சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்

பப்லோவாதத்திற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டமும், OCI இன் மத்தியவாதமும், ICFI க்கு உள்ளே எழுந்த நெருக்கடியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பின்வருவது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரெஞ்சுப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l'égalité socialiste - PES) உறுப்பினர் சாமுவேல் ரிஸ்ஸோட் (Samuel Tissot) மற்றும் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleichheitspartei - SGP) முன்னணி உறுப்பினரான பீட்டர் சுவா்ர்ட்ஸ் (Peter Schwarz) ஆகியோரால் வழங்கப்பட்ட விரிவுரையாகும். இந்த விரிவுரை, ஜூலை 30, 2023 இல் இருந்து ஆகஸ்ட் 4, 2023 வரை நடத்தப்பட்ட அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் சர்வதேச கோடைப் பள்ளியில் வழங்கப்பட்டது.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவருமான டேவிட் நோர்த்தின் ஆரம்ப அறிக்கையான, “ஏகாதிபத்திய போரும் சோசலிசப் புரட்சியுமான சகாப்தத்தில் லியோன் ட்ரொட்ஸ்கியும், சோசலிசத்திற்கான போராட்டமும்” ஆகஸ்ட் 7 இல் வெளியிடப்பட்டது. இரண்டாவது விரிவுரையான, “நான்காம் அகிலத்தின் வரலாற்று, அரசியல் அடித்தளங்கள்” ஆகஸ்ட் 14 இல் வெளியிடப்பட்டது. மூன்றாவது விரிவுரையான, “பப்லோவாத திருத்தல்வாதத்தின் தோற்றமும், நான்காம் அகிலத்திற்குள் உடைவும், அனைத்துலகக் குழுவின் ஸ்தாபிதமும்” ஆகஸ்ட் 18 இல் பிரசுரிக்கப்பட்டது. நான்காவது விரிவுரையான, “கியூபப் புரட்சியும், கோட்பாடற்ற 1963 பப்லோவாத மறுஐக்கியத்திற்கு SLL இன் எதிர்ப்பும்” என்பது ஆகஸ்ட் 25 இல் பிரசுரிக்கப்பட்டது. ஐந்தாவது விரிவுரையான “சிலோனில் ’மாபெரும் காட்டிக்கொடுப்பும்’, நான்காம் அகிலத்திற்கான அமெரிக்கக் குழுவின் உருவாக்கமும், வேர்க்கர்ஸ் லீக் ஸ்தாபிதமும்” என்பது ஆகஸ்ட் 30 இல் பிரசுரிக்கப்பட்டது.

அனைத்து விரிவுரைகளும் உலக சோசலிச வலைத் தளத்தில் வரவிருக்கும் வாரங்களில் வெளியிடப்படும்.

பப்லோவாதத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் போராட்டங்கள் குறித்து இந்தப் பள்ளியின் முந்தைய விரிவுரைகளில் வலியுறுத்தப்பட்டதைப் போலவே, இந்த விரிவுரையில் மீளாய்வு செய்யப்படும் கருத்துருக்களும், வெறுமனே அருவமான தவறான கருத்துக்கள் மட்டுமல்ல. மாறாக, குறிப்பிட்ட வர்க்க நலன்களை வெளிப்படுத்திய அவை, மிகத் துல்லியமான புறநிலை வரலாற்று நிலைமைகளின் கீழ் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மேல் அழுத்தங்களை உருவாக்கின.

ஆனால் அனைத்துலகக் குழுவின் இந்தக் காலகட்ட வரலாறை மீளாய்வு செய்வது, 1963 இல் சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) பப்லோவாதிகளுடன் கோட்பாடின்றி மறுஐக்கியம் செய்து கொண்டதற்கும் பின்னர், ட்ரொட்ஸ்கிச இயக்கம் எதிர்கொண்ட சாதகமற்ற அகநிலை காரணிகளைப் புரிந்து கொள்வதற்கு இது முக்கியமாக உள்ளது.

1960 களின் நடுப்பகுதியில், பிரிட்டனில் சோசலிச தொழிலாளர் கழகமும் (SLL) மற்றும் பிரான்சில் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பும் (OCI) அனைத்துலகக் குழுவின் (IC) எஞ்சியிருந்த இரண்டு முக்கிய பிரிவுகளாக இருந்தன. இந்த நேரத்தில் அவை ஒரு குறிப்பிடத்தக்க தேசியளவிலான வளர்ச்சியை அனுபவிக்கத் தொடங்கி இருந்தன என்றாலும், இது சர்வதேசரீதியான வெற்றிகளுடன் இணைந்திருக்கவில்லை.

இது குறிப்பிடத்தக்களவில் தேசியவாத அழுத்தங்கள் அதிகரிப்பதற்கு வழிவகுத்தது. பிரிட்டிஷ் முதலாளித்துவத்தை வெற்றிகரமாக தூக்கியெறிவதன் ஒரு துணை விளைவாக சர்வதேச புரட்சியைப் கருதுவது, SLL தலைவர் ஜெர்ரி ஹீலிக்கு 1966 இல் சாத்தியமாக இருந்தது. அவர் பின்வருமாறு எழுதினார்:

தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டு வரும் பாரிய புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்பும் ஒரு மகத்தான பொறுப்பை சோசலிச தொழிலாளர் கழகம் இப்போது அதன் தோள்களில் சுமந்துள்ளது. இதைச் செய்வதன் மூலம், இது போன்ற கட்சிகளை இதே விதத்தில் கட்டியெழுப்புவதற்கு அனைத்து நாடுகளின் புரட்சியாளர்களுக்கும் இது தூண்டுதலாக இருக்கும். [1]

ஜெர்ரி ஹீலி

இதற்குள், தேசிய பிரிவுகள் மீதான அனைத்துலகக் குழுவின் மேலாண்மையை அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவு தலைமையும் நிராகரிக்க இருந்ததை அடுத்தடுத்த நிகழ்வுகள் எடுத்துக்காட்ட இருந்தன.

மேலும், ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் பப்லோவாதம் பற்றிய கேள்வி, 1963 உடைவின் போது தீர்க்கப்படவில்லை. ஏகாதிபத்தியத்தின் குட்டி-முதலாளித்துவ முகவர்களான, அதாவது பெயரிட்டு கூறினால், சமூக ஜனநாயக, முதலாளித்துவ தேசியவாத மற்றும் ஸ்ராலினிச அரசியல் சக்திகள் தொழிலாள வர்க்கத்தின் மீது மேலாதிக்கம் செலுத்தி வந்ததனூடாக பப்லோவாதம் வெளிப்படுத்திய வர்க்க அழுத்தங்கள் அப்போது எல்லா இடங்களிலும் இருந்தன. பப்லோவாதிகளுடனான மறுஐக்கியத்திற்கு எதிராக அனைத்துலகக் குழு போராடி வந்த போதும், இத்தகைய முக்கியமான தொழிலாள வர்க்க விரோத சக்திகள் தொடர்ந்து அனைத்துலகக் குழுவுக்கு அழுத்தமளித்தன.

1960 களின் போது, பியர் லம்பேர் (Pierre Lambert) தலைமையில் இருந்த OCI, பப்லோவாதத்திற்கு எதிரான தத்துவார்த்த மற்றும் அரசியல் போராட்டத்தில் அது முன்னர் வகித்து வந்த செயலூக்கமான பாத்திரத்தில் இருந்து பின்வாங்கியது. 1963 இல் மறுஐக்கியத்தை எதிர்ப்பதில் அது சரியாகவே SLL உடன் பக்கபலமாக இருந்த போதும், அனைத்துலகக் குழுவின் நெருக்கடியின் போது பப்லோவாதிகளுக்கு எதிரான தத்துவார்த்த போராட்டத்தில் அது எந்த பங்களிப்பும் செய்யவில்லை.

இது, அதற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்னர் பப்லோவாதத்திற்கு எதிரான முதல் சர்வதேசப் போராட்டத்தில் வகித்த பங்கிற்கு எதிர்முரணாக இருந்தது. 1951 இல் பிரெஞ்சு பிரிவின் பெரும்பான்மையினரால் பப்லோ வெளியேற்றப்பட்ட பின்னர், OCI இன் முன்னோடி அமைப்பான சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சி (Parti communiste internationaliste - PCI) என்று அழைக்கப்பட்டதன் தலைவர் மார்செல் பிளைப்துறூ (Marcel Bleibtreu) தான், பப்லோவை எல்லா இடத்திலும் எதிர்ப்பதற்கான ஆவணங்களை முதன்முதலில் உருவாக்கினார்.

மார்செல் பிளைப்துறூ

இறுதியில், 1970 களில், பிரெஞ்சு தொழிற்சங்கங்களின் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாள வர்க்க உறுப்பினர்களிடையே மேலாளுமை செலுத்தி வந்த ஸ்ராலினிச அதிகாரத்துவங்களுக்கும் மற்றும் பிரெஞ்சு சமூக ஜனநாயகத்திற்கும் இடையிலான கூட்டணியின் அழுத்தத்திற்கு OCI சரணடைந்தது. இந்த சக்திகள் 1971 இல் பெருவணிகத்தின் ஆதரவுடன் சோசலிஸ்ட் கட்சியை (PS) நிறுவின. இதை “இடதுகளின் ஐக்கியம்” (union of the left) என்ற தேர்தல் கூட்டணியின் பாகமாக OCI ஆதரித்தது.

சோசலிஸ்ட் கட்சி (PS) பின்னர் பிரெஞ்சு முதலாளித்துவ அரசுக்குத் தலைமை ஏற்றபோது, OCI உறுப்பினர்களில் பலர் சோசலிஸ்ட் கட்சியின் முன்னணி பதவிகளை ஏற்க இருந்தனர். இவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவராக இருந்த லியோனெல் ஜோஸ்பன் (Lionel Jospin), பின்னர் பிரெஞ்சு பிரதம மந்திரியாக சேவையாற்ற இருந்தார். 2023 இல் பிரெஞ்சு போலி-இடதின் முன்னணி பிரமுகராக உள்ள ஜோன் லூக் மெலென்சோனும் இந்தக் காலகட்டத்தில் தான் OCI இல் இணைந்தார்.

1968-1975 புரட்சிகர நிலைமை

OCI இன் மத்தியவாத சீரழிவு முக்கியமாக தனிநபர் அரசியல் தவறுகள் அல்லது குறைபாடுள்ள ஆளுமைகளின் விளைவல்ல, மாறாக அது இந்தக் காலகட்டத்தில் எழுந்த பாரிய போராட்டங்களுக்கு அக்கட்சி அரசியல்ரீதியில் தயாரிப்பின்றி இருந்ததன் விளைவாக இருந்தது.

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து (1944-1953) ஐரோப்பா புரட்சிகரப் போராட்டங்களின் பிடியில் இருந்த பின்னர், அதைத் தொடர்ந்து ஒரு பிற்போக்கு காலகட்டம் வந்தது. 1968 மற்றும் 1975 க்கு இடையே, பிரான்சிலும் சர்வதேச அளவிலும் பாரியளவில் புரட்சிகர போராட்டங்களின் ஓர் அலை உருவானது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உடனடியாக நடந்த போராட்டங்களில் நிகழ்ந்ததைப் போலவே, ஸ்ராலினிச அதிகாரத்துவமும் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளின் குட்டி-முதலாளித்துவ ஏகாதிபத்திய முகவர்களும் வகித்த துரோகத்தனமான பாத்திரத்தால், முதலாளித்துவ வர்க்கத்தால் உயிர் பிழைக்க முடிந்தது.

இந்த காலகட்டத்தில், 1968 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தம்; வியட்நாம் போருக்கு எதிரான பாரிய இயக்கம் மற்றும் நிக்சன் நிர்வாகத்தின் வீழ்ச்சி; கிரீஸ், போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயினில் பாசிச சர்வாதிகாரங்களின் வீழ்ச்சி; செக்கோஸ்லோவாக்கியாவில் ஸ்ராலினிச ஆட்சிக்கு எதிரான பிராக் வசந்தம் (Prague Spring); பிரிட்டனில் ஹீத்தின் பழமைவாத கட்சி அரசாங்கத்தின் வீழ்ச்சி; மேற்கு ஜேர்மன் மாணவர் இயக்கம்; ஆஸ்திரேலியாவில் கான்பெர்ரா ஆட்சிக்கவிழ்ப்பு சதி; அமெரிக்கா ஆதரவுடன் பினோசே ஆல் அலெண்டே இரத்தக்களரியாக பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட நிகழ்வு; டாலர் நெருக்கடி மற்றும் பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தத்தின் முடிவு ஆகியவை நிகழ்ந்தன.

பிராக் வசந்தத்தின் போது ஒரு சோவியத் டாங்கியை எதிர்ப்பாளர்கள் கட்டுப்பாட்டில் எடுத்திருந்த காட்சி [Photo: WikiMedia Commons]

இந்த புறநிலை சூழ்நிலையில், ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு மிகப் பெரியளவில் வாய்ப்புகள் இருந்தன என்றாலும், அதேயளவுக்குத் தொழிலாள வர்க்க விரோத அழுத்தங்களும் இருந்தன. இது, திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தின் படிப்பினைகளை (குறிப்பாக பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தை) உள்ளீர்த்துக் கொள்வதை முக்கிய அரசியல் கேள்வியாக ஆக்கியது.

மே 1968 இல் பிரான்சில் பப்லோவாதிகள் குற்றகரமான தொழிலாள வர்க்க-விரோத அரசியல் பாத்திரம் வகித்தனர். அந்தப் புரட்சிகரப் போராட்டத்தின் போது தொழிலாள வர்க்கத்தின் மீது ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள் மேலாளுமை கொண்டிருந்தமை முக்கிய அரசியல் பிரச்சினையாக இருந்த நிலையில், இது இளைஞர்களின் தீவிர இயக்கத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகாமல் இருப்பதை அலென் கிறிவின் (Alain Krivine) இன் புரட்சிகர கம்யூனிஸ்ட் இளைஞர் அமைப்பும் (Jeunesse communiste révolutionnaire - JCR) மற்றும் பியர் ஃபிராங் (Pierre Frank) இன் பப்லோவாத PCI உம் உறுதிப்படுத்தி வைத்தன.

மாறாக, மாணவர்களை ஒரு புதிய புரட்சிகர முன்னணிப் படை என்று அறிவித்து, காஸ்ட்ரோயிசம் மற்றும் மாவோயிசத்தின் மீது பிரமைகளை ஊக்குவித்தனர். ஸ்ராலினிஸ்டுகள் நிர்வகித்த தொழிலாளர்களின் பொதுக் கூட்டமைப்பு (CGT) அல்லது பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) ஆகியவற்றின் அரசியல் மேலாதிக்கத்தை அச்சுறுத்தாத விதத்தில், மாணவர்களை அவர்கள் தொடர்ச்சியாக பல சாகச நடவடிக்கைகளுக்கு இட்டுச்சென்றனர்.

இந்த நேரத்தில், இத்தகைய தொழிலாள வர்க்க விரோத சக்திகளின் பிற்போக்குத்தனமான பாத்திரத்தை அம்பலப்படுத்தி, ஸ்ராலினிச மேலாதிக்கத்தில் இருந்து தொழிலாளர்களை முறித்து கொள்ள செய்வதற்கான விட்டுக்கொடுப்பற்ற அரசியல் போராட்டமே, அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவாக இருந்த OCI எதிர் கொண்டிருந்த முக்கிய பிரச்சினையாக இருந்தது.

சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) மே 1968 க்கு துல்லியமாக ஓராண்டுக்கு முன்னர் OCI ஐ பின்வருமாறு எச்சரித்தது:

வளர்ச்சியின் இத்தகையதொரு கட்டத்தில், ஒரு புரட்சிகரக் கட்சி தொழிலாள வர்க்கத்தில் இருந்த நிலைமைக்கு ஒரு புரட்சிகர வழியில் விடையிறுக்காமல், மாறாக பழைய தலைமைகளின் கீழ் தொழிலாளர்களின் சொந்த அனுபவத்தினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ள போராட்ட மட்டத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வது, தவிர்க்கவியலாமல் ஆரம்ப குழப்ப நிலைக்கு இட்டுச் செல்லும் ஓர் அபாயத்தை எப்போதுமே கொண்டுள்ளது. சுயாதீனமான ஒரு கட்சிக்காகவும் மற்றும் இடைமருவு வேலைத்திட்டத்திற்கானதுமான போராட்டத்தில் செய்யப்படும் இத்தகைய திருத்தல்கள், வழமையாக, தொழிலாள வர்க்கத்தினை நோக்கி நெருங்கிச் செல்வதற்காக என்றும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவருடனும் ஐக்கியப்படுவதற்காக என்றும், வறட்டுவாதத்தைக் கைவிடுவதற்காக என்றும் இன்னும் பிற காரணங்களுக்காகவும் என்ற வேஷத்தில் மூடிமறைக்கப்படுகின்றன. [2]

அப்படியானால் அந்த நேரத்தில் போராட்டத்தின் நிலை என்னவாக இருந்தது? சர்வதேச சூழ்நிலையின் இரண்டு முக்கியமான காரணிகள், அனைத்துலகக் குழுவின் மீது மிகப் பெரியளவில் குட்டி-முதலாளித்துவ அழுத்தத்தை உருவாக்கின. முதலாவது, பெருந்திரளான உழைக்கும் மக்கள் மீது அப்போது ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்கள் அரசியல் ரீதியில் மேலாதிக்கம் கொண்டிருந்தன. இரண்டாவதாக, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும், பாரியளவில் இடதை நோக்கி திரும்பிய ஒரு நடுத்தர வர்க்க இளைஞர் இயக்கம் எழுந்திருந்தது.

