இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
மே 1 திங்கட் கிழமை அதிகாலை நடைபெற்ற 2023 சர்வதேச மே தின இணையவழி கூட்டத்துக்கு உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் வழங்கிய ஆரம்ப அறிக்கையின் உரை இங்கு பிரசுரிக்கப்படுகின்றது. முழு கூட்டத்தின் பதிவை இங்கு பார்க்கலாம்.
சர்வதேச தொழிலாள வர்க்க ஒற்றுமைக்கான இந்த நாளில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது இந்த இணையவழிப் கூட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் அதன் புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. அனைத்து கண்டங்களிலும் மற்றும் அனைத்து நாடுகளிலும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பிரிவு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் நாங்கள் எங்கள் ஒற்றுமையை அறிவிக்கிறோம்.
கொடூரமான வேலைச் சூழலுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்தமைக்காக தண்டனை கொடுக்கும் பொருட்டு, திட்டமிட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியாவின் டெல்லியில் உள்ள மாருதி சுசுகி வாகனத் தொழிலாளர்களின் விடுதலைக்காகப் போராடுவதற்கான அதன் உறுதிப்பாட்டை அனைத்துலக் குழு புதுப்பிக்கிறது. ஏகாதிபத்திய அரசாங்கங்களின் குற்றங்கள் மற்றும் பெருநிறுவன ஊடகங்களில் உள்ள அவற்றின் அடியாட்களின் பொய்களுக்கு எதிரான, உண்மைக்கான போராட்டத்தின் அடையாளமாக மாறியுள்ள ஜூலியன் அசான்ஜின் விடுதலைக்காக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பலத்தை அணிதிரட்டுவதற்கான அதன் உறுதிப்பாட்டை அனைத்துலகக் குழு மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இன்றைய கூட்டமானது அனைத்துலக குழுவின் பத்தாவது இணையவழி மே தின கொண்டாட்டமாகும். இந்த கூட்டம், உக்ரேனில் போர் இடைவிடாமல் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் இடம்பெறுகின்றது. இந்தப் போர், ரஷ்யாவுடனான நேட்டோவின் மோதலுக்கு அப்பால் சீனாவுடனான போரையும் உலகளாவிய அணுவாயுத மோதலையும் நோக்கி விரிவடைவதற்கு அச்சுறுத்துகின்றது.
உக்ரேனில் போரைத் தூண்டி விடுவதில் அதன் சொந்த பங்கை மூடி மறைக்க முயலும் பைடென் நிர்வாகம், புட்டினின் 'ஆத்திரமூட்டப்படாத போர்' என்ற வரலாற்று உண்மையற்ற அபத்தமான கதையை தூக்கிப் பிடிக்கின்றது. ஆனால், வாஷிங்டனின் கற்பனையில் உருவாக்கப்பட்ட பிசாசுகளின் நீண்ட வரிசையில், விளாடிமிர் புட்டின் என்ற பிசாசு பற்றிய கதையானது, போரின் வரலாற்று, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் தோற்றம் பற்றி எதுவும் விளக்கவில்லை.
உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ போருக்கும் பின்வரும் விடயங்களுக்கும் இடையேயான தொடர்பைப் பற்றிய எந்தவொரு ஆய்வில் இருந்தும் இது கவனத்தை திசை திருப்புகின்றது:
(1) ஈராக், சேர்பியா, ஆப்கானிஸ்தான், சோமாலியா, லிபியா மற்றும் சிரியாவில் அமெரிக்கா முன்னெடுத்த கிட்டத்தட்ட 30 ஆண்டுகால இடைவிடாத போர்;
(2) 1991 இல் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதில் இருந்து நேட்டோவின் இடைவிடாத கிழக்கு நோக்கிய விரிவாக்கம்;
(3) அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் அதன் சொந்த உலக மேலாதிக்க நிலைக்கு ஆபத்தான அச்சுறுத்தலாகக் கருதப்படுகின்ற சீனாவுடன் அதிகரித்து வரும் பூகோள அரசியல் மோதல்;
(4) உலகின் கையிருப்பு நாணயமாக டொலரின் மேலாதிக்கத்திற்கு வளர்ந்து வரும் சவாலில் அதன் அப்பட்டமான வெளிப்பாட்டைக் காண்கிற, அமெரிக்காவின் உலகப் பொருளாதார நிலையின் நீடித்த சரிவு;
(5) அமெரிக்க நிதிய முறைமையின் முழுமையான சரிவைத் தடுக்க, அவநம்பிக்கையான பிணை எடுப்புகள் தேவைப்படுகின்ற தொடர்ச்சியான பொருளாதார அதிர்ச்சிகள்;
(6) 6 ஜனவரி 2021 அன்று, 2020 நவம்பர் தேசியத் தேர்தல் முடிவுகளை தூக்கி வீசி ஆட்சியை கைப்பற்ற, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சியில் எடுத்துக்காட்டப்பட்ட அமெரிக்க அரசியல் அமைப்பின் தெளிவான சிதைவு;
(7) அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை தீவிரமயமாக்குகின்ற, தொற்றுநோய் மற்றும் புதிய பணவீக்க சுழலின் தாக்கத்தால் தீவிரமடைந்துள்ள சமத்துவமின்மையின் அதிர்ச்சியூட்டும் மட்டத்தால் ஆட்டங்கண்டு போன ஒரு சமூகத்தின், அதிகரித்து வரும் உள்நாட்டு ஸ்திரமின்மை.
