முன்னோக்கு

அமெரிக்க தன்னலக்குழுவும் 2024 தேர்தலும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ்

ஃபோர்ப்ஸ் (Forbes) இதழால் பராமரிக்கப்படும் பில்லியனர்களின் மொத்த சொத்துக்களின் கொள்கை ஆய்வுகள் நிறுவனத்தின் (Institute for Policy Studies) பகுப்பாய்வின் அடிப்படையில், வாரயிறுதியில் Inequality.org ஆல் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களானது, அமெரிக்காவில் மலைப்பூட்டும் வகையில் செல்வவளம் ஒரு சிறிய செல்வந்த தட்டின் கரங்களில் குவிந்திருப்பதை எடுத்துக்காட்டுகின்றன.

கோவிட்-19 பெருந்தொற்று நோயின் கடந்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்காவில் பில்லியனர்களின் எண்ணிக்கையானது 614 இல் இருந்து 737 ஆக உயர்ந்துள்ளது. அவர்களின் ஒருங்கிணைந்த செல்வவளம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது,  இந்தக் காலகட்டத்தில் 2.947 ட்ரில்லியன் டாலர்களில் இருந்து 5.529 ட்ரில்லியன் டாலர்களாக 88 சதவீதம் அதிகரித்து, கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது.

முதல் 10 பில்லியனர்களில், எட்டு பேர் தகவல் தொழில்நுட்பத் துறை அல்லது அதன் கிளைகளைச் சேர்ந்தவர்கள் ஆகும். இதில் அமெரிக்காவின் நான்கு பெரும் பணக்காரர்களும் உள்ளடங்குவர்: அதாவது ஜெஃப் பெஸோஸ் (192.8 பில்லியன் டாலர்), எலோன் மஸ்க் (188.5 பில்லியன் டாலர்), மார்க் சக்கர்பேர்க் (169 பில்லியன் டாலர்) மற்றும் லாரி எலிசன் (154.6 பில்லியன் டாலர்). வாரன் பஃபெட் மட்டுமே விதிவிலக்காக உள்ளார், இவரது முதலீட்டு நிறுவனமான பெர்க்ஷயர் ஹாத்வே இரயில் பாதைகள் போன்ற 'பழைய' தொழில்துறைகளில் கவனங்களை ஒருமுனைப்படுத்தியுள்ளது, மற்றும் ஊடக பில்லியனரான மைக்கேல் புளூம்பேர்க்கும் ஆவார்.

அமெரிக்காவில் 1.4 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்ற ஒரு பெருந்தொற்று நோயின் போது, செல்வவளத்தின் வளர்ச்சியானது மலைக்க வைக்கிறது.  மஸ்க்கின் செல்வவளம் நான்கு ஆண்டுகளில் 600 சதவீதம் உயர்ந்தது, அதேவேளையில் பேஸ்புக்கின் ஜுக்கர்பெர்க் மற்றும் ஒராக்கிளின் எலிசன் ஆகியோர் தங்கள் செல்வத்தை கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்தனர். ஸ்டீவ் பால்மர் (மைக்ரோசாப்ட்) மற்றும் கூகிளின் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோரின் சொத்துக்கள் அனைத்தும் இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்தன. அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ் உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை மீண்டும் பெற்றார். அவரது முன்னாள் மனைவி மெக்கன்சி ஸ்காட்டுடனான 40 பில்லியன் டாலர்கள் விவாகரத்தை அவர் தீர்க்கவில்லை என்றால் அவர் தனது செல்வத்தை இரட்டிப்பாக்கியிருப்பார்.

