பாரிய மண்சரிவு ஏற்பட்ட இலங்கையின் பூனாகலை தோட்டத்தில் 67 குடும்பங்கள் தமது வீடுகளை இழந்துள்ளன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மார்ச் 19 அன்று, கொழும்பில் இருந்து 215 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பண்டாரவளைக்கு அருகில் உள்ள பூனாகலை தோட்டத்தின் கபரகல பிரிவில் 23 லைன் அறைகளை (லைன் அறைகள் என்பது, சிறிய அறைகளைக் கொண்ட தொடர் குடியிருப்பாகும்) பாரிய மண்சரிவு மூழ்கடித்ததில் அறுபத்தேழு குடும்பங்கள் தற்போது வீடற்ற நிலையில் உள்ளன. இரவு நேரத்தில் நடந்த இந்த பேரழிவு சம்பவத்தின் போது மூன்று கட்டிடங்கள் முற்றாக புதையுண்டுள்ளதுடன் ஒன்பது பேர் காயமடைந்து தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு குடியிருப்பாளரின் கால் மற்றும் மற்றொருவரின் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. 

19 மார்ச் 2023 அன்று பூனாகலை தோட்டத்தின் கபரகல பிரிவில் மண்சரிவு சேதங்களை பார்க்க கூடிய தோட்டத் தொழிலாளர்கள்

பூனாகலை தோட்டம்,  ரிச்சர்ட் பீரிஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மஸ்கெலியா பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தோட்டம் செங்குத்தான  நிலத்தில் அமைந்துள்ளது. இங்கு தொடர்ந்து மழை பெய்வதோடு நீரூற்றுக்கள் உருவாகி நீர் கசிவு ஏற்படும். சம்பவத்தன்று பெய்த மழையினால், பெரும் பாறைகளுடன் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

தோட்டத்தில் அழிவுக்குள்ளான, சேதமடைந்த மற்றும் பாதுகாப்பற்ற லைன் அறைகளில் இருந்த சுமார் 260 பேர் முதலில் அருகிலுள்ள கைவிடப்பட்ட மகந்த தேயிலை தொழிற்சாலைக்கு மாற்றப்பட்டனர். பின்னர் கைவிடப்பட்ட அம்பிட்டிகந்த தேயிலை தொழிற்சாலைக்கு மாற்றப்பட்டனர். உயிர்ச் சேதம் எதுவும் இல்லாவிட்டாலும், குடியிருப்பாளர்கள் தங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்துவிட்டதாக அயலில் உள்ள தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்திற்குத் தெரிவித்தனர்.

அழிக்கப்பட்ட லைன் அறைகளுக்கு அருகில் வசிக்கும் சுரேன், சம்பவம் குறித்து பின்வருமாறு விவரித்தார்: “மலையில் நீண்ட காலமாக பல நீர் ஊற்றுக்களும் நீர் ஓடைகளும் பாய்கின்றன. மழைக்கு மத்தியில், இரவு 8 மணியளவில் இந்த மண்சரிவு ஏற்பட்டது. இந்த அழிவு நடந்த இடத்துக்கு அருகில் மேலும் 12 லைன் அறைகள் உள்ளன.  அத்தோடு, பெரிய கற்கள் இன்னும் கீழே உருண்டு வருகின்றன. அதே பேரழிவை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தில் நாங்களும் இருக்கிறோம்' என்றார்.

நிலச்சரிவினால் துண்டிக்கப்பட்ட மின்சார விநியோகங்கள் இன்னும் மீளமைக்கப்படவில்லை, இதனால் குடியிருப்பாளர்களும் மற்றவர்களும் தங்கள் மொபைல் போன்களை சார்ஜ் செய்ய முடியாத நிலையில் உள்ளனர், என்று சுரேன் கூறினார். இதனால் வீடற்ற தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தொலைதூரத்தில் வாழும் தங்கள் நண்பர்களிடம் கூட உதவி கோர முடியவில்லை.

