எபோனிக்ஸூம் இனவாத அரசியலின் ஆபத்தும்

ஒரு சோசலிசப் பார்வை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

எபோனிக்ஸ் சர்ச்சை பற்றிய பின்வரும் விரிவுரையை அமெரிக்காவின் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னாள் துணைச் தேசிய செயலாளரான ஹெலன் ஹால்யார்ட் (நவம்பர் 24, 1950-நவம்பர் 28, 2023) 1997 ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மிச்சிகன் மற்றும் பென்சில்வேனியாவிலுள்ள உயர் கல்வி வளாகங்களில் தொடர்ச்சியாக இந்த விரிவுரையை வழங்கினார்.

ஹெலன் ஹால்யார்ட், அக்டோபர் 2022.

இந்த விரிவுரையானது, எபோனிக்ஸ் சர்ச்சையின் பின்னணியில் நிறம், மொழி, இனம், இனவாதம், தேசம், தேசியவாதம் மற்றும் பாட்டளி வர்க்க சர்வதேசியவாதம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள சிக்கலான பிரச்சினைகள் குறித்த ஆழமான பகுப்பாய்வை வழங்குகிறது. எபோனிக்ஸ் என்பது ஆபிரிக்கமையவாதம் (Afrocentrism) என்ற பரந்த கண்ணோட்டத்தின் கிளையாகும், இந்த அடையாளமானது தோல் நிறத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்றும் கறுப்பினத்தவர்களுக்கு ஒரு தனித்துவமான கலாச்சாரம், வரலாறு மற்றும் மொழி கூட உள்ளது என்றும் கருதும் ஒரு சித்தாந்தமாகும்.

தேசியத்தின் வரலாற்று வளர்ச்சியும் இந்த விரிவுரையில் ஆராயப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர், தேசிய அரசின் எழுச்சியானது நிலப்பிரபுத்துவ மத்தியத்துவப்படுத்தப்படாத சிதறலான நிலைக்கு எதிரான முன்னேற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது. எவ்வாறாயினும், நவீன முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன், தேசியவாதம் ஒரு பிற்போக்கு சக்தியாக மாறியது, ஏனெனில் தேசிய-அரசு உலகப் பொருளாதாரத்தின் அபிவிருத்திக்கு முட்டுக்கட்டையாக இருந்தது.

தேசியவாத சித்தாந்தங்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்க கூறுபாடுகளால் ஊக்குவிக்கப்படுகின்றன, அவற்றின் சமூக அந்தஸ்து அச்சுறுத்தப்படுகிறது, ஏனெனில் அவர்கள் தங்களுக்கு ஒரு சலுகை பெற்ற நிலையை உருவாக்க முயல்கின்றனர். இதற்கு மாறாக, தொழிலாள வர்க்கம் அரிதாகவே “மொழி குறித்து உற்சாகமாக” உள்ளது, அதற்கு பதிலாக மொழிப் பிளவுகளைக் கடந்து வர்க்க ஒற்றுமையில் கவனம் செலுத்தியுள்ளது.

எபோனிக்ஸ் சர்ச்சை உண்மையில் மொழியைப் பற்றியது அல்ல, ஆனால் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்கும் வர்க்கப் பிளவுகளை மறைப்பதற்கும் இன வேறுபாடுகளைப் பயன்படுத்துவது பற்றியது என்று இந்த விரிவுரை வாதிடுகிறது. எபோனிக்ஸின் ஆதரவாளர்கள், வறிய கறுப்பின இளைஞர்களின் உண்மையான கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பதிலாக, தங்கள் சொந்த அந்தஸ்தைப் பாதுகாக்க முனையும் கறுப்பின கல்வியாளர்கள் மற்றும் புத்திஜீவிகளின் ஒரு “சலுகை பெற்ற அடுக்கு” என்று விவரிக்கப்படுகிறார்கள்.

1960 களின் நகர்ப்புற எழுச்சிகளுக்குப் பின்னர், ஆளும் வர்க்கம் தங்களுக்கும் வெகுஜனங்களுக்கும் இடையில் ஒரு கறுப்பின நடுத்தர வர்க்க இடைத்தடைகளை வளர்க்க முனைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. “கறுப்பு முதலாளித்துவம்” மற்றும் “கறுப்பு தேசியவாதத்தை” ஊக்குவித்தல் இந்த நோக்கத்திற்கு சேவையாற்றியது. முதலாளித்துவ புத்திஜீவிகளுக்கு பொருளாதார மற்றும் அந்தஸ்து நகர்வை வழங்கியது, அதேவேளையில் இன ஒடுக்குமுறையின் அடித்தளத்தில் உள்ள நிலைமைகளை நிவர்த்தி செய்ய எதுவும் செய்யவில்லை.

கறுப்பு தேசியவாத முன்னோக்கிற்கு முரண்பட்ட வகையில், இவ்விரிவுரையானது பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்தின் மார்க்சிச பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கிறது.

தொழிலாள வர்க்கமானது ஒடுக்குமுறையைத் தூக்கியெறியும் முன்னோக்குடன் உலகெங்கிலும் உள்ள புத்திஜீவிகளையும் கலைஞர்களையும் இளைஞர்களையும் ஊக்குவித்த ரஷ்ய புரட்சியின் தாக்கத்தையும் இந்த விரிவுரை எடுத்துக்காட்டுகிறது. “நீக்ரோ கேள்விக்கு” ட்ரொட்ஸ்கியின் பதில் மேற்கோளிடப்படுகிறது, “நீக்ரோ பேரினவாதத்தை” விட சுரண்டப்படும் மக்களுடன் ஒற்றுமை உணர்வின் அவசியத்தை வலியுறுத்துகிறது. எபோனிக்ஸ் சர்ச்சையை வர்க்கப் போராட்டம் மற்றும் இன மற்றும் மொழி பிளவுகளைக் கடந்து தொழிலாள வர்க்க ஐக்கியத்தின் தேவையின் பரந்த உள்ளடக்கத்திற்குள் வைக்கிறது. ஆகவே, இந்த முக்கியத்துவம் வாய்ந்த விரிவுரையின் அரசியல் மற்றும் வரலாற்று அவசியம் கருதி இங்கே வெளியிடுகின்றோம்.

***

எபோனிக்ஸ் குறித்த சர்ச்சையில் முக்கிய பிரச்சினை மொழி அல்ல, ஆனால் முன்னோக்கு ஆகும். முதலாளித்துவத்தின் நிரந்தரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டவர்கள், சமூகத்தை மாற்றுவதற்கான போராட்டத்தில் உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்துவதற்கு ஒரு தடையாக இருக்கும் இன வேறுபாடுகளைப் பிடித்துக் கொள்கிறார்கள். அமெரிக்க சமூகத்தில் கறுப்பினத்தவர், வெள்ளையர் மற்றும் ஹிஸ்பானிக் அல்லது அமெரிக்காவில் பிறந்தவர்கள் மற்றும் வெளிநாட்டில் பிறந்தவர்கள் இடையே பெரும் பிளவு உள்ளது என்ற கருத்தாக்கத்தை அவர்கள் ஊக்குவிக்கின்றனர்.

