஆதரவுடன் ஆட்சி கவிழ்ப்பில் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பதாக அவர்களிடம் கூறினார். அவர் அமெரிக்காவிற்கு இராணுவச் சட்டத்தை விதிப்பதாகவும், எதிர்ப்பாளர்களை தூக்கிலிடுவதாகவும் உறுதியளித்தார்.

PKP தொடர்ந்து மார்க்கோஸை ஆதரித்து, இராணுவ சர்வாதிகாரத்தை நியாயப்படுத்த மார்க்கோஸ் பயன்படுத்திய குண்டுவீச்சுகளை மணிலா முழுவதும் நடத்தியது. செப்டம்பர் 1972 இல் இராணுவச் சட்டம் திணிக்கப்பட்டபோது, PKP மார்க்கோஸ் ஆட்சியை அங்கீகரிப்பதற்காக ஒரு காங்கிரஸை நடத்தி 1974 இல் மார்க்கோஸ் அமைச்சரவையில் பதவிகளைப் பெற்றது. இதற்கிடையில், மார்க்கோஸிற்கு எதிரான உயரடுக்கு எதிரிகளின் ஆட்சிக்கவிழ்ப்பு சதிப் பிரிவுகளுக்குப் பின்னால் இராணுவச் சட்டத்தின் ஆபத்துக்கான அனைத்து எதிர்ப்பையும் திசைதிருப்ப CPP ஐ சிஸன் வழிநடத்தினார். போட்டி ஸ்ராலினிசக் கட்சிகள், தொழிலாள வர்க்கத்தில் சர்வாதிகாரத்திற்கு எந்தவொரு சுயாதீனமான எதிர்ப்பும் தோன்றாமல் இருப்பதை உறுதிசெய்ய உழைத்து, முதலாளித்துவ வர்க்கத்தின் ஏதாவது ஒரு போட்டிப் பிரிவினருக்குப் பின்னால் அவர்கள் ஒவ்வொரு கருத்து வேறுபாடுகளையும் திசைதிருப்பினர்.[5]

பிலிப்பைன்ஸ் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் போராட்ட வெடிப்பை சர்க்கரை முதலாளிகள் மற்றும் உயரடுக்கு ஆட்சிக்கவிழ்ப்பு சதிகாரர்களின் நலன்களுக்கு அடிபணிவதை உறுதி செய்தவர் வேறு எவரையும் விட சிஸன் தான். சிஸனின் ஸ்ராலினிச வேலைத்திட்டம் இராணுவச் சட்டத்தை சாத்தியமாக்கியது.

பிலிப்பைன்ஸ் சமூகமும் புரட்சியும்

மார்$ககோஸ் இராணுவச் சட்டத்தை சுமத்துவதற்கு சற்று முன் இருந்த காலகட்டத்தில் தான், சிஸன் தனது வரையறுக்கும் அரசியல் பணியாக, பிலிப்பைன்ஸ் சமூகமும் புரட்சியும் (Philippine Society and Revolution) என்பதை எழுதினார்.[6] அமாடோ குரேரோ என்ற புனைபெயரில் எழுதப்பட்டு, 1970 இல் செய்தித்தாளில் கட்டுரைகளாகத் தொடரப்பட்டு, 1971 இல் புத்தகமாக வெளியிடப்பட்ட பிலிப்பைன்ஸ் சமூகமும் புரட்சியும் நீடித்த மக்கள் போராட்டத்தில் மாவோவாத மூலோபாயத்திற்கான கருத்தியல் நியாயங்களை வழங்கின. இது இன்றுவரை பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மூலக்கருத்தாக உள்ளது.

பிலிப்பைன்ஸ் சமூகமும் புரட்சியும், 1971

பிலிப்பைன்ஸ் சமூகமும் புரட்சியும், மாஸ்கோவுடன் இணைந்த பார்டிடோ கொமுனிஸ்டா என் பிலிபினாஸ் (PKP) இன் தலைமைக்கு எதிரான ஒரு விவாதமாக எழுதப்பட்டு, தீவிர தேசியவாதத்தின் மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தை கிராமப்புறங்களில் ஆயுதப் போராட்டத்தின் மூலம் மட்டுமே அடைய முடியும் என்ற சிஸனின் முக்கிய அரசியல் கருத்துக்கு வரலாற்று மற்றும் தத்துவார்த்த வலிமையைக் கொடுக்க முயற்சித்தது.

பிலிப்பைன்ஸ் ஒரு அரை நிலப்பிரபுத்துவ, அரை-காலனித்துவ நாடு என்றும், வெற்றிகரமான புரட்சியானது தேசிய ஜனநாயக நடவடிக்கைகளை, குறிப்பாக நிலச் சீர்திருத்தம் மற்றும் தேசிய தொழிற்துறைமயமாக்கல் ஆகியவற்றை மேற்கொண்டு தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளின் கூட்டு அரசாங்கத்தை நிறுவும் என்றும் சிஸன் வாதிட்டார். தீவிரவாதத்தின் முடிவுகள் மாறாமல் இருந்தன, ஆனால் வழிமுறைகள் இப்போது மிகவும் கடுமையாக இருந்தன.

பிலிப்பைன்ஸ் சமூகமும் புரட்சியும் என்பது சாராம்சத்தில் ஒரு தேசியவாத ஆவணமாகும். இதனால்தான் சிஸன் புத்தகத்தை 'தேசத்தில் உள்ள அனைத்து தேசபக்தர்களுக்கும்' அர்ப்பணித்தாரே தவிர, சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அல்ல. மார்க்சிச வரலாற்றில் பிலிப்பைன்ஸ் சமூகமும் புரட்சியும் தன்னை ஒரு வளர்ச்சியாக எந்தக் கட்டத்திலும் காட்டிக்கொள்ளவில்லை; அதில் மார்க்சிச சிந்தனையின் அரசியல் அல்லது தத்துவார்த்த தொடர்ச்சிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வரி கூட இல்லை.

