மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
சனிக்கிழமை பிற்பகல், டேடன், ஓஹியோவில் பல ஆயிரம் ஆதரவாளர்கள் மற்றும் டசின் கணக்கான குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள் முன்னிலையில் பேசிய டொனால்ட் ட்ரம்ப், அவரது 80 நிமிட உரையில் தனது வன்முறை பிரச்சார வாய்ச்சவடாலை முடுக்கி விட்டார். 6 ஜனவரி 2021 அன்று காங்கிரஸ் கட்டிடத்தைத் தாக்கிய தீவிர வலதுசாரி போராளிக் குழுக்களைப் பாராட்டிய முன்னாள் ஜனாதிபதியான 2024 குடியரசுக் கட்சி வேட்பாளர், நவம்பரில் தான் வெள்ளை மாளிகைக்குத் திரும்பவில்லை என்றால் “இரத்தக் களரி” ஏற்படும் என்று உறுதியளித்தார்.
ட்ரம்ப் பேசுவதற்கு முன்னர், “அம்மணிகளே ஐயாமார்களே, ஜனவரி 6 சிறைப்பிடிப்பில் ஈடுபட்டவர்களை கொடூரமான மற்றும் நியாயமற்ற முறையில் நடத்தியமைக்கு எதிராக தயவு செய்து எழுந்திருங்கள்” என நடுவர் ஒலிபெருக்கியில் கூறினார். “ஜனவரி 6 பாடகர் குழு” “நட்சத்திரங்கள் பதிக்கப்பட்ட பதாகை” என்னும் அமெரிக்க தேசிய கீதத்தை பாடியபோது டிரம்ப் தனது வலது கையை உயர்த்தி மரியாதை செலுத்தினார். டிரம்பின் தோல்வியுற்ற ஆட்சிக்கவிழ்ப்பு சதியை முன்னெடுத்துச் சென்றதற்காக சிறையில் அடைக்கப்பட்ட Proud Boys (பெருமைமிக்க சிறுவர்கள்), Oath Keepers (உறுதிமொழிக் காவலர்கள்-அதி வலது வன்முறையாளர்கள்) மற்றும் பிற தீவிர வலதுசாரி குண்டர்களின் தொகுப்பே அந்த பாடகர் குழுவாகும்.
தனது பாசிச அடிவருடிகளை “நாங்கள் பதவிக்கு வந்து முதல் நாளே” விடுதலை செய்வோம் என்று உறுதியளித்த ட்ரம்ப், அவர்களை “அசாதாரணமான தேசபக்தர்கள்” என்று அழைத்தார்.
பின்னர் அவர் தனது 2024 பிரச்சாரத்தின் மற்ற பிரதான கருப்பொருளுக்கு, அதாவது வன்முறையான புலம்பெயர்ந்தோர்-விரோத கிளர்ச்சியின் பக்கம் திரும்பினார். “பதவியேற்றவுடன் எனது முதல் நடவடிக்கைகளில் ஒன்று, நமது நாட்டின் மீதான படையெடுப்பை நிறுத்தி, ஜோ பைடெனின் சட்டவிரோத வெளிநாட்டினரை வீட்டிற்கு அனுப்புவது தான்” என்று அவர் கூறினார்.
அமெரிக்காவில் தஞ்சம் கோரும் புலம்பெயர்ந்தோர் குறித்து பேசிய முன்னாள் ஜனாதிபதி, “அவர்கள் இளைஞர்கள், அவர்களை மக்கள் என்று அழைத்தால், பல ஆண்டுகளாக அவர்கள் சிறையில் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களை மக்கள் என்று அழைக்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. சில சமயங்களில் என் கருத்துப்படி அவர்கள் மனிதர்களே அல்ல... இவர்கள் கெட்டவர்கள், அவர்கள் மிருகங்கள், சரியா?”
தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு நேரடி வேண்டுகோள் விடுத்த ட்ரம்ப், தான் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் தொழிற்சங்கங்களுக்கு “வேலை இல்லாமல் போய்விடும்” என்று எச்சரித்தார். “நான் டீம்ஸ்டர்ஸ் (றக் சாரதிகள் தொழிற்சங்கம்) உடன் பேச்சுவார்த்தை நடத்துகிறேன்,” என்று பெருமையாக கூறிய அவர், டீம்ஸ்டர்ஸ் தலைவர் ஷீன் ஓ’பிரைனுடனான தனிப்பட்ட சந்திப்புகளை சுட்டிக்காட்டினார். அவர் “ஷீன் மற்றும் அனைவரையும்” “நல்ல மனிதர்கள்” என்று பாராட்டியதோடு “அவர்கள் ட்ரம்பை ஆதரிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
கார்ப்பரேட் தொழிற்சங்கத் தலைமையின் உக்கிரமான தேசியவாதம் மற்றும் கம்யூனிச எதிர்ப்புக்கு வேண்டுகோள் விடுத்த அவர், சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களைப் பற்றி பேசும் போது: “எல்லையை தாண்டி வரும் ஒவ்வொரு வாகனத்துக்கும் 100 சதவீத வரி விதிக்கப் போகிறோம். நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்த வாகனங்களை உங்களால் விற்க முடியாது.” எனக் கூறினார்.
“இப்போது, நான் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், “அதன் குறைந்தபட்ச விளைவு, முழு இரத்தக்களரியாக இருக்கும்”
ஒஹியோ ஜிம் ஜோர்டான் மற்றும் மேக்ஸ் மில்லர், அமெரிக்க செனட்டர் ஜே.டி. வான்ஸ் மற்றும் ஓஹியோ சட்டமா அதிபர் டேவ் யோஸ்ட் உட்பட குடியரசுக் கட்சி அதிகாரிகளும் ட்ரம்ப் கூட்டத்தில் இணைந்தனர். தெற்கு டகோட்டா கவர்னர் கிறிஸ்டி நோம் மற்றும் இன்டியானா அட்டர்னி ஜெனரல் டோட் ரோகிதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ட்ரம்ப், கூட்டத்தின் ஒரு பகுதியை, அமெரிக்க செனட்டில் வான்ஸுடன் சேர விரும்பும் குடியரசுக் கட்சி வேட்பாளரான பெர்னி மொரேனோவை ஊக்குவிப்பதற்காக ஒதுக்கினார். மொரேனோவின் முதன்மை எதிரியான குடியரசுக் கட்சியின் மாநில செனட்டர் மாட் டோலனைத் தாக்கிய ட்ரம்ப், அவரை “அடுத்த மிட் ரோம்னியாக இருக்க முயற்சிக்கும்” “ரினோ” (பெயரளவில் மட்டும் குடியரசு கட்சியினராக இருப்பவர்) என்று அழைத்தார். தற்போதைய ஓஹியோ கவர்னர் மைக் டிவைன் மற்றும் முன்னாள் செனட்டர் ராப் போர்ட்மேன் போன்ற குடியரசுக் கட்சியினரின் ஆதரவை டோலன் பெற்றுள்ளார்.
இதற்கிடையில், பைடென் மிச்சிகனுக்கு ஒரு பிரச்சார பயணத்தை மேற்கொண்டார். அங்கு அவர் பொது நிகழ்ச்சிகளை நடத்தாமலும் பத்திரிகையாளர்களின் கேள்விகளை ஏற்க மறுத்ததன் மூலமும் காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்ததற்கு எதிரான போராட்டங்களைத் தவிர்க்க முயன்றார். கடந்த மாதம், அவர் UAW தலைவர் ஷான் ஃபைனுடன், மிச்சிகனில் உள்ள வாரனில் உள்ள UAW பிராந்தியம் 1 தலைமையகத்தில் ஒரு நிகழ்வை நடத்தியபோது, கோபமான எதிர்ப்பாளர்கள் அந்த இடத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்ததுடன் அவர்கள் கலகப் பிரிவு பொலிசால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மார்ச் 5 அன்று நடந்த மிச்சிகன் ஜனநாயகக் கட்சியின் முதன்மை கூட்டத்தில், மொத்த வாக்குகளில் 13 சதவீதத்திற்கும் அதிகமான 100,000 வாக்குகள், காஸாவில் நடந்த வெகுஜனக் கொலைகள் மற்றும் இனச் சுத்திகரிப்புக்கு பைடென் அளித்த ஆதரவிற்கு எதிராக, “யாரையும் தேர்வு செய்யாத வாக்குகளாக” போடப்பட்டன.
சாகினாவில், பைடென் ஒரு ஆதரவாளரின் வீட்டில் இறுக்கமாக முன்தயார் செய்யப்பட்ட நிகழ்வுக்காக கேமராக்களுக்கு முன்னால் தோன்றி, அங்கு உள்ளூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஜனநாயகக் கட்சியின் செயல்பாட்டாளர்களுடன் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டார்.
சனிக்கிழமை மாலை, வாஷிங்டன் டி.சி.யில் நடந்த வருடாந்திர கிரிடிரான் கிளப் விருந்தில் பைடென் கலந்து கொண்டார். இந்த விவகாரம் ஆடம்பரமான வாஷிங்டன் கிராண்ட் ஹையாட்டில் நடைபெற்றது. வாஷிங்டன் போஸ்ட்டின் படி, நிகழ்வில் கலந்து கொண்ட 650 ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கான இரவு உணவு ஒரு தட்டுக்கு 400 டாலர் ஆகும்
2020 மற்றும் 2021 இல், கோவிட்-19 பெரும் தொற்றுநோய் காரணமாக நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. இது 2022 இல் மீண்டும் தொடங்கப்பட்டு “உச்சத்தில் பரப்பும்” நிகழ்வாக மாறியது. அதன் பிறகு குறைந்தது 72 பேர் வைரஸுக்கான சோதனையில் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனர். இதில் பிரதிநிதிகள் ஜோவாகின் காஸ்ட்ரோ (ஜனநாயக-டெக்சாஸ்) மற்றும் ஆடம் ஷிஃப் (ஜனநாயக-கலிபோர்னியா) மற்றும் செனட்டர் சூசன் காலின்ஸ் (குடியரசு-மைனே) ஆகியோர் அடங்குவர். அட்டர்னி ஜெனரல் மெரிக் கார்லண்ட், விவசாய செயலாளர் டாம் வில்சாக் மற்றும் வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோ உட்பட பல சிரேஷ்ட அமைச்சரவை அதிகாரிகளும் சோதனையில் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளங் காணப்பட்டனர்.
சனிக்கிழமை இரவு தனது கருத்துரைகளில், உக்ரேனுக்கு மேலும் 60 பில்லியன் டொலர் இராணுவ உதவிக்கான கோரிக்கையைத் தடுத்ததற்காக பைடென் மீண்டும் ட்ரம்பை கண்டித்து, ட்ரம்ப் புட்டினுக்கு வளைந்து கொடுப்பதாக குற்றம் சாட்டினார். தனது போர் வெறி கொண்ட நாட்டுக்கான உரையைப் போலவே, பைடென் ரஷ்ய ஜனாதிபதிக்கு “பணிய மாட்டேன்” என்று உறுதியளித்தார்.
தனது நிர்வாகத்தின் கொடிய குடியேற்ற எதிர்ப்பு மசோதாவைத் ட்ரம்ப் தடுத்ததற்காக அவர் மீதான தாக்குதல்களையும் அவர் மீண்டும் மீண்டும் கூறினார். “அவர்கள் பாதுகாப்பான எல்லையை விரும்புகிறார்கள், ஆனால் அவர்கள் தடுத்துவிட்டார்கள் ... இது முன்னெப்போதும் இல்லாத வலுவான எல்லை மசோதா,” என்று அவர் கூறினார்.