இஸ்தான்புல் புத்தகக் கண்காட்சியில் துருக்கிய மொழிப் பதிப்பான லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும் என்ற புத்தகத்தை டேவிட் நோர்த் அறிமுகப்படுத்துகிறார்

“அவரது காலத்து ஒப்பற்ற மனிதர், அவரது காலத்திற்கும் தற்போது நமது சம காலத்திற்குமான ஒரு தொலைநோக்கு சிந்தனையாளர்”

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

துருக்கியப் பதிப்பான லியோன் ட்ரொட்ஸ்கியின் இருபத்தியோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும்

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த், நவம்பர் 5, 2023 ஞாயிறன்று துருக்கியில் இஸ்தான்புல் புத்தகக் கண்காட்சியில் இந்தக் கருத்துக்களை வழங்கினார்.

லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும் என்ற எனது புத்தகத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.  இந்த அறிமுக விளக்கக் காட்சிக்காக இஸ்தான்புல் புத்தகக் கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள் வழங்கிய சிறந்த வசதிகளுக்கும், எனது புத்தகத்தை துருக்கிய மொழியில் மொழிபெயர்த்ததற்காக சோசலிச சமத்துவக் குழுவிலுள்ள (Sosyalist Eşitlik Grubu) எனது தோழர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிக்க அனுமதியுங்கள், இது இல்லாமல், நிச்சயமாக, இந்த அறிமுக விளக்கக்காட்சி சாத்தியமில்லை.

எனது புத்தகத்தில் நான்கு தசாப்தங்களாக எழுதப்பட்ட கட்டுரைகள் மற்றும் சொற்பொழிவுகள் உள்ளன. புத்தகத்தின் தொடக்கப் பகுதியில் 1982 இலையுதிர்காலத்தில் எழுதப்பட்ட நான்கு கட்டுரைகள் உள்ளன. ஏழு மாதங்களுக்கு முன்பு, 2023 ஏப்ரலில் நான் எழுதிய ஒரு அறிக்கையுடன் புத்தகம் முடிகிறது. முதல் கட்டுரைகள் எழுதப்பட்டபோது, புரட்சிகர சோசலிச இயக்கத்தில் ஒரு தசாப்த கால அனுபவம் மட்டுமே கொண்ட ஒப்பீட்டளவில் இளைஞனாக இருந்தேன். விவிலியத்தில் குறிப்பிடும் 70 வயதைக் கடந்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக நான்காம் அகிலத்தில் செயலூக்கத்துடன் செயற்பட்டு வரும் ஒருவரின் படைப்புதான் கடைசி ஆவணமாக இருக்கிறது.

எவ்வாறெனினும், புத்தகத்தின் தொடக்க மற்றும் இறுதிப் பகுதிகளின் எழுத்தை பல ஆண்டுகள் பிரித்து இருக்கின்ற போதிலும், அவைகள் ஒரே அடிப்படை ஆதாரத்தால் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது, நான் முன்னுரையில் எழுதியது போல, “லியோன் ட்ரொட்ஸ்கி, இருபதாம் நூற்றாண்டின் முதல் நான்கு தசாப்தங்களில் சோசலிச வரலாற்றில் மிகவும் தனிச் சிறப்புவாய்ந்த ஆளுமைமிக்க தலைவராக இருந்ததுடன், அவரது மரபுவழியானது உலக சோசலிசத்தின் வெற்றிக்கான தற்போதைய சமகால போராட்டத்திற்கு தீர்க்கமானதும் இன்றியமையாததுமான தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளமாகவும் உள்ளது. வரலாற்றில் ட்ரொட்ஸ்கியின் இடத்தையும் அவரது நீடித்த அரசியல் முக்கியத்துவத்தையும் குறித்த இந்த மதிப்பீடானது கடந்த நாற்பது ஆண்டுகால நிகழ்வுகளால் சக்திவாய்ந்த முறையில் வலிமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.”

