பேரழிவு ஆயுதங்களை ஈராக் வைத்திருப்பதாக பொய் சொன்ன பத்திரிகையாளர், சீன ஆராய்ச்சியாளர்களை முதன்மையான COVID-19 நோயாளிகள் என்று கூறுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இடது: வெளிவிவகாரச் செயலர் கொலின் பவல், பிப். 5, 2003 அன்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவின் முன் ஈராக்கிய பேரழிவு ஆயுதங்கள் பற்றி தெரிந்தே பொய் சொன்னார். செப்டம்பர் 8, 2002 அன்று, ஈராக் பேரழிவு ஆயுதங்களை வைத்திருப்பதாக பொய்யாகக் கூறி மைக்கேல் கோர்டன் எழுதி, நியூயோர்க் டைம்சில் வெளிவந்த கட்டுரையின் ஸ்கிரீன்ஷாட்.

சதாம் ஹுசைன் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு அலுமினியக் குழாய்களைப் பயன்படுத்துவதாகக் கூறி, ஈராக்கில் போரைத் தொடங்க உதவிய இழிபுகழ்பெற்ற போர் பிரச்சாரகர் மைக்கேல் ஆர். கோர்டன், செவ்வாயன்று, பெயரிடப்படாத அரசாங்க ஆதாரங்களை மேற்கோள் காட்டி, உலகப் புகழ்பெற்ற வுஹான் வைராலஜி பயிலக ஆராய்ச்சியாளர்கள், கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட முதன்மையான நபர்கள் என்று கூறியுள்ளார்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வெளியிடப்பட்ட கோர்டனின் கட்டுரை, வுஹானில் உள்ள வைராலஜி பயிலக விஞ்ஞானிகள்தான் கோவிட்-19 ஐ உருவாக்கினர் என்று பாசிச சித்தாந்தவாதி ஸ்டீபன் கே. பானன் மற்றும் அவரது பணக்கார சீன கம்யூனிஸ்ட் எதிர்ப்பு கூட்டாளிகளால் கண்டுபிடிக்கப்பட்ட சதிக் கோட்பாட்டை ஊக்குவிக்க உதவியுள்ளது.

கோர்டனின் முந்தைய அறிக்கையைப் போலவே, இது, மறைந்த கன்சார்டியம் நியூஸ் பத்திரிகையாளர் ராபர்ட் பாரியின் வார்த்தைகளில் ஒரு ‘‘மைக்கேல் கோர்டன் ஸ்பெஷல்’’ ஆகும். அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு இணங்க முற்றிலும் தவறான கூற்றுக்களை விளம்பரப்படுத்த, அநாமதேய அரசாங்க அதிகாரிகளால் கூறப்படும் அறிக்கைகளைப் இது பயன்படுத்துகிறது.

டாக்டர். பீட்டர் டாஸ்ஸாக், வலது மற்றும் டாக்டர் ஷி ஜெங்லி, வௌவால் கொரோனா வைரஸ்களைப்பற்றி ஆய்வு செய்யும் இரண்டு முன்னணி விஞ்ஞானிகள், வுஹான் வைராலஜி பயிலகத்தில் படம்பிடிக்கப்பட்டது. [Photo by EcoHealth Alliance]

இந்த இழிபுகழ்பெற்ற பொய்யரின் கூற்றுகள், அமெரிக்க இணையத் தள சப்ஸ்டாக் எழுத்தாளர்களான மைக்கேல் ஷெல்லன்பெர்கர் மற்றும் மாட் தைப்பி ஆகியோரால் ஆராய்ச்சியாளர்களின் பெயரை 'உறுதிப்படுத்த' உதவியது. அவர்கள் ஆராய்ச்சியாளர்களை ''பூஜ்ய நோயாளிகள்'' என்று அழைத்தனர், அதாவது கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளிகள் என்பதாகும். வுஹான் வைராலஜி பயிலகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நோய்வாய்ப்பட்டிருப்பது குறித்து 2021 இல் கோர்டன் கூறிய கூற்றுகளின் அடிப்படையில், ஷெல்லன்பெர்கர் மற்றும் தைப்பியின் அறிக்கைகள் கட்டமைக்கப்பட்டது.

கோர்டன், ஷெல்லன்பெர்கர் மற்றும் மாட் தைப்பி ஆகியோரால் பெயரிடப்பட்ட ஆராய்ச்சியாளர்களான பென் ஹு, யூ பிங் மற்றும் யான் ஜு, இவர்கள் அனைவரும், உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியும், SARS போன்ற கொரோனா வைரஸ் நோய்க்கிருமியைக் இயற்கையாக வெளவால்கள் கொண்டிருக்கின்றன என்பதை கண்டுபிடித்தவரான ஷி ஜெங்லியுடன் நெருக்கமாக ஒத்துழைத்தவர்கள்  ஆவர்.

