காஸா கடற்கரையில் மிதக்கும் கப்பல்துறைத் திட்டத்தில் அமெரிக்கா 1,000 துருப்புகளை நிறுத்த இருக்கிறது

மனிதாபிமான உதவிக்காக ஒரு மிதக்கும் கப்பல்துறையை  கட்டியெழுப்பும் பெயரளவு நோக்கத்திற்காக அமெரிக்காவானது காஸா கடற்கரையில் 1,000ம் துருப்புக்களை நிறுத்தும் என்று பென்டகன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஜோ பைடென் வியாழக்கிழமை தனது நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது கப்பல் துறை கட்டுமானத்தை அறிவித்தார். “உணவு, தண்ணீர், மருந்து மற்றும் தற்காலிக தங்குமிடம் ஆகியவற்றைக் கொண்டு செல்லும் பெரிய கப்பல்களுக்கு இடமளிக்கக்கூடிய காஸா கடற்கரைக்கு அப்பால் மத்திய தரைக்கடலில் ஒரு தற்காலிக கப்பல்துறையை  நிறுவுவதற்கான அவசர பணியை நடத்துமாறு அமெரிக்க இராணுவத்திற்கு நான் உத்தரவிடுகிறேன்” என்று பைடென் கூறினார்.

ஆகஸ்ட் 4, 2022 அன்று வேர்ஜீனியாவின் கடற்பகுதியில் ஒரு கூட்டுக் கடற்கரை தளவாடப் பயிற்சி அல்லது JLOTS இன் போது ஒரு கடற்படைக் கப்பல் இராணுவ சீலிஃப்ட் கட்டளைக் (Military Sealift Command) கப்பலின் இறக்கும் பாதையுடன் இணைகிறது. [Photo: Navy Chief Petty Officer Justin Wahl ]

மிதக்கும் கப்பல்துறை கட்டப்படுவது மனிதாபிமான அக்கறைகளால் உந்துதல் பெற்றது என்ற கூற்று ஒரு வெளிப்படையான போலிக்காரணம் ஆகும். முற்றுகையிடப்பட்டுள்ள பகுதிக்குள் உணவு வருவதை இஸ்ரேல் தடுக்காவிட்டால் காஸாவின் முழு மக்களுக்கும் சில நாட்களுக்குள் உணவளிக்க முடியும். காஸாவிற்குள் உணவை அனுமதிக்க இஸ்ரேல் “இன்னும் அதிகமாக செய்ய வேண்டும்” என்று அமெரிக்க அதிகாரிகள் அறிவிக்கின்ற அதேவேளையில், இஸ்ரேலுக்கு ஆயுதங்களையும் நிதியுதவிகளையும் தொடர்ந்து அதிகரிப்பதன் மூலமாக பாலஸ்தீனிய மக்களை பட்டினி போடும் இஸ்ரேலின் இனப்படுகொலை கொள்கைக்கு அமெரிக்கா துணை போகிறது.

இந்த வாரம், அமெரிக்க செய்தி அறிக்கைகளானது பைடென் நிர்வாகம் அக்டோபர் 7 முதல் இஸ்ரேலுக்கு 100 க்கும் மேற்பட்ட தனித்தனி ஆயுத கப்பல்களை அனுப்பியுள்ளது. அவை காங்கிரஸின் மேற்பார்வையைத் தவிர்ப்பதற்காக சிறிய பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளன.

அதிகபட்சமாக, மிதக்கும் கப்பல்துறை கட்டுமானம் ஒரு பாரிய மக்கள் தொடர்பு பயிற்சியாகும், இது காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவிலிருந்து திசைதிருப்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கும் கூடுதலாக, துறைமுகம் இரண்டு மாதங்களுக்கு செயல்படாது, அந்த சமயத்தில் இரண்டு மில்லியன் காஸாவாசிகள் பட்டினியால் தொடர்ந்து உயிரிழக்க நேரிடும்.

