முன்னோக்கு

வாஷிங்டன் இஸ்ரேலுக்கு பல நகரங்களை அழிக்கும் குண்டுகளை ரஃபாவை தரைமட்டமாக்க அனுப்புகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த வெள்ளியன்று, காஸா இனப்படுகொலையில் பயன்படுத்த 1,800 க்கும் அதிகமான 2,000ம் இறாத்தல் எடை கொண்ட குண்டுகள் உட்பட இஸ்ரேலுக்கு புதிய ஆயுதங்களை அனுப்புவதற்கு பைடென் நிர்வாகம் ஒப்புதல் அளித்ததாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

வடக்கு காஸா பகுதியில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் இலக்கு வைக்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு மத்தியில் மக்கள் அலைந்து திரிந்தபோது ஒருவர் இடிபாடுகளில் அமர்ந்திருக்கிறார். Wednesday, Nov. 1, 2023.

ரஃபா நகரம் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் திட்டமிடுவதற்கான உயர்மட்ட அமெரிக்க-இஸ்ரேலிய தொடர் சந்திப்புகளுக்குப் பிறகு, வாஷிங்டன் இஸ்ரேலுக்கு பச்சை விளக்கை காட்டியுள்ளது என்ற தெளிவான செய்தியை அனுப்பியுள்ளது. அது, 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மனிதாபிமானமற்ற சூழ்நிலையில் ஒன்றாகக் குவிக்கப்பட்டிருக்கும் ரஃபா நகரத்தை தரைமட்டமாக்குவதாகும்.

2,000ம் இறாத்தல் எடை கொண்ட குண்டுகள், இரண்டாம் உலகப் போரின் போது முழு நகரத் தொகுதிகளையும் தரைமட்டமாக்க “பிளாக்பஸ்டர்” குண்டுகள் என்று அழைக்கப்படுவதற்கு சமமானவை ஆகும். இந்த குண்டுகள் வெடிக்கும் போது, ​​40 அடி நீளமுள்ள பள்ளங்களை உருவாக்குவதுடன், 58 கால்பந்து மைதானங்களுக்குச் சமமான பரப்பளவில், 1,200 அடி தூரம் வரை மக்களைக் கொன்று குவிக்கின்றன.

இன்றுவரை, இஸ்ரேல் நூற்றுக்கணக்கான 2,000ம் இறாத்தல் எடை கொண்ட குண்டுகளை வீசியுள்ளது, அவை காஸாவில் உள்ள பெரும்பாலான வீடுகள், பள்ளிகள், வணிகங்கள் மற்றும் பொதுமக்கள் நிறுவனங்களை திட்டமிட்டு அழிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளன. இந்த பயங்கர ஆயுதத்தின் மிகவும் மோசமான பயன்பாடுகளில், அக்டோபர் 31ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில், ஜபாலியா அகதிகள் முகாம் முற்றாக அழிந்துபோனது. இத்தாக்குதலில், 400 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும், காயத்துக்கும் உள்ளாகினர்.

இந்த பாரிய குண்டுகளின் பயன்பாடு பெரும்பாலும் அமெரிக்க இராணுவத்தால் படிப்படியாக நிறுத்தப்பட்டது. ஏனெனில் அவற்றில் இணை சேதத்திற்கான பாரிய சாத்தியக்கூறுகள் உள்ளன.

ஆனால், காஸாவில் மக்கள் கொல்லப்படுவதும், மக்கள் வசிக்கும் கட்டிடங்களை அழிப்பதும் எதிர்பாராத விளைவுகளினால் ஏற்பட்டது அல்ல, மாறாக காஸாவில் அமெரிக்க-இஸ்ரேலிய இனப்படுகொலையின் திட்டமிட்ட இலக்காக அவை இருக்கின்றன.

போரின் முதல் இரண்டு மாதங்களில், இஸ்ரேல் காஸா மீது 25,000ம் டன்களுக்கும் அதிகமான குண்டுகளை வீசியது. இது, 1945 இல் யப்பான் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டின் சக்தியை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

சமீபத்திய ஆயுத ஏற்றுமதியில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்களுக்கு இடையே “பிளவு” என்று அமெரிக்க ஊடகங்கள் கூறியதன் உண்மையான உள்ளடக்கத்தை இவை வெளிப்படுத்துகின்றன. அது, முடிந்தவரை பல பாலஸ்தீனியர்களைக் கொல்வதற்கு அல்லது இடம்பெயரச் செய்யும் இலக்கை அடைவதற்கு, தனக்குத் தானே போட்டுக் கொண்ட முகமூடியுடன் நெதன்யாகு அரசாங்கத்தை வெள்ளை மாளிகை பகிரங்கமாக விமர்சித்தது.

இந்த வார தொடக்கத்தில், காஸாவில் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானத்தை வீட்டோ செய்ய அமெரிக்கா மறுத்துவிட்டது. அமெரிக்கா ஏன் தீர்மானத்தை நிறைவேற்ற அனுமதித்தது என்பதை விளக்குகையில், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, இந்த தீர்மானம் “எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்பதால் அமெரிக்கா அதை வீட்டோ செய்யவில்லை என்றார். “இது கட்டுப்பாடற்ற தீர்மானம்” என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி ஜோ பைடென் மற்றும் செனட் சிறுபான்மைத் தலைவர் சார்லஸ் ஷுமர் ஆகியோர், சமீபத்தில் நெதன்யாகு அரசாங்கத்தின் மீதான பொது விமர்சனத்தின் மனநிலையை அடிக்கோடிட்டுக் காட்டினர். அதாவது, “போர்நிறுத்தத்திற்கு” ஆதரவை அறிவிப்பதன் மூலமும், காஸாவுக்குள் மேலதிக உணவை அனுமதிக்குமாறு இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுப்பதன் மூலமும், அமெரிக்க ஏகாதிபத்தியம் காஸா மீது குண்டுவீசி அதன் எல்லைகளை முற்றுகையிடுவதற்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களை வழங்குவதை உலகம் மறந்துவிடும் என்று பைடென் நிர்வாகம் நம்புகிறது.

இந்த வார தொடக்கத்தில், பாலஸ்தீனியர்களை “மனித விலங்குகள்” என்று வர்ணிப்பதற்காக அறியப்பட்ட இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்ட், ரஃபா மீதான இஸ்ரேலிய தாக்குதலை திட்டமிடுவதற்காக பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் உட்பட மூத்த அமெரிக்க அதிகாரிகளை சந்திக்க வாஷிங்டன் D.C க்கு சென்றுள்ளார்.

கேலண்ட் மற்றும் ஓஸ்டின் ஆகியோர்களுக்கு இடையேயான உத்தியோகபூர்வ சந்திப்பின்போது, “ரஃபாவில் இருக்கும் ஹமாஸ் பட்டாலியன்களை தோற்கடிப்பது” என்பது அமெரிக்க இராணுவத்தின் நோக்கம் என்று அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் மேற்கோள் காட்டினார்.

புதன் கிழமையன்று, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், “மூடிய கதவுகளுக்குப் பின்னால், அமெரிக்கா ரஃபா நடவடிக்கையை நிறுத்தாமல் வடிவமைப்பதில் வேலை செய்கிறது” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. “தெற்கு காஸாவில் இஸ்ரேலின் திட்டமிடப்பட்ட இராணுவ நடவடிக்கை பற்றிய விவாதங்கள் அதை எவ்வாறு நிறுத்துவது என்பதில் கவனம் செலுத்தவில்லை, மாறாக அதன் நிலைப்பாட்டில் பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதில் கவனம் செலுத்துகிறது” என்று கட்டுரை விளக்குகிறது.

பொதுமக்களை “பாதுகாத்தல்” என்பதன் மூலம், இஸ்ரேல் ரஃபாவை தூள் தூளாக்கும் முன், முதலில் அந்த நகரத்தை விட்டு அவர்களை வெளியேற்ற எண்ணியதாக அமெரிக்க அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். உண்மையில், அமெரிக்கக் கோட்பாடு என்னவென்றால், இனப்படுகொலையானது இனச் சுத்திகரிப்புடன் இருக்கும் வரை ஏற்றுக்கொள்ளத்தக்கது.

காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனப்படுகொலையில், இன்றுவரை, 32,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ளனர், அதாவது உண்மையான இறப்பு எண்ணிக்கை 40,000 க்கும் அதிகமாக இருக்கலாம். 1.9 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்.

இஸ்ரேலிய தொடர் முற்றுகையால் உயிருடன் இருப்பவர்கள் திட்டமிட்ட முறையில் பசி பட்டினியால் வாடுகின்றனர். கடந்த வாரம், உத்தியோகபூர்வ ஐ.நா-ஆதரவு பெற்ற உலகளாவிய பஞ்ச நிவாரண அமைப்பு, காஸாவில் “பஞ்சம் நெருங்கிவிட்டது” என்று கண்டறிந்தது. இது, “இறப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளில் பெரும் முடுக்கத்திற்கு” வழிவகுத்துள்ளது என்று அது கூறியது.

சில மாதங்களுக்குள், வல்லுநர்கள் பாரிய பசி பட்டினியால் இறப்பவர்களின் எண்ணிக்கை, இஸ்ரேலிய குண்டுகள் மற்றும் தோட்டாக்களால் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் கூட மறைத்துவிடும் என்று எச்சரிக்கை விடுத்தனர்,

அமெரிக்க-இஸ்ரேல் போர் இலக்குகளை அடைவதற்கான வழிமுறையாக, காஸா மக்கள் தொடர்ந்தும் பசி பட்டினியில் இருப்பதை அமெரிக்காவால் முழுமையாக ஆதரிக்கப்படுகிறது. இஸ்ரேல் காஸாவுக்குள் உணவுகளை அனுமதிக்க வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் கடந்த ஜனவரியில் ஒரு தீர்ப்பிலும், இந்த வாரத்தில் மற்றொரு தீர்ப்பிலும் கோரிக்கைகளை விடுத்தபோதிலும், சர்வதேச நீதிமன்றத்தின் சட்டபூர்வமான தன்மையை ஏற்காத அமெரிக்கா, அதற்கு “கட்டுப்படாத” ஒன்றாகவே இருந்து வருகிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்க அரசாங்கம் ஒரு குற்றவியல் ஆட்சியாக செயல்படுகிறது, இது சர்வதேச சட்டத்தின் கட்டமைப்பிற்கு முற்றிலும் வெளியே செயல்படுகிறது என்பதாகும். ரஷ்யாவுடனான அதன் போர் மற்றும் சீனாவிற்கு எதிரான இராணுவ ஆத்திரமூட்டல்களை அது தீவிரப்படுத்துகையில், பைடென் நிர்வாகம் காஸாவில் ஒரு முன்மாதிரியை அமைக்க முயல்கிறது: 2.2 மில்லியன் மக்கள் தொகையை அழித்து நிர்மூலமாக்குவதில் அல்லது மக்கள் முழுவதையும் இடம்பெயர செய்வதில் அது வெற்றிபெறுமா?

கடந்த ஐந்து மாதங்களாக, இனப்படுகொலைக்கு எதிராக உலகின் ஒவ்வொரு நாட்டிலும் மில்லியன் கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த ஆர்ப்பாட்டங்கள் காஸாவில் வெகுஜன படுகொலையின் தீவிரத்தை மட்டுமே சந்தித்து வருகின்றன.

ஆதலால், இதிலிருந்து ஒரு மையப் பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும்: காஸாவில் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டம் என்பது, ஏகாதிபத்திய அரசாங்கங்களுக்கு எதிரான போராட்டமாகும். அதில், முதலிலும் மற்றும் முக்கியமாகவும் அதை செயல்படுத்திவரும் அமெரிக்க அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமாகும். பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை நிறுத்துவதற்கு, போர் மற்றும் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்துக்கு மூலகாரணமான முதலாளித்துவ அமைப்பு முறையை தூக்கியெறியும் ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்தின் பாரிய அரசியல் அணிதிரட்டல் தேவைப்படுகிறது.

Loading