ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல் மத்திய கிழக்கில் போரை விரிவுபடுத்துகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை, மத்திய ஈரான் அணுசக்தி நிலையங்களில் ஒன்றிற்கு அருகேயிருந்த ஒரு இராணுவத் தளத்தின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இது ஏகாதிபத்திய சக்திகளால் தூண்டிவிடப்பட்ட போரை மத்திய கிழக்கில் இன்னும் விரிவுபடுத்துகிறது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வடக்கு காஸா பகுதியில் தளபதிகள் மற்றும் படையினர்களுடன், டிசம்பர் 25, 2023. இஸ்ரேல் தனது அனைத்து இலக்குகளையும் “இறுதி வெற்றி” அடையும் வரை அதன் தாக்குதலைத் தொடரும் என்று நெதன்யாகு கூறினார். [AP Photo/Avi Ohayon/GPO]

மத்திய கிழக்கு முழுவதும் பல தசாப்தங்களாக நடந்த பினாமி மோதல்களுக்குப் பின், இஸ்ரேலும் ஈரானும் இப்பொழுது ஒருவருக்கொருவர் தங்கள் பிராந்தியத்தில் குண்டு வீச்சுக்களை பரிமாறிக் கொண்டன. இது இன்னும் கூடுதலான விரிவாக்கத்திற்கு ஒரு முன்னோடியை அமைத்துள்ளது.

ஈரானிய அல்லது இஸ்ரேலிய அதிகாரிகள் எவரும் இந்த தாக்குதல்கள் நடந்ததை ஒப்புக் கொள்ளவில்லை. இவை வியாழக்கிழமை அமெரிக்க பத்திரிகைகளுக்கு வெள்ளை மாளிகையின் பெயர் குறிப்பிட விரும்பாத வட்டாரங்களால் அறிவிக்கப்பட்டன.

வியாழக்கிழமை இரவு தாக்குதலின் முக்கியத்துவம் குறித்து கருத்துரைக்கையில், ஆக்ரோஷமான போர்-ஆதரவு வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் எழுதியது: “லெபனான், சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள அதன் பினாமி படைகள் மட்டுமல்ல, இஸ்ரேல் அதன் பிராந்தியத்திற்குள் ஆழமாக தாக்குவதற்கான இராணுவ தகைமையைக் கொண்டுள்ளது என்பது ஈரானுக்கு விடுக்கப்பட்ட ஒரு செய்தியாகும். ரஷ்யாவின் எஸ்-300 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு இருந்தபோதிலும், அணுசக்தி வசதிக்கு அருகில் உள்ள இலக்கை தாக்க முடியும் என்பதை இஸ்ரேல் நிரூபித்துள்ளது”.

நியூ யோர்க் டைம்ஸ், அதன் பங்கிற்கு, “ஒருவருக்கொருவர் பிராந்தியத்தின் மீது நேரடித் தாக்குதல்களுக்கு எதிரான தடை இப்போது இல்லாமல் போய்விட்டது. ஈரானின் அணுவாயுத முன்னேற்றங்கள் மீது ஒரு மோதல் ஏற்பட்டால், அல்லது ஈரானிய இராணுவ அதிகாரிகள் மீது இஸ்ரேலின் மற்றொரு தாக்குதல் நடந்தால், இரு தரப்பினரும் மற்றவர் மீது நேரடியாக தாக்குதல் நடத்துவதற்கான சுதந்திரத்தை உணரலாம்” என்று எழுதியது.

மேலும், “இஸ்பஹானில் ஒரு வழக்கமான இராணுவ இலக்கைத் தாக்கும் முடிவால் அனுப்பப்பட்ட சமிக்ஞை தெளிவாக இருந்தது: இஸ்ரேல் இஸ்பஹானின் வான் பாதுகாப்பு அடுக்குகளை ஊடுருவ முடியும் என்பதை நிரூபித்தது, அவற்றில் பல இஸ்பஹான் யுரேனியம் செறிவூட்டும் வசதிகளைக் கொண்ட முக்கிய தளங்களைச் சுற்றி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன” என்று கட்டுரை கூறியது.