பிலிப்பைன்ஸ் சமூகமும் புரட்சியில் தேசியவாதம் குறிப்பாக எழுத்துக்களில் தெளிவாகத் தெரிகிறது. அதில் இல்லாதவொன்றை ஒருவர் நீண்ட நேரம் தேடினால், பிலிப்பைன்ஸ் சமூகமும் புரட்சியும் பிலிப்பைன்ஸ் தீவுக்கூட்டத்திற்கு அப்பால் பார்க்க விரும்பவில்லை என்ற அதன் குறுகிய பார்வை தொடர்பான வலுவான உணர்வு அதிகரிக்கும்.

புரட்சிக்கு அர்ப்பணிக்கப்பட்ட உரையான பிலிப்பைன்ஸ் சமூகமும் புரட்சியும், 1789 பிரெஞ்சு புரட்சியைப் பற்றி குறிப்பிடவில்லை, 1848 மற்றும் ஐரோப்பாவை உலுக்கிய புரட்சிகள் பற்றிய ஒரு வார்த்தையும் அதில் இல்லை. அவர்களின் வர்க்க குணம் என்ன? எதிர்கால போராட்டங்களுக்கு என்ன படிப்பினைகளைப் பெற வேண்டும்? என்பனவும் இல்லை.

அதன் மௌனம் அதிகரிக்கின்றது. வியக்கத்தக்க வகையில் 1917 இன் ரஷ்யப் புரட்சி தொடர்பாக எதுவுமில்லை. பெப்ரவரி அல்லது அக்டோபர் ஆகிய இரண்டும் குறிப்பிடுவதற்கு கூட தகுதி பெறவில்லை. ரஷ்ய தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றியது மற்றும் போல்ஷிவிக் கட்சியின் பங்கு பற்றி பிலிப்பைன்ஸ் சமூகமும் புரட்சியும் ஒரு வார்த்தையைக் கூட கொண்டிருக்கவில்லை. CPP, அதன் பெயரில் கம்யூனிஸ்ட் கட்சி, இருபதாம் நூற்றாண்டின் மைய நிகழ்வு பற்றி எதுவுமே கூறவில்லை, இது இல்லாமல் இக்கட்சி இருந்திருக்காது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இல்லை; மூலதனமும் கூட இல்லை. 'மார்க்சிசம்-லெனினிசம்-மாவோ சேதுங் சிந்தனை' என்ற சொற்றொடரில் ஒரு தலைப்பைத் தவிர, மார்க்ஸ் என்ற பெயரே இல்லை.

மார்க்சிசத்தின் வரலாறு மட்டுமே கண்கூடாகக் காணக்கூடிய குறைபாடல்ல. புத்தகம் 1970இல் எழுதப்பட்டது, ஆனால் உலகை உலுக்கிய முக்கியமான பிரச்சனைகளும், புரட்சிகர போராட்டங்களும் பொருத்தமற்றவையாக கையாளப்பட்டன. இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி (PKI) 1965-66 இல் படுகொலை செய்யப்பட்டது, குறிப்பிடத் தகுதியற்றதாகிவிட்டது. இப்போது இந்தோனேசியாவில் சர்வாதிகாரியாக ஆளும் சுஹார்ட்டோ பற்றியும் இல்லை. மார்க்கோஸின் பாதையை புரிந்துகொள்வதற்கு அவரது எழுச்சியின் பகுப்பாய்வு முக்கியமானது. ஆனால் பிலிப்பைன்ஸ் சமூகமும் புரட்சியும் இந்த விஷயத்தில் எதுவும் கூறவில்லை.

ஹோ சி மின், வியட் மின், வியட் கொங், உலகின் முதன்மையான அரசியல் நெருக்கடியான வியட்நாம் போர் பற்றி பிலிப்பைன் சமூகமும் புரட்சியும் அமைதியாக இருக்கிறது. 'மாவோ சேதுங் சிந்தனை' என்று உரை கூறும் போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை பீடித்த நெருக்கடிகளை அது ஆய்வு செய்யவில்லை. கியூப புரட்சி ஒருமுறை குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இங்கே பிலிப்பைன் சமூகமும் புரட்சியும் இன் தேசியவாதம் இன்னும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. ஏனெனில் அது பிலிப்பைன்ஸ் சர்க்கரை உற்பத்தியில் ஏற்படுத்திய தாக்கத்திற்காக மட்டுமே அதுபற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் வர்க்கத் தன்மை, அதன் விளைவு, பிலிப்பைன்ஸ் தொழிலாளர்கள் அதை நோக்கி எடுக்க வேண்டிய அணுகுமுறை? பற்றியும் பிலிப்பைன் சமூகமும் புரட்சியும் அமைதியாக இருக்கிறது.

இந்த மௌனங்கள், புத்தகத்தில் இடப்பற்றாக்குறையை வெளிப்படுத்தவில்லை மாறாக ஆர்வமின்மையை வெளிப்படுத்துகின்றன. இது முதன்முதலில் ஒரு புத்தகமாக வெளிவந்தபோது, பிலிப்பைன்ஸ் சமூகமும் புரட்சியும் ஏறக்குறைய முந்நூறு பக்கங்கள் நீளமாக இருந்தது மற்றும் அது 'பிலிப்பைன்ஸ் மக்களை' ஒன்றாக்கிய 'இனமூலங்கள்' என்பதற்கு பத்திகளை அர்ப்பணித்தது. ஆனால் மார்க்சிசத்தின் வரலாறு அல்லது தத்துவார்த்த பாரம்பரியத்தினை பற்றி எதுவுமில்லாததுடன் பரந்த உலகத்தினை பற்றியும் எதுவும் இல்லை.

