பைடென்-ஜி தொலைபேசி அழைப்பு சீனாவுடனான அமெரிக்க மோதலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, ஒத்துழைப்பை அல்ல

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

அமெரிக்க ஜனாதிபதி ஜோசப் பைடென் செவ்வாயன்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் ஒரு நீண்ட தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருந்தார். இதனை, இரு தரப்பினரும் இராஜதந்திரத்தின் மயக்க மொழியில் “நேர்மையானது மற்றும் ஆக்கபூர்வமானது” என்று விவரித்தனர். யதார்த்தத்தில், அந்த அழைப்பைக் ஏற்படுத்தியிருந்த பைடென், பெய்ஜிங் உடனான வாஷிங்டனின் பொருளாதார மற்றும் மூலோபாய மோதலின் முக்கிய கூறுபாடுகளை மீண்டும் கூறியதால், உண்மையில் எதுவும் தீர்க்கப்படவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி ஜோசப் பைடென் ஜூலை 29, 2022 அன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேசுகிறார்  [Photo: Facebook/President Joe Biden]

தைவானின் சுதந்திரத்திற்காக வாதிடும் வில்லியம் லாய் சிங்-டே (William Lai Ching-te) மே 20 அன்று தீவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். தைவான் மீதான பதட்டங்களை வேண்டுமென்றே எரியூட்டியுள்ள பைடென் நிர்வாகம், ஒரே சீனா என்ற கொள்கையை கிழித்தெறிந்துள்ளது. இந்தக் கொள்கையின் கீழ் அமெரிக்கா நடைமுறையில் பெய்ஜிங்கை தைவான் உட்பட அனைத்து சீனாவின் சட்டபூர்வமான அரசாங்கமாக முன்னர் அங்கீகரித்திருந்தது. தாய்வான் உத்தியோகபூர்வ சுதந்திரத்தை பிரகடனம் செய்தால், தீவை சீன நிலப்பகுதியுடன் வலுக்கட்டாயமாக மீண்டும் ஒன்றிணைக்கப் போவதாக சீனா மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளது.

அந்தத் தொலைபேசி அழைப்பினைக் குறித்து சீன வெளியுறவு அமைச்சக விவரிப்பின்படி, அமெரிக்கா “தாய்வான் சுதந்திரத்தை” ஆதரிக்கவில்லை, ஒரே சீனா கொள்கையைப் பின்பற்றுகிறது மற்றும் சீனாவுடன் மோதலை விரும்பவில்லை என்று பைடென் ஜிக்கு உறுதியளித்தார். அனைத்திற்கும் மேலாக, வாஷிங்டனின் நோக்கம் “சீனாவின் அமைப்புமுறையை மாற்றுவது அல்ல” மற்றும் அமெரிக்கக் கூட்டணிகள் சீனாவுக்கு எதிராக இலக்கில் வைக்கப்படவில்லை என்பதாகும்.

இதில் ஒரு வார்த்தை கூட பெய்ஜிங்கில் நம்பப்படாது. பைடென் நிர்வாகம் தைபே உடனான உத்தியோகபூர்வ அமெரிக்க தொடர்பை மட்டுப்படுத்தும் நீண்டகால இராஜாங்க நெறிமுறைகளை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது, தாய்வானுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் விற்பதையும் அதிகரித்துள்ளது மற்றும் சீன நிலப்பரப்பில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள தீவுத்திட்டுக்கள் உட்பட தாய்வானில் அமெரிக்க இராணுவப் “பயிற்சியாளர்களை” நிறுத்தியுள்ளது.

இன்னும் பரந்தளவில், அமெரிக்கா அதன் இராணுவக் கூட்டணிகளைப் பலப்படுத்தியுள்ளதுடன், ஒரு பெரிய நேட்டோ பிரசன்னத்தை ஊக்குவித்து, இந்தோ-பசிபிக் எங்கிலும் கூட்டு போர் பயிற்சிகளை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளது. இவை அனைத்தும் சீனாவை நோக்கமாகக் கொண்டுள்ளன. உண்மையில், பைடென் அடுத்த வாரம் வெள்ளை மாளிகையில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் மற்றும் ஜப்பானிய பிரதம மந்திரி புமியோ கிஷிடா ஆகியோருடன் ஒரு கூட்டத்தை நடத்த உள்ளார். இது மூன்று நட்பு நாடுகளுக்கும் இடையே இராணுவ உறவுகளை அதிகரிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