இந்தப் பெருந்தொகைகளை வெறும் எண்களாக மட்டும் புரிந்து கொள்வது கடினம் ஆகும். சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் செவ்வாயன்று பல ட்டுவீட்களில், இந்த புள்ளிவிபரங்களை எளிய வார்த்தைகளில் மொழிபெயர்த்தார். 5.5 டிரில்லியன் டாலர் மொத்த சொத்துக்களானது மொத்த அமெரிக்க மாணவர்கள் கடனின் மூன்று மடங்கிற்குச் சமமாகும். அமெரிக்காவில் கே -12 கல்விக்கு செலவிடப்படுவதை விட ஏழு மடங்காக இருக்கிறது; தசாப்தத்தின் இறுதிக்குள் உலகப் பசியை முடிவுக்குக் கொண்டுவர ஒவ்வொரு ஆண்டும் தேவைப்படுவதை விட கிட்டத்தட்ட 150 மடங்கு அதிகம்; இது அமெரிக்க சராசரி வருமானத்தை விட 178 மில்லியன் மடங்கு அதிகமாகும்; இது அமெரிக்காவில் உள்ள குடும்பங்களின் சராசரி சேமிப்புக் கணக்கு நிலுவையை விட 700 மில்லியன் மடங்கு அதிகமாகும்.

அமெரிக்க முதலாளித்துவத்தின் தன்னலக்குழுவின் பண்பானது அரசின் ஒவ்வொரு அமைப்பிலும், நீதிமன்றங்கள் மற்றும் ஊடகத்தையும் தொற்றிக் கொண்டுள்ளது. மேலும் இது 2024 ஜனாதிபதித் தேர்தல் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது.

பரவலான சமூகத் துயரங்கள் மற்றும் அதிகரித்து வரும் வர்க்கப் போராட்டம் ஆகியவற்றின் ஒரு உள்ளடக்கத்தில், அமெரிக்க ஆளும் உயரடுக்கு உயர்மட்டத்தில் அதன் நிலையின் பலவீனத் தன்மையைக் குறித்து நன்கறிந்துள்ளது. இதற்கு விடையிறுக்கும் வகையில் அமெரிக்காவின் முதலாளித்துவ இருகட்சி முறையின் இரும்புப் பிடியை வலுப்படுத்துவதே அவர்களின் பதிலாக உள்ளது. அதன்படி, உலகப் போர் மற்றும் இனப்படுகொலைக்கு வக்காலத்து வாங்கும் ஜோ பைடெனுக்கு எதிராக பாசிசவாத டொனால்ட் ட்ரம்பை நிறுத்தும் 2024 ஜனாதிபதி தேர்தலில் தங்களுக்கு சாதகமாக போட்டியிடும் இரண்டு முதலாளித்துவ கட்சிகளையும் பில்லியனர்கள் ஆதரிக்கின்றனர்.

பில்லியனர்கள் மத்தியில் ட்ரம்பின் ஆதரவு உண்மையில் பைடெனை விட பலவீனமாக உள்ளது, ஏனென்றால் முக்கிய வெளியுறவுக் கொள்கை பிரச்சினைகளில், குறிப்பாக உக்ரேன் மீதான ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் ஆகியவற்றில் அவர் நம்பகத்தன்மையற்றவராக கருதப்படுகிறார். 

எவ்வாறிருப்பினும், தன்னலக்குழுவின் ஒரு கணிசமான பிரிவு சட்டபூர்வத்தன்மை என்ற அனைத்து பாசாங்குத்தனத்தையும் முறித்துக் கொள்ளத் தயாராக உள்ளது.

ஏப்ரல் 6 இல், புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸின் தோல்வியுற்ற ஜனாதிபதி பிரச்சாரத்திற்கு, முன்னர் மிகப்பெரிய நன்கொடை அளித்த ரியல் எஸ்டேட் முதலீட்டாளர் ராபர்ட் பிகிலோவுடன் இணைந்து, பில்லியனரும் தனியார் முதலீட்டு நிதிய முதலாளியுமான ஜோன் பால்சன், புளோரிடாவில் ட்ரம்ப்பிற்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியை நடத்துவார். பைனான்சியல் டைம்ஸ் செய்தி ஒன்றின்படி, ட்ரம்ப் மறுதேர்தல் முயற்சியின் முந்தைய எதிர்ப்பாளரான ஷேல் எரிவாயு மற்றும் எண்ணெய் பில்லியனர் ஹரோல்ட் ஹாமும் (Shale gas and oil billionaire Harold Hamm) இணைத் தலைவராக உடன்பட்டுள்ளார்.

'நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கான அழைப்பு,' 'இரண்டு வகை நன்கொடையாளர்களைக் காட்டுகிறது: ஒரு நபருக்கு 814,600 டாலர் கொடுத்து ட்ரம்பின் இரவு உணவு மேசையில் அமரக்கூடியவர்கள், மற்றும் குறைந்தபட்சம் 250,000 டாலர் நன்கொடை அளிப்பவர்கள்,' என்று அப்பத்திரிகை குறிப்பிட்டது.

இந்நிகழ்விற்கு இணை-தலைமை தாங்கும் நிதியச் செல்வந்த தட்டுக்கள் பிரதானமாக நிதிய ஊக உலகத்திலிருந்து (ரோபர்ட் மற்றும் ரெபேக்கா மெர்சர், ஸ்காட் பெசன்ட், ஜெஃப்ரி ஸ்ப்ரெச்சர்) மற்றும் கசினோ சூதாட்ட விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு துறை (ஸ்டீவ் வைன், பில் ரஃபின், லிண்டா மக்மஹோன்) இருந்து வருகின்றனர். பைனான்சியல் டைம்ஸ் ஆல் ஒரு 'சர்க்கரை அதிபர்' என்று விவரிக்கப்படும் பெப்பே ஃபான்ஜுல் இன்னும் சந்தேகத்திற்குரிய மற்றும் பிற்போக்குத்தனமான இணை-தலைமை வகிக்கிறார். அவர் டொமினோ சுகர் உரிமையாளரான கியூபாவில் இருந்து வெளியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர், ஒவ்வொரு ஆண்டும் பரந்த கூட்டாட்சி மானியங்களை வசூலிக்கிறார். மற்றும் வெள்ளை மேலாதிக்கவாதி டேவிட் டியூக்கின் மனைவியை பல ஆண்டுகளாக அவரது நிர்வாக உதவியாளராக நியமித்து இழிபுகழ் பெற்றவராக உள்ளார்.

பைடென் மற்றும் கமலா ஹாரிஸின் ஜனாதிபதி வேட்பாளருக்கான வோல் ஸ்ட்ரீட் ஆதரவு பரந்ததாக உள்ளது, இது கடந்த மூன்று தசாப்தங்களாக ஜனநாயகக் கட்சியானது பங்குச் சந்தை மற்றும் பெரிய வங்கிகளின் முக்கிய கட்சியாக மாற்றப்பட்டுள்ளதை பிரதிபலிக்கிறது.

பைடென் பிரச்சாரம் 155 மில்லியன் டாலர் ரொக்கத்தை குவித்துள்ளது. இது தேர்தலின் இந்த கட்டத்தில் 'வரலாற்றில் எந்தவொரு ஜனநாயகக் கட்சி வேட்பாளரின் மிக உயர்ந்த மொத்தத் தொகை' என்று பாராட்டப்படுகிறது. இதில் பிப்ரவரியில் திரட்டப்பட்ட சாதனையளவிலான 53 மில்லியன் டாலரும் அடங்கும்.

பெருநிறுவன ஊடகங்கள் பைடெனை ஒரு 'பிரச்சாரத்தில்' ஈடுபடுவதாக சித்தரிக்கின்ற அதேவேளையில், யதார்த்தம் முற்றிலும் வேறுபட்டது. பைடெனின் நேருக்கு நேர் தொடர்பு கிட்டத்தட்ட முற்றிலும் பெரிய பிரச்சார நன்கொடையாளர்களுடன் உள்ளது, மேலும் நவம்பர் 5 திகதி வாக்களிப்புக்கு முந்தைய மாதங்களில் ஒரு பாரிய ஊடக நிலைகொள்ளலை அதிகரிக்க தேவையான நிதி ஆதாரங்களை குவிப்பதே வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் அவரது உண்மையான கவனமாக இருக்கும்.