பிலிப்பைன்ஸின் பொருளாதாரம் அரை நிலப்பிரபுத்துவம் மற்றும் அரை-காலனித்துவமாகவே இருந்தது என்பதை நிரூபிப்பதற்காக பிலிப்பைன்ஸ் சமூகமும் புரட்சியும் அதன் பெரும்பாலான பக்கங்களை அர்ப்பணித்தது. மூலப்பொருள் உற்பத்தியைப் பாதுகாக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் பிலிப்பைன்ஸுக்கு மூலதனத்தை ஏற்றுமதி செய்தது என்று சிஸன் வாதிட்டார். இது முதலாளித்துவ விவசாயத்தின் மூலம் செய்யப்பட்டது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். முதலாளித்துவ பண்ணைகளில் பணிபுரிந்த தொழிலாளர்கள், அவர்கள் உண்ணும் உணவை உற்பத்தி செய்ய மற்ற பண்ணைகளை நம்பியிருந்தனர். இத்தொழிலாளர்களுக்கான உணவை உற்பத்தி செய்யும் பண்ணைகள் விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்களால் நடாத்தப்பட்டன. இந்த விவசாயிகளின் விவசாயம் உண்மையில் உலக முதலாளித்துவத்துடன் நேரடியாக பிணைக்கப்பட்டு உள்நாட்டு சந்தைக்கான பணப்பயிர்களை உற்பத்தி செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. இதுதான் முதலாளித்துவ உற்பத்தியாகும்.

எவ்வாறாயினும், முதலாளித்துவ விவசாயத்தின் மூலம் பெறப்படும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இலாபங்கள் அடிப்படை உணவுப்பொருட்களின் 'நிலப்பிரபுத்துவ' உற்பத்தியைச் சார்ந்தது என்று சிஸன் கூறினார். 'உள்நாட்டு நிலப்பிரபுத்துவம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சமூக அடித்தளம்' என்று அவர் வாதிட்டார்.[7] முதலாளித்துவத்தின் மிக உச்சக்கட்டம் என்று லெனினால் விவரிக்கப்பட்ட ஏகாதிபத்தியத்தின் முழு எடையும் விவசாய விவசாயத்தின் குறுகிய அடித்தளத்தில் நிற்கிறது என்று சிஸன் கூறினார். இந்த கூற்று பிலிப்பைன்ஸ் சமூகமும் புரட்சியினதும் முக்கிய கருத்தாகும். இது புதிய மக்கள் இராணுவத்தின் நீடித்த மக்கள் போருக்கான நியாயமாகும். பிலிப்பைன்ஸின் தொலைதூரப் பகுதிகளில் விவசாயத்தின் மிகவும் பின்தங்கிய வடிவங்களைத் தாக்குவதன் மூலம், CPP அமெரிக்கப் பேரரசின் அடித்தளத்தைத் தாக்குகிறது என்று சிஸன் வாதிட்டார்.

தேசியவாதத்தில் வேரூன்றிய சிஸன், முதலாளித்துவத்தின் உலகளாவிய தன்மையின் தீர்க்கமான முக்கியத்துவத்தை நிராகரித்தார். இது 'உள்நாட்டு நிலப்பிரபுத்துவம்' அல்ல, மாறாக உலக முதலாளித்துவம் பிலிப்பைன்ஸ் பொருளாதாரத்தின் சில பகுதிகளின் ஏற்றுமதி உந்துதல் விவசாயத் தன்மையை நிலைநிறுத்துகிறது. பிலிப்பைன்ஸ் பொருளாதாரத்தின் பின்தங்கிய நிலை என்பது 'அரை நிலப்பிரபுத்துவம்' அல்ல மாறாக முதலாளித்துவத்தின் விளைபொருளாகும்.

சிஸனைப் பொறுத்தவரை, தொழிற்துறைமயமாக்கல் என்பது உலகளாவிய சந்தையிலிருந்து சுயாதீனமான ஒரு தன்னாட்சி வளர்ச்சியாக இருந்தால் மட்டுமே உண்மையானதாக இருக்கும். பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியுடன் பிணைக்கப்பட்ட இடைநிலை உற்பத்தி, அது பெரிதும் இயந்திரமயமாக்கப்பட்டிருந்தாலும், தொழிற்துறைமயமாக்கல் அல்ல. அவர் பிலிப்பைன்ஸ் மூலப்பொருட்கள் பிலிப்பைன் தொழிற்சாலைகளில் பிலிப்பைன்ஸின் நுகர்வுக்காக செயலாக்கப்பட்ட ஒரு பிலிப்பைன்ஸில் ஒரு தன்னாட்சி தேசிய முதலாளித்துவத்தை உருவாக்க விரும்பினார். 'தனியொரு நாட்டில் சோசலிசம்' என்ற ஸ்ராலினிச கருத்துடன் அவரது அரசியல் தொடர்பு 'தனியொரு நாட்டில் முதலாளித்துவத்தை' கட்டியெழுப்பும் யோசனையாகும்.