19 மார்ச் 2023 அன்று பூனாகலை தோட்டத்தின் கபரகல பிரிவில் நிலச்சரிவினால் சேதமடைந்த லைன் அறைகள்

“நாங்கள், பிரதேச செயலகம் மூலமாக அரசாங்கத்தின் சிறுதொகை நிதியை நன்கொடையாகப் பெற்றோம். எங்கள் நண்பர்கள், தலா 5,000 ரூபாய் நன்கொடை அளித்ததுடன் வீடற்ற தோட்டக் குடும்பங்களுக்கு உணவு, உடை மற்றும் பிற அடிப்படை தேவைகளுக்கான பொருட்களையும் வழங்கினர்.

“அங்கே சுமார் 10 பதின்ம வயது பெண்களுக்கு தேவையானதை வாங்குவதற்குப் பணம் கொடுத்தோம். இந்த மக்களுக்கு இப்போது தோட்டத்தில் வேலை இல்லாததால் சாப்பிட எதுவும் இல்லை,” என்று அவர் கூறினார்.

பூனாகலை சிங்கள பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் பின்வருமாறு கூறினார்: 'சில நோயாளிகள் இன்று (மார்ச் 22) பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 40 முதல் 50 மாணவர்கள், தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர், ஆனாலும் அவர்களின் சீருடைகள், பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் அவர்களின் உடைமைகள் அனைத்தும் சேற்றில் புதைந்துள்ளன. எங்கள் பாடசாலையில் படிக்கும் மாணவர்களுக்கு எமது பாடசாலை ஆசிரியர்கள் ஆடை மற்றும் உணவுகளை வழங்கியுள்ளனர்.

“15 வயதுக்கு மேற்பட்ட இந்த சிறுமிகள் முகாமில் இருப்பது பாதுகாப்பானது இல்லை. திரும்பவும் மண்சரிவுகள் ஏற்படலாம் மற்றும் குளிர் கால நிலை காரணமாக நோய்வாய்ப்படலாம் என மற்றய குடியிருப்பாளர்கள் அஞ்சுகின்றனர். ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர், வீடுகள் வழங்கப்படும் என்று தோட்ட நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூறியது,” என்றார் அந்த ஆசிரியர்.

மஸ்கெலியா பெருந்தோட்டங்கள், ஏனைய தோட்டக் கம்பனிகள் மற்றும் இலங்கை அரசாங்கங்கள் முன்னைய பேரழிவுகளுக்கு எவ்வாறு பிரதிபலித்தன என்பதைக் கண்ட தோட்டத் தொழிலாளர்கள், கம்பனியின் வாக்குறுதி மீது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

2014 இல் பூனாகலை தோட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள மஸ்கெலியா பெருந்தோட்டத்திற்கு சொந்தமான மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் 37 பேர் உயிரிழந்தனர்.

2014 நவம்பரில், மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். [Photo by Vikalpa, Maatram and Groundviews, Centre for Policy Alternatives. / CC BY 2.0]

2005 இல், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இப்பகுதியில் நிலச்சரிவுகள் இடம்பெறும் என்று முன்னறிவித்திருந்ததுடன் 75 குடும்பங்களுக்கு மாற்று குடியிருப்புகளை வழங்கவும் பரிந்துரைத்தது.

மஸ்கெலியா தோட்ட நிர்வாகம் இந்த எச்சரிக்கைகளை புறக்கணித்துவிட்டது. அப்போதைய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் மாற்று இடங்களை வழங்குமாறு நிறுவனத்திற்கு அறிவுறுத்தவில்லை. ஆனால், தோட்டத் தொழிலாளர்கள் ஆபத்தான பகுதிகளில் வசிப்பதாக, அவர்கள் மீது குற்றம் சாட்டியது.

