உலக வங்கியின் அறிக்கை இலங்கையின் வறுமை மற்றும் சமத்துவமின்மையில் கடுமையான அதிகரிப்புகளை காட்டுகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான உலக வங்கியின் அறிக்கை, கடந்த நான்கு வருடங்களில், வறுமை அதிகரித்துள்ளதை வெளிப்படுத்துகின்றது. வறுமை 2019 இல் 11 சதவீதத்திலிருந்து 2024 இல் கிட்டத்தட்ட 26 சதவீதமாக அதிகரித்துள்ளது. இலங்கையின் சனத்தொகையில், கால் பகுதிக்கும் அதிகமானோர் வறுமையில் வாழ்கின்றனர், என்பதே இதன் பொருளாகும்.

இலங்கையின், கொழும்பில் உள்ள குடிசை வீட்டில் ஒரு தந்தையும் மகனும் உணவை பகிர்ந்து கொள்கின்றனர் [AP Photo/Eranga Jayawardena]

ஏப்ரல் 2 அன்று வெளியிடப்பட்ட உலக வங்கியின் பின்னூட்டம்: மீட்புக்கான பாலங்கள் என்ற அறிக்கை, 2022 இல் நாட்டை மூழ்கடித்த முன்னெப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடி, மக்களை எவ்வாறு பாதித்தது என்பதை சுருக்கமாக கலந்துரையாடுகிறது. எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்டு விக்கிரமசிங்க அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் கொடூரமான சிக்கனத் திட்டம் “பொருளாதார மீட்சியை” அடைவதற்கு அவசியம் என்று அது வலியுறுத்துகிறது.

நடந்து கொண்டிருக்கும், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ போர் காரணமாகவும் இலங்கையின் நீண்டகாலப் பொருளாதார பலவீனங்கள் மற்றும் அதிக வெளிநாட்டுக் கடன் நெருக்கடியும் மிகவும் மோசமடைந்தன.

இந்த நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் மேற்கொண்ட முயற்சிகள், 2022 ஏப்ரல்-ஜூலை காலத்தில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளும் பங்குபற்றிய எதிர்ப்புக்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் வெடித்ததைக் கண்டது. இந்த வெகுஜன இயக்கத்தை எதிர்கொண்ட அரசாங்கம் சரிந்ததுடன், இராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி இராஜினாமா செய்தார்.

இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்த தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியும் இந்த எழுச்சியைக் காட்டிக் கொடுத்தமை, ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக உயர்த்துவதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கும் வழி வகுத்தது.

உலக வங்கி அறிக்கை குறிப்பிடுகிறது: “அதிக பணவீக்கம், ஊதிய இழப்புகள், வருமான வீழ்ச்சி, வேலை வாய்ப்பின்மை மற்றும் புலம்பெயர் வருமான வீழ்ச்சி போன்றவற்றால் குடும்பங்களின் வாங்கும் திறன் சரிந்து வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளன.”

இலங்கையில் உள்ள, ஏறத்தாழ 60 வீதமான குடும்பங்களின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், பலர் உணவுப் பாதுகாப்பின்மை, ஊட்டச் சத்து குறைபாடு மற்றும் வளர்ச்சிக் குறைபாடு போன்றவற்றை எதிர்கொள்வதாகவும், அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. எவ்வாறாயினும், இந்த பரந்தளவிலான சமூக அழிவு மற்றும் துயரத்தின் நீடித்ததன்மையானது, சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சமூகத் தாக்குதல்களின் நேரடி விளைவாகும்.

நுண், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பரவலான மூடல்களால் இலங்கையில் உள்ள தொழிலாளர் சந்தைப் போக்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 2023 இன் மூன்றாம் காலாண்டில் நகர்ப்புறத் துறையில் தொழிலாளர் பங்கேற்பு 2019ல் 52.3 சதவீதத்தில் இருந்து 45.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2023 இன் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டிற்கு இடையில் இளைஞர்களின் வேலையின்மை, குறிப்பாக முதிர்ந்த இளைஞர்களின் வேலையின்மை (25-29 வயதுடையவர்கள்) 17.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அறிக்கையின்படி: “புதிய வருவாய் நடவடிக்கைகளை செயல்படுத்துவதானது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பங்காக மதிப்பிடப்பட்ட வருவாயை, 2022 இல் 8.4 சதவீதத்திலிருந்து 2023 இல் 11 சதவீதமாக அதிகரித்தது.”

