எச்சரிக்கை வேலைநிறுத்தம் பேர்லின் விமான நிலையத்தை முடக்கியது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

புதன்கிழமை நடத்தப்பட்ட தரைப் பணியாளர்கள் குழு மற்றும் பிற தொழிலாளர்களின் ஒரு நாள் வேலைநிறுத்தம் பேர்லினின் BER விமான நிலையத்தை முடக்கியது. இது பயணிகள் விமானங்களின் 300 புறப்பாடுகள் மற்றும் தரையிறக்கங்களை மொத்தமாக இரத்து செய்ய வழிவகுத்தது. ஜேர்மன் பொதுச் சேவைகள் தொழிற்சங்கமான வேர்டியின் (Verdi) இந்த அழைப்பிற்கு தரைப் பணியாளர்கள் குழு, விமானப் போக்குவரத்து நிறுவனம் மற்றும் விமானப் பாதுகாப்பு ஊழியர்கள் அதிகாலை 3 மணிக்கு வேலை செய்வதை நிறுத்தினர்.

தலைநகரின் விமான நிலையத்திற்கு முன்னால் வேலைநிறுத்தக்காரர்கள் கூடியுள்ளனர்

விமான நிலைய முனைய கட்டிடத்தின் முன் வில்லி பிராண்ட் பிளாட்ஸில் நடந்த வேலைநிறுத்தப் பேரணியில், வேர்டி பிரதிநிதிகள், விமான நிலைய நிர்வாகம் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்த மறுத்ததற்கு பதிலிறுப்பாக இந்த வேலைநிறுத்தம் நடத்தப்படுவதாகக் கூறினர். ‘நாங்கள் ஒரு நல்ல சலுகையை எதிர்பார்க்கிறோம், அதற்கு வாய்ப்பில்லை எனில் நாங்கள் இங்கே இதைத் தொடருவோம்’ என்று வேர்டி மாநில மாவட்டத் தலைவர் சுசான்ன ஃபெல்ட்கொட்டர் முழக்கமிட்டார். பின்னர் குறைவூதியங்களையும் ஊதிய வெட்டுக்களையும் நிறுத்தக் கோரி வேலைநிறுத்தக்காரர்கள் விமான நிலையம் வழியாக ஊர்வலமாகச் சென்றனர். ‘எங்கள் வேலைக்கு தகுந்த ஊதியம் வேண்டும்!’ என்ற அவர்களின் கோஷம் வெற்று விமான நிலைய அரங்குகளில் எதிரொலித்தது.   

வேர்டி, விமான நிலைய ஊழியர்கள் மற்றும் தரைப் பணியாளர்களுக்கு 10.5 சதவீதம் கூடுதல் ஊதியம் வழங்கவும், அடுத்த 12 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு குறைந்தது 500 யூரோ அதிகமாக வழங்கவும் கோருகிறது. மறுபுறம், நிர்வாகம் மிக நீண்ட ஒப்பந்த விதிமுறைகளைக் கோருவதுடன், முழுநேர ஊழியர்களுக்கு மிகக் குறைந்த கூடுதல்முறை ஊதிய அதிகரிப்பையும், 2,000 யூரோ ஒரு முறை பணவீக்க இழப்பீட்டையும் வழங்குவதாகக் கூறுகிறது. வேர்டி பேரம் பேசுதல் குழு இந்த வாய்ப்பை நிராகரித்ததோடு, இது ஏற்றுக்கொள்ள முடியாதது, போதாதது மற்றும் ஏமாற்றமளிக்கிறது எனக் கூறியுள்ளது. 

பேர்லின் செனட் தேர்தலில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleichheitspartei-SGP) வேட்பாளரான உல்ரிச் ரிப்பேர்ட், பேரணியில் கலந்துகொண்டு தொழிலாளர்களுடன் பேசினார்.

பேர்லின் நகர சுத்திகரிப்பு (BSR) தொழிலாளர்கள் மற்றும் தபால் ஊழியர்களால் நடத்தப்பட்ட சமீபத்திய எச்சரிக்கை வேலைநிறுத்தங்களைத் தொடர்ந்து, விமான நிலைய ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொழிலாள வர்க்கத்தின் பலத்தையும் சக்தியையும் எடுத்துக் காட்டியது. சில முன்னறிவிப்புகள் கொடுக்கப்பட்டிருந்த போதிலும், BER இல் வேலைநிறுத்தம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், ஐரோப்பாவின் மிக முக்கியமான போக்குவரத்து மையங்களில் ஒன்றை முற்றுமுழுதாக முடக்கியது. 

