முன்னோக்கு

யூத எதிர்ப்புவாதமும், சீன-விரோத இன வாதமும்: ரோபரட் எஃப் கென்னடி ஜூனியர் விவகாரம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

அதிபர் பைடெனை எதிர்த்து ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிடும் ரோபர்ட் எஃப். கென்னடி ஜூனியர், கடந்த வாரம் மன்ஹாட்டனில் ஓர் உயர்தர உணவகத்தில் உணவருந்தி கொண்டிருந்த போது, கோவிட்-19 இன் தோற்றுவாய்கள் மீதான பாசிச உணர்வுகளுக்குக் குரல் கொடுத்தார். நியூ யோர்க் போஸ்டில் சனிக்கிழமை வெளியான ஒரு செய்தியின்படி, உலகளாவிய பெருந்தொற்றுக்குக் காரணமாக உள்ள இந்த வைரஸால் யூதர்களும் சீனர்களும் குறைவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, இது வேண்டுமென்றே மரபணு மாற்றம் செய்யப்பட்டதன் விளைவாக இருக்கலாம் என்று கென்னடி கூறி இருந்தார்.

நவம்பர் 13, 2021, சனிக்கிழமை, இத்தாலியின் மிலனில், கோவிட்-19 தடுப்பூசிக்கு எதிராக ரோபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காட்சி. [AP Photo/Antonio Calanni]

அந்தப் பத்திரிகையின் இணையத் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட, அவர் கருத்துக்களின் பதிவு செய்யப்பட்ட இரண்டு நிமிட காணொளியில் அவர் கூறுகிறார், “உண்மையில், கோவிட்-19 ஐ வைத்து இனரீதியில் இலக்கு வைக்கப்பட்டதாக ஒரு சர்ச்சை உள்ளது. கோவிட்-19, குறிப்பிட்ட இனங்களைத் தாக்குவதில் விகிதாச்சார வித்தியாசம் உள்ளது,” என்று கூறுவதைக் கேட்க முடிகிறது. இந்த வைரஸின் “மரபணு அமைப்பின்” காரணமாக, “கோவிட்-19, காகசியர்கள் மற்றும் கருப்பின மக்களை இலக்கு வைத்துத் தாக்குவதாக வாதிட்ட கென்னடி, “அஷ்கெனாசி யூதர்கள் (Ashkenazi Jews) மற்றும் சீனர்கள் அதிக நோயெதிர்ப்பு சக்தி கொண்டிருக்கிறார்கள்,” என்றார். இத்தகைய எந்த வாதத்தையும் முன்வைக்காத ஜூலை 2020 விஞ்ஞான ஆய்வறிக்கை ஒன்றையும் அவர் மேற்கோளிட்டார்.

அமெரிக்க சக விஞ்ஞானிகளுடன் சேர்ந்து வூஹான் நுண்கிருமியில் பயிலகத்தின் சீன விஞ்ஞானிகளால் வெளியிடப்பட்ட கோவிட்-19, மனிதர்களால் உருவாக்கப்பட்ட வைரஸாகும் என்ற சதிக் கோட்பாட்டுக்கு கென்னடி ஓர் ஆதரவாளர் ஆவார். கிறிஸ்துவர்களைக் கொல்ல, சீன ஆராய்ச்சியாளர்கள் மற்றும் யூத அமெரிக்க விஞ்ஞானிகளால் ஓர் உயிரி ஆயுதமாக இந்த நோய் உருவாக்கப்பட்டது என்பதே கென்னடி கருத்தின் உள்நோக்கமாக உள்ளது.

கென்னடி கருத்தில் ஓர் ஆழமான வரலாற்று ஒத்திசைவு உள்ளது. முதன்முதலில் இடைக்காலத்தில் இருந்து கதைகதையாகக் கூறப்பட்டு வந்துள்ள, யூதர்களுக்கு எதிராக “இரத்தம் சிந்திய அவதூறு பரப்பல்” (blood libel) உடனான ஒப்பீட்டை அது தாங்கி நிற்கிறது. யூதர்களுக்கு எதிரான படுகொலைகளை நியாயப்படுத்தவும், பின்னர் ஐரோப்பாவில் யூத மக்களைக் கொன்று குவிக்க நாஜிக்கள் மேற்கொண்ட இனப்படுகொலை நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும், “சீயோன் சிந்தனையாளர்கள் வகுத்த நெறிமுறைகள்” (Protocols of the Elders of Zion) என்ற ரஷ்ய ஜாரிசத்தின் இட்டுக்கட்டலை இத்தகைய பொய்கள் புதுப்பிக்கின்றன.