சிரியாவில் ஈரானிய தூதரகம் மீது இஸ்ரேல் ஏப்ரல் 1 அன்று நடத்திய தாக்குதலில் ஏழு உயர்மட்ட ஈரானிய இராணுவ பிரமுகர்கள் கொல்லப்பட்டதை அடுத்து எழுந்த தீவிர அலையின் சமீபத்திய நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை தாக்குதல் இருந்தது.

ஏப்ரல் 1 இஸ்ரேலிய தாக்குதலுக்கு அமெரிக்க அதிகாரிகள் திறம்பட ஒப்புதல் அளித்தனர், ஐ.நா.வுக்கான அமெரிக்க துணை தூதர் ரோபர்ட் வூட், தாக்கப்பட்ட தூதரகம் உண்மையில் ஒரு பயங்கரவாத தளம் என்று கூறினார்.

தூதரகத்தின் மீதான தாக்குதலுக்கு பின்பு, இஸ்ரேலிய இராணுவ தளத்தின் மீதான தாக்குதலுடன் ஈரான் பதிலடி கொடுத்த பிறகு, அமெரிக்காவும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளும் ஈரானைக் கண்டித்து, தடைகளை விதித்து, இஸ்ரேலுக்கு வரம்பற்ற ஆதரவை உறுதியளித்தனர்.

அதற்கடுத்த வாரத்தில், ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலின் சாத்தியக்கூறு “ஒரு இஸ்ரேலிய முடிவு” என்பதை அமெரிக்க அதிகாரிகள் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தினர், இது நடைமுறையளவில் ஈரானைத் தாக்குவதற்கு இஸ்ரேலுக்கு ஒரு வெற்று காசோலையை வழங்கியது.

குறிப்பிடத்தக்க வகையில், ஈரான் மீதான இஸ்ரேலின் திட்டமிடப்பட்ட தாக்குதல் மற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் தஞ்சம் புகுந்துள்ள ரஃபா மீது தாக்குதல் நடத்துவதற்கான அதன் திட்டங்கள் இரண்டையும் கையாளும் அமெரிக்க-இஸ்ரேலிய உயர்மட்ட விவாதம் முடிந்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் இந்த தாக்குதல் நடந்தது.

கூட்டம் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “ரஃபாவில் ஹமாஸ் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற பொதுவான இலக்கில் இரு தரப்பினரும் உடன்பட்டனர். ரஃபாவில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க பங்கேற்பாளர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தினர், மேலும் இஸ்ரேலிய பங்கேற்பாளர்கள் இந்த கவலைகளை கணக்கில் எடுத்துக்கொள்ள உடன்பட்டனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், திரைக்குப் பின்னால், ஈரான் மீதான “வரையறுக்கப்பட்ட” இஸ்ரேலிய தாக்குதல் உண்மையில் ரஃபா மீதான முழு அளவிலான தாக்குதலுக்கு ஒரு முன்னோடியாகும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன.

Times of Israël மற்றும் Haaretz இரண்டும், The New Arab ஐ மேற்கோள் காட்டி, ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ரஃபாவை தாக்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா அங்கீகாரம் அளித்துள்ளது என்று செய்திகளை வெளியிட்டுள்ளன.

The New Arab பத்திரிகையில் வெளியான கட்டுரை, “ரஃபாவை நான்கு பகுதிகளாகப் பிரிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது, அவை அடுத்தடுத்து கைப்பற்றப்படும்” என்று கூறியது.

அத்தகைய படையெடுப்பு பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும். வியாழனன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், “காஸாவில், ஆறரை மாத இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் மனிதாபிமான நரகத்தை உருவாக்கியுள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு மில்லியன் பாலஸ்தீனியர்கள் மரணம், அழிவு மற்றும் முக்கிய மனிதாபிமான உதவி மறுப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் இப்போது பட்டினியால் இறக்கும் அபாயத்தில் இருக்கின்றனர். ரஃபாவில் ஒரு இஸ்ரேலிய தாக்குதல் நடவடிக்கை இந்த மனிதாபிமான பேரழிவை மேலும் மோசமாக்கும்” என்று கூறினார்.