தீர்க்க முடியாத நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு போரின் ஊடாக ஒரு வழியைத் தேடும் அமெரிக்க கூட்டுத்தாபன-நிதிய உயரடுக்கின் முயற்சிகளை உந்தித் தள்ளுகின்ற பொருளாதார, அரசியல் மற்றும் சமூக முரண்பாடுகளை பற்றி கடந்த கால் நூற்றாண்டு காலமாக பகுப்பாய்வு செய்து வெளியிட்டு வரும், உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கைகள், 'ஆத்திரமூட்டப்படாத போர்' என்ற கதையின் பதிலளிக்க முடியாத மறுப்புகள் ஆகும்.
வாஷிங்டனாலும் பேர்லினாலும் ரஷ்யாவின் மீது அதீத அனுதாபம் கொண்டவராகக் கருதப்பட்ட உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சைத் தூக்கியெறிந்து, அங்கு நேட்டோ-சார்பு அரசாங்கம் ஒன்றை ஆட்சியில் அமர்த்துவதற்காக அமெரிக்காவும் ஜேர்மனியும் இயக்கிய, 2014 பெப்ரவரி மைதான் சதி நடந்து மூன்று மாதங்களுக்குள்ளேயே, அனைத்துலகக் குழுவின் முதல் இணையவழி மே தினக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த சதியைத் தொடர்ந்து, வாஷிங்டன், ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ கடற்படை நடவடிக்கைகளுக்கான கருங்கடல் தளமாக மாற்றுவதற்கு திட்டமிட்டிருந்த கிரிமியாவை, கிரெம்ளின் கைப்பற்றி இணைத்துக்கொண்டது.
12 ஏப்ரல் 2014 அன்று வெளியிடப்பட்ட அதன் முதல் இணையவழி மே தின கூட்டத்தின் அறிவிப்பில், உலக சோசலிச வலைத் தளம், மைதான் சதியானது 'ரஷ்யாவுடன் மோதலை தூண்டிவிடும் நோக்கத்துடன்' நடத்தப்பட்டது என்று அறிவித்தது. அந்த அறிக்கை பின்வருமாறு தொடர்ந்தது:
உக்ரேன் மீதான ரஷ்யாவுடனான மோதல் ஏகாதிபத்திய சக்திகளின் நோக்குநிலையில் ஒரு புதிய மற்றும் ஆபத்தான திருப்பத்தைக் குறிக்கிறது. ஏகாதிபத்திய போரின் கடவுள்கள் தாகத்தில் உள்ளனர்! முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய ஆண்டுகளைப் போலவே, உலகின் ஒரு புதிய பிளவு தயாராகி வருகிறது.
சீனா மற்றும் ரஷ்யாவுடனான போர் சாத்தியமற்றது என்றும், பெரிய ஏகாதிபத்திய சக்திகள் அணுஆயுத போர் ஆபத்தை ஏற்படுத்தாது என்றும் நம்புபவர்கள், தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். அதன் இரண்டு பேரழிவு உலகப் போர்கள் மற்றும் அதன் எண்ணிலடங்கா இரத்தக் களரி உள்ளூர் மோதல்களுடன், இருபதாம் நூற்றாண்டின் வரலாறானது ஆளும் வர்க்கங்கள் எடுக்கத் தயாராக இருக்கும் ஆபத்துகளுக்குப் போதுமான ஆதாரங்களை வழங்கியுள்ளது. உண்மையில், அவர்கள் ஒட்டு மொத்த மனிதகுலத்தினதும் பூமியினதும் தலைவிதியை பணயம் வைக்கத் தயாராக உள்ளனர்.
முதலாம் உலகப் போர் வெடித்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகும், இரண்டாம் உலகப் போர் தொடங்கி 75 ஆண்டுகளுக்குப் பிறகும், மூன்றாவது ஏகாதிபத்திய பேரழிவின் ஆபத்துக்கு எதிரான போராட்டத்தை சர்வதேச தொழிலாள வர்க்கம் எதிர்கொள்கிறது.
அனைத்துலகக் குழு ஒரு ஆருடம் கூறும் படிகப் பந்தை வைத்திருக்கவில்லை. ஆனால், சக்திவாய்ந்த ஆயுதமான மார்க்சியக் கோட்பாடு மற்றும் முதல் உலகப் போரின் போது லெனின் அபிவிருத்தி செய்த உலக ஏகாதிபத்தியத்தின் இயக்கவியல் பற்றிய பகுப்பாய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு அதனால் விடயங்களை ஆராய முடிந்தது. அந்த நேரத்தில், படுகொலைகளை நியாயப்படுத்த ஏகாதிபத்திய அரசாங்கங்கள் பயன்படுத்திய பொய்களையும், முதலாளித்துவ அரசாங்கங்களின் போர்க் கொள்கைகளை எதிர்ப்பதாகவும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தை நிலைநிறுத்துவதாகவும் கொடுத்த வாக்குறுதிகளை கைவிட்டவர்கள் பயன்படுத்தி வந்த குதர்க்கங்களையும் லெனின் அம்பலப்படுத்தினார்.