ஆனால், பல பொது சேவை ஊழியர்களுடன், BSR ஊழியர்கள், தபால் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் என அனைவரும் ஒரே சங்கத்தில் தான் உறுப்பினர்களாக உள்ளனர் என்பதுடன், தற்போது ஊதியங்கள் தொடர்பான அதே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர் என்ற நிலையில், வேர்டி தொழிற்சங்கம், தனிமைப்படுத்தப்பட்ட, குறுகிய கால எச்சரிக்கை வேலைநிறுத்தங்களுக்கு மட்டுமே ஏற்பாடு செய்து வருகிறது. 

வேர்டி, அனைத்து பொதுத்துறை ஊழியர்களின் ஒரு பொதுவான போராட்டத்தை ஒழுங்கமைக்க அதன் அமைப்பைப் பயன்படுத்துவதற்கு மாறாக, அத்தகையதொரு கூட்டுப் போராட்டத்தை நாசப்படுத்துவதில் தான் முனைப்பாக உள்ளது. இந்த தொழிற்சங்கத்தின் பிளவுபடுத்தும் கொள்கையானது உள்ளூர் ‘உட்குத்து’ நடவடிக்கைகளின் அடிப்படையில், நிர்வாகத் தரப்பு அவர்களின் திமிர்த்தனமான மற்றும் ஆத்திரமூட்டும் அணுகுமுறையை பின்பற்ற ஊக்குவிக்கிறது. 

லுப்தான்சா விமான நிறுவனம் பில்லியன் கணக்கான அரச நிதியுதவியைப் பெற்ற போதிலும், அதன் தலைவரான கார்ஸ்டன் ஸ்போர், தொற்றுநோய்க்கு முன்னர் ஆண்டு சம்பளமாக 5 மில்லியன் யூரோக்களைப் பெற்று வந்ததுடன், 2021 மற்றும் 2022 தொற்றுநோய் காலத்திற்கான கூடுதல் கொடுப்பனவைப் பெற்றார். ஸ்போர் புதன்கிழமை வேலைநிறுத்தத்தை விமர்சித்ததோடு, மூலதனம் தன்னை அச்சுறுத்திக் கொள்ள அனுமதிக்கக் கூடாது என்று அறிவித்தார்.

விமான ஊழியர்கள் சங்கமான ADV இன் பிரதிநிதிகளும் சீற்றமடைந்து, எச்சரிக்கை வேலைநிறுத்தம் பொருத்தமற்றது என்றும், உண்மையான அடிப்படை எதுவும் இல்லாதது என்றும் கூறியுள்ளனர். “ஒப்பந்தம் பற்றிய பல்வேறு கருத்துக்களை ஒரு பொதுவான பேச்சுவார்த்தை மேசையில் தீர்த்து வைப்பதற்குப் பதிலாக, தலைநகரின் விமான நிலையம் ஒரு பொது மேடையாக தவறாகப் பயன்படுத்தப்படுகிறது” என்று ADV இன் தலைமை நிறைவேற்று அதிகாரி ரல்ஃப் பைய்செல் அறிவித்தார். 

தொழிலாளர்களுடனான கலந்துரையாடலில் இரண்டு பிரச்சினைகள் அவர்கள் மத்தியில் இருந்தன.

முதலாவதாக, பல வேலைநிறுத்தக்காரர்கள் கடந்த மாதங்களில் நிகழ்ந்த பாரிய விலைவாசி உயர்வுகளானது சமாளிக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என்று வலியுறுத்தினர். “இனி உங்களால் எதுவும் வாங்க முடியாது. நீங்கள் உணவுப் பொருட்கள் வாங்க கடைக்குச் செல்கையில், நான் இதை வாங்க முடியுமா, இல்லையா? என நீங்கள் தொடர்ந்து சிந்திக்க வேண்டும்” என்று உள்-வருகை பரிசோதிப்பு இடத்தில் பணிபுரியும் தொழிலாளி கூறினார். அவர் பேர்லினின் Tegel விமான நிலையத்தில் (இப்போது மூடப்பட்டுவிட்டது) பணிபுரிந்தார். இப்போது வேலைக்குச் செல்ல அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அவர் பெரும்பாலும் அதிகாலையில் வேலை செய்யத் தொடங்க வேண்டும். BER தளத்தில் அவரது வாகனத்தை நிறுத்துவதற்கான விலையுயர்ந்த கட்டணங்கள் ஏற்கனவே அவருக்கு வழங்கப்படும் குறைந்த ஊதியத்தில் இருந்து கழிக்கப்படுகின்றன.  

மாதத்திற்கு 500 யூரோக்களை விட கூடுதலானளவு தேவை என்பதே  நியாயமானது என்று அவர் கூறினார். “ஆனால் அடிப்படையில், இது இன்னும் போதாது, ஏனென்றால் விலைகள் மீண்டும் குறையும் என்று யார் நம்புகிறார்கள்?” என்று அவர் கூறினார். 