மார்ச் 19 அனர்த்தம் சம்பந்தமாக பிரதிபலித்து தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான், வீடிழந்த தோட்டக் குடும்பங்களுக்கு சில சலுகைகள் வழங்கப்படும் என அறிவித்து, சம்பவம் குறித்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அறிவுறுத்தியதுடன் நிறுத்திக்கொண்டார். தொண்டமான் இலங்கையின் பெருந்தோட்டத்துறையின் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா.) தலைவராவார். தொண்டமானின் அறிக்கைகள் காற்றில் கலந்துவிட்டன.

2008 இல், மலையக மாவட்டங்களில், மிகவும் ஆபத்தான 3,760 இடங்களைக் கண்டறிந்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், அங்கு வாழும் தொழிலாளர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்ற வேண்டும் என தோட்ட கம்பனிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது. இந்த எச்சரிக்கைகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளதோடு, அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்களால் உறுதியான நடவடிக்கைகள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.

தற்போதைய அரசாங்க அமைச்சராக இருக்கும் ஜீவன் தொண்டமான் மற்றும் முன்னர் அமைச்சர்களாக இருந்த அவரது தந்தை ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அவரது பாட்டனார் சௌமியமூர்த்தி தொண்டமானும் தொடர்ச்சியான மண்சரிவு அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் வீடிழந்தவர்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

இ.தொ.கா.வின் குற்றவியல் பாத்திரத்தையே மற்ற அனைத்து தோட்ட தொழிற்சங்கங்களும் பிரதிபலிக்கின்றன. அரசியல் கட்சிகளாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்த தொழிற்சங்கங்கள், பெரிய நிறுவனங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்க வேலை செய்வதையே தோட்டத் தொழிலாளர்கள் அனுபவித்து வருகின்றனர்.

பேரழிவு நடந்து இரண்டு நாட்களுக்குப் பின்னர், சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்கள், சில இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சந்தித்தனர். இந்த மக்கள் அப்போது வரை தொழிற்சங்கங்களிடம் இருந்து எந்த உதவிகளையும் பெற்றிருக்வில்லை. அவர்கள் அயலவர்களின் உணவு மற்றும் உதவிகளிலேயே தங்கியிருந்தார்கள். 

பெரும்பாலான இலங்கை தோட்டத் தொழிலாளர்கள், பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் போது கட்டப்பட்ட 10க்கு 10 அடி லைன் அறைகளிலேயே இன்னும் வாழ்கின்றனர். தோட்டக் கூட்டுத்தாபனங்கள் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கண்ணியமான வீடுகளை ஏற்பாடு செய்ய மறுத்து வருகின்றன, அதனால் ஒரே லைன் அறையில் பல குடும்பங்கள் ஒன்றாக வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இந்த கட்டிடங்களை கம்பனிகள் பராமரிப்பதில்லை. இலங்கையின் மிகவும் சுரண்டப்படும் மற்றும் அதிகமாக வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்கள், ஒரு நாளைக்கு 1,000 ரூபாய்க்கும் ($US3) குறைவாகவே ஊதியம் பெறுகிறார்கள். இலங்கையின் வருடாந்த உணவுப் பணவீக்கம் சுமார் 70 வீதத்தில் இருக்கும் நிலையில், தோட்டத் தொழிலாளர்களும் குடும்பங்களும் பட்டினிச் சாவை எதிர்கொள்கின்றனர்.

ஒரு தோட்டத் தொழிலாளி கூறியதாவது: “அரசாங்கங்களும் மற்றும் கம்பனிகளும் கண்ணியமான வீடுகளை வழங்காததாலேயே, மக்கள் இந்த பேரழிவுகளை எதிர்கொள்கின்றனர். இங்கு எத்தனை நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகள் உள்ளன என்பதை நீங்களே பார்க்கலாம், மேலும் நிலச்சரிவுகள் எப்போது ஏற்படும் என்பது யாருக்கும் தெரியாது. பெரும் நிறுவனங்கள் இலாபத்தை மட்டுமே விரும்புகின்றன, அரசாங்கங்கள் அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.”

