முன்னோக்கு

காசாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு வாஷிங்டனின் ஆதரவாளர்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இஸ்ரேலிய இராணுவம், வடக்கு காஸாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை வளாகத்தில் இருந்து பின்வாங்கியதை அடுத்து, அது ஏற்படுத்திய அழிவு மற்றும் பாரிய படுகொலைகள், இரண்டாம் உலகப் போரில் நாஜிக்களின் காட்டுமிராண்டித்தனத்திற்குப் பிறகு உலகம் கண்ட மிகக் கொடூரமான காட்சிகளாகும்.

Radio City Music மண்டபத்தில் ஸ்டீபன் கோல்பர்ட்டுடன் நிதி திரட்டும் நிகழ்வில் ஜனாதிபதி ஜோ பைடென் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான பராக் ஒபாமா மற்றும் பில் கிளிண்டன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.  Thursday, March 28, 2024, in New York. [AP Photo/Alex Brandon]

ஒரு காலத்தில், காஸா பகுதியில் சிகிச்சையளித்து குணப்படுத்தும் மிகப்பெரிய இடமாக இருந்த அல்-ஷிஃபா மருத்துவமனை வளாகத்தில் நூற்றுக்கணக்கான உடல்கள் இடிபாடுகளுக்குள் சிதறிக் கிடக்கின்றன. சிதைக்கப்பட்ட உடல்களில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. மற்றும் இடிபாடுகளின் வழியாக நடப்பவர்கள், சிதைந்துபோன உடல் பாகங்களை மிதிக்க வேண்டியிருக்கும் என்று சாட்சிகள் விவரிக்கின்றனர்.

வரம்பற்ற முறையில் நிர்மூலமாக்கும் அழிப்புப் போரில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. இந்தப் போர் அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (ஜேர்மனி முன்னணியில் உள்ளது) ஆகியவற்றின் முடிவில்லாத ஆயுதங்கள் மற்றும் நிதி ஆதரவு வளங்கள் இல்லாமல், இந்த இனப்படுகொலையை தொடர முடியாது.

இந்தப் பயங்கரங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, ​​பைடெனின் மறுதேர்தல் பிரச்சாரம் கடந்த வியாழன் அன்று நியூயோர்க்கில் உள்ள ரேடியோ சிட்டி இசை மண்டபத்தில் நிதி திரட்டும் நிகழ்வு நடந்துகொண்டிருந்தது. அங்கு ஜனநாயகக் கட்சியின் மூன்று தலைவர்களான பில் கிளிண்டன், பராக் ஒபாமா மற்றும் ஜோ பைடென் ஆகியோர் தற்போதைய அமெரிக்கக் கொள்கையைப் பாதுகாப்பதுக்கு கூட்டாக இணைந்திருந்தனர்.

அதே நேரம், நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் பாலஸ்தீன மக்களுக்கு தங்கள் ஆதரவைக் காட்டி மண்டபத்துக்கு வெளியே கூடி இருந்தனர். மண்டபத்துக்கு உள்ளே, பல தனிநபர்கள் இஸ்ரேலிய இனப்படுகொலை மற்றும் அதை ஆதரித்துவரும் பைடென் நிர்வாகத்தை கண்டித்தபடி எழுந்து நின்றனர்.

இதற்கு, அங்கிருந்த மூன்று ஜனாதிபதிகளின் பதில் நெதன்யாகுவுடன் தங்கள் ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்துவதாக இருந்தது. “இஸ்ரேல் தனது இருப்புக்கே ஆபத்து என்ற நிலையில் இருப்பதை நீங்கள் மறந்துவிட முடியாது” என்று பைடென் அங்கு கூறினார். இந்த நிபந்தனைகளின் கீழ், குண்டு வீச்சுக்கள் மற்றும் பாரிய பசி பட்டினியால் பாலஸ்தீனியர்களின் இருப்பு அழிக்கப்படுகிறது.

போராட்ட எதிர்ப்பாளர்கள், தனது பேச்சை “செவிசாய்க்க” வேண்டியதன் அவசியத்தைப் பற்றி விரிவுரை எடுத்த ஒபாமா, தன்னைப் போன்ற அனுபவமிக்க போர்வெறியர்கள் மற்றும் பைடென் முடிவுகளை எடுக்கும்போது வாயை மூடிக்கொண்டு இருப்பதற்கு வக்காலத்து வாங்கினார். கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு, பெரும் தொகையான பணத்தை செலுத்தி கலந்து கொண்ட பல பெரும் மில்லியனர்களை உள்ளடக்கிய பார்வையாளர்களில் பெரும்பாலோர் இதனைப் பாராட்டினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியாளர்களான கோல்பேர்ட் மற்றும் பாட்டுக்காரி ராணி லதிஃபா போன்றவர்கள் இதற்கு தங்கள் ஒப்புதலை வழங்கினர். இவர்கள் அனைவரும் அவமானத்தில் மூழ்கினர்.