லெனினின், ஏகாதிபத்தியத்தின் பொருளாதார அடித்தளங்களிலும், முதலாளித்துவ அரசுகளுக்கு இடையேயான தவிர்க்க முடியாத மோதல்களிலும் போரை இருத்தி பகுப்பாய்வு செய்தார். 'தேசத்தின் பாதுகாப்பு' என்ற பெயரில் போரை ஆதரிக்கலாம் அல்லது இராணுவ மோதல் என்பது தவறான கொள்கைத் தேர்வுகளின் விளைவு என்ற கூற்றை அவர் நிராகரித்தார். முதல் வாதம் வெறுமனே தேசிய பேரினவாதத்திற்கு சரணடைவதற்கான ஒரு பாசாங்குத்தனமான நியாயப்படுத்தலாகும்; பிந்தைய வாதம் ஏகாதிபத்திய போரின் புறநிலை காரணத்தையும் தொழிலாள வர்க்கத்தின் போர் எதிர்ப்பு மூலோபாயத்தின் வளர்ச்சிக்கான அதன் புரட்சிகர தாக்கங்களையும் மழுங்கடிக்க உதவுவதாகும்.
ஏகாதிபத்தியப் பொருளாதாரம் தவிர்க்கமுடியாமல் ஏகாதிபத்தியப் போருக்கும் அதன் அனைத்து பயங்கரங்களுக்கும் வழிவகுத்தது. 1916ல் போல்ஷிவிக் கட்சியின் தலைவர், 'ஏகாதிபத்தியம் பொதுவாக, வன்முறை மற்றும் எதிர்போக்கை நோக்கிப் பாடுபடுகிறது...' என்று எழுதினார். ஈவிரக்கமற்ற வன்முறையை பயன்படுத்துவதன் மூலம், ஏகாதிபத்தியவாதிகள், பெரும் வல்லரசுகளிடையே உலகின் செல்வம் மற்றும் வளங்கள் தற்போது பகிரப்பட்டுள்ள நிலையை திருத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தனர். லெனின் விளக்கியதாவது:
(1) உலகம் ஏற்கனவே பிரிக்கப்பட்டுவிட்டது என்ற உண்மை, மறுபகிர்வு பற்றி சிந்திப்பவர்கள் ஒவ்வொரு விதமான பிராந்தியத்தையும் அடைய கட்டாயப்படுத்துகிறது; மற்றும் (2) ஏகாதிபத்தியத்தின் இன்றியமையாத அம்சம், மேலாதிக்கத்திற்கான முயற்சியில் பெரும் சக்திகளுக்கு இடையேயான போட்டியாகும். உதாரணமாக, பிராந்தியத்தை கைப்பற்றுவதற்கு, தாங்களாகேவே நேரடியாக ஈடுபடாமல், எதிரியை பலவீனப்படுத்துவதற்கும் அவரது மேலாதிக்கத்துக்கு குழி பறிப்பதற்கும் சூழ்ச்சி செய்வதாகும்.
லெனின் தொடர்ந்தார்:
கேள்வி என்னவென்றால்: ஒரு பக்கம் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கும் மூலதனக் குவிப்புக்கும் இடையேயான முரண்பாட்டில் இருந்து மீள்வதற்கும், மறுபுறம் நிதி மூலதனத்திற்காக காலனிகள் மற்றும் செல்வாக்கு மண்டலங்களைப் பங்கிடுவதற்கும், முதலாளித்துவத்தின் கீழ் போரைத் தவிர வேறு என்ன வழி இருக்க முடியும்.
உக்ரேனில் தற்போதைய போரும் சீனாவுடன் அதிகரித்து வரும் மோதலும், மிகவும் முதிர்ச்சியான மற்றும் சிக்கலான மட்டத்தில் இருந்தாலும், அவை ஒரு நூற்றாண்டுக்கும் முன்னர் லெனினால் பகுப்பாய்வு செய்யப்பட்ட பூகோள முரண்பாடுகளின் வெளிப்பாடுகள் ஆகும்.
1991ல் இருந்து நேட்டோ கிழக்கு நோக்கி 800 மைல்களுக்கு கிழக்கே விரிவாக்கப்பட்டமை, ரஷ்யாவிற்கு எதிரான ஒரு ஆத்திரமூட்டல் அல்ல என்பது போல், உக்ரேனிலான போர் புட்டினின் 'ஆத்திரமூட்டப்படாத' படையெடுப்பின் திடீர் மற்றும் எதிர்பாராத விளைவாக சித்தரிக்கப்படுகின்றது. உண்மையில், உக்ரேனில் நடக்கும் போர், அமெரிக்காவால் 30 ஆண்டுகாலமாக இடைவிடாது முன்னெடுக்கப்பட்ட போரின் தொடர்ச்சியும் விரிவாக்கமும் ஆகும். அமெரிக்காவால். முடிவில்லாத தொடர் மோதல்களின் இன்றியமையாத நோக்கம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீடித்த பொருளாதாரச் சரிவில் இருந்து மீள்வதும் அதன் உலகளாவிய மேலாதிக்கத்தை இராணுவ வெற்றியின் மூலம் தக்கவைத்துக்கொள்வதும் ஆகும்.