இதன் அர்த்தம் என்னவென்றால், இந்த காலகட்டத்தில், தீவிரமயப்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சேர்க்கப்பட்டமை தான் OCI இன் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது. இது குட்டி-முதலாளித்துவ அழுத்தத்தை உருவாக்கியது. இது, தத்துவார்த்த மற்றும் வேலைத்திட்ட பிரச்சினைகளைத் தெளிவுபடுத்துவதற்கான ஒரு தொடர்ச்சியான போராட்டத்தின் மூலமாக மட்டுமே தீர்க்கப்படக்கூடியதாகும்.

1967-1969 மேற்கு ஜேர்மன் மாணவர் இயக்கத்தின் உச்சக்கட்டத்தில் நடந்த ஒரு பேரணி [Photo: WikiMedia Commons]

அந்த நேரத்தில், இந்த இளைஞர்கள் பெரிதும் பிராங்ஃபேர்ட் பள்ளியின் தத்துவங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டடிருந்தனர். அதுவும் குறிப்பாக, அகநிலைவாத சித்தாந்த மெய்யியல்வாதியும் நாஜி ஆதரவாளருமான மார்ட்டின் ஹைடெக்கரால் (Martin Heidegger) பயிற்றுவிக்கப்பட்டு இருந்த ஹன்னா ஆரெண்ட் (Hannah Arendt) மற்றும் ஹெபேர்ட் மார்க்கூஸ (Hebert Marcuse) போன்றவர்களின் தத்துவங்கள் மேலோங்கி இருந்தன. பிரான்சில், ஜோன் போல் சார்த்தரின் (Jean Paul Sartre) இருத்தலியல்வாதத்திலும் (existentialism) மற்றும் ஆல்பேர் கமுஸின் (Albert Camus) அபத்தவாதத்தின் (absurdism) நெறிபிறழ்விலும் இந்தக் கருத்துருக்கள் வடிவம்பெற்றிருந்தன. இந்த பல்வேறு தத்துவங்கள் அனைத்தும் கொண்டிருந்த ஒரு மையக் கருப்பொருள் என்னவெனில் சமகால சமூகத்தில் இன்றியமையாத, தீர்க்கமான மற்றும் முன்னணி புரட்சிகர சக்தியாகத் தொழிலாள வர்க்கத்தை மார்க்சிசம் வலியுறுத்துவதை நிராகரிப்பதாகும்.

ட்ரொட்ஸ்கிசத்தில் ஈர்க்கப்பட்ட பல மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே கறுப்பின தேசியவாதம், பெண்கள் விடுதலை இயக்கம், மாவோ மற்றும் காஸ்ட்ரோவின் விவசாயிகளை மையப்படுத்திய அரசியல் ஆகியவை பலமாக மேலோங்கி இருந்தன. இவை அனைத்துமே, தொழிலாள வர்க்கத்தை அல்லாமல், ஏதோவொரு வடிவில் சமூகத்தின் பிற பிரிவுகளுக்குப் புரட்சிகர பாத்திரத்தை வழங்கின. பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டமும், குறிப்பாக 1953 மற்றும் 1963 இன் படிப்பினைகளும் ஒருபுறமிருக்க, ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் கூட கல்வியூட்டப்படாமல் பல புதிய உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். இது, தேசியவாத மற்றும் தொழிலாள வர்க்க விரோத நிலைப்பாடுகளை ஒட்டி OCI ஆனது வேகமாக சீரழியக்கூடியதாக அதைப் பலவீனமாக விட்டு வைத்தது.

டேவிட் நோர்த் விளக்கி உள்ளவாறு:

1963 பிளவின் தாக்கங்கள் மற்றும் படிப்பினைகள் எந்தளவுக்குத் தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்பட்டு ஆழப்படுத்தப்படாமல் இருந்தனவோ, அதேயளவுக்கு 1960 களின் மத்தியில் நடுத்தர வர்க்கத்தின் அரசியல் தீவிரப்படல், அடிப்படையில் சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்திற்கான எதிர்பார்ப்பாக இருந்தபோதும், SLL மற்றும் ICFI மீது ஆழமான தாக்கத்தைக் கொண்டிருந்தன. அதிகரித்து வந்த குட்டி-முதலாளித்துவ தீவிரப்படலின் அழுத்தம், SLL மற்றும் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு [OCI] (பெயர் மாற்றப்பட்டிருந்த PCI) இரண்டிலும், சற்று வித்தியாசமான வடிவங்களில் இருந்தாலும், அதன் வெளிப்பாட்டைக் கண்டது. [3]

இந்த புறநிலை அழுத்தங்கள் 1963 க்குப் பின்னர் அனைத்துலகக் குழுவில் OCI தனிமைப்பட்டிருந்த நிலையுடன் சேர்ந்து, 1968-75 காலகட்டத்தில் அதன் வேகமான வளர்ச்சிக்கு OCI ஐ தயாரிப்பின்றி விட்டு வைத்திருந்தது. இது ஒரு மத்தியவாத சீரழிவுக்கு வழி வகுத்ததுடன், பப்லோவாதத்திற்கு எதிரான அனைத்துலகக் குழுவின் போராட்டத்தின் முக்கியத்துவத்தை மறுத்ததன் முதல் தத்துவார்த்த வெளிப்பாடாக இருந்தது.

ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் “மறுகட்டமைப்பு” மீதான சர்ச்சை

OCI இன் மத்தியவாத திருப்பம் 1971 இல் திடீரென ஒரே இரவில் உருவாகி, ஒரு நாள் வெளிப்பட்டதல்ல. பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தை OCI எதிர்காலத்தில் வெளிப்படையாக நிராகரிக்க இருந்ததன் முதல் அறிகுறிகளாக 1965 இல் ஒரு முன்னணி OCI உறுப்பினரான ஸ்ரெபான் ஜூஸ்ட் (Stéphane Just) எழுதிய ட்ரொட்ஸ்கிசத்தின் பாதுகாப்பு (Defense of Trotskyism) என்ற படைப்பின் முதல் தொகுதியைப் பிரசுரித்த போதே வெளிப்பட்டன.

ஜூஸ்ட் இன் படைப்பு, பப்லோவாத திருத்தல்வாதிகளின் வாதங்களை எதிர்த்து, ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தை அனைத்துலகக் குழு பாதுகாப்பதை ஆதரித்த போதினும், பப்லோவாதிகள் வெற்றிகரமாக நான்காம் அகிலத்தை “அழித்து விட்டனர்”, ஆகவே அதை “மறுகட்டமைப்பு” செய்ய வேண்டியது அவசியம் என்பதில் அது உடன்பட்டது. அனைத்துலகக் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையே அது இருக்கிறதா இல்லையா என்பதற்கான அளவீடு என்று ஜூஸ்ட் வாதிட்டார்.

அவர் பின்வருமாறு எழுதினார்:

அனைத்துலகக் குழு என்றால் என்ன என்பது பற்றிய ஒரு துல்லியமான பார்வை இருப்பது அவசியம். தன்னை ஒரு சர்வதேசத் தலைமையாகக் கருதுவது அதன் பாகத்தில் சிறுபிள்ளைத் தனமாக இருக்கும். அவ்வாறு சர்வதேச தலைமையாக தன்னை பிரகடனப்படுத்திக் கொள்ள அது போதுமானளவுக்கு அவ்வாறு இருக்க வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நான்காம் அகிலம் அல்ல. அது பப்லோவாதத்தால் அழிக்கப்பட்டு விட்டது. [4]

இந்த அடிப்படையில், SLL மற்றும் OCI தலைமையில் “நான்காம் அகிலத்தின் மறுகட்டமைப்புக்கு” ஜூஸ்ட் அழைப்பு விடுத்தார்.

ஸ்ரெபான் ஜூஸ்ட்

பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டம் என்னவாக இருந்தாலும் அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்பதே இந்த நிலைப்பாட்டின் அரசியல் முக்கியத்துவமாக இருந்தது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மூன்றாம் கட்டத்தின் முதல் பகுதியின் போராட்டங்களான அதாவது, 1953 பகிரங்கக் கடிதம், 1959 இல் SLL இன் ஸ்தாபிதம், மறுஐக்கியத்திற்கு எதிரான போராட்டம், நான்காம் அகிலத்திற்கான அமெரிக்கக் குழுவின் ஸ்தாபிதம், LSSP இன் காட்டிக்கொடுப்பு அனைத்தும் ஜூஸ்ட்டால் ஒதுக்கித் தள்ளப்பட்டன.

இந்த அடிப்படையில், திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தை நிராகரிக்க முடியும் என்பதோடு, அனைத்து வகையான அரசியல் குழுக்கள் உடனான கொள்கையற்ற அரசியல் கூட்டணிகளையும் நியாயப்படுத்த முடியும். 1960 கள் நெடுகிலும், தொழிற்சங்க நிர்வாகி பியர் லம்பேர் தலைமையில் இருந்த OCI, (தொழிலாளர் போராட்டம் அல்லது LO என்று மாற இருந்த) தொழிலாளர் குரல் (Voix ouvrière) குழு உடனும், ஸ்ராலினிச மேலாளுமை கொண்ட தேசியவாத பிரெஞ்சு தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பெரும் பாகமாக இருந்த மற்றும் அதை நோக்கி நோக்குநிலை கொண்டிருந்த மற்ற குழுக்களுடனும் கொள்கையற்ற உறவுகளை வளர்த்தது.

உண்மையில், 1950 களின் தொடக்கத்தில் பப்லோ மற்றும் மண்டேலுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆரம்பத்தில் தலைமை தாங்கிய OCI, 1967 இல் வெளிப்படையாகவே பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் முக்கியத்துவத்தை மறுத்து, நான்காம் அகிலமும் அனைத்துலகக் குழுவும் மரணித்து விட்டதாக அறிவித்து, புரட்சிகர மார்க்சிசத்தின் கோட்பாடுகளையே எதிர்த்தது.

'மறுகட்டமைப்பு' என்ற வார்த்தையின் வரலாறே முரண்பாடானது. எல்லா வார்த்தைகளையும் போலவே, அதன் அர்த்தமும் காலப்போக்கில் மாறிவிட்டது, அது எதைக் குறிக்கிறது என்பது ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு ஆரம்பத்தில் தெளிவாக இல்லை. இந்த நேரத்தில் SLL உம் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியது. ஆனால் அது அதே ட்ரொட்ஸ்கிச-விரோத அரசியல் உள்ளடக்கத்தில் பயன்படுத்தவில்லை. SLL இன் “மறுக்கட்டமைப்பு” என்ற கருத்துரு, அரசியல் உள்ளடக்கத்தில் நேரெதிராக இருந்தது. குறிப்பிட்டுக் கூறினால், நான்காம் அகிலத்தின் சக்திகளை பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான வரலாற்று போராட்டத்தின் அடிப்படையில் மட்டுமே கட்டமைக்க முடியும் என்ற அர்த்தத்தில் இருந்தது. அனைத்துலகக் குழு 1953 இல் இருந்து இப்போராட்டத்தைத்தான் வழிநடத்திக் கொண்டிருந்தது.

SLL இன் ஏழாவது ஆண்டு மாநாட்டில் ஜூன் 7, 1965 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இந்தச் சரியான நோக்குநிலையை வெளிப்படுத்துகிறது:

திருத்தல்வாதத்திற்கு எதிராக அனைத்துலகக் குழுவின் வெற்றிகரமான போராட்டமும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் தலைமையை கட்டியெழுப்புவதில் அதன் பிரிவுகளின் செயல்பாடுகளும் நான்காம் அகிலத்தின் மறுகட்டமைப்பிற்கான அடித்தளத்தை வழங்குகின்றன. [5]

அனைத்துலகக் குழுவின் மூன்றாம் உலக மாநாடு

1966 இல், அனைத்துலகக் குழு இலண்டனில் அதன் மூன்றாம் உலக மாநாட்டை நடத்தியது. இந்த நிகழ்வில் “மறுக்கட்டமைப்பு” என்ற அவ்விரண்டினதும் கருத்துகளுக்கு இடையிலான வர்க்க வேறுபாடு தெளிவாக வெளிப்பட்டது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட இரண்டு அரசியல் குழுக்களான தொழிலாளர் குரல் (Voix Ouvrière – VO) உம் ஸ்பார்டசிஸ்டுகளும் (Spartacists) அனைத்துலகக் குழுவுக்கும், பப்லோவாதத்திற்கு எதிரான அதன் போராட்டத்திற்கும் அவர்களின் விரோதத்தை வெளிப்படுத்தின.

நான்காம் அகிலம் நிறுவப்பட்டதையே நிராகரித்த ஒரு மத்தியவாத அமைப்பான பார்டா (Barta) குழுவிலிருந்து வந்த ஹார்டி என்கின்ற ரோபர்ட் பார்சியா (Robert Barcia) VO இன் தலைமையில் இருந்தார். OCI உடன் அமைப்புரீதியில் குறிப்பிடத்தக்க உறவுகளைக் கொண்டிருந்த அது, அந்த மாநாட்டுக்கு பார்வையாளர்களாகக் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தொடர்ச்சியையும் மற்றும் பப்லோவாதத்திற்கு எதிராக அனைத்துலகக் குழுவின் போராட்டத்தின் முக்கியத்துவத்தையும் நிராகரிக்கும் அடிப்படையில், அது “மறுகட்டமைப்புக்கு” உடன்படும் ரீதியில் கலந்து கொண்டது.

நான்காம் அகிலத்திற்கான அமெரிக்கக் குழுவில் இருந்து பிரிந்திருந்த முன்னாள் SWP உறுப்பினர்களின் ஒரு பிரிவான ஸ்பார்டசிஸ்டுகள், அந்த மாநாட்டு தீர்மானத்தில் ஒரு திருத்தத்தை நிராகரித்ததன் மூலமாகவும் மற்றும் அந்த மாநாட்டில் அவர்களின் கொள்கையற்ற நடவடிக்கைகளின் மூலமாகவும் அனைத்துலகக் குழு மீதான அவர்களின் விரோதத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

பப்லோவாதிகளால் நான்காம் அகிலம் “அழிக்கப்பட்டது” என்ற ஒரு குறிப்பு அந்த மாநாட்டு தீர்மானத்தின் ஆரம்ப வரைவில் இடம் பெற்றிருந்ததற்கு அவர்கள் உடன்பட்டதினாலேயே, இந்தக் குழுக்கள் அம்மாநாட்டில் கலந்து கொண்டன. அந்த மாநாட்டின் போதே, இது நான்காம் அகிலத்திற்கு விரோதமான சக்திகளுக்கு வழங்கப்பட்ட தவறான விட்டுக்கொடுப்பு என்பதை SLL தலைவர்கள் உணர்ந்தார்கள்.

இதற்கு தீர்வு காண,, ஜெர்ரி ஹீலியுடன் இணைந்து செயல்பட்டு வந்த மைக்கல் பண்டா, அந்தத் தீர்மானத்தில் பின்வரும் திருத்தத்தை முன்மொழிந்தார்:

பப்லோவாத திருத்தல்வாதிகளால் நான்காம் அகிலம் அழிந்துவிட்டதாகக் குறிப்பிடும் வாக்கியதை அழித்து விட்டு, அதனிடத்தில் பின்வருவதைச் சேர்க்கவும்: “ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை அரசியல் ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் அழிக்க, அதன் எல்லா பிரிவுகளிலும் திருத்தல்வாத போக்கின் வடிவில் திடமாக ஊடுருவி இருந்த, குட்டி-முதலாளித்துவச் சந்தர்ப்பவாதத்தின் முயற்சிகளை நான்காம் அகிலம் வெற்றிகரமாக எதிர்த்து தோற்கடித்து விட்டது. அகிலத்தை பாட்டாளி வர்க்கத்தின் ஒரு முக்கிய தலைமையாக மீளக்கட்டியெழுப்புவதற்கு இந்த போக்குக்கு எதிரான போராட்டம் அவசியமான தயாரிப்பாக இருந்தது, இருக்கிறது.” [6]

இந்த நேரத்தில் SLL இன் அந்தத் தீர்மானத்திற்கு OCI ஆதரவாக வாக்களித்தது, அதேவேளையில் VO மற்றும் ஸ்பார்டசிஸ்டுகள் அதற்கு எதிராக வாக்களித்தன. இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கும் மத்தியில் அமைந்த ஒரு பரிந்துரையாக, இரண்டாவது தீர்மானத்தை, கிளிஃவ் சுலோட்டர் ஆதரவுடன் ஹங்கேரிய பிரதிநிதி (வார்கா என்பவர்) முன்வைத்தார். நடைமுறையளவில், இது “மறுகட்டமைப்புவாதிகளுக்கு” ஒரு விட்டுக்கொடுப்பாக இருந்தது. வார்காவின் தீர்மானம், பப்லோவாதத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் போராட்டம் மீது அவர்கள் தொடுத்திருந்த தாக்குதலைக் குறைத்துக் காட்டியதன் மூலம், அவர்களுடன் நல்லுறவைப் பேண முயன்றது. நான்காம் அகிலம் அழிந்து விட்டது என்ற வாதத்திற்கு இதுவும் ஒரு விட்டுக்கொடுப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டு, அந்த மாநாடு மிகச் சரியாக அதையும் நிராகரித்தது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மூன்றாவது மாநாடு (1966): பின்புறம் இருப்பவர்கள்: எம். பண்டா, சி. சுலோட்டர், முன்புறம் உள்ளவர்கள்: பி. லம்பேர், ஜி. ஹீலி, எம். ராஸ்டொஸ், எஸ். ஜூஸ்ட்

இந்த நேரத்தில் பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் பிரிவுகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை இந்த வாக்கெடுப்பு முழுமையாக தீர்த்துவிடவில்லை. ரொபேர்ட்சனின் ஸ்பார்டசிஸ்டுகளின் நடத்தை மற்றும் VO இன் நிலைப்பாடுகள் தொடர்பான மிக உடனடியான பிரச்சினையின் காரணமாக, ஜூஸ்ட் எழுப்பிய பிரச்சினைகள் மூன்றாம் மாநாட்டில் தெளிவுபடுத்தப்படவில்லை என்று உணர்ந்ததாக, SLL உடனான பிந்தைய விவாதங்களில் OCI உறுதிப்படுத்திக்கொண்டது. SLL இன் திருத்தத்திற்கு OCI இன் ஆதரவு ஒரு தற்காலிக பின்வாங்கலாக மட்டுமே இருந்தது என்பதும், நான்காம் அகிலம் பப்லோவாதத்தால் அழிந்து விட்டது என்று அம்மாநாட்டில் VO பாதுகாத்த வாதத்திற்கு விரைவிலேயே அது திரும்ப இருந்தது என்பதும் பின்னர் தெளிவானது.

