மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
வெள்ளியன்று, அமெரிக்காவானது ஈராக் மற்றும் சிரியா முழுவதிலும் ஏழு இடங்களின் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, இது அப்பிராந்தியம் முழுவதிலும் வாரங்களுக்கான அல்லது மாதங்களுக்கான தாக்குதல்களின் தொடக்கம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த இரண்டு நாட்களில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், அமெரிக்காவும் பிரிட்டனும் யேமனில் உள்ள ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக மேலும் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கின.
இந்தத் தாக்குதல்கள் “எங்கள் பதிலடியின் தொடக்கத்தைக் குறிக்கின்றன, மேலும் பல கட்டங்கள் வரும்” என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஞாயிற்றுக்கிழமை சிஎன்என் (CNN) இன் ஜனாதிபதியின் ஒன்றியத்திற்கான உரை நிகழ்வில் கூறினார்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கடந்த மூன்று தசாப்தங்களிற்கு மேலாக மில்லியன் கணக்கான மக்களைக் கொன்றுள்ள மற்றும் ஒட்டுமொத்த சமூகங்களையும் அழித்துள்ள மத்திய கிழக்கிலான அமெரிக்காவின் “முடிவில்லா போர்”, ஒரு புதிய மற்றும் மிகவும் கொடிய கட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறது.
அமெரிக்க இராணுவத் தாக்குதலின் மைய இலக்கு ஈரான் என்பதை அமெரிக்க அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். ஞாயிறன்று “பத்திரிகையாளர்கள் சந்திப்பு” (”Meet the Press”) நிகழ்ச்சியில் தோன்றிய சுல்லிவனிடம், “ஈரானுக்குள்” தாக்குதல்களை அமெரிக்கா நிராகரிக்குமா என்று நேரடியாக கேட்கப்பட்டது. அதற்கு தான் அவ்வாறு செய்யப் போவதில்லை என்று அறிவித்த சுல்லிவன், “அமெரிக்காவின் பதிலடி என்று வரும்போது மேசையில் என்ன இருக்கிறது மற்றும் மேசைக்கு வெளியே என்ன இருக்கிறது என்பதை நான் ஆராயப் போவதில்லை” என்று கூறினார்.
குடியரசுக் கட்சியின் சபைத் தலைவர் மைக் ஜோன்சனும் அதே திட்டத்தை சுல்லிவனைப் பின்தொடர்ந்தபோது, ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அவர் இன்னும் வெளிப்படையான அச்சுறுத்தலை விடுத்தார். “ஈரானுக்குள் தாக்குதல்களை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களா?” என்று கேட்கப்பட்டபோது, அதற்கு பதிலளித்த ஜோன்சன், “அது மேசைக்கு வெளியே இருக்கக்கூடாது” என்றார்.
ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள வெள்ளை மாளிகை மற்றும் குடியரசுக் கட்சி தலைமையிலான பிரதிநிதிகள் சபை இரண்டின் பிரதிநிதிகளும் அடுத்தடுத்து பேசியமை, மத்திய கிழக்கில் போரைத் தீவிரப்படுத்துவதில் அமெரிக்க அரசியல் அமைப்பிற்குள் நிலவும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தும் அர்த்தத்தைக் கொண்டிருந்தது.
பைடென் நிர்வாகம் அதிர்ச்சியூட்டும் பொறுப்பற்ற தன்மையுடன் நடந்து வருகிறது, இது ஒரு பிராந்தியப் போருக்கு எரியூட்டுகிறது, அது முழு உலகையும் உள்ளிழுக்க அச்சுறுத்துகிறது. ஈரான் உடனான ஒரு முழு அளவிலான அமெரிக்க போர், பேரழிவுகரமான மனித, அரசியல் மற்றும் பொருளாதார விளைவுகளைக் கொண்டிருக்கும், 2003 ஆண்டு ஈராக் படையெடுப்பால் விளைந்த இரத்தக்களரியையும் கூட மறைத்துவிடும்.
