இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையில் ஒரு போலி-இடது அமைப்பான முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.), தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் எதிர்கொள்ளும் எரியும் அரசியல் பிரச்சினைகள் மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு ஒரு போலியான தீர்வாக 'மக்கள் சபைகள்' மற்றும் 'மக்கள் அரசாங்கம்' அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. கடந்த ஜூலை மாதம் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் வெகுஜன எழுச்சியினால் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கம் பதவியில் இருந்து அகற்றப்பட்டதில் இருந்து மு.சோ.க. இந்த 'மக்கள் சபைகளை' பரிந்துரைத்து வருகின்றது. இப்போது உள்ளூராட்சி தேர்தலுக்கான அதன் வேலைத்திட்டமாக “புதிய பாதை” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு சிறு நூலில் இந்த முன்மொழிவுகளை அது முன்னிலைப்படுத்தியுள்ளது.
மு.சோ.க. ஆனது, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்களால் நடத்தப்பட்ட இனவாதப் போருக்கு உற்சாகமாக ஆதரவளித்த இழிபுகழ்பெற்ற சிங்கள பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியில் (ஜ.வி.பி.) இருந்து பிரிந்ததாகும். ஜே.வி.பி., இனவாதப் போருக்கு ஆதரவளித்ததோடு முதலாளித்துவ அரசாங்கங்களில் பங்கேற்றதன் காரணமாக மற்றும் ஆதரவளித்ததன் காரணமாக, தொழிலாளர்கள் மற்றும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மதிப்பிழந்துபோன நிலையில், மு.சோ.க. தலைவர்கள் 2011 இல் ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து 2012 இல் புதிய கட்சியை உருவாக்கினர்.
1960களின் பிற்பகுதியில் இலங்கையின் தெற்கில் உள்ள கிராமப்புற சிங்கள இளைஞர்கள் மத்தியில் ஒரு குட்டி முதலாளித்துவ அமைப்பாக உருவான ஜே.வி.பி., ஸ்ராலினிசம்-மாவோவாதம், காஸ்ரோவாதம் மற்றும் சிங்கள ஜனரஞ்சகவாதத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்தியல் கலவையை அடிப்படையாகக் கொண்ட 'ஆயுதப் போராட்டத்தை' தூக்கிப் பிடித்தது. 1971 இல் அதன் சாகச ஆயுத கிளர்ச்சி கொடூரமாக நசுக்கப்பட்டதில் 20,000 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இந்தியத் துருப்புக்களை வட இலங்கைக்குள் கொண்டு வந்த இந்திய-இலங்கை ஒப்பந்தம் தீவை பிளவுபடுத்துவதாக கூறி, ஜே.வி.பி. 1988-89இல் பேரினவாத அடிப்படையில் அதை கடுமையாகக் கண்டனம் செய்தது. அதன் ஆயுததாரிகள் அதன் சிங்கள தேசபக்தி பிரச்சாரத்தை எதிர்த்த மற்றும் ஆதரிக்க மறுத்த தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்க கட்சிகள் மீது கொலைவெறி தாக்குதல்களை நடத்தினர். 60,000 பேரின் பயங்கரமான மரண எண்ணிக்கையுடன் கிராமப்புற இளைஞர்கள் மீதான மற்றொரு கொடூரமான அரச ஒடுக்குமுறைக்கு இது கதவைத் திறந்து விட்டது.
மு.சோ.க. இந்த வரலாற்றை கைவிடவில்லை. ஜே.வி.பி. கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துடன் இணைந்து கொண்டுள்ளதாக இப்போது மு.சோ.க. தலைவர்கள் விமர்சிக்கின்ற போதிலும், 2004 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் (ஸ்ரீ.ல.சு.க.) சேர்ந்து ஒரு முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்தில் அமைச்சர்கள் ஆவதற்கு ஜே.வி.பி. எடுத்த தீர்மானத்தை மு.சோ.க. தலைவர்கள் விமர்சிக்கவில்லை. அவர்கள், 2011 இல் ஜே.வி.பி.யில் இருந்து அமைப்பு ரீதியாக பிரிந்த போதிலும் கருத்தியல் ரீதியாக பிரியவில்லை என்பதையே அவர்களின் அடுத்தடுத்த அரசியல் பரிணாமமும் மு.சோ.க. இன் தற்போதைய 'புதிய பாதை' வேலைத் திட்டமும் நிரூபிக்கிறது.