இரண்டாவது முக்கியமான பிரச்சினை அதிகரித்து வரும் போர் நெருக்கடி மற்றும் இராணுவ ஆயுதங்கள் பற்றியதாகும். உக்ரேன் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் மற்றும் அதனைத் தொடர்ந்த எண்ணெய் மற்றும் எரிவாயு முடக்கத்தின் விளைவாக எரிபொருள் விலைகள் உயர்ந்தது ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பால் ஏற்பட்ட பெரும் பணவீக்கம் பற்றி பல தொழிலாளர்களுக்கு மிகுந்த தெளிவு உள்ளது.  

ஜேர்மன் அரசாங்கம் உக்ரேனில் நடக்கும் போரைப் பயன்படுத்தி, கணிசமான காலத்துக்குத் தயாராகி வரும் இராணுவ மறுஆயுதமயமாக்கலுக்கான செயல் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஜேர்மன் இராணுவத்திற்கு (Bundeswehr) ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட 100 பில்லியன் யூரோ சிறப்பு நிதி என்பது வெறும் ஆரம்பமே. இந்த தொகையை மூன்று மடங்காக உயர்த்துவதற்கு இப்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அனைத்து சமூகச் செலவினங்களிலும் ஏற்படுத்தப்படும் வெட்டுக்கள் மற்றும் ஊதியங்களை குறைப்புகள் மூலம் இந்த பெரும் தொகைகள் மக்களிடமிருந்து திரும்பப் பெறப்பட உள்ளன.   

SGP வேட்பாளர் உல்ரிச் ரிப்பேர்ட் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளியுடன் கலந்துரையாடுகிறார்.

தரை சேவை வழங்குநரான Airline Assistant Switzerland (AAS) இல் பணிபுரியும் ஒரு தொழிலாளி தனது பணியின் தன்மை சோர்வளிப்பதுடன், ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்தார்: “திடீரென பில்லியன் கணக்கான தொகைகள் எங்கிருந்து வருகின்றன என்பது மிகவும் விசித்திரமானது. அதே நேரத்தில், ஊதிய உயர்வளிக்க பணமில்லை என்று எங்களிடம் கூறப்படுகிறது.”  

செவ்வாயன்று, ஜேர்மன் அரசாங்கம், உக்ரேன் போரை பாரியளவில் அதிகரிக்கும் விதத்தில், உக்ரேனுக்கு லியோபாட் 2 ரக யுத்த டாங்கிகளை வழங்க ஒப்புக்கொண்டது. இதைப் பற்றி கேட்டபோது, பல வேலைநிறுத்தக்காரர்கள் இந்த நிகழ்வுகளைப் பற்றி தங்கள் கவலையை தெளிவுபடுத்தினர். 

இருப்பினும், வேர்டி தொழிற்சங்கத்தின் பிரதிபலிப்பு மிகவும் வித்தியாசமானது. உக்ரேன் போர் தொடங்கிய உடனேயே, அது மற்ற DGB தொழிற்சங்கங்களுடன் இணைந்து மத்திய அரசாங்கத்துடன் கடந்த ஆண்டு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ‘ஒருங்கிணைந்த நடவடிக்கை’ போரை ஆதரிக்க உதவுகிறது என்பதுடன், ஒரு பரந்த வேலைநிறுத்த இயக்கத்தைத் தடுக்க வேர்டி, அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றுகிறது. எச்சரிக்கை வேலைநிறுத்தங்கள், தொழிலாளர்களின் வெறுப்பை வெளிப்படுத்த அனுமதிப்பதுடன், மறுபுறத்தில் அவர்கள் மீதான கட்டுப்பாட்டை பராமரிக்க தொழிற்சங்கத்தை அனுமதிக்கின்றது. வேர்டியானது, இந்த இயக்கத்தை சோர்வடையச் செய்துவிட்டு, அதன் உறுப்பினர்களுக்கும், பொதுச் சேவை ஊழியர்களுக்கும் மிக சொற்பமான ஊதிய உயர்வை வழங்கும் ஒப்பந்தத்திற்கு  தவிர்க்க முடியாமல் தயார்ப்படுத்துகின்றது.

பேர்லின் விமான நிலைய ஊழியர்கள் ஏற்கனவே இது தொடர்பாக பல அனுபவங்களை பெற்றுள்ளனர். 

பல தரை சேவை ஊழியர்கள் இன்னும் 2017 வசந்த காலத்தை நினைவுகூருகின்றனர். அந்த நேரத்தில் BER இன் கட்டுமானம் பூர்த்தியடையவில்லை. பேர்லினில் உள்ள Tegel மற்றும் Schonefeld விமான நிலையங்களில் உள்ள தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் வேர்டி ஒப்புக்கொண்ட ஊதிய ஒப்பந்தத்தை நிராகரித்தனர். தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய தயாராக இருந்தபோதிலும், வேர்டி ஒப்பந்தத்தை திணித்தது. இந்த ஒப்பந்தத்தின் ஊடாக பெரும்பாலான தரை சேவை பணியாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கச் செய்வதும், அதே நேரத்தில் மேலதிக வேலைநிறுத்த நடவடிக்கைக்கு மூன்று ஆண்டுகள் தடைவிதிப்பதும் ஆகும்.  

