முன்னோக்கு

உலகப் போருக்கான இருகட்சி மசோதாவில் பைடென் கையெழுத்திட்டார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போருக்கும், காஸாவில் படுகொலையின் ஏழாவது மாதத்தில் உள்ள இஸ்ரேலிய இராணுவத்திற்கும், மற்றும் சீனாவிற்கு எதிரான ஒரு அமெரிக்க இராணுவ தளமாக தாய்வானைத் தயாரிப்பு செய்வதற்கும் மேலதிகமாக 95 பில்லியன் டாலர்கள் வழங்கும் சட்ட மசோதாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் புதன்கிழமை காலை கையெழுத்திட்டார். இந்தச் சட்ட மசோதா சனிக்கிழமை பிரதிநிதிகள் சபையில் இருகட்சி பெரும்பான்மையாலும், செவ்வாய்கிழமை இரவு செனட்டில் 78-19 என்ற வாக்குகளாலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் அரச விருந்தளிப்பு மண்டபத்தில் ஏப்ரல் 24, 2024 புதன்கிழமையன்று, ஜனாதிபதி ஜோ பைடென் 95 பில்லியன் டாலர்கள் உக்ரேன் உதவித் தொகுப்பில் கையெழுத்திடுவதற்கு முன்பு பேசுகிறார், இதில் இஸ்ரேல், தைவான் மற்றும் பிறவற்றிற்கான ஆதரவும் அடங்குகின்றன. [AP Photo/Evan Vucci]

உக்ரேன், இஸ்ரேல் மற்றும் தைவானுக்கான போர் செலவுகளை ஒரே சட்டத்தில் இணைப்பதன் மூலம், பைடென் நிர்வாகமும் அமெரிக்க ஆளும் உயரடுக்கும் ஒட்டுமொத்தமாக இந்த மோதல்களை தனித்தனியாகவும் தனித்துவமாகவும் பார்க்கவில்லை என்பதை இந்த மசோதா குறிக்கிறது. மாறாக, அவை ஒரு பூகோளரீதியான போரில் இணைக்கப்பட்ட அரங்குகளாகும். அமெரிக்க ஏகாதிபத்தியமானது ஆர்க்டிக் பெருங்கடலில் இருந்து கருங்கடல் வரையிலும், பின்னர் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா ஊடாக சீனா மற்றும் பசிபிக் வரையிலும் நீண்டுள்ள ஒரு பரந்த போர் முனைகளில் சண்டையிட்டு வருகிறது.

இந்த மசோதா கையெழுத்திட்ட பின்னர் தொலைக்காட்சியில் பேசிய பைடென், உக்ரேனிய போர் குறித்து பிரதானமாகப் பேசினார். அதை அவர் ஒரு தூண்டுதலற்ற படையெடுப்புக்கு விடையிறுப்பாக முன்வைத்தார். வியட்நாம் போரின் கருத்தியல் அடித்தளமான 'டோமினோ கோட்பாடு' பற்றி அவர் ஒரு நகைப்பிற்குரிய விளக்கத்தை அளித்தார்.

'உக்ரேனில் புட்டின் வெற்றி பெற்றால், ரஷ்ய படைகளின் அடுத்த நகர்வு ஒரு நேட்டோ கூட்டாளி மீதான ஒரு நேரடி தாக்குதலாக இருக்கும்,' என்று பைடென் அறிவித்தார். இது நேட்டோ மாநாட்டின் ஷரத்து ஐந்தையும் மற்றும் முழுவீச்சிலான போரையும் தூண்டுகின்றது.

உண்மையில், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரானது, பால்டிக் அரசுகளில் இருந்த முன்னாள் சோவியத் குடியரசுகளை உள்வாங்கியதுடன், கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் நேட்டோவை விரிவாக்கியதன் மூலமாக, இப்போது உக்ரேன், மால்டோவா மற்றும் ஜோர்ஜியாவை உள்ளடக்குவதற்கு அச்சுறுத்தி ஏகாதிபத்தியத்தால் திட்டமிட்டு தூண்டிவிடப்பட்டது.

ஏகாதிபத்திய சக்திகள் உக்ரேனிய மக்களை பீரங்கிக்கு இரையாக ஆக்குகின்றன. ஏனெனில் அவைகள் திட்டமிட்டு போரைத் தீவிரப்படுத்தியுள்ளன. உக்ரேன் ஆட்சியானது கட்டாய இராணுவ சேவைக்கான வயதைக் குறைத்து, படுகொலைக்கு அனுப்ப தெருக்களில் மனிதர்களை சுற்றி வளைக்கத் தொடங்கியுள்ளது.