2021 இல் உலக சோசலிச வலைத் தளம் பிரசுரித்த ஒரு முன்னோக்கு, யூத எதிர்ப்புவாத இரத்தப் புரளியுடன் அதன் சமாந்தரங்களை மேற்கோளிட்டு, இந்த சதிக் கோட்பாட்டை “வூஹான் ஆய்வகம் மீதான புரளி” என்று விவரித்தது.

கென்னடியின் இனவெறி சதிக் கோட்பாட்டை, வூஹான் சிந்தனையாளர்கள் வகுத்த நெறிமுறைகள் என்று கூற வேண்டியிருக்கும் — இது “மஞ்சள் அபாயம்” (yellow peril) இக்கு எதிரான அமெரிக்க பூர்வீக விஷமப் பிரச்சாரமும் யூத எதிர்ப்புவாதமும் கலந்த குரூர கலவையாகும். சீன ஆய்வகக் கசிவு “கோட்பாட்டின்” போலி-விஞ்ஞானம், நோயெதிர்ப்பு சக்தியோடு இருந்த யூதர்கள் கருப்பினத்தவரின் மரணங்களுக்குக் காரணம் என்ற இடைக்கால கட்டுக்கதையோடு கலந்து விடப்படுகிறது.

யதார்த்தத்தில், வட அமெரிக்காவில் மிக அதிக யூத மக்களைக் கொண்டுள்ள நியூயோர்க் நகரம் தான், கோவிட்-19 இன் முதல் அலையில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நகரமாக இருந்தது. பாரியளவில் வெகுஜனங்களுக்கு மேற்கொண்ட பரிசோதனைகள், நோயின் தடம் அறிதல் மற்றும் தனிமைப்படுத்தல் ஆகியவற்றின் மூலம் இரண்டாண்டுகளுக்கும் அதிகமாக இந்தப் பெருந்தொற்றில் இருந்து பெரிதும் தப்பித்து இருந்த சீனா, அமெரிக்கா உட்பட உலக ஏகாதிபத்தியங்களது அழுத்தத்தின் கீழ் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையைக் கைவிட்டதில் இருந்து எட்டு மாதங்களில் மரணகதியான உயிரிழப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

கென்னடியை எங்கோ ஓர் ஓரத்தில் இருக்கும் சதிக் கோட்பாட்டுவாதி என்றோ அல்லது நிதானம் இழந்திருக்கிறார் என்றோ உதாசீனப்படுத்தி விட முடியாது. அவர் அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள் உள்ள சக்தி வாய்ந்த போக்குகளுக்கு வெளிப்பாட்டைக் கொடுக்கிறார். ரஷ்யாவுக்கு எதிராக விரிவாக்கப்பட்டு ஏகாதிபத்திய போர் நிலைமைகளின் கீழ், மற்றும் சீனாவுக்கு எதிரான இன்னும் பரந்த இன்னும் அதிக அபாயகரமான போருக்கான தயாரிப்புகள் செய்யப்பட்டு வரும் நிலைமைகளின் கீழ், அமெரிக்க ஆளும் உயரடுக்கு, அமெரிக்காவின் நீண்ட வரலாற்றில் உள்ளடங்கி உள்ள பாசிச உணர்வுகளுக்கு, அதாவது யூத-எதிர்ப்புவாதம், இனவாதம், சீன-விரோத வெறி ஆகியவற்றை வேண்டுமென்றே முடுக்கி விட்டு வருகிறது.  

இது, சீனாவை நோக்கிய இனவாதம் மற்றும் புலம்பெயர்வோரை நோக்கிய வெறுப்புணர்ச்சியைத் தூண்டி விடுவதில் ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சி வகிக்கும் பாத்திரத்தையே மிஞ்சி விடுகிறது. ஜனநாயகக் கட்சி தரப்பில் அணி சேர்ந்துள்ள முன்னணி பத்திரிகைகளான நியூ யோர்க் டைம்ஸூம் வாஷிங்டன் போஸ்டும் வூஹான் ஆய்வகப் பொய்யைப் பரப்புவதில் முன்னணியில் உள்ளன. SARS-CoV-2 வூஹான் நுண்கிருமியியல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு, பின்னர் உலகெங்கிலும் நோய்தொற்று ஏற்படுத்தும் விதத்தில் பரவ விடப்பட்டது என்ற இந்த வலதுசாரி சதிக் கோட்பாட்டை, முதலில் ட்ரம்பின் பாசிசவாத ஆலோசகர் ஸ்டீவ் பானன் தான் வெளிப்படுத்தினார்.

அமெரிக்க தேர்தல் நிகழ்முறையில் “ரஷ்ய தலையீடு” இருந்ததாக அந்தக் கட்டுக்கதையையும் அவை விடாமல் பரப்பின. அதேவேளையில் ஜனநாயகக் கட்சி ட்ரம்பின் பிற்போக்குத்தனமான நிர்வாகம் மீதான மக்கள் வெறுப்பை மாஸ்கோவில் புட்டின் ஆட்சிக்கு எதிரான பிரச்சாரத்தில் திருப்பி விட முயன்றது. இது உக்ரேனில் இப்போது நடத்தப்பட்டு வரும் அமெரிக்க-நேட்டோ பினாமி போருக்கு வழி வகுத்தது.

