இலங்கையில் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டுக்கான போராட்டம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மே 1 அதிகாலை நடைபெற்ற 2023 சர்வதேச மே தின இணையவழி கூட்டத்தில் இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர முன்வைத்த அறிக்கை இங்கு வெளியிடப்படுகிறது. அனைத்து உரைகளையும் பார்க்க இந்த இணைப்பில் பிரவேசியுங்கள் wsws.org/mayday

தோழர்களே தோழிகளே,

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் விளைவாக, உலகப் போர் அபாயமாக அதிகரித்து வருகின்ற ஒரு யுத்தத்துக்குள் தெற்காசிய பிராந்தியம் மேலும் மேலும் பாதிக்கப்பட்டு வருகின்றது. ரஷ்யாவிற்கு எதிரான போர் தீவிரமடைவதற்கு மேலதிகமாக, அமெரிக்காவானது சீனாவிற்கு எதிரான போர் தயாரிப்புகளையும் தீவிரப்படுத்தி வருகின்றது. பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ், சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் போர் உந்துதலில் ஒரு முன்னணி நாடாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது.

2023 சர்வதேச இணையவழி கூட்டம்

அமெரிக்காவும் இந்தியாவும், சீனாவிற்கு எதிரான தங்களது இராணுவ-மூலோபாயத் தாக்குதலில் இலங்கை உட்பட தெற்காசியாவில் உள்ள நாடுகளை ஒருங்கிணைக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. முழு தெற்காசியப் பிராந்தியமும் அதிகரித்த வகையில் தீவிரமடைந்து வரும் பூகோள - அரசியல் பதட்டங்களின் சுழலுக்குள் இழுத்துச் செல்லப்படுகிறது. இது ஒரு அணுவாயுத மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கக் கூடும். இந்த அபிவிருத்திகள், தெற்காசியாவில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் உலகம் பூராவும் வாழும் தங்களது சகாக்களுடன் இணைந்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுத்துள்ள சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையிலான சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்பும் பிரச்சாரத்தில் இணைந்து கொள்ள வேண்டியதை மிகவும் அவரசரமான பணியாக ஆக்கியுள்ளன.

ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரினால் உக்கிரமடைந்துள்ள முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியின் சூழலில், இலங்கையின் அரசியல் நிலைமை இப்போது ஒரு தீர்க்கமான திருப்புமுனையை எட்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்பு கடனுக்கான ஒப்புதல் கிடைத்துள்ளதை அடுத்து, தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் தாக்குதல் புதிய கட்டத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த வெகுஜன எழுச்சியின்போது, இராஜபக்ஷ அரசாங்கத்தை வெளியேற்றியதில் தொழிலாள வர்க்கம் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்தது. சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கு, வெகுஜன எதிர்ப்பினால் இராஜபக்ஷ செய்யத் தவறியதை, அவருக்குப் பின்னால் வந்த விக்கிரமசிங்க நிறைவேற்றுகிறார். தங்களது சமூக உரிமைகளைப் பாதுகாக்க விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் தொழிலாள வர்க்கம் இப்போது இறங்கி இருக்கின்றது.

4 பெப்ரவரி 2023 அன்று கொழும்பில் நடைபெற்ற 75வது சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆயுதப்படைத் தலைவர்களுடன் வருகை தந்த போது [Photo: Sri Lanka president’s media division]

அபிவிருத்தியடைந்து வரும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஒடுக்குவதை நோக்கமாகக் கொண்டு, விக்கிரமசிங்க அரசாங்கம், அரச அடக்குமுறையை தீவிரப்படுத்துகிறது. பல அரச நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஏனைய வர்க்க எதிர்ப்பு நடவடிக்கைகளையும் தடை செய்யும் அத்தியாவசிய சேவை சட்ட உத்தரவுகளை விக்ரமசிங்க விதித்துள்ளார்.