அதே அறிக்கையில், பைடென் அறிவிக்கையில், முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட இராணுவ தளவாடங்களின் பாரிய கப்பல்கள் உக்ரேனை வந்தடையும் வழியில் உள்ளன என்று அறிவித்தார்:

அடுத்த சில மணி நேரங்களில், சொல்லப்போனால், ஒரு சில மணி நேரங்களில், வான் பாதுகாப்புக்காக உக்ரேனுக்கு பீரங்கிகள், ராக்கெட் அமைப்புகளுக்கான வெடிகுண்டுகள், மற்றும் கவச வாகனங்கள் ஆகிய உபகரணங்களை நாங்கள் அனுப்பத் தொடங்கி உள்ளோம்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள தளங்களில் இருந்து 1 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் உக்ரேனுக்கு அனுப்பப்பட்டு வருவதாக பத்திரிகை செய்திகள் சுட்டிக்காட்டின.

அதேநேரத்தில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நீண்டதூர ATACMS ஏவுகணைகளை நிலைநிறுத்தியிருப்பதாக நியூ யோர்க் டைம்ஸ் அறிவித்தது, இது உக்ரேனின் தெற்கே கருங்கடலுக்குள் விரிவடைந்துள்ள பெருமளவு ரஷ்ய தீபகற்பமான கிரிமியா முழுவதிலும் ரஷ்ய இலக்குகளைத் தாக்க உக்ரேனை அனுமதிக்கும் ஒரு பெரும் தீவிர விரிவுபடுத்தலாகும்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுத் தலைவரான டேவிட் நோர்த், பைடெனின் அறிக்கைக்கும் டைம்ஸ் பத்திரிகை அறிக்கைக்கும் விடையிறுப்பாக ட்விட்டர்/எக்ஸ் இல் கீழ்கண்டவாறு எழுதினார்:

பைடென் நிர்வாகம் மற்றொரு 'சிவப்புக் கோட்டை' கடந்து, ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய நீண்ட தூர ஏவுகணைகளை கியேவுக்கு இரகசியமாக வழங்கி வருகிறது. ரஷ்யாவுக்கு எதிரான அதன் நடைமுறையளவிலான போரை அமெரிக்கா தீவிரப்படுத்தி விரிவுபடுத்துவதற்கு எந்த வரம்புகளும் கிடையாது.

உக்ரேனுக்குள் அமெரிக்க மற்றும் நேட்டோ போர் படைகளை நிலைநிறுத்த ஏற்கனவே ஒரு 'இரகசிய' முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ஒருவர் அனுமானிக்க முடியும். ஒரேயொரு கேள்வி, போரில் அமெரிக்காவின் நேரடித் தலையீடு நவம்பர் தேர்தலுக்கு முன்னரா அல்லது பின்னரா அறிவிக்கப்படும் என்பதுதான்.

டைம்ஸ் பத்திரிகையின் ஒரு தனிக் கட்டுரையில், ஐரோப்பாவில் இந்த வசந்த காலத்தில் 90,000 நேட்டோ துருப்புகளின் பாரிய ஒன்றுதிரட்டல் குறித்து செய்தி வெளியிட்டது, 'ஒரு நவீன வல்லரசு மோதலின் ஆரம்ப துடிப்புகள் எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு முன்னோட்டம்' என்று அது அழைத்தது.

இஸ்ரேலைப் பொறுத்தவரை, பைடென் காஸா மீதான தாக்குதல் குறித்து ஏதும் கூறவில்லை. இது ஒரு இனப்படுகொலை என்று சர்வதேச அமைப்புக்களால் கண்டிக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு கண்டத்திலும் தெருக்களில் ஆர்ப்பாட்டமாக அணிவகுத்துச் செல்லும் மில்லியன் கணக்கான மக்களாலும் கண்டிக்கப்பட்டு வருகிறது. ஹமாஸ் மற்றும் ஈரானின் தாக்குதல்களால் இஸ்ரேல் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சித்தரித்தார். 'நான் மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன், இஸ்ரேலுக்கான எனது உறுதிப்பாடு அது உறுதியான இரும்பு உறை போன்றது' என்று பைடென் அறிவித்தார்.

சட்டத்தை நிறைவேற்றியதற்காக காங்கிரஸுக்கு அவர் நன்றி தெரிவித்தார். 'குறிப்பாக இருகட்சி தலைமைக்காகும்: அதாவது சபாநாயகர் மைக் ஜோன்சன்; தலைவர் ஜெப்ரீஸ்; தலைவர்கள் ஷூமர் மற்றும் மெக்கானெல். அவர்கள் எப்போதும் உடன்படுவதில்லை, ஆனால் அது மிகவும் முக்கியமானது என்றால், அவர்கள் முன்னேறி சரியானதைச் செய்தார்கள்” என்றார்.