ரேடியோ சிட்டி இசை மண்டப நிகழ்வில் 26 மில்லியன் டாலர்கள் வசூலிக்கப்பட்டது. அதே நேரத்தில், ஜனநாயகக் கட்சியினர் வங்கியாளர்கள் மற்றும் பில்லியனர்களுடன் சிரித்துப் பேசியும், அவர்களுடன் கேலியும் கிண்டலுமாக இருந்தனர். இந்த வாரம் டிரம்பின் மார்-ஏ-லாகோ தோட்டத்தில், டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினர், மற்றும் நிதி முதலீட்டாளரும் கோடீஸ்வரருமான ஜோன் பால்சன் நடத்துகின்ற ஒரு நிகழ்வின் மூலம் இந்த எண்ணிக்கையில் முதலிடம் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். பெரும் பணக்காரர்களுக்கு சேவை செய்யும் அரசியல் கருவிகளாக உள்ள இந்த இரு கட்சிகளும், உள்நாட்டில் இலாப அமைப்புமுறையையும் வெளிநாட்டில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் பாதுகாப்பதில் அசைக்க முடியாத உறுதியுடன் உள்ளன.

கடந்த வாரம், ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தையும் சூழ்ந்துள்ள கொலைவெறி உணர்வுகளுக்கு குரல் கொடுத்த மிச்சிகன் குடியரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிம் வால்பெர்க், 1945 ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவின் அணுகுண்டுகளால் அழிக்கப்பட்ட ஜப்பானிய நகரங்களான “ஹிரோஷிமா மற்றும் நாகசாகி” போன்று, காஸா விரைவாக அழிக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

கடந்த வியாழன் அன்று மன்ஹாட்டனில் நடந்த நிதி திரட்டலைப் பின்தொடர்ந்து, திங்களன்று வெள்ளை மாளிகையின் புல்வெளியில் ஈஸ்டர் முட்டை வேட்டையுடன் நிதி திரட்டலை பைடென் தொடர்ந்தார். வெளிப்படையாக இவர்கள் அனைவருக்கும் ஒரு நல்ல பொழுது போக்காக இவை இருந்தன. இந்த ஒரு மணி நேர நிகழ்வின் போது, அமெரிக்கா வழங்கிய குண்டுகளால் எத்தனை பாலஸ்தீனிய குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், காஸாவிலுள்ள மக்கள் பசி பட்டினிக்கு தள்ளப்பட்ட சூழ்நிலையில், அவர்களுக்கு எந்தவிதமான முட்டைகளும் கிடைக்கவில்லை என்பது உறுதி.

இந்த அற்பத்தனத்திற்கு மத்தியில், திங்களன்று சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகம் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலுடன், பரந்த மத்திய கிழக்கு மோதலின் பாரிய விரிவாக்கம் நடந்து கொண்டிருந்தது. இந்த பாரிய குண்டு வீச்சில், ஈரானின் புரட்சிகர காவல்படையின் உயரடுக்கு பிரிவான குட்ஸ் படையின் இரண்டு மூத்த அதிகாரிகள் உட்பட குறைந்தது ஆறு ஈரானியர்கள் கொல்லப்பட்டனர். இரட்டிப்பு சட்டவிரோதமான இந்த தாக்குதல், சிரிய வான்வெளியை மீறி, பின்னர் ஈரானிய தூதரக கட்டிடத்தின் மீது நடத்தப்பட்டது. இது சர்வதேச சட்டத்தின் கீழ் ஈரானிய பிரதேசமாக கருதப்படுகிறது.

பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படும் செய்தி ஊடகங்களால் திணிக்கப்பட்ட இருட்டடிப்பு இருந்தபோதிலும், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் காஸாவிலிருந்து வெளியேறும் காட்சிகளால் சீற்றமடைந்துள்ளனர். மேலும், மத்திய கிழக்கு முழுவதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க-நேட்டோ படைகளின் அதிகரித்து வரும் இராணுவ ஆத்திரமூட்டல்களால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ரேடியோ சிட்டி இசை மண்டபத்தில் இருந்த ஜனநாயகக் கட்சித் தலைவர்களின் பட்டியலானது, அரசாங்கக் கொள்கையை மாற்றுவதில் வெகுஜன எதிர்ப்புகள் முற்றிலும் பயனற்றவை என்பதை விளக்குகிறது. கடந்த மூன்று தசாப்தங்களாக, இந்த மூன்று ஜனாதிபதிகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்க் கொள்கையின் வளர்ச்சியுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் ஆவர். கிளின்டன் (1993-2001) முன்னாள் யூகோஸ்லாவியாவில் அமெரிக்க இராணுவத் தலையீடுகளை மேற்பார்வையிட்டார். இதில் செர்பியாவிற்கு எதிரான பெரிய அளவிலான வான்வழிப் போர், அத்துடன் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சூடானில் குண்டுவீச்சுக்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களும் அடங்கும்.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் குடியரசுக் கட்சியின் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷால் தொடங்கப்பட்ட போர்களைத் தொடர்ந்து நடத்திய ஒபாமா (2009–2017), லிபியா மீது குண்டுவீசியும், சிரியாவில் இஸ்லாமியப் படைகளுக்கு ஆதரவளித்தும், இரு நாடுகளையும் இரத்தக்களரி உள்நாட்டுப் போர்களில் மூழ்கடித்தார். அத்தோடு, சீனாவை எதிர்கொள்ள அமெரிக்க இராணுவப் படைகளின் பெரும்பகுதியை ஆசியா-பசிபிக் பகுதிக்கு மாற்றுவதாக உறுதியளித்து, “ஆசியாவை நோக்கி” என்ற பேரில் உலகளாவிய இராணுவ மோதலை அவர் விரிவுபடுத்தினார்.

பதவிக்கு வந்ததில் இருந்து பைடெனின் முதன்மையான குறிக்கோள், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி யுத்தத்தை தூண்டுவதும், பின்னர் தீவிரப்படுத்துவதும் ஆக இருந்தது. இதற்கு பைடென் நிர்வாகம் பிரமாண்டமான நிதி ஆதாரங்களையும் இராணுவத்தையும் அர்ப்பணித்துள்ளது. அணுஆயுத அழிவுக்கு அச்சுறுத்தும் இந்தப் போர், இப்போது காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கான பெரிய அளவிலான ஆதரவோடும், ஆசியாவில் சீனாவுக்கு எதிரான கூட்டணிகள் மற்றும் தொடர்ச்சியான அமெரிக்கத் தளங்கள் மூலம் போரின் தொடர்ச்சியான விரிவாக்கத்துடனும் இணைந்துள்ளது.

ஜனநாயகக் கட்சியின் மூன்று நிர்வாகங்களும், இராணுவவாதத்தின் வளர்ச்சியை மறைக்க உள்நாட்டில் சமூக முன்னேற்றம் பற்றிய தெளிவற்ற வாக்குறுதிகளை (இவை விரைவாக நிராகரிக்கப்பட்டன) பயன்படுத்தியுள்ளன. கிளின்டன் தன்னை “நம்பிக்கையின் மனிதராகக்” காட்டிக் கொண்டார். ஆனால், குடியரசுக் கட்சியினருடன் சேர்ந்து அவர் “சமூக நலன்களை முடிவுக்குக் கொண்டு வந்தது” நமக்குத் தெரியும். “நம்பிக்கை மற்றும் மாற்றத்தின்” வேட்பாளர் ஒபாமா, தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் வோல் ஸ்ட்ரீட்டின் பாரிய பிணை எடுப்புக்கான மறைப்பாக, முதல் ஆப்பிரிக்க அமெரிக்க ஜனாதிபதி என்ற தனது அடையாளத்தைப் பயன்படுத்திக் கொண்டார். டிரம்பின் ஆபத்துக்கு எதிராக “அமெரிக்காவின் ஆன்மாவைப்” பாதுகாக்கப் போராடுவதாக பைடென் கூறினார். ஆனால், எல்லையில் டிரம்பின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை தொடர்கின்ற பைடென், COVID-19 தொற்றுநோய்க்கு எதிரான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அகற்றினார்.

2024 ஜனாதிபதி தேர்தல்களில், மீண்டும் ஒருமுறை, தொழிற்சங்கங்களும் போலி-இடது குழுக்களும் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான போராட்டத்தையும் நசுக்க முற்படுகின்றன. மேலும், முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் வெற்றி மற்றும் மறுதேர்தலைத் தடுக்க பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியினரை ஆதரிப்பது அவசியம் என்று இவை வலியுறுத்துகின்றன. அத்தோடு இவை, இந்த 81 வயதான போர்க்குற்றவாளி, பாசிச சர்வாதிகாரத்திற்கு ஒரே தடையாக இருப்பது போல, அமெரிக்காவில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான ஒரே நம்பிக்கை பைடென் என்று கூறுகின்றன.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

அல்-ஷிஃபா மருத்துவமனை படுகொலை மற்றும் ஈரானிய அதிகாரிகளின் படுகொலைக்கு விடையிறுக்கும் வகையில், சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் ஒரு அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டார்:

சர்வதேச தொழிலாள வர்க்கம் மகத்தான சமூக சக்தியைக் கொண்டுள்ளது. மேலும், படுகொலையை நிறுத்த தொழிலாள வர்க்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். சோசலிச சமத்துவக் கட்சிக்கான எங்கள் தேர்தல் பிரச்சாரத்தில், ஜெர்ரி வையிட்டும் (@jerrywhiteSEP) நானும், தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களிலுள்ள தொழிலாள வர்க்கத்தின் மத்தியில், சுரண்டல் மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராக வளரும் போராட்டங்களை இனப்படுகொலை மற்றும் அதன் ஒரு பகுதியாக இருக்கும் பரந்த ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கும் வகையில், ஆக்கிரோஷமாக பிரச்சாரம் செய்ய உத்தேசித்துள்ளோம்.

காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலைக்கு அவசியமான பதில் நடவடிக்கையானது, முதலாளித்துவ தன்னலக்குழுக்களின் கைகளில் இருந்து அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும், சமத்துவத்தின் அடிப்படையில் உலகப் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கும் சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பதாகும்.

காஸாவில் உள்ள பயங்கர நிலைமைகளுக்கு எதிரான போராட்டம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திடம் முன்வைக்கப்படும் பிரச்சினைகள் இதுவேயாகும்.

Loading