தனியார்மயமாக்கலுக்கு எதிராக பெட்ரோலியத் தொழிலாளர்கள் சமீபத்தில் நடத்திய வேலைநிறுத்தத்தை முறியடிப்பதற்காக, விக்கிரமசிங்க அரசாங்கம் இராணுவத்தை நிலைநிறுத்தியதோடு 20 வேலைநிறுத்தக்காரர்களை பிரதானமாக தொழிற்சங்கத் தலைவர்களை கட்டாய விடுமுறையில் அனுப்பியது. இந்த நடவடிக்கைகள், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைக்கு எதிரான எந்தவொரு வேலைநிறுத்தத்திற்கும் அதன் பதிலடி என்ன என்பது குறித்து முழு தொழிலாள வர்க்கத்திற்கும் விடுக்கப்படும் ஒரு கடுமையான எச்சரிக்கையாகும்.

விக்கிரமசிங்க அரசாங்கம் தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக, புதியதும் மற்றும் மிகவும் கொடூரமானதுமான பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவை கொண்டு வந்துள்ளது. அடுத்தடுத்து வரும் அரசாங்கங்கள் தங்களது அரசியல் எதிரிகள் மற்றும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு எதிராகவும் அவர்களின் போராட்டங்களை நசுக்குவதற்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி வந்துள்ளன.

இப்போது முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடியும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியும் புதிய மட்டத்தை எட்டியுள்ளன. இந்தச் சூழ்நிலையில் தற்போதிருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் போதுமானதாக இல்லை, அதனால், இதைவிட மிகக் கொடூரமான அடக்குமுறைச் சட்டம் தேவை என்று அரசாங்கம் கருதுகிறது. இதனால் புதிய பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்டமானது சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகள் உட்பட அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக தலைதூக்கும் எந்தவொரு எதிர்ப்பையும் கொடூரமாக ஒடுக்குவதற்காக அரச அதிகாரத்தை கட்டவிழ்த்து விட ஜனாதிபதிக்கு பரந்த அதிகாரங்களை வழங்கும்.

விக்கிரமசிங்க அரசாங்கம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான வர்க்கப் போரைத் தீவிரப்படுத்தி வருகிறது.

தங்களின் அடிப்படை சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாள வர்க்கம், அரசாங்கத்துடன் நேருக்கு நேர் மோதிக்கொள்கிறது. தொழிலாள வர்க்கத்திற்கும் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கும் இடையிலான ஒரு புரட்சிகர மோதலே இலங்கையில் அபிவிருத்தியடைந்து வருகின்றது. 

இந்த மோதலுக்காக தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் தயாராக வேண்டும்.

முதலாளித்துவ எதிர்க்கட்சிகள், பிரதானமாக ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்றவை, விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு எதிராக என்னவிதமான விமர்சனங்களைச் செய்தாலும், அதன் பொருளாதாரக் கொள்கை சம்பந்தமாக அவற்றுக்கு எந்த அடிப்படை வேறுபாடும் இல்லை. அவை அரசாங்கத்தைப் போலவே சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக உள்ளன.

விக்கிரமசிங்க அரசாங்கம் வெகுஜன எதிர்ப்பை நசுக்கி, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த இலாயக்கற்றுள்ளது என்பதே ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி.யின் உண்மையான கவலை ஆகும். எனவே, அவை தங்கள் சொந்த அரசாங்கத்தை அமைக்கவும், மக்கள் எதிர்ப்பை கொடூரமாக அடக்குவதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை செயல்படுத்தவும் முயற்சிக்கின்றன.

சோசலிச சமத்துவக் கட்சி, இந்த கூர்மையான அரசியல் அபிவிருத்திகளில் தலையிட்டு, முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்துக் கட்சிகளுக்கும் மற்றும் அவற்றின் தொழிற்சங்கங்கள் மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி-இடது முகவர்களுக்கும் எதிராக, தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு புரட்சிகர சோசலிச மாற்றீட்டை அபிவிருத்தி செய்து வருகிறது.