“தாய்வான் பிரச்சினையின்” சாத்தியமான வெடிப்பார்ந்த தன்மையை, “சீன-அமெரிக்க உறவுகளில் கடக்கக் கூடாத முதல் சிவப்புக் கோடு” என்று ஜின்பிங் வலியுறுத்தினார். சீன வெளியுறவு அமைச்சரகத்தின் கருத்துப்படி, ஜின்பிங் ஒரு அப்பட்டமான எச்சரிக்கையை விடுத்தார். அதாவது “’தைவான் சுதந்திரம்’ பிரிவினைவாத நடவடிக்கைகள் மற்றும் அவற்றுக்கான வெளிப்புற ஊக்கம் மற்றும் ஆதரவை எதிர்கொண்டால், சீனா அதன் கைகளைக் கட்டிக்கொண்டு உட்காரப் போவதில்லை” என்று அது கூறியது. “தைவான் சுதந்திரத்தை ஆதரிக்காத ஜனாதிபதி பைடெனின் உறுதிப்பாட்டை உறுதியான நடவடிக்கைகளாக மாற்றுமாறு அவர் அமெரிக்கத் தரப்பை வலியுறுத்தினார்.”

இந்த தொலைபேசி அழைப்பை அமெரிக்கா மீள்வாசிப்பு செய்தது, விபரங்கள் குறைவாக இருந்தாலும், “தாய்வான் ஜலசந்தி எங்கிலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும், தென் சீனக் கடலில் சட்டத்தின் ஆட்சி மற்றும் சுதந்திரமான கடல்வழி போக்குவரத்தின் முக்கியத்துவத்தையும்” மீண்டும் வலியுறுத்தியது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், “கடல்வழி சுதந்திரம்” என்ற சாக்குபோக்கில் தாய்வான் ஜலசந்தி மற்றும் தென் சீனக் கடலில் அமெரிக்க கடற்படை ஆத்திரமூட்டல்களால் எரியூட்டப்பட்டுள்ள பிரச்சினையைத் தணிக்க பைடென் எந்த குறிப்பிடத்தக்க முயற்சியும் செய்யவில்லை.

அதேநேரத்தில், ரஷ்யாவின் பாதுகாப்பு தொழிற்துறை தளத்திற்கு சீன ஆதரவு இருப்பதாக கூறப்படுவதன் மீது பைடென் கவலைகளை எழுப்பினார்—இது தொலைபேசி அழைப்பைக் கேட்பதற்கான ஒரு சாத்தியமான காரணத்தின் ஒரு குறிப்பாகவும் இருக்கலாம். ஏற்கனவே உக்ரேனில் அணு ஆயுதமேந்திய ரஷ்யாவுடன் ஒரு மோதலில் சிக்கியுள்ள மற்றும் காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை போரை ஆதரித்துள்ள பைடென், அமெரிக்க தேர்தலுக்கு செல்லுகையில், தற்காலிகமாகவேனும், சீனாவுடனான வெளிப்படையான மோதலைத் தவிர்க்க முனையக்கூடும்.

பாசாங்குத்தனத்தின் ஒரு அப்பட்டமான காட்சிப்படுத்தலில், பைடென் சீனாவின் “அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்களுக்கு தீங்கு விளைவிக்கும் நியாயமற்ற வர்த்தக கொள்கைகள் மற்றும் சந்தையல்லாத பொருளாதார நடைமுறைகள்” குறித்து “தொடர்ந்து கவலைகளை” எழுப்பினார். அவரது நிர்வாகம் “வர்த்தகம் மற்றும் முதலீட்டை தேவையில்லாமல் மட்டுப்படுத்தாமல், நமது தேசிய பாதுகாப்பைப் பலவீனப்படுத்த மேம்பட்ட அமெரிக்க தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்கும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