அமெரிக்க அரசியலில் தவிர்க்க முடியாத மிகப் பெரிய விடயம் என்னவென்றால், நாம் சமூக ரீதியாக மேலும் மேலும் துருவப்படுத்தப்பட்டு வரும் ஒரு சமூகத்தில் வாழ்கிறோம். இந்த நாட்டிலுள்ள அனைத்தும் வர்க்கக் கண்ணோட்டத்திலிருந்து அல்லாமல் நிற மற்றும் இன அடிப்படையில் விவரிக்கப்படுகின்றன.

சோசலிஸ்டுகள் என்ற வகையில் நாம் இந்த தவறான கருத்துக்களை நிராகரித்து, சமூக சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஐக்கியப்படுமாறு கறுப்பினத்தவர்கள், வெள்ளையர், ஹிஸ்பானிக் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். கண்ணியமான மற்றும் நிலையான வேலை, வசதியான ஓய்வு, தரமான கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் வீட்டுவசதி ஆகியவை சமூக உரிமைகளாகக் கருதப்பட வேண்டும் மற்றும் நிறம் அல்லது இனப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.

இலாபத்தின் அடிப்படையில் அல்லாமல் மனிதத் தேவையின் அடிப்படையில் சமூகத்தை மறுசீரமைக்கும் நோக்கத்திற்காக சர்வதேச அளவில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் போராட்டத்துடன் மனித முன்னேற்றம் பின்னிப்பிணைந்திருப்பதை நாம் காண்கிறோம். சோசலிஸ்டுகளாகிய நாங்கள் பின்தங்கிய நிலையையும் ஒடுக்குமுறையையும் வெல்லும் மனிதகுலத்தின் திறனில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம்.

வறுமை, பட்டினி போன்ற நிலைமைகளை மனிதகுலம் வென்று நீதியான மனிதாபிமான சமூகத்திற்காகப் போராட முடியும் என்ற முன்னோக்கை வரலாறு நெடுகிலும் தலைசிறந்த சிந்தனையாளர்கள் கொண்டிருந்தனர். மார்க்சிஸ்டுகளாகிய நாமும் இந்த இலக்கையே ஏற்றுக் கொள்கிறோம்.

முதலாளித்துவ இலாப அமைப்புமுறையின் கட்டமைப்பிற்குள் தேசியவாத தீர்வுகளை ஊக்குவிப்பவர்கள் இந்த கண்ணோட்டத்தை எதிர்க்கின்றனர். அயர்லாந்தில் கத்தோலிக்கருக்கு எதிராக புராட்டஸ்தாந்து, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்கள், கனடாவில் பிரெஞ்சு பேசுபவர்களுக்கு எதிராக ஆங்கிலம் பேசுபவர்கள், அமெரிக்காவில் வெள்ளையர்களுக்கு எதிராக கறுப்பர்கள், புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக உள்நாட்டில் பிறந்தவர்கள் என்று அவர்கள் ஊக்குவிக்குகிறார்கள்.

எபோனிக்ஸ் ஏன் ஊக்குவிக்கப்படுகிறது, இதனால் யார் பயனடைவார்கள்?

1973 ஆம் ஆண்டில் ராபர்ட் எல் வில்லியம்ஸால் உருவாக்கப்பட்ட எபோனிக்ஸ் என்ற சொல் கறுப்பின பிரிவினைவாதிகளின் ஒரு சிறிய அடுக்கால் ஊக்குவிக்கப்பட்டது. அண்மைக்காலம் வரை இச்சொல் கல்வித்துறைக்கு வெளியே அறியப்படவில்லை. எபோனிக்ஸ் என்பது ஆபிரிக்கமையவாதம் (Afrocentrism) என்ற பரந்த கண்ணோட்டத்தின் கிளையாகும். இந்த அடையாளமானது தோல் நிறத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்றும் கறுப்பினத்தவர்களுக்கு ஒரு தனித்துவமான கலாச்சாரம், வரலாறு மற்றும் மொழி கூட உள்ளது என்றும் கருதும் ஒரு சித்தாந்தமாகும்.

எபோனிக்ஸ் பற்றிய விவாதத்தில் வெளிப்படுவது ஒரு உயர் நடுத்தர வர்க்க கறுப்பின அடுக்குக்கும் மிகவும் வறிய சிறுபான்மை இளைஞர்களுக்கும் இடையிலான இடைவெளியாகும். இதைச் சொல்வதன் மூலம், கறுப்பின இளைஞர்கள் எதிர்கொள்ளும் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்ற உண்மையான விருப்பத்தால் வெவ்வேறு கற்பித்தல் முறைகளைத் தேடும் நேர்மையான ஆசிரியர்களும் தாராளவாதிகளும் இல்லை என்று நான் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் இந்த முன்மொழிவை உருவாக்கியவர்கள் மீது அத்தகைய உள்நோக்கங்களைக் கூற முடியாது.

எபோனிக்ஸ் மீதான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு, கறுப்பின இளைஞர்களின் குறைந்த தேர்வு மதிப்பெண்கள் குறித்து கவலை கொண்டிருப்பதாக கூறிக் கொள்ளும் அதே பள்ளி வாரியம், கடந்த ஆண்டு பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக ஒரு வக்கிரமான வேலைநிறுத்த உடைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.

இந்த வேலைநிறுத்தம் நிர்வாக நிதியைக் குறைப்பதன் மூலம் வகுப்பு அளவுகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியது. மாநிலத்தின் மற்ற பெரிய மாவட்டங்களை விட ஓக்லாந்து அதன் வரவுசெலவுத் திட்டத்தில் அதிக சதவீதத்தை நிர்வாகத்திற்காக செலவிடுகிறது. அமெரிக்க வளைகுடா பகுதி சராசரி 15.7 சதவீதமாகவும், ஓக்லாந்து 19.1 சதவீதமாகவும் உள்ளது.

ஆசிரியர்களின் கோரிக்கைகளை பள்ளி நிர்வாகம் நிராகரித்தது. அதற்கு பதிலாக, கறுப்பின மாணவர்களிடையே சிக்கலான செயல்திறன் நிலைகளைப் பற்றி விவாதிக்க ஒரு பணிக்குழுவை உருவாக்கியது. எந்த விவாதமும் இல்லாமல், எபோனிக்ஸ் கறுப்பின மாணவர்களின் மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற பணிக்குழுவின் பரிந்துரையை பள்ளி வாரியம் நிறைவேற்றியது.

ஓக்லாந்து பள்ளி வாரியத்தின் நடவடிக்கை, மாணவர்களின் அடிப்படைத் தேவைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் அதே நேரத்தில் இனப் பிரிவினையை மேலும் தூண்டுவதற்கு உதவியது. இந்தத் தீர்மானத்தின் முக்கிய பயனாளிகள் இளைஞர்கள் அல்ல, மாறாக கறுப்பினத்தவர்களின் ஒரு சிறிய சலுகை பெற்ற உயர் அடுக்கு ஆகும்.

“எபோனிக்ஸ்” போதனையானது பல கலிபோர்னியா பள்ளிகளுக்கு பரவியுள்ளது. இது ஏற்கனவே ஒரு பலமில்லியன் டாலர்கள் விவகாரமாக மாறியுள்ளது. இது கல்விக் கோட்பாட்டாளர்கள், ஆடம்பரமாக ஊதியம் பெறும் ஆலோசகர்கள் மற்றும் பாடநூல் எழுத்தாளர்களுக்கு வசதியான வாழ்க்கையை உருவாக்குகிறது.