எவ்வாறாயினும், ஒரு உலகளாவிய அமைப்பான முதலாளித்துவம் தேசிய-அரசின் எல்லைக்குள் செயற்கையாக பாதுகாக்கப்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் தன்னாட்சியான வளர்ச்சியை அனுமதிக்காது. ஆனால் இது துல்லியமாக சிஸன் ஊக்குவித்த திட்டமாகும். அத்தகைய திட்டத்தின் பின்னணியில் வெளிப்படையான வர்க்க நலன்கள் உள்ளன. மட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்புவாத நடவடிக்கைகளை அரசாங்கம் செயல்படுத்துவதற்கும் மற்றும் அவர்களின் வளரும் தொழில்துறை தேவைகளுக்கு ஆதரவாக மானியங்களை வழங்குவதற்கும் எதிர்பார்த்திருந்த பிலிப்பைன்ஸ் முதலாளித்துவத்தின் ஒரு பிரிவின் நலன்களை அவை வெளிப்படுத்துகின்றன. சிஸன் அவர்களின் நலன்களை வெளிப்படையாக வெளிப்படுத்தினார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காரணமாக, 'பிலிப்பைன்ஸ் மக்களைச் சுரண்டுவதில் தேசிய முதலாளித்துவம் கூட அதன் பங்கை அதிகரிக்கும் என்று நம்ப முடியாதுள்ளது இந்த சமூக அடுக்கு நாளாந்தம் திவால்நிலையை எதிர்கொள்கிறது' என்று அவர் வருத்தப்பட்டார். [8]

இவை அனைத்தும், முதலாளித்துவத்தின் ஒரு பகுதியுடன் ஒரு கூட்டணியைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஆயுதப் போராட்டத்தை பயன்படுத்தும் சிஸனின் அரசியல் நிலைப்பாட்டை நியாயப்படுத்த உதவியது. கட்சி போராடிய புரட்சி 'இன்னும் பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சி அல்ல' என்று அவர் வலியுறுத்தினார். “பிலிப்பைன்ஸ் புரட்சியின் தேசிய ஜனநாயகக் கட்டத்தையும் சோசலிசக் கட்டத்தையும் சிந்திக்கத்தெரியாதவர்கள் மட்டுமே ஒன்றோடொன்று குழப்பிக்கொள்வார்கள். மக்களின் ஜனநாயகப் புரட்சி முழுவதுமாக வெற்றி பெற்ற பின்னரே, பாட்டாளி வர்க்கப் புரட்சிகரத் தலைமையால் சோசலிசப் புரட்சியை கம்யூனிசத்தை நோக்கிய இடைநிலைக் கட்டமாக நடத்த முடியும்.”[9] “பாட்டாளி வர்க்கம், விவசாயிகள், குட்டி முதலாளித்துவம், தேசிய முதலாளித்துவம் மற்றும் பிற தேசபக்தர்களுடன் ஒரு ஐக்கிய முன்னணி சர்வாதிகாரத்தை கட்டியெழுப்புவதே புரட்சியின் நோக்கம்' என சிஸன் எழுதுகின்றார்.[10]

சிஸனின் கருத்துக்கள் அடிப்படையில் தவறானவையும், அவரது அரசியல் முடிவுகள் மார்க்சிசத்தின் முழு வரலாற்றிற்கும் எதிராக நிற்கின்றன. ட்ரொட்ஸ்கி தனது நிரந்தரப் புரட்சி தத்துவத்தில் உலக முதலாளித்துவம் அதன் உலகச் சந்தை, உற்பத்தி முறை மற்றும் உழைப்பு பிரினை ஆகியவற்றுடன் சோசலிசத்திற்கு முதிர்ந்துள்ளது என்பதை நிரூபித்தார். தனிப்பட்ட தேசிய அரசுகள், பொருளாதார ரீதியாக முன்னேறியவையாக இருந்தாலும் சரி அல்லது அரை காலனித்துவமாக இருந்தாலும் சரி, இந்த உலகளாவிய முழுமையின் துணைக் கூறுகளாகும். பிலிப்பைன்ஸ் போன்ற காலதாமதமான முதலாளித்துவ வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள முதலாளித்துவம் வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாஷைகளை இயல்பாகவே பூர்த்தி செய்ய இலாயக்கற்றவை. அதாவது தொழிலாள வர்க்கம், விவசாயிகளை அணிதிரட்டுவதன் மூலமே இந்த முற்போக்கான பணிகளைச் செய்யக்கூடிய ஒரே சமூக சக்தியாகும். எவ்வாறாயினும், ஜனநாயகப் பணிகளை செய்து முடிப்பதற்கு சோசலிச நடவடிக்கைகளைச் செயல்படுத்த தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுத்தப்படுவார்கள். சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தில் உலக அரங்கில் புரட்சியின் தலைவிதி தீர்மானிக்கப்படும். இந்தப் புரட்சியை முன்னெடுப்பதற்கும் விரிவுபடுத்துவதற்குமான போராட்டம், முதலாளித்துவத்தின் ஒவ்வொரு பிரிவினரிடமிருந்தும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளிடமிருந்தும் தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக இருக்கவேண்டும் என்ற அடிப்படைக் கோட்பாட்டின் அடித்தளத்தில் இருக்க வேண்டும். இந்த முன்னோக்குதான் அக்டோபர் 1917 புரட்சியின் வழிகாட்டும் வேலைத்திட்டமாக செயற்பட்டது.

'பாட்டாளி வர்க்கத்தின் தலைமை' பற்றிய சிஸனின் அனைத்து பேச்சுகளும் இருந்தபோதிலும், அவர் அழைப்பு விடுத்தது முதலாளித்துவத்திற்கான புரட்சிக்கே அன்றி சோசலிசத்திற்கு அல்ல. அவர் முன்மொழிவது கிராமங்களில் நடத்தப்படும் ஒரு புரட்சியாகும். அது தொழிலாளர்கள் நகரங்களையும் தொழிற்சாலைகளையும் விட்டு வெளியேறி, தொழிலாள வர்க்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதை நிறுத்தினால் மட்டுமே அவர்கள் வழிநடத்த முடியும்; மேலும் இது பாட்டாளி வர்க்கத்தினை சுரண்டுவதை அதிகரிப்பதை அடிப்படை வர்க்க நலனாக கொண்ட முதலாளித்துவ வர்க்கத்துடன் தொழிலாளர்களை பிணைக்கும் அரசாங்கத்தை அமைப்பதாகும். இது தொழிலாள வர்க்கத்தின் தலைமை அல்ல. இது தொழிலாளர்களின் நலன்களை காட்டிக்கொடுப்பதும் நசுக்குதலும் ஆகும்.

