சியோனிசத்தின் தர்க்கம்: தேசியவாதக் கட்டுக்கதையிலிருந்து காஸா இனப்படுகொலை வரை என்னும் நூலின் தமிழ்ப் பதிப்பு

டேவிட் நோர்த்தின் சியோனிசத்தின் தர்க்கம்: தேசியவாதக் கட்டுக்கதையிலிருந்து காஸா இனப்படுகொலை வரை என்னும் புத்தகத்தின் இணையத்தளத் தமிழ்ப் பதிப்பானது எமது வலைத்தளத்தில் வாசிப்பதற்கும் பதிவிறக்கம் செய்வதற்கும் ஏற்ப இங்கே புத்தகமாகவும் (pdf) மின்நூலாகவும் (ePub) வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.

இஸ்ரேலில் பாசிசவாத நெத்தன்யாகு ஆட்சியால், பாலஸ்தீன மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள ஏகாதிபத்தியத்தின் ஆதரவிலான இனப்படுகொலையானது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலைமையில், சியோனிசத்தின் வரலாற்று வேர்கள் மற்றும் அதன் பிற்போக்குத்தனமான சித்தாந்த அடித்தளங்கள் குறித்த மிக முக்கியமான ஆய்வை, டேவிட் நோர்த் வழங்கிய நான்கு தொடர் விரிவுரைகள் பிரதிநிதித்துவம் செய்கின்றன. அத்தோடு, அதன் நிறைவுப் பகுதியில் துருக்கிய மொழிப் பதிப்பான லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும் என்னும் நூலை நோர்த் வெளியிட்டு உரையாற்றிய கருத்துரையும் இந்தத் தமிழ்ப் பதிப்பில் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளத் தமிழ்ப் பதிப்பு புத்தகத்தை வெளியிடுவதை அறிவிப்பதில் உலக சோசலிச வலைத் தளம் மகிழ்ச்சியடைகிறது.

டேவிட் நோர்த், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு இரண்டிற்கும் தலைவராவார். அரை நூற்றாண்டுக்கும் மேலாக சர்வதேச சோசலிச இயக்கத்தில் ஒரு முன்னணி பாத்திரத்தை அவர் வகித்து வருகிறார்.

அக்டோபர் 24, 2023 அன்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட நோர்த்தின் முதல் விரிவுரையானது, காஸாவுக்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதலை, பாலஸ்தீன மக்கள் மீதான சியோனிச ஒடுக்குமுறையின் உள்ளடக்கத்தில் வைத்து ஆராய்ந்துள்ளார்.

நவம்பர் 18, 2023 அன்று லண்டன் பல்கலைக்கழகத்தின் பிர்க்பெக்கில் வழங்கப்பட்ட இரண்டாவது விரிவுரையானது, சியோனிச அரசியல் மற்றும் சித்தாந்தத்திற்கு சோசலிச எதிர்ப்பின் 19 ஆம் நூற்றாண்டின் வரலாற்றை மதிப்பாய்வு செய்துள்ளார்.

டிசம்பர் 14, 2023 அன்று பேர்லினின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட மூன்றாவது விரிவுரையில், நோர்த், சியோனிசத்திற்கான எதிர்ப்பானது “யூத-எதிர்ப்பு” என்ற ஜேர்மன் அரசாங்கத்தின் கூற்றை உலர்ந்து உதிரச் செய்யும் அடிப்படையில் விமர்சனத்திற்கு உட்படுத்தினார்.

பேர்லினில் வழங்கிய அவரது இந்த மூன்றாவது விரிவுரையில் பின்வருமாறு அறிவித்தார்: அதாவது “நடந்து கொண்டிருக்கும் போர், அதன் அத்தனை கொடூரங்களையும் மீறி, ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் பங்களிப்பைச் செய்துள்ளது. இளைஞர்களை விழிப்படையச் செய்துள்ளது. அது உலகின் கண்களைத் திறந்துள்ளது. அது சியோனிச ஆட்சியையும் அதன் ஏகாதிபத்திய உடந்தையாளர்களையும் அவர்கள் குற்றவாளிகளாக இருப்பதை அம்பலப்படுத்தியுள்ளது. இது உலகெங்கிலும் வீசிக் கொண்டிருக்கும் மற்றும் இந்த இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள் மீது வீசும் சீற்றத்தின் ஒரு பேரலை இந்த இயக்கத்திற்கு வந்துள்ளது.”

மார்ச் 12, 2024 அன்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட நான்காவது விரிவுரையில், நோர்த், வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இஸ்ரேலியத் தூதரகத்திற்கு முன்னால் அமெரிக்க விமானப்படை அங்கத்தவரான ஆரோன் புஷ்னெல் “பாலஸ்தீனத்தை விடுதலை செய்” என்று கோஷமிட்டு தன்னைத்தானே தீக்குளித்துக் கொண்டு மரணித்த நிகழ்வு குறித்த அரசியல் படிப்பினைகளை வழங்கினார்.

நோர்த், அந்த விரிவுரையை இவ்வாறு நிறைவு செய்திருந்தார்:

நாம் மாபெரும் அரசியல் கேள்விகளையும் சவால்களையும் எதிர்கொண்டுள்ளோம். அவற்றைத் தீர்க்க முடியும். ஆனால் அவற்றைத் தீர்ப்பதற்கு, நாம் ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டும். இந்தக் கட்சியானது தொழிலாள வர்க்கத்தின் பெருந்திரளான வெகுஜனங்களின் அர்ப்பணிப்பை வென்றெடுக்க வேண்டும். ஆரோன் புஷ்னெல்லின் மரணத்திலிருந்தும், நமது காலத்தின் நெருக்கடியைப் புரிந்துகொள்வதிலிருந்தும் நாம் பெற வேண்டிய முதன்மையானதும், அடிப்படையானதுமான படிப்பினை இதுவேயாகும் .

இந்தப் பதிப்பில் வழங்கப்பட்டுள்ள விரிவுரைகள், சியோனிசத்தின் பிற்போக்குத்தனமான சித்தாந்த, தேசியவாத கட்டுக்கதை மற்றும் அரசியல் அடித்தளங்கள் மீதான ஒரு ஊடுருவும் பகுப்பாய்வு மட்டுமல்ல. அவைகள் வறுமையினாலும் போரினாலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களை பாதுகாக்க தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச நடவடிக்கைக்கான ஒரு சக்திவாய்ந்த அழைப்பும் ஆகும்.

இப்போது ஒரு பெரும் அரசியல் தீவிரமயமாக்கல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்திற்குள் அதன் இன்றியமையாத பணிகளைக் குறித்த புரிதலை வளர்க்க உதவும் ஒரு முன்னோக்கையும் வேலைத்திட்டத்தையும் வழங்குவதே இந்த வெளியீட்டின் முதன்மையான பணியாகும்.

ஆகவே, உலகெங்கிலும் உள்ள உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்கள் அனைவரையும் இதை வாசித்து உள்ளீர்த்துக் கொள்ளுமாறு நாங்கள் ஊக்குவிப்பதோடு, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச அரசியல் நடவடிக்கைகளில் உங்களை இணைத்துக் கொள்வதற்கு எங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

Loading