எபோனிக்ஸ் ஒரு மையப் பிரச்சினையாக மாறிய மற்றொரு வழக்கை நாம் ஆராயும்போது இந்த நலன்களின் வேறுபாடு இன்னும் தெளிவாகிறது. 1977 ஆம் ஆண்டில், மிச்சிகனிலுள்ள ஆன் ஆர்பரில் ஒரு வீட்டுத் திட்டத்தில் வாழ்ந்த நான்கு குடும்பங்கள், குறைந்த வருமானம் கொண்ட குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதற்காகவும், சிறப்பு கல்வி வகுப்புகளில் அவர்களைத் தவறவிட்டதற்காகவும் உள்ளூர் பள்ளி மாவட்டத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டன.

பெற்றோர்களில் ஒருவர் சமீபத்திய பத்திரிகை நேர்காணலில் இதனை நினைவு கூர்ந்தார்: “எங்கள் குழந்தைகள் கற்றுக்கொள்வதை உறுதி செய்வதில் ஆசிரியர்கள் அதிக சரியான நேரத்தை செலவிடவில்லை. நாங்கள் ஏழைகளாக இருந்தோம், நாங்கள் கவலைப்படவில்லை என்று அனுமானம் இருந்தது”.  இந்த பெற்றோர்கள் கோரியது சமத்துவம்; ஆன் ஆர்பரின் செல்வச் செழிப்பான பகுதிகளிலிருந்து வரும் குழந்தைகள் பெறும் அதே தரமான கல்வியை தங்கள் குழந்தைகளுக்கும் வழங்க வேண்டும் என்பதாகும்.

எவ்வாறாயினும், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள், எபோனிக்ஸின் ஆதரவாளரான டாக்டர் ஜெனீவா ஸ்மித்தர்மேன் வழங்கிய ஆராய்ச்சியைக் கொண்டு வந்தனர். அவர் “கறுப்பின ஆங்கிலத்தை” அங்கீகரிக்க ஆசிரியர்கள் தவறியதே பிரச்சினை என்று கூறினார்.

வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றபோது, சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார இழப்பு தொடர்பான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டன- ஆனால் கறுப்பின ஆங்கிலம் தொடர்பான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. சாராம்சத்தில், நீதிபதி சமத்துவத்திற்கான பெற்றோரின் கோரிக்கையை நிராகரித்தார், உங்களிடம் அது இருக்க முடியாது, ஆனால் நாங்கள் உங்களுக்கு எபோனிக்ஸ் தருவோம்.

நான் சமீபத்தில் வெய்ன் மாநில பல்கலைக்கழகத்தில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டேன், அங்கு ஜெனீவா ஸ்மித்தர்மேன் எபோனிக்ஸுக்கு ஆதரவாக பேசினார். ஆன் ஆர்பர் வழக்கை நான் எழுப்பியபோது, மொழியின் மீதான கவனமானது சமத்துவம் மற்றும் அதிகரித்த நிதி போன்ற உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பலாகப் பயன்படுத்தப்பட்டது என்று விளக்கியபோது, ஸ்மித்தர்மேன் ஒரு வெளிப்படையான பதிலை அளித்தார். அதாவது “எழுப்பப்படும் சில சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள் முக்கியமானவை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் உற்பத்திச் சாதனங்களை நாம் கட்டுப்படுத்துவதில்லை” என்று அவர் கூறினார்.

அவ்வாறே. சுரண்டல், சமத்துவமின்மை மற்றும் ஒடுக்குமுறையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளாதார மற்றும் சமூக அமைப்புமுறையின் தற்போதைய நிலையை கறுப்பின தேசியவாதிகள் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த அமைப்புமுறைக்குள் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகச் சிறிய நடுத்தர வர்க்க அடுக்குக்கு ஒரு சலுகை நிலையை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

கல்வி அமைப்புமுறையில் பில்லியன் கணக்கான டாலர்கள் கொட்டப்பட்டு, இளைஞர்கள் பொருளாதார ரீதியாக துடிப்பான சுற்றுப்புறங்களில் வாழ்ந்தால், எபோனிக்ஸ் பிரச்சினை ஒருபோதும் எழுப்பப்படாது. அனைத்து முன்னேறிய தொழில்துறை நாடுகளிலும் செல்வத்திற்கும் வறுமைக்கும் இடையிலான துருவமுனைப்படுத்தல் பெரும் மந்தநிலைக்குப் பிந்தைய எந்தக் காலத்தையும் விட இன்று அதிகமாக இருக்கும் நிலைமைகளின் கீழ் இது வெளிப்படுகிறது. இந்த யதார்த்தத்திலிருந்து கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில்தான் எபோனிக்ஸ் குறித்த சர்ச்சை செய்தி ஊடகங்களில் எடுக்கப்பட்டது.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் ஒரு தனி மொழி பேசுவதில்லை. நிச்சயமாக, ஒரு கறுப்பினத்தவர் அல்லது எந்தவொரு வெள்ளையர், ஹிஸ்பானிக் அல்லது புலம்பெயர்ந்த சமூகத்திலும் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட வெளிப்பாடுகள் உள்ளன. நீண்டகால இன ஒடுக்குமுறையிலிருந்து உருவான மரபுகளும் உள்ளன.

தற்கால அமெரிக்க சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் பேச்சு வடிவங்களும் சமூக மற்றும் வரலாற்று காரணிகளின் விளைபொருளாகும். மேலும் அவைகள் அமெரிக்காவின் வளர்ச்சியுடன் பின்னிப்பிணைந்துள்ளன.

மக்கள் எவ்வாறு பேசுகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் பல்வேறு கூறுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, தெற்கிலுள்ள ஏழை கறுப்பினத்தவர்கள் மற்றும் வடக்கிலுள்ள தொழில்துறை வெள்ளையர்களின் குடியேற்ற அலையானது ஒரு பங்கைக் கொண்டுள்ளது. புவியியல், தொழில்நுட்பம், முக்கியமாக வர்க்கப் பிரிவுகளும் அப்படித்தான்.

கறுப்பர், வெள்ளையர் அல்லது ஹிஸ்பானிக் என அனைத்து வறிய அண்டைப் பகுதிகளிலும் பேசப்படும் மிகவும் மோசமான ஆங்கிலம் சமூக சீரழிவின் விளைபொருளாகும். இது கறுப்பர்களின் மொழி அல்ல, அடக்குமுறையின் மொழியாகும்.

கறுப்பின தேசியவாதிகள் இனரீதியாக தீர்மானிக்கப்பட்டதாகக் கூறும் ஒரு புதிய மொழியைக் கண்டுபிடிப்பதற்காக மிகவும் வறிய சுற்றுப்புறங்களில் காணப்பட வேண்டிய இலக்கணத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர்.

சர்வதேச உள்ளடக்கம்

இனவாத அரசியலின் இந்த வளர்ச்சியானது அமெரிக்காவிற்கு தனித்துவமானது அல்ல. மில்லியன் கணக்கான மக்களின் பெருகிவரும் துன்பங்களுக்கு எந்தவொரு தீவிரமான தீர்வையும் வழங்க விரும்பாத, ஆளும் வர்க்கமானது வெளிநாட்டில் அது பயன்படுத்தும் அதே வகையான வகுப்புவாத அரசியலை உள்நாட்டில் திருப்பிக் கொண்டிருக்கிறது.