ஒரு அதிவலது கிறிஸ்தவ அடிப்படைவாதியான ஜோன்சனை அவர் அரவணைத்தமையானது, நியூ யோர்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு ஜோன்சன் விஜயம் செய்வதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் நடந்ததாகும். அங்கு அவர் காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையை எதிர்ப்பதற்காக மாணவர்களை 'யூத எதிர்ப்பாளர்கள்' என்று சாடினார். இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கவும், இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்வலர்களால் வளாகத்தில் நிறுவப்பட்ட கூடார நகரத்தை கலைக்கவும் நியூ யோர்க் பொலிஸ் துறை அல்லது தேசிய காவலர் படையை நிலைநிறுத்த அவர் அழைப்பு விடுத்தார்.

தனது 'குடியரசுக் கட்சி நண்பர்கள்' மற்றும் 'சகாக்கள்' என்று அவர் அழைப்பவர்களுக்கு பைடெனின் சான்று இந்த 2024 தேர்தல் ஆண்டின் யதார்த்தத்தை நிரூபிக்கிறது. அமெரிக்கா ஒரு இருகட்சி அரசாங்கத்தைக் கொண்டுள்ளது, அதில் இரண்டு முதலாளித்துவ கட்சிகளுக்கும் இடையே எந்த அடிப்படை வேறுபாடுகளும் இல்லை.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

அமெரிக்க ஜனாதிபதிக்கான சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளரான ஜோசப் கிஷோர், அந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கும் மற்றும் நாடெங்கிலும் கட்டவிழ்த்து விடப்பட்ட ஒடுக்குமுறை அலைக்கும் பின்வருமாறு பதிலிறுத்தார்:

2024 தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையில் 'குறைந்த தீமை' என்று எதுவும் இல்லை. காஸா இனப்படுகொலையை எதிர்ப்பவர்கள் மீதான பொலிஸ்-அரசு ஒடுக்குமுறை, ஆளும் உயரடுக்கின் இரு கட்சிகளாலும் வழிநடத்தப்பட்டு, போரிலும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலிலும் ஒன்றுபட்டுள்ளன.

இந்த மதிப்பீடு சரியானதாகும். இரு கட்சிகளுமே அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் வெளிநாடுகளில் அதன் இரத்தந் தோய்ந்த இராணுவ சாகசங்களையும் பாதுகாக்கின்றன. அவைகள் மனித நாகரீகத்தின் அழிவுக்கு வித்திடும் ஒரு அணுவாயுத போரைத் தூண்டிவிடும் அபாயத்தைக் கொண்டுள்ளன. இரண்டு கட்சிகளுமே காஸாவில் இஸ்ரேலால் நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலையை பாதுகாக்கின்றன. இது, ஏகாதிபத்திய சக்திகள் இன்னும் பரந்த அளவில் பயன்படுத்த தயாரிப்பு செய்து வரும் குற்றம் சார்ந்த வழிவகைகள் குறித்த ஒரு முன்கூட்டிய எச்சரிக்கையை வழங்குகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோளரீதியான மேலாதிக்கம் —'இன்றியமையாத தேசம்... உலகின் அதிவல்லரசு' என்று பைடென் அழைத்தார். 'கட்டவிழும் பூகோளரீதியான நிகழ்வுகளை நாம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கவில்லை, அவற்றை வடிவமைக்கிறோம்' என்று அமெரிக்க ஜனாதிபதி பெருமையடித்துக் கொண்டார்.

நாடெங்கிலும் கல்லூரி வளாகங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டது உட்பட, இனப்படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மீதான பாரிய ஒடுக்குமுறைக்கு இரு கட்சிகளும் ஆதரவளிக்கின்றன.

புதன்கிழமையன்று CNN நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில், 30 வயதிற்குட்பட்ட அமெரிக்கர்களில் 76 சதவீதம் பேர் இஸ்ரேலுக்கு முழு ஆதரவளிக்கும் பைடென் நிர்வாகத்தின் கொள்கையை எதிர்க்கின்றனர் என்று கண்டறிந்துள்ளது. இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் தொழிலாளர்கள் இருபகுதியினரிடையேயும் காணப்படும் பாரிய எதிர்ப்பு வெறுமனே ஒரு தலைமுறை நிகழ்வுப்போக்கு அல்ல. காஸாவில் இழைக்கப்பட்டு வரும் கொடூரமான குற்றங்கள் மற்றும் பிரம்மாண்டமான அமெரிக்க இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கை செலுத்த அவர்களது வாழ்க்கைத் தரங்களையும் சமூக நலன்களையும் தியாகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இரண்டிற்கும் பல பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மத்தியில் நிலவும் ஆழ்ந்த விரோதத்தை இது வெளிப்படுத்துகிறது.

தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றியிருப்பதும், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டில் இருந்தும் சுயாதீனமானதாகவும் அவற்றுக்கு எதிராகவும் ஒரு உண்மையான சோசலிச மற்றும் போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே மையமான அரசியல் பணியாக இருக்கிறது.

Loading