அரபு செய்தித்தாள் Rai Alyoum ஐ மேற்கோள் காட்டி Haaretz கூறியது : “இந்த வாரம் எகிப்து, பிலடெல்பி சாலையின் எகிப்திய பக்கத்தில் தனது படைகளை நிலைநிறுத்தியதுடன், இடம்பெயர்ந்த காஸா மக்கள் செல்லக்கூடிய ஒரு ‘நடுநிலை மண்டலத்தை’ வரையறுத்துள்ளது. அறிக்கையின்படி, இப்பகுதி 200,000 மக்களுக்கு இடமளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது மற்றும் சேவைகள், கிளினிக்குகள் மற்றும் உணவு விநியோக மையங்களைக் கொண்டிருக்கிறது”.

இந்த அறிக்கைகள் உண்மையிலேயே சரியாக இருக்குமானால், அமெரிக்கா ஈரான் மீது ஒரு தாக்குதலை நடத்த, அப்பிராந்தியம் எங்கிலும் கணிசமாக போரைத் தீவிரப்படுத்த இஸ்ரேலுக்கு தனிப்பட்ட அங்கீகாரம் வழங்கியது மட்டுமல்ல, மாறாக நூறாயிரக் கணக்கான மக்களை —சாத்தியமானளவுக்கு எகிப்து பிராந்தியத்திற்குள்ளேயும் கூட— இடம்பெயரச் செய்யும் ரஃபா மீது ஒரு தாக்குதலை நடத்தவும் அதற்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

தனிப்பட்ட முறையில் என்ன கூறப்பட்டாலும், அமெரிக்கா அடிப்படையில் இதைத்தான் பகிரங்கமாகக் கூறியது. ஈரானைத் தாக்குவதா இல்லையா என்பது முற்றிலும் இஸ்ரேலைப் பொறுத்தது என்று அறிவித்து, பகிரங்கமாக ரபாவில் ஹமாஸை இராணுவ ரீதியில் தோற்கடிப்பது அமெரிக்காவின் இலக்கு என்றும் அது அறிவித்தது.

இந்த உண்மை காஸா இனப்படுகொலைக்கும் ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவக் கட்டமைப்பிற்கும் இடையே உள்ள நெருக்கமான தொடர்பை தெளிவாக்குகிறது. காஸாவில் இனப்படுகொலைக்கான சாக்குப்போக்காக இருந்த அக்டோபர் 7 தாக்குதலுக்கு 10 நாட்களுக்கும் குறைவான நாட்களுக்குப் பின்னர், அக்டோபர் 16 அன்று உலக சோசலிச வலைத் தளம் எழுதியதைப் போல, “ரஷ்யாவுடனான அமெரிக்காவின் போரின் மத்திய கிழக்கு முன்புறமாகவும், மற்றும் சீனாவிற்கு எதிரான போர்த் திட்டங்களுடன் ஈரானுடன் ஒரு போருக்கான நீண்டகால திட்டங்களை செயல்படுத்தவும் அமெரிக்கா தற்போதைய நெருக்கடியைப் பயன்படுத்துகிறது.”

உலக சோசலிச வலைத் தளம் மேலும், “காஸா மக்களுக்கு எதிராக மூர்க்கமான படுகொலைகளைச் செய்வதற்கு இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட சுதந்திரம், மற்றும் உக்கிரமடைந்து வரும் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர்த் திட்டங்கள் என்பன, நடைமுறையில், ஒரு மூன்றாம் உலகப் போரின் ஆரம்ப கட்டங்களை கொண்ட வெடிப்பின் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும்” என்று கூறியது.

இஸ்ரேல் ஈரானிய நிலப்பரப்பில் வான்வழித் தாக்குதலை நடத்தி, ஏற்கனவே காஸாவில் 40,000ம் பேரைக் கொன்று குவித்த இனப்படுகொலைக்கு தலைமை தாங்கியுள்ள நிலையில், இந்த எச்சரிக்கைகள் வேகமாக உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன.

.

Loading