1934 இல், லியோன் ட்ரொட்ஸ்கி, ஜேர்மன் ஏகாதிபத்தியம் 'ஐரோப்பாவை ஒழுங்கமைக்க' முயலும் அதே வேளை, 'உலகத்தை ஒழுங்கமைப்பதே' அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இலட்சியமாக இருந்தது, என எழுதினார். ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வை உறுதிப்படுத்தும் நோக்கம் கொண்டது போன்ற மொழியைப் பயன்படுத்தி, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளராக இருந்த ஜோ பைடன், 2020 ஏப்ரலில், “பைடென் வெளியுறவுக் கொள்கை, அமெரிக்காவை மீண்டும் மேசையின் தலைமையில் வைக்கும்... உலகம் தன்னைத்தானே ஒழுங்கமைத்துக் கொள்ளவில்லை,” என எழுதினார்.
ஆனால் அமெரிக்காவால் ஒழுங்கமைக்கப்பட வேண்டிய அவசியமில்லாத ஒரு உலகத்தையே அமெரிக்கா எதிர்கொள்கின்றது. அமெரிக்க பூகோள-அரசியல் மேலாதிக்கத்தின் நிதி ஆதாரமான உலக கையிருப்பு நாணயமாக டொலரின் பாத்திரம் பெருகிய முறையில் சவால் செய்யப்படுகிறது. பொருளாதார மற்றும் இராணுவப் போட்டியாளராக சீனாவின் வளர்ந்து வரும் பாத்திரம், அமெரிக்க மேலாதிக்கத்தின் இருப்புக்கு ஒரு அச்சுறுத்தலாக வாஷிங்டனால் பார்க்கப்படுகிறது.
நேரம் தங்களுக்கு சார்பாக இல்லை என்ற பயம், அதாவது, போரை தாமதப்படுத்துவது தங்கள் போட்டியாளர்களை வலிமை பெற மட்டுமே அனுமதிக்கும் என்ற பீதி, 1914 இல் ஏகாதிபத்திய சக்திகள் போருக்குச் செல்ல முடிவு செய்ததில் ஒரு முக்கிய காரணியாக இருந்தது. போர் தவிர்க்க முடியாததாகக் கருதப்படும் அளவிற்கு, அது போர் 'பின்னரை விட விரைவில்' வெடிக்க வேண்டும் என்ற அணுகுமுறைக்கு வழிவகுத்தது. முதலாளித்துவ அரசியல் தலைவர்கள் மற்றும் இராணுவ ஜெனரல்கள் மத்தியில், மோதல் தவிர்க்க முடியாதது என்ற அகநிலை நம்பிக்கை, ஒரு தீர்க்கமான கட்டத்தில், 1914 ஆகஸ்டில் போருக்குச் செல்லும் முடிவில் ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக மாறியது.
அடுத்த 15, 10 அல்லது ஐந்தாண்டுகளுக்குள் சீனாவுடன் போரை முன்னறிவிக்கும் முதலாளித்துவ பத்திரிகைகள் மற்றும் மூலோபாய இதழ்களில் வரும் பல கட்டுரைகள், இன்றைய வாஷிங்டனில் இதேபோன்ற மனநிலை பரவியிருப்பதற்கு சாட்சியமளிக்கின்றன. தாய்வானில் பைடென் நிர்வாகத்தின் ஈவிரக்கமற்ற ஆத்திரமூட்டும் தன்மைக்கு வேறு எந்த தீவிரமான அரசியல் விளக்கமும் இல்லை. அவை, இராணுவ நடவடிக்கையை எடுக்கவும், 'முதல் தாக்குதலை நடத்தவும்' சீனாவை தூண்டிவிடும் தெளிவான நோக்கம் கொண்டவை, மற்றும் அதன் மூலம் வாஷிங்டனுக்கு அதன் நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்ட இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்குத் தேவையான பிரச்சாரக் கதையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டவை.
ஏகாதிபத்திய சக்திகளில் அமெரிக்கா மிகவும் ஆக்ரோஷமாக இருக்கிறது, ஆனால் வாஷிங்டனை போரை நோக்கித் தள்ளும் அதே ஆற்றல் ஐரோப்பாவிலும் செயல்படுகிறது. நேட்டோ கூட்டணியில் உள்ள அமெரிக்காவின் ஐரோப்பிய ஏகாதிபத்திய கூட்டாளிகள், தற்போதைய உலகளாவிய அதிகார சமநிலையால் வாஷிங்டனால் அமைக்கப்பட்ட சூழ்நிலையைப் பின்பற்ற நிர்ப்பந்திக்கப்பட்டாலும், அவை ரஷ்யாவுடனான மோதலில் எந்த வகையிலும் அப்பாவி பார்வையாளர்கள் அல்ல.
தமது முன்னாள் காலனிகளில் காட்டுமிராண்டித்தனமான குற்றங்கள் மற்றும் தங்கள் சொந்த நாடுகளில் பாசிசம் மற்றும் இனப்படுகொலை பரிசோதனைகளுடன், கடந்த நூற்றாண்டில் நடந்த இரண்டு உலகப் போர்களில் பங்குபற்றிய எல்லா ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளும், அமெரிக்காவைப் பாதித்துள்ள அதே அரசியல் மற்றும் பொருளாதார நோய்களால் சூழப்பட்டுள்ள அதே நேரம், அவற்றைச் சமாளிப்பதற்கு குறைவான நிதி ஆதாரங்களையே கொண்டுள்ளன.