இந்தக் கருத்துக்கள், பெருந்தோட்டக் கம்பனிகளின் இலாபத்தினால் நிரூபிக்கப்பட்டுள்ளன. 2014 மீரியபெத்த அனர்த்தத்திற்கு முந்தைய ஆண்டில், மஸ்கெலியா பெருந்தோட்டத்தின் இலாபம் 35 பில்லியன் ரூபாவாக ($109 மில்லியன்) இருந்தது. இந்நிறுவனம் இந்த இலாபத்தொகையில் இருந்து சிறிதளவு பணத்தினைச் செலவழித்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளின்படி செயல்பட்டிருந்தால், இழந்த 37 உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.

1776 இல் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தின்போது முதன்முதலில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்ட 'வாழ்வதற்கான உரிமை', என்பது, உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற அரசியலமைப்புகளின் அடிப்படையாகக் கருதப்படுகிறது. ஆனால், சமூக யதார்த்தம் முற்றிலும் வேறுவிதமாக உள்ளது.

பெப்ரவரியில், துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட ஒரு பெரிய பூகம்பம் 60,000 பேரைக் கொன்றது, ஆனாலும் இதன் மொத்த எண்ணிக்கை 150,000 பேரை எட்டும் என்று கணிக்கப்பட்டிருக்கின்றது. துருக்கியில் உள்ள சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினரான உலாஸ் அடஸ்சி, நியூயார்க்கில் நடந்த சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் கூட்டத்தில் பின்வருமாறு விளக்கினார்: 'வர்க்க அடிப்படையில் பிளவுபட்டுள்ள இன்றைய முதலாளித்துவ சமூகத்தில், அரசாங்கங்கள் முதலில் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் வர்க்கத்தின் நலன்களை நிறைவேற்றுவதையே முதன்மையான கடமையாக கொண்டிருக்கின்றன. மேலும் இந்த நலன்கள், பொது சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பில் நீண்ட கால முதலீடுகளை செய்வதை விட, முதலாளித்துவ இலாபம் மற்றும் செல்வக் குவிப்புக்கு முன்னுரிமை அளிக்கின்றன.

'இந்த சூழலில், ஆளும் வர்க்கத்தின் அனைத்து அரசியல் பிரிவுகளும் இந்த தடுக்கக்கூடிய பேரழிவிற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இறுதிப் பகுப்பாய்வில், அனைத்து ஸ்தாபனக் கட்சிகளாலும் பாதுகாக்கப்படும் முதலாளித்துவ அமைப்புமுறையின் விளைவாக ஏற்பட்டதே இந்தப் பேரழிவாகும்.'

அடெஸ்சியின் கருத்தானது, பூனாகலை தோட்டத்தில் இம்மாதம் நடைபெற்ற பேரழிவுக்கான அடிப்படையான  காரணங்கள், இலாபத்துக்கான உந்துதலே என்பதை சுட்டிக்காட்டுகிறது. இலங்கையின் மழைக் காலங்களின்போது, மண்சரிவு சேதங்கள் மற்றும் வெள்ளப் பெருக்கு என்பன அடிக்கடி நிகழுகின்ற போதிலும், இலங்கையின் ஆளும் உயரடுக்கு மற்றும் சர்வதேச ரீதியில் இருக்கும் அதன் சமதரப்பினர் இந்த அடிப்படை சமூக பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எந்த நடவடிக்கைகளையும் அறிமுகப்படுத்த விரும்பவில்லை.

மேலும் வாசிக்க

இலங்கை தோட்டத் தொழிற்சங்கத் தலைவர் அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளார்

இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான சோடிக்கப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறு! வேலை நீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் நிபந்தனையின்றி மீண்டும் வேலையில் அமர்த்து!

வேலை நீக்கம் செய்யப்பட்ட சக ஊழியர்களை மீண்டும் வேலையில் அமர்த்தக் கோரி இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

Loading