இந்திய துறைமுக தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அனுப்புவதை கையாள மறுத்துவிட்டனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இந்தியாவின் 11 பிரதான துறைமுகங்களில் 3,500 தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் இந்திய நீர் போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு (WTWFI), எந்த கப்பலிலும் இஸ்ரேலுக்கு செல்லும் ஆயுதங்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ மறுக்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, அமெரிக்கா வினியோகித்த ஆயுதங்களைக் கொண்டு வாஷிங்டனின் முழுமையான அரசியல் ஆதரவுடன் பல்லாயிரக்கணக்கான பாதுகாப்பற்ற பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் படுகொலை செய்வதற்கு இந்திய தொழிலாளர்கள் மத்தியில் நிலவும் ஆழமான எதிர்ப்பின் அறிகுறியாகும்.

காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரைக் கண்டு பீதியடைந்துள்ள உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் மற்றும் இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தன்யாகு தலைமையிலான பாசிசவாத ஆட்சியால் நடத்தப்பட்டு வருகின்ற கண்மூடித்தனமான படுகொலைகளை நிறுத்தக் கோரி மில்லியன் கணக்கில் வீதிக்கு இறங்கி போராடி வருகின்றனர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுமாக காஸாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதுடன் காணாமல் போனவர்களையும் சேர்த்தால் இது 37,000 க்கும் அதிகமாக உயரும். மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் ஏனைய முக்கிய உள்கட்டுமானங்கள் அங்கு அழிக்கப்பட்டுவிட்டன.

இஸ்ரேலிய இராணுவம் அத்தியாவசிய உணவு, குடிநீர், எரிபொருள், மருத்துவ கவனிப்பு, மின்சாரம் ஆகியவற்றை தடுத்துள்ளதன் விளைவாக பரந்த பட்டினி, நோய் மற்றும் இன்னும் கூடுதலான மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இப்பொழுது அது 1.5 மில்லியன் பாலஸ்தீனியர்கள் மிகக் கொடூரமான நிலைமைகளில் வாழ்கின்ற காஸாவின் தெற்கு நகரமான ரபாவில் ஒரு கொலைகார தரைப்படைத் தாக்குதலுக்குத் தயாராகி வருகிறது.

இந்திய தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்களிடையே இந்த இனப்படுகொலைக்கு எதிர்ப்பு பரந்தளவில் உள்ளது. எனவே இஸ்ரேலுக்கு அனுப்பப்பட வேண்டிய ஆயுத கப்பல்களை கையாள மறுப்பதை அறிவிக்க வேண்டிய கட்டாயம் இந்திய நீர் போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்புக்கு ஏற்பட்டது. எவ்வாறாயினும், ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்டுப்பாட்டிலான இந்திய தொழிற்சங்கங்களின் மையத்துடன் (சிஐடியு) இணைந்த இந்திய நீர் போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு, இனப்படுகொலைக்கு எதிராக எந்தவொரு உண்மையான பாரிய தொழிலாளர் அணிதிரட்டலை ஒழுங்கமைக்கும் நோக்கத்தைக் காட்டிலும், தொழிலாளர்கள் மத்தியில் நம்பகத்தன்மையைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கிலேயே அவ்வாறு செய்தது. பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் ஏகாதிபத்திய ஆதரவிலான இனப்படுகொலை குறித்தும் அதில் இந்தியா உடந்தையாக இருப்பது குறித்தும் தொழிலாளர்களுக்கு கல்வியூட்ட ஸ்ராலினிச தொழிற்சங்கத் தலைவர்கள் எதுவும் செய்யாததோடு அவர்கள் அதை எவ்வாறு எதிர்க்க முடியும் என்பது குறித்த எந்த முன்னோக்கையும் வழங்கவில்லை.

இந்தியாவின் இரண்டாவது பெரிய துறைமுகமான சென்னை துறைமுகத்தில் உலக சோசலிச வலைத் தளம் உடன் பேசிய தொழிலாளர்கள், இஸ்ரேலிய போர் தளவாடங்களை கையாள மறுக்குமாறு ஸ்ராலினிச தலைமையிலான WTWFI விடுத்த அழைப்பைக் குறித்து அறிந்திருக்கவில்லை. [Photo: Government of India]