ஜனாதிபதி விக்கிரமசிங்க மற்றும் அவரது அரசாங்கத்தால் ஈவிரக்கமின்றி திணிக்கப்படும் இந்த “வருவாய் நடவடிக்கைகள்”, ஏறக்குறைய அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான 18வீத பெறுமதி சேர் வரி மூலம், அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிப்பு; புதிய இறக்குமதி வரிகள் மற்றும் விசேட வரிகள்; மற்றும் தொழிலாளர்கள் மீதான வருமான வரியை அதிகரிப்பதையும் உள்ளடக்கியது. அரச மானியங்களிலான வெட்டுக்கள் மின்சாரம், எரிபொருள் மற்றும் தண்ணீருக்கான அபரிமிதமான கட்டண அதிகரிப்புகளையும், உரங்களுக்கான விலை அதிகரிப்பையும் தூண்டிவிட்டன.

அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கும், வணிகமயமாக்கும் அல்லது மூடும் நடவடிக்கையிலும், இலட்சக் கணக்கான வேலைகளை அழிக்கும் நடவடிக்கையிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இலங்கையின் ஏற்கனவே பாழடைந்த பொது சுகாதாரம் மற்றும் கல்வி முறைமைகள் அரசாங்க நிதி வெட்டுக்களால் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன.

உலக வங்கி அறிக்கை கூறுவது போல்: “விலை அதிகரிப்புக் காரணமாக, 17.5 சதவீத குடும்பங்கள் தங்கள் கல்விச் செலவுகளை மட்டுப்படுத்திவிட்டதாக குறிப்பிடுகின்றார்கள் (கற்றல் உபகரணங்கள் மற்றும் சீருடைகள் உட்பட), மேலும் பெரும்பாலான குடும்பங்கள் நிதிப் பற்றாக்குறை காரணமாக, 2022 மார்ச் முதல் தங்கள் சுகாதார சிகிச்சை முறைகளை மாற்றிக்கொண்டன. .”

இலங்கை 2022 இல் எதிர்மறை 7.3 சதவீத மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்திருந்தாலும், 2023 இல் இது எதிர்மறை 2.3 சதவீதமாகக் குறைக்கப்பட்டதாக உலக வங்கி கூறியது. இது 2024 இல் “நேர்மறையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று அது கூறியது. இருப்பினும், இந்த ஆண்டு “முன்னேற்றம்” என்பது இன்னமும் உண்மையான வளர்ச்சியை அர்த்தப்படுத்தாது.

ஏப்ரல் 2 அன்று, மாலைத்தீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் Faris Hadad-Zervos இலங்கைப் பொருளாதாரம் “மீட்சிக்கான பாதையில் உள்ளது” என்று அறிவித்தார். எவ்வாறாயினும், அதே நேரம், “ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீது பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தும் தாக்கத்தைத் தணிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்கு” அரசாங்கம் உழைக்கும் மக்கள் மீது மேற்கொள்ளும் சமூகத் தாக்குதல்களைத் தொடர்வது அவசியமாகின்றது என்றும் அவர் கூறினார்.

“பெரிய பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கும் மறுசீரமைப்புகளை பராமரிக்க” மற்றும் “தனியார் முதலீடு மற்றும் மூலதன வரவுகளைத் தூண்டுவதற்கான மறுசீமைப்புகளை விரைவுபடுத்துவதற்கான” இரு முனை மூலோபாயம் தொடர வேண்டும் என்று அவர் கூறினார். “பொருளாதார சீர்திருத்தங்கள்” என்று அழைக்கப்படுபவை, உழைக்கும் மக்களின் சமூக நிலையின் மீது முன்னெப்போதும் இல்லாத பெரிய தாக்குதலைக் குறிக்கின்றன.

மார்ச் 29 அன்று, இலங்கையின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (DCS) விடுத்த அறிக்கை, 2019 ஆம் ஆண்டிலிருந்து, இலங்கையில் வாழும் ஒரு தனி நபருக்கான குறைந்தபட்ச மாதாந்தச் செலவு 144 வீதத்தால் அதிகரித்துள்ளதாகக் கூறியது. அடிப்படை மாதாந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான தொகையின் அடிப்படையில் இந்தத் தொகை கணக்கிடப்படுகிறது. 2019 இல், ஒரு தனிநபரின் அடிப்படைத் தேவைக்கான செலவு 6,966 ரூபாய் ($23) ஆக இருந்தது. இந்த பட்டினிக்கு நெருக்காமன தொகையானது, இப்போது மாதத்திற்கு 17,014 ரூபாயாக உயர்ந்துள்ளது.

