முன்னோக்கு

அமெரிக்க டிக்டாக் எதிர்ப்பு மசோதா: இணைய தணிக்கையை அதிகரித்து சீனாவுடன் போருக்குத் தயாராகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கலிஃபோர்னியாவின் கல்வர் சிட்டியில் உள்ள அவர்களின் கட்டிடத்தில் TikTok Inc. லோகோ காணப்படுகிறது. மார்ச் 11, 2024 திங்கள் [AP Photo/Damian Dovarganes]

பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட உரிமையாளர் ByteDance உடைய, பிரபலமான சமூக ஊடக செயலியான TikTok இன் விற்பனையை தடை செய்ய அல்லது கட்டாயப்படுத்த, இந்த வாரம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 352-65 என்ற விகிதத்தில் கிடைத்த வாக்குகள் என்பது, அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது தொடுத்த தாக்குதலாகும். குறிப்பாக 170 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், முக்கியமாக இளைஞர்கள், இந்த பயன்பாட்டை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.

பெய்ஜிங்கிற்கு எதிரான வர்த்தகப் போர் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்துடன் போரைத் தொடங்க மக்களைத் தயார்படுத்தவும், சீன எதிர்ப்பு உணர்வைத் தூண்டும் அதே வேளையில், இணையத்தில் இடதுசாரி மற்றும் எதிர்க்கட்சிக் கருத்துக்களைத் தணிக்கை செய்வதற்கான நீண்டகால பிரச்சாரத்தின் விரிவாக்கம் இதுவாகும்.

ஜனாதிபதி ஜோ பைடென், காங்கிரஸால் அங்கீகரிக்கப்பட்டால், தடையில் கையெழுத்திடுவேன் என்று கடந்த வாரம் அறிவித்தபோது, ​​கிட்டத்தட்ட சமமாக பிளவுபட்ட குடியரசுக் கட்சி கட்டுப்பாட்டில் உள்ள சபையில் வலதுசாரி, சர்வாதிகார மசோதாவின் பெரும் இரு கட்சி நிறைவேற்றத்திற்கு பச்சை விளக்கு காட்டினார். ஜனாதிபதியின் மேசைக்குச் செல்வதற்கு முன், ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள செனட்டில் (மசோதாவின் தற்போதைய நிலையுடன் இதற்கான வாய்ப்பு நிச்சயமற்றதாக இருக்கிறது) இந்த மசோதா இப்போது வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

அமெரிக்க அரசியல்வாதிகள் வழக்கமாக டிக்டோக்கை “தேசிய பாதுகாப்புக்கு” அச்சுறுத்தலாக இருக்கிறதென்றும், செயலியின் வழிமுறை மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அமெரிக்க குடிமக்கள் பற்றிய தகவல்களை சேகரித்து பெய்ஜிங்கின் நலனுக்காக கையாளுகிறது என்றும் அறிவிக்கிறார்கள். இந்த குற்றச்சாட்டுகள் ஒப்புதல் வாக்குமூலங்களைத் தவிர வேறில்லை. ஏனென்றால் இதைத்தான் பெரிய அமெரிக்க நிறுவனங்கள், ஏற்கனவே செய்து வருவதுடன், இணைய பயனர்களின் தரவை சேகரித்து விற்பனை செய்து வருகின்றன. அமெரிக்க அரசாங்கம் சட்டவிரோதமாக முழு உலக மக்களையும் உளவு பார்க்கிறது என்பது நீண்ட காலமாக நிறுவப்பட்டுள்ள விடயமாகும்.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனத்தால் அதை வாங்குவதன் மூலமோ அல்லது பெரும் தண்டனைக்குரிய அபராதங்கள் மூலம் அதைத் தடை செய்வதன் மூலமோ, செயலியை திறம்பட அழிப்பதற்கான புதுப்பிக்கப்பட்ட முயற்சிகள், செய்திகளைப் பெறுவதற்கும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் இளம் அமெரிக்கர்களிடையே மிகவும் பிரபலமான தளமாக இந்த செயலியின் வளர்ச்சியின் மத்தியில் வளர்ந்துள்ளது. டிக்டோக் அமெரிக்காவில் 170 மில்லியன் செயலில் உள்ள மாதாந்திர பயனர்களைக் கொண்டுள்ளது, கிட்டத்தட்ட பாதிப் பயனர்கள் 18 முதல் 34 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர். பயனர்கள் பலதரப்பட்ட விஷயங்களில் உள்ளடக்கத்தைப் பதிவு செய்வதை பார்க்கும்போது, ​​அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை விமர்சிக்கும் வீடியோக்கள், கருத்துக்கள் தொடர்ந்து வைரலாகி வருகின்றன.