டேவிட் நோர்த் இஸ்தான்புல் புத்தகக் கண்காட்சியில் துருக்கிய மொழிப் பதிப்பான லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும் புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்ட இந்த வரிகளை நான் மீண்டும் படிக்கும்போது, காஸாவில் தற்போது உலகின் கண்முன்னே அரங்கேறி வரும் பயங்கரமான நிகழ்வுகளால் இந்த மதிப்பீட்டின் செல்லுபடியாகும் தன்மை வலுவடைந்துள்ளது என்று எனக்குத் தோன்றுகிறது. வெறும் 25 மைல் நீளமும், 5.5 முதல் 7.5 மைல் அகலமும் கொண்ட ஒரு பகுதியில் வாழும் ஒரு சிறைப்படுத்தப்பட்ட மக்கள் இஸ்ரேலிய அரசின் குற்றவியல் ஆட்சியால் வழிநடத்தப்படும் இராணுவப் படைகளால் அழித்து தூளாக்கப்படுகிறார்கள். பாதுகாப்பற்ற 2.3 மில்லியன் மக்கள் மீது இரண்டாயிரம் பவுண்டு குண்டுகள் மற்றும் வெள்ளை பொஸ்பரஸ் கலந்த வெடிகுண்டுகள் வீசப்படுகின்றன. வயதானவர்களோ, குழந்தைகளோ, கைக்குழந்தைகளோ கூட இதற்குத் தப்பவில்லை. மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் வேண்டுமென்றே குறிவைக்கப்படுகின்றன. இது உலகின் ஒவ்வொரு ஏகாதிபத்திய ஆட்சியின் இடைவிடாத ஆதரவுடன் செய்யப்படுகிறது. வாஷிங்டன், இலண்டன், பாரிஸ் மற்றும் பேர்லினில் மனித உரிமைகளின் பாசாங்குத்தனமான சுய-பிரகடன வெற்றியாளர்கள் தங்கள் அரசியல் சொற்களஞ்சியத்திலிருந்து “போர் நிறுத்தம்” என்ற வார்த்தையை அகற்றியுள்ளனர். பாலஸ்தீனர்கள் கொல்லப்படுவதில் தலையிட எதுவும் செய்ய முடியாது என்பதாக உள்ளது.

உலகெங்கிலும் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களும் இளைஞர்களும் இஸ்ரேலிய அரசும் அதன் ஏகாதிபத்திய நிதியாளர்களும் காஸா மக்களுக்கு எதிராக நடத்தி வரும் இனப்படுகொலை போருக்கு எதிராக அணிதிரண்டு வருகின்றனர். இந்த வரலாற்றுக் குற்றத்திற்கு தங்கள் அரசாங்கங்கள் உடந்தையாக இருப்பதைக் கண்டு அவர்கள் திகைத்துப் போயுள்ளனர். நியாயப்படுத்துவது ஒருபுறம் இருக்கட்டும், இதை எப்படி விளக்குவது?

ஆனால், லியோன் ட்ரொட்ஸ்கி 85 ஆண்டுகளுக்கு முன்னர் “முதலாளித்துவத்தின் மரண ஓலம்” என்று வரையறுத்த ஒரு சகாப்தத்தின் அரசியல் வெளிப்பாடுகளைத்தான் அவர்கள் காண்கிறார்கள். இது “அதிர்வுகள், நெருக்கடிகள், பேரழிவுகள், தொற்றுநோய்கள் மற்றும் கொடுமைகளின்” சகாப்தம் என்று அவர் எழுதினார். ஆளும் உயரடுக்கிற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான வர்க்க குரோதங்கள் முன்னெப்போதையும் விட தீவிரமாக வளர்ச்சியடைந்து வருவதால், அனைத்து “அடிப்படை அற நெறிமுறைகளும்” அரசு கொள்கைகளை வகுப்பதில் இருந்து மறைந்து விடுகின்றன: அதாவது “அடக்குமுறை, அவதூறு, இலஞ்சம், வஞ்சகம், பலாத்காரங்கள், கொலை [வளர்ச்சியடைகிறது] முன்னெப்போதும் இல்லாத பரிமாணங்களுக்கு செல்லுகின்றன”.

