கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள் ஒடுக்குமுறையை மீறி, பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டத்தை தொடர்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் பாலஸ்தீனிய சார்பு ஆர்ப்பாட்டங்கள் மீதான பொலிஸ் அரசு ஒடுக்குமுறையை தொடர்ந்து மீறி வருகின்றனர் ஞாயிறன்று தொடர்ந்து ஐந்தாவது நாளாக மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் தெற்கு புல்வெளியை ஆக்கிரமித்துள்ளனர். பைடென் நிர்வாகம் மற்றும் இரண்டு பெருவணிக கட்சிகளால் திட்டமிடப்பட்டு ஆதரிக்கப்பட்டுவரும் ஜனநாயக உரிமைகள் மீதான கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மீதான கொடூரமான தாக்குதல்களானது, இனப்படுகொலைக்கான எதிர்ப்பை மௌனமாக்கவில்லை. மாறாக, நாடு முழுவதும் உள்ள வளாகங்களில் போராட்டங்களை மீண்டும் தூண்டியுள்ளன.

ஏப்ரல் 18, 2024 வியாழக்கிழமையன்று, நியூயோர்க் நகரில் கொலம்பியா பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பும்போது கலகத் தடுப்பு கவசம் அணிந்த போலீசார் காவலுக்கு நிற்கின்றனர் [AP Photo/Mary Altaffer]

காஸாவில் அமெரிக்க/இஸ்ரேலிய நிர்மூலமாக்கும் போருக்கு எதிராக அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்ததற்காக கைது செய்யப்பட்ட, வெளியேற்றப்பட்ட அல்லது வேலையிலிருந்து நீக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நியூயோர்க் நகரத்திலும் நாடெங்கிலும் தொழிலாள வர்க்கத்திற்கு உள்ளேயும் ஆதரவு அதிகரித்து வருகிறது.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

நியூயோர்க் நகர கலகத் தடுப்பு பொலிஸ் மற்றும் கண்காணிப்பு குழுக்களின் பாரிய அணிதிரள்வுக்கு மத்தியில், ஜனநாயகக் கட்சி மேயரும், ஒரு முன்னாள் போலிஸ்காரருமான எரிக் ஆடம்ஸ், ஞாயிறன்று பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்களைத் தாக்கி அச்சுறுத்தும் வகையில் எச்சரித்து ஓர் அறிக்கையை பின்வருமாறு வெளியிட்டார்:

நாங்கள் சட்டமற்ற நகரமாக இருக்க மாட்டோம், மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதலைப் பயன்படுத்தி குழப்பத்தையும் பிளவையும் விதைக்க முயலும் தொழில்முறை கிளர்ச்சியாளர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

வளாகங்கள் யூத-எதிர்ப்பின் மையங்களாக மாறிவிட்டன என்ற பொய்யின் அடிப்படையில், போர் மற்றும் பாரிய படுகொலைக்கு எதிராக போராடுவதற்கான உரிமை மீதான அதிகரித்தளவில் மூர்க்கமான, இருகட்சி தாக்குதலுக்கு ஜனாதிபதி ஜோ பைடென் தனது குரலையும் சேர்த்துக் கொண்டார். இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகுவின் முக்கிய ஆயுத விநியோகஸ்தரும் கூட்டாளியுமான பைடென் ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையை இவ்வாறு வெளியிட்டார்:

சமீபத்திய நாட்களில் கூட, யூதர்களுக்கு எதிரான துன்புறுத்தல்களையும் வன்முறைக்கான அழைப்புகளையும் நாங்கள் கண்டோம். இந்த அப்பட்டமான யூத எதிர்ப்பு கண்டிக்கத்தக்கது மற்றும் ஆபத்தானது - இதற்கு பல்கலைக்கழக வளாகங்களிலோ அல்லது நம் நாட்டில் எங்குமே இடமில்லை.