தங்கள் ஏகாதிபத்திய அபிலாஷைகளை சுயாதீனமாக முன்னெடுக்க முடியாவிட்டாலும், பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி அல்லது ஜேர்மனி, அல்லது ஸ்வீடன், பின்லாந்து, நோர்வே, டென்மார்க், ஸ்பெயின், பெல்ஜியம் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற 'குறைந்த சக்திகள்', பிராந்தியத்தின் மற்றும் வளங்களின் மறுபகிர்வு, ரஷ்யாவின் இராணுவத் தோல்வி மற்றும் அது பல அரசுகளாக சிதைக்கப்படுவதில் இருந்து தாம் எதிர்பார்க்கும் நிதி அனுகூலங்களை பெறுவதில் இருந்து தாம் ஓரங்கட்டப்படுவதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
'முதல் சுட்டவர் யார்?' என்ற கேள்வியில் கவனம் செலுத்துவதன் மூலம் போருக்கான 'குற்றத்தை' மதிப்பிடுவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும், மிகக் குறைந்த கால அவகாசமே தேவைப்படுகிறது, இது ஒரு அத்தியாயத்தை மிக நீண்ட தொடர் நிகழ்வுகளிலிருந்து தனிமைப்படுத்துகிறது.
24 பெப்ரவரி 2022 அன்று உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு வழிவகுத்த நிகழ்வுகள், தேவையான வரலாற்று மற்றும் அரசியல் சூழலில் வைக்கப்படும் போது, அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளாலேயே போர் தூண்டப்பட்டது என்பதைத் தவிர வேறு எந்த கேள்விக்கும் இடமில்லை.
எவ்வாறாயினும், அமெரிக்கா மற்றும் நேட்டோவால் போர் தூண்டப்பட்டது என்ற உண்மை, ரஷ்யாவின் எதிர்ப்போக்கு பண்பை மாற்றுவது ஒருபுறம் இருக்க, உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை அது நியாயப்படுத்தாது. ரஷ்யாவின் எல்லைகளுக்கு எதிரான நேட்டோ அச்சுறுத்தலுக்கு இது ஒரு நியாயமான பிரதிபலிப்பாகும் என்ற அடிப்படையில் படையெடுப்பை நியாயப்படுத்துபவர்கள், புட்டின் ஒரு முதலாளித்துவ அரசின் தலைவர் என்ற உண்மையை புறக்கணிக்கிறார்கள். அதன் 'தேசிய பாதுகாப்பு' என்ற வரையறை, சோவியத் ஒன்றியத்தின் முன்னர் தேசியமயமாக்கப்பட்ட சொத்துமுறை கலைக்கப்பட்டதில் இருந்தும் திருட்டின் அடிப்படையிலும் செல்வம் சேர்த்துக் கொண்ட அதி செல்வந்த தன்னல வர்க்கத்தின் பொருளாதார நலன்களால் தீர்மானிக்கப்படுகிறது.
போரைத் தொடங்குதல் மற்றும் முன்னெடுத்தல் ஆகிய இரண்டிலும், புட்டினின் அனைத்து தவறான கணக்கீடுகள் மற்றும் பிழைகள், அவர் சேவை செய்யும் வர்க்க நலன்களைப் பிரதிபலிக்கின்றன. மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளின் இராணுவ அழுத்தத்தை எதிர்கொள்வதும், ரஷ்யாவின் எல்லைகளுக்குள் இயற்கை வளங்கள் மற்றும் உழைப்புச் சுரண்டலிலும், முடிந்தவரை கருங்கடல் பகுதி மற்றும் மத்திய ஆசியாவின் அண்டை நாடுகள் மற்றும் காக்கசஸ் தாண்டியும் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் மேலாதிக்க நிலையைத் தக்கவைத்துக்கொள்வதுமே போரின் இலக்காகும்.
இந்த நோக்கங்களில், ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒருபுறமிருக்க, முற்போக்கானது எதுவுமில்லை.
அவர்களின் தற்போதைய மோதலை ஒரு புறம் வைத்தால், ரஷ்யா மற்றும் உக்ரேனில் உள்ள சோவியத்துக்கு பிந்தைய புதிய ஆளும் வர்க்கங்கள், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமை மற்றும் அங்கு முதலாளித்துவத்தின் புணருத்தாரனத்திலும் அதே குற்றவியல் மூலத்தைப் பகிர்ந்து கொள்கின்றன.
போர் தற்போது இரண்டாம் ஆண்டை எட்டியுள்ளது. இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை மேலும் இழக்க வழிவகுக்கக் கூடிய உக்ரேனிய எதிர்த்தாக்குதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கும் நிலையில், முதலாளித்துவ ஊடகங்கள் இரத்தம் சிந்துவதைப் பற்றி அலட்சியம் செய்கின்றன.