முன்னாள் யூகோஸ்லாவியாவின் நிலைமையைப் பாருங்கள். அங்கு ஸ்ராலினிச அதிகாரத்துவ ஆட்சியின் வீழ்ச்சியானது இனத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட தனி அரசுகளை உருவாக்க வழிவகுத்தது. யூகோஸ்லாவியாவின் சிதைவுக்கு வழிவகுத்து, உள்ளூர் தேசியவாதக் குழுக்கள் மொழி வேறுபாடுகளை எழுப்பத் தொடங்கின. செர்போ-குரோஷிய மொழி ஒரு பொதுவான பேச்சு மொழி, அனைவராலும் புரிந்து கொள்ளப்பட்டது மற்றும் வெவ்வேறு எழுத்துக்களைப் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே வேறுபடுகிறது என்பது பல தசாப்தங்களாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருப்பினும், யூகோஸ்லாவியாவின் தலைவிதி குறித்த விவாதங்கள் மிகவும் கசப்பானதாக மாறியபோது, குரோஷிய பிரதிநிதிகள் செர்பிய மொழி பேசுபவர்களை குரோஷிய மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என்று கோரத் தொடங்கினர்.

யூகோஸ்லாவியாவிலோ அல்லது அமெரிக்காவிலோ இன்று இந்த வகையான பிற்போக்கு தேசியவாதத்தின் தோற்றம், பொருளாதார அமைப்புமுறையின் அடிப்படை மாற்றங்களுடன் பின்னிப்பிணைந்துள்ளது. கணினி தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றின் வளர்ச்சிகளானது முதலாளித்துவ உற்பத்தியின் முன்னெப்போதும் இல்லாத பூகோளரீதியான ஒருங்கிணைப்பிற்கான நிலைமைகளை உருவாக்கியுள்ளன, ஒவ்வொரு கண்டத்திலும் மாபெரும் பன்னாட்டு நிறுவனங்கள் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கின்றன.

இந்த விரிவுரையைத் தயாரிப்பதில், உலக இணையத் தளம் வழியாக சர்வதேச அளவில் எபோனிக்ஸ் குறித்து எழுதப்பட்ட ஒவ்வொரு கட்டுரையையும் அணுக முடிந்தது. நாம் பூகோளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தின் சகாப்தத்தில் வாழ்கிறோம், அங்கு கணினி தொழில்நுட்பத்தின் வளர்ச்சிகள் உடனடி தகவல் தொடர்புகளை சாத்தியமாக்கியுள்ளன, உலகின் மிகவும் மாறுபட்ட பகுதிகளிலிருந்து மக்களை ஒன்றிணைக்கின்றன.

ஆயினும் தொழில்நுட்பத்தின் இந்த வளர்ச்சிகள் ஏன் உலக வறுமை, பட்டினி மற்றும் ஒடுக்குமுறையின் நிலைமைகளை தீர்க்கவில்லை அல்லது உலகின் மாறுபட்ட மக்களுக்கு இடையிலான தேசிய மற்றும் இன மோதல்களை முடிவிற்குக் கொண்டுவர உதவவில்லை என்பது எழுப்பப்பட வேண்டிய வெளிப்படையான கேள்வியாகும்.

ஏனெனில் இந்த அபிவிருத்திகளானது முதலாளித்துவ சொத்துடைமை உறவுகள் மற்றும் தேசிய-அரசு அமைப்புமுறையின் கட்டமைப்பிற்குள் நடந்துள்ளன. அவைகள் பன்னாட்டு நிறுவனங்களை உலகளாவிய நடவடிக்கைகளில் வழிநடத்த உதவியுள்ளன. இதில் அவர்கள் மலிவான உழைப்பு வளங்களையும் மற்றும் மூலப்பொருட்களுக்காகவும் உலகெங்கிலும் தேடுகிறார்கள். முன்னேறிய முதலாளித்துவ நாடுகளுக்கு இடையே சந்தைகளைக் கட்டுப்படுத்துவதற்கான போட்டி உக்கிரமடைந்துள்ளது. அதே நேரத்தில், வறிய நாடுகள் ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக் கொண்டு சுதேச மக்களை சுரண்டுவதற்கு மிகக் குறைந்த ஊதியங்களையும் சிறந்த சுரண்டும் நிலைமைகளையும் வழங்குகின்றன.

இந்தக் கட்டமைப்பிற்குள்தான் புதிய தேசிய பிரிவினைவாத இயக்கங்கள் உருவாகின்றன. அவற்றில் முற்போக்கு என்று எதுவும் இல்லை, புரட்சிகரமும் இல்லை. அவைகள் பெருந்திரளான உழைக்கும் மக்களுக்கான “விடுதலையை” அல்ல, மாறாக தங்களுக்கும் பூகோளரீதியாக-நடமாடும் மூலதனத்திற்கும் இடையே மிகவும் இலாபகரமான இணைப்பை விரும்பும் சலுகை பெற்ற அடுக்குகளின் சுயநல முயற்சிகளை பிரதிநிதித்துவம் செய்கின்றன. எபோனிக்ஸை ஊக்குவிக்கும் கறுப்பின தேசியவாத போக்குகள் இந்த உலகளாவிய போக்கின் ஒரு பகுதியாகும்.

இனமும் தேசமும்

இனம் மற்றும் தேசம் பற்றிய கருத்தாக்கங்கள் குறிப்பிட்ட நிகழ்வுகளை வெளிப்படுத்த எடுத்துக் கொள்ளப்பட்டாலும், ஒவ்வொன்றின் வரலாற்று வளர்ச்சியைப் பற்றிய புரிதல் இன்றைய அரசியல் பிரச்சினைகளை அணுகுவதில் முக்கியமானது.

இந்த கருத்துக்கள் அரசியல் ரீதியானவை, உயிரியல் ரீதியானவை அல்ல. முதலாளித்துவ சமூகத்தில் இனம் என்ற கருத்தாக்கம் பயன்படுத்தப்பட்ட விதம் சமூகம் எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகிறது என்பதை தெளிவுபடுத்துவதற்குப் பதிலாக மறைக்க உதவுகிறது. தூய்மையான மக்கள் இனம் என்று எதுவும் இல்லை.

சமூகத்தின் புதுப்பிக்கப்பட்ட இனவாதமயமாக்கலை எதிர்க்கும் எழுத்தாளர் கெனன் மாலிக், “இனத்தின் அர்த்தம்” என்ற தலைப்பிலான சமீபத்திய வெளியீட்டில், இனத்தின் நவீன அர்த்தம், அறிவொளிக் காலத்தின் சித்தாந்த அடிப்படையாக இருந்த சமத்துவம் என்ற இலட்சியங்களுக்கும், வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மை நிலைமைகளுக்கும் இடையிலான முரண்பாட்டின் காரணமாகவே இனம் என்பதற்கான நவீன அர்த்தம் வளர்ந்து முக்கியத்துவம் பெற்றது என்று விளக்குகிறது.

மாலிக்கின் புத்தகம் பின்வருவனவற்றை வலியுறுத்துகிறது, “மரபணுவியலாளர்கள் அனைத்து மரபணு வேறுபாடுகள் 85% சதவீதம் ஒரே உள்ளூர் மக்கள்தொகையில் உள்ள தனிநபர்களிடையே இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். மேலும் 8% சதவீதம் உள்ளூர் மக்கள் அல்லது ஒரு பெரிய இனமாகக் கருதப்படும் குழுக்களுக்கு இடையில் உள்ளது. மரபணு வேறுபாடுகள் வெறும் 7% சதவீதம் மட்டுமே முக்கிய இனங்களுக்கு இடையில் உள்ளது.

தேசத்தின் வரலாற்று வளர்ச்சி மற்றும் தேசியவாத சித்தாந்தங்களின் எழுச்சியை வரலாற்றாசிரியர் ஈ.ஜே.ஹாப்ஸ்பாம் “1780 முதல் தேசங்களும் தேசியவாதமும்: வேலைத்திட்டம், கட்டுக்கதை, யதார்த்தம்” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தில் மதிப்பாய்வு செய்கிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னும் அதன்போதும் எழுந்த தேசியவாதத்தில், தேசிய அரசின் வளர்ச்சியானது நிலப்பிரபுத்துவ சமூகத்தை விட ஒரு முன்னேற்றத்தைக் குறிக்கிறது. அது நூற்றுக்கணக்கான தனித்துவமான நகராட்சிகளைக் கொண்டிருந்தது. பெரிய தேசங்கள் சமூக மற்றும் பொருளாதார அலகுகளாக இருந்தன, அவை இனத்தையோ அல்லது பொதுவான மொழியையோ அடிப்படையாகக் கொண்டவை அல்ல.

நவீன முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன், தேசியவாத சித்தாந்தம் இனியும் முற்போக்கானதாக இருக்கவில்லை. தொழிற்துறை, விஞ்ஞானம், உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஆகியவற்றால் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு தேசிய அரசே முட்டுக்கட்டையாக மாறிக் கொண்டிருந்தது. தேசியவாத சித்தாந்தங்கள் நடுத்தர வர்க்க அடுக்குகளால் முன்வைக்கப்படுகின்றன, அவற்றின் சமூக நிலை முதலாளித்துவ சமூகத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது.

பெரும்பாலும், பிற்போக்கு தேசியவாதத்தின் வளர்ச்சியானது ஒரு மொழி ரீதியான வடிவத்தை எடுக்கிறது. பெல்ஜியத்தில் பிளெமிஷ் (டச்சு மொழி பேசும்) மற்றும் வாலூன் (பிரெஞ்சு மொழி பேசும்) இடையேயான மோதலை மேற்கோள்காட்டி, தற்போதைய எபோனிக்ஸ் விவாதத்தால் எழுப்பப்படும் பிரச்சினைகளுக்கு மிகவும் பொருத்தமான ஒரு கருத்தை ஹாப்ஸ்பாம் முன்வைக்கிறார்.

“தொழிலாள வர்க்கங்கள், நாம் பார்த்தபடி, மொழியைப் பற்றி உற்சாகமடைவது அரிதாகவே பொருத்தமானது. இருப்பினும் இது குழுக்களுக்கு இடையிலான பிற வகையான உராய்வுகளுக்கு ஒரு அடையாளமாக செயல்படக்கூடும். பெரும்பாலான கென்ட் (Ghent) மற்றும் ஆண்ட்வெர்ப் (Antwerp) தொழிலாளர்களால் லீயேஜ் (Liege) மற்றும் சார்ல்ரூவாவில் (Charleroi) உள்ள தங்கள் தோழர்களுடன் மொழிபெயர்ப்பு இல்லாமல் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது இருவரும் ஒரே தொழிலாளர் இயக்கத்தை உருவாக்குவதைத் தடுக்கவில்லை. இதில் 1903 இல் பெல்ஜியத்தில் சோசலிசம் குறித்த ஒரு நிலையான படைப்பு பிளெமிஷ் பிரச்சினையைக் குறிப்பிடும் அளவுக்கு மிகக் குறைந்த சிக்கலை ஏற்படுத்தியது: இன்று நினைத்துப் பார்க்க முடியாத சூழ்நிலை.”

அவர் மேலும் விளக்குகிறார்: “எழுதப்பட்ட வட்டார மொழியின் உத்தியோகபூர்வ பயன்பாட்டால் நின்ற அல்லது வீழ்ச்சியடைந்த வர்க்கங்கள் சமூக ரீதியாக அடக்கமான, ஆனால் படித்த நடுத்தர அடுக்குகளாக இருந்தன. இதில் பள்ளிக் கல்வி தேவைப்படும் உடலுழைப்பு அல்லாத வேலைகளை ஆக்கிரமிப்பதன் மூலம், கீழ் நடுத்தர வர்க்க அந்தஸ்தைப் பெற்றவர்களும் அடங்குவர். குட்டி முதலாளித்துவம் என்ற முன்னொட்டு இல்லாமல் தேசியவாதம் என்ற வார்த்தையை அரிதாகவே பயன்படுத்திய அக்கால சோசலிஸ்டுகளுக்கு அவர்கள் எதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பது தெரியும். மொழிவழித் தேசியத்தின் போர்க் கோடுகளை உள்ளூர் ஊடகவியலாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆர்வமுள்ள அடிமட்ட அதிகாரிகள் நிர்வகித்தனர்.”

சலுகை பெற்ற ஒரு அடுக்கின் சித்தாந்தம்

எபோனிக்ஸின் ஆதரவாளர்கள், அவர்களில் பலர், கெட்டோ சேரி கலகங்களுக்குப் பிறகு தனக்காக செதுக்கப்பட்ட நிலையைப் பாதுகாக்க முயற்சிக்கும் ஒரு சலுகை பெற்ற அடுக்கைக் கொண்டுள்ளனர். 1960 களில் பாரிய எழுச்சிகளைத் தொடர்ந்து, அப்போதைய ஜனாதிபதி நிக்சன் கறுப்பின முதலாளித்துவத்திற்கு அழைப்பு விடுத்ததோடு, ஆளும் வர்க்கத்திற்கும் ஒடுக்கப்பட்ட கறுப்பின தொழிலாளர்களின் வெகுஜனங்களுக்கும் இடையில் ஒரு இடைத்தடையாக செயல்படக்கூடிய ஒரு நடுத்தர வர்க்க அடுக்குகளை வளர்ப்பதற்கு நிதி வழங்கினார்.

இந்த விரிவுரையைத் தயாரிப்பதில், நாடு முழுவதும் உள்ள கறுப்பின ஆய்வுத் துறைகளில் பயன்படுத்தப்படும் முக்கிய நூல்களில் ஒன்றை நான் மதிப்பாய்வு செய்தேன். இது ஹரோல்ட் க்ரூஸ் எழுதிய புத்தகம், நீக்ரோ அறிவுஜீவியின் நெருக்கடி: கறுப்பின தலைமைத்துவத்தின் தோல்வியின் ஒரு வரலாற்று பகுப்பாய்வு. 1967ல் கறுப்பின அதிகாரம் இயக்கத்தின் உச்சத்தில் இருந்தபோது எழுதப்பட்ட, வர்க்கப் போராட்டத்தை வரலாற்றின் உந்து சக்தியாக நிராகரிக்குமாறும், அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கான ஒரு புதிய தொகுப்பை விரிவுபடுத்துமாறும் கல்வியாளர்கள் மற்றும் புத்திஜீவிகளின் புதிய அடுக்குக்கு க்ரூஸ் அழைப்பு விடுக்கிறார்.