உண்மையில், தரங்குறைந்த சோறு மற்றும் கறி உள்ளடக்கிய ஒரு உணவுப் பார்சலை தெருவோரக் கடைகளில் வெறும் 250 ரூபாவுக்கு வாங்கும்போது, ஒரு தனிநபர் ஒரு நாளைக்கு 560 ரூபாவுடன் வாழ முடியும் என அது கருதுகின்றது. புள்ளிவிபரத் திணைக்களத்தின் வறுமைக்கோடு என்று அழைக்கப்படுவது, ஏனைய அத்தியாவசிய தேவைகளை உள்ளடக்குவதில்லை.

“(43 சதவீத) குடும்பங்கள் வாழ்வாதாரம் சார்ந்து சமாளிக்கும் உத்திகளைக் கடைப்பிடிக்கும் அதேநேரம், இன்னும் 42 சதவீதம் பேர் உணவில் சமாளிப்புக்களை மேற்கொள்ளும் உத்திகளைக் கடைப்பிடிக்கின்றமை குறிப்பிடத்தக்க கவலைக்குரியதாகும்,” என உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான 2024 பெப்ரவரி உள்நாட்டு சுருக்க அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் சனத்தொகையில் பாதிப் பேர் தங்களின் அடிப்படை உணவுத் தேவைகளைப் பாதுகாக்க போராடுகின்றனர்.

தனிநபர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்த செலவினம் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அரச துறை ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை அதிகரிக்க அரசாங்கம் மறுத்துள்ளது. மாறாக, ஜனவரியில் 5,000 ரூபாவும் இந்த மாதம் 5,000 ரூபாவுமாக ஒரு அற்பகொடுப்பனவை, அது வழங்கியுள்ளது. மார்ச் 27 அன்று, இலங்கையின் அமைச்சரவையானது, பிரதானமாக தனியார் துறை ஊழியர்களை உள்ளடக்கிய தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை மாதாந்தம் வெறும் 5,000 ரூபாவால் அதாவது, 17,500 ரூபாவாக உயர்த்த ஒப்புக்கொண்டது.

இலங்கையின் சர்வதேச கடன் மற்றும் வட்டியை திருப்பி செலுத்துவது மற்றும் தொழிலாள வர்க்கத்திடமிருந்தும் வறுமையில் வாடும் மக்களிடமிருந்தும் அதிகபட்ச தொகையை பிழிந்து, பெருவணிகத்தினதும் சர்வதேச முதலீட்டாளர்களினதும் இலாபங்களை உயர்த்துவதுவதே, உலக வங்கியால் ஆதரிக்கப்படும் சர்வதேச நாணய நிதிய வேலைத் திட்டத்தின் முக்கிய உந்துதல் ஆகும்.

12 ஏப்ரல் 2022 அன்று இராஜபக்ஷ அரசாங்கம் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்திய நிலையில், விக்கிரமசிங்க நிர்வாகம் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் உட்பட பலதரப்பு நிதி நிறுவனங்களுக்கு 1.3 பில்லியன் டொலர் கடனைத் திருப்பிச் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது அரசாங்கம் வருடாந்த கடனை திருப்பிச் செலுத்துவதற்காக 6 பில்லியன் டொலர்களை ஒதுக்க வேண்டும் என்று விக்கிரமசிங்க முன்னர் ஒப்புக்கொண்டுள்ளார்.

விக்கிரமசிங்கவின் ஆளும் கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உட்பட எதிர்க் கட்சிகள், இப்போது திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக இழிவான சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன. இந்தக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் அனைத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சமூகத் தாக்குதல்களை தொழிலாளர் வர்க்கத்தின்மேல் சுமத்துவதில் உறுதியாக உள்ளன.

எல்லாவற்றிற்கும் மேலாக, இலாப முறைமையைப் பாதுகாக்கும் இந்த அமைப்புகளுடன் இணைந்திருந்தால் தொழிலாள வர்க்கம் தங்கள் வேலைகள், ஊதியங்கள் மற்றும் சமூக நிலைமைகளைப் பாதுகாக்க முடியாது. அதிகரித்து வரும் அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்த்துப் போராட, தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச முன்னோக்கை நோக்கி முன்னேற வேண்டும்.

இந்த முன்நோக்கில், அனைத்து வெளிநாட்டுக் கடனையும் தள்ளுபடிசெய்வது மற்றும் வங்கிகள், பெருநிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்களையும் தேசியமயமாக்கி, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் மறுஒழுங்கு செய்வதும் அடங்கும். அத்தகைய வேலைத்திட்டம், சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தின் மூலம் மட்டுமே செயல்படுத்தப்பட முடியும்.

Loading