மின்சார வாகனங்கள் உட்பட அமெரிக்க தயாரிப்புகளுடன் போட்டியிடக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்ததற்காக சீனாவை கண்டிக்கும் அதேவேளையில், பைடென் நிர்வாகம் பரந்த அளவிலான சீன உற்பத்தி பொருட்கள் மீது ட்ரம்ப் நிர்வாகத்தின் பாரிய பாதுகாப்புவாத வரிவிதிப்புகளை பராமரித்து வருகிறது. “தேசிய பாதுகாப்பு” என்ற சாக்குபோக்கில், வாஷிங்டன், அதனுடன் தொடர்புடைய சீன பெருநிறுவனங்களை முடக்கும் முயற்சியில், சீனாவுக்கு முக்கிய உயர் தொழில்நுட்ப பொருட்களை, குறிப்பாக நவீன கணினி சிப்புகள் மற்றும் அவற்றை தயாரிக்க பயன்படுத்தப்படும் சாதனங்களை ஏற்றுமதி செய்வதற்கு முன்பினும் பரந்த தடைகளை விதித்துள்ளது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபை சமீபத்தில் சீனாவை தளமாகக் கொண்ட நிறுவனமான பைட் டான்ஸ் (ByteDance) நிறுவனத்திற்கு எதிராக சட்டத்தை நிறைவேற்றியது, அதன் சமூக ஊடக பயன்பாடான டிக்டோக்கை ஒரு அமெரிக்க கூட்டமைப்பிற்கு விற்க ஆறு மாத கால அவகாசம் அளித்தது அல்லது போலியான தேசிய பாதுகாப்பு அடிப்படையில் அமெரிக்காவிற்குள் தடை செய்யப்பட்டது. அத்தகைய மசோதாவை சட்டமாக்க கையெழுத்திட பைடென் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வர்த்தக மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஒடுக்குவதற்கு அமெரிக்க தரப்பு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும், அதன் தடை பட்டியலில் மேலும் மேலும் சீன நிறுவனங்களை சேர்த்து வருவதாகவும் ஜி ஜின்பிங் எச்சரித்தார். “இது ‘ஆபத்தை குறைத்தல்’ அல்ல, மாறாக அபாயங்களை உருவாக்குகிறது,” என்று அவர் எச்சரித்தார்.

பைடனின் கருத்துக்கள் அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெல்லனின் சீனாவுக்கான பயணத்தை முன்னோட்டமிடுகின்றன. அங்கு ஒரு கருவூல அதிகாரியின் கூற்றுப்படி, பைடென் நிர்வாகம் “நியாயமற்ற” சீன வர்த்தக நடைமுறைகள் என்று கருதுவது குறித்து “வெளிப்படையான விவாதங்களை” நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மலிவான, போட்டித்தன்மை கொண்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான சீன பெருநிறுவனங்களின் தகைமை குறித்த சீன உற்பத்தி “மிதமிஞ்சிய கொள்திறனின்” அச்சுறுத்தல் குறித்து யெல்லன் எச்சரித்துள்ளார்.

பிபிசியிடம் பேசுகையில், சீனா மற்றும் அமெரிக்கா தொடர்பான வில்சன் மையத்தின் கிஸ்ஸிங்கர் பயிலகத்தின் இயக்குநரான ராபர்ட் டேலி, பைடென்-ஜி தொலைபேசி உரையாடலை “பெருமளவில் செயல்திறன் மிக்கது மற்றும் உறவில் எதிர்மறையான இயக்கவியல் மாறவில்லை என்றாலும் கூட, உண்மையில் நாடுகள் உறவை நன்கு நிர்வகிக்க உறுதிபூண்டுள்ளன என்பதை உலகின் பிற பகுதிகளுக்கு காட்டுவதற்கான ஒரு முயற்சி” என்று சுருக்கமாகக் கூறினார்.

சான் பிரான்சிஸ்கோவில் நடந்த ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) வருடாந்திர கூட்டத்தின் ஒரு பகுதியாக நவம்பரில் பைடென் மற்றும் ஜி இடையே நடந்த உச்சிமாநாட்டைத் தொடர்ந்து இந்த தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அமெரிக்கா மீது பறந்த சீன பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதை அடுத்து வெடித்த கூர்மையான பதட்டங்களைத் தொடர்ந்து, இந்தச் சந்திப்பு அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே உயர்மட்ட தொடர்பை மீண்டும் ஸ்தாபித்தது. எவ்வாறாயினும், உச்சிமாநாடு உறவுகளைச் சீர்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகள் மிகக் குறைவாகவே இருந்தது.

ஒத்துழைப்பின் இந்தக் காட்சிகள் ஒரு நைந்துபோன முகப்பாகும். “எதிர்மறை இயக்கவியல்” மாறவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக தொடர்ந்து மிகவும் அபாயகரமானதாக மாறி வருகிறது. ஜி உடனான ஒரு தொலைபேசி  உரையாடலைக் கோருவதற்கு பைடெனின் காரணங்கள் என்னவாக இருந்தாலும், பெய்ஜிங் உடனான உறவுகளில் உடனடி திருப்பங்கள் மற்றும் மாற்றங்கள் என்னவாக இருந்தாலும், சீனாவின் பொருளாதார விரிவாக்கத்தால் முன்னிறுத்தப்படும் அமெரிக்க உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அச்சுறுத்தலை, இராணுவம் உட்பட கிடைக்கக்கூடிய அனைத்து வழிவகைகளைக் கொண்டும் நசுக்குவதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் தீர்மானகரமாக உள்ளது.

Loading