நாடுகடத்தப்படுதலும் உடைவும்

சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) உலகின் முன்னணி புரட்சிகர சக்தி என்றும், ஆசியா மற்றும் அதற்கு அப்பால் ஆயுதப் புரட்சியை விரிவுபடுத்துவதற்கான தளமாக சீனா செயல்படும் என்றும் சிஸன் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியை (CPP) நிறுவினார். ஆனால் சீனா மற்றும் சோவியத் ஒன்றியத்தின் தேசியவாதம் இரண்டு ஸ்ராலினிச சக்திகளையும் திறந்த மற்றும் ஆயுதம் ஏந்திய மோதலுக்கு கொண்டு வந்தது. மாவோ, பிரெஷ்நேவுக்கு எதிராக முன்னுரிமைகளைப் பெற முயன்று 1971-72 இல் நிக்சனையும் கிஸ்ஸிங்கரையும் சந்தித்து வாஷிங்டனுடனான உறவுகளைத் திறந்தார்.

இந்த முடிவில், மாவோ சீனாவின் அரசியல் நிலைப்பாட்டை, கிராமப்புறங்களில் ஆயுதமேந்திய எழுச்சிகளுக்கான ஆதரவிலிருந்து, அமெரிக்காவின் சர்வாதிகார கூட்டாளிகளின் அரவணைப்புக்கு மாற்றினார். 1973ல் சிலியில் சல்வடோர் அலெண்டேயை ஆதரித்த சிலி கம்யூனிஸ்ட் கட்சியை நசுக்கி பினோசே ஆட்சியைப் பிடித்தபோது, சீன கம்யூனிஸ்ட் கட்சி உடனடியாக பினோசேயுடன் நட்புறவை ஏற்படுத்தியது. அதே வழியில், மாவோ 1974 இல் இமெல்டா மார்க்கோஸையும், 1975 இல் பேர்டினாண்ட் மார்க்கோஸையும் சந்தித்து, சிஸன் மற்றும் CPP உடனான அனைத்து உறவுகளையும் துண்டித்து, மார்க்கோஸ் சர்வாதிகாரத்துடன் நட்புறவை ஏற்படுத்தினார். மாவோவின் நடவடிக்கைகளை சிஸன் 'மக்கள் சீனக் குடியரசின் இராஜதந்திர வெற்றி, பிலிப்பைன்ஸ் புரட்சிகரப் போராட்டத்தின் வெற்றி' என்றார். [11] CPP அதன் தேசியவாதத்தை இரட்டிப்பாக்குவதன் மூலம் அதன் புவிசார் அரசியல் தனிமைப்படுத்தலுக்கு பதிலளித்தது.

மாவோ இமெல்டா மார்கோஸை பெய்ஜிங்கில் வாழ்த்துகிறார். செப்டம்பர் 1974 (Philippine Presidential Library, Marcos Collection)

சிஸன் 1977 இல் மார்க்கோஸ் ஆட்சியால் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டார். பெப்ரவரி 1986 இன் மக்கள் அதிகாரப் புரட்சியின் மூலம் மார்க்கோஸின் வெளியேற்றத்துடன் ஆட்சிக்கு வந்த கொராசன் அக்கினோ நிர்வாகத்தால் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இது இராணுவத்தின் ஒரு பிரிவினரால் ஆட்சிக்கான ஆதரவை திரும்பப் பெற்றதுடன் இணைந்த ஒரு வெகுஜன எதிர்ப்பு இயக்கமாகும். [12] இது ஒரு சமூக வெடிப்புமிக்க தருணமாக இருந்தது. பிலிப்பைன்ஸ் முழுவதும் பணியிடங்களில் வேலைநிறுத்தங்கள் வெடித்தன. நாட்டின் மிகப் பெரிய கரும்புத் தோட்டத்தின் உரிமையாளராக இருந்த அக்கினோ, இன்னும் அதிகாரத்தை உறுதியாகப் பிடித்திருக்கவில்லை. சிஸன் உடனடியாக புதிய அரசாங்கத்தை ஆதரித்து, தொழிலாள வர்க்கத்தின் ஆதரவுடன் பதவிக்கு கொண்டு வந்தார்.

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டபோது அக்கினோ பிரச்சாரத்தின் அடையாளமாக labanசின்னத்தை ஒளிரச் செய்தார் (Sunday Times Magazine, 16 March 1986)

இந்த முயற்சிகளின் உச்சமாக மே 1, 1986 அன்று லுனெட்டா பிளாசாவில் ஜனாதிபதி அக்கினோ மற்றும் மார்க்கோஸ் சர்வாதிகாரத்தில் முன்னணி நபராக இருந்த இராணுவத் தலைவர் ஜெனரல் பிடல் ராமோஸ் ஆகியோருடன் சிஸன் மேடையில் நின்றபோது, பாரியளவிலான தொழிலாளர்களின் முன்னிலையில் இராணுவ இசைக்குழு சர்வதேச கீதத்தை இசைத்தது. பெப்ரவரி 1987 இல், அக்கினோவின் இராணுவப் படைகள் நிராயுதபாணியான விவசாயிகள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஒரு டசினுக்கும் அதிகமானவர்களைக் கொன்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் CPP யின் பிரிவினரால் வழிநடத்தப்பட்டதுடன், நிலச் சீர்திருத்தத்திற்காக அக்கினோ அரசாங்கத்திடம் கேட்டு 'கோரி [அக்கினோ], எங்கள் தலைவர்' என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர். [13] 1986 இன் புரட்சிகர நெருக்கடி தவிர்க்கப்பட்டது. அக்கினோ அரசாங்கம் இன்னும் வெளிப்படையாக இராணுவத்திடம் ஆதரவிற்காக திரும்பி, இடதுசாரி பிரமுகர்களை அமைச்சரவையிலிருந்து அகற்றி மற்றும் CPP மற்றும் அனைத்து வகையான அரசியல் கருத்து வேறுபாடுகளை கொண்டவர்களுக்கும் எதிராக கடுமையாக திரும்பியது.

கோர்பச்சேவ் ஆட்சியுடன் உறவுகளைப் பெறவும், பொருளுதவி பெறவும் சிஸன் வெளிநாடுகளுக்குச் சென்று கொண்டிருந்தார். மாவோவின் அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் 'சோவியத் சமூக-ஏகாதிபத்தியம் மற்றும் திருத்தல்வாதத்திற்கு' எதிராக CPP இன் முன்னாள் தாக்குதல்கள் ஒரு தவறு என்று அவர் அறிவித்தார்.

அக்கினோ அரசாங்கத்தின் மாற்றத்துடன், சிஸன் பாதுகாப்பாக பிலிப்பைன்ஸுக்குத் திரும்ப முடியவில்லை. மேலும் அவர் நெதர்லாந்தில் நாடுகடந்த நிலையில், அவர் தனது வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார். 1991 இல் சோவியத் ஒன்றியத்தை கலைக்க மாஸ்கோ அதிகாரத்துவம் நகர்ந்து மற்றும் சீனப் பொருளாதாரத்தை உலக முதலாளித்துவத்திற்கு திறக்க பெய்ஜிங் அதிகாரத்துவம் நகர்ந்தபோது, உலக ஸ்ராலினிசத்தின் நெருக்கடியில் சிக்கிய நிலையில் அவர் நிறுவிய கட்சியின் மீதான கட்டுப்பாட்டை நெதர்லாந்தின் உற்ரெக்ட் நகரில் உள்ள அவரது வீட்டிலிருந்து மீண்டும் பெற முயன்றார்.

அர்மாண்டோ லிவானாக் என்ற புனைப்பெயரில் எழுதுகையில், சிஸன் கட்சியில் உள்ள தனது போட்டியாளர்களை 'திருத்தல்வாதிகள்' மற்றும் 'கம்யூனிச எதிர்ப்பு துரோகிகள்' கோர்பச்சேவ் ஆதரவாளர்கள் என்று கண்டனம் செய்தார். CPP பல கட்சிகள் மற்றும் போக்குகளாக துண்டு துண்டானபோது, சிஸன் தலைமையிலான ஒரு பிரிவு அதன் பெயரை வைத்திருந்தது. பிரிந்து சென்ற குழுக்கள் அனைத்தும் ஸ்ராலினிசத்தின் தேசியவாத மற்றும் வர்க்க ஒத்துழைப்பு அரசியலைத் தக்கவைத்துக் கொண்டன. ஏனெனில் அவை ஆளும் வர்க்கத்தின் போட்டிப் பிரிவுகளுடன் கூட்டணி வைக்க முயன்றன. [15]

அடுத்தடுத்த தசாப்தங்களில் சிஸன் நடத்திய துரோகங்கள் மற்றும் குற்றங்களின் பட்டியல் நீண்டது. அவர் அரசியல் போட்டியாளர்களை படுகொலை செய்ய உத்தரவிட்டு, கடந்த காலத்தை பொய்மைப்படுத்தி, மேலும் பிலிப்பைன்ஸ் வரலாற்றில் மிகவும் பிற்போக்குத்தனமான நபர்களை முற்போக்கானவர்கள் என்று அறிவித்தார். 1980 களின் பிற்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை தூக்கிலிட வழிவகுத்த CPP க்கு உள்ளேயான சூனிய வேட்டை மற்றும் களையெடுப்புகளை அமைப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

டுறேற்றவிற்கான ஆதரவு

சிஸனின் துரோகங்களின் அப்பட்டமான எடுத்துக்காட்டு அவரது வாழ்நாள் முடிவில் வந்தது. அவரது வாழ்நாள் முழுவதும் ஸ்ராலினிச மரபுகளின் உச்சம்: ரோட்ரிகோ டுறேற்றவின் பாசிச ஜனாதிபதி பதவியை சிஸன் உற்சாகமாக ஆதரித்தார்.[16] சிஸன் வழக்கமாக பாசிசத் தலைவர்கள் மற்றும் உள்ளூர் போர்பிரமுகர்களுடன் உறவுகளை உருவாக்கி, அவர்களுக்கு தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகளின் ஆதரவைக் கொண்டு வந்தார். இவர்களில் தெற்கு நகரமான டாவோவின் நகர தலைவரான டுறேற்றவும் ஒருவர்.

சிஸன், CPP இன் தேசிய ஜனநாயக முன்னணியின் தலைமையுடன் சேர்ந்து, 15 ஜூன் 2016, டுறேற்ற ஆட்சியின் பாசிச முஷ்டி வணக்கம் செலுத்துகிறார்

சிஸன் நீண்ட காலமாக டுறேற்ற மற்றும் CPP க்கு இடையே உறவுகளை வளர்த்து வந்தார். மேலும் டாவோவில் டுறேற்ற தனது கொலைக் குழுக்களை உருவாக்குவதில் புதிய மக்கள் இராணுவம் (NPA, CPP யின் ஆயுதப் பிரிவு) முக்கிய பங்கு வகித்தது. இந்த உறவுகளின் அடிப்படையில், சிஸன் டுறேற்றவின் ஜனாதிபதி பதவியை வெளிப்படையாக ஆதரித்தார். டுறேற்றவின் வேண்டுகோளின் பேரில், அவரது அமைச்சரவையில் பணியாற்ற மூன்று பேரை சிஸன் தேர்ந்தெடுத்தார்.

