மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
காஸாவில் இனப்படுகொலை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பு இயக்கம் குறித்து உலக சோசலிச வலைத் தளம் களத்தில் இருந்து செய்திகளை வழங்குகிறது.
பொலிஸ் குண்டர்களிடம் இருந்து வன்முறையான தாக்குதல்களும் கைதுகளும் மற்றும் அரசியல்வாதிகளிடம் இருந்து ஏராளமான பொய்களை முகங்கொடுத்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் காஸாவில் இனப்படுகொலையை தொடர்ந்து எதிர்த்தும், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள அவர்களின் பல்கலைகழக வளாகங்களில் முகாம்களைக் கட்டியெழுப்பி வருகின்றனர்.
முதலாளித்துவ அரசியல்வாதிகள், பெருநிறுவன பத்திரிகையாளர்கள், மற்றும் அவதூறு-எதிர்ப்பு கழகத்தின் தலைமை செயலதிகாரி ஜொனாதன் கிரீன்பிளாட் ஆகியோரும் கூட, முகாம்களை “யூத-எதிர்ப்பு” அல்லது “பயங்கரவாதச்” செல் குழுக்களாக சித்தரிக்க செய்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. பல யூத மாணவர்கள் மற்றும் நாத்திகர்கள் உட்பட அனைத்து மத மாணவர்களும் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ள பெருநிறுவனங்களிடமிருந்து தங்கள் பல்கலைக்கழகங்கள் விலக வேண்டும் என்று அழைப்பு விடுத்து ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.
நியூயோர்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 17 அன்று “காஸா ஒற்றுமை முகாம்” நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, 40 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய சார்பு முகாம்கள் அமெரிக்காவில் உயிர்பெற்றுள்ளன. இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியிலும் ஒற்றுமை முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன.
நிறுவப்பட்ட முகாம்களுடன், காஸாவில் இனப்படுகொலைக்கு எதிரான உலகளாவிய போராட்டங்கள் ஒவ்வொரு முக்கிய கண்டத்திலும் தொடர்கின்றன. ஏமனின் சானாவில், ஆறு மாதங்களுக்கும் மேலாக இருந்ததைப் போலவே, ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், காஸாவில் அமெரிக்க ஆதரவிலான தாக்குதலை எதிர்த்து வெள்ளியன்று ஒன்றுகூடினர்.
அமெரிக்கா விநியோகித்த குண்டுகள் மற்றும் போர் விமானங்களைப் பயன்படுத்தியதன் மூலமாக, அந்தக் குறுகலான பிரதேசப் பகுதியில் அப்பாவி மக்களுக்கு எதிராக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கையில் உத்தியோகபூர்வமாக 34,000 க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர், இது ஐயத்திற்கிடமின்றி மிகக் குறைந்த எண்ணிக்கையாகும், அதேவேளையில் 80,000 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பெரும்பாலான வீடுகள், பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன.
95 பில்லியன் டாலர்கள் போருக்கான நிதி ஒதுக்கீட்டின் மிக சமீபத்திய இருகட்சி ஒப்புதலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளதும், படுகொலைக்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய இராணுவ தடையற்ற ஆதரவு மீதான சீற்றத்தால் எரியூட்டப்பட்டு, உலகெங்கிலும் போராட்டங்கள் தொடர்கின்றன. ஆர்ப்பாட்டங்களின் பெருவாரியான அமைதியான தன்மைக்கு இடையே, பொலிஸானது ஆர்ப்பாட்டங்கள் மீது ஒரு வன்முறையான ஒடுக்குமுறையைத் தொடங்கியுள்ளது, இனப்படுகொலையில் அவர்களின் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசாங்கங்கள் உடந்தையாக இருப்பதை எதிர்த்ததற்காக நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் பீடத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்களைக் கைது செய்துள்ளது.
வெள்ளியன்று பேர்லினில், கூட்டாட்சி பாராளுமன்றத்தின் (கூட்டாட்சி பாராளுமன்ற இருப்பிடம்) முன் ஜேர்மன் போலீசார் வன்முறையற்ற போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை மூச்சுத்திணறடித்து, அடித்து உதைத்து கைது செய்தனர். அமெரிக்க ஜனாதிபதிக்கான சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் ஜோ கிஷோர் இத்தாக்குதலைக் கண்டித்து, “ஜேர்மன் ஏகாதிபத்தியம் அதன் நாஜி பாரம்பரியங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது” என்று ட்விட்டர்/எக்ஸ் இல் எழுதினார்.
