மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தன்யாகு வெள்ளியன்று “ஹமாஸ் கோட்பாடுகளுக்கு அடுத்த நாள்” என்று தலைப்பிடப்பட்ட ஒரு ஆவணத்தை தனது போர் அமைச்சரவைக்கு வழங்கினார். பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போரைத் தொடர்ந்து, காஸாவை நடைமுறையில் இணைப்பதற்கான திட்டங்கள் என்ன என்பதை இந்த ஆவணம் கோடிட்டுக் காட்டுகிறது, அத்துடன் மேற்குக் கரை மீதான இஸ்ரேலின் இறுக்கமான கட்டுப்பாட்டையும் இது காட்டுகிறது.
இந்த திட்டம் கூறுவது போல், இஸ்ரேல் காலவரையின்றி “ஜோர்டான் ஆற்றின் மேற்கே உள்ள அனைத்துப் பகுதிகளையும்” இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். அதன் முழு எல்லையிலும் ஒரு “பாதுகாப்பான இடத்தை” நிறுவுவதற்காக காஸா பகுதிக்குள் இருக்கும் பகுதியைக் கைப்பற்ற விரும்புகிறது. இஸ்ரேலிய இராணுவம் ஏற்கனவே வடக்கு காஸா பகுதியிலுள்ள வீடுகள் மற்றும் குடிமக்களின் உள்கட்டமைப்புகளை பெரிய அளவில் இடித்து அத்தகைய ஒரு இடையக மண்டலத்தை (buffer zone) உருவாக்குவதற்கு தயாராக உள்ளது.
ஆயுதக் கடத்தலைத் தடுக்கும் சாக்குபோக்கில், எகிப்துடனான காஸாவின் தெற்கு எல்லையை ஒட்டி —இது மட்டுமே உடனடியாக இஸ்ரேலிய கட்டுப்பாட்டின் கீழ் இல்லை— ஒரு வான்வழி மற்றும் நிலத்தடி “பாதுகாப்புப் பிரிவை” உருவாக்குவதையும் இந்த ஆவணம் கருதுகிறது. அவ்வாறு செய்வதன் மூலம், காஸா மீதான தரை, கடல் மற்றும் வான் பகுதிகளை இஸ்ரேல் முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இதன் மூலம், அந்த பகுதியை ஒரு பிரம்மாண்டமான சிறை முகாமாக மாற்றுவதை நிறைவு செய்யும்.
இஸ்ரேலிய இராணுவம் காஸா முழுவதிலும் உள்ள நகரங்களையும் கிராமங்களையும் அழித்துள்ளது. கடந்த மாதம் பி.பி.சி வெளியிட்ட மதிப்பீட்டின்படி, அப்பகுதியிலிருந்த 144,000 முதல் 175,000 வரையிலான, அதாவது, மொத்தத்தில் 50 முதல் 61 சதவீதம் வரையிலான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன.
காஸாவில் எவ்வித மறுகட்டமைப்பும் அதன் இராணுவமயமாக்கலின்றி தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நெதன்யாகு திட்டம் வலியுறுத்துகிறது. அதாவது ஆயுதங்களை திரும்பப் பெறுவது மட்டுமல்லாமல், சிவில் நிர்வாகம் மற்றும் பொலிஸ் மீதான இஸ்ரேலிய மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டையும் குறிக்கிறது. “காசாவில் உள்ள அனைத்து சமூக மற்றும் மத கல்வி நிறுவனங்களிலும் விரிவான தீவிரவாத ஒழிப்பு திட்டத்திற்கு” அது அழைப்பு விடுக்கிறது.
காஸாவில் உள்ள ஹமாஸ் நிர்வாகத்தை “எந்தவொரு பயங்கரவாத நாடுகள் அல்லது குழுக்களுடனும் இணைக்கப்படாத அல்லது நிதி ரீதியாக ஆதரிக்காத” உள்ளூர் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு கைப்பாவை ஆட்சியைக் கொண்டு பிரதியீடு செய்ய நெதன்யாகு உத்தேசித்துள்ளார்” — வேறுவார்த்தைகளில் கூறினால், இஸ்ரேலிய ஆட்சிக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய உள்ளூர் கைக்கூலிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
காஸாவில் உள்ள எந்தவொரு போலீஸ் படையும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும். “நிர்வாக அனுபவம் கொண்ட உள்ளூர் உறுப்பினர்கள்” மட்டுமே பொது ஒழுங்கை அமல்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். அத்தகைய அமைப்பு “பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசுகள் அல்லது அமைப்புகளுடன் அடையாளம் காணப்படாது, மற்றும் அவர்களிடமிருந்து சம்பளம் பெறாது.” நிச்சயமாக, எந்தெந்த நாடுகள் மற்றும் அமைப்புகள் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகக் கருதப்படுகின்றன என்பதை இஸ்ரேல்தான் தீர்மானிக்கும்.
