ரஃபா தாக்குதலால் இடம்பெயர்ந்த காஸா மக்களை தங்க வைக்க இஸ்ரேல் கூடார முகாம்களை அமைக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செயற்கைக்கோள் மற்றும் தரை அடிப்படையிலான படங்களின்படி, ரஃபா மீதான தாக்குதலால் இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்களை தங்க வைப்பதற்காக மத்திய காஸாவில் இஸ்ரேல் கூடார முகாம்களை அமைத்துள்ளது.

இஸ்ரேலிய தாக்குதலால் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருக்கும் ஒரு கூடார முகாம் செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 27, 2024 அன்று காஸா ஸ்ட்ரிப்பின் ரஃபாவில் காணப்படுகிறது. [AP Photo/Hatem Ali]

இந்த முகாம்கள், மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள், சுமார் 1 மில்லியன் மக்கள், தஞ்சம் புகுந்துள்ள காஸாவின் தெற்கு நகரத்தின் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் (ஐடிஎப்) ஒரு தாக்குதலுக்கான நீண்டகால திட்டங்களின் பாகமாக உள்ளன.

“காஸாவின் தென்பகுதியிலுள்ள நகரமான ரஃபாவைக் கைப்பற்ற தேவையான அனைத்து தயாரிப்புகளையும் இஸ்ரேலிய இராணுவம் நடத்தியுள்ளது. அரசாங்க ஒப்புதல் கிடைத்த தருணத்தில் அது ஒரு நடவடிக்கையைத் தொடங்க முடியும்” என்று ஒரு மூத்த இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரியை மேற்கோளிட்டு டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டது.

அமெரிக்க காங்கிரஸால் 95 பில்லியன் டாலர் இராணுவ நிதியுதவி மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஜோ பைடென் சட்டத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, ரஃபாவைத் தாக்கும் இஸ்ரேலியத் திட்டங்களின் வெளிப்படையான முடுக்கம், காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை மற்றும் ஈரான் மீதான தீவிரமடைந்துவரும் போருக்கு 26 பில்லியன் டாலர் நிதியளிக்கப்படுகிறது.

பாரிய கைதுகள் மற்றும் பொலிஸ் அடக்குமுறைகள் இருந்தபோதிலும், அமெரிக்க பல்கலைக்கழகங்கள் உட்பட, இனப்படுகொலைக்கு எதிராக அதிகரித்து வரும் எதிர்ப்புகள் உலகம் முழுவதும் தொடர்ந்து பரவி வரும் நிலையில், ரஃபா மீதான தாக்குதலுக்கான தயாரிப்புகள் வந்துள்ளன.

கடந்த புதனன்று, இஸ்ரேலிய இராணுவம் அது இரண்டு ரிசர்வ் பிரிகேடுகளை ரஃபா மீதான தாக்குதலுக்கான தயாரிப்பில் அணிதிரட்டியிருப்பதாகக் கூறியது.

நெதன்யாகு அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை கூறுகையில், நகரத்தின் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல் “முன்னேறி வருகிறது” என்று கூறினார்.

இஸ்ரேலிய அதிகாரிகள் புதனன்று எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ரஃபா மீதான தாக்குதலுக்கான திட்டங்கள் குறித்து விவாதிக்க கூட்டங்களை நடத்தினர் என்று Axios தகவல் கொடுத்துள்ளது.

காஸாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு தங்குமிடம் கொடுப்பதற்காக இஸ்ரேல் 40,000ம் கூடாரங்களை வாங்கியதாக பைனான்சியல் டைம்ஸ் தகவல் கொடுத்துள்ளது. ஒரு இஸ்ரேலிய அதிகாரி டைம்ஸ் இடம், “இது ஒன்றும் இரகசியமல்ல: ரஃபாவில் ஒரு இராணுவ நடவடிக்கை நடக்கும், மனிதாபிமான பகுதிகள் அமைக்கப்படும், சம்பந்தப்படாத பொதுமக்களை நாங்கள் அங்கு நகர்த்துவோம், அதற்கு நேரம் எடுக்கும்” என்று அவர் கூறினார்.

எகிப்திய அதிகாரிகளை மேற்கோள் காட்டி, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், “ரஃபாவில் இருந்து மக்களை வெளியேற்றுவது இரண்டு முதல் மூன்று வாரங்கள் நீடிக்கும் மற்றும் அமெரிக்கா, எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற பிற அரபு நாடுகளின் ஒருங்கிணைப்புடன் இது செய்யப்படும்” என்று அறிவித்தது. “சண்டை குறைந்தபட்சம் ஆறு வாரங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று செய்தித்தாள் மேலும் கூறியது.

பெப்ரவரியில், ஐ.நா.விற்கான அமெரிக்க தூதர் லிண்டா தோமஸ்-கிரீன்ஃபீல்ட், “ரபாவில் தற்போதைய சூழ்நிலையில், அந்தப் பகுதியில் இப்போது ஒரு இராணுவ நடவடிக்கையை தொடர முடியாது” என்று அறிவித்தார்.

அந்த மாதத்தின் பிற்பகுதியில் வெள்ளை மாளிகை அந்த மொழியை மீண்டும் குறிப்பிட்டது. இந்த தாக்குதல் “நம்பகமான மற்றும் செயல்படுத்தத்தக்க திட்டம் இல்லாமல் தொடரக்கூடாது” என்று அறிவித்தது.

இந்த வார்த்தை ஜாலம் இந்த மாதம் மேலும் மாற்றியமைக்கப்பட்டது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு இடையேயான விவாதங்களை வெள்ளை மாளிகையில் வாசித்து, “ரஃபாவில் ஹமாஸ் தோற்கடிக்கப்படுவதைப் பார்க்கும் பகிரப்பட்ட நோக்கத்தை இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.”