அமெரிக்காவில், வியாழனன்று பெருந்திரளான கைதுகள் கொலம்பஸ், ஓஹியோவில் உள்ள ஓஹியோ மாநிலப் பல்கலைக்கழகம் மற்றும் இண்டியானாவின் புளூமிங்டனில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடந்தன. கைதுகளுக்கு முன்பு, வளாகக் கட்டிடங்களின் கூரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயுதமேந்திய பொலிஸ் ஸ்னைப்பர் படைகள், ஆயுதங்களுடன் மாணவர்கள் மீது குறிவைக்கும் புகைப்படங்களை, மாணவர்கள் எடுத்ததோடு, அதனை வீடியோவாகவும் பதிவு செய்தனர்.
ஓஹியோ மாநிலத்தில், சில ஆசிரியர்கள் உட்பட சுமார் 40 பேர் செவ்வாய்க்கிழமை முதல் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்ளூர் தகவல்களின்படி, வியாழக்கிழமை இரவு 16 மாணவர்கள் உட்பட 36 பேர் முகாம் இருந்த இடத்தில் போலீஸ் வெறியாட்டத்தை அடுத்து கைது செய்யப்பட்டனர். சமூக ஊடக காணொளி டசின் கணக்கான பொலிசார் கலகத் தடுப்பு உடைகளில் இருப்பதையும், புல்தரையில் இருந்ததற்காக மாணவர்களை தடியடிகளுடன் தாக்குவதையும் காட்டுகிறது.
ஓஹியோ மாநிலத்தைச் சேர்ந்த மாணவி சபியா அப்தெல்சலாம் NBC4 இடம் போலீசார் மாணவர்களைக் கைது செய்யத் தொடங்கியபோது எதிர்ப்பாளர்கள் அமைதியாக இருந்தனர் என்றார். ‘எங்கள் நோக்கம் வெறுமனே அமைதியாக இருந்து எங்கள் நிலையை உறுதிப்படுத்துவதாகும்.’ பின்னர் [பொலிஸ்] அதை அமைதியாக இருக்கவிடவில்லை. அவர்கள் தாக்க ஆரம்பித்து கைது செய்யத் தொடங்கினர்” என்று அவர் கூறினார்.
ப்ளூமிங்டனில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தின் Dunn Meadow இல் வியாழக்கிழமை நடந்த பேரணியின் போது குறைந்தது 33 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டம் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஏப்ரல் 24 அன்று, பல்கலைக்கழகத்தில் ஒரு “தற்காலிக” குழு அமுல்படுத்திய பல்கலைக்கழக கொள்கையை மீறியதற்காக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர், இது வளாகத்தில் “தற்காலிக கட்டமைப்புகளை” தடை செய்தது.
தங்கள் மாணவர்கள் கைது செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த இந்தியானா பல்கலைக்கழகத்தின் (IU) டசின் கணக்கான ஆசிரியர்கள் வெள்ளியன்று Dunn Meadow இல் மாணவர்களுடன் இணைந்து கண்டனப் பேரணி நடத்தினர்.
ஒவ்வொரு அமெரிக்க வளாகத்திலும் பொலிஸ் எடுத்த பாரிய கைதுகள் மற்றும் வன்முறை நடவடிக்கைகள் என்பன, ஒரு சில கீழ்ப்படியாத பொலிஸ் துறைகளின் விளைவு அல்ல. ஜனாதிபதி ஜோ பைடென் உத்தரவிட்ட உத்தரவுகளை போலீசார் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இணைவு மையங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
ஏப்ரல் 21 அன்று, வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றில், பைடென் “கல்லூரி வளாகங்களில்” “அப்பட்டமான யூத-எதிர்ப்பு” நடந்து வருகிறது என்றும், அவரது நிர்வாகம் “யூத-எதிர்ப்பை எதிர்கொள்வதற்கான முதல் தேசிய மூலோபாயத்தை ஆக்ரோஷமாக செயல்படுத்தும் என்றும், கூட்டாட்சி அரசாங்கத்தின் முழு சக்தியையும் இந்த முயற்சிக்குப் பின்னால் வைக்கும்” என்றும் கூறினார்.