ஆனால், இது மற்ற அச்சுறுத்தும் அர்த்தங்களையும் கொண்டுள்ளது. காஸா பகுதியில் 1,000ம் அமெரிக்க துருப்புக்கள் நிறுத்தப்பட உள்ளன. இது போரில் அமெரிக்க இராணுவ பங்களிப்பின் அளவை அதிகரிக்கிறது. பென்டகன் இந்த இனப்படுகொலை போரை அதன் நிலத்திலும் தரையிறங்கும் மற்றும் தளவாட திறன்களை ஒத்திகை பார்ப்பதற்கான வாய்ப்பாக பார்க்கிறது, இதை அப்பிராந்தியத்திலும் உலகெங்கிலும் எதிர்கால போர்களில் பயன்படுத்த அது திட்டமிட்டுள்ளது.

இன்றுவரை, காஸாவுக்குள் அமெரிக்கா வீசிய உணவுப் பொருட்கள் சொற்பமாகவே உள்ளன. பென்டகன் செய்தித் தொடர்பாளர் பாட் ரைடர் கூறுகையில், 2 மில்லியனுக்கும் அதிகமான பசியால் வாடும் மக்களுக்கு உணவளிக்க ஒரு நாளைக்கு சுமார் 11,000ம் பொட்டலங்கள் உணவு வழங்கப்படுகிறது. வெள்ளியன்று, காஸா நகரத்தில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் ஊட்டச்சத்து குறைபாட்டால் மேலும் மூன்று குழந்தைகள் இறந்துள்ளன. இது பட்டினியால் இறந்தவர்களின் உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையை மேலும் 23 ஆகக் கொண்டு வந்தது.

வியாழனன்று தன்னுடைய நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், இது ரஷ்யா, ஈரான் மற்றும் சீனாவிற்கு எதிரான போர்வெறி வசைமாரி வடிவத்தை எடுத்தது, பைடென் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அதன் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் கொடுத்தார். “ஹமாஸைப் பின்தொடர்ந்து தாக்குவதற்கு இஸ்ரேலுக்கு உரிமை உண்டு” என்றும் இந்த மோதல் இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்பின் முழு சரணடைதலுடன் முடிவடைய வேண்டும் என்றும் அவர் அறிவித்தார். “ஹமாஸ் சரணடைவதன் மூலம் மோதலை முடிவுக்குக் கொண்டு வர முடியும்,” என்று அவர் கூறினார்.

“ஹமாஸ் கோழைகளைப் போல, மருத்துவமனைகள், பகல்நேர பராமரிப்பு மையங்கள் மற்றும் பலவற்றின் கீழும் பொதுமக்கள் மத்தியில் மறைந்து செயல்படுகிறது” என்று கூறி பொதுமக்களை குறிவைக்கும் இஸ்ரேலை, பைடென் குற்றச்சாட்டினின்று விடுவித்தார். இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்க இருக்கும் ரமலான் பண்டிகைக்கு முன்னர் ரஃபா மீது முழு அளவிலான தாக்குதலை நடத்த இருப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், ரமழானுக்கு முன்னர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவது “கடினம்” என்று ஜோ பைடென் வெள்ளிக்கிழமை கூறினார். இது ரஃபா மீதான படையெடுப்பு நடைபெறும் என்பதை ஒப்புக்கொள்வதற்கு சமம் ஆகும்.

காஸா மீது இஸ்ரேல் பட்டினி நிலைமைகளை திணிக்கையில், கிடைக்கும் சொற்ப உதவிகள் பெரும்பாலும் ஆபத்தானவையாக மாறிவிடுகின்றன. வெள்ளிக்கிழமை மனிதாபிமான உதவிப் பொருட்களை விமானத்தில் வீசும்போது பாராசூட் செயலிழந்ததில் 5 குழந்தைகள் உயிரிழந்தனர், அதே நாளில் காஸா நகரத்தில் ஒரு உணவு விநியோக மையத்தில் இஸ்ரேலிய படைகள் மீண்டும் ஒருமுறை மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தின. கடந்த மாதம், இஸ்ரேலிய படைகள் மாவு பெற வரிசையில் நின்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இது “மாவு படுகொலை” என்று அறியப்பட்ட ஒன்றில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