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய கொள்கலன் துறைமுகமான சென்னை துறைமுகத்தில் சில துறைமுகத் தொழிலாளர்களுடன் பேசியபோது, தொழிலாளர்கள் இஸ்ரேலிய போர் தளவாடங்கள் மீதான தடைக்கு ஆதரவை வெளிப்படுத்தினர். எவ்வாறாயினும், சிஐடியு மற்றும் பிற துறைமுக தொழிற்சங்கங்கள் காஸா இனப்படுகொலை குறித்தோ அல்லது இஸ்ரேலிய போர் கப்பல்களை நிராகரிக்கும் திட்டங்கள் குறித்தோ தங்களுக்கு தகவல் தெரிவிக்க எந்த பிரச்சாரத்தையும் நடத்தவில்லை என்று அவர்கள் கூறினர். தொழிலாளர் சக்தியில் பெரும்பான்மையாக இருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பாதுகாக்கவோ அல்லது காஸாவில் பாலஸ்தீனியர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு பிரச்சாரத்திற்குள் அவர்களை ஈர்க்கவோ இந்திய நீர் போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதையும் அந்த கலந்துரையாடல்கள் வெளிப்படுத்தின. இந்திய நீர் போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பின் ஸ்ராலினிச தலைவர்களைப் பொறுத்த வரையில், இஸ்ரேலிய போர் கப்பல்களைத் தடுப்பதற்கான அழைப்பு, ஒரு விளம்பர தந்திரமாக இல்லாவிட்டாலும், ஒரு எதிர்ப்பு சமிக்கை என்பதை இது வெளிப்படுத்துகிறது.

துறைமுக தொழிலாளர் சங்கத்தின் தலைவர் நாகேந்திர ராவ் கூறுகையில், இஸ்ரேலுக்கு கப்பல்கள் ஆயுதங்களை ஏற்றிச் செல்வதாக இதுவரை எந்த அறிக்கையும் வரவில்லை. இருப்பினும், இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு இருபதுக்கும் மேற்பட்ட ஹெர்ம்ஸ் 900 நடுத்தர உயர நீண்ட தூரம் செல்லும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAV) விற்பனை செய்யப்பட்டதாக சமீபத்திய நாட்களில் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இஸ்ரேலால் பயன்படுத்தப்படும் நான்கு “கொலையாளி ட்ரோன்களில்” ஒன்றான ஹெர்ம்ஸ் 900, தென்னிந்திய நகரமான ஹைதராபாத்தில் உள்ள அதானி-எல்பிட் அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (Adani-Elbit Advanced Systems India Limited) நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு ஆலையில் தயாரிக்கப்படுகிறது. இந்த நிறுவனம் இஸ்ரேலிய ஆயுத உற்பத்தியாளர் எல்பிட் சிஸ்டம்ஸ் மற்றும் இந்தியாவின் இரண்டாவது பணக்கார பில்லியனரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவருமான கௌதம் அதானிக்கு சொந்தமான ஒரு குழுமமான இந்தியன் அதானி குழுமத்திற்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும். இந்த விற்பனையை முதலில் பெப்ரவரி 2 அன்று ஷெப்பர்ட் மீடியா அறிவித்தது. இந்தியாவோ அல்லது இஸ்ரேலோ இந்த கொள்முதலை ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், அதானி குழும வட்டாரங்களால் தி வயர் ஊடகத்திற்கு இந்த விற்பனை சம்பந்தமாக உறுதியான தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதானி-எல்பிட் உற்பத்தி முயற்சி இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் எப்போதும் விரிவடைந்து வரும் இராணுவ-பாதுகாப்பு கூட்டாண்மையின் ஒரு பகுதியாகும். ஆண்டுக்கு சுமார் 1 பில்லியன் டொலர் செலவழித்து, இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை வாங்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா மாறியுள்ளது.

2014 மற்றும் 2019 க்கு இடையில் மோடி மற்றும் அவரது இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) முதல் பதவிக் காலத்தின் போது, இஸ்ரேலில் இருந்து இந்தியாவுக்கு ஆயுத விநியோகம் 175 சதவீதம் அதிகரித்ததாக, ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டில், இஸ்ரேல் ஆயுத தொழிற்துறை (Israel Weapons Industries) இந்திய பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனமான பஞ்ச் லாயிட் (Punj Lloyd) உடன் இணைந்து, இந்தியாவின் முதல் தனியார் துறை சிறு ஆயுத தொழிற்சாலையை மத்தியப் பிரதேசத்தின் மலன்பூரில் நிறுவியது. இந்த ஆலையானது இந்திய இராணுவத்தின் சிறப்புப் படைகள் உட்பட இந்திய இராணுவத்திற்காக உஸி (Uzi) அரைதாணியங்கித் துப்பாக்கிகள் போன்ற பலவிதமான தாக்குதல் ஆயுதங்களை உற்பத்தி செய்கிறது. அதே ஆண்டின் பிற்பகுதியில், மற்றொரு இஸ்ரேலிய-இந்திய கூட்டு நிறுவனமான கல்யாணி ரஃபேல் அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட் (Kalyani Rafael Advanced Systems Ltd), இந்தியாவின் முதல் தனியார் துறை ஏவுகணை ஆலையைத் திறந்த, இந்திய இராணுவத்திற்காக ஸ்பைக் டாங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணைகளைத் தயாரித்தது.