மு.சோ.க.யின் சிறுபிரசுரம் 'அரச-அதிகாரம் மக்கள் மன்றங்களால் இயக்கப்படுகின்ற, மக்களின் பங்கேற்புடன் கூடிய ஜனநாயகக் கொள்கையின் அடிப்படையில், ஒரு புதிய வடிவிலான அரச கட்டமைப்பை நாங்கள் முன்மொழிகிறோம்,' என அறிவிக்கின்றது. 'மக்கள் சபைகளின்' பாத்திரத்தை விளக்குகின்ற மு.சோ.க., 'இந்த வகையில் மக்கள் அரசை கட்டியெழுப்புவதற்கான முதல் படியாக, தற்போதுள்ள பிரதிநிதிகள் சபைகளுக்கு, வெளியில் இருந்து அழுத்தம் கொடுக்கக் கூடிய மக்கள் சக்தியை உருவாக்கிக்கொள்ள வேண்டும்,' என அறிவிக்கின்றது.
'மக்கள்' என்ற வார்த்தை தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டிருப்பது, சமூகத்தை எந்தவகையிலும் வர்க்க ரீதியில் பண்புமயப்படுத்துவதை வேண்டுமென்றே நிராகரிப்பதாகும். உற்பத்திச் சாதனங்களைச் சொந்தமாக வைத்திருக்கும் முதலாளித்துவ வர்க்கம், தங்களது அன்றாட சாப்பாட்டுக்காக சம்பாதிப்பதற்கு தங்கள் உழைப்புச் சக்தியை விற்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள தொழிலாளி வர்க்கம் ஆகிய இரண்டு பிரதான வர்க்கங்களாக முதலாளித்துவ சமூகம் பிளவுபட்டுள்ளது. இலங்கையில் உள்ள பெருந்தொகை விவசாயிகளை உள்ளடக்கிய உருவமற்ற இடைநிலை அல்லது மத்தியதர வர்க்கங்கள், முதலாளித்துவ வர்க்கம் அல்லது பாட்டாளி வர்க்கம் இரண்டில் ஏதாவது ஒன்றை பின்தொடர வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளன.
மு.சோ.க., தொழிலாளர்களை அன்றி, “மக்களைப்” பற்றி குறிப்பிடுவதானது முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவுகளையும் அவற்றின் அரசியல் கட்சிகளையும் அது தழுவிக்கொண்டிருப்பதை மூடி மறைப்பதற்கே ஆகும். எனவே 'மக்கள் சபைகள்' மற்றும் 'மக்கள் அரசாங்கம்' என்பவை, பெருவணிகத்தின் 'முற்போக்கு' சக்திகள் என அழைக்கபடுவனவற்றினதும் குறிப்பாக, ஜே.வி.பி. மற்றும் வலதுசாரி ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) போன்ற முதலாளித்துவ எதிர்க்கட்சிகளினதும் ஆதரவை வரவேற்பதாகும்.
மு.சோ.க, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ”குறுகிய கால சீர் திருத்தங்களை வெற்றி பெறுவதற்கு ”மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்ப முன்மொழிகின்ற அதே நேரம், ஒரு பின் இணைப்புச் சிந்தனையாக “இந்த நெருக்கடிக்கான இறுதித் தீர்வு சோசலிசத்தை கட்டியெழுப்புவதே” என்று சேர்க்கின்றது. இது குறுகிய கால சீர்திருத்தங்களுக்காக ”முற்போக்கு முதலாளித்துவத்துடன்” கூட்டணியை பரிந்துரைக்கும் அதே நேரம், சோசலிசத்துக்கான போராட்டத்தை என்றுமே வராத ஒரு கால வரையறையற்ற எதிர்காலத்திடம் ஒப்படைக்கின்ற, ஸ்ராலினிசத்தின் இரண்டுகட்ட கோட்பாட்டின் மறு வடிவமே அன்றி வேறில்லை.