ஜனநாயகக் கட்சி நிர்வாகிகள் அவர்களின் அறிக்கைகளில், பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையைத் தூண்டுவதாக தவறாக உட்குறிப்பாகக் காட்டினர். இதற்கிடையே, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க/நேட்டோ போருக்கு நிதியளிப்பதைத் தொடரவும், காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கான ஆயுத விநியோகத்தை அதிகரிக்கவும், சீனாவுக்கு எதிரான போர் தயாரிப்புகளை அதிகரிக்கவும் 95 பில்லியன் டாலர்கள் வழங்கும் தொடர்ச்சியான இருகட்சி மசோதாக்களை நிறைவேற்ற ஜனநாயகக் கட்சியினர் பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சி பாசிசவாதிகளுடன் கைகோர்த்தனர்.

பைடென் மற்றும் ஆடம்ஸின் அறிக்கைகள் கொலம்பியா மாணவர்கள் மீதான தாக்குதல் வெறுமனே ஒரு பல்கலைக்கழக நிர்வாகத்தின் வரம்பு மீறிய செயல் அல்ல, மாறாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளுக்கு எதிர்ப்பை நசுக்கவும் மற்றும் குற்றகரமாக்கவும் நோக்கம் கொண்ட ஒருங்கிணைந்த அரசியல் தாக்குதலின் ஒரு பகுதி என்பதை தெளிவுபடுத்துகின்றன.

காஸா இனப்படுகொலையை கண்டித்து, ஒரு அமைதியான முகாமை நடத்திக் கொண்டிருந்த 100 க்கும் அதிகமான கொலம்பியா மற்றும் பேர்னார்ட் மாணவர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டமையானது, நியூயோர்க்கில் மட்டுமல்ல, மாறாக நாடெங்கிலும் மற்றும் சர்வதேச அளவிலும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலில் ஒரு பெரிய தீவிரப்பாட்டைக் குறிக்கிறது.

பல்கலைக்கழக துணைவேந்தர் மினூச் “நெமாட்” ஷபிக் முதலில் மாணவர்களை இடைநீக்கம் செய்தார், பின்னர் “அத்துமீறல்” என்று கூறப்பட்டதற்காக அவர்களை அகற்றுமாறு நியூயோர்க் பொலிசாரை அழைத்தார். மாணவர்கள் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக போலீசாரால் பிளாஸ்டிக் கீற்றுக்களால் கைகள் கட்டப்பட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெர்னார்ட் மாணவர்கள் வளாக வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர், அவர்களுடைய உடமைகளை அகற்றுவதற்கு அவர்களுக்கு வெறும் 15 நிமிட முன்னறிவிப்பே கொடுக்கப்பட்டது. அவர்கள் பல்கலைக்கழகத்தின் உணவு அறைகளுக்கான அணுகலையும் இழந்தனர். கொலம்பியா மாணவர்கள் இதுவரை வெளியேற்றப்படவில்லை, இன்னும் உணவருந்தும் அறைகளில் சாப்பிட முடியும், ஆனால் மற்றைய அனைத்து வளாகக் கட்டிடங்களும் பூட்டப்பட்டுள்ளன.

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மீது போலீசார் ஒரு பொதுமுடக்கத்தைச் (lockdown) செய்துள்ளனர். நூற்றுக்கணக்கான போலீசார், பலர் கலகத் தடுப்பு தலைக்கவசங்கள் மற்றும் தடிகளுடன் வளாகத்தை சுற்றி வளைத்துள்ளனர். வளாகத்தின் வாயில்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அடையாள அட்டை காட்டும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். கொலம்பியா கட்டிடங்களுக்கான அட்டை அணுகலை இழந்துவிட்டதாகவும், கட்டிடங்களுக்குள் நுழைய பாதுகாப்பு பாதுகாவலர்கள் தேவைப்படுவதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்களின் வானொலி நிலையமான WKCR இன் ட்விட்டர்/எக்ஸ் பதிவின்படி, ஒரு பாதுகாப்பு அதிகாரி ஆர்ப்பாட்டங்களின் நேரடி ஒளிபரப்பை நிறுத்த முயன்றார், கொலம்பியா ஆசிரிய உறுப்பினர் தலையிட்ட பின்னரே அவர் பின்வாங்கினார்.

