ஜோர்டானில் 3 அமெரிக்க சிப்பாய்கள் கொல்லப்பட்டதையடுத்து காங்கிரஸில் ஈரானுடன் போருக்கு செல்ல கோரிக்கை விடுக்கப்படுகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணாலம்.

10 ஜூலை 2023 அன்று ஜோர்தானில் உள்ள இன்ட்ரெபிட் மேவென் பயிற்சியின் போது, அமெரிக்க கடற்படையினர் நேரடியான மோட்டர் குண்டுத் தாக்குதல் நடத்தும் பயிற்சியை நடத்துகின்றனர். [Photo: Marine Corps Cpl. Khalil Brown ]

சிரிய எல்லைக்கு அருகில் ஜோர்தானில் உள்ள அமெரிக்கத் தளத்திற்கு எதிரான ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க சிப்பாய்கள் கொல்லப்பட்டதாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் அமெரிக்க மத்திய கட்டளையகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. அமெரிக்க அதிகாரிகள், டவர் 22 என்று அழைக்கப்படும் அமெரிக்கத் தளத்தில் துருப்புக்கள் தங்கியிருந்த படைவீடுகளைத் தாக்கியதாக நியூயார்க் டைம்ஸிடம் தெரிவித்தனர்.

காஸாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈராக்கின் இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு, தாக்குதலுக்கு உரிமை கோரியது.

காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையால் தூண்டப்பட்டு, மத்திய கிழக்கு முழுவதும் பரந்து விரிந்துவரும் போரை பெருமளவில் தீவிரப்படுத்தும் வகையில், ஈரான் மீது நேரடி அமெரிக்க தாக்குதலுக்கு அழைப்பு விடுக்க அமெரிக்க அரசியல்வாதிகள் அமெரிக்க சிப்பாய்களின் மரணத்தை பற்றிக்கொண்டனர்.

குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம், “ஈரானுக்குள் முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளை” தாக்குமாறு அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்தார்.

ஜோர்டானுக்குள் அமெரிக்க துருப்புக்கள் தாக்கப்பட்ட அமெரிக்க டவர் 22 விமானத் தளத்தின் இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம். [Photo by mapchart.net / CC BY-SA 3.0]

“இப்போது ஈரானை கடுமையாகத் தாக்குங்கள்” என்று கிரஹாம் அறிவித்தார். “ஈரான் ஆட்சி, புரிந்து கொள்ளவேண்டிய ஒரே விஷயம் பலம்” என்று கூறிய கிரஹாம் “அவர்கள் தங்கள் உள்கட்டமைப்பு மற்றும் அவர்களின் சிப்பாய்களை பலி கொடுக்கும் வரை, அமெரிக்க துருப்புக்கள் மீதான தாக்குதல்கள் தொடரும்,” என்று மேலும் தெரிவித்தார்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட் சிறுபான்மைத் தலைவர் மிச் மெக்கோனெல், ஈரானை “கடுமையாக முடக்கும் பாதிப்புகளை” ஏற்படுத்துமாறு நிர்வாகத்திற்கு அழைப்பு விடுத்தார்.

குடியரசுக் கட்சியின் செனட்டர் டான் சல்லிவன் “தெளிவான, ஆபத்தான மற்றும் அதீதமான பதிலடியை” கொடுக்க அழைப்பு விடுத்தார்.

குடியரசுக் கட்சியின் செனட்டர் டாம் காட்டன், “ஈரான் மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் ஈரானின் பயங்கரவாதப் படைகளுக்கு எதிராக பேரழிவுகரமான இராணுவப் பதிலடிக்கு” அழைப்பு விடுத்தார்.