ட்ரொட்ஸ்கி இந்த வார்த்தைகளை ஒரு ஒழுக்கவாதியாக அல்ல, மாறாக ஒரு புரட்சியாளராக எழுதினார். இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய நாள் 1938ல் எழுதப்பட்ட நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணத்தில் அவர் இவ்வாறு எச்சரித்தார்: “ஒரு சோசலிசப் புரட்சி இல்லாமல், அடுத்த வரலாற்றுக் காலத்தில், ஒரு பேரழிவு மனிதகுலத்தின் ஒட்டுமொத்த கலாச்சாரத்தையும் அச்சுறுத்துகிறது.”

அடுத்த ஆறு ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகள் அவரது எச்சரிக்கைகளை மெய்ப்பிப்பதாக இருந்தன. இராண்டாம் உலக யுத்தம் நாகரிகத்தை முற்றாக அழித்தொழிக்கவில்லை என்ற உண்மையானது, ட்ரொட்ஸ்கியின் முன்னோக்கை மறுப்பதல்ல. முதல் அணுகுண்டுகள் 1945 வரை பயன்பாட்டுக்கு வரவில்லை. கடந்த முக்கால் நூற்றாண்டுக்கும் (75 ஆண்டுகள்) மேலாக தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், ட்ரொட்ஸ்கியால் முன்னறிவிக்கப்பட்ட பேரழிவு இப்போது உடனடி ஆபத்தாக மாறியுள்ளது.

என் புத்தகத்தில் முன்வைக்கப்பட்ட மைய வாதத்திற்கு இது நம்மைக் கொண்டுவருகிறது. ட்ரொட்ஸ்கி தனது வாழ்நாளில் பகுப்பாய்வு செய்த அதே பொருளாதார, சமூக மற்றும் அரசியல் முரண்பாடுகளால் சமகால உலகம் பிளவுபட்டுள்ளது. ட்ரொட்ஸ்கி நன்கு அடையாளம் காணக்கூடிய ஒரு உலகில் நாம் வாழ்கிறோம். தொழில்நுட்பத்தின் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டு அவர் ஆச்சரியப்படுவார் என்று கற்பனை செய்யலாம்; ஆனால் பூகோள பொருளாதார நெருக்கடிகள், ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் புதிய வெடிப்பு மற்றும் பூகோள ரீதியாக வர்க்கப் போராட்டம் தீவிரமடைதல் ஆகியவற்றில் இயங்கி வேலை செய்யும் சக்திகளை அவர் நன்கு புரிந்து கொள்வார்.

கடந்த நூற்றாண்டின் அனைத்து முக்கிய அரசியல் சிந்தனையாளர்களிலும், ட்ரொட்ஸ்கி தனித்துவமானவர், அவரது பணி அசாதாரணமான சமகால பொருத்தத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது. உண்மையில், ட்ரொட்ஸ்கி, ஒரேயோரு லெனினைத் தவிர மற்றய அனைவருக்கும் மேலாக அரசியல் சமகாலத்தவர்களை விட உயர்ந்தவர் என்ற அளவிற்கு, அவர் தனது சகாப்தத்தை விட முன்னோக்கிச் சிந்திக்கும் தொலைநோக்குப் பார்வையாளராக முன்னணியில் இருந்தார் என்று கூறலாம். புறநிலை நிலைமைகள் —குறிப்பாக 1923 இல் ஜேர்மன் புரட்சியின் தோல்வி மற்றும் 1924 இல் லெனினின் மரணத்திற்குப் பிந்தைய காலத்தில்— அவருக்கும் அவர் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் போக்கிற்கும் மற்றும் வேலைத்திட்டத்திற்கும் பாதகத்தை ஏற்படுத்தின.

ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை பாதையின் போக்கானது —1917 அக்டோபர் புரட்சியின் இணைத் தலைவராக அவர் குறிப்பிடத்தக்க அளவில் அதிகாரத்திற்கு உயர்ந்தது, 1923 மற்றும் 1928 க்கு இடையில் சோவியத் ஒன்றியத்தில் அரசியல் அதிகாரத்திலிருந்து அவர் வீழ்ச்சியடைந்தது, மற்றும் 1940 இல் அவரது நாடுகடத்தல் மற்றும் படுகொலை— உலக சோசலிசப் புரட்சியின் வளர்ச்சியில் வெவ்வேறு கட்டங்களால் தீர்மானிக்கப்பட்டது மற்றும் பிரதிபலித்தது. நவீன வரலாற்றில் வேறு எந்தவொரு ஆளுமையும் இதைப் புரிந்துகொண்டு, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நலன்களின் நிலைப்பாட்டில் இருந்து, சகாப்தத்தின் புரட்சிகர இயக்கவாற்றலுக்கு அத்தகைய நனவான வெளிப்பாட்டைக் கொடுக்கவில்லை.

ட்ரொட்ஸ்கி கையாண்ட அடிப்படை சமூக-பொருளாதார நிகழ்ச்சிப்போக்குகளும் அரசியல் முன்னோக்கின் பிரச்சினைகளும் நமது சமகாலத்தின் பிரச்சினைகளாகவே உள்ளன. ட்ரொட்ஸ்கியின் மூன்று தொகுதிகள் கொண்ட சுயசரிதையின் தலைப்பில் ஈசாக் டொய்ச்சர் ஒரு தீர்க்கதரிசியின் பிம்பத்தை நினைவு கூர்ந்தார். விவிலிய உருவகத்தைப் பயன்படுத்துவதை ஆட்சேபிப்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன. ஆயினும்கூட, ஒரு இலக்கிய சாதனம் என்ற வகையில், ட்ரொட்ஸ்கி குறித்த இந்த விளக்கம் சரியென நிறுவப்பட்டது. ஏனெனில், தனது சகாப்தத்தின் ஒரு தலைசிறந்த பிரதிநிதி, முன்னோக்கிச் சிந்திக்கும் தொலைநோக்கு தீர்க்கதரிசி மேலும், தற்போது, நமது சமகாலத்திற்கு தீர்க்கமான பொருத்தத்தை தக்கவைக்கும் ஒரு வழிகாட்டியாக அவர் இருக்கிறார்.

இந்தக் கட்டத்தில், சோவியத் அதிகாரத்துவத்திற்கும் ஸ்ராலினின் பெயருடன் அடையாளம் காணப்பட்ட சர்வாதிபத்திய ஆட்சிக்கும் எதிராக ட்ரொட்ஸ்கி நடத்திய போராட்டத்தை வரலாறு முற்றிலுமாக நிரூபணம் செய்துள்ளது என்று வாதிட வேண்டிய அவசியமில்லை. 1991ல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது, ஸ்ராலினை அக்டோபர் புரட்சிக்கு புதைகுழி தோண்டுபவர் என்ற அவரது குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியதுடன், அதிகாரத்துவ ஆட்சி, ஒரு அரசியல் புரட்சியில் தூக்கியெறியப்படாவிட்டால், சோவியத் ஒன்றியத்தை அழித்து முதலாளித்துவத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் என்ற ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கையையும் உறுதிப்படுத்தியது.

ஸ்ராலினிச ஆட்சிக்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டமானது வரலாற்றில் அவரது இடத்தைப் பாதுகாக்க போதுமானதாக இருக்கும். இடைவிடாத அடக்குமுறைகளுக்கு முகங்கொடுத்து, ட்ரொட்ஸ்கி ஒரு கொலைகார ஆட்சிக்கு எதிராக புரட்சிகர கொள்கைகளை பாதுகாத்தார். ஆனால் ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்திற்கு அடித்தளமாக இருந்த உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையைப் புரிந்துகொள்வது அவசியமாகும், இது “தனி ஒரு நாட்டில் சோசலிசம்” என்ற மார்க்சிச-விரோத மற்றும் பிற்போக்குத்தனமான கோட்பாட்டிற்கு அவரது எதிர்ப்பை மையமாகக் கொண்டிரு