கொலம்பியாவிற்கு அப்பால், அமெரிக்க பல்கலைக்கழக வளாகங்களில் பாலஸ்தீனிய ஆதரவு உரை மீதான தாக்குதலில், டென்னசியில் உள்ள வாண்டர்பில்ட் பல்கலைக்கழகம் மற்றும் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள பொமோனா கல்லூரி ஆகியவற்றில் மாணவர்கள் இடைநீக்கம், அத்துடன் “இடையூறுகளை” தடுக்கும் சாக்குப்போக்கின் கீழ் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் அனைத்து ஆர்ப்பாட்டங்களையும் தீவிரமான முறையில் தடை செய்தல் என்பனவும் உள்ளடங்குகின்றன.

தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக உறுப்பினர் அன்சா தபஸ்ஸூம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல்கொடுப்பதால் அவர் தொடக்க உரையை வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீன ஆதரவு மாணவர்களுக்கு ஆதரவாக பகிரங்கமாக பேசியதற்காக நியூயோர்க் நகர கல்லூரிகளில் பல பல்கலைக்கழக பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கொலம்பியா நிர்வாகத்தின் நடவடிக்கைகளை நாடு முழுவதும் உள்ள கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கண்டித்துள்ளனர். சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, கொலம்பியாவில் ஞாயிற்றுக்கிழமை மாலை நியூயோர்க் போலீஸ் துறையால் முன்னர் தரைமட்டமாக்கப்பட்ட கூடாரங்களுக்கு பதிலாக புதிய கூடாரங்கள் மீண்டும் அமைக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக பல போராட்டங்கள் வளாகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெடித்துள்ளன. கொலம்பியாவில் இருந்து சில மைல்கள் தொலைவில் உள்ள புதிய பள்ளியில் நியூயோர்க் போலீஸ் துறையால் தகர்க்கப்பட்டதைப் போன்ற ஒரு “காஸா ஒற்றுமை முகாம்” அமைக்கப்பட்டுள்ளது.

வெள்ளியன்று, கனக்டிகட்டில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தின் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பிரதான மாணவர்கள் உபயோகிக்கும் கட்டிடமான ஸ்வார்ட்ஸ்மன் மையத்திற்கு வெளியே ஒரு ஒற்றுமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைத்தனர். ஓகையோ மற்றும் வடக்கு கரோலினாவில் உள்ள மாணவர்களும் இதேபோல் ஒற்றுமை முகாம்களை அமைத்துள்ளனர். நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் திங்கள் உட்பட இந்த வாரம் ஒற்றுமைக்கான வெளிநடப்புகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.

கொலம்பியா போராட்டக்காரர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு ஆதரவாக ஆசிரியர்களும் அணிவகுத்து நிற்கின்றனர். வெள்ளியன்று, அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் கொலம்பியா மற்றும் பெர்னார்ட் பிரிவுகள் ஷபிக்கின் நடவடிக்கைகளை கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு, மாணவர் இடைநீக்கம் உடனடியாக மீளப்பெறப்பட வேண்டும் என்றும் கோரின.

ஞாயிற்றுக்கிழமை காலை, நியூயோர்க் சிட்டி பல்கலைக்கழகத்தின் (CUNY) பேராசிரியரும், கொலம்பியாவில் வசிக்கும் கலைஞருமான டாக்டர் தாவோ லீ கோஃப், கொலம்பியாவில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். குறிப்பிட்ட சமூகப் பிரச்சினைகள் தொடர்பான பொதுநல வேலைகள் மற்றும் ஃபெல்லோஷிப் திட்டங்களை முடித்த மாணவர்களுக்கு கொலம்பியா சட்டப் பள்ளியால் வழங்கப்படும் ஒரு பதவியைப்பெற்ற, 100 க்கும் மேற்பட்ட பொது நல கௌரவிப்பாளர்கள், பல்கலைக்கழகத்தின் தாக்குதல்களைக் கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டனர் மற்றும் பல்கலைக்கழகத்திற்கான விளம்பரங்களில் அவர்களின் ஒப்புமைகளைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலைத் திரும்பப் பெற்றனர்.