காஸாவுடனான சர்வதேச தொடர்புகளை —வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வெளியுறவுக் கொள்கை— தீர்மானிக்க இஸ்ரேல் உத்தேசித்துள்ளது என்பதற்கான மற்றொரு அறிகுறியாக, பாலஸ்தீனியர்களுக்கான பிரதான நிவாரண முகமையான 75 ஆண்டுகால ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணிகள் முகமையை (UNRWA) மூடிவிட்டு, அதற்கு பதிலாக “பொறுப்பான சர்வதேச உதவி அமைப்புகளை” நிறுவ இஸ்ரேல் வேலை செய்யும் என்று அந்த ஆவணம் அறிவிக்கிறது.
அக்டோபர் 7ம் தேதி, தெற்கு இஸ்ரேலுக்குள் ஹமாஸின் இராணுவ நடவடிக்கையில் காஸாவில் உள்ள UNRWA இன் 12,000ம் வலுவான தொழிலாளர் தொகுப்பில் ஒரு டசின் ஊழியர்கள் பங்கு பெற்றனர் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் பயன்படுத்திக் கொண்டது. வேண்டுமென்றே உணவு, சுத்தமான நீர், மருந்து மற்றும் பிற அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்ட காஸா மக்கள் எதிர்நோக்கும் அவல நிலையைப் பற்றி UNRWA பலமுறை எச்சரித்துள்ளது.
ஐ.நா அமைப்புக்கான நிதியைக் குறைப்பதன் மூலம் UNRWA க்கு எதிரான இஸ்ரேலின் பிரச்சாரத்தில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இணைந்துள்ளன. UNRWA தலைவர் பிலிப் லாஸ்ஸாரினி வியாழக்கிழமை ஐ.நா. பொதுச் சபைக்கு எழுதிய கடிதத்தில், நிறுவனம் 450 மில்லியன் டாலர் நிதியை இழந்துவிட்டதாக கூறினார். “பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளுக்கு கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு மாபெரும் பேரழிவின் விளிம்பில் நாங்கள் இருக்கிறோம் என்று நான் அஞ்சுகிறேன்” என்று அவர் எச்சரித்தார்.
கடந்த செப்டம்பரில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இஸ்ரேலின் எல்லைகளுக்குள் காஸா மற்றும் மேற்குக் கரையைக் காட்டும் ஒரு வரைபடத்தை மேற்கோள் காட்டி, UNRWA ஐ மூடுவதற்கான இஸ்ரேலின் அழைப்புகள் “ஏஜென்சியின் நடுநிலைமை பற்றியது அல்ல” என்று லாஸ்ஸாரினி கூறினார். மாறாக, “இதே பகுதிக்குள் பாலஸ்தீன அகதிகளுக்கு சேவைகளை வழங்குவதற்கான UNRWAவின் ஆணை அந்த வரைபடம் யதார்த்தமாக மாறுவதற்கு ஒரு தடையாக உள்ளது” என்று அவர் கூறினார்.
நெதன்யாகுவின் ஹமாஸுக்குப் பிந்தைய திட்டம், சியோனிச ஆட்சி என்ன செய்ய உத்தேசித்துள்ளது என்பதை துல்லியமாக தெளிவுபடுத்துகிறது—அதாவது காஸா மற்றும் மேற்குக் கரையில் இஸ்ரேலிய காலனித்துவம், அதைத் தொடர்ந்து இனச்சுத்திகரிப்பு மற்றும் இறுதியில் இணைப்பு. மேற்குக் கரையில் 3,000ம் புதிய குடியேற்ற வீடுகள் கட்டுவதற்கு இஸ்ரேல் பச்சைக்கொடி காட்டியது என்ற அறிவிப்புடன் இந்தத் திட்டமும் இருந்தது.
நெதன்யாகு பலமுறை “இரண்டு-அரசு தீர்வு” என்று அழைக்கப்படுவதை நிராகரித்துள்ளார். அவரது சமீபத்திய ஆவணம், “அடுத்த நாள்”, பாலஸ்தீனிய அரசின் எந்தவொரு “ஒருதலைப்பட்ச அங்கீகாரத்தையும்” நிராகரிக்கிறது. “பாலஸ்தீனியர்களுடனான இறுதி நிலை குறித்த சர்வதேச ஆணைகளை இஸ்ரேல் திட்டவட்டமாக நிராகரிக்கிறது”. நேரடிப் பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே அத்தகைய ஏற்பாட்டை அடைய முடியும் என்று அது அறிவிக்கிறது.