பல சந்தர்ப்பங்களிலும், குறிப்பாக கலிபோர்னியா போன்ற போட்டித்தன்மையற்ற மாநிலங்களுக்கு பயணிக்கையில், ஜனநாயகக் கட்சியினர் பகிரங்கமாக பிரச்சாரம் செய்யும் பாசாங்குத்தனத்தை கைவிட்டு, நிதியத் தன்னலக்குழுவில் உள்ள தங்கள் உண்மையான தொகுதியைப் பற்றி வெறுமனே பேசுகின்றனர். கடந்த வாரம், கடுமையான போட்டி நிலவிய மிச்சிகனில் கூட, காஸாவில் அமெரிக்க ஆதரவிலான இனப்படுகொலையை எதிர்க்கும் எதிர்-ஆர்ப்பாட்டக்காரர்களின் அச்சத்தின் காரணமாக பைடென் பகிரங்கமாக சமூகமளிக்கவில்லை.

இலையுதிர்கால பிரச்சாரம் நெருங்கி வருகையில், ஜனநாயகக் கட்சியின் மூலோபாயத்தில் இரண்டு பிரதான கூறுபாடுகள் உள்ளன: அதாவது நிதி ஆதாரவளங்களைக் குவிப்பது மற்றும் மூன்றாவது கட்சி வேட்பாளர்களை வாக்குச்சீட்டில் இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகளை ஒடுக்குவது, குறிப்பாக மிக முக்கியமான போர்க்கள மாநிலங்களில் ஒன்றான மிச்சிகனில் அதன் ஆரம்ப வாக்குப்பதிவு உந்துதலைத் தொடங்கியுள்ள சோசலிச சமத்துவக் கட்சி போன்ற இடதுசாரி எதிர்ப்பாளர்களை ஒடுக்குவது ஆகும்.

ஜனநாயகக் கட்சியினர் மூன்றாவது கட்சி வேட்பாளர்கள் மீது ஒரு 'முழுவீச்சிலான போரை' தயாரித்து வருகின்றனர். நேற்று நியூ யோர்க் டைம்ஸில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையின்படி, ஜனநாயகக் கட்சியினர் 'சுயேட்சை வேட்பாளர்களின் வாக்குச்சீட்டு-அணுகல் முயற்சிகள் சீராக முன்னேறி வருவதை சவால் செய்யும் நோக்கத்துடன் வழக்கறிஞர்களின் ஒரு படையை' நியமித்து வருகின்றனர்.

'அனைத்து வேட்பாளர்களும் விதிகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்துவதும், அவ்வாறு செய்யத் தவறும்போது அவர்களை பொறுப்பாக்க முனைவதுமே இலக்கு' என்று வழக்கறிஞர்களில் ஒருவர் கூறியதாக டைம்ஸ் பத்திரிகை மேற்கோளிட்டது. ஜனநாயகக் கட்சியினரைப் பொறுத்த வரையில், குடியரசுக் கட்சியினருக்கு சற்றும் குறையாமல், பெருநிறுவன மற்றும் நிதியச் செல்வந்த தட்டுக்களால் அவர்களின் செல்வவளம் மற்றும் அதிகாரத்திற்கு எதிரான எந்தவொரு சவாலையும் தடுப்பதற்காக வகுக்கப்பட்டவையே இந்த 'விதிகள்' ஆகும்.

Inequality.org ஆல் வெளியிட்ட புள்ளிவிபரங்களுக்கு விடையிறுக்கையில், சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் கிஷோர் X/Twitter இல் பதிவிட்ட ஒரு காணொளியில் இவ்வாறு தெரிவித்தார்:

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

சோஷலிசமானது துண்டு துண்டாக சீர்திருத்தங்கள் செய்வதன் மூலமும், விளிம்புகளைச் சுற்றி மட்டுமே மாற்றங்கள் செய்வதன் மூலமும் அடையப்பட முடியாது. இதற்கு அமெரிக்காவிலும் உலகெங்கிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வவளம் மற்றும் அதிகாரத்தின் மீதான ஒரு நேரடித் தாக்குதல் அவசியப்படுகிறது. இதற்கு பில்லியனர்கள் முறையற்ற வகையில் ஈட்டிய செல்வங்களைப் பறிமுதல் செய்வதும், பிரம்மாண்டமான பெருநிறுவனங்களை தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூகத் தேவைகளின் அடிப்படையில் நடத்தப்படும் பொது பயன்பாடுகளாக மாற்றுவதும் அவசியமாகும்.

Loading