கடந்த ஆண்டு அக்டோபரில் காஸாவிற்கு எதிராக அமெரிக்காவின் முழு ஆதரவுடன் இஸ்ரேல் தனது இனப்படுகொலை தாக்குதலை தொடங்கியதில் இருந்து, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் இந்த செயலியில் வைரலான வீடியோக்களை பார்த்துள்ளனர். இது களத்தில் பாலஸ்தீனியர்கள் மீதான கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளதோடு, சியோனிஸ்டுக்களின் பிரச்சாரத்தை தவிடு பொடியாக்கியது.

“டிக்டோக் பிரச்சனையாக” இருக்கிறது என்று கசிந்த ஆடியோ மூலம் சிக்கிய சியோனிஸ்ட் அவதூறு எதிர்ப்பு லீக்கின் தலைவர் ஜொனாதன் கிரீன்ப்ளாட், இந்த செயலியை தடை செய்வதை ஆதரித்தார். இது, காஸாவில் இனப்படுகொலையை எதிர்க்கும் அனைவர் மீதும் வீசப்படும் ஒரு அவதூறான “யூத விரோதத்தை” பரப்புவதற்கு உதவுகிறது.

சீனாவுக்கு எதிரான வர்த்தகப் போர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 2020 ஆம் ஆண்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சியில் டிக்டாக்கை தடை செய்வதற்கு முதன்முதலில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அவர் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவு, ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்வதை தடைசெய்து இறுதியில், பேச்சு சுதந்திரம் மற்றும் உரிய செயல்முறைக்கான அரசியலமைப்பின் முதல் மற்றும் ஐந்தாவது திருத்த உரிமைகளை மீறியதற்காக கூட்டாட்சி நீதிபதியால் தடுக்கப்பட்டது. பைடெனால் ஆதரிக்கப்படும் தற்போதைய மசோதா ட்ரம்பின் தாக்குதலைப் போலவே தொலைநோக்குடையது.

அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் சமூக ஊடகங்களில் தணிக்கை நிறுவனமயமாக்கல் மற்றும் தளங்களை கைப்பற்றி அழிக்கும் முயற்சிகள் காணப்பட்டன. அவை ஒரு காலத்தில் சுதந்திரமான அரசியல் விவாதத்துக்கு திறந்திருந்தன மற்றும் எதிர்ப்பு இயக்கங்களை ஒழுங்கமைக்கப் பயன்படுத்தப்பட்டன. சமூக ஊடகத் தளங்களின் உள்ள பயனர்கள், “காஸா” அல்லது “இனப்படுகொலை” போன்ற சில வார்த்தைகள் அல்லது சொற்றொடர்கள் தங்கள் இடுகைகள் கொடியிடப்பட்டு நீக்கப்படும் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

மெட்டாவின் தளங்களான Facebook மற்றும் Instagram ஆகியவை குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரின் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக காங்கிரஸின் அழுத்தத்தின் கீழ் வெற்று நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. பாசிச கோடீஸ்வரர் எலோன் மஸ்க் 2022 இல் ட்விட்டரை வாங்கியுள்ளார். 2011 எகிப்திய மற்றும் துனிசியப் புரட்சிகளை ஒழுங்கமைத்து பின்பற்றுபவர்களுக்கு முக்கியமாக இருந்த செயலி, X ஆக மாற்றப்பட்டது. இது மிக மோசமான யூத விரோதம், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான இனவெறி மற்றும் LGBTQ எதிர்ப்பு ஆகிய உள்ளடக்கத்தை அதன் உரிமையாளரால் தொடர்ந்து உயர்த்தப்பட்டுவரும் தளமாகும்.

2020 ஆம் ஆண்டு முதல், உலக சோசலிச வலைத் தளமானது Reddit இல் மிகப்பெரிய விவாத மன்றங்களில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது, இது பெருகிய முறையில் சுத்திகரிக்கப்பட்டு வணிகமயமாக்கப்பட்டு, பொது வர்த்தக நிறுவனமாக மாறுகிறது. இதற்கிடையில், WSWS மற்றும் பிற இடதுசாரி தளங்களில் இருந்து விளைவுகளை அடக்குவதற்கு கூகுள் அதன் தேடல் சூத்திரத்தை தொடர்ந்து கையாளுகிறது.