வீரமும் கறுப்பு அறிவுஜீவியும் (Heroism and the Black Intellectual,) என்ற நூலில் இந்த படைப்பு குறித்து கருத்துரைக்கும் போது, டிரினிட்டி கல்லூரியின் இணை பேராசிரியரான ஜெர்ரி காஃபியோ வாட்ஸ், வளாகங்களில் சம்பந்தப்பட்டுள்ள சமூக அடுக்கு குறித்து ஒரு முக்கியமான அவதானிப்பை முன்வைக்கிறார். அதாவது “பல கறுப்பின அறிவுஜீவிகள் கறுப்பின தேசியவாத அணியில் சேரும் விருப்பம் பெரும்பாலும் பரந்த கறுப்பின செயற்பாட்டாளர் சமூகத்திற்கு தங்களை நியாயப்படுத்தவும், பின்னர் அரசியல் அமைப்பு கறுப்பினத்தவருக்கு வழங்கிய இயக்கத்தை அணுகவும் அவர்களின் விருப்பங்களிலிருந்து உருவானதாகும். நகர்ப்புறங்களில் அமைதியை நிலைநாட்டுவதற்கு விடையிறுக்கும் வகையில் தேசியவாத அறிவுஜீவிகளுக்கு இதனை வழங்கியது. அதன் போர்க்குணமிக்க சொல்லாட்சி இருந்தபோதிலும், கறுப்பின தேசியவாதம் முதலாளித்துவ அறிவுஜீவிகளுக்கு பொருளாதார மற்றும் அந்தஸ்து இயக்கத்தின் சித்தாந்தமாக மாறியது.”

இந்தப் பத்தியை நான் மேற்கோள் காட்டுவதற்குக் காரணம், இது இனவாதக் கோட்பாடுகளை முன்னெடுப்பவர்களின் வர்க்கக் கண்ணோட்டத்தையும் முன்னோக்கையும் சுருக்கமாகக் கூறுகிறது. மேலும், தேசியவாத மற்றும் பேரினவாத கோட்பாடுகளின் அடிப்படையில் இன ஒடுக்குமுறை நிலைமைகளுக்கு எதிராக போராடுவது சாத்தியமற்றது என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது. இன ஒடுக்குமுறை என்பது தூய்மையானதும் எளிமையானதுமான இன ஒடுக்குமுறை அல்ல, மாறாக வர்க்க சமூகத்தின் விளைபொருளாகும்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் பெருநிறுவன இயக்குநர் குழு அறைகளில் இந்த அடுக்குக்கு வசதியான வேலைகள் கிடைத்தவுடன், கறுப்பின சக்தி கோரிக்கைகள் குறைந்துவிட்டன. எவ்வாறெனினும், இன்று, வளர்ந்து வரும் சமூக நெருக்கடியால் அச்சுறுத்தப்படுவதாக உணரும் அவர்கள், ஆபத்தான மற்றும் பிளவுபடுத்தும் போலி விஞ்ஞானச் சொற்களை முன்வைக்கின்றனர். இது நடைமுறைப்படுத்தப்பட்டால், அது அமெரிக்க சமூகத்தின் பால்கனைமயமாக்கலுக்கு வழிவகுக்கும்.

இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தங்களில் ஜனநாயக சீர்திருத்தத்தின் மூலம் வறிய மக்களின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கான போராட்டங்களுடன் தங்களை இணைத்துக் கொண்ட கறுப்பின அறிவுஜீவிகளுக்கு இன்றைய கல்வியாளர்களின் இந்த அடுக்கு கூர்மையான முரணாக நிற்கிறது.

ஹார்லெம் மறுமலர்ச்சிக் காலத்தில், இந்த நூற்றாண்டின் முற்பகுதியில், கவிதை, இலக்கியம், இசை மற்றும் கலை மலர்ந்தது. லாங்ஸ்டன் ஹியூக்ஸ், கிளாட் மெக்கே, கவுன்டி கலென், ஜீன் டூமர், ஜோரா நீல் ஹர்ஸ்டன் மற்றும் பிறரின் படைப்புகளில், இனவெறி மற்றும் அடிமைத்தனத்தின் பாரம்பரியம் காரணமாக கறுப்பினத்தவர்களை பாதிக்கும் பிரச்சினைகளின் வெளிப்பாட்டைக் காணலாம். பல எழுத்தாளர்களின் நோக்கம், உள்நாட்டுப் போரை வழிநடத்திய இலட்சியங்களின் பொருத்தமின்மையை, அந்த நேரத்தில் நடந்து கொண்டிருந்த இனப் பயங்கரவாதம் மற்றும் பாகுபாடுகளுடன் நிரூபிப்பதாகும்.

மறுமலர்ச்சியின் எழுத்தாளர்கள் ஒரே மனம் அல்லது ஒரு குறிப்பிட்ட இலக்கிய இயக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், அவர்கள் கறுப்பின மக்களின் கலாச்சார மற்றும் கல்வித் திறனை உயர்த்த உந்தப்பட்டனர். கறுப்பினத்தவர்கள் தாழ்ந்தவர்கள் அல்லது ஒருங்கிணைப்பு சாத்தியமற்றது என்ற வெள்ளை மேலாதிக்கவாதிகளின் பொய்களை எதிர்த்துப் போராடினார்கள். அவர்கள் கூட்டங்கள், விரிவுரைகளை ஏற்பாடு செய்தனர் மற்றும் பொருளாதார மற்றும் சமூக பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றனர்.

1923 ஆம் ஆண்டில், ஹோம் டு ஹார்லெம் என்ற பல கவிதைகளையும் நாவலையும் எழுதிய கிளாட் மெக்கே, ரஷ்யாவுக்குச் சென்று கம்யூனிஸ்ட் அகிலத்தின் 4 வது காங்கிரசில் பங்கேற்றார். அப்போது கருத்து தெரிவித்த அவர், “உலகம் முழுவதும் வீசும் ரஷ்ய இடியால் மில்லியன்கணக்கான சாதாரண மனிதர்களும், ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களும் கிளர்ந்தெழுந்தனர்” என்றார்.

ரஷ்யாவில் நடந்த அக்டோபர் புரட்சி, தொழிலாள வர்க்கத்தை கருத்தியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக ஒழுங்கமைப்பதற்கான மார்க்சிச இயக்கத்தின் பல தசாப்த கால போராட்டத்தின் உச்சக்கட்டத்தைக் குறித்தது. இது உலகெங்கிலுமுள்ள அறிவுஜீவிகள் மற்றும் கலைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகவும், தொழிலாள வர்க்கம் ஒரு மனிதனை இன்னொருவர் ஒடுக்குவதை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்பதற்கான சான்றாகவும் அவர்கள் இதைப் பார்த்தனர்.

