முன்னோக்கு

டெஸ்லா 14,000 வேலைகளை நீக்குகிறது: பாரிய வேலையின்மைக்கு எதிராகப் போராட தொழிலாளர்களுக்கு உலகளாவிய மூலோபாயம் தேவை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவில் 14,000ம் வேலை வெட்டுக்களுக்கான அறிவிப்பு, தொழிலாளர்களின் வேலைகள் மீதான பெருநிறுவன தன்னலக்குழுவின் தாக்குதலின் விரிவாக்கத்தைக் குறிக்கிறது. இது ஒரு உலகளாவிய தாக்குதலாகும். இதற்கு தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய ஒருங்கிணைந்த பதிலடி தேவைப்படுகிறது.

நிறுவனத்தின் பணியாளர்களில் 10 சதவீதத்திற்கு சமமான வேலை வெட்டுக்கள் சர்வதேச அளவில் உள்ளன. ஜேர்மனிய ஊடகங்கள் திங்களன்று நிறுவனம் தனது பேர்லின் தொழிற்சாலையில் 3,000 வேலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தது. இருப்பினும் நிறுவனம் அந்த எண்ணிக்கையை மறுத்துள்ளது, ஆனால் வெட்டுக்கள் நடக்கும் என்பதை மறுக்கவில்லை.

கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்டில் உள்ள டெஸ்லா ஆலை [AP Photo/Ben Margot]

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, உலகெங்கிலும் உள்ள தொழில்களில் மில்லியன் கணக்கான வேலைகள் அழிக்கப்பட்டுள்ளன. இதில், அமெரிக்காவில் 978,000 க்கும் அதிகமான வேலைகள் அழிக்கப்பட்டுள்ளன என்று சேலஞ்சர், கிரே & கிறிஸ்மஸ் கூறுகிறது.

வாகனத் துறையில் மட்டும், சமீபத்திய வாரங்களில் இத்தாலியில் ஸ்டெல்லாண்டிஸால் 3,600 வேலைகளும், அமெரிக்காவில் 600 வேலைகளும், ஜேர்மனியில் உதிரிப்பாகங்கள் உற்பத்தி செய்யும் Bosch நிறுவனத்தின் 3,500 வெட்டுக்களும் காணப்பட்டன. அதே நேரத்தில், Ford கனடாவில் உள்ள Oakville ஆலையில் நீட்டிக்கப்பட்ட மறுதொடக்கத்தை அறிவித்து, 2027 வரை பணிநீக்கங்களை நீட்டித்தது. டெஸ்லாவின் அறிவிப்புக்கு முன்பே ஆயிரக்கணக்கான வாகனத் துறையிலுள்ள வேலைகள் அழிக்கப்பட்டுவிட்டன. மேலும் வரவிருக்கும் ஆண்டுகளில், பணிநீக்கங்களுக்கு நூறாயிரக்கணக்கானோர் இலக்காக இருக்கின்றனர். ஏனெனில், குறைந்த உழைப்பு தேவைப்படும் மின்சார வாகனங்களை நோக்கி தொழில்துறை நகர்கிறது. 

இதர தொழில்துறைகளிலும் பாரிய வெட்டுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொருட்களை ஏற்றி இறக்கும் மற்றும் விநியோகிக்கும் துறைகளில், UPS நிறுவனம் 200 அதன் நிலையங்களை மூடுவதற்கும், “எல்லாவற்றையும்” தானியக்கமாக்குவதற்கும் திட்டங்களை அறிவித்துள்ளது. இதன் விளைவாக ஆயிரக்கணக்கான வேலைகள் இழக்கப்படும். போலந்து போஸ்ட் இந்த ஆண்டு 4,500 வேலைகளை குறைக்கும், ஒரு பெரிய மறுசீரமைப்பு திட்டம் அமெரிக்க தபால் சேவையில் உயர் வேகத்தில் செல்கிறது. இதேபோன்ற நடவடிக்கைகள் இங்கிலாந்து, ஜேர்மனி, கனடா மற்றும் உலகம் முழுவதும் அஞ்சல் சேவைகளில் மேற்கொள்ளப்படுகின்றன.

செயற்கை நுண்ணறிவு (AI) புகுத்தப்பட்ட தொழில்நுட்பத் துறையில், வேலை வெட்டுக்கள் முன்னணியில் உள்ளது. Dell நிறுவனம் 6,000ம் வேலைகளை குறைப்பதாக அறிவித்தது, மற்றும் Apple நிறுவனம் அதன் சமீபத்திய சுற்று பணிநீக்கங்களில் 600 க்கும் மேற்பட்ட வெட்டுக்களை அறிவித்தது. சான் டியாகோ, மினியாபோலிஸ் மற்றும் செயின்ட் பால் உள்ளிட்ட மாவட்டங்களில், மிச்சிகனில் உள்ள பிளின்ட் மற்றும் ஆன் ஆர்பர், மிச்சிகனில் உள்ள ஃபெடரல் தொற்றுநோய்க்கான கல்வி நிதி குறைக்கப்பட்டதால் நூற்றுக்கணக்கான பதவிகள் ஆபத்தில் உள்ளன.

உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, இந்த வேலைப் படுகொலை என்பது பொருளாதார சுழற்சியின் ஏற்றத் தாழ்வுகளின் துரதிர்ஷ்டவசமான விளைவு ஆகும். டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில், “அடுத்த கட்ட வளர்ச்சி சுழற்சிக்கு” தயாராவதற்கு இந்த வேலைவெட்டுக்கள் அவசியம் என்று கூறினார்.

ஆனால் உண்மை என்னவென்றால், அவை மிக உயர்ந்த மட்டங்களில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட கொள்கையின் விளை பொருளாகும். உலகெங்கிலும் வளர்ந்து வரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் சமூக எதிர்ப்பு அலைகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து விரிவடைந்து வரும் சவாலை, பாரிய வேலையின்மையின் சாட்டையின் மூலம் முறியடிப்பதே இதன் நோக்கமாகும்.

உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தை கையாள்வதில் வாஷிங்டன் மூன்று முனை அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது. முதலாவதாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இது சுமாரான ஊதிய வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது என்று வெளிப்படையாகக் கூறியுள்ளது. இரண்டாவது, தன்னியக்கமாக்கல், செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தொழிலாளர்களின் எண்ணிக்கையை அகற்றுவது.

மூன்றாவது, வேலைநிறுத்தங்களை தடுக்க அல்லது கட்டுப்படுத்த மற்றும் போராட்டங்களை விற்றுத்தள்ளுவதை திணிக்க, கார்ப்பரேட்-சார்பு தொழிற்சங்க அதிகாரத்துவத்தை பயன்படுத்துவதாகும். டெஸ்லா அமெரிக்காவில் தொழிற்சங்கம் இல்லாத நிலையில், கடந்த இலையுதிர் காலத்தில் ஒரு பலம் இல்லாத “வரம்புக்கு உட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட வேலைநிறுத்தத்தை” தொடர்ந்து, ஐக்கிய வாகன தொழிலாளர் சங்கத்தின் விற்பனை ஒப்பந்தம், டெட்ராய்ட் வாகன உற்பத்தியாளர்களிடையே பெருமளவிலான வெட்டுக்களைச் செயல்படுத்த உதவுவதில் முக்கியமானதாக இருந்தது. அதில், UPS டீம்ஸ்டர்கள் உட்பட எண்ணற்ற பிற காட்டிக்கொடுப்புக்கள் இழைக்கப்பட்டன. அதிகாரத்துவத்தினர் பெருமளவிலான வேலை வெட்டுக்களுக்கு வழி வகுக்கும் ஒப்பந்தத்தை திணித்தனர். 

வேலைகளின் ஒரு மிக மோசமான சூழ்நிலைக்கு மற்றொரு முக்கிய நோக்கம் போருக்கான வளங்களை விடுவிப்பதாகும். கடந்த மாதம், அமெரிக்கா $825 பில்லியன் டொலர் இராணுவ வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றியது. மேலும், ஈரான் மற்றும் சீனாவிற்கு எதிரான புதிய போர்களுக்கான தயாரிப்புகள் நன்கு முன்னேறியுள்ளன. இது அமெரிக்காவுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. மாறாக, அனைத்து ஏகாதிபத்திய சக்திகளையும் உள்ளடக்கி இருக்கிறது. ஜேர்மனியும் ஜப்பானும் மீண்டும் இராணுவமயமாக்குகின்றன. ஒவ்வொரு “மேம்பட்ட” நாட்டிலும் உள்ள அரசாங்கங்கள் சிக்கன நடவடிக்கைகளை அதிகரித்த இராணுவ செலவினங்களுடன் இணைக்கின்றன. அதே நேரத்தில், தங்கள் மக்கள் போருக்கு தயாராக வேண்டும் என்று அறிவிக்கின்றனர்.

வேலைவாய்ப்பின் மீதான தாக்குதலானது, முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழமான நெருக்கடிக்கு தொழிலாளர்கள் விலை செலுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வார சர்வதேச நாணய நிதியத்தின் வசந்தகாலக் கூட்டம் உலகளாவிய கடன், பணவீக்கம் மற்றும் அமெரிக்க நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மை பற்றிய கவலைகளால் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தக் கூட்டத்திலும், சர்வதேச நாணய நிதியத்தின் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்திலும் “நிதி ஒருங்கிணைப்பு”, அதாவது பாரிய சிக்கன நடவடிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தன்னியக்கத்துடன் (automation) இணைக்கப்பட்டு சுரண்டலை முடுக்கிவிட அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலை மீதான இந்த தாக்குதல்களுக்கு சர்வாதிகார அரசாங்க வடிவங்கள் தேவைப்படுகின்றன. திங்களன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், ஒரு மூத்த IMF அதிகாரி, அர்ஜென்டினாவின் பாசிச ஜனாதிபதி ஜேவியர் மிலேயினால் திணிக்கப்பட்ட பாரிய வெட்டுக்கள் “உண்மையிலேயே ஈர்க்கக்கூடியவை” என்று பாராட்டினார்.

சர்வாதிகாரத்தை நோக்கிய இதேபோன்ற போக்குகள் அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும், குறிப்பாக அமெரிக்காவில் தோன்றியுள்ளன. கிரிப்டோகரன்ஸிகளின் ராஜாவும் பாசிச அனுதாபியுமான எலன் மஸ்க் தனது சொந்த, குறிப்பாக கசப்பான முறையில், முழு அமெரிக்க நிதியியல் பிரபுத்துவத்தின் சர்வாதிகார பார்வையை வெளிப்படுத்துகிறார்.

“செயல்திறனின்” அவசியத்தைப் போதிக்கும் கோடீஸ்வரர்கள், சமூகத்தின் வளங்களை மிகப் பெரியளவில் விரயமாக்குகின்றனர்.  ஃபோர்ப்ஸின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, உலகின் பில்லியனர்கள் -2,781 பேர்- 14.2 டிரில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டுள்ளனர். இது அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதிக்கும் மேலான தொகையாகும். இந்த ஜனவரியில் ஆக்ஸ்பாம் வெளியிட்ட ஒரு அறிக்கை, 2020ல் இருந்து உலகின் ஐந்து பணக்காரர்களின் செல்வம் இருமடங்காக அதிகரித்துள்ளதாகக் கண்டறிந்துள்ளது—இந்தக் காலக்கட்டத்தில் கோவிட்-19 பெருந்தொற்றுநோய் காரணமாக, 20 மில்லியனுக்கும் அதிகமான, தடுக்கக்கூடிய இறப்புகள் நடந்துள்ளன—அதே நேரத்தில், உலகிலுள்ள மக்கள்தொகையில், ஐந்து பில்லியன் மக்கள் ஏழ்மை நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் அவசியமான முடிவுகளை எடுக்க வேண்டும். உலகளாவிய வேலைகள் படுகொலைக்கு எதிரான போராட்டத்திற்கு, அதன் பொதுவான நலன்களின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தில் இதேபோன்ற ஒரு ஐக்கியப்பட்ட உலகளாவிய இயக்கத்தை உருவாக்க வேண்டும். 21 ஆம் நூற்றாண்டின் உலகப் பொருளாதாரத்தில் வர்க்கப் போராட்டத்தின் தேவைகளுக்கு இணங்க, அத்தகைய இயக்கத்தின் தலைமையாக சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி கட்டியெழுப்படுகிறது.

இந்த உலகளாவிய போராட்டத்தின் ஒரு முக்கிய கூறுபாடு போருக்கு எதிரான போராட்டம் ஆகும். ஆளும் வர்க்கத்தால் தூண்டப்பட்ட தேசிய மோதல்களால் தொழிலாளர்கள் தங்களை பிளவுபடுத்த அனுமதிக்க முடியாது. அரசாங்கத்தின் நீட்சியாக மட்டுமே செயல்படும் தொழிற்சங்க அதிகாரத்துவம் இதைத்தான் செய்ய முயல்கிறது. UAW தொழிற் சங்கத் தலைவர் ஷான் ஃபைன் ஜனாதிபதி பைடெனுடன் மீண்டும் மீண்டும் தோன்றுகிறார். “இனப்படுகொலை ஜோ” இரண்டாம் உலகப் போரின் போது கட்டமைக்கப்பட்ட போர்ப் பொருளாதாரத்தை இன்றைக்கு உதாரணமாகக் கூறி, விமானம் தாங்கி போர்க் கப்பல்கள் மற்றும் டாங்கிகளை உருவாக்க அமெரிக்கர்களை அழைக்கிறார். 

எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சோசலிச வேலைத்திட்டம் அவசியமாகும். முதலாளித்துவம் என்பது காலாவதியான பொருளாதார அமைப்பாகும். இது, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பிற முன்னேற்றங்களை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த இயலாது செயலற்று இருக்கிறது. வங்கிகள் மற்றும் பெரிய பெருநிறுவனங்களுடன் சேர்த்து, மஸ்க் மற்றும் அவரது சக தன்னலக்குழுக்களின் சொத்துக்கள் அபகரிக்கப்பட வேண்டும். மேலும், இந்த சொத்துக்கள் தொழிலாள வர்க்கத்தால் ஜனநாயக முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும். தன்னியக்கமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றங்கள் பணிச்சுமையை எளிதாக்கவும், மக்களின் வாழ்வில் பரந்த முன்னேற்றங்களுக்கு நிதியளிக்கவும், பசி, போர் மற்றும் வறுமையை நீக்கவும் பயன்படுத்தப்பட வேண்டும்.

இதுவே, உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் முன்வைத்து போராடும் வேலைத்திட்டமாகும்.

Loading