புதன்கிழமை மெக்கார்த்தியிச காங்கிரஸ் விசாரணையை அடுத்து உடனடியாக கொலம்பியாவில் ஒடுக்குமுறை நடைபெற்றது. சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பானது (IYSSE) அந்த நிகழ்வு குறித்த அதன் அறிக்கையில் எழுதியதைப் போல், அதாவது “உயர்கல்வியை முற்றிலுமாக போர் இயந்திரத்திற்கு அடிபணியச் செய்யும் பொருட்டு, பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர் அமைப்பை களையெடுப்பதற்கு குறைவாக வேறொன்றுமில்லை” என்பதே இந்த விசாரணையின் நோக்கமாக இருந்தது.

சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் ஒரு அறிக்கையில் பின்வருமாறு விளக்கினார்:

ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பும் போருக்கான எதிர்ப்பும் தொழிலாள வர்க்கத்தை அடித்தளமாகக் கொண்டிருக்க வேண்டும், அது சமூகத்தின் செல்வ வளம் அனைத்தையும் உற்பத்தி செய்கிறது, அவ்விதத்தில் முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் பிற்போக்குத்தனமான சதிகளை எதிர்கொள்ளும் சக்தி அதற்கு உள்ளது. மாணவர்கள் துன்புறுத்தப்படுவதை நிறுத்தக் கோரவும் அணிதிரளுமாறும் தொழிலாளர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. இளைஞர்கள் தனித்து நின்று போராட முடியாது! அவர்களுக்கு ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தின் ஆதரவு தேவைப்படுகிறது.

சனிக்கிழமையன்று, சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் ஒரு பொது போக்குவரத்து மையம், ஒரு அமசோன் விநியோக மையம், ஒரு UPS பண்டகசாலை மற்றும் ஒரு மருத்துவமனையில் கிஷோரின் அறிக்கையை விநியோகித்து, இந்த செய்தியை நேரடியாக தொழிலாள வர்க்கத்திற்கு எடுத்துச் சென்றனர்.

ஒரு மருத்துவரின் உதவியாளராக ஆவதற்கு படிக்கும் ஒரு பயிற்சியாளரான அலிசன், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பிடம் இவ்வாறு கூறினார்:

கொலம்பியாவில் ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கேள்விப்பட்டேன், நான் ஆத்திரமடைந்தேன். அமெரிக்காவில் பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரம் இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் இப்போது அது பறிக்கப்பட்டு வருகிறது.

நான் நியூயார்க் சிட்டி பல்கலைக்கழக (CUNY) பள்ளியின், ஒரு பொதுப் பள்ளி மாணவனாக உள்ளேன். பாலஸ்தீன இனப்படுகொலைக்கு நிதியளிக்க அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை அரசாங்கம் பயன்படுத்துவது எனக்கு அருவருப்பாக இருக்கிறது. நான் அரசுக்கு கல்விக் கட்டணம் செலுத்துகிறேன், ஆனால் எனது பள்ளி மூலம் எனக்கு மருத்துவ காப்பீடு கூட இல்லை.

இதற்கிடையில், அவர்கள் காஸாவில் உள்ள மருத்துவமனைகள் மீது குண்டு வீசி அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆகவே இன்று சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பே இந்த மாணவர்களை ஆதரிப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் நிச்சயமாக மே 2 கூட்டத்தில் [நியூயோர்க் நகரில் ஜோசப் கிஷோருடன்] கலந்து கொள்வேன், அதைப் பற்றி எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கூறுவேன்.