ஒரு மாதத்திற்கு முன்னர், பயண பொதிகளை கையாளுபவர்கள், apron தொழிலாளர்கள், உள்-வருகையை பரிசோதிக்கும் மற்றும் பயணிகளை விமானத்திற்கு அனுப்பும் தொழிலாளர்கள் ஆகியோர் மூன்று நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இது அவர்களின் மிகுந்த உறுதியை வெளிப்படுத்தியதுடன், இரண்டு விமான நிலையங்களையும் பெரிதும் முடக்கியது. வேர்டி உறுப்பினர்கள் அல்லாத முகமை தொழிலாளர்கள் உட்பட பல தொழிலாளர்கள், ஊதிய உயர்வுக்கான வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதுடன், கிட்டத்தட்ட 99 சதவீதம் பேர் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு வாக்களித்தனர். 

எவ்வாறாயினும், மூன்றாம் நாளில் வேர்டி வேலைநிறுத்தத்தை முறித்துக் கொண்டு, சமூக ஜனநாயகக்கட்சி மற்றும் இடது கட்சியின் பேர்லின் செனட் கூட்டணியின் முன்னாள் சமூக ஜனநாயகக்கட்சியின் உள்துறை செனட்டரான ஏர்ஹர்ட் கோர்ட்டிங் உடன் ‘மத்தியஸ்தராக’ இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தியது. 2008 ஆம் ஆண்டு ஹரால்ட் வொல்ஃப் (இடது கட்சி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான செனட்டர்) உடன் சேர்ந்து பேர்லின் விமான நிலைய தரை சேவைகளை தனியார்மயமாக்கத்தை தொடங்கிய அனைவரிலும் கோர்டிங் முக்கியமானவர் ஆவார். அந்த நேரத்தில் கூட, வேர்டி பேர்லினின் விமான நிலையங்களில் சமூக ஜனநாயகக்கட்சி-இடது கட்சி செனட்டுடன் நெருக்கமாகப் பணியாற்றியது.

இதன் விளைவாக இரண்டு விமான நிலையங்களில் ஐந்து தனியார் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அவை மிகுந்த சுரண்டல் நிலைமைகளின் கீழ் தங்கள் தரை சேவைகளை இயக்கின. இந்த நிறுவனங்களில் மிகப்பெரியது WISAG ஆகும். இது, அதன் பல்வேறு துணை நிறுவனங்கள் மற்றும் துணை ஒப்பந்தக்காரர்களுடன் சமூக ஜனநாயகக் கட்சியின் செயற்பாட்டாளர் கிளவுஸ் விஸ்ஸரால் ஸ்தாபிக்கப்பட்டது. நிறுவனத்தின் ஊழியர்களில் பெரும் பகுதியினர் தற்காலிக ஒப்பந்தங்களின் அடிப்படையில் பகுதிநேர வேலை செய்கிறார்கள், அல்லது ஒப்பந்தத் தொழிலாளர்கள் பேர்லினின் புதிய ஒற்றை விமான நிலையத்தில் பெருமளவிலான பயணிகளின் வருகையை சமாளிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில், அடிமட்ட கூலியை பெறும் தீவிர அழுத்தத்தின் கீழ் பணிபுரிகின்றனர்.  

இந்த வெறுக்கத்தக்க வேலை நிலைமைகளும் மோசமான ஊதியங்களும் இன்று வரை நிலவி வருகின்றன. மேலும் இது, பேர்லின் செனட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வேர்டியுடன் ஒத்துழைத்ததன் நேரடி விளைவாகும்.  

இதனால் தான் சோசலிச சமத்துவக்கட்சியின் (SGP) தற்போதைய தேர்தல் பிரச்சாரம் மிகவும் முக்கியமானது. சோசலிச சமத்துவக்கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் புதன்கிழமை பேரணியில் கட்சியின் தேர்தல் திட்டத்தை விநியோகித்தனர். சோசலிச சமத்துவக் கட்சியானது, ஒப்பந்த பேரம் பேசும் போராட்டத்தை போர் மற்றும் இராணுவ மறுஆயுதமயமாக்கத்திற்கு எதிரான போராட்டத்துடன் தொடர்புபடுத்துகிறது என்றும், பெப்ரவரி 4 அன்று Potsdamer Platz இல் நடைபெறவுள்ள போர் மற்றும் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான பேரணியில் கலந்து கொள்ளுமாறு வேலைநிறுத்தக்காரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Loading