வுஹான் வைராலஜி பயிலகத்தில் ஹூ ஒரு முக்கியத் தலைவராக இருக்கிறார், தொற்றுநோய்களின் போது தனது சர்வதேச அறிவியல் ஒத்துழைப்பாளர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்கிறார். மூன்று ஆராய்ச்சியாளர்களில் எவரும் தாங்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக வெளிப்படையாகக் கூறவில்லை.

கோர்டன், தைப்பி மற்றும் ஷெல்லன்பெர்கர் ஆகியோரின் இந்த 'அறிக்கை' இந்த வாரம் தேசிய புலனாய்வு இயக்குனர் அவ்ரில் ஹெய்ன்ஸால் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் பொது அறிக்கைகளை முன்கூட்டியே கசிய வைக்க உதவுகிறது. இது அரசாங்கத்திற்கும் ஊடகங்களுக்கும் இடையில் பரஸ்பரம் வலுவூட்டும் கதையை முன்வைக்கும் நோக்கத்துடன் உள்ளது.

தைப்பி (முந்தைய காலத்தில் அவர் ஒரு நேர்மையான பத்திரிகையாளராக இருந்தபோது) தனது 2019 புத்தகமான ஹேட் இன்க் இல் (Hate Inc) இந்த செயல்முறையை திறமையாக விவரித்தார் :

செமோர் ஹெர்ஷ் என்ற அம்பலப்படுத்தக்காரர் மூலம், போர் தயாரிப்பாளர்கள் திறந்த வெளியில் மற்றொரு துப்புக் கொடுத்தனர். அது ‘’புகைபோக்கி’’ (stovepipe) என்று அழைக்கப்படுகிறது.

இந்த ‘’புகைபோக்கி’’ யோசனையானது, அதிகாரத்துவத்தில் மூழ்கியிருக்கும் மூல உளவுத்துறையினரின் தரவுகளுக்கான அணுகலை உயர் அதிகாரிகள் பெறுவதையும் மற்றும் பல்வேறு இணக்க அதிகாரிகள் கைக்கு வருவதற்கு முன்பே அதைத் திரும்பப் பெறுவதையும் உள்ளடக்கி இருக்கிறது. ‘’அவர்களின் நிலைப்பாடு என்னவென்றால், தொழில்முறை அதிகாரத்துவம் வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் வகையில் அவர்களிடமிருந்து தகவல்களைப் பெறுகிறது’’ என்று ஹெர்ஷ் எழுதுகிறார்.

டிக் செனி போன்றவர்களுக்கு, அலுமினியக் குழாய்களை சதாம் வாங்குகிறார் என்ற எண்ணத்தை அணுகுவதற்கு இந்த ‘’புகைபோக்கி’’ நுட்பம் வழங்கியது. இது, தீங்கு என்ற எதையும் குறிக்கிறதா அல்லது இல்லையா (அல்லது தகவல் உண்மையாக இருந்தாலும்) என்பது பற்றி அதிகாரத்துவ மறுப்பாளர்களின் ஆட்சேபனைகளைக் கேட்க வேண்டிய அவசியமில்லை.

இந்த வழியில், நியூயோர்க் டைம்ஸ் நிருபர்களான மைக்கேல் கோர்டன் மற்றும் ஜூடித் மில்லர் ஆகியோருக்கு உள் கட்டுப்பாடுகளை கடந்து தகவல் எப்படியோ அனுப்பப்பட்டது, அவர்களில் ஒருவர் இன்னும் நிறுவனத்தில் இருக்கிறார், மற்றவர் இல்லை. செப்டம்பர் 7, 2002 அன்று, “அமெரிக்காவில் ஹுசைன் ஏ-பாம்ப் பாகங்களுக்கான தேடலைத் தீவிரப்படுத்துகிறார், மற்றும் “ஈராக் அணு ஆயுதங்களுக்கான தேடலைத் தீவிரப்படுத்தியுள்ளது” என்று அவர்கள் ஒரு முக்கிய கட்டுரையை எழுதினார்கள்.

செனி அதே நாளில் மீட் தி பிரஸ் என்ற செய்தி நிகழ்ச்சிக்கு சென்று இழிவான முறையில் அந்தக் கட்டுரையை மேற்கோள் காட்டி, ''ஹுசைன் வெடிகுண்டு தயாரிக்க முயற்சித்தார் என்பது பொது அறிவு'' என்று கூறினார்.