தற்போது, இரத்தக்களரி மோதல் பாக்முட் நகரில் நிலைகொண்டுள்ளது. பிரச்சாரத்தின் நலன்களுக்காக உக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் தகவல்களைக் கையாளுவதை கவனத்தை கொண்டாலும், நகரத்தை கைப்பற்றுவதற்கான போர், ஒரு பயங்கரமான எண்ணிக்கையிலான மனிதப் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இராணுவ நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியிருந்தாலும், நகரத்தின் வரலாற்றைப் பற்றி பத்திரிகைகளில் எதுவும் எழுதப்படவில்லை. இந்த வரலாற்றை மறுபரிசீலனை செய்வதானது, இந்த சகோதர மோதலின் சோகமான தன்மையையும், ரஷ்யா மற்றும் உக்ரேன் மக்களுக்கும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் பயங்கரமான சமூகப் பின்னடைவுக்கு சான்றளிக்கிறது.
1917 அக்டோபர் புரட்சியைத் தொடர்ந்து நடந்த உள்நாட்டுப் போரில் பக்முட் நகரம் ஒரு முக்கிய போர்முனையாக இருந்தது. இது போல்ஷிவிக்-எதிர்ப்பு தேசியவாத உக்ரேனிய இராணுவமான செமியோன் பெட்லியுராவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதன் ஆட்சி தூண்டிவிட்ட படுகொலைகளின் விளைவாக 50,000 முதல் 200,000 யூதர்களைக் கொல்லப்பட்டனர்.
27 டிசம்பர் 1919 இல் செம்படை பக்முட்டை விடுவித்ததுடன், இந்த வெற்றி ஒரு பரந்த சமூக மாற்றத்தை ஏற்படுத்தியது. ஒரு 'தொழிலாளர் வெற்றி' தொழிற்சாலை கட்டப்பட்டது, மேலும் நகருக்கு அருகில் உள்ள சுரங்கங்களுக்கு ஜேர்மன் புரட்சியாளர் கார்ல் லிப்க்னெக்ட் மற்றும் சோவியத் தலைவர் யாகோவ் ஸ்வெர்ட்லோவ் ஆகியோரின் பெயரிடப்பட்டது. 1924 ஆம் ஆண்டில், தோழர் ஆர்டியோம் என்று அழைக்கப்பட்ட ஒரு முன்னணி போல்ஷிவிக், ஃபியோடர் ஆண்ட்ரேவிச் செர்ஜியேவின் நினைவைப் போற்றும் வகையில், நகரத்துக்கு ஆர்டெம்விஸ்க் என மறுபெயரிடப்பட்டது.
புரட்சிகர சர்வதேசியத்தை பிரதிபலித்த அவரது வாழ்க்கை, சோசலிச எண்ணம் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவினர், புத்திஜீவிகள் மற்றும் பன்னாட்டு ரஷ்ய சாம்ராஜ்யத்தின் இளைஞர்களை ஈர்த்தது.
1901 இல் ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியில் சேர்ந்த செர்ஜியேவின்-ஆர்டியோம், 1903 பிளவுக்குப் பிறகு லெனினின் போல்ஷிவிக் பிரிவை ஆதரித்தார். 1905 புரட்சியின் போது, கார்கோவ் நகரில் தொழிலாளர்களின் ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு அவர் தலைமை தாங்கினார். புரட்சியின் தோல்விக்குப் பிறகு, அவர் சைபீரியாவில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் தோழர் ஆர்டியோம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தப்பித்து, ஜப்பான் மற்றும் கொரியா வழியாக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார்.
அவர் விரைவில் ஆஸ்திரேலிய தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டார். 'பிக் டாம்' என்று பரவலாக அறியப்பட்ட ஆர்டியோம் 1912 இல் ஆஸ்திரேலியாவின் எதிரொலி பத்திரிகையின் ஆசிரியரானார். ஆஸ்திரேலிய சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினராக, அவர் முதலாம் உலகப் போரில் ஆஸ்திரேலியாவின் பங்கேற்பிற்கு தொழிற்சங்கங்களில் எதிர்ப்பை வழிநடத்தினார்.
பெப்ரவரி புரட்சிக்குப் பிறகு ரஷ்யாவுக்குத் திரும்பிய ஆர்டியோம், கார்கோவ் மற்றும் டோனெட்ஸ் பேசின் பகுதியில் போல்ஷிவிக் ஆட்சியைப் பெற்ற புரட்சிகர கிளர்ச்சியின் அமைப்பில் முக்கிய பங்கு வகித்தார். இறுதியில் சோவியத் அதிகாரத்தை உறுதிப்படுத்திய உள்நாட்டுப் போரில் அவர் முக்கிய பங்கு வகித்தார். 1921 இல், ஆர்டியம் ஒரு ரயில் விபத்தில் இறந்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பக்முட், ஆர்டெமிவ்ஸ்க் என்று மறுபெயரிடப்பட்டது.
31 அக்டோபர் 1941 அன்று, சோவியத் யூனியனை ஆக்கிரமித்து நான்கு மாதங்களுக்குப் பிறகு, நாஜி படைகள் ஆர்டெமிவ்ஸ்கை ஆக்கிரமித்தன. 1942 இன் தொடக்கத்தில், வலதுசாரி உக்ரேனிய தேசியவாதிகளின் உதவியுடன் நாஜிக்கள் 3,000 யூதர்களைக் கொன்றனர், அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு, சுரங்கத்துக்குள் தள்ளப்பட்டு மூச்சுத் திணறச்செய்து கொல்லப்பட்டனர்.