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்ற ட்ரொட்ஸ்கிச இயக்கம், கடந்த நுாற்றாண்டு காலப்பகுதியில் சர்வதேச ரீதியிலும் இலங்கையிலும் தொழிலாள வர்க்கத்துக்கு அடுத்தடுத்து பேரழிவை கொண்டுவந்த எதிர்ப்போக்கு வர்க்க ஒத்துழைப்பை எப்போதும் கண்டித்துள்ளது. லங்கா சம சமாஜக் கட்சி (ல.ச.ச.க.) 1964 இல் முதலாளித்துவ பண்டாரநாயக்க அரசாங்கத்திற்குள் நுழைந்துகொண்டு காட்டிக்கொடுத்தமையானது தொழிலாள வரக்கத்தின் பாரிய 21 அம்சக் கோரிக்கைகள் இயக்கத்தை தடம்புரளச் செய்ததோடு, ஜே.வி.பி. போன்ற இனவாத குட்டி-முதலாளித்துவ போக்குகளின் வளர்ச்சிக்கு ஊக்கமூட்டியதுடன் இறுதியில் அது இனவாத போருக்கு இட்டுச்சென்றது.
மு.சோ.க. இப்போது இலங்கையில் முதலாளித்துவ ஆட்சியின் மிக ஆழமான நெருக்கடியின் மத்தியில் அதே அரசியல் குத்துக்கரணத்தை மீண்டும் முன்மொழிகின்றது. மேலும் ”ஒரு மக்கள் இயக்கம்” மற்றும் “ஒரு மக்கள் அரசாங்கத்துக்கும்” ஆன மு.சோ.க.யின் வர்க்க ஒத்துழைப்புவாத முன்மொழிவுகள், தொழிலாள வர்க்கத்துக்கு மேலும் பேரழிவு தருவனவாக இருக்கும்.
லியோன் ட்ரொட்ஸ்கி தனது நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டில், இலங்கை போன்ற முதலாளித்துவ அபிவிருத்தி காலதாமதமான நாடுகளில் உள்ள முதலாளித்துவத்தின் எந்தப் பிரிவினாலும், வெகுஜனங்களின் ஜனநாயக அபிலாசைகளையும் சமூகத் தேவைகளையும் நிறைவு செய்ய முடியாது என்பதை ஸ்தாபித்தார். அதிகாரத்துக்கான அரசியல் போராட்டத்தில் கிராமப்புற உழைப்பாளர்களையும் ஊக்குவிப்பதன் மூலம் தொழிலாள வர்க்கத்தால் மாத்திரமே அந்தத் தேவைகளை நிறைவு செய்து, சர்வதேச ரீதியாக சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக, சமூகத்தின் சோசலிச மறுகட்டமைப்பை தொடங்க முடியும்.
பிச்சை பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அரசாங்கத்திடமும் பாராளுமன்றத்திடமும் செல்வதைத் தவிர வேறொன்றுமில்லாத “மக்கள் சபைகள்” மற்றும் மக்கள் இயக்கம்” ஆகியவற்றுக்கான மு.சோ.க.யின் முன்மொழிவுகள், உழைக்கும் மக்களை ஆபத்தான அரசியல் முட்டுச்சந்துக்குள் இட்டுச் செல்கின்றது. அரசாங்க கட்சிகளும் ஜே.வி.பி. மற்றும் ஐ.ம.ச. உட்பட முதலாளித்துவ எதிர்க் கட்சிகளும், இலங்கை முதலாளித்துவத்ததை காப்பாற்றுவதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்த வேண்டியதன், மற்றும் சகிக்க முடியாத சுமைகளை மக்கள் மீது திணிக்க வேண்டியதன் தேவையுடன் உடன்படுகின்றன.
கடந்த ஆண்டின் அரசியல் படிப்பினைகள் என்னவாக உள்ளன? ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவுக்கு எதிரான வெகுஜன எழுச்சிக்கு மத்தியில், ஒரு பரந்த முன்னணியை அமைப்பதற்காக, ஜே.வி.பி., ஐ.ம.ச., மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கும் மு.சோ.க. வேண்டுகோள் விடுத்தது. ஆனால், இதே அமைப்புகளே, அந்த வெகுஜன இயக்கத்தைக் கட்டுப்படுத்தவும், ரணில் விக்கிரமசிங்கவை ஜனநாயக விரோதமாக அதிகாரத்தில் அமர்த்திய பாராளுமன்ற அரசியல் முட்டுச் சந்துக்குள் அதை திசை திருப்பிவிடவும் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்தன. எதிர்க் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து, விக்கிரமசிங்க அதிகாரத்துக்கு வந்ததற்கான அரசியல் பொறுப்பை மு.சோ.க.யும் கொண்டுள்ளது.