எவ்வாறிருப்பினும், அந்த மூன்றாம் உலக மாநாடு திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஓர் ஆரம்ப படியாகும். “மறுகட்டமைப்பு” என்பதற்குப் பின்னால் இருந்த திருத்தல்வாதக் கருத்தாக்கங்களின் உள்ளடக்கம், அந்த மாநாட்டின் போது தெளிவானது. VO மற்றும் ஸ்பார்டசிஸ்டுகள் போன்ற குழுக்கள், ட்ரொட்ஸ்கிசத்திற்கு விரோதமானவை என்பதையும், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமையைக் கட்டமைக்க இவற்றைச் செயலூக்கத்துடன் எதிர்க்க வேண்டும் என்பதையும் அந்த மாநாடு எடுத்துக்காட்டியது.

OCI ஒரு மத்தியவாத நோக்குநிலையை வளர்க்கிறது

1966 தீர்மானத்தின் திருத்தத்திற்கு ஆதரவாக OCI வாக்களித்த போதிலும், 1967 வாக்கில் அது பெரிதும் குட்டி-முதலாளித்துவ அழுத்தங்களுக்கு உள்ளாகி இருந்தது தெளிவாகி வந்தது. இது பிரான்சின் ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களுடனான அதன் அமைப்புரீதியான செயல்பாடுகளை, அதாவது VO செயல்பட்ட அடித்தளத்திற்கு நிகரான ஓர் அரசியல் போக்காக விரிவாகும் விதத்தில், அவர்களுடன் ஓர் அரசியல் நல்லிணக்கத்தின் வடிவில் தன்னை வெளிப்படுத்தியது.

ஆரம்பத்தில் இந்த மத்தியவாத பாதை, OCI க்கும் SLL க்கும் இடையே அமைப்புரீதியான கருத்து வேறுபாடுகளின் வடிவில் வெளிப்பட்டது. இதில் அரசியல் செயற்பாடுகளின் மட்டம் மற்றும் கூட்டு வெளியீடுகளை ஒழுங்கமைப்பது தொடர்பான மோதல்ககளும் உள்ளடங்கி இருந்தன. அரசியல் பணியை விரிவாக்குவதற்கான ஓர் ஆரோக்கியமான முயற்சியின் விளைவாக இதுபோன்ற விஷயங்களில் குற்றச்சாட்டுக்கள் இருக்க முடியும் என்றாலும், OCI விஷயத்தில் அது அவ்விதமானது இல்லை என்பது விரைவிலேயே தெளிவானது. மாறாக, OCI இன் கருத்து வேறுபாடுகள், திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தையும் மற்றும் அனைத்துலகக் குழுவுடனான அரசியல் வரலாற்று பிரச்சினைகளைத் தெளிவுபடுத்துவதற்கான போராட்டத்தையும் விட்டுக்கொடுத்து, குறிப்பாக தொழிற்சங்க வேலைகளில் இருந்து அமைப்புரீதியான வெற்றிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கான ஒரு மத்தியவாத அழுத்தத்தை வெளிப்படுத்தின.

நான்காம் அகிலம் அழிக்கப்பட்டு விட்டதாகவும், அனைத்துலகக் குழுவின் குட்டி-முதலாளித்துவவாத கூட்டமைவாலேயே இது எடுத்துக்காட்டப்படுவதாக VO அனைத்துலகக் குழுவுக்கு எதிராக கூறிய அதன் வாதங்களையே OCI உம் திரும்பவும் கூறத் தொடங்கியது. எவ்வாறாயினும் தொழிற்சங்க வேலைகளை மேற்கொள்வதிலும் மற்றும் பத்திரிகை பிரசுரிப்பதிலும் அப்போதும் அது VO உடன் அமைப்புரீதியான உறவுகளைக் கொண்டிருந்தது. இந்த அடிப்படையில், திருத்தல்வாதத்திற்கு எதிராக ஒரு செயலூக்கமான அரசியல் போராட்டத்தில் ஈடுபடுவதை விட தொழிலாள வர்க்க தொழில்களை காரியாளர்கள் ஏற்றுக்கொள்வதும் மற்றும் அவர்களைப் புத்திஜீவித அடுக்கில் இருந்து விலக்கிவைப்பதுமே மிகவும் முக்கியமானது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வாதம், ICFI இன் மூன்றாம் மாநாட்டுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர், மார்ச் 1966 இல் OCI உடனான VO இன் ஒரு கூட்டத்தில் வெளிப்படையாக ஊக்கப்படுத்தப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் VO பின்வருமாறு குறிப்பிட்டது:

எங்கள் கருத்துப்படி, பப்லோவாதத்திற்கான காரணங்கள், நான்காம் அகில அமைப்புகளின் குட்டி-முதலாளித்துவ குணாம்சத்தில் தங்கி உள்ளன. [7]

வேறு வார்த்தைகளில் கூறினால், ஒப்பீட்டளவில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஸ்திரப்படல் மற்றும் ஸ்ராலினிச சோவியத் ஒன்றியத்தின் புவிசார் அரசியல் களம் விரிவடைந்தமை என இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நடந்த புறநிலை நிகழ்வுகளில் வேரூன்றி இருந்த வர்க்க அழுத்தங்கள், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மீது ஏற்படுத்திய தாக்கங்களால் பப்லோவாதம் எழவில்லை. மாறாக, அது தலைவர்களின் தனிப்பட்ட தகமைகளின் ஒரு விளைவாகும் என்று கூறப்பட்டது.

VO இன் முந்தைய அறிக்கை இடம் பெற்றிருந்த அதே ஆவணத்தில், அனைத்துலகக் குழுவைப் பப்லோவாதம் வெற்றிகரமாக அழித்துவிட்டது என்ற ஜுஸ்டின் கூற்றை OCI மீண்டும் குறிப்பிட்டது. இது, மாநாட்டு தீர்மான திருத்தத்திற்கு அது வழங்கிய வாக்கை நிராகரிப்பதாக இருந்தது:

பப்லோவாத தலைமையின் திவால்நிலையை அறிவித்து விட்டு, நான்காம் அகிலம் சர்வசாதாரணமாக தொடர்வதாகவும், பப்லோவாத சர்வதேச செயலகத்தின் இடத்தை அனைத்துலகக் குழு கைப்பற்றி விட்டதாகவும் நாம் கூற முடியாது. நான்காம் அகிலத்தின் பழைய தலைவர்கள் அனைவருமே ஏகாதிபத்தியம் மற்றும் ஸ்ராலினிச அழுத்தத்தின் கீழ் சரணடைந்து விட்டார்கள். முக்கிய பிரிவுகளிடம் இருந்து எந்தவித எதிர்வினையும் இல்லை என்பது ஒரு சிறிய நிகழ்வும் இல்லை, ஒரு சிறிய சம்பவமும் இல்லை. [8]

அனைத்துலகக் குழுவை பாதுகாக்கும் ஒரு தீர்மானத்தை ஆதரித்து வெறும் ஓராண்டுக்குப் பின்னர், இறுதியில் OCI, “அனைத்துலகக் குழு நான்காம் அகிலத்தின் தலைமை அல்ல” என்ற முடிவிற்கு வந்தது. [9]

OCI இன் அரசியலுக்குள் மற்ற திருத்தல்வாத கருத்துருக்களும் அவற்றின் பாதையைக் கண்டன. அதில் இயங்கியல் சடவாதம் மீதான ஐயறவு மற்றும் ஜனநாயக மத்தியத்துவக் கொள்கைகளின் அவமதிப்பு ஆகியவை உள்ளடங்கி இருந்தன. சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான ஒரு தீர்க்கமான போராட்டத்தின் அடிப்படையிலும் மற்றும் சுயாதீனமான தொழிலாள வர்க்க வேலைத்திட்டத்தின் அடிப்படையிலும் OCI ஐ ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சியாகக் கட்டியெழுப்ப வேண்டியதில்லை என்பதே அரசியல் முடிவாக இருந்தது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலான மார்க்சிச போராட்டத்தின் படிப்பினைகளை தூக்கி எறிந்து விட்டு, பிரெஞ்சு தொழிற்சங்கங்களிடம் இருந்தும் மற்றும் சர்வதேச அளவில் பொலிவியாவில் கிய்யெர்மோ லோராவின் (Guillermo Lora) புரட்சிகரத் தொழிலாளர் கட்சி போன்ற முதலாளித்துவ தேசியவாத குழுக்களிடம் இருந்தும், அமைப்புரீதியான வெற்றிகளைப் பெறுவதற்காக அது இப்போது VO உடனான கொள்கையற்ற உறவுகளுக்குள் நுழைய முடியும்.

இந்தக் கருத்துருக்களை முன்னெடுக்கையில், OCI மத்தியவாதத்திற்குள் வீழ்ந்திருந்தது. 1938 இல் ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தை ஸ்தாபித்ததற்கு ஒரு “யதார்த்தமான” எதிர்ப்பாக எழுந்ததைக் குறிப்பிடுவதற்கு, ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் மத்தியவாதம் என்ற இந்த வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டது. அவர்களின் முக்கிய வாதத்தைத் தோழர் நோர்த் பின்வருமாறு விவரித்தார்:

ஸ்ராலினிசத்தைப் பற்றிய ட்ரொட்ஸ்கியின் மதிப்பீட்டுடன் அவர்கள் [மத்தியவாதிகள்] உடன்படுவதாக வலியுறுத்தினாலும், நான்காம் அகிலத்தைத் தொடங்குவது ஒரு பயனற்ற முயற்சி என்று மத்தியவாதிகள் வாதிட்டனர். ட்ரொட்ஸ்கிச இயக்கம் மிகவும் சிறியது என்பதோடு, ஒரு புதிய அகிலம் என்று “பிரகடனப்படுத்த” இயலாதளவுக்கு அது தனிமைப்பட்டு இருப்பதாக அவர்கள் வாதிட்டார்கள். இதன்போது லெனின் மூன்றாம் அகிலத்தினை அமைக்க அழைப்பு விடுத்தபோது, அவரின் குரல், முதலாம் உலகப் போரின் முதல் ஐந்தாண்டுகளில் இரண்டாம் அகில தலைவர்கள் வெளியிட்ட பேரினவாத பிரகடனங்களுக்குள் ஏறக்குறைய முழுமையாக மூழ்கடிக்கப்பட்டிருந்ததை அவர்கள் வெளிப்படையாக மறந்து விட்டார்கள். [10]

மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், மீண்டும் ஒரு மத்தியவாதப் போக்கு உருவெடுத்திருந்தது, ஆனால் இந்த முறை, ஒரு சுயாதீன அரசியல் சக்தியாக நிலைத்திருக்க முடியாதளவுக்கு நான்காம் அகிலம் மிகவும் சிறியதாக இருப்பதாகவும், ஆகவே புதிதாக “மறுகட்டமைப்பு” செய்யப்பட வேண்டும், அதாவது ட்ரொட்ஸ்கிசம் அல்லாத அடிப்படையில் இவ்வாறு செய்யப்பட வேண்டும் என்று வாதிட்டு, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பிரெஞ்சுப் பிரிவிற்குள் அது உருவாகி இருந்தது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இந்தப் பிளவை மீளாய்வு செய்கையில், “மறுகட்டமைப்புக்கான” OCI இன் அழைப்புக்கும் மத்தியவாதத்தை நோக்கிய அதன் திருப்பத்திற்கும் இடையிலான தொடர்பை அது பின்வருமாறு விளங்கப்படுத்துகிறது:

நான்காம் அகிலத்தை “மறுகட்டமைப்பு” செய்ய வேண்டும் என்ற பிரெஞ்சு பிரிவின் வலியுறுத்தல் வெறுமனே வார்த்தை சம்பந்தமான ஒரு பிரச்சினை அல்ல. ஒரு சர்வதேச மறுகுழுவாக்கம் என்ற போர்வையில், அது மத்தியவாத சக்திகளை நோக்கி அரசியல் நோக்குநிலையை ஏற்க பரிந்துரைத்தது. அவ்விதத்தில் பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தின் வெற்றிகளை அது ஆபத்தில் ஆழ்த்தியது. நான்காம் அகிலம் “மரணித்து விட்டதாகவும்”, அதை “மறுகட்டமைப்பு” செய்ய வேண்டும் என்றும் கூறுபவர்களுக்கு விட்டுக்கொடுப்புகளை வழங்குவதன் மூலம், அது மறைமுகமாக என்றாலும், என்ன அறிவிக்கிறது என்றால், திருத்தல்வாதத்திற்கு எதிரான கடந்த காலப் போராட்டங்களின் படிப்பினைகள் தீர்க்கரமான முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல என்று அறிவிக்கிறது. இவ்விதத்தில், ஒவ்வொருவரும் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்த அரசியல் போக்குகளின் முன்வரலாறுகளைப் பொருட்படுத்தாமல் ஒன்றிணைத்துக் கொள்ளும் விதத்தில், மத்தியவாதத்தின் அரசியல் புதைகுழியை நோக்கி அது நேரடியாக வழி நடத்துகிறது. [11]

சோசலிச தொழிலாளர் கழகம் ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாத்தல்

OCI இன் இந்த மத்தியவாத திருப்பத்திற்கு எதிராக, சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தொடர்ச்சியைப் பாதுகாத்தது. இம்முறை SLL இன் சொந்த குறிப்பிடத்தக்க அரசியல் பலவீனங்கள் இருந்தபோதிலும், பிரெஞ்சு பிரிவுடன் ஒரு கோட்பாட்டு ரீதியான விதத்தில் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க அது செயல்படத் தவறிய போதிலும், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தொடர்ச்சியைப் பாதுகாப்பதில் SLL இன்னும் முக்கிய அரசியல் பாத்திரம் வகித்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் போராட்டம் இல்லையென்றால், அனைத்துலகக் குழு அதற்குள் பொதிந்துள்ள ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தொடர்ச்சியை இழந்திருக்கும்.