அக்டோபர் 7 அன்று பாலஸ்தீன எழுச்சியைக் கண்டித்து, அதிவலது நெத்தன்யாகு ஆட்சிக்கு ஒற்றுமையை வெளிப்படுத்திய முதல் உலகத் தலைவர்களில் மோடியும் ஒருவராக இருந்தார். புது டெல்லி அரசாங்கம், சோமாலிய கடற்கொள்ளையர்களை எதிர்த்துப் போராடுகிறோம் என்ற சாக்குப்போக்கின் கீழ், பின்னர் இஸ்ரேலிய இனப்படுகொலை மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்காவால் தூண்டிவிடப்பட்ட பரந்த மோதலுக்கு மத்தியில், ஏடன் வளைகுடாவில் இரண்டு முன்னணி போர்க்கப்பல்களையும், அரேபிய கடலில் குறைந்தபட்சம் 10 போர்க்கப்பல்களையும் நிலைநிறுத்தியது.

இஸ்ரேலின் இனப்படுகொலை போருக்கு மோடியின் வெளிப்படையான ஆதரவு, இஸ்ரேல் உடனான இந்தியாவின் நெருக்கமான இராணுவ-மூலோபாய கூட்டுறவில் இருந்து ஊற்றெடுக்கிறது. அதை விரிவுபடுத்த அவர் விடாமுயற்சியுடன் வேலை செய்துள்ளார். எவ்வாறிருப்பினும், பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலிய போருக்கு இந்தியாவின் உறுதியான ஆதரவை தீர்மானிப்பதில் இன்னும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான புது டெல்லியின் “பூகோள மூலோபாய பங்காண்மை” ஆகும், அமெரிக்க ஏகாதிபத்தியம் இப்பிராந்தியத்தில் இஸ்ரேலை அதன் பிரதான தாக்குதல் வெறிநாயாக பார்க்கிறது. அதன் காங்கிரஸ் கட்சி தலைமையிலான முன்னோடி வகுத்த பாதையைத் தொடர்ந்து, மோடி அரசாங்கம், சீனாவை மூலோபாய ரீதியாக சுற்றி வளைக்கவும் அதனுடனான போருக்கு தயாரிப்பு செய்யவும் வாஷிங்டனின் உந்துதலில் இந்தியாவை ஒரு முன்னணி நாடாக மாற்றியுள்ளது.

காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்களை அணிதிரட்ட இந்திய நீர் போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு மறுப்பது, அது இணைந்துள்ள சி.பி.எம். இன் ஸ்ராலினிச அரசியலில் இருந்து பிரிக்கவியலாததாகும். நவம்பரில், சி.பி.எம். மற்றும் சி.பி.எம். தலைமையிலான இடது முன்னணியும் தொழிலாள வர்க்கத்திற்குள் காணப்படும் வெகுஜன எதிர்ப்பிற்கு மத்தியில் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக சில எதிர்ப்புக்களுக்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும், இஸ்ரேலிடம் இருந்தும் காஸா மீதான அதன் இனப்படுகொலை தாக்குதலில் இருந்தும் மோடி அரசாங்கத்தை தூர விலக்கிக் கொள்ள அழுத்தம் கொடுப்பது, மற்றும் பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலுக்கு ஒரு “இரண்டு-அரசு தீர்வு” மூலமாக மத்திய கிழக்கில் “சமாதானத்தை” பாதுகாக்க ஐ.நா மற்றும் வல்லரசு இராஜதந்திரத்தின் மூலமாக வேலை செய்வது என்ற திவாலான முன்னோக்கை அவர்கள் போராட்டங்கள் மீது திணித்தனர்.

