மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஞாயிற்றுக்கிழமை ஜோர்டானில் மூன்று அமெரிக்க இராணுவ ரிசர்வ் சிப்பாய்கள் இறந்தது, ஈரானைக் குறிவைத்து இராணுவ விரிவாக்கத்திற்கான அமெரிக்க அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனத்திற்குள் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்க பயன்படுத்தப்படுகிறது.
ஈரானால் ஆதரிக்கப்படுவதாக அமெரிக்கா வலியுறுத்தும் ஒரு போராளிக் குழுவான கதாயிப் ஹெஸ்புல்லா இந்த தாக்குதல்களை நடத்தியதாக பைடென் நிர்வாகம் கூறியது. இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஈரான் மறுத்துள்ளது.
45,000 க்கும் அதிகமான அமெரிக்க துருப்புகள் மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன, இது அப்பிராந்தியம் எங்கிலும் பல தசாப்த கால அமெரிக்க போர்களுடன் தொடர்புடையதாகும்,அவை ஒட்டுமொத்தமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்றுள்ளன. உலகின் மறுபக்கத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க துருப்புகள் மீதான தாக்குதல், நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட இராணுவ தீவிரப்பாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது.
“ஈரான் ஆதரவிலான தீவிர போராளிக் குழுக்கள்” மீது தாக்குதலைக் குற்றஞ்சாட்டிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் அறிவித்தார், “இதற்குப் பொறுப்பான அனைவரையும் ஒரு நேரத்தில், நாம் தேர்ந்தெடுக்கும் விதத்தில் பொறுப்புக் கூற வைப்போம்.”
கடந்த இரண்டு மாதங்களாக, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏற்கனவே ஈராக், சிரியா மற்றும் யேமன் மீது பல தாக்குதல்களை நடத்தி, மத்திய கிழக்கில் ஒரு பிராந்திய போரைத் தூண்டியுள்ளது. இப்பொழுது அமெரிக்க இராணுவம் நேரடியாக ஈரானைத் தாக்குவதாக அச்சுறுத்துகிறது, அது அப்பகுதி முழுவதையும் இரத்தக் களரியில் மூழ்கடித்துவிடும்.
பைடென் நிர்வாகம் நெருப்புடன் விளையாடுகிறது, ஒரு பேரழிவுக்கான நிலைமைகளை உருவாக்குகிறது.
காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு அது திட்டமிட்டு நிதி, தளவாட ஆதரவு மற்றும் அரசியல் மறைப்பை வழங்கி வருகிறது. இது பிராந்தியம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளுக்கு எதிராக பதிலடியைத் தூண்டும் என்பதை பிடென் நிர்வாகம் நன்கு அறியும். அமெரிக்கத் துருப்புக்களின் மரணம் இன்னும் கூடுதலான இராணுவ விரிவாக்கத்திற்கான ஒரு பாசாங்காக பயன்படுத்தப்படும்.
அதன் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் பற்றிய அனைத்து குறைகூறல்களுக்கும் விடையிறுக்கையில், பிடென் நிர்வாகம் தான் இராணுவரீதியில் சுற்றி வளைத்துள்ள நாடுகளுக்கு எதிராக போர் தொடுக்கும் விருப்பம் இல்லை என்று அறிவித்து விடையிறுத்துள்ளது.
திங்களன்று நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் அமெரிக்க அரசாங்கம் “ஈரானுக்குள் சாத்தியமான தாக்குதல்களை தீவிரமாக பரிசீலிக்கிறதா” என்று மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, “நாங்கள் ஈரானுடன் ஒரு போரை எதிர்பார்க்கவில்லை” என்று மீண்டும் மீண்டும் பதிலளித்தார்.
குறிப்பிடத்தக்க வகையில், ஜனவரி 12 அன்று, யேமன் சம்பந்தமாக கிர்பி துல்லியமான அதே மொழியைப் பயன்படுத்தினார், “யேமனுடனான ஒரு போரில் எங்களுக்கு ஆர்வம் இல்லை,” என்று அறிவித்தார். ஆயினும்கூட, அமெரிக்கா கடந்த மூன்று வாரங்களில், அரை டஜனுக்கும் அதிகமான தனித்தனி நாட்களில், யேமனுக்குள் டஜன் கணக்கான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
எந்த நாட்டுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் சட்டவிரோதமாக குண்டுகளை வீசப் போகிறது என்பதற்கான சிறந்த குறிகாட்டியாக அமெரிக்க அரசாங்கம் கூறும்போது, அதற்கு எதிராகப் போரை நடத்தும் எண்ணம் முற்றிலும் இல்லை என்று தெரிகிறது.