திருத்தல்வாதத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கிசம் (Trotskyism vs Revisionism) நூலின் ஐந்தாம் தொகுதியில் வழங்கப்பட்ட ஆவணங்கள், பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தை SLL பாதுகாத்ததையும், இந்தப் போராட்டத்தைக் குறிப்பாக புரட்சிகரமான எழுச்சிகரக் காலகட்டம் வரவிருக்கின்ற நிலையில் கைவிடுவதன் கடுமையான விளைவுகளைக் குறித்து அது OCI ஐ எச்சரித்ததையும் எடுத்துக்காட்டுகின்றன. “நான்காம் அகிலம் மரணிக்கவில்லை,” என்ற தலைப்பிலான நான்காம் பகுதியில் அதன் விடையிறுப்பில், SLL பின்வருமாறு எச்சரித்தது:

தத்துவத்தையும், தொடர்ச்சியையும் பேணுவதற்கான போராட்டம் நம் இரண்டு பிரிவுகளால் நடத்தப்பட்டு, அவை வெற்றி பெற்ற நிலையில், அந்தப் போராட்டம் மைல்கல்லாக நிரூபணமானது. ஆகவே பிரெஞ்சு தோழர்கள் அவர்களின் புதிய பாதையை நிறுத்தி விட்டு, திரும்பி விட வேண்டும் … [மூன்றாம் மாநாட்டில்] நான்காம் அகிலம் அழிக்கப்படவில்லை என்ற SLL இன் திருத்தத்திற்கு OCI பிரதிநிதிகள் வாக்களித்தனர். இந்த அடிப்படையைத் தவிர முன்னேறிச் சென்று புரட்சிகரக் கட்சிகளைக் கட்டியெழுப்புவது சாத்தியமில்லை. [12]

கட்சியின் அனைத்து விதமான அரசியல் பணிகளையும் இந்த வேலைத்திட்ட அடித்தளத்திற்கு அடிபணிய செய்வதன் முக்கியத்துவத்தைக் குறிப்பாக SLL குறிப்பிட்டது:

“நான்காம் அகிலம் மரணித்து விட்டது” என்ற சூத்திரத்தை, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரம் மற்றும் புரட்சிகர நனவை நிராகரிக்கும் நடுத்தர வர்க்கத்தின் அவநம்பிக்கையான நிராகரிப்பாக புறக்கணித்து, நான்காம் அகிலத்தின் தொடர்ச்சியைப் பேணுவதன் மீது அங்கே [மூன்றாம் மாநாட்டில்] வலியுறுத்தி, நாம் கட்டியெழுப்பும் போல்ஷிவிக் கட்சி மாதிரியான ஒரு கட்சியின் முக்கிய கோட்பாடுகளை, அதாவது அனைத்துலகக் குழுவின் பணிகளுக்கான ஆணைக் குழுவை உருவாக்கினோம். தொழிற்சங்கம் தொடர்பான வேலைகள், இளைஞர் வேலைகள், இதர பிற வேலைகள் அனைத்தும் இந்த பணிக்கு கீழ்ப்பட்டதாகவே இருக்க வேண்டுமென நாம் வலியுறுத்தினோம். [13]

இந்த ஆவணத்தில், பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் முக்கியத்துவத்தை SLL வலியுறுத்தியது:

பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான நீண்ட காலப் போராட்டத்தை ஒரு துரதிர்ஷ்டவசமான இடைவெளியாகப் பார்ப்பது பெரிய தவறு... அதற்கு நேரெதிராக, பப்லோவாதத்திற்கு எதிராக தொடர்ச்சியான போராட்டமும், அந்தப் போராட்டத்தின் அடிப்படையில் காரியாளர்களையும் கட்சிகளையும் பயிற்றுவிப்பதும் இந்த ஆண்டுகளில் நான்காம் அகிலத்தின் ஜீவனாக இருந்தது. அது இந்த ஒட்டுமொத்தக் காலகட்டத்தின் மிக முக்கிய படிப்பினைகளை உள்ளடக்கி உள்ளது. [14]

“பிரெஞ்சு தோழர்கள், நனவுபூர்வமாக இந்த தத்துவார்த்தப் போராட்டத்தில் இருந்து தொடங்கவில்லை என்றால், அவர்கள் பெரும் விலை கொடுக்க நேரிடும்,” என்று SLL எச்சரித்தது. [15]

இந்த எடுத்துக்காட்டல்கள் விரிவுரையின் முதல் பாகத்தின் முக்கிய வரலாற்று விவாதத்திற்கு மிக முக்கிய ஆதாரமாக உள்ளன: அதாவது, திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டமானது, அபிவிருத்தி அடைந்து வரும் புரட்சிகர நிலைமையில் அனைத்துலகக் குழுவின் பணியில் “மைல்கல்” என்று SLL மிகச் சரியாக வலியுறுத்தி இருந்தது.

லியோன் ட்ரொட்ஸ்கி

ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் இருப்பை முழுமையாக எண்ணிக்கை அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும் என்ற OCI இன் வாதம், நான்காம் அகிலத்தின் நிறுவுனர் லியோன் ட்ரொட்ஸ்கியே கருதியதைப் போல, அதன் மீதான ஒரு தாக்குதலாகும். நான்காம் அகிலத்தின் காரியாளர்களின் குறைந்த எண்ணிக்கை காரணமாக அது முக்கியத்துவமற்றது என்ற வாதத்திற்கு எதிராக, SLL வலியுறுத்துகையில், ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத்திட்டத்தையும் மரபியத்தையும் இதுவரை நான்காம் அகிலம் பாதுகாக்கும் வரையில் மட்டுமே அது நிலைத்து நிற்கிறது என்று வலியுறுத்தியது.

இடைமருவு வேலைத்திட்டத்தின் நிறைவுரையில் இந்த விஷயம் மீதான ட்ரொட்ஸ்கியின் சொந்த வலியுறுத்தலில் இருந்து OCI விலகிச் செல்கிறது என்பதை, இந்த விவாதத்தில், SLL சரியாகச் சுட்டிக் காட்டியது:

நான்காம் அகிலம் இருக்கிறதென்று “பிரகடனம்செய்ய” வேண்டிய அவசியமே இல்லை என்று நாங்கள் பதிலளிக்கிறோம். அது இருப்பதுடன், போராடி வருகிறது. அது பலவீனமாக இருக்கிறதா? ஆம், அதன் உறுப்பினர்கள் பெரும் எண்ணிக்கையில் இல்லை, ஏனென்றால் அது இன்னமும் இளமையானதாக இருக்கிறது. அங்கே இப்போது வரை முதன்மை காரியாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்தக் காரியாளர்கள் தான் எதிர்காலத்திற்கான உறுதிமொழிகளாக இருக்கிறார்கள். இந்தக் காரியாளர்களுக்கு வெளியே, உண்மையிலேயே இந்த உலகில் இந்தப் பெயருக்குப் பெருமை சேர்க்கும் ஒரேயொரு புரட்சிகர போக்கும் இல்லை. நம் அகிலம் இன்னமும் எண்ணிக்கையில் பலவீனமாக இருக்கிறது என்றாலும், அது கோட்பாட்டிலும், வேலைத்திட்டத்திலும், பாரம்பரியத்திலும், அதன் காரியாளர்களின் ஒப்பற்ற முதிர்ச்சியிலும் பலமாக இருக்கிறது.” [இந்த வலியுறுத்தல் SLL ஆல் சேர்க்கப்பட்டது] [16]

இதில் SLL பின்வருவதையும் சேர்த்துக் கொண்டது:

அகிலம் “நிறுவப்படுவதற்கு” முன்னர் “இந்த வர்க்கத்தின் ஒரு திட்டவட்டமான பிரிவின் தலைமை' ஸ்தாபிக்கப்படும் வரை காத்திருக்கவேண்டும் என்று ட்ரொட்ஸ்கிக்கு சாதாரண கேள்விகூட எழவில்லை. கோட்பாடு, வேலைத்திட்டம், பாரம்பரியம் மற்றும் காரியாளர்களின் ஒப்பற்ற முதிர்ச்சி ஆகியவையே அளவுகோல்களாக உள்ளன. [17]

உண்மையில், 1953 இல் ட்ரொட்ஸ்கிச இயக்கம் பப்லோவாதத்தால் அழிக்கப்பட்டது என்று ஒருவர் முடிவிற்குவந்தால், 1945 க்குப் பின்னர், ஐரோப்பிய புரட்சியாளர்களின் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தலைமுறையும் வதை முகாம்களில் கொல்லப்பட்ட பின்னர் அதன் நிலை என்ன? அல்லது சோவியத் ஒன்றியத்தில் பல்லாயிரக்கணக்கான இடது எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்ட 1930களின் பிற்பகுதியில் நான்காம் அகிலம் நிறுவப்பட்டபோது? நிச்சயமாக 1940 இல் ட்ரொட்ஸ்கியே படுகொலை செய்யப்பட்டார் என்பதைக் குறிப்பிட வேண்டியதே இல்லை.

இந்த அனைத்து சோகமான நிகழ்வுகள் மற்றும் வரலாற்று குற்றங்கள் நெடுகிலும், “கோட்பாடு, வேலைத்திட்டம், மரபியம்” மற்றும் “காரியாளர்களின் முதிர்ச்சியின்” முக்கியத்துவம் மீதான வலியுறுத்தல் ஓர் உடைபடாத வரலாற்றுச் சங்கிலியாகத் தொடர்ந்தது. பப்லோவாதத்திற்கு எதிராக அனைத்துலகக் குழுவின் வெற்றிகரமான போராட்டத்தின் முக்கியத்துவத்தை மறுப்பது, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முக்கியத்துவத்தையே மறுப்பதை நோக்கிய முதல் படியாகும்.

புரட்சிகர போராட்டங்களின் புதிய அலைக்கு மத்தியில், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தொடர்ச்சியைப் பேணுதல்

ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக தொழிற்சங்க அதிகாரத்துவங்களைத் தழுவுவதே “மறுகட்டமைப்பு” மீதான சர்ச்சையில் இருந்த மைய அரசியல் பிரச்சினையாக இருந்தது. மூன்றாவது மாநாட்டில் ஆரம்பத்தில் OCI சரியான நிலைப்பாட்டை ஆதரித்த போதினும், குட்டி-முதலாளித்துவப் போக்குகளுக்கு எதிராக, அதுவும் முக்கியமாக பிரான்சில் VO க்கு எதிராகவும் மற்றும் சர்வதேச அளவில் முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளுக்கு எதிராகவும் கடுமையான அரசியல் மற்றும் தத்துவார்த்த போராட்டத்தில் ஈடுபட அது மறுத்தமை, சர்வதேச அளவில் மிகப் பெரியளவில் புரட்சிகர போராட்டங்கள் எழுந்த சூழலில் ட்ரொட்ஸ்கிசத்தை அது கைவிடுவதற்கு அடித்தளத்தை அமைத்தது.

வரலாற்று உண்மை மற்றும் சடவாத மெய்யியலைப் பாதுகாப்பது, மற்றும் ஏகாதிபத்திய சகாப்தத்தில் தொழிலாள வர்க்கமே தீர்க்கமான முன்னணி புரட்சிகர வர்க்கம் என்ற அதன் வலியுறுத்தலைப் பாதுகாப்பது உட்பட, அதன் வேலைத்திட்டத்தின் அடித்தளத்தில் ஒரு புரட்சிகர முன்னோக்கிற்காக ட்ரொட்ஸ்கிச இயக்கம் மட்டுமே போராட முடியும். “மார்க்சிசத்தின் வளர்ச்சியாக ட்ரொட்ஸ்கிசம்” என்பதில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் டேவிட் நோர்த் விளக்கியதைப் போல:

ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்றை ஒன்றோடொன்று தொடர்பற்ற பல அத்தியாயங்களாகப் புரிந்து கொள்ள முடியாது. தொடர்ச்சியாக கட்டவிழ்ந்த உலக முதலாளித்துவ நெருக்கடி மற்றும் சர்வதேச பாட்டாளி வர்க்கப் போராட்டத்தில் இருந்து அதன் காரியாளர்களால் அது தத்துவார்த்த அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த வரலாற்று சகாப்தத்தில், வர்க்கப் போராட்டத்தின் அனைத்து அடிப்படை அனுபவங்களைக் குறித்து உடைபடாத தொடர்ச்சியான அதன் அரசியல் பகுப்பாய்வுகள், 1924 இல் லெனின் மரணத்திற்குப் பின்னர், மார்க்சிசத்தின் ஒரே அபிவிருத்தியாக ட்ரொட்ஸ்கிசத்தை மகத்தான அளவில் செழுமைப்படுத்தி உள்ளன. [18]

OCI உடனான பிளவில், இந்த உடைபடாத தொடர்ச்சியே SLL ஆல் பாதுகாக்கப்பட்டது.

மத்தியவாதத்திற்குள் OCI சீரழிந்ததற்கு மத்தியில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தொடர்ச்சியை SLL பாதுகாத்தமை, நம் கட்சி வரலாற்றின் ஒரு முக்கிய அத்தியாயமாகும். நான்காம் அகிலத்தின் வரலாற்றில் நாம் ஐந்தாம் கட்டத்திற்குள் நுழைந்துள்ள நிலையில், இது 21 ஆம் நூற்றாண்டின் மூன்று தசாப்தங்களில் நம் அரசியல் நடைமுறைகளுக்கு முக்கிய படிப்பினைகளை வழங்குகின்றன.

ஒவ்வொரு கண்டத்திலும் வேகமாக வளர்ந்து தீவிரமடைந்து வரும் தொழிலாள வர்க்க மற்றும் இளைஞர்களின் இயக்கத்தை நாம் மீண்டுமொருமுறை எதிர் கொள்கிறோம். ஏகாதிபத்தியப் போர், பெருந்தொற்றால் பெருந்திரளான மக்களின் மரணம், மற்றும் வீழ்ச்சி அடைந்து வரும் வாழ்க்கைத் தரம் ஆகியவை பிரான்சில் மக்ரோனுக்கு எதிராக பாரிய போராட்டங்களையும், சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களை உள்ளடக்கிய வேலைநிறுத்தங்களையும் கொண்டு வந்துள்ளன.

பிப்ரவரி 10, 2023 இல் WSWS இல் வெளியிடப்பட்ட நம் ஐரோப்பிய கட்சிகளின் அறிக்கை விளக்கியவாறு, இந்தக் கண்டம் முழுவதும் புறநிலை ரீதியாக புரட்சிகர நிலைமை எழுந்துள்ளது. 2020 களை சோசலிசப் புரட்சியின் தசாப்தமாக அடையாளப்படுத்துவது, விருப்பமான சிந்தனை அல்ல, மாறாக சமகால உலக ஏகாதிபத்தியத்தின் முன்னேறிய நெருக்கடியைக் குறித்த ஒரு விஞ்ஞானபூர்வ முன்கணிப்பாகும். கடந்த மூன்று ஆண்டுகளில், இந்த பகுப்பாய்வு, சம்பவங்களின் போக்கால் நாளுக்கு நாள் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

பாரீசில் மக்ரோனின் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிரான 2023 போராட்டத்தின் போது நடந்த ஒரு பேரணி

இந்த விரிவுரையில் விவாதிக்கப்படும் காலகட்டத்தைப் போல் இல்லாமல், இன்று, சமூக ஜனநாயகமும் ஸ்ராலினிச அதிகாரத்துவங்களும் பெரிதும் பலவீனமான வடிவில் உள்ளன அல்லது வரலாற்றின் சக்திகளால் அழிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தற்போதைய போராட்டங்களின் அரசியல் மட்டத்திற்கு ஏற்ப குட்டி-முதலாளித்துவ அழுத்தங்கள் இல்லாமல் போய் விட்டதாக இது அர்த்தப்படுத்தாது.

1960 களின் நடுப்பகுதியில் “மறுகட்டமைப்பு” மீது எழுந்த பிரச்சினையில் காணப்பட்டதைப் போலவே, வார்த்தைப்பிரயோகம், மெய்யியல் அல்லது வரலாறு தொடர்பாக வெளித்தோற்றத்திற்கு மேலோட்டமான வேறுபாடுகளாக தெரிந்தாலும், அவை ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மீது அன்னிய வர்க்க சக்திகளின் அழுத்தத்தின் வெளிப்பாடாக, அவற்றுக்குப் பின்னால் மார்க்சிச-விரோத கருத்துருக்களைக் கொண்டிருக்க முடியும்.

புரட்சிகர சூழ்நிலைகளின் போது, புரட்சிகர கட்சியின் தலைமைக்குள்ளும் கூட, அனைத்து வகையான போக்குகளும் அபிவிருத்தி அடைகின்றன. நம் இயக்கத்தின் வரலாற்று படிப்பினைகளை உள்ளீர்த்துக் கொள்வதற்கான அயராத நடவடிக்கையின் அடிப்படையில் மட்டுமே இவற்றை எதிர்த்து போராட முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அனைத்திற்கும் மேலாக இது ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தின் பாதுகாப்பைக் குறிக்கிறது. நம் இயக்கம், ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தின் மூலம் தான், ஒரு நூற்றாண்டு காலமாக முதலாளித்துவ சக்திகளின் செல்வாக்கிலிருந்து தொழிலாள வர்க்கத்தை விடுவிக்க போராடி உள்ளது. இந்த அடிப்படையில் மட்டுந்தான், புரட்சிகரக் கட்சியான எமது கட்சி, 21 ஆம் நூற்றாண்டில் அதன் முன் வைக்கப்பட்டுள்ள வரலாற்றுப் பணிகளை மேற்கொண்டு, ஒரு சோசலிசப் புரட்சியில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை வழி நடத்தி செல்லும் அளவுக்கு உயர முடியும்.

OCI இன் மத்தியவாத சீரழிவு

OCI இன் மத்தியவாத நோக்குநிலை, நான்காம் அகிலத்தின் தொடர்ச்சியை மறுப்பதிலும், பப்லோவாதத்திற்கு எதிரான IC இன் போராட்டத்தின் முக்கியத்துவத்தை நிராகரிப்பதிலும் அதன் கூர்மையான வெளிப்பாட்டைக் கண்ட அரசியல் பேரழிவிற்கு இட்டுச் சென்றது. 1968 இல் பிரான்சில் ஒரு புரட்சிகர அலை வெடித்தபோது, அதற்கு தலைமை தாங்குவதற்குப் பதிலாக, OCI அதனால் அடித்துச் செல்லப்பட்டது.

'தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது?' என்ற அறிக்கையில் இந்த அனுபவத்தை பகுப்பாய்வு செய்து ICFI எழுதியது:

1968 இல் பிரான்சில் தொழிலாள வர்க்கம் மற்றும் மாணவ இளைஞர்களின் எழுச்சிகரமான சூழ்நிலையின் கீழ், இந்த மத்தியவாத ஊசலாட்டங்கள், OCI இனதும் ICFI இனதும் அரசியல் அபிவிருத்தியில் ஆழமான முக்கியத்துவம் கொண்டிருந்தன. சாதரணமாய் அதன் கடமைகளை செய்யவும் தொழிலாளர் இயக்கத்துக்குள் தனது இருப்பை நிலைநாட்டவும் வருடக்கணக்காக போராடி வந்த அந்த பிரெஞ்சு அமைப்பு, திடீரென ஊதிப் பெருத்த பலூன் போல வளர்ச்சி அடைந்தது. 1970 வாக்கில் அது பாரிசின் லு பூர்ஜ்ஜே (Le Bourget) விமான நிலையத்தில் 10,000 தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்ற அணிவகுப்பை அணிதிரட்டக் கூடியதாக இருந்தது. ஆயினும் லம்பேர் மற்றும் ஜூஸ்ட் இன் OCI தலைமையானது அந்த இயக்கத்துக்குள் பாய்ந்த சார்லஸ் பேர்க் போன்ற குட்டிமுதலாளித்துவ சக்திகளை ஏற்றுக் கொண்டது. கட்சி வலதுசாரி நிலைப்பாட்டை எடுப்பதற்கு நீண்டநாட்கள் எடுக்கவில்லை. [19]

மூன்று வருட இடைவெளியில், OCI பிரான்சில் முதலாளித்துவ ஆட்சியின் தூணாகவும், சர்வதேச அளவில் ஒரு அழுகிய மத்தியவாத அமைப்பாகவும் மாற்றப்பட்டது. எதிர்வரவிருக்கும் புரட்சிகர காலகட்டத்திற்கு நமது கட்சி எவ்வாறு தயாராக வேண்டும் என்பதற்கு இங்கு மகத்தான படிப்பினைகள் உள்ளன.