5 செப்டம்பர் 1943 இல், ஆர்டெமிவ்ஸ்க் செம்படையால் விடுவிக்கப்பட்டது.
2014 மைதான் சதியைத் தொடர்ந்து, போரோஷென்கோவின் வலதுசாரி ஆட்சி, உக்ரேனிய பாசிசத்தின் மாவீரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், சோவியத் சகாப்தத்தின் அனைத்து அரசியல், சமூக மற்றும் கலாச்சார அடையாளங்களை அகற்றவும் ஆர்வமாக இருந்தது, உக்ரேனின் வரைபடத்தில் இருந்து ஆர்டெமிவ்ஸ்க்கை அகற்றி, நகரத்தின் பக்முத் என்ற பழைய பெயரை மீண்டும் சூட்டியது..
அக்டோபர் புரட்சியின் எச்சங்களை அழிப்பது என்பது, ஸ்டீபன் பண்டேரா, டிமிட்ரி டோன்ட்சோவ் மற்றும் பாசிச மற்றும் நவ-நாஜி முதலாளித்துவ உக்ரேனிய தேசியவாதத்தின் மற்ற நாயகர்களின் மகிமைப்படுத்துவதை புதுப்பிப்பதுடன் இணைந்துள்ளது.
ஆனால் உக்ரேனிய பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதாக புட்டின் கூறுவதற்கு சிறிதளவு அரசியல் நம்பகத்தன்மை கூட கிடையாது. ரஷ்ய தேசியவாதத்தின் எதிர்போக்கு பதாகையின் கீழ் அவர் போரை நடத்துகிறார். புட்டின் ஜாரிசத்தின் பாரம்பரியத்தை தூக்கிப் பிடித்து, லெனின், ட்ரொட்ஸ்கி, போல்ஷிவிசம் மற்றும் அக்டோபர் புரட்சியை கண்டிக்கும்போது, அவர் தனது ஆட்சியின் வரலாற்று ரீதியாக பிற்போக்குத்தனமான மற்றும் அரசியல் ரீதியாக திவாலான தன்மைக்கு சாட்சியமளிக்கிறார்.
போரை நிறுத்தக் கோருவதில், நாம் சோசலிச சர்வதேசியத்தின் கோட்பாட்டை முன்கொணர்கிறோம். தொழிலாளி வர்க்கத்திற்கு நாடு இல்லை. இந்தப் போரினால் உக்ரேனிய அல்லது ரஷ்ய தொழிலாள வர்க்கம் எதையும் பெறப் போவதில்லை. எண்பது ஆண்டுகளுக்கு முன்பு உக்ரேன் மற்றும் ரஷ்யாவின் தொழிலாளர்கள் சோவியத் யூனியனில் இருந்து நாஜி படையெடுப்பாளர்களை வெளியேற்றும் போராட்டத்தில் இணைந்து போராடினர். இப்போது, முதலாளித்துவம் மீள ஸ்தாபிக்கப்பட்டதன் விளைவாக, அவர்கள் பாசிசத்திற்கு எதிராகவும் அக்டோபர் புரட்சியின் வெற்றிகளைப் பாதுகாப்பதற்காகவும் ஒரு காலத்தில் பக்கபலமாக பேணிவந்த ஒரு மண்ணில் ஒருவரையொருவர் கொன்று வருகின்றனர்.
ஏகாதிபத்திய போருக்கு புரட்சிகரமானது ஒருபுறம் இருக்க, அரசியல் ரீதியாக சாத்தியமான ஒரே பதில் சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரமாக அணிதிரட்டுவது மட்டுமே. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் 'ஒருமுனை' மேலாதிக்கத்தை முறியடிக்கும் ஒரு 'பல துருவ' உலகம் வருவதைப் பற்றி இன்று அதிகம் பேசப்படுகிறது. 'பல துருவமுனைப்பு' பற்றிய கல்விமான்கள் மற்றும் போலி இடது கோட்பாட்டாளர்களின் கூற்றுப்படி, வாஷிங்டனின் ஆட்சியானது உலக வளங்களின் மிகவும் அமைதியான பங்கீட்டுக்கு கூட்டாகவும் இணக்கமாகவும் தலைமை தாங்கும் முதலாளித்துவ அரசுகளின் கூட்டமைப்பால் மாற்றப்படும்.
ஒரு அமைதியான 'கடுந்தீவிர-ஏகாதிபத்தியத்தின்' இந்தப் புதிய வடிவம், ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இருந்ததை விட கோட்பாட்டு ரீதியாக ஒத்திசைவானதாகவும், அரசியல் ரீதியாக சாத்தியமானதாகவும் இல்லை. இது ஜேர்மன் சீர்திருத்தவாதி கார்ல் கவுட்ஸ்கியால் முதன்முதலில் முன்மொழியப்பட்டது லெனினால் முழுமையாக நிராகரிக்கப்பட்டது. முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய அரசுகளுக்கு இடையே உலக வளங்கள் அமைதியான முறையில் விநியோகிக்கப்படுவதும், ஒதுக்கீடு செய்யப்படுவதும் சாத்தியமற்றது. உலகப் பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புக்கும் இடையே உள்ள முரண்பாடுகள் போருக்கு இட்டுச் செல்கின்றன.