கடந்த ஆண்டு ஜூலை நடுப்பகுதியில், முன்னைய இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன எழுச்சியின் போது ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் மாநாட்டை கட்டியெழுப்புவதற்கான பிரச்சாரத்தை சோசலிச சமத்துவக் கட்சி தொடங்கி வைத்தது. இந்த பிரச்சாரம் தொடர்கின்றது. இந்த மாநாட்டுக்கான எமது வேலைகள், தொழிலாளர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் கொடூரமான தாக்குதலுக்கு எதிரான எமது பிரச்சாரத்தின் மையமாகும். 

இந்த புதிய மூலோபாய முன்முயற்சியை அறிவிக்கும் வகையில் ஜூலை 20 அன்று கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டை கட்டியெழுப்புவதற்கான எங்கள் பிரச்சாரத்தின் நோக்கம், சர்வதேச சோசலிச கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காக கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டிக்கொண்டு, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதே ஆகும்.

9 ஜூலை 2022 சனிக்கிழமை, இலங்கையின் கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் செல்லும் தெருவில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள். [AP Photo/Amitha Thennakoon]

உழைக்கும் மக்களால் சகிக்க முடியாத முதலாளித்துவ ஆட்சியை சவால் செய்வதற்கு, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சுயாதீனமான அரசியல் வேலைத்திட்டமும் மூலோபாயமும் தேவை என்பதே கடந்த ஆண்டு வெகுஜன எழுச்சியிலிருந்து பெறப்பட வேண்டிய தீர்க்கமான படிப்பினைகள் ஆகும். தொழிலாள வர்க்கத்திற்கு சுயாதீன அரசியல் வேலைத் திட்டமும் மூலோபாயமும் அவசியம். தொழிற்சங்கங்கள், அரசாங்கத்தினதும் முதலாளிகளினதும் வெளிப்படையான ஏஜண்டுகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தங்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவதற்காக தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாகி, தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவது அவசரத் தேவையாகும் என்பதே தொழிற்சங்கங்களில் இருந்து பெற்றுக் கொண்ட கசப்பான அனுபவங்களின் படிப்பினை ஆகும். 

நாங்கள் உருவாக்கப் போராடும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாடு, தீவு முழுவதும் உள்ள நடவடிக்கைக் குழுக்களில் இருந்து ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான நமது போராட்டமானது, ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு சர்வதேச வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் பங்கேற்புடன் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தொடங்கியுள்ள பிரச்சாரத்துடன் பிணைந்ததாகும்.

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் உட்பட போராட்டங்களுக்குள் நுழையும் போது, தொழிற்சங்கங்களும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி இடது கட்சிகளும் முதலாளித்துவ பாராளுமன்றத்தின் கட்டமைப்பிற்குள் தொழிலாளர்களை சிக்க வைக்க முயற்சிப்பதன் மூலம், தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்தை தடம் புரளச் செய்வதற்கு வேலை செய்கின்றன. இவை கடந்த ஆண்டு வெகுஜன எழுச்சியின் போது இதையே செய்தன. தொழிலாள வர்க்கம் தங்களின் அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்காகப் போராடும்போது, இந்த அமைப்புகளே அதற்குப் பிராதன தடையாக செயல்பட்டு வருகின்றன.

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு, கிராமப்புற உழைப்பாளிகளை அணிதிரட்டி, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன அரசியல் வெகுஜன இயக்கத்தை அபிவிருத்தி செய்வதே ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டின் நோக்கமாகும். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டமானது, தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பாகமாகும்.

தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் கிராமப்புற ஏழைகளும் சோசலிச சமத்துவக் கட்சியுடன் இணைந்து தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காக ஜனநாயகத்துக்கும் சோசலிசத்தக்குமான மாநாட்டை கட்டியெழுப்பும் பிரச்சாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

தோழர்களுக்கு நன்றி.

மேலும் வாசிக்க

மே தினம் 2023: தேசிய பேரினவாதத்துக்கும் போருக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்துக்காக!

2023 மே தினமும் போருக்கு எதிரான போராட்டமும் 

ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்காக! 

ICFI இன் இணையவழி மே தினக் கூட்டம் 2023: போருக்கு எதிராக ஓர் உலகளாவிய தொழிலாள வர்க்க இயக்கத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு முக்கிய மைல்கல்

Loading