இதேபோல், கோர்டன், தைப்பி மற்றும் ஷெல்லன்பெர்கர் ஆகியோரின் ‘’அகப்பைகளால்‘’ இந்த வாரம் DNI ஹைன்ஸ் வெளியிடும் தகவல்களை அள்ளி பொதுக் கருத்தைத் தயாரிக்க வேண்டும்.

மே 1 அன்று, ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்காவின் கேபிட்டலை தாக்கிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக முஷ்டியை உயர்த்திய செனட்டரான ஜோஷ் ஹவ்லி, 'COVID-19 தோற்றச் சட்டம் 2023' ஐ அறிமுகப்படுத்தினார்.

ஜனவரி 6 அன்று அமெரிக்க கேபிட்டலை தாக்கிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செனட்டர் ஜோஷ் ஹாவ்லி தனது முஷ்டியை உயர்த்திக் காட்டுகிறார். [Photo: January 6 Committee]

நிறுவப்பட்ட அறிவியல் ஒருமித்த கருத்துக்கு மாறாக, 'COVID-19 தொற்றுநோய் வுஹான் வைராலஜி பயிலகத்தில் தோன்றியிருக்கலாம் என்று நம்புவதற்கு காரணம் உள்ளது' என்று அந்தச் சட்டம் வலியுறுத்துகிறது.

கோர்டனின் முந்தைய அறிக்கையின் அடிப்படையில் இந்த பாசிச செனட்டரின் மசோதா, ''தேசிய புலனாய்வு இயக்குனர், கோவிட்-19 இன் தோற்றம் பற்றி முடிந்தவரை அதிகமான தகவல்களை வகைப்படுத்தி பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்’’ என்று அறிவித்தது. அத்தோடு, ‘‘2019 இலையுதிர்காலத்தில் நோய்வாய்ப்பட்ட வுஹான் வைராலஜி  பயிலகத்தின் ஆராய்ச்சியாளர்களின் பெயர்களை தெரிவிக்கவும்’’ அது கோருகிறது. 

பானனின் சதிக் கோட்பாட்டின் இந்த மறைமுகமான ஒப்புதல் காங்கிரஸில் உள்ள ஒவ்வொரு ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியினரால் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது. பின்னர் அது ஜனாதிபதி ஜோ பைடனின் மேசைக்குச் சென்றது. உடனடியாக அதில் கையெழுத்திட்ட அவர், 'இன்று, S. 619, 'COVID-19 தோற்றச் சட்டம் 2023' இல் கையெழுத்திடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்' என்று அறிவித்தார்.

'COVID-⁠19 தோற்றச் சட்டம் 2023' இயற்றப்பட்டதை ஜோ பைடன் பாராட்டினார்.

அமெரிக்க கூட்டாட்சி புலனாய்வுப் பணியகத்தின் (FBI) சதிக் கோட்பாட்டின் வெளிப்படையான ஒப்புதலைப் பின்பற்றி, இந்த மசோதா கையெழுத்திடப்பட்டது. பிப்ரவரி 28 அன்று, FBI இயக்குனர் கிறிஸ்டோபர் ரே, '[COVID-19] தொற்றுநோயின் தோற்றம் வுஹானில் ஒரு சாத்தியமான ஆய்வக சம்பவமாக இருக்கலாம்' என்று பகிரங்கமாக கூறினார்.

ஈராக்கின் 'பேரழிவு ஆயுதங்கள்' பற்றிய கோர்டனின் முந்தைய கட்டுக்கதைகளைப் போலவே, தற்போதைய பிரச்சாரத்தின் நோக்கம் சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவக் கட்டமைப்பை நியாயப்படுத்துவதாகும், இது ஒரு முழு அளவிலான போராக வெடிக்கும் என்ற அச்சுறுத்தலைக் கொடுக்கிறது.

அனைத்து தொழிலாளர்களும் இளைஞர்களும், கோவிட்-19 இலிருந்து ஒரு மில்லியன் அமெரிக்கர்களின் மரணத்திற்கு சீனா மற்றும் முன்னணி விஞ்ஞானிகளை பலிகடா ஆக்குவதற்கு பைடென் நிர்வாகம் மற்றும் அமெரிக்க ஊடகங்களால் ஊக்குவிக்கப்படும் இனவாத பொய்களை நிராகரிக்க வேண்டும். டிரம்ப் மற்றும் பைடென் ஆகிய இருவரின் கீழ் பொது சுகாதாரத்தை தனியார் லாபத்திற்கு அடிபணியச் செய்த காரணத்தினாலேயே இந்த மரணங்கள் ஏற்பட்டன.

Loading