இப்போது மு.சோ.க., மீண்டும் எதிர்க் கட்சிகளுக்கு உழைக்கும் மக்களை அடிபணியச் செய்ய முயற்சிக்கின்றது. இதே எதிர்க் கட்சிகள் ஆட்சியில் இருந்தால், சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட நிரலை ஈவிரக்கமற்ற முறையில் செயல்படுத்தி, எதிர்ப்பாளர்கள் மற்றும் வேலை நிறுத்தக்காரர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களை நடத்தும். முழு கொழும்பு ஸ்தாபனமும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முடிவுகட்ட மாற்றீடு இல்லை என வாதாடுகின்றன. முதலாளித்துவக் கட்டமைப்புக்குள் அது நிஜமான உண்மை தான். ஆனால், தொழிலாள வர்க்கம் தனது வர்க்க நலன்களை பாதுகாக்க வேண்டுமெனில், சோசலிச அரசியலுக்காகவும் அவற்றைச் செயற்படுத்தவும் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காகவும் போராடினால் மட்டுமே முடியும்.
மு.சோ.க.க்கு எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி, நேரடியாக தொழிலாள வரக்கத்தை அடித்தளமாகக் கொண்டுள்ளது. மக்கள் சபைகளில் சேருமாறு முதலாளித்துவ எதிர்க் கட்சிகளுக்கு மு.சோ.க. விடுத்த வேண்டுகோள்களுக்கு எதிராக, சோசலிச சமத்துவக் கட்சியானது அனைத்து முதலாளித்துவ கட்சிகள் மற்றும் தொழற்சங்கங்களை சாராமல், சுயாதீனமாக, ஒவ்வொரு வேலைத் தளத்திலும் புறநகர் பகுதிகளிலும் நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. நாம், இலங்கை மற்றும் சர்வதேச ரீதியில் தொழிலாள வர்க்த்துடன் இணைவதற்கு கிராமப்புற உழைப்பாளிகள் தங்களுடைய சொந்த சுயாதீனமாக நடவடிக்கைக் குழுக்களை அமைக்கவும் அழைப்பு விடுக்கின்றோம்.
இந்த நடவடிக்கைக் குழுக்களின் பணியானது உழைக்கும் மக்களின் துன்பங்களுக்கு முடிவுகட்ட எதையும் செய்யாத ஒப்பனை நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதல்ல. நாம், தொழிலாளர் வர்க்கம் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் அவசர சமூகத் தேவைகளை நிறைவுசெய்ய, ஒரு தொடர் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.
* சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்ட நிரலை நிராகரி! ஓய்வுதிய வெட்டுக்கள் வேண்டாம்.!
* வாழ்க்கைச் செலவு சுட்டெண்ணுக்கு ஏற்ப அனைத்து தொழிலாளர்களுக்கும் போதுமான ஊதியம் வேண்டும்! உயர்ந்த பணவீக்கத்துக்கு முகங்கொடுக்க போதுமான அளவுக்கு ஓய்வூதியத்தை அதிகரி!
* பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு வேண்டாம்! அனைவருக்கும் சத்தான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்து!
* அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் தள்ளுபடி செய்! பெரும் பணக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து பாரிய வங்கிகள் மற்றும் பெரும் நிறுவனங்களை தொழிலாளர்களின் கட்டுபாட்டின் கீழ் தேசியமயமாக்கு!
சோசலிச சமத்துவக் கட்சி, அனைத்து வகையான வர்க்க ஒத்துழைப்புவாதத்தையும் உறுதியாக நிராகரிக்கிறது. மு.சோ.க.யின் ”மக்கள் அரசாங்கத்துக்கான” அழைப்பு, முதலாளித்துவக் கட்சிகளுடனான ஒரு கூட்டணிக்கான, அதாவது முதலாளித்துவ அரசாங்கத்துக்கான அழைப்பு ஆகும். சோசலிச சமத்துவக் கட்சியின் கோரிக்கைகள், கிராமப்புற வெகுஜனங்களை அணிதிரட்டி, வழிநடத்திக்கொண்டு, தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைப் பெற்று, சோசலிச கொள்கைகைளை நடைமுறைப்படுத்த ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்துக்கு தவிர்க்க முடியாமல் இட்டுச்செல்கின்றது.