பாரிய கொலைகள் பற்றிய டுறேற்றவின் தொடர்ச்சியான பகிரங்க அச்சுறுத்தல்களை சிஸன் மூடிமறைத்து, அவற்றை 'நகைச்சுவைகளாக' கருதினார். டுறேற்ற ஜனாதிபதியாகி, நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான ஏழை பிலிப்பைன்களைக் கொல்லத் தொடங்கிய தனது கொலைகார போதைப்பொருளுக்கு எதிரான போரைத் தொடங்கியபோது, போதைப்பொருளுக்கு எதிரான தனது போரை மேற்கொள்ள புதிய மக்கள் இராணுவம் உதவக் கடமைப்பட்டதை சிஸன் CNN இடம் கூறினார். டுறேற்ற உடனான CPP இன் உறவுகள் இறுதியாக சிதைந்தபோது, சிஸன் வெளிப்படையாக பொய் கூறி, தனது கட்சி அவரை ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்று கூறினார்.

2016 ஆம் ஆண்டு டுறேற்றவுடன் 'ஒற்றுமைக்கு' அழைப்பு விடுத்து முகப்புத்தகத்தில் சிஸனால் மீண்டும் மீண்டும் பரப்பப்பட்ட ஒரு படம்

டுறேற்ற கம்யூனிச எதிர்ப்பு குற்றச்சாட்டுகளைத் தொடங்கினார். இது ஏராளமான ஆர்வலர்களின் கொலைக்கு வழிவகுத்து, ஒடுக்குமுறையை மேற்பார்வையிட NTF-ELCAC ஐ உருவாக்கினார். சிஸனால் தேர்ந்தெடுக்கப்பட்ட டுறேற்றவின் அமைச்சரவை உறுப்பினர்களில் ஒருவரின் துணைச் செயலாளராக உயர்ந்த லோரெய்ன் படோய், இந்த கம்யூனிஸ்ட் எதிர்ப்பு பணிக்குழுவின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.

2021 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஒரு இணையவழி கூட்டத்தில் இளைஞர்களிடம் 'டுறேற்ற ஒரு பாசிச சர்வாதிகாரத்தை திணிப்பதே புரட்சிக்கு நடக்கக்கூடிய சிறந்த விஷயம்' என்று டுறேற்றவின் அடக்குமுறைக்கு பதிலளித்த சிஸன் கூறினார். 1972 இல் மார்க்கோஸ் இராணுவச் சட்டத்தை திணித்தபோது செய்ததுபோல், தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒடுக்குமுறையை சிஸன் வரவேற்றார்.

சிறிய சிவப்பு புத்தகத்தினதும் கலாச்சாரப் புரட்சியினதும் மாவோயிசத்தின் உச்சக்கட்டத்தில் நிறுவப்பட்ட CPP, வேண்டுமென்றே பெரும் தலைவர் வழிபாட்டுக் கொள்கையைப் பின்பற்றியது. மேலும் அது தவறிழைக்காத மற்றும் கேள்விக்கு இடமில்லாத அரசியல் அதிகாரத்தால் சூழப்பட்ட சிஸனைச் சுற்றி தன்னைக் கட்டமைத்தது. அவரது மரணம் கட்சியை நெருக்கடியினுள் விட்டுச்செல்கின்றது.

கட்சியின் எஞ்சியிருக்கும் தலைமையான பெரும்பாலான வயது முதியவர்கள் சிஸனின் பிரபல்யத்தை கொண்டிருக்கவில்லை. எதிர்காலத்தில், அவர் தனது வாழ்க்கையை உருவாக்குவதற்காக அர்ப்பணித்த முழு அரசியல் கட்டிடக்கலையும் சரிந்துவிடும். புதிய மக்கள் இராணுவத்தின் (NPA) தனிப்பட்ட பிரிவுகள் ஆயுதப் படையாக தங்களை வேலைக்கு அமர்த்துவதற்கு அதிகளவில் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. CPP யின் அரசியல் கோட்டுடன் பிணைக்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ தேர்தல் குழுக்கள் துண்டு துண்டாக மற்றும் இன்னும் வெளிப்படையாக முதலாளித்துவ அரசியலுக்கு திரும்பலாம்.

பிலிப்பைன்ஸ் மக்களில் பரந்த மக்கள் மத்தியில் CPP இன் நம்பகத்தன்மை பாசிச டுறேற்றவிற்கு அதன் ஆதரவை வெளிப்படுத்தியதன் மூலம் சிதைந்தது. உலக சோசலிச வலைத் தளம் இதில் ஒரு தீர்க்கமான பாத்திரத்தை வகித்தது. ஆகஸ்ட் 2019 இல், நான் டுறேற்றவிற்கு CPP இன் ஆதரவின் ஆழத்தையும், அளவையும் ஆவணப்படுத்தும் பரவலான மக்கள் கலந்துகொண்ட பொது விரிவுரையை வழங்கினேன். எனக்கும் ட்ரொட்ஸ்கிசத்தின் முழு வரலாற்றிற்கும் எதிரான தொடர்ச்சியான தாக்குதலுடன் சிஸன் அதற்கு பதிலளித்தார். WSWS சிஸனின் பொய்மைப்படுத்தல்களுக்கு எதிராக வரலாற்று உண்மையைப் பாதுகாக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்தது.