அரசியல் பிற்போக்குத்தனத்தின் மேற்பரப்பிற்கு கீழே வளர்ந்த அரசியல் புயல், 1968 இல் வெடித்து பிரான்சை சமூகப் புரட்சியின் விளிம்பிற்கு கொண்டு வந்தது.

1958 இல் அல்ஜீரியாவில் பிரெஞ்சு அதிகாரிகளின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பின்னர் சார்லஸ் டு கோல் ஐந்தாம் குடியரசை நிறுவினார், இது ஜனாதிபதியின் கைகளில் அதிகாரத்தை குவித்தது. இந்த நிகழ்வைப் பற்றி OCI மிகவும் அவநம்பிக்கையான மதிப்பீட்டைக் கொண்டிருந்தது. இது ஒரு போனபார்ட்டிச சதி என்று விளக்கியதோடு, அதன் வேலையை பெரும்பாலும் தலைமறைவுக்கு நகர்த்தியது.

டு கோலின் ஆட்சி சந்தேகத்திற்கு இடமின்றி பிற்போக்குத்தனமானது. ஆனால் இந்த ஆட்சியின் கீழ் ஒரு விரைவான சமூக மாற்றம் நிகழ்ந்துகொண்டிருந்தது. அரசின் நிதியுதவியுடன், வாகனத்துறை, விமானம், விண்வெளி, ஆயுதம் மற்றும் அணுசக்தி ஆகிய துறைகளில் பாரிய தொழிற்துறைகள் வளர்ந்தன. விவசாயத்தின் ஆதிக்கத்தில் இருந்த பிரான்ஸ் போருக்குப் பின்னர், ஒரு முன்னணி தொழில்துறை நாடாக மாற்றப்பட்டது. இரண்டு தசாப்தங்களுக்குள், பிரெஞ்சு விவசாயிகளில் மூன்றில் இரண்டு பங்கினர் நிலத்தை விட்டு நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் சேர்ந்து, அவர்கள் ஒரு இளம் மற்றும் போர்க்குணமிக்க சமூக அடுக்கை தொழிலாள வர்க்கத்தின் அணியில் சேர்த்தனர். தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு இதனைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது.

மே-ஜூன் 1968 பொது வேலைநிறுத்தத்திற்கு முன்னதாக ஒரு மாணவர் கிளர்ச்சி அமெரிக்காவிலும் ஜேர்மனியிலும் உருவாகியிருந்தது. அது அங்கிருந்து பிரான்சுக்கும் பரவியது.

மாணவர் இயக்கம் புதிய இடதுகளின் மார்க்சிச எதிர்ப்புக் கருத்தாக்கங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டிருந்தது. தொழிலாள வர்க்கத்தை ஒரு புரட்சிகர வர்க்கமாகக் கருதுவதற்குப் பதிலாக, நுகர்வு மற்றும் ஊடகங்கள் வழியாக முதலாளித்துவ சமூகத்தில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட பின்தங்கிய மக்கள்கூட்டமாக அவர்கள் அதனைப் பார்த்தார்கள். முதலாளித்துவ சுரண்டலுக்குப் பதிலாக, புதிய இடது அதன் சமூகப் பகுப்பாய்வில் இந்த அடிபணிதலின் பங்கை வலியுறுத்தியது. — இந்த அடிபணிதலை தனித்த உளவியல் அல்லது வாழ்க்கையின் இருப்பின் அர்த்தத்தில் விளக்குகிறது.

ஜோன்-போல் சார்த்ர், மெய்யியலாளர் மற்றும் புரட்சிகர ஜனநாயகப் பேரணியின் (Revolutionary Democratic Rally) நிறுவனர், பிரான்சில் போருக்குப் பிந்தைய புதிய இடதுகளின் முன்னணி நபராக இருந்தார் [Photo: WikiMedia Commons]

இவர்களை பொறுத்தவரையில் 'புரட்சி' தொழிலாள வர்க்கத்தால் அல்ல, மாறாக புத்திஜீவிகளாலும் சமூகத்தின் விளிம்பில் உள்ள குழுக்களாலும் வழிநடத்தப்பட வேண்டும். புதிய இடதுகளுக்கு, உந்து சக்திகள் முதலாளித்துவ சமூகத்தின் வர்க்க முரண்பாடுகள் அல்ல, மாறாக 'விமர்சன சிந்தனை' மற்றும் அறிவொளி பெற்ற உயரடுக்கின் செயல்பாடுகள் ஆகும். புரட்சியின் நோக்கம் அதிகாரம் மற்றும் சொத்துடமை உறவுகளை மாற்றுவது அல்ல, மாறாக பாலியல் உறவுகளில் மாற்றங்கள் போன்ற சமூக மற்றும் கலாச்சார மாற்றங்கள் ஆகும்.

இந்த குட்டி முதலாளித்துவ சூழலுக்குள் பப்லோவாதிகள் முற்றிலும் கரைந்து போனார்கள். ஏர்னெஸ்ட் மண்டேல் மாணவர்களை புதிய புரட்சிகர முன்னணிப் படை என்று அறிவித்தார். பப்லோவாத PCI இன் தலைவரான பியர் ஃபிராங், மாணவர் போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் குட்டி முதலாளித்துவ குழுக்கள் 'ஒரு புரட்சிகர மார்க்சிச அர்த்தத்தில் மிக உயர்ந்த அரசியல் மட்டத்தை” நிரூபித்ததாக பிரகடனப்படுத்தினார். உண்மையில், அவர்கள் முற்றிலும் மார்க்சிச விரோதிகளாவார்.

பப்லோவாத புரட்சிகர கம்யூனிஸ்ட் இளைஞர்களின் (Jeunesse communiste révolutionnaire pabliste - JCR), தலைவரான அலன் கிறிவின், 1968 நிகழ்வுகளில் முக்கிய பங்கு வகித்த அராஜகவாத டானியல் கோன்-பென்டிட், மாவோவாத அலன் ஜிமார் மற்றும் பிற மாணவர் தலைவர்களுடன் குறிப்பிடத்தக்க அரசியல் வேறுபாடுகள் எதையும் கொண்டிருக்கவில்லை. அவர்கள் இலத்தீன் வட்டாரத்தின் பொதுக் கூட்டங்களிலும் தெருச் சண்டைகளிலும் அக்கம்பக்கமாக நிற்கிறார்கள். ஒரு வரலாற்றாசிரியர் குறிப்பிட்டது போல் JCR 'ட்ரொட்ஸ்வாதிகளாக இருப்பதை விட குவேராவாதிகளாக இருந்தனர்'. அது ட்ரொட்ஸ்கியை விட சே குவேராவுடன் நெருக்கமாக இருந்தது.

அலன் கிறிவின்

மே 11, 1968 அன்று பாரிஸில் உள்ள சோர்போன் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான ஒரு மிருகத்தனமான பொலிஸ் தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்து கைது செய்யப்பட்ட பின்னர், தொழிலாள வர்க்கம் தலையிட்டது. போலீஸ் வன்முறைக்கு எதிராக ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டிய கட்டாயத்தை தொழிற்சங்கங்கள் உணர்ந்தன.

அவர்கள் உடனடியாக இவ்வியக்கத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்தனர். நாடு முழுவதும் தொழிற்சாலைகளின் ஆக்கிரமிப்பு அலை பரவியது. எங்கு பார்த்தாலும் செங்கொடிகள் பறக்கவிடப்பட்டு, பல தொழிற்சாலைகளில் நிர்வாகத்தினர் சிறைபிடிக்கப்பட்டனர். இந்த நடவடிக்கைகளால் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் பாதிக்கப்பட்டன. ஆக்கிரமிக்கப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொழிலாளர்கள் மற்றும் நடவடிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டன.

தொழிற்சங்கங்களோ அல்லது வேறு எந்த அமைப்புகளோ அத்தகைய வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடாதபோதிலும் ஒரு வாரம் கழித்து, முழு நாடும் ஒரு பொது வேலைநிறுத்தத்தால் ஸ்தம்பித்தது. பிரான்சின் 15 மில்லியன் வலுவான தொழிலாளர்களில் பத்து மில்லியன் பேர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஜேர்மனியில் தனது உயர்மட்ட ஜெனரல்களை சந்திக்க டு கோல் நாட்டை விட்டு வெளியேறினார். இறுதியாக, ஸ்ராலினிச CGT தொழிற்சங்கம் அவரது ஆட்சியைக் காப்பாற்றியது. அரசாங்கத்தின் பாரிய சமூக சலுகைகளுக்கு ஈடாக, தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு திருப்பும் உடன்படிக்கைக்கு அது பேச்சுவார்த்தை நடத்தியது.

ஸ்ராலினிஸ்டுகளின் காட்டிக்கொடுப்பை மூடிமறைப்பதில் பப்லோவாதிகள் முக்கிய பங்கு வகித்தனர். தொழிலாள வர்க்கத்தின் மீது ஸ்ராலினிசத்தின் மேலாதிக்கத்தை அவர்கள் ஒருபோதும் சவால் செய்யவில்லை மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கும் ஸ்ராலினிச தலைமைக்கும் இடையிலான உறவுகளை மோசமாக்கும் எந்த அரசியல் முன்முயற்சிகளிலிருந்தும் அவர்கள் விலகியிருந்தனர்.

ஸ்ராலினிஸ்டுகள் மாணவர் தலைவர்களை இடதுசாரி தீவிரவாதிகள் மற்றும் ஆத்திரமூட்டுபவர்கள் என்று கண்டித்தாலும், அரசியல் ரீதியாக நோக்கினால், அவர்களுடன் அவர்களால் வாழ முடிந்தது. இலத்தீன் வட்டாரத்தில் நடந்த அராஜகவாதத்தால் தூண்டப்பட்ட தெருச் சண்டைகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் அரசியல் கல்வியூட்டலுக்கு எவ்வித பங்களிப்பையும் செய்யாதுடன், பிரெஞ்சு அரசுக்கு ஒருபோதும் கடுமையான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை.

பிரான்சில் நடந்த பொது வேலைநிறுத்தம் சர்வதேச வர்க்கப் போராட்டங்களின் அலையைத் தூண்டியது, அது ஏழு ஆண்டுகள் நீடித்தது மற்றும் பிரிட்டன், ஜேர்மனி மற்றும் ஸ்ராலினிச-ஆட்சிக்கு உட்பட்ட செக்கோஸ்லோவாக்கியா உட்பட ஐரோப்பா மற்றும் உலகின் பெரும்பகுதியை புரட்டிப்போட்டது. ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில், பாசிச சர்வாதிகாரங்கள் தூக்கி எறியப்பட்டன.

பப்லோவாதிகளைப் போல் OCI மாணவர் இயக்கத்தில் தன்னைக் கரைத்துக் கொள்ளவில்லை. அது வேலை செய்தது மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆட்சேர்ப்பு செய்தது. எவ்வாறாயினும், அதன் அரசியல் பணியின் முக்கியத்துவம் தொழிலாள வர்க்கம் மற்றும் தொழிற்சாலைகளை நோக்கியே இருந்தது.

ஆனால் நான்காம் அகிலத்தின் தொடர்ச்சியை அது நிராகரித்தமை, குட்டி முதலாளித்துவ அழுத்தங்களுக்கு முன்னால் அதை நிராயுதபாணியாக்கியது. OCI பல புதிய சக்திகளை, குறிப்பாக இளைஞர்களையும் மாணவர்களையும் ஈர்த்தது. ஆனால் அது பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் அடிப்படையில் அவர்களுக்கு கல்வி கற்பிக்கவில்லை. இது ஒரு தெளிவற்ற மத்தியவாத தந்திரத்தின் அடிப்படையில் அவர்களை ஆட்சேர்ப்பு செய்தது..

வேலைநிறுத்தத்தின் போது OCI தனது அரசியல் நிலைப்பாட்டை பின்வருமாறு சுருக்கமாகக் கூறியது:

அதிகாரத்திற்கான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் மூலோபாயம் மற்றும் தந்திரோபாயங்கள் ... தொழிலாளர்கள் மற்றும் அவர்களது அமைப்புகளின் ஐக்கிய வர்க்க முன்னணிக்கான போராட்டத்தை உள்ளடக்கியது, இது மே 1968 நடைபெற்ற போராட்டத்தில் ஒரு தேசிய பொது வேலைநிறுத்தக் குழுவுக்கான முழக்கத்தின் குறிப்பிட்ட வடிவத்தை எடுத்தது. [20]

'தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் அமைப்புகளின் ஐக்கிய வர்க்க முன்னணி' என்ற தெளிவற்ற சூத்திரம் தொழிலாள வர்க்கத்திற்கும் ஸ்ராலினிச மற்றும் சீர்திருத்தவாத அமைப்புகளுக்கும் இடையிலான சமரசம்செய்ய முடியாத மோதலை மங்கலாக்கியது. OCI இனால் விரும்பப்பட்ட ஒரு 'பொது வேலைநிறுத்தக் குழு' என்பது, பல்வேறு தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டிருக்குமே தவிர, ஒருபோதும் 'அதிகாரத்திற்கான போராட்டத்தை' நடத்தியிருக்காது.

ஜேர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தபோது, சமூக ஜனநாயகக் கட்சிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே ஒரு ஐக்கிய முன்னணிக்கு ட்ரொட்ஸ்கி அழைப்பு விடுத்திருந்தார். அவர் முன்மொழிந்தது நாஜிகளுக்கு எதிரான ஒரு நடைமுறை தற்காப்புக் கூட்டணியே தவிர, அரசியல் பதாகைகளின் கலவை அல்ல. ஸ்ராலினிஸ்டுகளும் சோசலிசக் கட்சியினரும் பின்னர் பிரான்சில் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கியபோது, ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எச்சரித்தார்:

ஐக்கிய முன்னணி பல வாய்ப்புகளைத் திறக்கிறது, ஆனால் அதற்கு மேல் எதுவும் இல்லை. ஐக்கிய முன்னணி எதனையும் தீர்மானிக்கவில்லை. வெகுஜனங்களின் போராட்டம் மட்டுமே தீர்மானிக்கிறது. [21]

'தொழிலாளர்களின் ஐக்கிய முன்னணி'க்கான அழைப்பு, அடுத்த காலகட்டத்தில் OCI இன் மைய முழக்கமாக இருந்தது. 1971 வாக்கில், அடுத்த மூன்று தசாப்தங்களுக்கு பிரான்சில் முதலாளித்துவ ஆட்சியின் முக்கிய கருவியாக இருந்த பிரான்சுவா மித்திரோன் தலைமையிலான சமூக ஜனநாயகவாதிகளினதும், ஸ்ராலினிஸ்டுகளினதும் கூட்டணியான 'இடதுகளின் ஐக்கியம்' (Union de la gauche) என்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவை இது அர்த்தப்படுத்தியது.

மித்திரோன் ஒரு நேர்மையற்ற அரசியல் கையாளல்காரராக இருந்தார், அவர் தீவிர வலதுசாரிகளுடனும், தீவிர இடதுசாரிகளுடனும் கூடி இயங்கக்கூடியவராக இருந்தார். விச்சி ஆட்சியை வலதுபுறத்தில் இருந்து எதிர்க்கும் ஒரு பாசிச அமைப்பில் அவர் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் அவர் விச்சி ஆட்சியில் ஒரு அரசு ஊழியராக இருந்தார், இறுதியாக டு கோல் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளின் இயக்கத்திற்கு போட்டியாக தனது சொந்த எதிர்ப்பியக்க அமைப்பை உருவாக்கினார்.

நான்காம் குடியரசின் கீழ், ஒரு முதலாளித்துவ அரசியல்வாதியாக, அவர் 11 வெவ்வேறு அரசாங்கங்களின் ஒரு பகுதியாக இருந்தார். அல்ஜீரியப் போரின் உச்சத்தில், ஆயிரக்கணக்கான எதிர்ப்பியக்க போராளிகள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டபோது, அவர் உள்துறை அமைச்சராகவும் நீதி அமைச்சராகவும் இருந்தார்.

1947 இல் வருங்கால பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் [Photo: WikiMedia Commons]

டு கோலின் ஜனாதிபதி பதவிக்காலத்தில், மித்திரோன் தன்னை மீண்டும் புதுப்பித்துக்கொண்டார். எழுபது வயதுகளைக் கடந்த ஒரு நபரான டு கோலால் வேகமாக வளர்ந்து வரும் தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதை அவர் மிக ஆரம்பத்திலேயே புரிந்து கொண்டார். CGT தொழிற்சங்க கூட்டமைப்பைக் கட்டுப்படுத்திய மற்றும் இன்னும் தொழிலாள வர்க்கத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியை அரசாங்கத்தில் ஒருங்கிணைப்பதற்கான வழியை அவர் தேடினார்.