எதிர் கட்சிகள், மு.சோ.க.யின் ஆதரவுடன், ஒரு புதிய முதலாளித்துவ அரசாங்கத்துக்கு, அதாவது ஒரு மக்கள் அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கின்றன. அத்தகைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் சமூக பிற்போக்கு நடவடிக்கைளை அமுல்படுத்தும். சோசலிச சமத்துவக் கட்சி, நாடு முழுவதிலும் உள்ள தொழிலாளர் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களின் நடவடிக்கைக் குழுக்களில் இருந்து ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட, ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டைக் கூட்டுவதற்கு அழைப்பு விடுக்கின்றது.
கடந்த ஆண்டு ஜுலை 20 அன்று வெளியிடப்பட்ட கட்சியின் அறிக்கை விளக்கியதாவது: ”ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் அழைப்பு, தொழிலாளர் வர்க்கத்துக்கு அதன் சக்திகளை பலப்படுத்தவும், கிராமப்புற வெகுஜனங்களின் செயலூக்கமான ஆதரவை வென்றெடுக்கவும், சோசலிச வழிகளில் சமூகத்தை மறுகட்டமைக்க அர்ப்பணித்துக்கொண்ட ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தின் ஊடாக, தனது சொந்த ஆட்சியை அமைப்பதற்கான அரசியல் மூலோபாயத்தை வழங்குகின்றது.
மு.சோ.க. “நெருக்கடிக்கான உண்மையான தீர்வாக” “சோசலிசத்தைப்” பற்றி பேசினாலும் கூட, அது முற்றிலும் இலாப முறைமையின் கட்டமைப்புக்குள் சீர்திருத்த வேலைத் திட்டத்தை தவிர வேறொன்றுமில்லை. இது “சமூக சமத்துவமின்மையை குறைப்பதை” அர்த்தப்படுத்தும் “ஒரு நியாயமான பொருளாதாரத்துக்காக” அழைப்பு விடுக்கின்றது. “உற்பத்தியை அதிகரிப்பதற்கு, உற்பத்தியாளருக்கு, அதாவது, உழைக்கும் தொழிலாளர்களுக்கு, சரியான பங்கு கிடைக்க வேண்டும். ஆகவே, உற்பத்தியின் அதிகரிப்பானது, இலாபம் முற்றிலும் நியாயமான அடிப்படையில் விநியோகிக்கப்படும் ஒரு பொருளாதாரத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவத்துக்கு ஒப்பனை மாற்றங்களைச் செய்வதன் மூலம், இந்தப் பிரச்சனைகள் எதுவும் தீர்க்கப்படாத காரணத்தால், சோசலிசமே ஒரே மாற்றீடு என நாம் கூறுகிறோம்,” என அது வாதிடுகின்றது.
அதன் கூற்றுக்கள் எவ்வாறு இருந்தாலும், மு.சோ.க. முதலாளித்துவத்திற்கு ஒப்பனை மாற்றங்களைத் தவிர வேறு எதையும் முன்வைக்கவில்லை. மு.சோ.க., முதலாளித்துவ தனியார் சொத்து மற்றும் இலாபத் திரட்சியின் மீது கைவைக்காமல், தொழிலாளர் வர்க்கத்துக்கு ”நியாயமான பங்கை” அது கோருகின்றது. “நியாயமான பங்கிற்கான” அதன் கோரிக்கையும் கூட, உற்பத்தியை அதிகரிப்பதை, அதாவது பெரு நிறுவனங்களின் இலாபங்களை அதிகரிப்பதை சார்ந்துள்ளது. முதலாளித்துவ வர்க்கம் அதன் இலாபத்தை அதிகரித்துக்கொள்ள, அது தொழிலாளர்களுக்கு ”நியாயமான பங்கை” கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றது.