“நீக்ரோ பிரச்சினை” குறித்து ட்ரொட்ஸ்கி

மாநாட்டின் போது, அக்டோபர் புரட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், முதல் தொழிலாளர் அரசில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு மார்க்சிச எதிர்ப்பாளருமான லியோன் ட்ரொட்ஸ்கிக்கு மெக்கே தொடர்ச்சியான கேள்விகளை எழுதினார். அப்போது “நீக்ரோ பிரச்சினை” என்று அழைக்கப்பட்டதற்கு மெக்கேவுக்கு ட்ரொட்ஸ்கி அளித்த பதில் மிகவும் தீர்க்கதரிசனமானது மற்றும் 1920 களில் இருந்ததைப் போலவே இன்றும் உண்மையாக உள்ளது. ட்ரொட்ஸ்கி விவரித்தது அனைத்து வகையான தேசியவாதத்திற்கும் எதிரான பாட்டாளி வர்க்க சர்வதேசியவாத முன்னோக்கு ஆகும்.

ட்ரொட்ஸ்கி பின்வருமாறு விளக்கினார்: அதாவது “இன்று, உடனடியாக, பல அறிவார்ந்த, இளம், சுய தியாகம் செய்யும் நீக்ரோக்கள், அவர்களின் எண்ணிக்கை எவ்வளவு சிறியதாக இருந்தாலும், நீக்ரோக்களின் பெரும் திரளின் பொருளியல் மற்றும் தார்மீக மட்டத்தை உயர்த்துவதில் உற்சாகத்துடன் நிரம்பியிருப்பதும், அதே நேரத்தில் நீக்ரோ வெகுஜனங்களின் நலன்கள் மற்றும் தலைவிதியின் அடையாளத்தைப் புரிந்துகொள்ளும் மனரீதியான திறனைக் கொண்டிருப்பதும் மிக முக்கியமானதாகும். உலகின் வெகுஜனங்களுடன், முதலாவதாக ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் தலைவிதியுடன் ஆகும்.

“இந்தப் பணி நீக்ரோ பேரினவாத உணர்வோடு நடத்தப்படக் கூடாது, அது வெறுமனே வெள்ளைப் பேரினவாதத்தின் பிரதிபலிப்பாக மட்டுமே இருக்கும், மாறாக நிறத்தைப் பொருட்படுத்தாமல் சுரண்டப்பட்ட அனைவரின் ஒற்றுமை உணர்வில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.”

ஹார்லெம் மறுமலர்ச்சியை உருவாக்கிய எழுத்தாளர்கள் முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட நிலைமைகளை மாற்றுவதற்கான நோக்கத்திற்காக அம்பலப்படுத்த முயன்றனர். இன்று, சமூகத்தின் அழுகிய அனைத்தையும் தனது சுயநலத்திற்காக பாதுகாக்க விரும்பும் ஒரு அடுக்கு நம்மிடம் உள்ளது. இதனால், தெருப் பேச்சு மொழி ஒரு தனித்துவமான மொழியாக மாறுகிறது மற்றும் வறிய உள் நகர சேரிகள் ஒரு தனி கலாச்சாரத்திற்கு அடிப்படையாக அமைகின்றன.

முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கு அழைப்பு விடுத்த இளம் கறுப்பின புத்திஜீவிகள் மற்றும் தொழிலாள வர்க்க போராளிகளின் ஒரு அடுக்கை உருவாக்குவதில் 1920 களில் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு மைய பாத்திரத்தை வகித்தது. ஹார்லெம் போன்ற சமூகங்களில் பெருந்திரளான தொழில்துறை மற்றும் சேவைத் தொழிலாளர்கள் முதலாளித்துவ வர்க்கத்தால் ஊக்குவிக்கப்பட்ட இனவாதத்தைக் கடந்து சமூகத்தில் அதன் வர்க்க ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வளர்ந்து வந்தது.

அந்த எதிர்பார்ப்புகள் என்ன ஆனது? இதைப் புரிந்துகொள்வதற்கு சோவியத் ஒன்றியத்தின் சீரழிவு மற்றும் ஸ்ராலினிசம் ஆற்றிய பாத்திரம் பற்றிய ஆய்வு தேவைப்படுகிறது. இந்த நூற்றாண்டின் பிரச்சினைகளின் மையத்தில் அக்டோபர் புரட்சியின் பேரழிவுகரமான காட்டிக்கொடுப்பு மற்றும் உலகெங்கிலுமுள்ள ஸ்ராலினிசம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளால் சோசலிசத்தை இழிவுபடுத்துதல் மற்றும் சிதைத்தல் ஆகியவை உள்ளன.

கறுப்பின தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்கள் தொடர்பாக, கம்யூனிஸ்ட் கட்சி உண்மையிலேயே ஒரு துரோக அரசியல் பாத்திரத்தை வகித்தது. அவர்கள் கறுப்பினத் தொழிலாளர்களின் தலைவிதியை ஜனநாயகக் கட்சியுடனும், 1960 களில், NAACP இன் அமைதிவாத அரசியலுடனும் பிணைத்தனர்.

1960 களில் கறுப்பின தேசியவாதத்தின் வளர்ச்சியானது ஸ்ராலினிசம் மற்றும் நான்காம் அகிலத்திலிருந்து வெளிவந்த மற்றொரு அரசியல் போக்கான பப்லோவாத திருத்தல்வாதத்தால் தொழிலாள வர்க்கத்தை காட்டிக்கொடுத்ததன் விளைபொருளாகும்.

பப்லோவாதிகள் நான்காம் அகிலத்தை கலைக்க அழைப்பு விடுத்ததோடு, இலத்தீன் அமெரிக்காவில் விவசாய கெரில்லா இயக்கங்கள் முதல் அமெரிக்காவில் கறுப்பின தேசியவாதிகள் வரை உலகெங்கிலுமுள்ள முதலாளித்துவ தேசியவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் தங்களை தகவமைத்துக் கொண்டனர்.

இன்று தொழிலாளர் உலகக் கட்சி (Workers World Party), சோசலிச நடவடிக்கை (Socialist Action) மற்றும் புரட்சிகர தொழிலாளர் கழகம் (Revolutionary Workers League) போன்ற குழுக்களில் உள்ள இடது குட்டி-முதலாளித்துவ எதிர்ப்பாளர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் எபோனிக்ஸை தழுவுகிறார்கள். அடையாள அரசியலில் முற்றிலும் மூழ்கி, தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான எந்தவொரு போராட்டத்தையும் நிராகரிக்கும் அவர்களின் அரசியல், இனப் பிரிவினையை விதைப்பதில் ஆளும் வர்க்கத்தின் ஒரு துணைக் கருவியாக செயற்படுகிறது.

அறுபதுகளிலும் எழுபதுகளிலும் தேசியவாதத்தை எதிர்த்த ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான வேர்க்கர்ஸ் லீக் மட்டுமே. பாட்டாளி வர்க்க சர்வதேசியவாத முன்னோக்கை உறுதியாக அடிப்படையாகக் கொண்ட எமது கட்சி, எந்தவொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் எந்தவொரு பிரச்சினையும் தேசிய எல்லைகளின் கட்டமைப்பிற்குள் தீர்க்கப்பட முடியாது என்பதை புரிந்து கொண்டுள்ளது. தொழிலாளர்கள் தாங்கள் ஈடுபட்டுள்ள போராட்டங்களின் சர்வதேசத் தன்மையையும் ஒரு சுயாதீனமான சர்வதேச சக்தியாக ஒழுங்கமைக்க வேண்டியதன் அவசியத்தையும் அங்கீகரிக்காமல் புரிந்து கொள்ளாமல் ஒரு அடி கூட முன்னோக்கிச் செல்ல முடியாது.