அந்தப் போரில், பைடென் நிர்வாகமும் ஒட்டுமொத்த பெருநிறுவன ஊடகங்களும், உக்ரேன் படைகளுக்கு அசொவ் ஆயுதப்படை போன்ற நவ-நாஜிக்களுடன் தொடர்பு இருப்பதையும், இப்போது கியேவ் ஆட்சியால் தேசிய மாவீரர்களாக புகழப்படும் ஸ்டபன் பண்டேரா மற்றும் பிற உக்ரேனிய பாசிசவாதிகளின் தரப்பில் யூத இனப்படுகொலைக்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்பையும் மறைத்து, முறையாக திட்டமிட்டு ஒரு பாசிசவாத வாய்வீச்சை வழங்கி வருகின்றன.

கடந்த வாரம் நேட்டோ உச்சி மாநாடு ஆத்திரமூட்டும் விதத்தில் ரஷ்ய எல்லையில் இருந்து மிகக் குறைந்த தூரத்தில் மட்டுமே உள்ள லிதுவேனியாவின் வில்னியஸில் நடத்தப்பட்டது. இந்த நாடு இப்போது, ஹிட்லருடன் லிதுவேனிய பாசிச ஒத்துழைப்புவாதிகளாக இருந்தவர்களின் அரசியல் வாரிசுகளால் ஆளப்படுகிறது. இந்த ஒத்துழைப்புவாதிகள், யூதர்களை அழித்தொழிக்கும் அவர்கள் ஆர்வத்தில் கெஸ்டாபொவுடன் போட்டிபோட்டு செயல்பட்டார்கள். அங்கே கூடிய நேட்டோ தலைவர்கள், அவர்கள் உச்சி மாநாடு நடத்தும் அந்த நகரம் யூத இனப்படுகொலையின் மையப் புள்ளியாக இருந்தது என்ற உண்மையைக் குறித்து வாய் திறக்கவில்லை.

எழுத்தாளர் கிறிஸ் ஹெட்ஜஸ் மற்றும் பத்திரிக்கையாளர் க்ளென் கிரீன்வால்ட் உட்பட, போலி-இடதுகளுடன் அணி சேர்ந்துள்ள பல்வேறு நபர்கள் தொடங்கிய “இடது-வலது கூட்டணிக்கான” பிரச்சாரத்தின் திவாலான மற்றும் பிற்போக்குத்தனமான தன்மையைக் கென்னடியின் ஆவேசப் பேச்சு எடுத்துக்காட்டுகிறது. அவர்கள் யூதர்கள் மற்றும் சீனர்கள் குறித்த கென்னடியின் கருத்துக்களைத் தனிப்பட்ட முறையில் வேண்டுமானால் வெறுக்கலாம், ஆனால் கென்னடி அவரது ஜனாதிபதி பிரச்சாரத்தைத் தொடங்கிய பின்னர் க்ரீன்வால்ட் கென்னடியுடன் ஓர் அனுதாப நேர்காணலை நடத்தினார். அது கட்டாய தடுப்பூசி முறைக்கும் மற்றும் பிற கோவிட் தணிப்பு நடவடிக்கைகளுக்கும் அவர் காட்டிய எதிர்ப்பின் மீது கணிசமான கவனத்தைக் கொடுத்தது.

நீண்ட கால தடுப்பூசி-எதிர்ப்பு பிரச்சாரகரான கென்னடி, குழந்தைப் பருவ நோய்களைத் தடுப்பதற்கான அடிப்படை தடுப்பூசிகளோடு ஆட்டிசத்தின் அதிகரிப்பை இணைத்துக் காட்டி அரசியல் ரீதியில் குற்றகரமான ஒரு முயற்சியில் அவரது நிதி ஆதாரங்களைப் பயன்படுத்தி உள்ளார். ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஆவதற்கான அவர் முயற்சியை அரவணைப்பதில் இருந்து, இது எதுவுமே, “இடது-வலது கூட்டணியை” ஊக்குவிப்பவர்களைத் தடுத்து விடவில்லை. ஈராக் போரின் ஓர் எதிர்ப்பாளரான, ஜனநாயகக் கட்சியின் முன்னாள் பிரதிநிதி டென்னிஸ் குசினிச் அவருடைய பிரச்சார நிர்வாகியாக உள்ளார். ரோபர்ட் எஃப். கென்னடியின் மகன் மற்றும் ஜோன் எஃப். கென்னடியின் ஒன்றுவிட்ட மகன் என்ற முறையில், அவர் பெயர் பரவலாக அறியப்பட்டதாக இருந்தாலும், பொதுமக்கள் மத்தியில் ஆரம்பத்தில் நம்பகத்தன்மை இருந்தாலும், அவருடைய ஆழ்ந்த பிற்போக்குத்தனமான கண்ணோட்டத்துடன் அவர்கள் பரிச்சயமின்றி உள்ளனர்.