சோசலிசம் என்பது முதலாளித்துவ உடமையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் “நியாயமான அடிப்படையில் இலாபங்களைப் பகிர்ந்துகொள்வது அல்ல…” மாறாக, தொழிலாளர்களிடம் இருந்து உழைப்புச் சக்தியைச் சுரண்டுவதன் ஊடாக, அவர்களிடம் இருந்து உபரி மதிப்பை கறந்தெடுக்கின்ற முதலாளித்துவத்தை துாக்கி வீசி, உற்பத்திச் சாதனங்கள் மீது தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டை ஸ்தாபிப்பது ஆகும். மு.சோ.க. முன்மொழிந்துள்ள போலியான ”சோசலிசம்” என்பது, எந்த வகையிலும் இலாப முறைமைக்கு எந்தச் சவாலும் விடுக்காத பழைய தொழிற்சங்க நிலைப்பாடான ”நியாயமான வேலை நாளுக்கான நியாயமான நாள் சம்பளம்” என்பதன் மற்றொரு வடிவமே தவிர வேறொன்றுமில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக, இலங்கையில் மட்டுமன்றி சர்வதேச ரீதியில் முதலாளித்துவத்தின் வரலாற்று பொருளாதார வீழ்ச்சி நிலைமைகளின் கீழேயே மு.சோ.க. அதன் கோரிக்கைகளை முன்வைக்கின்றது. ஆளும் வர்க்கங்கள் நியாயமான “பங்கை” வழங்காதது மட்டுமன்றி, தமது திவாலான சமூக ஒழுங்கை தாங்கிப்பிடிக்கும் நோக்கில் பாரிய புதிய சுமைகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதில் உறுதியாக உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் உண்மையான ஊதிய வெட்டுக்கள், கடுமையான வேலை நிலைமைகள் மற்றும் பொதுக் கல்வி, பொதுச் சுகாதாரம் மற்றும் ஓயவூதியங்கள் போன்ற அத்தியவசிய சமூக சேவைகள் வெட்டு போன்றவற்றை ஏற்றுக்கொள்ள தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
மு.சோ.க., இலங்கை முதலாளித்துவம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு “தவறான பொருளாதாரக் கொள்கைகளை” -உதாரணமாக 1977இல் இருந்து அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் பெறப்பட்ட பாரிய வெளிநாட்டு கடன்கள் உட்பட- “நவ-தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளை” சுட்டிக் காட்டுவதோடு, “நவ-தாராளவாத கொள்கைகளில் அவற்றின் அடியில் இருந்தே மாற்றங்களைக்” கோருகின்றது.
எவ்வாறாயினும், நவ-தாராளவாத கொள்கைகள், தேசியப் பொருளாதார ஒழுங்குமுறையின் அனைத்து வடிவங்களுக்கும் குழி பறிக்கின்ற, உலகப் பொருாளதாரத்துடனும் உற்பத்தியின் பூகோளமயமாக்கலுடன் முற்றிலும் பிணைந்துள்ளன. இது இலங்கையில் உள்ள அரசாங்கங்கள் மட்டுமன்றி உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாடும் “தமது” தொழிலாளர்களை மலிவு உழைப்பாளர்களாக வழங்கியும் அத்தியாவசிய சேவைகளை தனியார்மயமாக்கியும் உலக மூலதனத்துக்கு தமது கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது. தேசிய அளவில் ஒழுங்கமைக்கப்பட்ட முதலாளித்துவ பொருளாதாரத்தின் நாட்களுக்கு திரும்புவதைப் பரிந்துரைப்பது உண்மைக்குப் புறம்பான கற்பனைவாதம் ஆகும்.
உற்பத்தியின் உலகமயமாக்கலுக்கான திருப்பம் 1960 களின் பிற்பகுதியிலும் 1970 களின் முற்பகுதியிலும் உலக முதலாளித்துவத்தின் கடைசி பெரும் நெருக்கடிக்கு பதிலிறுப்பாக ஏற்பட்டது. முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகளை தீர்ப்பதற்குப் பதிலாக, அது அவற்றை உக்கிரமாக்கியதோடு இன்னும் ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்தது. தமது போட்டியாளர்களுக்கு எதிரான போரையும் தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான வர்க்கப் போரையும் முன்னெடுப்பதைத் தவிர, வேறு இல்லாத நிலைக்கு இந்த நெருக்கடி ஆளும் வர்க்கத்தை கொண்டு வந்து விட்டது.