சிஸன், 1930களின் போலி வழக்குகள் வரை இருந்த ஸ்ராலினிச பொய்கள் அனைத்தையும் மாறாமல் தோண்டி எடுத்தார். இந்த அவதூறுகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்காக CPP இன் முதன்மைப் பத்திரிகையான Ang Bayan இன் முழு இதழையும் அவர் அர்ப்பணித்தார். அவர், முனைவருக்கான எனது படங்களை பரப்பி, நான் சிஐஏ இன் முகவர் என்று குற்றம் சாட்டினார். அவரது இணையவழி கூட்டாளிகள் நூற்றுக்கணக்கான கொலை மிரட்டல்களை வெளியிட்டனர். ட்ரொட்ஸ்கி ஹிட்லரின் முகவர் என்றும் சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஜப்பானிய இராணுவவாதத்தின் முகவர்கள் என்றும் அவர் கூறினார். பழைய போல்ஷிவிக்குகளுக்கும் நான்காம் அகிலத்திற்கு எதிராக ஸ்ராலினது கொலைகார சிலுவைப்போரை சரியானது என்று சிஸன் அறிவித்தார்.

உலக சோசலிச வலைத் தளம், சிஸனின் பொய்களை மறுத்து, CPP இன் சந்தர்ப்பவாத வரலாற்றை ஆவணப்படுத்தி, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கல்வியாளர்களிடமிருந்து மகத்தான ஆதரவைப் பெறுவதற்கு டஜன் கணக்கான கட்டுரைகளை வெளியிட்டது. இந்த பிரச்சாரம் பிலிப்பைன்ஸ் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் கண்களுக்கு முன்பாக CPP இன் தீவிரமான வார்த்தையாடல்களின் அடித்தளத்தில், முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக் கொடுப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வேலைத்திட்டம் இருப்பதை அம்பலப்படுத்தியது.

ஜோமா சிஸனின் வாழ்க்கையைப் பற்றி ஒரு கணக்கெடுப்பானது பிலிப்பைன்ஸில் காட்டிக்கொடுக்கப்பட்ட தொழிலாளர்களின் போராட்டங்களின் இரத்தக்களரி வரலாற்றை ஆவணப்படுத்துவதற்காகும். அவருடைய வாழ்க்கை முற்றுமுழுக்க பொய்களில் சிக்கிக்கொண்ட ஒன்றாகும். தொழிலாள வர்க்கத்தால் சிஸன் தங்கள் எதிரியான முதலாளித்துவ வர்க்கத்தின் ஸ்ராலினிச சேவகனாக நினைவுகூரப்படுவார்.

பிலிப்பைன்ஸில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள், பல தசாப்தங்களாக சிஸனின் தலைமையின் கீழான ஸ்ராலினிச காட்டிக்கொடுப்புக்கு ஒரு புரட்சிகர மாற்றீட்டைத் தேடுகிறார்கள். அவர்கள் அனைத்து வகையான தேசியவாதம் மற்றும் வர்க்க ஒத்துழைப்பிலிருந்தும் முறித்துக் கொள்வதன் மூலம் மட்டுமே முன்னோக்கி செல்லும் வழியைக் கண்டுபிடிப்பார்கள். இதற்கு ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி முன்னோக்கினையும், உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றைப் பற்றிய கவனமாக கற்றல் தேவைப்படுகிறது.

[1] I examine Sison’s background and early development as a Stalinist in detail in “‘We Are Siding with Filipino Capitalists’: Nationalism and the Political Maturation of Jose Ma. Sison,” Sojourn (2021) 36 no. 1, 1-39 (JSTOR)

[2] Claro M. Recto, Complete Works, vol. 9 (Pasay: Claro M. Recto Foundation, 1990), 148.

[3] I detail the strike and Sison’s support for Macapagal in “A Deliberately Forgotten Battle: The Lapiang Manggagawa and the Manila Port Strike of 1963,” Journal of Southeast Asian Studies (2022) 53, no. 1-2, 226-251, doi:10.1017/S0022463422000376. I examine Sison’s role in shaping Macapagal’s ties with Sukarno in “A Region in Dispute: Racialized Anti-Communism and Manila’s Role in the Origins of Konfrontasi, 1961-63,” Modern Asian Studies (2022), 1-23, doi:10.1017/S0026749X22000397.

[4] Sison, Stand of Filipino Youth, August 19 1965 (Philippine Radical Papers Archive, University of the Philippines, Diliman, 08/13.31).

[5] The coup-plotting schemes of the bourgeois opposition to Marcos, and the roles played by the PKP and CPP in making martial law possible are the subject of my forthcoming book, The Drama of Dictatorship: Martial Law and the Communist Parties of the Philippines (Ithaca: Cornell University Press, 2023).

[6] Sison [Amado Guerrero, pseudonym], Philippine Society and Revolution [PSR] (Hong Kong: Ta Kung Pao, 1971).

[7] PSR, 115.

[8] PSR, 147.

[9] PSR, 234.

[10] PSR, 288.

[11] Ang Bayan, October 20 1974.

[12] On the ouster of Marcos and the nature of the Aquino administration, see “Thirty-five years since the ‘People Power’ ouster of Marcos in the Philippines” (WSWS).

[13] For a history of this massacre, see “Twenty-five years since the Mendiola massacre in the Philippines” (WSWS).

[14] These appeals are contained in Sison and Rainer Werning, The Philippine Revolution: The Leader’s View (New York: Taylor & Francis, 1989). The entire chapter appealing for relations with Gorbachev was excised from the edition published in the Philippines.

[15] The political line and class character of the breakaway groups associated with Filemon ‘Popoy’ Lagman are examined in John Malvar, “‘Popoy’ Lagman: A Stalinist rival of the Communist Party of the Philippines” (WSWS) and “Political descendants of Popoy Lagman recycle Stalinist lies” (WSWS).

[16] I extensively documented Sison’s support for Duterte and the murderous character of Duterte’s rule in a 2019 lecture delivered at Nanyang Technological University, “First as Tragedy, Second as Farce: Marcos, Duterte and the Communist Parties of the Philippines.”

[17] I document this statement, and examine its historical roots in Sison’s Stalinism, in a lecture delivered at the Center for Southeast Asian Studies, UC Berkeley, in 2021, “Three Grenades in August: Fifty years since the bombing of Plaza Miranda.”

Loading