1965 இல், மித்திரோன் 'இடதுகளின்' கூட்டு வேட்பாளராக டு கோலுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு, இரண்டாம் சுற்றில் 45 சதவீத வாக்குகளைப் பெற்றார். 1971 ஆம் ஆண்டில், பலமிழந்த சமூக ஜனநாயகவாதிகளை பல்வேறு குழுக்களுடன் இணைப்பதன் மூலம் ஒரு வருடத்திற்கு முன்பு உருவாக்கப்பட்ட சோசலிஸ்ட் கட்சியின் தலைமையை அவர் கைப்பற்றினார். 1972ல், அரசாங்கத்திற்கான பொது வேலைத்திட்டத்தின் (programme commun) அடிப்படையில் ஸ்ராலினிஸ்டுகளுடன் ஒரு கூட்டணியான இடதுகளின் ஐக்கியம் என்பதை அவர் தொடங்கினார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர், 1981 இல், அவர் பிரெஞ்சு குடியரசின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1995 வரை பதவி வகித்தார்.

ரொனால்ட் ரீகனுடன் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் [Photo: WikiMedia Commons]

மித்திரோனின் தொழில் வாழ்க்கையை முன்னேற்றுவதில் OCI முக்கிய பங்கு வகித்தது. 1970 ஆம் ஆண்டிலேயே, பாரிஸ் கம்யூனின் நூற்றாண்டு விழாவின்போது OCI ஏற்பாடு செய்திருந்த வெகுஜன பேரணியில் அவர் ஒரு சிறப்புப் பேச்சாளராக இருந்தார்.

1971 ஆம் ஆண்டில், டசின் கணக்கான OCI உறுப்பினர்கள் சோசலிஸ்ட் கட்சிக்குள் மித்திரோனுக்கு உதவுவதற்காக அனுப்பப்பட்டனர். அதே நேரத்தில் அவர்கள் OCI இன் கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்து பணியாற்றினார்கள். உண்மையில், அவர்கள் சோசலிஸ்ட் கட்சியில் சேர மித்திரோனால் அழைக்கப்பட்டனர்.

ஜாக் கிர்ஸ்னெர் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பாளராக மிகவும் வெற்றிகரமான வாழ்க்கையை மேற்கொண்ட சார்லஸ் பேர்க், 1971 இல் என்ன நடந்தது என்பது பற்றி சமீபத்தில் பகிரங்கமாக சாட்சியமளித்துள்ளார்:

எப்பினே காங்கிரஸுக்கு (Epinay congress) சில மாதங்களுக்குப் பின்னர் [மித்திரோன் PS தலைமையை காங்கிரஸ்], மித்திரோன் AJS (OCI இன் இளைஞர் அமைப்பு) தேசிய செயலாளரைப் பார்க்க விரும்புகிறார் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நான் தயங்கினேன். என்னை அங்கு செல்லுமாறு உத்தரவிட்ட லம்பேர் இடம் இது பற்றி குறிப்பிட்டேன். இந்த நிலையில் அரசியல் குழுவில் இதுபற்றி பேசுவது தேவையற்றது என அவர் கருதினார். அந்த நேரத்தில், எங்கள் உறவுகள் சிறப்பாக இருந்தன. நாங்கள் தினமும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வோம்.

நான் லிப் [ஒரு பாரிசியன் உணவகத்தில்] இல் சோசலிஸ்ட் கட்சியின் முதல் செயலாளரை [மித்தரோன்] ச ந்தித்தேன். மற்றவர்கள் அனைவரும் வெளியில் இருக்கிறார்கள்... அவர் AJS இன் முன்னேற்றத்திற்கு என்னை வாழ்த்தினார் — பிப்ரவரி 1, 1970 அன்று நடந்த பேரணியால் அவர் வெளிப்படையாக கவரப்பட்டிருந்தார். அந்த நேரத்தில், சோசலிஸ்ட் கட்சியில் அமைப்பு ரீதியாக அதிகம் பேர் இல்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பின்னர் ஒரு கட்டத்தில், 'வெளியிலிருக்கும் ஸ்ராலினிஸ்டுகளுக்கும், உள்ளிருக்கும் குட்டி முதலாளித்துவவாதிகளுக்கும்' (அதாவது CERES இற்கு) எதிராக, 'கொடி விரிக்கப்பட்டு' ஒரு போக்கை உருவாக்குவதற்காக சில AJS ஆர்வலர்கள் பகிரங்கமாக PS இல் இணைந்தாலும், அவருக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று எனக்கு விளக்கினார்.

இந்த நிலை நீண்ட காலம் நீடிக்க முடியாது என்பதை நான் அவரிடம் கூறினேன். அவர் என்னுடன் உடன்படுகிறார். 'வேறுபாடுகள் மிக அதிகமாக இருக்கும்போது நீங்கள் வெளியேறுவீர்கள்' என்று அவர் கூறுகிறார். அதற்கு 'அல்லது நீங்கள் எங்களை வெளியேற்றுவீர்கள்!' என்று நான் பதிலளிக்கின்றேன். அவர் சிரித்து தலையசைக்கிறார். ஒரு விரைவான பதில் தருவதாக நான் அவருக்கு உறுதியளிக்கிறேன். [22]

இறுதியில், OCI 'கொடி விரிக்கப்பட்டு' PS க்குள் நுழையவில்லை, ஆனால் இரகசியமாக அதனை செய்தது.

சோசலிஸ்ட் கட்சிக்குள் நுழைந்தவர்களில் மிகவும் பிரபலமானவர் லியோனல் ஜோஸ்பன் ஆவார், அவர் 1960 களின் நடுப்பகுதியில் OCI இல் சேர்ந்தார். OCI இன் உறுப்பினராக இருந்தபோது, அவர் மித்திரோனின் நெருங்கிய ஒத்துழைப்பாளர்களில் ஒருவராக இருந்தார். 1997 முதல் 2002 வரை, ஜோஸ்பன் பிரான்சின் பிரதமராக இருந்தார்.

1970 களில் சோசலிஸ்ட் கட்சியில் இணைந்த OCI இன் மற்றொரு உறுப்பினர், அடிபணியா பிரான்சின் தற்போதைய தலைவரான ஜோன் லூக் மெலோன்சோன் ஆவார்.

மே 11, 2019 அன்று மார்சை இல் ஜோன் லூக் மெலோன்சோன். (AP புகைப்படம்/கிளாட் பாரிஸ்)

மேலும் OCI, பிரதான பிரெஞ்சு மாணவர் அமைப்பு (UNEF) மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பு FO (Force ouvière) ஆகியவற்றைக் கட்டுப்படுத்தியது. இவை இரண்டும் மித்திரோனை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகித்தன. பியர் லம்பேர் ஒவ்வொரு வாரமும் FO இன் தலைவரான ஆந்ரே பேர்ஜெரோன் ஐ சந்தித்தார். மேலும் அவரது ஊதியம் உட்பட பல OCI தலைவர்களின் ஊதியம் FO ஆல் வழங்கப்பட்டது.

அவர்களின் சர்வதேச வேலைகளில், OCI தலைவர்கள் அனைத்துலகக் குழுவை நோக்கி அதிகளவில் வெறுப்புடன் இருந்தனர். உலகெங்கிலும் உள்ள மத்தியவாதிகளுடனான தொடர்புகளின் அடிப்படையில் அவர்கள் தங்கள் சொந்த சர்வதேச நடவடிக்கைகளை நிறுவத் தொடங்கினர்.

அவர்களின் மிகவும் கோட்பாடற்ற உறவுகளில், கிய்யர்மோ லோரா தலைமையிலான பொலிவியன் புரட்சிகர தொழிலாளர் கட்சியுடன் (POR) உள்ளவர்களை நாம் மேற்கோள் காட்டலாம். லோரா 1953 இல் பப்லோவை ஆதரித்ததோடு, முதலாளித்துவ தேசியவாதிகளுடன் ஒத்துழைத்த நீண்ட வரலாற்றையும் கொண்டிருந்தார்.

ஆகஸ்ட் 1971 இல், பொலிவியன் இராணுவம் ஒரு சதியை நடத்தியது, இதன் விளைவாக ஜெனரல் தோரெஸின் 'இடது' இராணுவ ஆட்சி தூக்கியெறியப்பட்டு, மக்கள் மன்றம் அழிக்கப்பட்டது. தோரெஸின் அரசாங்கத்தை ஆதரித்து, ஆட்சி கவிழ்ப்பு ஏற்பட்டால், இராணுவ ஆட்சி தொழிலாள வர்க்கத்திற்கு ஆயுதங்களை வழங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், லோரா இந்த அரசியல் பேரழிவில் ஆழமாக சம்பந்தப்பட்டிருந்தார்.

SLL இன் உடன்பாட்டுடன் வேர்க்கர்ஸ் லீக், லோராவின் POR இன் கொள்கைகள் பற்றிய விமர்சனத்தை வெளியிட்டபோது, OCI அதன் சர்வதேசப் பிரிவின் கூட்டத்தை பாரிசில் கூட்டி, POR ஐ பகிரங்கமாக தாக்கியதன் மூலம் SLLஉம் வேர்க்கர்ஸ் லீக்கும் ஏகாதிபத்தியத்திற்கு சரணடைந்ததாக கண்டிக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டது. மேலும், லோராவை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உறுப்பினர் என்று தவறாகக் கூறியது.

பொலிவிய ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, OCI முற்றிலும் மத்தியவாத அடிப்படையில் ஜேர்மனியின் எசென் (Essen) நகரில் ஒரு இளைஞர் பேரணியை ஏற்பாடு செய்தது. ஸ்பானிய பாட்டாளி வர்க்கம், அமெரிக்க ரொபேர்ட்சன்வாதிகள் மற்றும் CIA நிதியுதவி பெற்ற அமெரிக்க தேசிய மாணவர் சங்கம் ஆகியவற்றின் தோல்வியில் பெரும் பங்கு வகித்த ஸ்பானிய POUM இன் பிரதிநிதிகளை அது இதற்கு அழைத்திருந்தது.

எசென் இளைஞர் பேரணி 1971 [Photo: Élie Kagan / La contemporaine]

இயங்கியல் சடவாதத்தின் வளர்ச்சிக்கான போராட்டத்தில் இளைஞர்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் இளம் சோசலிஸ்டுகள் இந்தப் பேரணியில் ஒரு தீர்மானத்தை முன்வைத்தபோது, OCI அதற்கு பகிரங்கமாக எதிராக வாக்களித்தது.

OCI உடனான பிளவு

அக்டோபர் 24, 1971 இல், SLL தலைமையிலான ICFI பெரும்பான்மை, OCI உடன் ஒரு பிளவை பகிரங்கமாக அறிவித்தது.

OCI ஐ ஒரு மத்தியவாத அமைப்பாக அது குணாதிசயப்படுத்தியமை அரசியல் ரீதியாக சரியானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எவ்வாறாயினும், SWP உடனான போராட்டத்தை போலல்லாமல், ICFI க்குள் அல்லது தேசிய பிரிவுகளில் அதன் காரியாளர்களிடையே விரிவான கலந்துரையாடல் இல்லாமல் இந்தப்பிளவு மேற்கொள்ளப்பட்டது.

இது பரஸ்பர சம்மதத்துடனான விவாகரத்துப் போல நடத்தப்பட்டது. எந்தவொரு தீவிரமான கலந்துரையாடலும் தொடங்குவதற்கு முன்பே அது முடிந்ததாக இரு தரப்பும் அறிவித்தன. 1953 மற்றும் அதன் அடுத்த காலங்களில் ICFI யின் அனைத்து உறுப்பினர்களிடையேயும் பல ஆவணங்கள் எழுதப்பட்டு கலந்துரையாடப்பட்டது போன்றோ அல்லது 1963 ஆம் ஆண்டில், அமெரிக்க தோழர்கள் SWP க்குள் மற்றொரு வருடத்திற்கு பொறுமையான போராட்டத்தை நடத்தியது போன்றோ இல்லாமல், அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்க தீவிர முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை. 1985-86 WRP உடனான பிளவின் போது பிரிட்டிஷ் பிரிவில் ICFI வெற்றிகரமாகச் செய்ததைப் போல, பிரெஞ்சுப் பிரிவில் ஆதரவை வெல்வதற்கு SLL முறையான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

'தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக் கொடுத்தது' என்பதில், ICFI கருத்து தெரிவித்தது:

இந்த நிலைமைகளின் கீழ் அந்த பிளவானது அனைத்துலகக் குழுவின் காரியாளர்களைக் கல்வியூட்டும் நிலைப்பாட்டில் இருந்தும் மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்களின் மிக முன்னேறிய பிரிவுகளை தெளிவுபடுத்தும் நிலைப்பாட்டில் இருந்தும் பார்க்கையில் தீர்க்கரமாக காலத்திற்கு முந்தியதாக இருந்தது. SLL 1961 இல் SWP இன் சீரழிவுக்கு எதிராக போராடிய போது அது ஏற்றிருந்த சர்வதேச கடமைகளில் இருந்து அது பின்வாங்கியதையே எடுத்துக்காட்டியது. [23]

விரைவில் SLL பிளவு என்பது, இயங்கியல் சடவாத பிரச்சினை தொடர்பாக நடந்ததாகவும், வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கு பற்றிய கேள்விகளால் அல்ல எனவும் கூறுகிறது. மார்ச் 1, 1972 இல் “ICFI (பெரும்பான்மை) அறிக்கை” வலியுறுத்துகிறது:

புரட்சிகரக் கட்சியின் அடித்தளமாக மார்க்சிச தத்துவத்திற்கு உள்ள இடத்தைப் பற்றிய கேள்வியில் உண்மையில் பிளவு ஏற்பட்டது.[24]

ஏப்ரல் 14, 1972 இல் 'ICFI இன் நான்காவது மாநாட்டின் அறிக்கை' கூறுகிறது:

எல்லாவற்றிலும் மிக அடிப்படையான பிரச்சினையில் உடைவு ஏற்பட்டுள்ளது. பப்லோவாதத்தின் சீரழிவின் வேரில் இருந்தது மார்க்சிச வழிமுறையாகும். [25]

இது SLL இன் ஒரு பொய்யான விவாதமாகும். எவ்வாறாயினும், மத்தியவாதத்தின் வழிமுறை வேர்கள் தொடர்பான விமர்சனம் எவ்வளவிற்கு அவசியமானதாக இருந்தாலும், இன்னும் உள்ளதும் கவனத்திற்குள்ளாக்கப்பட வேண்டிய அடிப்படை அரசியல் மற்றும் வேலைத்திட்ட கேள்விகளை இயங்கியல் சடவாதத்தின் விடயங்கள் தீர்த்துவிடவோ அல்லது தேவையற்றதாக்கிவிடவோ இல்லை.

வழிமுறை மற்றும் அறிவுசார்ந்த கோட்பாடு பற்றிய கேள்விக்கு கொடுக்கப்பட்ட ஒருதலைப்பட்சமான முக்கியத்துவம், பிரிட்டிஷ் பிரிவின் அணிகளுக்குள் வேறுபாடுகள் பெருகிக்கொண்டிருந்த நிலைமைகளின் கீழ், முக்கிய அரசியல் பிரச்சினைகள் குறித்த விவாதத்தைத் தவிர்ப்பதற்கான ஒரு வழிமுறையாக மாறியது.

பின்னர், இயங்கியல் சடவாதம், ஜெர்ரி ஹீலியின் இயங்கியலின் கருத்துவாத விளக்கத்திற்கு வழிவகுத்தது, இது பிரிட்டிஷ் பிரிவின் அரசியல் சீரழிவுக்கு ஒரு மறைப்பாக செயல்பட்டது. ஆனால் இது இந்த பள்ளியின் 10ஆவது விரிவுரையின் விடயமாக இருக்கும்.

இருப்பினும் ஒரு விஷயத்தை வலியுறுத்த வேண்டும். OCI உடனான பிளவில் மெய்யியலை முக்கிய பிரச்சினையாக SLL அறிவித்தாலும், பிரான்சில் அதன் மையத்தைக் கொண்டிருந்த மார்க்சிசத்திற்கு எதிரான கருத்தியல் தாக்குதலுக்கு அது கவனம் செலுத்தவில்லை. அது 1968க்குப் பின்னர் தீவிரமடைந்தது. சார்த்தர், அல்துசர் மற்றும் பெர்னார்ட்-ஹென்றி லெவி, ஃபூக்கோ மற்றும் பின்நவீனத்துவத்தின் பல பிரதிநிதிகளும் இப்போது உலகின் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றனர்.

WRP உடனான உடைவுக்குப் பின்னர்தான், ஸ்ரைனர் மற்றும் பிரென்னருக்கு எதிரான விவாதத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இந்த முக்கியமான பிரச்சினைகளைக் கையாண்டது.

SLL இல் மத்தியவாத போக்குகள்

சோசலிச தொழிலாளர் கழகம் அதன் சர்வதேச பொறுப்புகளிலிருந்து பின்வாங்கி, குழப்பத்தின் மரபை மட்டுமே விட்டுச்செல்லக்கூடிய ஒரு அரசியல் அவசரத்துடன் OCI உடன் முறித்துக் கொண்டது ஏன்?

பப்லோவாத மறுஐக்கியத்திற்கு எதிரான அதன் கொள்கை ரீதியான போராட்டத்தின் விளைவாக, 1960களின் போது பிரிட்டனில் SLL பிரமிக்கத்தக்க வெற்றிகளைப் பெற்றது. பப்லோவாதிகள் குட்டி-முதலாளித்துவ எதிர்ப்பு அரசியலில் மூழ்கிக்கொண்டு, ஸ்ராலினிசம் மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்திற்கு ஊக்கமளிப்பவர்களாக செயல்பட்ட நேரத்தில், சோசலிச தொழிலாளர் கழகம் தொழிலாள வர்க்கத்திற்குள்ளும் இளைஞர்கள் மத்தியிலும் தனது செல்வாக்கை சீராக விரிவுபடுத்திக் கொண்டிருந்தது.

