முன்னோக்கு

காஸா இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்கும் தொழில்நுட்ப ஜாம்பவான் கூகுளை எதிர்த்துவரும் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வதை எதிர்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலை மற்றும் பாலஸ்தீனப் பகுதியை ஆக்கிரமிப்பதற்கு உடந்தையாக இருக்கும் தொழில்நுட்ப ஜாம்பவானின் உதவியை நிறுத்தக் கோரி, நியூயோர்க் மற்றும் கலிபோர்னியாவில் உள்ளிருப்புப் போராட்டங்களில் ஈடுபட்டதற்காக, புதன்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்ட 28 கூகுள் தொழிலாளர்களை உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்துமாறு உலக சோசலிச வலைத் தளம் அழைப்பு விடுத்துள்ளது. கூகுள் அலுவலகங்களை அமைதியான முறையில் ஆக்கிரமித்தபோது, செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்ட ஒன்பது தொழிலாளர்கள் மீதான குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட வேண்டும்.

இந்த பணிநீக்கங்களைத் தொடர்ந்து நியூயோர்க்கில் பாலஸ்தீனிய ஆதரவு மற்றும் இனப்படுகொலை எதிர்ப்பு போராட்டங்கள் மீது புதிய ஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. காஸாவில் பாலஸ்தீனியர்கள் பெருமளவில் படுகொலை செய்யப்படுவதை எதிர்த்து பல்கலைக்கழகத்தில் முகாமிட்டிருந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்ய கொலம்பியா பல்கலைக்கழகம் பொலிசுக்கு அழைப்பு விடுத்தது.

நியூயார்க் நகரத்தில் உள்ள கூகுளின் அலுவலகங்கள் [AP Photo/Mark Lennihan]

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜோசப் கிஷோர் வியாழனன்று கூகுள் ஊழியர்களை மீண்டும் பணியமர்த்துவதை ஆதரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். அத்துடன், இஸ்ரேலின் போர் இயந்திரத்துடன் கூகுள் தனது ஒத்துழைப்பை நிறுத்த வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையையும் கிஷோர் ஆதரித்தார்.

கூகுள் “அமெரிக்க அரசு எந்திரம் மற்றும் இராணுவ-தொழில்துறை வளாகத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது” என்று அவர் கூறினார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

கூகுள் நிறுவனம் இணையத்தை தணிக்கை செய்வதற்கான அரச ஆதரவு பிரச்சாரத்தில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளதோடு, போர் மற்றும் சமத்துவமின்மைக்கு எதிரான இடதுசாரிகள் மீது கவனம் செலுத்துகிறது.

இஸ்ரேலிய அரசுடனான கூகுளின் தொடர்பு, அமெரிக்க ஆளும் வர்க்கம் மற்றும் அதன் இரு கட்சிகளான ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியினரின் ஆதரவின்றி இனப்படுகொலையை நடத்த முடியாது என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் உட்பட இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் உள்ளிட்ட கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளை வழங்கும் ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தமான Project Nimbus இன் வேலையை, நிறுவனம் கைவிட வேண்டும் என்று கூகுள் ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். ஒரு கசிந்த ஒப்பந்தம், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஆலோசனை சேவைகளுக்காக கூகுள் $1 மில்லியன் கட்டணம் வசூலித்ததை காட்டுகிறது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், “இனி லாபத்திற்காக இனப்படுகொலை வேண்டாம்” மற்றும் “நிறவெறிக்கு மேகம் இல்லை” என்று கோரும் பதாகைகளை ஏந்தியிருந்தனர். அவர்களின் துணிச்சலான நிலைப்பாடு விரைவில் அடக்குமுறைக்கு ஆளானது. அத்துமீறி நுழைந்ததாகக் கூறி, ஒன்பது போராட்ட ஊழியர்களை அலுவலகங்களில் இருந்து அகற்றுமாறு நிறுவனம் பொலிசுக்கு அழைப்பு விடுத்தது. மேலும், அவர்களையும் மேலும் 19 எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட  தொழிலாளர்களையும் நிறுவனம் பணிநீக்கம் செய்தது.