மு.சோ.க.யின் வாதங்களுக்கு மாறாக, இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கான மூல காராணமானது கோவிட்-19 தொற்று நோய் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரினால் பெரிதும் தீவிரமடைந்த உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியே ஆகும். உக்ரேனில் இடம்பெறும் போர் மற்றும் குறிப்பாக ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க மற்றும் ஐரோப்பாவின் தடைகளும் பூகோள விநியோகச் சங்கிலியை மோசமாகப் பாதித்ததுடன் உணவு, எரிபொருள் மற்றும் மருந்து போன்ற அத்தியாவசியங்களுக்கான உலகத் தட்டுப்பாட்டுக்கும் வானளாவிய விலை உயரவுக்கும் இட்டுச் சென்றது. இது இலங்கையை கடுமையாகப் பாதித்தது.
மு.சோ.க., ”ஏகாதிபத்திய பொறியில் அகப்படாத ஒரு பொருளாதாரத்துக்கு” அழைப்பு விடுப்பதோடு இலங்கையின் வெளிநாட்டுக் கடனை தள்ளுபடி செய்வதற்கு 134 பொருளாதார வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களின் வேண்டுகோளை மேற்கோள் காட்டுகிறது. “வெளிநாட்டுக் கடன்களை ஒழிப்பதற்கான ஒரு உலகக் கருத்தை வளர்ப்பதில் இந்தக் குழுக்களில் இணையத் தவறியமைக்காக மு.சோ.க. விக்கிரமசிங்க அரசாங்கத்தை குற்றம் சாட்டுகின்றது. என்ன ஒரு கேலிக் கூத்து! மு.சோ.க. முதலில் ஒப்பனை சீர்திருத்தங்களுக்காக இலங்கையில் உள்ள முதலாளித்துவ கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க முன்மொழிகின்றது. பின்னர், இலங்கை வெளிநாட்டுக் கடன்களை இரத்து செய்ய ஏகாதிபத்திய சக்திகள், வங்கிகள் மற்றும் உலகளாவிய நிதி நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்க முன்மொழிகின்றது.
இது ஒருபோதும் நடக்காது. அனைத்து வெளிநாட்டுக் கடன்களும் முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அதன் அரசாங்கங்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காகப் பெறப்பட்டவையே அன்றி, தொழிலாள வர்க்கத்துக்காக அல்ல என்பதோடு அவை முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகின்றது.
பூகோள வல்லரசுகளுக்கான மு.சோ.க.யின் பயனற்ற வேண்டுகோள், இலங்கையில் அல்லது உலகில் வேறு எங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் அவசரப் பிரச்சினைகள் எதுவும், தேசிய அடிப்படையில் தீர்க்கப்பட முடியாது என்பதை சாதாரணமாக அடிக்கோடிட்டு காட்டுகின்றது. போர், காலநிலை மாற்றம் மற்றும் கோவிட்-19 போன்ற சகிக்க முடியாத சமூக நிலைமைகளுக்கு எதிரான அரசியல் போராட்டமானது ஏகாதிபத்தியம் மற்றும் உலக நிதி மூலதனத்தின் பொருளாதார ஆதிக்கத்துக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களுடன் சர்வதேசரீதியாக தொழிலாள வர்க்கம் அணிதிரள வேண்டியது அவசியமானதாகும்.
இந்த அழுகிப்போன முதலாளித்துவ முறையை ஒருபோதும் சீர்திருத்த முடியாது. இது தொழிலாள வர்க்கத்தால் துாக்கியெறியப்பட்டு சோசலிச சமத்துவக் கட்சியால் பரிந்துரைக்கப்பட்டவாறு சமூகத் தேவைகளை இட்டு நிரப்பக்கூடிய வகையில் மறுவடிவமைக்கப்பட வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும், அதன் பிரிவுகளால் உலகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் போராட்டத்தின் ஒரு பாகமாக, இந்த வரலாற்றுப் பணியை நிறைவேற்ற அவசியமான புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்ப இணைந்து கொள்ளுமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாம் அழைப்புவிடுக்கின்றோம்.
மேலும் படிக்க
போலி-இடதுகள் என்றால் யார்?
ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்குமான இலங்கை தொழிலாளர்களினதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டிற்காக!
இலங்கையின் போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சி வலது-சாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றது