இந்த வாதத்தின் மிகவும் கேலிக்கூத்தான பதிப்பு ஜனவரி 16 அன்று வெள்ளை மாளிகை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. “நாங்கள் இந்த மோதலை விரிவுபடுத்த விரும்பவில்லை” என்று திரும்பத் திரும்ப அமெரிக்கா வெளியிட்ட அறிக்கைகளை ஒரு நிருபர் குறிப்பிட்டார், மற்றும் யேமன் மீது நடத்தப்பட்ட அமெரிக்க தாக்குதல்களுடன் “இதை நீங்கள் எவ்வாறு சரிக்கட்டுகிறீர்கள்” என்று கேட்டார்.
இதற்கு, கிர்பி பின்வரும் பதிலை அளித்தார்:
இது மிகவும் எளிமையான சமன்பாடு: ஹவுத்திகளிடமிருந்து இராணுவ திறனை அகற்றுவதன் மூலம், இந்த தாக்குதல்களை நடத்துவதை அவர்களுக்கு கடினமாக்குகிறோம். …எனவே, இந்தத் தாக்குதல்களை நடத்துவது, அவர்களின் திறன்களைத் துடைப்பது - சில சந்தர்ப்பங்களில் அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பே - வரையறையின்படி, பதட்டங்களைக் குறைப்பதாகும்.
இந்த ஓர்வெல்லியன் மொழியில் கூறுவதானால், எந்தவொரு நாட்டின் இராணுவப் படைகள் மீதான எந்தவொரு அமெரிக்க தாக்குதலும் “தீவிரப்பாட்டைக் குறைப்பதற்காக” ஒரு நடவடிக்கையாகும். சீனா மற்றும் ரஷ்யாவின் அனைத்து தளங்களையும் அணு ஆயுதங்களால் தாக்குவதன் மூலம் அவற்றின் இராணுவ திறனை அழிக்க அமெரிக்க இராணுவம் முயற்சித்தால்,அது எல்லாவற்றிலும் மிகவும் தணிக்கும் செயலாக இருக்கும்.
இந்த அபத்தமான வாய்மொழி உடற்பயிற்சிகள் அமெரிக்க மக்களிடம் இருந்து இராணுவ தீவிரப்பாட்டிற்கான வெள்ளை மாளிகையின் நீண்டகால திட்டங்களை மூடிமறைப்பதற்கான ஒரு முயற்சியாகும், அது மத்திய கிழக்கில் மேலும் அமெரிக்க இராணுவத் தலையீட்டை மிகப்பெருமளவில் எதிர்க்கிறது
வெள்ளை மாளிகை ஏன் அமெரிக்க மக்களுக்கு அதன் போர்த் திட்டங்கள் பற்றி தெரிவிக்கவில்லை அல்லது காங்கிரஸிடம் இருந்து ஒப்புதல் பெறவில்லை என்று செவ்வாயன்று கேட்கப்பட்டது, கிர்பி கோபமாக பதிலளித்தார்.
இஸ்ரேல் மீதான ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலை அமெரிக்கா உடனடியாக மத்திய கிழக்கில் துருப்புக்கள், போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்ப பற்றிக் கொண்டது, அமெரிக்க கடற்படையின் செய்தி வெளியீடு “பல தசாப்தங்களில் அப்பிராந்தியத்தில் அமெரிக்க கப்பல்களின் மிகப்பெரிய திரள்” என்று கூறியது. அமெரிக்க மேலாதிக்கத்தின் கீழ் மத்திய கிழக்கை மறு ஒழுங்கமைக்கும் நோக்கத்துடன், பிராந்தியம் முழுவதிலும் பரந்த தொடர் இராணுவத் தாக்குதல்களை நடத்துவதற்காக, இந்த பாரிய இராணுவக் கட்டமைப்பானது சரியாகப் பயன்படுத்தப்பட்டது.
அக்டோபர் 7 தாக்குதல் நடந்து 10 நாட்களுக்கும் குறைவான காலத்தில், உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்தது:
மத்திய கிழக்கிற்கு ஒரு டசினுக்கும் அதிகமான போர்க்கப்பல்களை அனுப்புவது வெறுமனே கடற்படை இல்லாத ஹமாஸை அச்சுறுத்துவதற்காக அல்ல. ஈரானுடனான போர் உட்பட மத்திய கிழக்கில் ஒரு பரந்த மோதலுக்கு அமெரிக்கா தயாராகி வருகிறது என்பதைக் குறிக்கிறது.