சமூகத் துருவப்படுத்தல்

சிவில் உரிமைகள் இயக்கமும் முந்தைய போர்க்குணமிக்க போராட்டங்களும் இன சமத்துவத்தை உத்தியோகபூர்வமாக அங்கீகரிப்பதற்கு வழிவகுத்தாலும், மில்லியன் கணக்கான கறுப்பின உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் வீட்டுவசதி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி நிலைமைகள் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று மோசமாக உள்ளன. இனப்பாகுபாடு இன்னும் அதிகமாக உள்ளது.

இருப்பினும், சமூக நிலைமைகளின் சீரழிவு கறுப்பினத்தவர்களுக்கு தனித்துவமானது அல்ல. அமெரிக்கா முழுவதிலும், உண்மையில் சர்வதேச அளவிலும், சமூகத்தின் ஒரு துருவத்தில் வறுமையின் வளர்ச்சி, மறுபுறம் செல்வம் குவிப்புடன் கைகோர்த்துச் சென்றுள்ளது. குறிப்பாக 1970-1990 வரை, அமெரிக்காவில் செல்வத்திற்கும் வறுமைக்கும் இடையே ஒரு துருவமுனைப்படுத்தல் அதிகரித்து வந்தது. தொழிலாளர்களின் உண்மையான ஊதியங்கள் சீராக வீழ்ச்சியடைந்துள்ளன, அதே நேரத்தில் செல்வந்தர்கள் மற்றும் பில்லியனர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத விகிதத்தில் வளர்ந்துள்ளது.

எவ்வாறெனினும், இந்த நிகழ்வு அமெரிக்காவின் கறுப்பின மக்களிடையே குறிப்பாக கூர்மையான வடிவத்தை எடுத்துள்ளது. இக்காலகட்டத்தில் 75,000 டாலர்களுக்கும் அதிகமான சராசரி வருமானம் கொண்ட கறுப்பினக் குடும்பங்களின் சதவீதம் 2.5 சதவீதத்திலிருந்து 4.7 சதவீதமாக இரு மடங்காக அதிகரித்துள்ளது. கறுப்பினத்தவராக இருந்தாலும் சரி, வெள்ளையினத்தவராக இருந்தாலும் சரி, மக்கள்தொகையின் எந்த அடுக்கிலும் இது மிகப் பெரிய அதிகரிப்பாகும்.

ஒரு சமீபத்திய ஆய்வு, பின்வரும் புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டியது: “சிறுபான்மை மக்களில் மிகவும் பின்தங்கிய உறுப்பினர்களின் சமூக பொருளாதார நிலையானது 1970 முதல் விரைவாக மோசமடைந்துள்ள நிலையில், சாதகமான உறுப்பினர்களின் நிலை கணிசமாக மேம்பட்டுள்ளது.... 1973 முதல் 1982 வரை தொழில்முறை, தொழில்நுட்ப, நிர்வாக மற்றும் நிர்வாக பதவிகளில் கறுப்பினத்தவர்களின் எண்ணிக்கை 57% (974,000 லிருந்து 1,533,000 ஆக) அதிகரித்தது, அதே நேரத்தில் அத்தகைய பதவிகளில் வெள்ளையர்களின் எண்ணிக்கை 36% மட்டுமே அதிகரித்தது.

முதலாளித்துவ சமூகத்தில் வறுமையின் வளர்ச்சி என்பது ஒரு இனப்பிரச்சனை அல்ல, மாறாக ஒரு வர்க்கப் பிரச்சினை ஆகும். இது உலகப் பொருளாதாரத்தின் மாறிவரும் வடிவங்களுடன் பின்னிப்பிணைந்துள்ளது. உலகெங்கிலுமுள்ள முக்கிய முதலாளித்துவ நாடுகளில், நலன்புரி அரசு கலைக்கப்பட்டு, பொதுக் கல்விக்கான நிதி கடுமையாகக் குறைக்கப்பட்டு வருகிறது.

தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவையும் பாதிக்கும் தற்போதைய கல்வி நெருக்கடியைக் கருத்தில் கொள்ளும்போது, எபோனிக்ஸை ஊக்குவிப்பவர்களின் முற்றிலும் பிற்போக்குத்தனமான தன்மையானது கூர்மையாக கவனம் பெறுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் கல்வியறிவு விகிதம் பள்ளிக்குச் சென்றவர்களுக்கு 100 சதவீதத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. இன்று, 42 மில்லியன் அமெரிக்க பெரியவர்கள் படிப்பறிவுவற்றவர்களாக உள்ளனர். பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைப் பெறும் நோயாளிகளில் முப்பத்து மூன்று சதவீதம் பேர்கள் லேபிள்களைப் படிக்க முடியாதுள்ளனர்.

கடந்த காலத்தில் அமெரிக்காவின் சிறந்த பொதுப் பள்ளி அமைப்புகளில் ஒன்றாக இருந்த கலிபோர்னியா, இப்போது கல்வி செலவினங்களில் தேசிய அளவில் 43 வது இடத்தில் உள்ளது. அதன் வகுப்பறைகள் நாட்டிலேயே மிகவும் நெரிசலானவை மற்றும் பற்றாக்குறையுள்ளவைகளாகும். 1995 ஆம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்க கல்வித் துறையானது கலிபோர்னியாவின் நான்காம் வகுப்பு மாணவர்களை வாசிப்புத் திறனில் லூசியானாவுடன் இணைத்து கடைசி இடத்தில் உள்ளது.

சமூகத்தின் கல்வித் தரத்தில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சியை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை ஒருவர் தீவிரமாக எடுத்துக் கொண்டால், அது பொதுப் பள்ளி முறையை மறுசீரமைப்பதை உள்ளடக்குகிறது. பழைய கட்டிடங்களை சரிசெய்யவும், புதிய பள்ளிகளைக் கட்டவும், ஆசிரியர்களை நியமிக்கவும், கணினிகளைப் பெறவும், வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தற்போது இருக்கும் வசதிகளை பரந்தளவில் விரிவுபடுத்துவதற்கும் கல்விக்கு பில்லியன்களை கொட்ட வேண்டியிருக்கும்.

இதற்கு நாம் வாழும் சமூக அமைப்பை மாற்றுவதற்கான போராட்டம் தேவைப்படுகிறது. பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சமூகம் மறுசீரமைக்கப்பட வேண்டுமே தவிர, ஒரு சிறிய செல்வந்த அடுக்கின் இலாப உந்துதலுக்காக அல்ல. அத்தகைய இலக்கை இன அல்லது தேசிய பிரிவினைவாதத்தின் அடிப்படையில் அடைய முடியாது. இதற்கு சமூக சமத்துவத்திற்கான பொதுவான போராட்டத்தில் கறுப்பின, வெள்ளையின, ஹிஸ்பானிக் மற்றும் புலம்பெயர்ந்த அனைத்து உழைக்கும் மக்களின் போராட்டங்களையும் ஐக்கியப்படுத்துவது அவசியமாகும்.

Loading