1963 வாக்கில், தொழிற் கட்சியின் இளம் சோசலிஸ்டுகளினதும், அதன் செய்தித்தாளினதும் தேசியத் தலைமையின் பெரும்பகுதியை SLL வென்றெடுத்தது. தொழிற் கட்சி, இளம் சோசலிஸ்டுகளின் தலைமையை வெளியேற்றியபோது, சோசலிச தொழிலாளர் கழகம் அதை தனது சொந்த இளைஞர் பிரிவாக மாற்றியது. 1964 இல், ஹீலி ஒரு தினசரி ட்ரொட்ஸ்கிச செய்தித்தாள் தொடங்குவதற்கு முன்மொழிந்தார். மேலும் 1969 இல் தினசரி வேர்க்கர்ஸ் பிரஸ் இன் முதல் பதிப்பு வெளிவந்தது. SLL தொழிற்சாலைகளில் அதன் பிரசன்னத்தை நிலைநாட்டியதோடு, சிறந்த கலைஞர்களையும் வென்றெடுத்தது.

ICFI —OCI உடனான பிளவுக்குப் பின்னர்— அதன் நான்காம் மாநாட்டுக்காக ஏப்ரல் 1972 இல் கூடியபோது, அது இலங்கையில் தனது பிரிவையும் அமெரிக்காவில் வேர்க்கர்ஸ் லீக்கையும் ஒருங்கிணைத்தது மட்டுமல்லாமல், ஜேர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவிலும் புதிய பிரிவுகளை நிறுவியது. ஆனால் SLL அதன் அமைப்புரீதியான வெற்றியின் உச்சத்தை அனுபவித்தாலும், அது ஆபத்தான மத்தியவாத திசையில் நகர்ந்து கொண்டிருந்தது. ஹீலியின் வாழ்க்கை வரலாற்றில் டேவிட் நோர்த் விளக்குவது போல்:

… அனைத்துலகக் குழுவின் வளர்ச்சிக்கு அதன் சர்வதேச அரசியல் வழியை வலுப்படுத்துவதற்குப் பதிலாக பிரிட்டிஷ் பிரிவின் பொருளாதாய வளர்ச்சியே தீர்க்கமான முன்நிபந்தனையும் அத்தியாவசிய அடித்தளமும் என்ற நம்பிக்கை SLL தலைமைக்குள் படிப்படியாகப் நிலைகொண்டது; மேலும் இதிலிருந்து SLLக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கும் இடையேயான உறவு பற்றிய தவறான மற்றும் பெருகிய முறையில் தேசியவாதக் கருத்தாக்கம் வெளிப்பட்டது. [26]

இந்த கருத்தாக்கம் 1966 ஆம் ஆண்டிலேயே ICFI இன் மூன்றாவது மாநாட்டிற்கு நான்கு மாதங்களுக்குப் பின்னர் ஹீலி எழுதிய 'நான்காம் அகிலத்தின் பிரச்சனைகள்' இல் உருவமைக்கப்பட்டுள்ளது, இது ஏற்கனவே இந்த விரிவுரையின் தொடக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

பப்லோவாதிகளுக்கு எதிரான போராட்டத்தை, பிரிட்டனில் நடைமுறை வேலை என்ற தேசிய அச்சில் மாற்றுவதற்கான வளர்ந்து வரும் அழுத்தத்தை வெளிப்படுத்தும் மற்றொரு பகுதி 'நான்காம் அகிலத்தின் பிரச்சனைகள்' என்பதில் உள்ளது. ஹீலி SWP இன் காட்டிக்கொடுப்பு பற்றிய புதியதும், மார்க்சிசமற்றதுமான விளக்கத்தை முன்வைத்தார்.

பப்லோவாதத்திற்கு SWP சரணடைந்ததற்கான காரணம், 'பனிப்போர் மற்றும் அமெரிக்காவில் SWP செயல்பட்டு வரும் பொருளாதார எழுச்சி ஆகியவற்றின் கடினமான சூழ்நிலையில் இல்லை', மாறாக அதன் புரட்சிகரமற்ற மூலங்களில் உள்ளது என்று அவர் கூறினார்.

ட்ரொட்ஸ்கியின் தத்துவார்த்த மேதமையானது, சோவியத் ஒன்றியத்தின் முழு புரட்சிகர அனுபவத்திலிருந்தும், அதன் வெற்றி மற்றும் சீரழிவில் இருந்தும் உருவானது. கனனின் அரசியல் மறுபுறத்தில், முக்கியமாக சோவியத் சீரழிவு மற்றும் சோவியத் ஒன்றியத்திற்கு வெளியே சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தோல்வி ஆகியவற்றிலிருந்து உருவாகின. [27]

ஒரு புதிய அகிலமானது வெற்றிகரமான ஒரு புரட்சியின் விளைபொருளாக மட்டுமே உருவாகமுடியும் என்ற அடிப்படையில், 1938 இல் நான்காம் அகிலத்தை ஸ்தாபிப்பதற்கான ட்ரொட்ஸ்கியின் முடிவை எதிர்த்திருந்த மத்தியவாத போக்குகளுக்கு இது ஒரு விட்டுக்கொடுப்பாக இருந்தது. மேலும் இது Voix Ouvrière (VO) க்கும் ஒரு சலுகையாக இருந்தது, அது நான்காம் அகிலம் ஒரு குட்டி முதலாளித்துவ சமூக சேர்க்கை என்று கூறப்பட்டதன் காரணமாக சேர மறுத்தது. சோசலிசப் புரட்சியின் சர்வதேச வேலைத்திட்டத்தை விரிவுபடுத்துவதிலிலும் பாதுகாப்பதிலும் மார்க்சிஸ்டுகளின் தத்துவார்த்த நடவடிக்கையின் வரலாற்று முக்கியத்துவத்தை இது இழிவுபடுத்தியது.

ஒரு தனிப்பட்ட, உளவியல் நிலைப்பாட்டில், ஹீலியின் எதிர்வினை புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. தான் மதித்த, மற்றும் யாரிடம் இருந்து கற்றுக்கொண்டாரோ அந்த கனனின் சரணாகதியை அவர் தனிப்பட்ட அடிபணிவாக உணர்ந்தார். 'நான்காம் அகிலத்தின் பிரச்சனைகள்' இல் அவரது கோபத்தை தெளிவாக உணர முடியும்.

ஜேம்ஸ் பி. கனன்

குட்டி முதலாளித்துவ அழுத்தத்திற்கு அடிபணியாமல், தொழிலாள வர்க்கத்தை வெற்றிக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்ற உறுதியான விருப்பத்தை ஹீலி கொண்டிருந்தார். இதை அவரால் ஏராளமான பார்வையாளர்களுக்கு கொண்டுசெல்ல முடிந்தது. 1970 களின் முற்பகுதியில் அவரை அறிந்த எங்களுக்கு இது தெளிவாக நினைவில் உள்ளது.

ஆயினும்கூட, டேவிட் நோர்த் விளக்கியது போல், இது ஒரு தவறான மற்றும் ஆபத்தான கருத்தாக்கமாகும், இது சோசலிச தொழிலாளர் கழகத்தின் அரசியல் அச்சை, ஒரு தேசியவாத மற்றும் மத்தியவாத திசையில் செலுத்தியது:

அது உலகக் கட்சியை அதன் தேசியப் பகுதிகளின் ஒரு கூட்டாக குறைத்து, ஒருங்கிணைந்த அகிலத்திற்குள் மார்க்சிஸ்டுகளின் ஒத்துழைப்பை, ஒரு தேசியக் குழுவின் வெற்றிகளை மற்றொரு தேசியக் குழு முன்மாதிரியாகக் கொள்வதுதான் என மாற்றியது... பிரிட்டனில் அதிகாரத்தை கைப்பற்றுவதன் ஒரு துணை விளைபொருளாக மட்டுமே நான்காம் அகிலத்தை உருவாக்கமுடியும் என்ற கருத்து தவறானது. ஒருபுறம், அது ஏகாதிபத்தியத்தின் உலக நெருக்கடி, சர்வதேச வர்க்கப் போராட்டம் மற்றும் பிரிட்டனில் அவற்றின் குறிப்பிட்ட வெளிப்பாடு ஆகியவற்றுக்கு இடையேயான இயங்கியல் தொடர்புகளை நிராகரித்தது; மறுபுறம், எந்த நாட்டிலும் மார்க்சிஸ்டுகளின் அமைப்பு என்பது உலக சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதியாக மட்டுமே சாத்தியம் என்பதை மறுத்தது. [28]

மற்றும்:

பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கத்திற்குள் SLL இன் முன்னேற்றங்களின் முக்கியத்துவம் எதுவாக இருந்தாலும், அனைத்துலகக் குழு மற்றும் அதன் பிரிட்டிஷ் பிரிவின் எதிர்காலம், பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான சர்வதேசப் போராட்டத்தை ஆழப்படுத்துவதையும் அதன் படிப்பினைகளை உள்ளீர்த்துக் கொள்வதையும் சார்ந்துள்ளது. SWP இன் சீரழிவு எதனை எடுத்துக்காட்டியதென்றால், 'பாட்டாளி வர்க்க நோக்குநிலை' அல்லது ஒரு அமைப்புரீதியான உடைவு ஆகியவற்றால் திருத்தல்வாதத்துடன் கணக்குகளை தீர்க்க முடியாது என்பதைத்தான். சந்தர்ப்பவாதத்தின் பரவலானது ஆழமான சமூக வேர்களைக் கொண்ட ஒரு வரலாற்று நிகழ்வுபோக்கு ஆகும்; அதனால்தான் அதற்கு எதிரான போராட்டமும் மிகவும் நீடித்த மற்றும் கடினமான நிகழ்ச்சிப்போக்காக உள்ளது. [29]

பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிட்டனில் நடைமுறை வேலை என்ற தேசிய அச்சுக்கு மாறியது, குட்டி முதலாளித்துவ அழுத்தங்களை எதிர்க்கும் சோசலிச தொழிலாளர் கழகத்தின் சக்தியை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது:

பப்லோவாத திருத்தல்வாதத்தின் பிரச்சனை SWP உடனான பிளவு மூலம் இறுதியாக தீர்க்கப்படவில்லை அல்லது தீர்க்கப்படவும் முடியவில்லை. மறுஐக்கியத்திற்கான நிராகரிப்பு, அன்னிய வர்க்க சக்திகளின் தற்போதைய அழுத்தங்களுக்கு எதிராக SLL மற்றும் ICFI க்கு தடுப்பூசி போடவில்லை. 1963 பிளவின் தாக்கங்களும் படிப்பினைகளும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, ஆழப்படுத்தப்படாதிருந்த அளவிற்கு, அடிப்படையில் சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தின் முன் எதிர்பார்ப்பாக இருந்த 1960 களின் மத்தியில் நடுத்தர வர்க்கத்தின் அரசியல் தீவிரமயமாக்கல், SLL மற்றும் ICFI மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. [30]

SLL இன் பிரச்சனைகள், அதன் தலைமைக்குள் தெளிவான பப்லோவாத குணாதிசயத்தின் நிலைப்பாடுகள் வெளிப்பட்டபோது தீவிரமடைந்தன, அமைப்புரீதியான வெற்றிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதனால் அவை அரசியல் ரீதியாக தெளிவுபடுத்தப்படவில்லை.

ஜெர்ரி ஹீலி, மைக்கல் பண்டா மற்றும் கிளிஃவ் சுலோட்டர், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் கூட்ட அரங்கத்தில், 13 மார்ச், 1983

மைக்கல் பண்டா, மாவோ சேதுங், ஹோ சி மின் மற்றும் அப்தெல் நாசர் ஆகியோரிடம் ஒரு சங்கடமான மோகத்தைக் காட்டினார், இது ஒருபோதும் முறையாக சவால் செய்யப்படவில்லை. நான்காம் அகிலம் 'புனரமைக்கப்பட வேண்டும்' என்ற OCI இன் நிலைப்பாட்டிற்கு சுலோட்டர் அனுதாபங்களை வெளிப்படுத்தினார், மேலும் ICFI இன் செயலாளராக தனது பொறுப்புகளை பெருகிய முறையில் புறக்கணித்தார். ஆனால் சோசலிச தொழிலாளர் கழகத்தின் தலைமைத்துவத்தில் வெளிப்படையான மோதல்கள் நடைமுறைப் பணிகளின் வெற்றிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று ஹீலி அஞ்சினார். மேலும் வேறுபாடுகள் மூடிமறைக்கப்பட்டன. டேவிட் நோர்த் எழுதுகிறார்:

ஆழமான அரசியல் பிரச்சினைகள் அன்றாட வெளிப்பாட்டைக் காட்டும் மேலோட்டமான வடிவங்களான அமைப்புரீதியான பிரச்சனைகளைக் கையாளும்போது கட்சியின் நடைமுறைப் பணிகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியவர்களை இரக்கமின்றி கையாள ஹீலி தயங்கவில்லை. ஆனால் அவர் வேலைத்திட்டம் பற்றிய கேள்விகளில் நேரடி மோதலைத் தவிர்க்க விரும்பினார்; உண்மையில், ஹீலியின் எரிமலை வெடிப்புகள் பெரும்பாலும் SLL க்குள் இருக்கும் பிரச்சனைகளின் மூலத்திலிருந்து கவனத்தை திசை திருப்ப உதவியது. [31]

'புதிய நடைமுறைகள்' என்று அவர் அழைத்ததன் மூலம் பிரச்சனைகளை அடக்கவோ அல்லது தணிக்கவோ முடியும் என ஹீலி பெருகிய முறையில் உறுதியாக நம்பினார். தினசரி செய்தித்தாள் அத்தகைய நடைமுறையாக இருந்தது. ஜேர்மன் (மற்றும் பல) பிரிவுகளின் மூத்த உறுப்பினர்கள் யூரோ அணிவகுப்புகளை திகிலுடன் நினைவு கூர்ந்தனர். அடிப்படையில் ஒரு சீர்திருத்தவாத வேலைத்திட்டத்திற்காக பிரச்சாரம் செய்வதற்காக, ஐரோப்பா முழுவதும் அணிவகுத்துச் செல்ல நாங்கள் பல மாதங்களை செலவிட்டோம்.

OCI உடன் பிளவு ஏற்பட்ட நேரத்தில், SLL ஒரு மத்தியவாத திசையில் சென்று கொண்டிருந்தது. 10 வருடங்களுக்கு முன்னர் செய்ததுபோல முறையாகவும் பொறுமையாகவும் ஒரு அரசியல் போராட்டத்தை நடத்துவதற்கு அது தயாராக இல்லாததே இதற்குக் காரணம்.

இந்த நிலைமையை சரி செய்திருக்கலாம். ஆனால் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் புதிய பிரிவுகள், பப்லோவாத மறுஐக்கியத்திற்கு எதிரான போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்கின் காரணமாக, மகத்தான அதிகாரத்தை அனுபவித்த ஹீலியின் தவறுகளை வெளிப்படையாக சவால் செய்ய அந்த நேரத்தில் மிகவும் இளமையாகவும் அனுபவமற்றவர்களாகவும் இருந்தனர்.

அமெரிக்க வேர்க்கர்ஸ் லீக்கும் இலங்கைப் பிரிவும், மறு ஐக்கியத்திற்கும் இலங்கையில் 'மாபெரும் காட்டிக்கொடுப்பிற்கும்' எதிரான போராட்டத்தில் வெளிப்பட்டிருந்தன. அவர்கள் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தனர், இது 1982 முதல் 1986 வரை WRP க்கு எதிரான போராட்டத்தில் முன்னணிப் பாத்திரத்தை வகிக்க அவர்களுக்கு உதவியது.

1971 மற்றும் 1972 இல் ஸ்தாபிக்கப்பட்ட ஜேர்மன் மற்றும் ஆஸ்திரேலிய பிரிவுகளுக்கு, SLL இன் மத்தியவாத நோக்குநிலை ஒரு பெரிய ஊனமாக இருந்தது. நிச்சயமாக, அவர்கள் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் முக்கிய ஆவணங்களை அறிந்திருந்தனர், ஆனால் இந்த படிப்பினைகள் காரியாளர்களின் முறையான பயிற்சிக்கான அடிப்படையை உருவாக்கவில்லை.

இது 1985/86 பிளவுக்குப் பின்னர்தான் சரி செய்யப்பட்டது. நாம் காக்கும் பாரம்பரியம், 'தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக் கொடுத்தது' அத்தோடு ICFI இன் மற்றம் பல எழுத்துக்கள், பல கோடைகால முகாம்களின் போது மொழிபெயர்க்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டவை, காரியாளர்களை மறுஆயுதபாணியாக்குவதில் தீர்க்கமான பங்கைக் கொண்டிருந்தன.