எந்தவொரு நிகழ்விலும், 'பல் துருவ' உலகத்தை யதார்த்தமாக்குவதானது, அதன் தவறான தத்துவார்த்த அடித்தளங்கள் ஒருபுறம் இருக்க, இன்றைய மேலாதிக்க ஏகாதிபத்திய சக்தியான அமெரிக்காவால் அமைதியான முறையில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இது ஒரு யதார்த்தமான வாய்ப்பு அல்ல. 'ஒருமுனை' மேலாதிக்கத்திற்கான அதன் உந்துதலைத் தடுக்கும் முயற்சிகளை அமெரிக்கா அனைத்து வழிகளிலும் எதிர்க்கும். எனவே, ஒரு 'ஒற்றை துருவ' உலகத்தை 'பல் துருவ' உலகத்துடன் பதிலீடு செய்ய முயற்சிக்கும் கற்பனாவாதமானது, அதன் சொந்த திரிபுபடுத்தப்பட்ட தர்க்கத்தால், மூன்றாம் உலகப் போருக்கும், பிரபஞ்சத்தின் அழிவுக்கும் இட்டுச் செல்கிறது.
இறுதிப் ஆய்வுகளில், இந்த மார்க்சிச-விரோத கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளுக்கு அடிப்படையாக இருப்பது, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திற்கான எதிர்ப்பும் மோதிக்கொள்ளும் முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய அரசுகளுக்கு இடையே சமநிலைப்படுத்தும் முயற்சியும் ஆகும்.
அனைத்துலகக் குழு, முதலாளித்துவ ஆட்சிகளுக்கான இத்தகைய கோழைத்தனமான அடிபணிவுகளையும் புரட்சிகரப் பணிகளைத் தவிர்ப்பதையும் நிராகரிக்கின்றது. இரண்டாம் உலகப் போர் வெடித்தது குறித்து ட்ரொட்ஸ்கி கூறியது போல்: 'நாங்கள் ஒரு அரசாங்கக் கட்சி அல்ல; நாங்கள் சமரசம் செய்ய முடியாத புரட்சிகர எதிர்ப்பின் கட்சி...'
நாங்கள் எங்கள் கொள்கைகளை 'முதலாளித்துவ அரசாங்கங்களின் ஊடகத்தின் மூலம்” அமுல்படுத்த முயலவில்லை. மாறாக “போராட்டத்தின் மூலம் வெகுஜனங்களுக்கு கல்வியூட்டுவதன் மூலம், தொழிலாளர்கள் எதைப் பாதுகாக்க வேண்டும், எதைத் தூக்கி எறிய வேண்டும் என்பதை விளக்குவதன் மூலம்' செயல்படுத்த முயல்கிறோம்.
வரலாற்றுப் பிரச்சனைகளின் தீர்வுக்கான அத்தகைய அணுகுமுறை, ட்ரொட்ஸ்கி அறிவித்தவாறு, 'உடனடியாக அதிசயமான முடிவுகளைத் தர முடியாது. ஆனால் நாங்கள் அதிசயம் செய்பவர்களாகக் காட்டிக் கொள்ளவில்லை. தற்போதைய நிலையில், நாங்கள் ஒரு புரட்சிகர சிறுபான்மையினர். நாம் செல்வாக்கு செலுத்தும் தொழிலாளர்கள் நிகழ்வுகளை சரியாக மதிப்பிடவும், தங்களை அறியாமல் சிக்கிக்கொள்வதை தவிரித்துக்கொள்ளவும், நம்மை எதிர்கொள்ளும் பணிகளின் புரட்சிகர தீர்விற்கு தங்கள் சொந்த வர்க்கத்தின் பொதுவான உணர்வைத் தயார் செய்யவும் எங்கள் வேலைகள் இயக்கப்பட வேண்டும்.”
மனிதகுலம் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை குறைத்துப்பார்க்க கூடாது. ஒரு உண்மையான புரட்சியாளரின் முதல் பொறுப்பு, என்ன என்பதை கூறுவதாகும். ஆனால், புறநிலை யதார்த்தமானது மூன்றாம் உலகப் போரின் ஆபத்தையும் மனிதகுலத்தின் அழிவையும் மட்டும் முன்வைக்கவில்லை, உலக சோசலிசப் புரட்சிக்கான சாத்தியத்தையும் மனித நாகரிகத்தில் ஒரு அற்புதமான முன்னேற்றத்தையும் முன்வைக்கின்றது என்பதை அடையாளம் காண்பதையும் அவசியமாக்குகின்றது.
அனைத்துலகக் குழு தலைமையிலான சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டம், ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக ஒரு வெகுஜன இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமும், உலகம் முழுவதும் சோசலிசத்தைக் கட்டியெழுப்ப தொழிலாள வர்க்கத்தின் கைக்கு அதிகாரத்தை மாற்றுவதற்காகப் போராடுவதன் மூலமும் இந்த சாத்தியத்தை வெளிக்கொணர செயற்படுகின்றது. இன்றைய மே தினக் கொண்டாட்டத்தில், எல்லா இடர்பாடுகள் மற்றும் ஆபத்துகள் இருந்தபோதிலும், இந்த முன்னோக்கு உயிர்ப்பிக்கிறது.