முன்னோக்கு

சார்லஸ் ஷூமரின் செனட் உரை மற்றும் காஸாவில் அமெரிக்க-இஸ்ரேலிய "இறுதி தீர்வு"

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

வாஷிங்டனில் உள்ள கேபிடல் ஹில்லில் செனட் பெரும்பான்மைத் தலைவர் சக் ஷுமர், டி-என்.ஒய். அக்டோபர் 24, 2023. [AP Photo/Stephanie Scarbrough]

கடந்த வியாழனன்று, ஜனநாயகக் கட்சியின் செனட் பெரும்பான்மைத் தலைவர் சார்லஸ் ஷுமர், இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலின் அமைச்சரவையின் அதிதீவிர வலதுசாரி உறுப்பினர்கள் “அமைதிக்கு” “தடையாக” இருப்பதாக விமர்சித்து ஒரு உரையை நிகழ்த்தினார். அத்தோடு, நெதன்யாகு “தன் வழியை இழந்துவிட்டார்” என்று நியூயோர்க் செனட்டர் அறிவித்தார்.

ஷுமர் “தனது சிரேஸ்ட ஊழியர்களை தொடர்பு கொண்டதாக” பைடென் கூறியதிலிருந்து, இந்தப் உரை வெள்ளை மாளிகையுடன் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. இது “பல அமெரிக்கர்களால் பகிரப்படும் தீவிர கவலைகளை” வெளிப்படுத்துகின்ற “நல்லதொரு உரை” என்று பைடென் மேலும் கூறினார்.

தனது உரையின் போது, (முதல் முறையாக) ​​இஸ்ரேலிய அரசாங்கத்தின் உறுப்பினர்கள் காஸாவின் மக்களை இனச் சுத்திகரிப்பு செய்வதில் தங்கள் விருப்பத்தை அறிவித்ததாக ஷுமர் ஒப்புக்கொண்டார். இஸ்ரேலிய நிதி மந்திரி பெசலேல் ஸ்மோட்ரிச் மற்றும் பாதுகாப்பு மந்திரி பென் க்விர் ஆகியோர் “[பாலஸ்தீனியர்களை] அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றி, அவர்களுக்கு பதிலாக இஸ்ரேலிய குடியேற்றக்காரர்களை கொண்டு வர வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தில் தெளிவாக உள்ளனர்” என்று ஷுமர் கூறினார்.

இந்த அறிக்கைகள் ஒரு அதிர்ச்சியூட்டும் சுய குற்றச்சாட்டை உருவாக்குகின்றன. ஸ்மோட்ரிச் நவம்பர் 14 அன்று “காஸாவிலிருந்து உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு அரேபியர்களின் குடியேற்றத்திற்கு” அழைப்பு விடுத்தார். அதே நாளில் வாஷிங்டன், டி.சி.யில் நடந்த இனப்படுகொலைக்கு ஆதரவான “இஸ்ரேலுக்கான பேரணியில்” ஷுமர் முக்கிய பேச்சாளராக கலந்து கொண்டிருந்தார்.

“போர் நிறுத்தம் இல்லை” என்ற கோஷங்களுக்கு ஷுமர் இஸ்ரேலிடம், “நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். உங்களுக்கு தேவையான உதவி கிடைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்” என்று கூறினார். காஸா இனப்படுகொலைக்கு இடதுசாரிகளின் எதிர்ப்பு “யூத எதிர்ப்பு” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அன்றைய தினம், காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11,500 ஆக இருந்தது. அப்போதிருந்து, கூடுதலாக 20,000ம் பாலஸ்தீனிய ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

2 மில்லியன் மக்களை இனரீதியாக சுத்திகரிக்கும் நோக்கத்தை பகிரங்கமாக அறிவித்த ஒரு அரசாங்கத்திற்கு மொத்தம் பில்லியன் கணக்கான டாலர்களை நிதியளிப்பதற்கும் ஆயுதம் வழங்குவதற்கும் ஷூமரும் வெள்ளை மாளிகையும், 100க்கும் மேற்பட்ட ஆயுத பரிமாற்றங்களை வழங்கினர்.

விஷயங்களை அவற்றின் சரியான பெயரால் அழைக்க வேண்டிய நேரம் இது: நெதன்யாகு அரசாங்கம் “பாலஸ்தீன பிரச்சனைக்கான இறுதித் தீர்வை” மேற்கொண்டு வருகிறது. வாஷிங்டனில் அவ்வப்போது மற்றும் சிடுமூஞ்சித்தனமாக விரலை அசைப்பதைப் பொருட்படுத்தாமல், பைடென் நிர்வாகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள இரு அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் நெதன்யாகு அரசாங்கம் இதைச் செய்கிறது.