இந்தப் போரை நியாயப்படுத்த வெள்ளை மாளிகை வெளியிடும் ஒவ்வொரு அறிக்கையும் பொய்யாகும். அது “ஈரானுடன் போருக்கு முனையவில்லை” என்று வெள்ளை மாளிகை அறிவித்து, ஒவ்வொரு வான்வழித் தாக்குதலும் அது ஒரு “விரிவாக்கம்” அல்ல என்று திட்டவட்டத்துடன் நியாயப்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு புதிய சட்டவிரோத வான்வழித் தாக்குதலும் அமெரிக்கத் துருப்புக்களைப் பாதுகாப்பதற்கான ஒரு “தற்காப்பு” நடவடிக்கையாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால் இப்பிராந்தியத்தில் இத்துருப்புக்கள் இருப்பது, மத்திய கிழக்கு முழுவதும் பல தசாப்தங்களாக நடத்தப்பட்ட குருதி கொட்டும் அமெரிக்கப் போர்களின் தொடர்ச்சி ஆகும். இப்போர்களில் ஒரு மில்லியனுக்கும் மேலான மக்களைக் கொன்றுள்ளதுடன், வேண்டுமென்றே திட்டமிட்ட சித்திரவதைகள் அரச கொள்கையாக பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா 45,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கத் துருப்புக்களை அப்பிராந்தியம் முழுவதும் நிறுத்தி வைத்துள்ளது இதைத்தவிர டஜன் கணக்கான போர்க் கப்பல்களும், நூற்றுக்கணக்கான இராணுவ விமானங்களும் உள்ளன.
மத்திய கிழக்கிலான சமீபத்திய அமெரிக்க தாக்குதலானது, ரஷ்யா மற்றும் சீனாவை மையமாக இலக்கில் வைத்து, கட்டவிழ்ந்து வரும் ஓர் பூகோளரீதியான போரின் ஒரு முக்கிய கூறுபாடாகும். யூரேசியாவின் இதயத்தானத்தில் அமைந்துள்ள ஈரானை அடிபணிய வைப்பது, பூகோளரீதியான இராணுவ மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் உந்துதலின் ஒரு இன்றியமையாத கூறுபாடாகும்.
சீனாவை இராணுவரீதியில் சுற்றி வளைத்து பொருளாதாரரீதியாக கழுத்தை நெரிக்கும் அதன் முயற்சியில், வாஷிங்டன் பெய்ஜிங்கிற்கும் சீனாவிற்கு முக்கிய எண்ணெய் வழங்கும் நாடான ஈரானுக்கும் இடையே ஒரு பிளவை ஏற்படுத்த முனைந்து வருகிறது.
ஈரானுக்கு எதிரான போர் விரிவாக்கத்தைத் தூண்டுவதில் ஒரு முக்கிய காரணியானது உக்ரேனில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் சந்தித்த பாரிய பின்னடைவு ஆகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் ரஷ்யாவுக்கு எதிரான அதன் போராட்டத்தை கடைசி உக்ரேனியர் இருக்கும் வரை இரட்டிப்பாக்கினாலும், அது உலகளாவிய போரில் மற்றொரு முனையைத் திறந்து விட்டுள்ளது.
ஞாயிறு நிகழ்வில் சுல்லிவன், யேமனுக்கு எதிரான அமெரிக்க தாக்குதல்கள் மற்றும் ஈரானுடனான மோதல் “இஸ்ரேலுடன் முற்றிலும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்பதை சுட்டிக்காட்ட ஆர்வமாக இருந்தார். இதுவும் ஒரு பொய்யாகும்.
சிரியா, யேமன், ஈராக் மற்றும் இறுதியில் ஈரானில் போர் நடத்த இஸ்ரேலிய உதவியைப் பெறுவதற்காக பைடென் நிர்வாகம் இஸ்ரேலுக்கு காஸாவை பேரழிவிற்கு உட்படுத்த பச்சை விளக்கு காட்டியுள்ளது. காஸா மக்களை படுகொலை செய்து வெளியேற்றுவதன் மூலமாக இஸ்ரேலின் “பாலஸ்தீன பிரச்சினைக்கான இறுதி தீர்வு”, மத்திய கிழக்கை அதன் மேலாதிக்கத்தின் கீழ் மறுஒழுங்கு செய்வதற்கான அமெரிக்க உந்துதலின் ஒரு இன்றியமையாத கூறுபாடாகும்.