மார்ச் 12 அன்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த், “காஸா இனப்படுகொலை மற்றும் ஆரோன் புஷ்னெலின் மரணம்: அரசியல் படிப்பினைகள் என்ன?” என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையின் வீடியோவை “வயது-கட்டுப்பாடு” எனக் கொடியிட்டு, உலக சோசலிச வலைத் தளத்தை வியாழனன்று YouTube அரசியல் ரீதியாக தணிக்கை செய்துள்ளது. 

TikTok ஐ கையகப்படுத்தும் வாய்ப்பில் எச்சில் ஊறுபவர்களில், முன்னாள் டிரம்ப் கருவூல செயலாளர் ஸ்டீவ் முனுச்சின், (இந்த நிறுவனத்திற்கு எதிரான பிரச்சாரத்தைத் தூண்டுபவர்) வியாழக்கிழமை CNBC இல் டிக்டாக் செயல்பாட்டை வாங்க ஒரு குழுவை ஒன்றாக இணைத்ததாக அறிவித்தார். இதேபோல், டிரம்பின் ட்ரூத் சோஷியலை வழங்கும் வலதுசாரி வீடியோ ஹோஸ்டிங் சேவையான ரம்பிள், டிக்டோக்கை வாங்குவதற்கான ஆர்வத்தை அறிவித்துள்ளது. அத்தகைய உரிமையின் கீழ், பயன்பாட்டின் ஜனநாயக விரோதப் பாதை தெளிவாக உள்ளது.

இணைய தணிக்கை என்பது பெரும் அதிகார மோதலுக்கான அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் தயாரிப்புகளின் முக்கிய பகுதியாகக் கருதப்படுகிறது, மிக வெளிப்படையாக சீனா மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக இருக்கிறது, அதாவது மூன்றாம் உலகப் போர்!. பைடென் நிர்வாகம் 2018 இல் டிரம்பின் கீழ் பென்டகன் கோடிட்டுக் காட்டிய தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தை அடிப்படையாகக் கொண்டது. இது, நீண்டகால மூலோபாய போட்டிக்கு தேசிய சக்தி, இராஜதந்திரம், தகவல், பொருளாதாரம், நிதி, உளவுத்துறை, சட்ட அமலாக்கம் மற்றும் இராணுவம் போன்றவற்றுக்கு பல கூறுகளின் தடையற்ற ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. 

டிக்டோக்கிற்கு எதிரான தற்போதைய முயற்சியில் இருந்து சீனாவை தளமாகக் கொண்ட Huawei, 5G நெட்வொர்க் உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்வது வரை, தேசியப் பாதுகாப்புக் காரணங்களுக்காக இன்னும் அதிக ஆக்ரோஷமான வர்த்தகப் போர் நடவடிக்கைகளை இது குறிக்கிறது. சீனாவில் இருந்து மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரிகளை இறக்குமதி செய்வதைத் தடை செய்யக் கோரியும், சீனாவால் கட்டப்பட்ட கப்பல் கிரேன்கள் அமெரிக்கர்களை உளவு பார்க்கிற சித்த வெறிக்கும் இந்த நடவடிக்கை விரிவுபடுத்தப்படுகிறது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக உருவாக்கப்பட்ட சமூக ஊடக தளங்கள் தொழிலாள வர்க்கத்தின் கைகளில் அத்தியாவசியமான கருவிகளாக நிரூபிக்கப்பட்டுள்ளன. இது, ஆளும் வர்க்கத்தில் அச்சத்தை ஏற்படுத்துகிறது மற்றும் வளர்ந்து வரும் தணிக்கை ஆட்சியை ஊக்குவிக்கிறது. தொழிலாளர்களும் இளைஞர்களும் வளர்ந்து வரும் ஆன்லைன் தணிக்கை பிரச்சாரத்தை எதிர்க்க வேண்டும். இது எல்லாவற்றிற்கும் மேலாக எதிர்ப்பு உள்ளடக்கத்தை கண்டறிவதற்கும் முதலாளித்துவ சுரண்டல் மற்றும் போருக்கு எதிராக அணிதிரட்டுவதற்கும் உள்ள வழிகளை மூடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அணுவாயுத சக்திகளுக்கு இடையே வெளிப்படையான போருக்கு களம் அமைக்கும் நோக்கில் சீன எதிர்ப்பு வெறியைத் தூண்டும் பிரச்சாரத்திற்கு எதிராக தொழிலாளர்களும் இளைஞர்களும் அணிதிரள வேண்டும்.

Loading