காஸாவின் மீது ஒரு பொம்மை ஆட்சியை திணிக்க விரும்புவது போல், இறுதி அந்தஸ்து ஏற்பாட்டிற்கான எந்தவொரு “பேச்சுவார்த்தைகளும்” இஸ்ரேலின் நோக்கங்களை திருப்திப்படுத்த இஸ்ரேலால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுடன் இருக்கும்.
நெத்தனியாகுவின் திட்டத்திற்கு பைடென் நிர்வாகத்தின் விடையிறுப்பு முற்றிலும் பாசாங்குத்தனமானது. காஸாவில் சியோனிச ஆட்சியின் காட்டுமிராண்டித்தனமான இராணுவ நடவடிக்கையை அரசியல், நிதி மற்றும் இராணுவரீதியாக முழுமையாக ஆதரித்துவரும் வெள்ளை மாளிகை, இஸ்ரேலின் போரின் சூறையாடும் நோக்கங்களில் இருந்து தன்னை தூர விலக்கிக் கொள்ள முயன்றுள்ளது.
காஸா மீதான முழு அளவிலான இஸ்ரேலிய படையெடுப்பை ஆதரிக்கும் அதேவேளையில், அமெரிக்கா இரு அரசு தீர்வை ஆதரிப்பதாக பாசாங்கு செய்கிறது மற்றும் காஸா பகுதியின் எந்தவொரு மறுகட்டமைப்பிலும் மேற்குக் கரையில் உள்ள பழமைவாத பாலஸ்தீனிய அதிகாரத்தின் தலையீட்டிற்கான அதன் அழைப்புகளை மீண்டும் வலியுறுத்துகிறது. காஸாவின் எல்லைகளைச் சுற்றி இராணுவ இடைத்தடை மண்டலங்களைக் கட்டமைப்பதற்கான இஸ்ரேலிய திட்டங்களை பெயரளவில் எதிர்க்கும் அதேவேளையில், அமெரிக்கா அவற்றின் “தற்காலிக” உருவாக்கத்தை அது ஆதரிக்கும் என்று அறிவித்துள்ளது.
நெதன்யாகுவின் திட்டம் குறித்த அறிவிப்பின் நேரம் முக்கியத்துவம் வாய்ந்தது. காஸாவில் இஸ்ரேலின் மின்னல் வேக தாக்குதலில் ஒரு தற்காலிக இடைநிறுத்தம் அல்லது போர்நிறுத்தத்திற்கான பாரிஸ் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக இது வந்துள்ளது. அதன் வெளியீடு, பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே விஷமமாக்குவதை நோக்கமாகக் கொண்ட கணக்கிடப்பட்ட அரசியல் ஆத்திரமூட்டலின் தன்மையைக் கொண்டுள்ளது. ஹமாஸின் போர்நிறுத்த முன்மொழிவுகள் “மாயை” என்று நெதன்யாகு முன்னதாக நிராகரித்திருந்தார்.
அதே நேரத்தில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனிய அகதிகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ரஃபா நகரத்தின் மீது இஸ்ரேலிய குண்டுவீச்சு தொடர்கிறது. இறப்பு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 29,400 க்கும் அதிகமாக உயர்ந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. இதில் ஒரு இஸ்ரேலிய தாக்குதல் டெய்ர் எல்-பலாவில் டசின் கணக்கான இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த ஒரு வீட்டை தாக்கிய பொழுது குறைந்தது 24 பேர், முக்கியமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட கொல்லப்பட்டார்கள்.
இந்த பயங்கரமான எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க உள்ளது. நெதன்யாகுவின் பாசிச ஆட்சி, மார்ச் 10 ஆம் தேதி ரமழான் தொடங்கும் முன், மீதமுள்ள அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவிக்கவில்லை என்றால், காஸாவில் இருந்து கைப்பற்றப்பட்ட பகுதியை முழுமையாகக் கைப்பற்ற, ரஃபா மீது இராணுவம் தனது கொடிய தரைவழித் தாக்குதலைத் தொடங்கும் என்று ஒரு இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மேலும் படிக்க
- உயர்மட்ட ஐ.நா. நீதிமன்ற விசாரணைகள் பாலஸ்தீனிய நிலத்தை ஆக்கிரமித்து இணைத்துக்கொள்ளும் நீண்டகால இஸ்ரேலிய திட்டங்களை அம்பலப்படுத்துகின்றன
- இஸ்ரேல் ரஃபா மீது கடும் தாக்குதலை நடத்த தயாராகி வரும் நிலையில், போர்நிறுத்தத் தீர்மானத்தை இரத்துச் செய்ய அமெரிக்கா சபதம் பூண்டுள்ளது
- காஸா இனப்படுகொலை: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது