அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் புதிய சுற்று பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஈரான் மீது இஸ்ரேல் வெள்ளிக்கிழமை காலை வான்வழித் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் முக்கிய அமெரிக்க செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்தார். இஸ்ஃபஹான் விமான தளத்தில் மூன்று ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரானிய அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் வியாழனன்று ஈரானுக்கு எதிராக ஒரு புதிய சுற்று தடையாணைகளை அறிவித்து, மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போரில் அவற்றின் பங்களிப்பை அதிகரித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் இந்த தாக்குதல் நடவடிக்கை வந்துள்ளது. 

பொருளாதாரத் தடைகளை அறிவிக்கும் ஒரு அறிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், 'ஈரானின் இராணுவத் தொழில்களை மேலும் சீரழிக்கும் பொருளாதாரத் தடைகளை தொடர்ந்து விதிக்க கருவூலத் துறை உட்பட எனது குழுவுக்கு உத்தரவிட்டுள்ளேன்' என்று கூறினார்.  'ஈரானின் தாக்குதல்களை செயல்படுத்தும் அல்லது ஆதரிக்கும் அனைவருக்கும் இது தெளிவாக இருக்கட்டும்: அமெரிக்கா இஸ்ரேலின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றுள்ளது' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அதே நாளில், இங்கிலாந்து பிரதம மந்திரி ரிஷி சுனக் ஈரானை இலக்கு வைத்து ஒரு புதிய சுற்று பொருளாதாரத் தடைகளை அறிவித்தார். ஈரானைத் 'தனிமைப்படுத்த' பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அறிவித்த ஐரோப்பிய கவுன்சிலில் பைடென் மற்றும் சுனக் இணைந்தனர்.

வார இறுதியில் இஸ்ரேல் மீதான தெஹ்ரானின் பதிலடி தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான் மீது ஒரு தாக்குதலை நடத்த உத்தேசித்துள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர் இந்த தடையாணைகள் வந்துள்ளன. புதனன்று இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தென்யாகு, இஸ்ரேல் 'தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள தேவையான அனைத்தையும் செய்யும்' என்றும் ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக 'எங்களது சொந்த முடிவுகளை எடுப்போம்' என்றும் அறிவித்தார். 

பிரிட்டிஷ் வெளியுறவு செயலர் டேவிட் கேமரூன், ஈரானிய அதிகாரிகளுடனான ஒரு சந்திப்பைத் தொடர்ந்து, “இஸ்ரேலியர்கள் செயல்பட முடிவு செய்கிறார்கள் என்பது தெளிவாகிறது' என்று கூறிய ஒரு நாளுக்குப் பின்னர் இந்த அறிக்கை வந்தது. 

அதே நேரத்தில், ஈரானிய அதிகாரிகள் இஸ்ரேலின் எந்தவொரு தாக்குதலும் பெரும் பலத்துடன் எதிர்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளனர். ஈரானிய மேஜர் ஜெனரல் அஹ்மத் ஹக்தலாப் இஸ்ரேலிய அணுசக்தி தளங்களுக்கு பதிலடி கொடுக்க 'கைகள் தூண்டுதலில் உள்ளன' என்று எச்சரித்தார். 

CNN க்கு அளித்த பேட்டியில், ஈரானிய வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் கூறினார்: 'இஸ்ரேலிய ஆட்சி மீண்டும் சாகசத்தில் ஈடுபட்டு ஈரானின் நலன்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தால், எங்களிடமிருந்து அடுத்த பதில் உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும் இருக்கும்.' 

மத்திய கிழக்கு ஒரு முழு அளவிலான போரின் விளிம்பில் உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் பின்வருமாறு எச்சரித்தார்: 'ஒரு தவறான கணக்கீடு, ஒரு தவறான தகவல்தொடர்பு, ஒரு தவறு நினைத்துப் பார்க்க முடியாத மட்டத்துக்கு இட்டுச் செல்லக்கூடும்: ஒரு முழு அளவிலான பிராந்திய மோதல், அது சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கும் பேரழிவுகரமானதாக இருக்கும்' என்று எச்சரித்தார். 

காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை மற்றும் ஈரானுக்கு எதிரான அதன் இராணுவ விரிவாக்கத்தை மேலும் ஆமோதிக்கும் வகையில், பாலஸ்தீனத்தை ஐக்கிய நாடுகள் சபையின் முழு உறுப்பு நாடாக ஆக்குவதற்கான ஐ.நா பாதுகாப்பு சபையில் ஒரு தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்தது. 

அபத்தமாக, அமெரிக்கா 'இரண்டு-அரசு தீர்வு' என்றழைக்கப்படுவதற்கு அதன் ஆதரவை பிரகடனப்படுத்திக் கொண்டே இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. ஒரு அறிக்கையில், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் வூட், 'இரு நாடுகளின் தீர்வுக்கான வாய்ப்பைக் குலைக்கும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து எதிர்க்கும். காஸா பயங்கரவாதத்திற்கான தளமாக இருக்க முடியாது என்று பல மாதங்களாக வெளியுறவுத்துறை செயலர் பிளிங்கன் வலியுறுத்தி வரும் கொள்கைகளை மீறும் எந்த நடவடிக்கையும் இதில் அடங்கும்,' என்று குறிப்பிட்டார். 

இதற்கு பதிலளித்து வெளியிட்ட ஒரு அறிக்கையில், பாலஸ்தீனிய ஜனாதிபதி இது 'நியாயமற்றது, ஒழுக்கக்கேடானது மற்றும் நீதியற்றது' என்று விவரித்து அமெரிக்காவின் நடவடிக்கையை கண்டித்தார். அந்த அறிக்கை பின்வருமாறு குறிப்பிடுகிறது: 'இந்த ஆக்ரோஷமான அமெரிக்க வீட்டோ அதிகாரம் அமெரிக்க கொள்கையின் முரண்பாடுகளை வெளிப்படுத்துகிறது, அது ஒருபுறம், இரு-அரசு தீர்வை ஆதரிப்பதாகக் கூறுகிறது, அதேவேளையில் பாலஸ்தீனம் மற்றும் அதன் சட்டபூர்வமான உரிமைகளுக்கு எதிராக பாதுகாப்பு சபையில் ரத்து அதிகாரத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் இந்த தீர்வை நடைமுறைப்படுத்துவதில் இருந்து சர்வதேச நிறுவனத்தை அது தடுக்கிறது.' 

'பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையிலான சமாதானத்திற்கான வாய்ப்புகளை இது எவ்வாறு சேதப்படுத்தும்? இந்த அங்கீகாரமும் இந்த உறுப்பினர் தகுதியும் எப்படி சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் தீங்கு விளைவிக்கும்?' என்று பாலஸ்தீன அதிபரின் சிறப்புத் தூதர் ஜியாத் அபு அம்ர் கேட்டார்.

பைடென் நிர்வாகம் ரஷ்யா மற்றும் சீனாவை இலக்காகக் கொண்ட ஒரு உலகளாவிய போரின் பாகமாக ஈரானுடன் அதன் தீவிரமடைந்து வரும் மோதலை அதிகரித்தளவில் வடிவமைத்து வருகிறது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வெளியிடப்பட்ட ஒரு தலையங்கத்தில், பைடென் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான மோதல்களுக்கு இடையிலான ஒரு சமநிலையை வரைந்தார். 'உக்ரேனும் இஸ்ரேலும் இந்த தாக்குதல்களுக்கு எதிராக தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன மற்றும் அவற்றின் குடிமக்களைப் பாதுகாக்கின்றன. இருவரும் அமெரிக்காவின் முக்கிய உதவியுடன் அதைச் செய்தனர்'  என்று அவர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், 'ஆனால் அவ்விரு நாடுகளுமே அவற்றின் சொந்த இறையாண்மையை திறம்பட பாதுகாக்க முடியும் என்றாலும், அதைச் செய்வதற்கு அவை ஆயுதங்கள் உட்பட அமெரிக்க உதவியைச் சார்ந்துள்ளன. இது ஒரு முக்கியமான தருணம்” என்று குறிப்பிட்டார்.

மேலும், 'விளாடிமீர் புட்டின் அவரது நண்பர்களின் உதவியுடன் அவரது தாக்குதலை அதிகரித்து வருகிறார். பாதுகாப்பு உற்பத்திக்கு இன்றியமையாத நுண்மின்னணுவியல் மற்றும் பிற உபகரணங்களை சீனா ரஷ்யாவுக்கு வழங்கி வருகிறது. ஈரான் நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்களை அனுப்புகிறது, வடகொரியா பீரங்கிகள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வழங்கி வருகிறது” என்று அவர் அறிவித்தார்,

அவர் ஒரு அச்சுறுத்தலை விடுத்து நிறைவு செய்தார்: ''ஒருவர் மீதான தாக்குதல் என்பது அனைவர் மீதான தாக்குதல்' என்று அர்த்தமாகும், திரு. புட்டின் ஒரு நேட்டோ கூட்டாளி மீது படையெடுத்தால், செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர் நமது நேட்டோ கூட்டாளிகள் எங்களுக்கு செய்ததைப் போல, நாங்கள் அவர்களுக்கு உதவ வருவோம்.' 

மத்திய கிழக்கில் மேலாதிக்கம் செலுத்துவதற்கான அதன் முயற்சிகளின் இன்றியமையாத பாகமாக காஸா இனப்படுகொலையை அமெரிக்கா ஆதரிப்பதற்கான நியாயப்படுத்தலாக இந்த பார்வை உள்ளது. பாரிய பஞ்சம் மற்றும் தொடர்ச்சியான குண்டுவீச்சுக்கு மத்தியில், காஸாவில் மனிதாபிமான நிலைமை மோசமாக உள்ளது. 

இதுகுறித்து ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “காஸாவில், ஆறரை மாத இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் மனிதாபிமான நரகத்தை உருவாக்கியுள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு மில்லியன் பாலஸ்தீனியர்கள் மரணம், அழிவு மற்றும் முக்கிய மனிதாபிமான உதவி மறுப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் இப்போது பட்டினியால் இறக்கும் அபாயத்தில் இருக்கின்றனர். ரஃபாவில் ஒரு இஸ்ரேலிய தாக்குதல் நடவடிக்கை இந்த மனிதாபிமான பேரழிவை மேலும் மோசமாக்கும்.” 

அவர் தொடர்ந்து கூறுகையில், “நான் பொதுச் செயலாளரானதிலிருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகப்பெரியது மற்றும் முன்னெப்போதும் இல்லாத வேகத்திலும் அளவிலும் உள்ளது. யுனிசெப் தகவல்படி, 13,900 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய குழந்தைகள் தீவிரமான, பெரும்பாலும் கண்மூடித்தனமான தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது” என்று தெரிவித்தார்.

இந்த நிலைமைகளின் கீழ், ரபா மீது இஸ்ரேலின் திட்டமிட்ட தாக்குதலுக்கு வெளிப்படையான ஒப்புதலை நோக்கி அமெரிக்கா நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளங்கள் உள்ளன. 

கடந்த வியாழனன்று, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இஸ்ரேலிய அதிகாரிகளை சந்தித்து ரஃபா தாக்குதல் குறித்து விவாதித்தார். கூட்டத்தின் உத்தியோகபூர்வ குறிப்புக்கள் குறிப்பிட்டதாவது: 'ரஃபாவில் ஹமாஸ் தோற்கடிக்கப்படுவதைக் காண வேண்டும் என்ற பொது இலக்கில் இரு தரப்பினரும் உடன்பட்டனர். அமெரிக்க பங்கேற்பாளர்கள் ரஃபாவில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து தங்கள் கவலைகளை வெளிப்படுத்தினர், மேலும் இஸ்ரேலிய பங்கேற்பாளர்கள் இந்த கவலைகளை கணக்கில் எடுத்துக்கொள்ள ஒப்புக்கொண்டனர்.' 

வியாழனன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பென்டகன் செய்தித் தொடர்பாளர் பாட் ரைடர் 'இஸ்ரேல் ஹமாஸைப் பின்தொடர வேண்டியதன் அவசியத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஹமாஸை ஒரு அச்சுறுத்தலாக கருதி அகற்ற அல்லது தோற்கடிக்க வேண்டும்' என்று அறிவித்தார்.

இதற்கிடையில், காஸா இனப்படுகொலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 33,970 ஐ எட்டியுள்ளது, மேலும் 76,770 பேர் காயமடைந்துள்ளனர் என்று காஸாவின் சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

Loading