ஒரு செய்தியாளர் கூட்டத்தில், உணவுக்கான உரிமை தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் மைக்கேல் ஃபக்ரி, ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமெரிக்கா விமானத்தில் உணவுப் பொருட்களை வீசுவதும், மிதக்கும் கப்பல்துறை கட்டுவதற்கான திட்டங்கள் “அபத்தமானவை” மற்றும் “சிடுமூஞ்சித்தனமானவை” என்று கூறினார். அவர்கள் “பசி, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றைப் போக்க மிகக் குறைவாகவே செய்வார்கள், பஞ்சத்தை குறைப்பதற்கு அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள்” என்று அவர் கூறினார்.

“நாடுகள் விமானத்திலிருந்து கீழே பொருட்களை போடுதல் மற்றும் இந்த கப்பல்துறைமுகங்களைப் பயன்படுத்தும் நேரம் வழக்கமாக, எப்போதும் இல்லாவிட்டாலும், எதிரி பிராந்தியத்திற்குள் மனிதாபிமான உதவிகளை வழங்க விரும்பும் சூழ்நிலைகளில்தான் இருக்கும்” என்று அவர் மேலும் கூறினார். ஆனால் இப்பிராந்தியத்தில் வாஷிங்டனின் நெருங்கிய கூட்டாளியும் இராணுவ உதவி பெறும் மிகப் பெரிய நாடுமான இஸ்ரேலால் காஸா முற்றுகையின் கீழ் உள்ளது.

ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணிகள் அமைப்பின் (UNRWA) தகவல் தொடர்பு இயக்குநர் ஜூலியட் டூமா கூறியதாவது:

காஸா பகுதிக்கு மிகவும் தேவையான பொருட்களை பெற எளிதான மற்றும் மலிவான வழி உள்ளது...அதாவது இஸ்ரேலில் இருந்து காஸா பகுதிக்கு சாலை வழியாக அதிக டிரக்குகளை அனுப்புவது ஆகும். அது அவ்வளவு கடினமாக இருக்காது. இஸ்ரேலை காஸா பகுதியுடன் இணைக்கும் பல குறுக்குவழிகள் உள்ளன, அதைத்தான் போர் தொடங்குவதற்கு முன்பு நாங்கள் பயன்படுத்தினோம்.

சர்வதேச மீட்புக் குழு (ஐ.ஆர்.சி) அல் ஜசீராவிடம் கூறியது, “ஒரு தற்காலிக கப்பல் துறையை நிர்மாணிக்க வாரங்கள் ஆகலாம் அல்லது விமானத்திலிருந்து கீழே பொருட்களை போடுதல் ஒரு தீர்வு அல்ல.” அதற்கு பதிலாக, “காஸா மீதான அதன் முற்றுகையை நீக்குமாறும், வடக்கில் கர்னி (அல்-முன்டார்) மற்றும் எரெஸ் (பெய்ட் ஹனூன்) உட்பட அதன் எல்லைகளை மீண்டும் திறக்குமாறும், எரிபொருள், உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் உட்பட மனிதாபிமான பணியாளர்கள் மற்றும் உதவிகளின் பாதுகாப்பான மற்றும் தடையற்ற இயக்கத்தை அனுமதிக்குமாறும் அவர் இஸ்ரேலுக்கு அழைப்புவிடுத்தார்.

அமெரிக்க ஊடகங்களில் மேற்கோள் காட்டப்பட்ட இந்த திட்டத்தை பாலஸ்தீனியர்கள் கண்டித்தனர். அதாவது “ எங்களுக்கு உதவ அவர்கள் ஒரு கப்பல்துறையை உருவாக்குவார்கள் என்று கூறுவதற்குப் பதிலாக, அவர்கள் எங்கள் மீது சுடும் ஆயுதங்களை [வழங்குவதை] நிறுத்துவார்கள்” என்று ரஃபாவில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த காஸாவை சேர்ந்த ஹசன் மஸ்லா ராய்ட்டர்ஸிடம் கூறினார்.