ஸ்மோட்ரிச், பென் க்விர் மற்றும் நெதன்யாகு ஆகியோர், காஸா மக்களைக் கொலை செய்து வெளியேற்ற வேண்டும் என்ற அழைப்புகள் வெறும் தனிப்பட்ட அறிக்கைகள் அல்ல. அவை இஸ்ரேலிய அரசாங்கத்தின் உண்மையான கொள்கையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இஸ்ரேலிய அரசின் முக்கிய நபர்கள் அடால்ஃப் ஹிட்லர் மற்றும் நாஜி ஆட்சியின் கருத்தியல் மற்றும் அரசியல் சந்ததியினர் ஆவர்.

நெதன்யாகுவின் கொள்கைகள் மீதான அவர்களின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், ஷுமர் மற்றும் வெள்ளை மாளிகை ஆகிய இருவரும் தங்கள் அறிக்கைகள் அமெரிக்க கொள்கையில் எந்த மாற்றத்தையும் பிரதிபலிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தினர். எந்த நிபந்தனையும் இன்றி இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்களை வழங்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

இந்த வார தொடக்கத்தில், இஸ்ரேல் கொல்ல அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா எந்த “சிவப்பு கோடுகளையும்” கொண்டிருக்கவில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வெள்ளை மாளிகை விரைந்துள்ளது. திங்களன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பின் போது, ​​”மிகவும் சிக்கலான கொள்கைகளுக்கு ‘சிவப்பு கோடு’ சொற்களை ஒதுக்குவது பயனுள்ளது என்று நான் நினைக்கவில்லை,” என்று முதன்மை துணை செய்தி செயலாளர் ஒலிவியா டால்டன் கூறினார்.

பைடென் மற்றும் ஷுமரின் அறிக்கைகள், காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலையில் நிர்வாகம் ஆழமாக உடந்தையாக உள்ளது என்ற உண்மையை மறைக்கும் நோக்கம் கொண்ட அரசியல் தந்திரங்கள் ஆகும். இது உலக மக்கள்தொகையில் மிகப்பெரும்பாலான மக்களால் எதிர்க்கப்படுகிறது.

நெதன்யாகுவைக் கண்டிக்கும் வகையில் முன்வைக்கப்பட்ட அவரது உரையில், பாலஸ்தீனியர்கள், யூதர்கள் மற்றும் அரேபியர்களுக்கு கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் ஒரு ஜனநாயக, பல இன அரசை நாடுபவர்களை கண்டிப்பதில் ஷுமர் தனது பெரும்பாலான நேரத்தை செலவிட்டார்.

“பாலஸ்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் ஜனநாயக அமைதியுடன் அருகருகே வாழ்வார்கள்” என்று கூறப்படும் ஒரு அரசுக்கு ஆதரவாக இரு நாடுகளின் தீர்வை நிராகரிக்கும் “இடதுபுறத்தில்” இருப்பவர்களை அவர் கண்டித்தார்.

இதற்கு, ஷுமர் பதிலளித்தார்:

அந்த அரசு பெரும்பான்மையான பாலஸ்தீனியர்களை கொண்டதாக இருக்கும். கடந்த காலங்களில் சில பாலஸ்தீனியர்கள் யூத மக்களை ஒழிக்க முற்படும் ஹமாஸ் போன்ற குழுக்களுக்கு அதிகாரம் அளிக்க வாக்களித்துள்ளனர். ... வெளிநாட்டில் ஜனநாயகத்தை ஆதரிப்பது நீண்டகால அமெரிக்கக் கொள்கையாகும். ஆனால், இந்த கற்பனையான ஒற்றை அரசில், ஜனநாயகம் இஸ்ரேலிய யூதர்களின் பாதுகாப்பை இழக்கக்கூடும்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் யூத மற்றும் அரேபிய மக்களிடையேயான உறவுகளுக்கு “ஜனநாயக” தீர்வுக்கான ஷூமரின் கண்டனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உண்மையில், ஷூமர் கண்டிப்பதாகக் கூறும் இனப்படுகொலைக் கொள்கைகள் முழு சியோனிசத் திட்டத்திலிருந்தும் இயல்பாகவே பாய்கின்றன, அதன் தொடக்கம் முதல் இன்றுவரை, மத்திய கிழக்கின் மக்கள் மீது அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கோட்டையாகச் செயல்பட்டு வருகிறது. ஜோ பைடென் மேற்கோள்காட்டிய வார்த்தைகளில்: “இஸ்ரேல் இல்லை என்றால், நாம் அதை கண்டுபிடிக்க வேண்டும்” என்பதாகும்.

30,000ம் காஸா மக்கள் ஏற்கனவே இறந்துள்ள நிலையில், 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை முழுவதும் பட்டினியின் விளிம்பில் உள்ளது. வியாழன் அன்று உணவு விநியோக மையத்தில் டசின் கணக்கானவர்களை கொன்று குவித்த இஸ்ரேல் தினசரி படுகொலைகளை மேற்கொண்டு வருகிறது.

ஏகாதிபத்தியப் போர் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்தின் இன்றியமையாத பகுதியாக காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தை உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எடுக்க வேண்டும்.

Loading