வாஷிங்டன் ஹைட்ஸைச் சேர்ந்த ஒரு காவலாளியான வெய்ன், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்புக்கு இவ்வாறு தெரிவித்தார்:

இந்த போர்கள் அனைத்திற்கும் எப்போதும் பணம் இருக்கிறது என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, இருப்பினும் நாம் பேசும்போது கல்வி தாக்கப்படுகிறது. அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்ட்டெஸுக்கு (DSA) சொந்தமான பிராங்க்ஸ் மாவட்டத்திலும் கூட, பள்ளி வசதிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டு மூடப்பட்டு வருகின்றன. அவர் தன்னை ஒரு சோசலிஸ்ட் என்று அழைத்துக்கொள்கிறார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. டுபக் ஷகூர் சொல்வது போல், “அவர்களிடம் போருக்கு பணம் இருக்கிறது, ஆனால் ஏழைகளுக்கு உணவளிக்க பணம் இல்லை.”

ஒவ்வொருவரும் எதை வேண்டுமானாலும் எதிர்க்கும் உரிமையை நான் ஆதரிக்கிறேன். ஆனால் உதாரணமாக, ஆரோன் புஷ்னெல் தன்னைத்தானே எரித்துக் கொண்டது போன்ற செயல்களை நான் ஆதரிக்கவில்லை. கார்னெல் வெஸ்ட் மற்றும் கிறிஸ் ஹெட்ஜஸ் போன்றவர்கள் அங்கு சென்று அந்த வகையான விஷயங்களை ஊக்குவிக்க விரும்பினால், அவர்கள் ஏன் தங்களைத் தாங்களே எரித்துக் கொள்ளக்கூடாது? அவர்கள் ஏன் தங்கள் குழந்தைகளை அதைச் செய்ய அனுப்புவதில்லை? ஒரு சிக்கலை இன்னொன்றை உருவாக்குவதன் மூலம் நீங்கள் தீர்க்க முடியாது. அப்படி ஒரு தியாகம் செய்வதன் மூலம் நாம் எதைச் சாதிக்க விரும்புகிறோமோ அதை உலகுக்கு உணர்த்தப் போவதில்லை.

நான் என் வாழ்நாள் முழுவதும் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்தேன். ஆனால் சமீப காலமாக நான் அதை செய்வதை நிறுத்திவிட்டேன். இனி என்னால் முடியாது. நான் என்னை சுதந்திரமாக கருதுகிறேன். ட்ரம்ப் கூட, என் மொழியை மன்னிக்கவும், ஒரு a**hole. ஆனால் ஜனநாயகக் கட்சி ஊக்குவிக்கும் இன மற்றும் பாலின பிளவுகளின் அரசியலை நான் ஆதரிக்கவில்லை. இது உண்மையில் தொழிலாளர்களை குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்க வைக்கிறது, அது நம்மைப் பிளவுபடுத்துகிறது.

இத்தகைய வெளிநாடுகள் மீதான போர்கள் மூலம் அமெரிக்கா ஜனநாயகத்தை தோற்றுவிக்கவில்லை. உக்ரேனில் இல்லை, சீனாவுடன் இல்லை, உள்நாட்டில் இல்லை.

ஒரு சரக்கு இரயில் தொழிலாளியான ஸ்டீவ் கூறுகையில், “பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரத்திற்கான முதல் அரசியலமைப்பு திருத்த உரிமையை நாம் கொண்டிருக்கிறோம் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆனா இப்போ அது இல்லை என்று தோணுது.”

கிழக்கு நியூயோர்க் பேருந்து பணிமனையில் ஒரு பேருந்து ஓட்டுநர் கூறினார்:

நாங்கள் ஏமன் நாட்டவர் அல்லது முஸ்லீம் என்பதால் எங்கள் மக்கள் படுகொலை செய்யப்படுவதை பார்ப்பது எங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. அவர்கள் உதவியற்றவர்கள். இவை, இன்று உலகில் நடக்கக் கூடாது. நாம் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். இது தவறு. எங்களிடம் உரிமைக் குரல்கள் உள்ளன, ஆனால் இப்போதும் கூட, அவர்கள் கொலம்பியாவில் நீங்கள் பார்க்கக்கூடியதைப் போல எங்கள் குரல்களையும் அடக்க விரும்புகிறார்கள்.

