காஸா இனப்படுகொலை: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

11 ஜனவரி 2024 வியாழக்கிழமை, தெற்கு காசாவின் ரஃபாவில் உள்ள ஒரு பிணவறைக்கு வெளியே, காசா பகுதியில் இஸ்ரேலிய குண்டுவீச்சில் கொல்லப்பட்ட குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகள் உட்பட தங்கள் உறவினர்களுக்காக பாலஸ்தீனியர்கள் துக்கம் அனுஷ்டிக்கிறார்கள்.   [AP Photo/Fatima Shbair]

இடைவிடாத குண்டுவெடிப்புகளுடன் உணவு, தண்ணீர் மற்றும் விநியோகங்களை இஸ்ரேல் தடுப்பதால் ஏற்பட்ட பாரிய பட்டினிகளுக்கு மத்தியில், காசாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையில் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 29,000ஐ எட்டியுள்ளது என்று காசாவின் சுகாதார அமைச்சகம் திங்களன்று கூறியது. 

கொல்லப்பட்ட 29,092 பேரைத் தவிர, 7,000 பேர் இரண்டு வாரங்களுக்கு மேலாகக் காணாமல் போயுள்ளதாகவும் அவர்கள் இறந்துவிட்டதாகவும் கருதப்படுவதால் உண்மையான கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,000 ஆக உள்ளது. 

இறந்தவர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் காயமுற்றவர்களின் எண்ணிக்கையைக் கூட்டினால், இந்த எண்ணிக்கை 100,000 க்கு மேல், அல்லது காஸாவின மக்கள் தொகையில் நான்கு சதவிகிதம் ஆக உள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைக்கு இடையில் காசாவில் 107 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன் 145 பேர் காயமடைந்தனர். 

ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தஞ்சம் அடைந்துள்ள ரஃபா மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தவுள்ள தாக்குதலுடன் இந்த பாரிய இறப்பு எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்க உள்ளது. 

கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையிலும், இஸ்ரேலிய போர் விமானங்கள் லெபனானின் சிடோன் நகருக்குள் இரண்டு தாக்குதல்களை நடத்தி 14 பேரைக் கொன்றுள்ளதுடன் மோதல் புவியியல் ரீதியாக விரிவடைகிறது.

காஸாவின் கிட்டத்தட்ட முழு மக்களும் கடுமையான பட்டினியை எதிர்கொள்வதாக யுனிசெஃப் திங்களன்று எச்சரித்ததுடன் குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் மிகப் பெரிய பாதிப்பை எதிர்கொள்கின்றனர். 

“பிள்ளைகள் கொல்லப்படுவதை தடுக்கக்கூடியதாக இருந்தாலும், மிகப் பிரமாண்டமான குழந்தை மரணங்களுக்கு காஸா ஒரு சாட்சியாக இருக்கப் போகின்றது. காஸாவில் ஏற்கனவே தாங்க முடியாத அளவில் குழந்தை மரணங்கள் அதிகரித்துள்ளன” என்று யுனிசெஃப்பின் மனிதாபிமான மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்கான துணை நிர்வாக இயக்குனர் டெட் சய்பன் கூறினார். “மோதல் இப்போது முடிவுக்கு வரவில்லை என்றால், குழந்தைகளின் ஊட்டச்சத்து தொடர்ந்து வீழ்ச்சியடையும். இது தடுக்கக்கூடிய மணங்கள் அல்லது காஸாவின் குழந்தைகளை அவர்களின் வாழ்நாள் முழுவதும் பாதிக்கக் கூடிய மற்றும் தலைமுறைகளுக்கு இடையேயான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.” 

வடக்கு காசாவில், இரண்டு வயதிற்குட்பட்ட ஆறு குழந்தைகளில் ஒன்று கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்கின்றது என்று அறிக்கை எச்சரித்தது. பசி, பலவீனம் மற்றும் ஆழ்ந்த அதிர்ச்சிக்கு ஆளாகும் குழந்தைகள் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்... இது ஆபத்தானதும் சோகமானதும் நம் கண்களுக்கு முன்னால் நடப்பவையாகும்” என்று உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரநிலை திட்டத்தின் தலைவர் மைக் ரியான் எச்சரித்தார். 

தெற்கில், 2 வயதிற்குட்பட்ட பிள்ளைகளில் ஐந்து சதவீதம் பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது. 

ஐ.நா. அறிக்கை காஸா மீதான தாக்குதலுக்கு முன்பு, 5 வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 0.8 சதவிகிதத்தினர்தான் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று கூறியுள்ளது. இந்த எண்ணிக்கை 15.6 சதவீதமாக உயர்ந்துள்ளமை, ஊட்டச்சத்து குறைபாட்டில் “முன்னெப்போதும் இல்லாத” அதிகரிப்பு என்று யுனிசெஃப் கூறியதை சுட்டிக்காட்டுகிறது. 

“2 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 90 சதவீதம் பேரும், கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களில் 95 சதவீதம் பேரும் கடுமையான உணவு வறுமையை எதிர்கொள்கின்றனர். அவர்கள் முந்தைய நாளில் இரண்டு அல்லது அதற்கும் குறைவான உணவுக் குழுக்களையே உட்கொண்டனர் என்பது இதன் அர்த்தமாகும். அவர்களுக்கு கிடைக்கக்கூடிய உணவு மிகக் குறைந்த ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டுள்ளது” என்று அறிக்கை கண்டறிந்தது. 

“95 சதவீத குடும்பங்கள் உணவை மட்டுப்படுத்துவதோடு உணவின் அளவையும் குறைத்துக்கொள்வதுடன் 64 சதவீத குடும்பங்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிடுகின்றன,” என்று அறிக்கை மேலும் கூறுகிது. 