அதன்பின்னர், இந்த வசந்தகால பொதுத் தேர்தலில் மோடி மற்றும் பா.ஜ.க.க்கு எதிரான பாரிய தொழிலாள வர்க்க எதிர்ப்பை, I.N.D.I.A கூட்டணிக்குப் பின்னால் அணிதிரட்டுவது என்ற அதன் மைய அரசியல் நோக்கத்திற்கு எந்த விதத்திலும் குறுக்கே வந்துவிடக் கூடாது என்பதற்காக. சி.பி.எம். அதன் காஸா எதிர்ப்பு பிரச்சாரத்தை கைவிட்டது. சமீப காலம் வரை இந்திய முதலாளித்துவத்தின் விருப்பமான அரசாங்கக் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைமையில், பா.ஜ.க.க்கு சற்றும் குறையாத வகையில் I.N.D.I.A கூட்டணி, இந்திய-அமெரிக்க கூட்டணியையும் இன்னும் கூடுதலான “முதலீட்டாளர் சார்பு” சீர்திருத்தங்களையும் உறுதியாக ஆதரிக்கிறது. மோடியின் தீவிர வலதுசாரி இந்துத்துவ (இந்து தேசியவாத) கூட்டாளிகளுடன் தகவமைத்துக் கொள்வதிலும் உடந்தையாக இருப்பதிலும் அதன் உறுப்புக் கட்சிகளுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு

சி.பி.எம். பல தசாப்தங்களாக இந்திய ஆளும் ஸ்தாபகத்தின் “இடது” தரப்பாக செயல்பட்டு வந்துள்ளது. முதலாளித்துவ அரசியல் மற்றும் வல்லரசு இராஜதந்திரத்தின் பிற்போக்கு கட்டமைப்பிற்குள் வறிய பாலஸ்தீனியர்களை ஒடுக்குவது, உடைமைகளைப் பறிப்பது மற்றும் இப்போது படுகொலை செய்வது சம்பந்தமாக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியிலான எதிர்ப்பை மட்டுப்படுத்த முனைவதும் இதில் உள்ளடங்கும். சிஐடியு மற்றும் சி.பி.எம். தலைவர்கள் அவ்வப்போது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்புகின்ற அதேவேளை, போர் மற்றும் ஏகாதிபத்திய உலக ஒழுங்கிற்கு எதிராக தொழிலாள வர்க்க தலைமையிலான ஒரு உலகளாவிய போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்ப முனைவது ஒருபுறம் இருக்க, தெற்காசியா மற்றும் உலக மக்களுக்கு இந்திய-அமெரிக்க இராணுவ-பாதுகாப்பு கூட்டணி பிரதிநிதித்துவப்படுத்தும் மரணகதியிலான ஆபத்து குறித்து தொழிலாள வர்க்கத்தை எச்சரிக்க அவர்கள் எதுவுமே செய்யவில்லை.

காஸாவில் இனப்படுகொலையை நிறுத்துமாறு ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அதில் சம்பந்தப்பட்டுள்ள இந்திய முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இந்திய ஸ்ராலினிஸ்டுகள் விடுக்கும் பரிதாபகரமான மற்றும் பிற்போக்கு வேண்டுகோள்களுக்கு எதிராக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே போரை நிறுத்த முடியும் என்று உலக சோசலிச வலைத் தளம் வலியுறுத்துகிறது.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பாகமான இந்திய தொழிலாளர்கள், இஸ்ரேலுக்கு அனுப்ப ஒதுக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் அனைத்து இராணுவ உபகரணங்களின் வினியோகம் மற்றும் உற்பத்தியை நிறுத்த வேலைநிறுத்தங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க வேண்டும். இதை ஒரு சர்வதேச அரசியல் பொது வேலைநிறுத்தத்திற்கான போராட்டத்துடன் இணைக்க வேண்டும். அத்துடன் ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டத்தை, உலகம் பூராவும் முதலாளித்துவ சிக்கன நடவடிக்கைகளுக்கும் தங்கள் சமூக, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் எதிராக உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் பெருகிவரும் வெகுஜன எழுச்சியுடனும் ஐக்கியப்படுத்தும் போராட்டத்துடனும் அது இணைக்கப்பட வேண்டும்.

அமெரிக்க ஆதரவுகொண்ட இஸ்ரேலிய தாக்குதலுக்கு எதிரான போராட்டமானது, சர்வதேச அளவிலானதாக இருப்பது அவசியமாகும். அதை முன்னெடுப்பதற்கு, தொழிலாளர்களின் போராட்டங்கள் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் மூச்சுத்திணற வைக்கும் தேசிய கட்டமைப்பிற்குள் மட்டுப்படுத்தப்பட்டு இருக்க முடியாது. போர், முதலாளித்துவ பிற்போக்குத்தனம் மற்றும் பொலிஸ்-அரசு ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை ஒருங்கிணைக்கவும், முதலாளித்துவத்தக்கும் ஏகாதிபத்திய போருக்கும் எதிரான, சோசலிசத்திற்கான ஒரு சர்வதேச இயக்கமாக தங்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்தவும், தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியுடன் இணைந்த தொழிலாளர் நடவடிக்கை குழுக்களைத் தொழிலாளர்கள் கட்டியெழுப்ப வேண்டும்.

மேலும் படிக்க

Loading