1963க்குப் பின்னர் ஜேர்மனியில் OCI ஆல் உருவாக்கப்பட்ட IAK (சர்வதேச தொழிலாளர் தொடர்பு) சிறுபான்மைப் பிரிவிலிருந்து ஜேர்மன் பிரிவு எழுந்தது. இந்த சிறுபான்மையினர் SLL மற்றும் ஜெர்ரி ஹீலியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். அது OCI சமூக ஜனநாயகத்திற்கு அடிபணிவதை கடுமையாக எதிர்த்தது. 1969 இல், இந்த முதலாளித்துவ கட்சி ஒரு உண்மையான தொழிலாளர் அரசாங்கத்தை அமைக்க நிர்ப்பந்திக்கப்படலாம் எனக் கூறி, IAK ஐ SPD க்குள் முழுமையாக நுழையுமாறு OCI அறிவுறுத்தியது. இந்த மதிப்பீடு சிறுபான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டம் ஜேர்மனியில் ஏற்பட்ட பிளவில் ஒரு சிறிய பாத்திரத்தை மட்டுமே வகித்தது. மாறாக, பிளவு என்பது இயங்கியல் சடவாதத்தின் மீதான மோதலின் விளைவாக முன்வைக்கப்பட்டது.

இறுதியாக அதன் அழிவுக்கும் வழிவகுத்த, SLL அதிகரித்தளவில் எடுத்த மத்தியவாத நோக்குநிலைக்கு பெரும் விலை கொடுக்கவேண்டியிருந்தது.

OCI உடனான பிளவுக்கு ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், SLL பப்லோவாதிகளிடமிருந்து வேறுபடாத அரசியல் நிலைப்பாடுகளை எடுத்தது: இது பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO), லிபியாவில் கடாபி ஆட்சி மற்றும் ஈராக்கில் உள்ள பாத்திஸ்டுகள் போன்ற முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களுடன் கூலிப்படை உறவுகளை விமர்சனமின்றி ஆதரித்து வளர்த்தது. தொழிற் கட்சி, தொழிற்சங்கம் மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் பிரிவுகளுடனும் இதே போன்ற அடிபணியும் அணுகுமுறையை எடுத்தது. மேலும் இது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை பிரித்தானியப் பிரிவின் பிற்சேர்க்கையாக கையாண்டு, மேலும் மேலும் அதன் கீழ்த்தரமான சூழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தியது.

1973 இல் தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) நிறுவப்பட்டமையானது சோசலிச தொழிலாளர் கழகத்தின் (SLL) மத்தியவாதச் சீரழிவில் ஒரு முக்கியமான படியைக் குறித்தது.

டேவிட் நோர்த் தனது ஹீலியின் வாழ்க்கை வரலாற்றில் எழுதுகிறார்:

1970 இல் எட்வார்ட் ஹீத் தேர்ந்தெடுக்கப்பட்டதையும், புதிய டோரி அரசாங்கத்தால் தொழிற்சங்க எதிர்ப்பு சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதையும் தொடர்ந்து, ஹீலி எதிர்பார்த்திருந்த வெகுஜன இயக்கம் உண்மையில் உருவாகியது. ஆனால் இதற்கான சோசலிச தொழிலாளர் கழகத்தின் பதில் முந்தைய ஆண்டுகளின் மத்தியவாத பின்வாங்கலால் தீர்மானிக்கப்பட்டது: 1960 களின் குட்டி-முதலாளித்துவ தீவிரவாதத்திற்கான அதன் அடிபணிவு, இப்போது டோரி-எதிர்ப்பு இயக்கத்தின் தன்னிச்சையான போர்க்குணத்திற்கு அடிபணிதலின் மூலம் பூர்த்தி செய்யப்பட்டது.

புரட்சிகர சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் மிகவும் முன்னேறிய பிரிவினரை கட்சிக்கு வென்றெடுக்க போராடுவதற்குப் பதிலாக, ஹீத் அரசாங்கத்தின் மீது தொழிலாள வர்க்கத்தின் ஆரம்பகட்ட விரோதத்திற்கு இணங்கிப்போகும் வகையில் SLL அதன் வேலைத்திட்டத்தை நீர்த்துப்போகச் செய்தது. 'அடிப்படை உரிமைகளை' பாதுகாப்பதற்கான அழைப்பு மற்றும் ஒரு புதிய தொழிற் கட்சி அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கான அழைப்பு ஆகியவற்றிற்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில், ஹீலி 'SLL ஐ ஒரு வெகுஜன புரட்சிகர கட்சியாக மாற்றும் நடைமுறையை' முன்மொழிந்தார்.” …

அது சொல்லப்படவில்லை என்றாலும், இந்த மாற்றத்தின் இன்றியமையாத உள்ளடக்கம் சோசலிச தொழிலாளர் கழகத்தை ஒரு மத்தியவாத அமைப்பாக மாற்றுவதாகும். [32]

ICFI இல் எந்த கலந்துரையாடலும் இன்றி தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) ஸ்தாபிக்கப்பட்டது. புதிய கட்சியானது உலகப் புரட்சிக்கான சர்வதேச மூலோபாயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக பிரிட்டனில் ஒரு தொழிற் கட்சி அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதற்கான ஒரு தந்திரோபாயத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. புதிய கட்சியில் இணைந்தவர்களில் பலருக்கு தாங்கள் ஒரு சர்வதேச அமைப்பில் இணைகிறோம் என்பது கூட தெரியாதிருந்தது.

'WRP ட்ரொட்ஸ்கிசத்தைக் எவ்வாறு காட்டிக் கொடுத்தது' சுட்டிக்காட்டுவது போல:

அதன் உள்ளடக்கம் மற்றும் அடிப்படைக் கருத்தாக்கத்தில், WRP ஸ்தாபிக்கப்பட்ட வேலைத்திட்டம் ட்ரொட்ஸ்கிசத்துடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. மத்தியவாதத்தின் எல்லையை விட்டுவிலகிய ஒரு பத்தி கூட இருக்கவில்லை. இது WRP ஆரம்பிக்கப்பட்ட உள்ளடக்கத்தில் தேசியவாத முன்னோக்குடன் பிணைக்கப்பட்டிருந்தது. [33]

WRP ஸ்தாபிக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பின்னர், புதிய கட்சியை அடிப்படையாகக் கொண்ட கோரிக்கை உணரப்பட்டது: சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், எட்வார்ட் ஹீத்தின் டோரி அரசாங்கத்தை வீழ்த்தி, தொழிற் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்தது. இது WRP இல் நெருக்கடியைத் தூண்டியது. கட்சியில் இணைந்த புதிய உறுப்பினர்கள், WRP இப்போது தொழிற் கட்சியையும் எதிர்க்கிறது மற்றும் தேர்தலுக்கு அதன் சொந்த வேட்பாளர்களை நிறுத்துகிறது என்பதோடு உடன்படவில்லை.

1971ல் OCI உடனான மோதலை எதிர்த்து போராடுவதில் WRP இன் தோல்விக்கு இப்போது பழிவாங்கப்பட்டது. WRP இன் தொழிற்சங்கப் பணியின் தலைவரான அலன் தோர்னெட்டை OCI வென்றெடுத்தது. அவர் சார்பாக WRP நடத்திய ஒரு பாதுகாப்புப் பிரச்சாரத்தின் காரணமாக சர்வதேச கௌரவத்தை அனுபவித்தார். தோர்னெட் கட்சியின் முதுகுக்குப் பின்னால் வேலை செய்யும் ஒரு பிரிவை உருவாக்கினார். கட்சியின் உறுப்பினர்களுக்கு தெரியாமல், OCI அதன் கன்னை ஆவணங்களை உருவாக்கியது. இது கட்சி கட்டுப்பாட்டின் தெளிவான மீறலாகும், இது தோர்னெட்டின் உடனடி வெளியேற்றத்தை நியாயப்படுத்தியது.

இருப்பினும், 'WRP ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக் கொடுத்தது' என்பதில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு சுட்டிக்காட்டியது போல்

அரசியல் வேறுபாடுகளின் மூலகாரணங்கள் எதுவாக இருந்தாலும், அவை பற்றிய முழுமையான கலந்துரையாடலுக்கு முன்னதாக, அமைப்பு ரீதியான அடிப்படையில் தோர்னெட்டை வெளியேற்றுவதற்கு தலைமை அரசியல் ரீதியாக புத்திசாலித்தனமாக செயல்பட்டதா என்பது முற்றிலும் வேறுபட்ட ஒரு விஷயமாகும். … அவரது கோட்பாடற்ற வழிமுறைகள் இருந்தபோதிலும், தோர்னெட் WRP க்குள் ஒரு பெரிய பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தினார் - அவர்களுடைய அரசியல் குழப்பத்திற்கு ஹீலியும் பண்டாவும் பொறுப்பாளிகள் மற்றும் இப்போது அவர்கள் அந்த பிரிவினரை உண்மையான ட்ரொட்ஸ்கிசத்திற்கு வென்றெடுக்க வேண்டியிருந்தது. …

தோர்னெட்டின் போக்கானது பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்திற்குள் சக்திவாய்ந்த சமூக ஜனநாயக உணர்வுகளை பிரதிநிதித்துவப்படுத்தியது — மேலும் இந்த போக்கை வெளிப்படுத்தியவர்களுடனான ஒரு அமைப்புரீதியான உடன்பாடு என்பது தொழிற்சங்கங்களுக்குள் கட்சியின் பணிகளில் மோசமான விளைவை மட்டுமே ஏற்படுத்தும். [34]

தோர்னெட்டுக்கு எதிரான போராட்டத்தில், WRP அதன் தொழிலாள வர்க்க உறுப்பினர்களின் பெரும் பகுதியை இழந்தது. திரைப்படத் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில் குட்டி முதலாளித்துவக் கூறுபாடுகளை WRP ஆட்சேர்ப்பு செய்ததன் பக்கவிளைவே இது. வனேசா மற்றும் கோரின் ரெட்கிரேவ் மற்றும் அலெக்ஸ் மிட்செல் போன்றவர்கள், மார்க்சிசத்தைப் பற்றி மிக மேலோட்டமான புரிதலை மட்டுமே கொண்டிருந்தபோதிலும் கட்சித் தலைமைக்குள் மிகப் பெரிய பங்கு வகித்தனர்.

வில்சனின் தொழிற் கட்சி அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தைத் தாக்கத் தொடங்கியபோது, WRP ஒரு அதிதீவிர-இடது மாற்றத்தைச் செய்தது. இப்போது அது, முன்னர் தேர்தலில் வெற்றிக்காக பிரச்சாரம் செய்த தொழிற் கட்சி அரசாங்கத்தை தூக்கி எறிய வேண்டும் என அழைப்பு விடுத்தது.

இது ஒரு ஆழமான அரசியல், அமைப்பு சார்ந்த மற்றும் நிதி நெருக்கடிக்கு இட்டுச் சென்றது, இதற்கு WRP தலைமை பப்லோவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்து பாசாங்குகளையும் கைவிட்டதன் மூலம் பதிலளித்தது. பப்லோ, மண்டேல், பின்னர் ஹான்சன் மற்றும் லம்பேர் அடிபணிந்த முதலாளித்துவ தேசியவாதிகள், சீர்திருத்தவாதிகள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகள் போன்ற அதே சக்திகளுக்கு முன்னால் அது தன்னை சிரம் தாழ்த்திக் கொண்டது.

SLL/WRP இன் மத்தியவாதச் சீரழிவின் படிப்பினைகள் இன்று மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. டேவிட் நோர்த்தின் ஹீலியின் வாழ்க்கை வரலாற்றின் மேற்கோளை மீண்டும் குறிப்பிடுவோமானால்:

ஒரு 'பாட்டாளி வர்க்க நோக்குநிலை' அல்லது ஒரு அமைப்பு ரீதியான உடைவு ஆகியவற்றால், திருத்தல்வாதத்துடன் கணக்குகளைத் தீர்க்க முடியாது. சந்தர்ப்பவாதத்தின் பரவலானது ஆழமான சமூக வேர்களைக் கொண்ட ஒரு வரலாற்று நிகழ்வுபோக்கு ஆகும்; அதனால்தான் அதற்கு எதிரான போராட்டமும் மிகவும் நீடித்த மற்றும் கடினமான நிகழ்ச்சிப்போக்காக உள்ளது. …

இதற்கு எல்லாவற்றிற்கும் மேலாக, புரட்சிகரக் கட்சியின் அணிகளுக்குள் அன்னிய வர்க்க சக்திகளின் அழுத்தம் வெளிப்படும் தத்துவார்த்த மற்றும் அரசியல் வடிவங்களின் தொடர்ச்சியான ஆய்வு தேவைப்படுகிறது. இந்த அடிப்படையில் மட்டுமே, மார்க்சிசக் கட்சிக்குள்ளும் மற்றும் அதன் தலைமைக்குள்ளும் ஏகாதிபத்தியத்தின் குட்டி முதலாளித்துவ முகமைகளுக்கு அடிபணிந்துபோகும் போக்கை எதிர்க்க முடியும். [35]

நிச்சயமாக, எங்கள் பணி, ஃபயர்பாக் குறித்த மார்க்சின் ஆய்வறிக்கைகளுக்கு விளக்கமளிப்பது, உலகை மாற்றுவது மற்றும் அதை பல்வேறு வழிகளில் விளக்குவது மட்டுமல்ல. ஆனால் புரட்சிகர நடைமுறை என்பதை, நாம் தத்துவார்த்தரீதியாக வழிநடத்தப்படும் நடைமுறையை குறிப்பிடுகிறோம். இது வர்க்கப் போராட்டத்தின் சடவாத பகுப்பாய்விலிருந்து பெறப்பட்ட அரசியல் முன்னோக்கின் அடிப்படையிலான ஒரு நடைமுறையும், வர்க்க விரோத சக்திகளுக்கு எதிரான தொடர்ச்சியான விவாதத்தில் வளர்த்தெடுத்த ஒரு நடைமுறையுமாகும்.

பப்லோவாத மறுஐக்கியம் மற்றும் சிலோனில் 'மாபெரும் காட்டிக்கொடுப்பு' ஆகியவற்றிற்கு எதிரான சர்வதேச போராட்டத்தில் சோசலிச தொழிலாளர் கழகம் வகித்த முக்கிய பங்கு, 1960களில் அதன் அரசியல் மற்றும் அமைப்புரீதியான வெற்றிகளுக்கு வழி வகுத்தது. இந்தப் போராட்டத்தை கைவிட்டு முற்றிலும் தேசிய மற்றும் அமைப்புரீதியான பணிகளில் கவனம் செலுத்தும் அளவுக்கு இந்த வெற்றிகளை அது வீணடித்தது.

குறிப்புகள்:

[1] Gerry Healy, “Problems of the Fourth International” (1966)

[2] Trotskyism vs Revisionism Volume 5 p.11 https://www.marxists.org/history/etol/document/fi/tvsr/Trotskyism-Versus-Revisionism-Volume-5.pdf

[3] David North, “Gerry Healy and His Place in the History of the Fourth International”

[4] Stéphane Just, Dfense du Trotskyisme Vol. 1 1965 https://www.marxists.org/francais/just/ddt1/ddt1.htm

[5] Trotskyism vs Revisionism Vol 5 p.5 https://www.marxists.org/history/etol/document/fi/tvsr/Trotskyism-Versus-Revisionism-Volume-5.pdf

[6] Ibid p.5

[7] Ibid p.77

[8] Ibid p.94

[9] Ibid p.91

[10] Ibid p.95

[11] David North “Leon Trotsky and the Struggle for Marxism in the Twenty First Century” p.42

[12] International Committee of the Fourth International, “How the WRP Betrayed Trotskyism”, https://www.wsws.org/en/special/library/how-the-wrp-betrayed-trotskyism/04.html

[13] Trotskyism vs Revisionism Vol 5 p.113

https://www.marxists.org/history/etol/document/fi/tvsr/Trotskyism-Versus-Revisionism-Volume-5.pdf

[14] Ibid

[15] Ibid p.114

[16] Transitional Program p.49

https://www.marxists.org/archive/trotsky/1938/tp/index.htm

[17] Trotskyism vs Revisionism Vol 5 p.119

https://www.marxists.org/history/etol/document/fi/tvsr/Trotskyism-Versus-Revisionism-Volume-5.pdf

[18] David North, “Leon Trotsky and the Struggle for Marxism in the Twenty First Century” p.34

[19] International Committee of the Fourth International, “How the WRP Betrayed Trotskyism”, https://www.wsws.org/en/special/library/how-the-wrp-betrayed-trotskyism/04.html

[20] Quoted in: Peter Schwarz, “1968: The general strike and the student revolt in France”, part 5, https://www.wsws.org/en/articles/2008/09/fran-s04.html

[21] Leon Trotsky, “Whither France?”, https://www.marxists.org/archive/trotsky/1936/whitherfrance/ch00.htm

[22] “Crise du POI... Témoignage de Charles Berg”, https://www.gauchemip.org/spip.php?article25497

[23] ICFI, “How the WRP Betrayed Trotskyism”, https://www.wsws.org/en/special/library/how-the-wrp-betrayed-trotskyism/04.html

[24] “Trotskyism versus revisionism”, volume 6, p. 77, https://www.marxists.org/history/etol/document/fi/tvsr/Trotskyism-Versus-Revisionism-Volume-6.pdf

[25] ibid. p. 124

[26] David North, “Gerry Healy and His Place in the History of the Fourth International”, p.47

[27] ibid., p. 281

[28] David North, “Gerry Healy and His Place in the History of the Fourth International”, p.47

[29] ibid. p. 46

[30] ibid. p. 51

[31] ibid. p. 53

[32] ibid. p. 56-57

[33] ICFI, “How the WRP Betrayed Trotskyism”, https://www.wsws.org/en/special/library/how-the-wrp-betrayed-trotskyism/05.html

[34] ICFI, “How the WRP Betrayed Trotskyism”, https://www.wsws.org/en/special/library/how-the-wrp-betrayed-trotskyism/06.html

[35] David North, “Gerry Healy and His Place in the History of the Fourth International”

Loading