வரலாற்றில் ட்ரொட்ஸ்கியின் இடமானது உலக சோசலிசப் புரட்சியின் மிகச்சிறந்த கோட்பாட்டாளர் மற்றும் மூலோபாயவாதியாவார். 1906ல் அவர் முதன்முதலில் வடிவமைத்த நிரந்தரப் புரட்சிக் கோட்பாடானது, ரஷ்யாவில் ஜனநாயகப் புரட்சி என்பது ஒரு சோசலிசப் புரட்சியின் வடிவத்தை அவசியமாக எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாக யதார்த்தமாக்கப்படும் என்று முன்னறிவித்தது. முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்கப் போராட்டம் ஒரு உலகளாவிய நிகழ்ச்சிப்போக்காக வளர்ந்தது என்பதை ட்ரொட்ஸ்கி அங்கீகரித்தார்— இங்குதான் அவரது அரசியல் மேதைமை அதன் மிக அற்புதமான வெளிப்பாட்டைக் கண்டது. முன்னேறிய மற்றும் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் (அதாவது, காலதாமதமான முதலாளித்துவ-முதலாளித்துவ வர்க்க அபிவிருத்தியைக் கொண்ட நாடுகள்) தொழிலாள வர்க்கத்தின் போராட்டமானது, தேசிய மூலோபாயத்தை விட, ஒரு சர்வதேசத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

1928ல், அல்மா அட்டாவில் (சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்பு) நாடுகடத்தப்பட்டதிலிருந்து ட்ரொட்ஸ்கி எழுதினார், ஸ்ராலினிச கட்டுப்பாட்டிலுள்ள மூன்றாம் அகிலத்தின் வேலைத்திட்டம் குறித்த தனது விமர்சனத்தில் பின்வருமாறு எழுதினார்:

ஆகஸ்ட் 4, 1914 அன்று, எல்லா காலத்திற்குமாக தேசிய வேலைத்திட்டங்களுக்கு சாவுமணி அடிக்கப்பட்டது. பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சியானது, முதலாளித்துவத்தின் மிக உயர்ந்த வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியின் சகாப்தமான தற்போதைய சகாப்தத்தின் தன்மைக்கு ஒத்த ஒரு சர்வதேச வேலைத்திட்டத்தை மட்டுமே அடித்தளமாகக் கொள்ள முடியும். ஒரு சர்வதேச கம்யூனிச வேலைத்திட்டம் என்பது தேசிய வேலைத்திட்டங்களின் மொத்தத் தொகையாகவோ அல்லது அவற்றின் பொதுவான அம்சங்களின் கலவையாகவோ இருக்ககூடாது. சர்வதேச வேலைத்திட்டமானது உலகப் பொருளாதாரம் மற்றும் உலக அரசியல் அமைப்புமுறையின் நிலைமைகள் மற்றும் போக்குகள் பற்றிய பகுப்பாய்விலிருந்து நேரடியாக அதன் அனைத்து தொடர்புகள் மற்றும் முரண்பாடுகளில், அதாவது அதன் தனித்தனி பாகங்களின் பரஸ்பர முரண்பாடான பரஸ்பரம் ஒன்றையொன்று சார்ந்திருப்பதில் ஒட்டுமொத்தமாக எடுத்திருக்க வேண்டும். கடந்த காலங்களை விட தற்போதைய சகாப்தத்தில், பாட்டாளி வர்க்கத்தின் தேசிய நோக்குநிலையானது ஒரு உலக நோக்குநிலையில் இருந்து மட்டுமே பாய வேண்டும், அதற்கு நேர்மாறாக இருக்கக்கூடாது. கம்யூனிச சர்வதேசியவாதத்திற்கும் அனைத்து வகையான தேசிய சோசலிசத்திற்கும் இடையிலான அடிப்படை மற்றும் முதன்மை வேறுபாடு இங்கேதான் உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் மிக முழுமையான சூத்திரமாக்கலில், ட்ரொட்ஸ்கி நவீன சகாப்தத்தில் புரட்சிகர நிகழ்ச்சிப்போக்கின் பாதையை இவ்வாறு விளக்கினார்:

சோசலிசப் புரட்சியானது தேசிய அரங்கில் தொடங்கி, சர்வதேச அரங்கில் விரிவடைந்து, உலக அரங்கில் நிறைவடைகிறது. இவ்வாறாக, சோசலிசப் புரட்சி ஒரு புதிய மற்றும் பரந்த அர்த்தத்தில் ஒரு நிரந்தரப் புரட்சியாக மாறுகிறது; நமது முழு கிரகத்திலும் புதிய சமுதாயத்தின் இறுதி வெற்றியில் மட்டுமே அது முழுமை அடைகிறது.

இந்த முன்னோக்கானது 20 ஆம் நூற்றாண்டின் வரலாற்றின் அடுத்தடுத்த போக்கால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில், ட்ரொட்ஸ்கியின் பூகோள முன்னோக்கின் வாழ்வா சாவா தாக்கங்களுக்கு தற்போதைய நிகழ்வுகள் சாட்சியமளிக்கின்றன. இஸ்ரேலிய அரசாங்கத்தின் குற்றங்களானது, யூத மக்கள் மீதான வரலாற்று ரீதியான துன்புறுத்தலுக்கான தீர்வு சியோனிசத்தின் தேசியவாத பார்வையில் காணப்பட வேண்டும் என்ற கூற்றில் கருத்தியல் ரீதியாகவும், வேலைத்திட்ட ரீதியாகவும் வேரூன்றியுள்ளன. சோசலிச இயக்கமானது, சியோனிச சித்தாந்தத்திற்கு எதிராக பல தசாப்தங்களாக இடைவிடாத போராட்டத்தை நடத்தியது. சியோனிச திட்டத்திலிருந்து பாயும் துன்பகரமான விளைவுகள் குறித்து ட்ரொட்ஸ்கி மீண்டும் மீண்டும் எச்சரித்தார். இப்போது, இஸ்ரேலிய அரசு நிறுவப்பட்டு 75 ஆண்டுகளுக்குப் பிறகு, சியோனிச கற்பனாவாதம் ஒரு நரக ஆட்சியாக சீரழிந்து, 80 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய யூதர்களுக்கு எதிராக நாஜிக்களால் பயன்படுத்தப்பட்ட இனப்படுகொலைக் கொள்கைகளை நாடியுள்ளது. ஆனால், சியோனிசத்தின் பிற்போக்குத்தனமான தன்மையானது தேசியவாதத்தின் மற்றைய எல்லா வடிவங்களிலும் மறுஉருவாக்கம் செய்யப்படுகிறது. இது உற்பத்தி சக்திகளின் பூகோள அபிவிருத்தி மற்றும் வர்க்கப் போராட்டத்தின் சர்வதேசமயமாக்கல் ஆகியவற்றால் முறியடிக்கப்பட்ட ஒரு முன்னோக்கு ஆகும். மனிதகுலத்தின் முற்போக்கான வளர்ச்சிக்கான ஒரு வாகனமாக இருந்த தேசிய அரசு முடிந்துவிட்டது. நாகரிகத்தின் உயிர்பிழைப்பானது இப்போது முற்றிலும் முதலாளித்துவத்தையும் தேசிய-அரசு அமைப்பையும் தூக்கியெறிந்து ஒரு உலக சோசலிச கூட்டமைப்பிற்கு மாற்றம் செய்வதோடு பிணைந்துள்ளது.

ட்ரொட்ஸ்கி 20 ஆம் மற்றும் 21 ஆம் நூற்றாண்டுகளின் தலைசிறந்த வடிவமாக உள்ளார். லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும் அவரது வாழ்க்கை மற்றும் பணி குறித்த ஆய்வுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக, நான்காம் அகிலத்தை சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக கட்டியெழுப்புவதற்கும் பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன்.

Loading