இந்த அருவருப்பான வெளிப்பாட்டுக்குப் பெருநிறுவன ஊடகங்களின் விடையிறுப்பு குறிப்பிடத்தக்களவில் குறைவாகவே உள்ளது. இந்தப் போட்டியில் இருந்து கென்னடியை வெளியேற்றும் விதத்தில், ஒரு தகுதி இழந்தவராக அவை கையாளவில்லை.

சாதனை கால பத்திரிகையாக கூறப்படும் நியூ யோர்க் டைம்ஸின் மேலோட்டமான செய்தியாக இருப்பது குறிப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும். பெரும் எண்ணிக்கையிலான யூத வாசகர்கள் கென்னடியின் கருத்துக்களைப் படிக்கும் போது அவர்கள் சந்தேகத்திற்கிடமின்றி கவலையும் வெறுப்பும் அடைவார்கள். டைம்ஸ் பத்திரிகையில் முதலில் பதிவிடப்பட்ட போது, அது “ரோபர்ட் எஃப். கென்னடி ஜூனியரின் கோவிட் பற்றிய கருத்துக்கள் யூத-எதிர்ப்புவாத கேள்விகளை எழுப்புகின்றன,” என்றிருந்தது. யூதர்கள் தவிர்த்து விட்டு கோவிட் “இலக்கு வைக்கப்பட்டது” என்ற வலியுறுத்தலை வைத்துப் பார்த்தால், என்ன “கேள்விகள்” எஞ்சியிருக்கும் என்று ஒருவர் கேட்கலாம். வெளியில் இருந்தும் உள்ளே இருந்தும் எதிர்ப்புகள் வந்திருக்கலாம் என்பதால், அதற்குப் பின்னர் தான் அந்தத் தலைப்பு, “ரோபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் ஏர்ஸ், யூதர்கள் மற்றும் சீனர்கள் குறித்த புதிய கோவிட் சதிக் கோட்பாட்டை கிளறி விடுகிறார்,” என்று மாற்றப்பட்டிருந்தது.

கென்னடியின் கருத்துக்கள், போர்க் காலக்கட்டத்தில் முதலாளித்துவ அரசியல் குறித்த மிகவும் பொதுவான ஒரு கூற்றை எடுத்துக்காட்டுகின்றன. ஏகாதிபத்திய போர், தவிர்க்க முடியாமல் யூத-எதிர்ப்புவாதம் உட்பட, சித்தாந்தப் பிற்போக்குத்தனத்தின் மிக மோசமான வடிவங்களை உள்ளடக்கி உள்ளது. வாழ்வாதார நிலைமைகள், ஜனநாயக உரிமைகள் மற்றும் மனித உயிர்களைத் தியாகம் செய்ய வைப்பதற்காகவும், போர் மற்றும் அதன் எல்லா விளைவுகளுக்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தின் தவிர்க்கவியலாத எதிர்ப்பைத் திசைதிருப்பி பிளவுபடுத்தவும், அதற்கு “எதிரி” மீது மக்கள் வெறுப்பை வளர்க்க வேண்டியிருக்கிறது.

நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணமான இடைமருவு வேலைத்திட்டத்தில் லியோன் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:

மனிதகுலத்தின் இரத்தத்தை உறிஞ்சுவதற்கு முன்னர் அல்லது அதை இரத்தத்தில் மூழ்கடிப்பதற்கு முன்னர், முதலாளித்துவம், தேசிய மற்றும் இன வெறுப்பெனும் நச்சு வாயுவை உலகச் சுற்றுச்சூழலில் கலந்து விடுகிறது. இன்று யூத-எதிர்ப்புவாதமானது, முதலாளித்துவ மரண ஓலத்தின் மிகவும் பலமான அதிர்வுகளில் ஒன்றாகும்.

இனரீதியான தப்பெண்ணத்தின் வேர்களையும் மற்றும் தேசிய ஆணவம் மற்றும் பேரினவாதத்தின் அனைத்து வடிவங்களையும் மற்றும் சாயல்களையும் சமரசமின்றி அம்பலப்படுத்துவது, நான்காம் அகிலத்தின் அனைத்து பிரிவுகளின் அன்றாட வேலைகளின் பாகமாகவும், அதேவேளையில் ஏகாதிபத்தியம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தின் மிக முக்கிய பாகமாகவும் இருக்க வேண்டும். உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! என்பதே நம் அடிப்படை முழக்கமாகும்.