சில ஜனநாயக கட்சி உறுப்பினர்களும் போருக்கான முழக்கத்தில் இணைந்தனர். ஓய்வுபெற்ற அமெரிக்க ஜெனரலும் முன்னாள் நேட்டோ தளபதியும், ஒருமுறை ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு போட்டியிட்டவருமான வெஸ்லி கிளார்க், “‘நாங்கள் தீவிரப்படுத்த விரும்பவில்லை’ என்று கூறுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும். இது எங்களைத் தாக்க அவர்களுக்கு அழைப்பு விடுப்பதாகும். எங்கள் தாக்குதல்களை ‘பதிலடி’ என்று கூறுவதை நிறுத்துங்கள். இது எதிர்வினையானது. அவர்களின் திறன்களை வெளியே எடுத்து, மூலாதாரத்தை: ஈரானை, கடுமையாக தாக்குங்கள்.”

ஜனாதிபதி ஜோ பைடென், இறப்புகளை அறிவித்த போது, “பொறுப்பாளிகள் அனைவருடனும் நாங்கள் ஒரு நேரத்தில் நாங்கள் தேர்ந்தெடுக்கும் விதத்தில் கணக்குத் தீர்ப்போம்” என்று அறிவித்தார்.

ப்ளூம்பெர்க் நியூஸ், பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி, ஈரானுக்குள் நேரடித் தாக்குதல்களை நடத்துவது பற்றி அமெரிக்கா பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. “தாக்குதலுக்கு பொறுப்பேற்காமல், எது எப்படியிருப்பினும் ஒரு தெளிவான செய்தியை அனுப்பும் வகையில், ஈரான மீதான ஒரு தாக்குதலை நடத்தும் இரகசிய நடவடிக்கைக்கான சாத்தியக்கூறு இருப்பதாக” அந்தச் செய்தி சேவை எழுதியது. “முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், 2020 இல் பாக்தாத்தில் ஜெனரல் காசிம் சுலைமானியைக் கொல்ல உத்தரவிட்டது போல், பைடென் நிர்வாகம் ஈரானிய அதிகாரிகளையும் நேரடியாக குறிவைக்க முடியும்.”

ஈரானுக்குள்ளான ஒரு நேரடி அமெரிக்க தாக்குதல், மத்திய கிழக்கு முழுவதும் ஏற்கனவே நடந்து வரும் ஒரு பிராந்திய போரை பாரியளவில் எரியூட்டும்.

“எப்போதும் விரிவடையும் மத்திய கிழக்குப் போர்” என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில் தி எகனாமிஸ்ட் விளக்கியதாவது:


மத்திய கிழக்கில் யார் யாரை சுடுகிறார்கள் என்பதை வரைபடமாக வரைந்தால், அது ஒரு இடியப்ப சிக்கல் போல் இருக்கும். அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையேயான போராக ஆரம்பித்தது, இப்போது மற்றய நான்கு அரபு நாடுகளின் போராளிகளை ஈர்த்துள்ளது. மேலதிகமாக, ஈரான், இஸ்ரேல் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகள் இந்த மாதம் சிரியா மீது குண்டுவீசின. இந்த குழப்பத்திற்குள் இழுக்கப்பட்டது எப்படி என்று ஆச்சரியப்படுமளவுக்கு ஈரானும் எதிர்பாராத விதமாக பாகிஸ்தானுக்குள் குண்டு வீசித்தாக்கியது.

கடந்த இரண்டு வாரங்களில், சிரியா, ஈராக் மற்றும் யேமன் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்திய அதே நேரம், அதன் நட்பு நாடான இஸ்ரேல், லெபனானுடனான அதன் வடக்கு எல்லையில் தினசரி தாக்குதல்களை நடத்தி வருகிறது, சிரியாவில் ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இலக்குகளைத் தாக்கியது மற்றும் எகிப்திய ஆயுதப்படைகளுடன் இராணுவ மோதல்களை நடத்தியது. யேமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்துவதற்கு ஆயுதங்களை எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் கப்பலில் மீது அமெரிக்கா நடத்திய சோதனையின் போது இந்த மாத தொடக்கத்தில் இரண்டு அமெரிக்க கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

காஸாவில் இனப்படுகொலைக்கு அமெரிக்கா உடந்தையாக இருக்கும் நிலையிலேயே, மத்திய கிழக்கு முழுவதும் தீவிரமடைந்துவரும் போர் நடைபெறுகிறது.