கூகுளின் உலகளாவிய பாதுகாப்புத் தலைவர் கிறிஸ் ராக்கோவ், இனப்படுகொலையில் கூகுளின் ஈடுபாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் எவரையும் அச்சுறுத்தும் வகையில், அனைத்து ஊழியர்களுக்கும் கடிதம் அனுப்புயுள்ளார். “விசாரணையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இருபத்தெட்டு ஊழியர்களின் வேலையை இன்று நாங்கள் நிறுத்தியுள்ளோம். நாங்கள் தொடர்ந்து விசாரணை செய்து தேவைக்கேற்ப நடவடிக்கை எடுப்போம்,” என்று ராகோவ் அறிவித்தார்.

அவர் அனுப்பிய கடிதத்தில் பின்வரும் குண்டர் அச்சுறுத்தலையும் சேர்த்தார்: “எங்கள் கொள்கைகளை மீறும் நடத்தையை நாங்கள் கவனிக்காமல் விடுவோம் என்று ஆசைப்படும் சிலரில் நீங்களும் ஒருவராக இருந்தால், மீண்டும் சிந்தியுங்கள்”. 

“இனவெறிக்கு தொழில்நுட்பம் இல்லை” என்ற பிரச்சாரத்தில் பங்கேற்கும் கூகுள் தொழிலாளர்களின் அறிக்கையானது, குறுகிய பணிநீக்கங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, நடவடிக்கை எடுத்தவர்கள் தங்கள் உரிமைகளுக்கு உட்பட்டவர்கள் என்பதை வலியுறுத்தியது. “எங்கள் உழைப்பின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்க கூகுள் தொழிலாளர்களுக்கு உரிமை உண்டு. ஆதலால், இந்த பணிநீக்கங்களுக்கு தெளிவாக பதிலடி கொடுக்கப்பட்டது” என்று அவர்கள் எழுதினர்.

இந்த அறிக்கையானது, தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் கூகுள் கிளவுட்டின் இயக்குனர் தோமஸ் குரியன் ஆகியோரை “இனப்படுகொலையில் இலாபம் பெறுபவர்கள்” என்று கண்டித்துள்ளது.

அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் கீழ், கூகுள் உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. கூகிளின் 130,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுமார் 50 நாடுகளில் உள்ள அலுவலகங்களில் இருந்து செயல்பாடுகளை மேற்பார்வையிடுகின்றனர். இது கூகுளின் எங்கும் நிறைந்த தேடுபொறி, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் நுகர்வோர் மின்னணுவியல் உட்பட, உலகப் பொருளாதாரத்தின் செயல்பாட்டிற்கு முக்கியமான துறைகளின் வரிசையை உள்ளடக்கியிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் உட்பட எதிர்காலத்தில் முக்கியமானதாக இருக்கும் என்று உறுதியளிக்கும் முன்னேற்றங்களில் கூகுள் நிறுவனம் முன்னணியில் உள்ளது.

கடந்த கால் நூற்றாண்டில் டிரில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள உலகளாவிய இராட்சத நிறுவனமாக வளர்ந்துள்ள நிலையில், கூகுள் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் நட்பு நாடுகளின் செயல்பாட்டின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது. சிக்கலான அமெரிக்க இராணுவ-தொழில்துறை மற்றும் உலகிலுள்ள பிற இராணுவங்களுக்கு அத்தியாவசிய தொழில்நுட்ப சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. 2022 இன் பிற்பகுதியில், அமேசான், ஆரக்கிள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவற்றுடன் இணைந்து பென்டகனிடமிருந்து $9 பில்லியன் கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்தை Google வென்றது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) காஸாவில் இனப்படுகொலை மற்றும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்துகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது, IDF இன் உளவு அமைப்பான யூனிட் 8200 ஆல் உருவாக்கப்பட்டது. ஆறு மாதங்களில், இஸ்ரேலிய இராணுவம் இந்த குறுகிய பிரதேசத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் பாதிக்கும் மேற்பட்டவற்றை சேதப்படுத்தியது அல்லது அழித்தது மற்றும் குறைந்தது 40,000 பாலஸ்தீனியர்களைக் கொன்றது, அவர்களில் பாதிப் பேர்கள் குழந்தைகள் ஆவர். யூனிட் 8200 இல், குறைந்தபட்சம் 99 படையினர்கள் 2022 ஆம் ஆண்டு வரை கூகுளில் பணியாற்றி வருகின்றனர்.