அப்போதிருந்து, அமெரிக்கா ஈராக், சிரியா மற்றும் ஏமன் மீது குண்டு வீசியுள்ளது.
மத்திய கிழக்கில் இப்போது வெடித்துள்ள மோதலை, ரஷ்யா மற்றும் சீனாவுடனான அதன் உயிர்பிழைப்புக்கான போராட்டத்தின் ஒரு இன்றியமையாத கூறுபாடாக அமெரிக்கா காண்கிறது.
குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்கா, Foreign Affairs இதழில் அண்மையில் எழுதிய ஒரு கட்டுரையின் வார்த்தைகளில், “மத்திய கிழக்கு நாடுகளுடன் சீனாவின் உறவு விரிவடைந்து வருவதை கவனத்தில் கொண்டுள்ளது,” குறிப்பாக ஈரானுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே ஒரு சமரசத்தை மத்தியஸ்தம் செய்யும் பெய்ஜிங்கின் முயற்சிகள் உட்பட.
செவ்வாயன்று, நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க், வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கனுடன் ஒரு சந்திப்பில், ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போருக்கும் ஈரான் மற்றும் சீனாவுடனான அமெரிக்க மோதலுக்கும் இடையிலான எந்தவொரு பிளவுக் கோட்டையும் துடைத்தெறிந்தார். அவர் அறிவித்தார், “ஒரு ரஷ்ய வெற்றி ஈரான், வட கொரியா மற்றும் சீனாவுக்கு தைரியமளிக்கும். அது ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு முக்கியமானது. அது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு முக்கியமானது.”
இப்பொழுது அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் லண்டன், பேர்லின் மற்றும் பாரிஸில் உள்ள அதன் கூட்டாளிகளால் தூண்டிவிடப்பட்டுள்ள உலகப் போர் ஏகாதிபத்திய சக்திகள் அவற்றின் முன்னாள் காலனிகள் மீது நேரடிக் கட்டுப்பாட்டை மீண்டும் ஸ்தாபிக்க முனையும் ஒரு உலகளாவிய எதிர்ப்புரட்சியின் பாகமாக உள்ளது.
அதே நேரத்தில், பாரிய உள் சமூக முரண்பாடுகளால் சூழப்பட்டுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம், இந்த உள் பதட்டங்களை ஒரு வெளிப்புற எதிரியை நோக்கி திசைதிருப்ப முயன்று வருகிறது. இப்போர்கள் ஜனநாயக உரிமைகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கான கட்டமைப்பையும் மற்றும் உள்நாட்டு அரசியல் எதிர்ப்பை நெறியற்றதாக்கும் முயற்சியையும் உருவாக்குகின்றன.
இஸ்ரேல் காசாவில் அப்பாவி மக்களைக் கொல்வதை நிறுத்துமாறும் அத்துடன் உணவு மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதை கட்டுப்படுத்துவதை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்த சர்வதேச நீதிமன்றத்தின் கடந்த வார தீர்ப்பைத் தொடர்ந்து ஈரான் உடனான ஒரு சாத்தியமான போருக்கான அமெரிக்க தயாரிப்புகள் தீவிரமடைந்து வருகின்றன. இந்த தீர்ப்பிற்கு விடையிறுக்கும் வகையில், இஸ்ரேல் காசாவில் சாதாரண மக்கள் மீது அதன் குண்டுவீச்சுகளை மட்டுமே அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் அதே நேரத்தில் அமெரிக்காவும் பிற ஏகாதிபத்திய சக்திகளும் அருகாமை கிழக்கில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணிகள் நிறுவனத்துக்கான (the United Nations Relief and Works Agency for Palestine Refugees) நிதியை நிறுத்தி வைத்துள்ளன, இது காஸாவில் இன்னும் பட்டினி கிடக்கும் அச்சுறுத்தலைக்கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது “சர்வதேச சட்டத்தின்” அமைப்புகளோ ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் வெடிப்பைத் தடுக்கும் திறன் கொண்டவை என்ற எந்தவொரு நம்பிக்கையும் இந்த அபிவிருத்திகளால் மறுக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் வெடிப்பை நிறுத்துவதற்கு தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது அவசியமாகும், அதற்கு எதிரான போராட்டத்தை சமத்துவமின்மை, வறுமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்துடன் ஐக்கியப்படுத்த வேண்டும்.