அக்டோபர் 7 சம்பவங்களுக்கு 10 நாட்களுக்கும் குறைவான காலத்திற்குப் பின்னர், உலக சோசலிச வலைத் தளம், “ரஷ்யாவுடனான அமெரிக்க போர் மற்றும் சீனாவுக்கு எதிரான போர் திட்டங்களில் மத்திய கிழக்கின் முன்னணியாக உள்ள ஈரானுடனான ஒரு போருக்கான நீண்டகால திட்டங்களை நடைமுறைப்படுத்த அமெரிக்கா தற்போதைய நெருக்கடியைப் பயன்படுத்தி வருகிறது,” என்று எச்சரித்தது. மத்திய கிழக்கிற்கு அமெரிக்கா அனுப்பிய பாரிய போர்க் கப்பல்கள் வெறுமனே “பலத்தைக் காட்டுவது” அல்ல; அது பயன்படுத்த வேண்டியதற்காகத்தான் என்று தெரிவித்தது.
அப்போதிருந்து, ஈராக் மற்றும் சிரியா மீது மீண்டும் மீண்டும் குண்டுவீச அமெரிக்கா இந்தப் போர்க் கப்பல்களை அணிதிரட்டி உள்ளது, அதேவேளையில் யேமன் மீதான தாக்குதல்கள் நடைமுறையளவில் அன்றாட நிகழ்வாகி உள்ளன.
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு அதிர்ச்சியூட்டும் உள்நாட்டு நெருக்கடியை எதிர்கொள்கிறது, இதில் பிரம்மாண்டமான மற்றும் எப்போதும் விரிவடைந்து வரும் சமூக சமத்துவமின்மையின் அழுத்தத்தின் கீழ் ஜனநாயக அரசாங்க வடிவங்கள் உடைந்து கொண்டிருக்கின்றன. ஒரு முழு அளவிலான அரசியலமைப்பு நெருக்கடியாக துரிதமாக தீவிரமடைந்து வருகின்ற ஒரு கடுமையான கன்னை போராட்டத்தில் அவை சிக்கிக் கொண்டுள்ள நிலையிலும் கூட, இரண்டு அமெரிக்க அரசியல் கட்சிகளும் மத்திய கிழக்கு முழுவதிலும் மற்றும் உலகெங்கிலும் போரின் ஒரு பாரிய தீவிரத்திற்கு பொறுப்பேற்றுள்ளன.
அமெரிக்காவில் நிலவும் உள்நாட்டு அரசியல் நெருக்கடியானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய வெடிப்பில் ஒரு பிரதான காரணியாகும். நெருக்கடி ஆழமாக இருக்கையில், அமெரிக்க அரசாங்கம் இன்னும் கூடுதலான தாக்குதலை வெளிநாடுகளில் காட்டும், அதன் உள் பதட்டங்கள் அனைத்தையும் வெளியில் காட்ட முடியும் என்று நம்புகிறது.
பைடென் நிர்வாகம் திமிர்த்தனமான பொறுப்பற்ற தன்மையுடன் போரை விரிவாக்குவது, தொழிற்சங்கங்களின் இயந்திரத்தால் தொழிலாள வர்க்கத்தை திட்டமிட்டு அணிதிரட்டுவதின் மூலம் சாத்தியமாக்குகிறது. கடந்த வாரம், ஜோ பைடெனுக்கு ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத்தின் ஒப்புதலை அறிவிப்பதற்கு முன்னதாக, UAW தலைவர் ஷான் ஃபெயின், “திருவாளர் ஜனாதிபதி, நாம் போருக்குச் செல்ல வேண்டிய நேரம் இது” என்று அறிவித்தார்.
அச்சுறுத்தல் நிறைந்த இந்த அறிக்கையானது, அமெரிக்க இராணுவவாதத்தின் உலகளாவிய வெடிப்பில் தொழிற்சங்கங்கள் ஆற்றிய பாத்திரத்தை வெளிப்படையாக்கியது. பைடென் நிர்வாகம், அது “உள்நாட்டு மற்றும் வெளியுறவு கொள்கைக்கு இடையிலான பிளவுக் கோட்டை உடைத்துவிட்டதாக” அறிவித்து, தொழிற்சங்கங்களால் வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதை அமெரிக்க போர் முனைவின் ஒரு முக்கிய கூறாகக் காண்கிறது. உலகெங்கிலும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் நேரடித் துணையாக தொழிற்சங்க இயந்திரம் செயல்படுகிறது.
ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்திற்கு, ஏகாதிபத்திய போருக்கு மூலகாரணமான முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையை தூக்கிவீசுவதற்கான ஒரு போராட்டத்தில், வர்க்கப் போராட்டத்தை ஒடுக்க முனையும் அனைத்து முகமைகளின் மேலாதிக்கத்தில் இருந்தும் விடுபட்டு, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டல் அவசியமாகும்.