அமெரிக்காவில் அரசியல் சாசனம் உள்ளது. உங்களுக்கு கருத்து சுதந்திரம், போராட்டம் நடத்தும் உரிமை உள்ளது. ஆனால் இப்போது, இல்லை, அவை பாதுகாக்கப்படவில்லை என்று தெரிகிறது.

செங்கடலில் ஹவுத்தியின் கப்பல் இடைமறிப்புக்கள் குறித்து பேருந்து ஓட்டுநர் கூறியதாவது:

நாங்கள் விரும்பியதெல்லாம் போர் நிறுத்தம் மட்டுமே, ஆனால் அவர்கள் அதை மற்றொரு பிரச்சார போராக மாற்றுகிறார்கள். ஏமன் மீது தாக்குதல் நடத்தப்படுவது மக்களுக்கு தெரியாது. நிறைய இலாப நோக்கற்ற நிறுவனங்கள் ஏமனை விட்டு வெளியேறிவிட்டன, எனவே மீண்டும் பஞ்சம் வருகிறது. “நாங்கள் அமைதியை விரும்புகிறோம்” என்று கூறியதன் விளைவாக, போர் நிறுத்தம் கோருவதன் விளைவாக உலக உணவு வங்கியானது தங்கள் திட்டங்களை வெட்டியுள்ளது. நீங்கள் அமைதியை விரும்பினால், இதுதான் உங்களுக்கு நடக்கும். உங்களைப் பட்டினி போட்டு அவர்கள் சாகடிக்கிறார்கள்.

போர்களிலிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லையா? யாரும் போர்களை வெல்வதில்லை... இந்த நாடு அந்த நாட்டுக்கு எதிரானது. ஆனால் யாரும் வெல்வதில்லை. இது ஒரு பக்கத்திற்கு எதிராக மறுபுறம். ஈராக்கிடமிருந்தோ, ஆப்கானிஸ்தானிடமிருந்தோ நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. அங்கே என்ன நடந்தது?

ரிச்சர்ட், ஒரு வேலையற்ற தொழிலாளி கூறினார்:

இது ஒரு பணக்காரரின் போர், ஆனால் ஏழை மக்கள் அதற்கு விலை செலுத்த வேண்டும். வாரத்தின் ஒவ்வொரு நாளும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு நாங்கள் அதிக பணம் செலுத்துகிறோம், ஆனால் எங்கள் வருமானம் உயரவில்லை, வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை. குறைந்தபட்ச ஊதியத்திற்கு போதுமான வீட்டுவசதி நகரத்தில் எங்கு கிடைக்கும்? நான் வேலை தேடுகிறேன், ஒரு பகுதிநேர வேலை கூட கிடைக்கவில்லை. கோடீஸ்வர தலைமை நிர்வாக அதிகாரிகள், மக்களை சோம்பேறிகள், வேலை செய்ய விரும்பவில்லை என்று சொல்ல முடியாது. இது முட்டாள்தனம்.

மருத்துவ விடுப்பில் இருந்த ஒரு அவசர பராமரிப்பு தொழிலாளரான சூசன், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பிடம் இவ்வாறு கூறினார்:

இந்த மாணவர்களுக்கு அவர்கள் என்ன வேண்டுமானாலும் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு, அவர்கள் உண்மையான இனப்படுகொலையை எதிர்ப்பதன் மூலம் சரியானதைச் செய்கிறார்கள். இளைய தலைமுறையினர் அரசியலில் ஈடுபடுவது மிகவும் நல்லது என்று நான் நினைக்கிறேன். ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தை ஆதரிக்கும் அனைத்து மாணவர்களின் சக்தியும் நம்மிடம் இருந்தால் கற்பனை செய்து பாருங்கள். எல்லா இடங்களிலும் உள்ள தொழிலாளர்கள், மாணவர்களின் அனைத்து புத்திஜீவித ஆதாரவளங்களுடன் இணைந்து, ஒன்றாக வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுத்தால், இந்த உலகின் அனைத்து பிரச்சினைகளையும் நம்மால் தீர்க்க முடியும்.

Loading