“சராசரியாக, கணக்கெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ஒரு லிட்டருக்கும் குறைவான அளவே பாதுகாப்பான நீர் கிடைக்கிறது. மனிதாபிமான தரங்களின்படி, அவசரகாலத்தில் தேவைப்படும் பாதுகாப்பான நீரின் குறைந்தபட்ச அளவு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு மூன்று லிட்டர் ஆக உள்ள அதே நேரம், ஒட்டுமொத்த தரநிலை குடிப்பதற்கும், கழுவுவதற்கும் மற்றும் சமைப்பதற்கும் போதுமான அளவு ஒரு நபருக்கு 15 லிட்டர் ஆகும்,” என்று ஐ.நா. குறிப்பிட்டது,

அதிர்ச்சியூட்டும் வகையில் 5 வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 70 வீதமானவர்கள் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது போர் தொடங்குவதற்கு முன்பிருந்ததைவிட 23 மடங்கு அதிகரிப்பை பிரதிபலிக்கிறது. 

ஒரு தனி அறிக்கையில், நிபுணர்கள், “பாலஸ்தீனிய பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான மனித உரிமை மீறல்களால் அதிர்ச்சியடைந்துள்ளனர்” என்று ஐ.நா. அறிக்கை கூறியது. 

பெறப்பட்ட தகவல்களின்படி “பாலஸ்தீனிய பெண்கள் மற்றும் சிறுமிகள் காசாவில் எதேச்சதிகாரமாக கொல்லப்பட்டதாக கூறப்படுவதுடன், பெரும்பாலும் அவர்களின் குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்களுடன் கொல்லப்படுகின்றனர்,” என்று அறிக்கை கண்டறிந்தது. 

ஐ.நா. நிபுணர்களை மேற்கோள் காட்டி அது கூறியதாவது: “பாலஸ்தீனிய பெண்கள் மற்றும் குழந்தைகளை அவர்கள் அடைக்கலம் தேடிய இடங்களில் அல்லது தப்பி ஓடும்போது வேண்டுமென்றே குறிவைத்து சட்டத்துக்குப் புறம்பாக கொலை செய்வது குறித்த செய்திகளால் நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம். அவர்களில் சிலர் இஸ்ரேலிய இராணுவம் அல்லது அதனுடன் இணைந்த படைகளால் கொல்லப்பட்டபோது வெள்ளை துணி துண்டுகளை காட்டியதாக கூறப்படுகிறது.” 

நிபுணர்கள் மேலும் கூறுகையில், “தடுப்புக்காவலில் உள்ள பாலஸ்தீனிய பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆண் இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளால் நிர்வாணமாக்கப்பட்டு சோதனையிடப்பட்டது போன்ற பல வகையான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளமை போன்ற அறிக்கைகளால் நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம். குறைந்தது இரண்டு பெண் பாலஸ்தீனிய கைதிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், மற்றவர்கள் கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறை அச்சுறுத்தலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.”

“ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்த குற்றஞ்சாட்டப்பட்ட நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களாக, சர்வதேச குற்றவியல் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றங்களாக இருக்கலாம், அவை ரோம் சாசனத்தின் கீழ் விசாரிக்கப்படலாம்” என்று நிபுணர்கள் தெரிவித்தனர். 

“இந்த வெளிப்படையான குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் பொறுப்பாளிகள் ஆக்கப்பட வேண்டியிருப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினரும் முழு பரிகாரம் மற்றும் நீதி கிடைக்க உரித்துடையவர்கள்.”

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை, அதன் காரணங்கள் மற்றும் விளைவுகள் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் ரீம் அல்சலீம் மற்றும் 1967 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களில் மனித உரிமைகள் நிலைமை குறித்த சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பனீஸ் ஆகியோர் நிபுணர்களில் அடங்குவர். 

பாலஸ்தீனிய கைதிகள் திட்டமிட்டு சித்திரவதை செய்யப்படுவது இஸ்ரேலிய தொலைக்காட்சியில் தைரியமாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது, அங்கு கைதிகள் கண்கள் கட்டப்பட்டு விலங்கிடப்பட்டு காட்டப்படுகின்றனர், பலர் அபு கிரைப் இல் அமெரிக்காவால் அறிமுகப்படுத்தப்பட்டவாறு “வதைப்படும் நிலையில் கட்டிவைக்கப்படுகின்றனர்”. 

இஸ்ரேலியத் துருப்புக்கள் காசா பகுதியை இரண்டாகத் திறம்பட வெட்டி வடக்கில் காஸா நகரத்திற்கும் தெற்கில் கான் யூனிஸுக்கும் இடையில் ஒரு நெடுஞ்சாலையை உருவாக்கி, காசாவை ஒரு ஒருங்கிணைந்த புவியியல் அமைப்பாக அழித்துவிட்டதாகக் காட்டும் செய்தியையும் இஸ்ரேலிய தொலைக்காட்சி ஒளிபரப்பியது. 

திங்களன்று, சர்வதேச நீதிமன்றம் காஸா மற்றும் மேற்குக் கரையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் சட்டபூர்வ தன்மை பற்றிய விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணையின் போது, பாலஸ்தீனப் பிரதிநிதிகள், தற்போதைய இனப்படுகொலையானது அனைத்து ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீதும் இஸ்ரேலின் முழுக் கட்டுப்பாட்டை ஸ்தாபித்து, அதை முழுமையாக இஸ்ரேலிய அரசோடு இணைக்கும் திட்டமிட்ட முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று விரிவாக விளக்கினர். 

Loading