வெள்ளியன்று, மத்திய கிழக்கிலுள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி முகமைக்கான (UNRWA) நிதியை நிறுத்துவதாக பைடென் நிர்வாகம் அறிவித்தது. வேண்டுமென்றே இஸ்ரேல் மேற்கொள்ளும் முற்றுகையின் காரணமாக மக்கள் பரவலான பட்டினியை எதிர்கொண்டுள்ள காஸாவிற்குள் உணவு மற்றும் மருத்துவ உதவிகள் பெறுவதற்கான முக்கிய உயிர்நாடியாக இந்த அமைப்பு உள்ளது. பிரிட்டன், பின்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் இந்த அமைப்புக்கான நிதியுதவியை நிறுத்துவதாக அறிவித்தன.

அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஒரு டசின் UNRWA ஊழியர்களும் பங்கு பெற்றனர் என்ற குற்றச்சாட்டுகளுக்கு விடையிறுக்கும் வகையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியது. இந்த நடவடிக்கையானது காஸா முழுவதிலும் பேரழிவை மட்டுமே ஏற்படுத்தும். காஸாவில் 13,000 UNRWA உறுப்பினர்கள் பணிபுரிகின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், “இந்த இக்கட்டான தருணத்தில் @UNRWAக்கான நிதியை நிறுத்த வேண்டாம் என்று நன்கொடையாளர்களிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். நிதியுதவியை நிறுத்துவது, ஆதரவு தேவைப்படும் #காஸா மக்களை மட்டுமே பாதிக்கும்,” என்று அறிவித்தார்.

காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாகக் கூறி தென்னாப்பிரிக்காவால் தொடரப்பட்ட வழக்கின் எதிரொலியாக, காஸா மீதான முற்றுகையை தற்காலிகமாக நிறுத்துமாறு கடந்த வாரம் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஆக்னஸ் காலமர்ட், ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார். “12 பேர் செய்த குற்றங்கள் காரணமாக பூமியில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களை தண்டிக்க உலகின் பணக்கார நாடுகள் எடுத்துள்ள இதயமற்ற முடிவு இது. இனப்படுகொலை அபாயத்தைக் கண்டறிந்த சர்வதேச நீதிமன்றின் தீர்ப்புக்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, துன்பம் தருவதாகும்,” என அவர் கூறினார்.

பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக இடம்பெயர்ப்பதைத் தீவிரப்படுத்துவதன் மூலம் சர்வதேச நீதிமன்றின் தீர்ப்புக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், யூரோ-மெட் மனித உரிமைகள் கண்காணிப்பகம் பின்வருமாறு எச்சரித்தது,


சர்வதேச நீதிமன்றம் (ICJ) தீர்ப்பளித்த இரண்டு நாட்களுக்குள், பாதுகாப்பற்ற இடங்களுக்கு வெகுஜன கட்டாய இடப்பெயர்வு, ஆயிரக்கணக்கான மக்கள் கான் யூனிஸ் அகதிகள் முகாம் மற்றும் ஆளுனர் ஆளும் பல பகுதிகளிலிருந்தும், கரையின் மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது உட்பட, அதன் இராணுவ நடவடிக்கைகளின் எதிர் விளைவாக, இனப்படுகொலை தடுப்பு மற்றும் தண்டனைக்கான உடன்படிக்கை தீர்மானத்தின் கீழ், இஸ்ரேல் தற்காலிக நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும்.

கண்காணிப்பகத்தின் படி, இன்றுவரை, இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் இரண்டு வாரங்களுக்கு மேலாக காணாமல் போனவர்கள் உட்பட 32,000 காஸா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 115 ஊடகவியலாளர்கள், 675 சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 165 சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள் அடங்குவர். இறந்தவர்களில் பெரும்பாலோர் பெண்கள் அல்லது குழந்தைகள்; 1.95 மில்லியன் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்.

இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் (ICJ) தீர்ப்பளித்தது, ஆனால் காஸாவில் இனப்படுகொலையை தடுத்துநிறுத்த உத்தரவிட மறுத்துவிட்டது

Loading