இதற்கிடையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கைகளில் அதன் ஈடுபாட்டிற்கு நிறுவனத்திற்குள் இருந்து தீவிர எதிர்ப்பு அதிகரித்து வருகிறது:

ட்ரோன் தாக்குதல்களுக்கான இலக்குகளைத் தீர்மானிக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திய Project Maven மூலம், அமெரிக்க இராணுவத்தின் சட்டவிரோத ட்ரோன் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்தக் கோரி 2018 இல் 3,000 க்கும் மேற்பட்ட கூகுள் ஊழியர்கள் நிறுவன நிர்வாகிகளுக்கு ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டனர்.

2019 ஆம் ஆண்டில், கிட்டத்தட்ட 1,600 கூகுள் ஊழியர்கள், “மனித  உரிமை மீறல்களில் ஈடுபடுவதை நிறுத்தும் வரை” புலம்பெயர்ந்தோருக்கு எதிரான அடக்குமுறைகளுக்குப் பொறுப்பான அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைக் காவல் மற்றும் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்தின் செயல்பாடுகளை ஆதரிக்க மாட்டோம் என்று உறுதியளிக்கக் கோரி நிறுவன நிர்வாகிகளிடம் ஒரு மனுவில் கையெழுத்திட்டனர். இதற்கு பதிலடியாக, போராட்டத்தை ஒழுங்கமைக்க உதவிய நான்கு தொழிலாளர்களை கூகுள் நீக்கியது.

இந்த ஆண்டு மார்ச் மாதம், நியூயோர்க்கில் ஆண்டுதோறும் நடைபெறும் இஸ்ரேலிய மாநாட்டின்போது, தொழில்நுட்பத்தை மனதில் கொள்ளுங்கள் என்ற நிம்பஸ் திட்டத்துக்கு எதிராக, எதிர்ப்பு தெரிவித்ததற்காக எடி ஹாட்ஃபீல்ட் என்ற மென்பொருள் பொறியாளரை கூகுள் நீக்கியது. “இஸ்ரேலிய இனவெறி மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வன்முறையில் லாபம் ஈட்டுவதை நிறுத்து” என்ற தலைப்பின் கீழ், 600க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கையெழுத்திட்ட ஒரு கடிதம், இந்த மாநாட்டிற்கு கூகுளின் நிதியுதவியைக் கண்டித்தது.

பணிநீக்கம் செய்யப்பட்ட 28 கூகுள் ஊழியர்களைப் பாதுகாக்க அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் அணிதிரள வேண்டும். பைடென் நிர்வாகம் மற்றும் பிற ஏகாதிபத்திய அரசாங்கங்களின் முழு ஆதரவுடன், இஸ்ரேல் அக்டோபரில் அதன் தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து, மில்லியன் கணக்கான மக்கள் போர்நிறுத்தம் கோரி உலகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். அதிகாரங்களுக்கான முறையீடுகள், பொலிஸ் அடக்குமுறை மற்றும் இஸ்ரேலிய இராணுவத்தின் இனப்படுகொலை நடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள் “யூத விரோதிகள்” என்ற கோரமான அவதூறுகளை எதிர்கொள்கின்றனர். இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பை அடக்கி மௌனமாக்குவதற்கான இந்த பரந்த முயற்சியின் ஒரு பகுதியே “இனவெறிக்கு தொழில்நுட்பம் இல்லை” என்பதில் ஈடுபட்டுள்ள கூகுள் தொழிலாளர்கள் மீதான தாக்குதலாகும்.

காஸா இனப்படுகொலையில் கூகுளின் உடந்தைக்கு எதிரான போராட்டம் மற்றும் ஜனாதிபதி ஜோ பைடெனின் முழு ஆதரவுடன், ஈரானுடனான பரந்த பிராந்தியப் போராக விரிவடையும் அச்சுறுத்தலைக் கொடுக்கும் இஸ்ரேலிய இராணுவத்தின் இரத்தக்களரி நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏகாதிபத்தியப் போர் மற்றும் அதன் வேரான உலகளாவிய முதலாளித்துவ அமைப்புக்கு எதிராக, ஒரு சக்திவாய்ந்த போராட்டத்துக்கு சர்வதேச இயக்கத்தில் தொழிலாளர்களை அணிதிரட்ட, பரந்த தொழிலாள வர்க்கத்தில் உள்ள தங்கள் சகோதர சகோதரிகளை நோக்கி தொழில்நுட்பத் தொழிலாளர்கள் திரும்ப வேண்டும்.

Loading