இதனை வேறுவிதமாகக் கூறினால், வெள்ளை மாளிகை படையெடுப்பிற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது, இறுதி விவரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டியுள்ளது என்பதாகும்.

தெற்கு காஸாவின் நாசர் மருத்துவமனைக்கு அருகிலுள்ள பாரிய புதைகுழிகளில் சடலங்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில் ரஃபா மீதான படையெடுப்பு வந்துள்ளது.

காஸாவின் சிவில் அவசர சேவையின் கூற்றுப்படி, பாரிய புதைகுழி இடங்களில் இதுவரை 310 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செவ்வாயன்று, ஐ.நா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் நாசர் மற்றும் அல்-ஷிபா மருத்துவமனை வளாகங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழிகள் குறித்து சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்தார்.

“தண்டனையிலிருந்து விலக்களிக்கும் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, இது சர்வதேச புலனாய்வாளர்களை உள்ளடக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார். “சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் மருத்துவமனைகள் மிகவும் சிறப்பு பாதுகாப்புக்கு உரித்துடையவை. பொதுமக்கள், கைதிகள் மற்றும் போரில் ஈடுபட்டுள்ள மற்றவர்களை வேண்டுமென்றே கொல்வது ஒரு போர்க்குற்றமாகும்” என்று அவர் தெரிவித்தார்.

டர்க்கின் செய்தித் தொடர்பாளர் பின்வருமாறு கூறினார்:

எச்சரிக்கை ஒலி எழுப்ப வேண்டிய அவசியத்தை நாங்கள் உணர்கிறோம், ஏனெனில் தெளிவாக பல உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர்களில் சிலரின் கைகள் கட்டப்பட்டிருந்தன, இது நிச்சயமாக சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களை சுட்டிக்காட்டுகிறது, மேலும் இவை மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

ஒரு அறிக்கையில், யூரோ-மத்திய தரைக்கடல் மனித உரிமைகள் கண்காணிப்பு (யூரோ-மெட்) அமைப்பு, சர்வதேச விசாரணைகளுக்கான அழைப்புகளில் இணைந்து, பாரிய புதைகுழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட பல உடல்கள் “கைவிலங்கிடப்பட்டு ... மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள்” என்று தெரிவித்தது.

இந்த கண்டுபிடிப்புகள் “ஆபத்தானவை, மேலும் ஒரு சுயாதீன சர்வதேச விசாரணைக் குழுவை அமைப்பது உட்பட அவசர சர்வதேச நடவடிக்கை தேவை” என்று யூரோ-மெட் மேலும் தெரிவித்தது. பாதிக்கப்பட்டவர்களில் பலர் “முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கொலைக்கும், அத்துடன் தடுத்து வைக்கப்பட்டு கைவிலங்கிடப்பட்ட அதேவேளையில்” தன்னிச்சையான மற்றும் நீதிக்குப் புறம்பான மரணதண்டனைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் மூத்த அதிகாரியான எரிக்கா குவேரா ரோசாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த பாரிய புதைகுழிகளின் இதயத்தை உடைக்கும் கண்டுபிடிப்பு, தடயவியல் நிபுணர்கள் உட்பட மனித உரிமைகள் புலனாய்வாளர்கள், ஆக்கிரமிக்கப்பட்ட காஸா பகுதிக்கு ஆதாரங்களை பாதுகாப்பதை உறுதிசெய்ய, உடனடி அணுகலை மேற்கொள்வதற்கான அவசரத்தை எடுத்துக்காட்டுகிறது.

அவர் மேலும் கூறியதாவது:

காஸாவிற்கு மனித உரிமை புலனாய்வாளர்களுக்கான அணுகல் இல்லாததால், கடந்த ஆறு மாதங்களாக சர்வதேச சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்களின் முழு அளவிலான பயனுள்ள விசாரணைகள் தடைபட்டுள்ளதால், இந்த முறைகேடுகளில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே ஆவணப்படுத்த அனுமதிக்கிறது.

காஸா மோதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை 34,262 ஐ எட்டியது. காஸாவின் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, தகர்க்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளின் கீழ் இன்னும் புதையுண்ட ஆயிரக்கணக்கானவர்கள் இதில் கணக்கிடப்படவில்லை. மேலும் 77,229 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர்.

உத்தியோகபூர்வமாக ரஃபா தாக்குதல் தொடங்குவதற்கு முன்பே, இஸ்ரேல் தொடர்ச்சியா ரஃபா மீது குண்டுவீச்சுகளை தொடர்கிறது. நகரில் புதன்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

இதற்கிடையில் காஸாவின் முழு மக்களும் அன்றாட உணவுப் பாதுகாப்பின்மைக்கு உட்பட்டு, பஞ்சத்தின் விளிம்பில் உள்ளனர்.

உலக உணவுத் திட்டத்தின் ஜெனீவா இயக்குனர் ஜியான் கார்லோ சிர்ரி புதனன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஆறு வாரங்களுக்குள் காஸா பஞ்ச நிலைமைகளை எதிர்கொள்ளக்கூடும் என்று கூறினார். “நாளுக்கு நாள் பஞ்ச நிலைமைக்கு நாம் நெருங்கி வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

நடந்து கொண்டிருக்கும் முற்றுகை நிலைமைகளின் கீழ், “பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவது கடினம் மற்றும் சில நேரங்களில் சாத்தியமற்றது” என்பதையும் அவர் இதில் சேர்த்துக் கொண்டார். “தற்போதைய நிலைமைகளின் கீழ், நிலைமை மேலும் மோசமடையும் என்று நான் அஞ்சுகிறேன்” என்று அவர் எச்சரித்தார்.

Loading