மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவரும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவருமான டேவிட் நோர்த், 2024 மே தினத்தை அறிவிக்கும் வகையில் பூகோளரீதியான இணையவழி பேரணி தொடர்பான ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். உலக சோசலிச வலைத் தளமானது அந்த அறிவிப்பின் உரையை இன்றைய முன்னோக்காக வெளியிடுகிறது.
சனிக்கிழமை, மே 4 அன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது மே தினத்தை அனுசரிப்பதற்கு இணையவழி பேரணி ஒன்றை நடத்தவிருக்கிறது. இந்த ஆண்டு இந்த இணையவழி பேரணியானது தனிச்சிறப்புவாய்ந்த முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.
பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான போர்வெறியர்களின் இரு-கட்சி கூட்டணியினது ஆதரைவைக் கொண்ட பைடென் நிர்வாகம் அனைத்து பிரதான ஏகாதிபத்திய சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து, ஒரு மூன்றாம் உலகப் போரை நோக்கி இடைவிடாமல், தீவிரமாக முன்நகர்ந்து வருகிறது.
அமெரிக்க வரலாற்றில் அடிக்கடி ஜனாதிபதித் தேர்தல்கள் போருக்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளன. 1916 இல் சமாதான வேட்பாளராக போட்டியிட்ட வூட்ரோ வில்சன், 1917 இல் பதவியேற்ற ஒரு மாதத்திற்குப் பின்னர் முதலாம் உலகப் போரில் நுழைந்தார். 1940 தேர்தலுக்கு ஒரு வருடம் கழித்து அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் நுழைந்தது.
1961 ஜனவரியில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஜோன் எப். கென்னடி, மூன்று மாதங்களுக்குப் பிறகு கியூபா மீது பன்றிகள் வளைகுடா (Bay of Pigs) பகுதியில் பேரழிகரமான படையெடுப்பைத் தொடங்கினார். 1964 இல் “சமாதான வேட்பாளராக” இருந்த லிண்டன் ஜோன்சன், 1965 பெப்ரவரியில் வடக்கு வியட்நாம் மீது குண்டுவீசத் தொடங்கியதுடன் ஜூலை மாதத்திலிருந்து 100,000 அமெரிக்க சிப்பாய்களை தரையிறக்கினார்.
ரிச்சார்ட் நிக்சன், 1968 இல் ஒரு வேட்பாளராக தன்னிடம் “சமாதானத்திற்கான திட்டம்” இருப்பதாக கூறி, 1969 இல் வியட்நாம் போரை மேலும் தீவிரப்படுத்தி, 1970 இல் கம்போடியா மீது படையெடுத்தார். 1988ல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி முதலாம் புஷ், 1989ல் பனாமா மீது படையெடுத்ததோடு, 1990 ஆகஸ்டில் முதலாவது வளைகுடாப் போருக்கான தயாரிப்புகளையும் தொடங்கினார்.
திருடப்பட்ட 2000ம் ஆண்டு தேர்தலில் பதவிக்கு வந்த பின்னர் இரண்டாம் புஷ், 2001 இல் நீண்டகாலமாக திட்டமிடப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பையும் 2003 இல் ஈராக்கிற்கு எதிரான இரண்டாவது போரையும் தொடங்குவதற்கு செப்டம்பர் 11 தாக்குதலை ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்தினார்.
2024 தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், இந்த வரலாற்று அனுபவங்கள் உடனடி முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.
ஒரு மூன்றாம் உலகப் போருக்கான சாத்தியம் என்பது வெகுதொலைவில் இல்லை. இந்த போரின் ஆரம்ப கட்டங்கள் ஏற்கனவே நடந்து வருகின்றன. இதுதான் ரஷ்யா, சீனா மற்றும் ஈரானுக்கு எதிரான பூகோளரீதியான இராணுவ நடவடிக்கைகளுக்காக இந்த வாரம் இருகட்சிகளும் கூடுதலாக பல பில்லியன்களை (95 பில்லியன்) டாலர்களை ஒதுக்கியதன் முக்கியத்துவம் ஆகும்.
அனைத்திற்கும் மேலாக, பைடென் நிர்வாகம் இன்னுமொரு “சிவப்புக் கோட்டை” கடந்து விட்டதாகவும், ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய நீண்ட தூர ஏவுகணைகளை கியேவுக்கு இரகசியமாக வழங்கி வருவதாகவும் இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவுக்கு எதிரான அதன் நடைமுறையளவிலான போரை அமெரிக்கா தீவிரப்படுத்துவதற்கு எந்த வரம்புகளும் கிடையாது.
தேர்தலுக்கு முன்பே, உக்ரேனுக்குள் அமெரிக்காவினதும் நேட்டோவினதும் போர் படைகளை நிலைநிறுத்த ஏற்கனவே ஒரு “இரகசிய” முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்று ஒருவர் அனுமானிக்க முடியும். ஒரே கேள்வி, அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்கள், விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்களுடனான போரில், அமெரிக்காவின் நேரடித் தலையீடானது நவம்பர் தேர்தலுக்கு முன்னரா அல்லது பின்னரா தொடங்கும் என்பதுதான்.
பல்கலைக்கழக வளாகத்தில் “யூத-எதிர்ப்பு” என்ற பொய்யான கூற்றைப் பயன்படுத்தி, மாணவர்களின் இனப்படுகொலை-எதிர்ப்பு போராட்டங்களுக்கு, கூட்டாட்சி, மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் வன்முறையாக எதிர்வினை ஆற்றுவதானது ஒரு உலகப் போருக்கான தயாரிப்புகளின் சந்தேகத்திற்கிடமற்ற அறிகுறியாகும். இது அனைத்து உள்நாட்டு போர்-எதிர்ப்பு எதிர்ப்பாளர்களுக்கும் எதிராக, பாரிய அரசாங்க ஒடுக்குமுறையின் முதல் கட்டம் மட்டுமே ஆகும். வெளிநாடுகளில் போர் என்றால் அதன் அர்த்தம் உள்நாட்டில் போர் என்று பொருள்.
தவிர்க்கவியலாமல் அணுவாயுதங்களைப் பயன்படுத்துவதற்கு இட்டுச் செல்லக் கூடிய ஓரு பேரழிவுகர துரிதப்படுத்தலின் பாரதூரமான அபாயத்தை தடுப்பதற்கு ஒரு அக்கறையான மற்றும் தொலைநோக்கு கொண்ட அரசியல் மூலோபாயம் அவசியமாகும்.
சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளரான ஜோசப் கிஷோரின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரமானது, ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக அமெரிக்காவிற்கு உள்ளும் சர்வதேச அளவிலும் ஒரு சக்திவாய்ந்த தொழிலாள வர்க்க அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதை மையமாகக் கொண்டுள்ளது. உலகப் போரை எதிர்ப்பது என்பது, அவசியமாக, உலக முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு போராட்டமாகும்.
ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி போர் வெறியர்களின் சதிக்குழுவுக்கு —அல்லது ஐரோப்பாவில் உள்ள ஏகாதிபத்திய அரசாங்கங்களுக்கு— வேண்டுகோள் விடுப்பதால் எதையும் சாதிக்கப் போவதில்லை.
நடைபெறவிருக்கும் மே 4 இணையவழிப் பேரணியில், உலகெங்கிலுமிருந்து அனைத்துலகக் குழுவின் பேச்சாளர்கள் போருக்கு எதிரான ஒரு உலக இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு மூலோபாயத்தையும் வேலைத்திட்டத்தையும் முன்னெடுப்பார்கள்.
இதில் கலந்துகொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு இன்றே பதிவு செய்யுங்கள்!