அதற்கடுத்த நாள், பைடென் வளாகங்களில் நடக்கும் “யூத-எதிர்ப்பு போராட்டங்களை” அவர் கண்டிப்பதாகவும், “அதைக் கையாள நான் ஒரு வேலைத்திட்டத்தை அமைத்துள்ளேன்” என்றும் கூறி அந்த “பெரிய பொய்யை” மீண்டும் கூறினார்.
அரசு ஆதரவிலான இந்தத் தணிக்கை திட்டத்தின் முடிவுகளை, பல்வேறு வளாகங்களில் காண முடியும். வெள்ளியன்று, இல்லிநோய்ஸ் அர்பானா-சாம்பைன் பல்கலைக்கழக முகாமில் இருந்த மாணவர்களை போலீசார் கைது செய்தனர். கொலராடோவின் டென்வரில் உள்ள அவுராரியா வளாகத்தில் தங்கள் கூடாரங்களுக்கு அருகில் தரையில் அமர்ந்திருந்த மாணவர்களையும் பொலிசார் கைது செய்தனர்.
போராட்டக்காரர்கள் கைவிலங்கிடப்பட்டு “டென்வர் ஷெரிஃப்” என்று பெயரிடப்பட்ட ஒரு பேருந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சிபிஎஸ் கொலராடோ அறிவித்தது. பொலிஸுக்கு கூடுதலாக, “வளாகத்தில் காணப்பட்ட சட்ட அமலாக்கத்தின் ஒரு பகுதியாக” “கொலராடோ தேசிய காவலர் படையினர்கள் இருந்ததாகத் தோன்றியது” என்று சிபிஎஸ் அறிவித்தது.
டெட்ராய்டில் உள்ள வேய்ன் மாநில பல்கலைக்கழகத்தில், இஸ்ரேலில் இருந்து கவர்னர் வாரியத்தை வெளியேற்றக் கோரிய மாணவர்களை போலீசார் தாக்கியதை காண முடிந்தது.
அரச வன்முறையுடன் இணைந்து, பைடென் நிர்வாகம் கடந்த 48 மணி நேரத்தில் ஆர்ப்பாட்டங்களை அரசியல் ரீதியாக செயலிழக்கச் செய்யும் மற்றும் மூச்சுத்திணறச் செய்யும் முயற்சியில் உயர்மட்ட தாக்குதல் பணியாளர்களை, மாணவர்களின் முகாம்களுக்கு அனுப்பியுள்ளது.
வெள்ளியன்று, அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) அமைப்பின் அங்கத்தவர்களும் நியூ யோர்க் பிரதிநிதிகளான அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்டெஸ் மற்றும் ஜமால் போவ்மன் இருவருமே ஒழுங்கமைப்பாளர்களைச் சந்திக்க கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு பயணித்தனர். முகாமில் அவர்கள் சமூகமளித்தமையானது ஆயிரக்கணக்கான சமூக ஊடக பயனர்களிடமிருந்து கண்டனங்களை ஈர்த்தது.
வியாழனன்று, DSA இன் மற்றொரு உறுப்பினரான டெக்சாஸ் பிரதிநிதி கிரெக் காசர், “போர்நிறுத்தத்திற்கு” அவர் ஆதரவை பணிவுடன் அறிவிக்க ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். காசர் ஆஸ்டினில் இருந்த அதே நாளில், USA Today அவருடனான ஒரு நேர்காணலை பிரசுரித்தது, அதில் அவர் பைடெனை “எனது வாழ்நாளில் மிகவும் தொழிலாளர்-சார்பு ஜனாதிபதி” என்று புகழ்ந்தார்.
புதன்கிழமை, ஆஸ்டினில் 57 மாணவர்கள் “அத்துமீறி நுழைந்ததற்காக” கைது செய்யப்பட்டனர். டெக்சாஸை தளமாகக் கொண்ட என்பிஆர் நிருபர், பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளருடன் உறுதிப்படுத்தினார், அடுத்த நாள் மாணவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டாலும், குறைந்தபட்சம் மீதமுள்ள செமஸ்டர் முழுவதும் மாணவர்கள் மீண்டும் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாணவர்கள் தங்கள் இறுதித் தேர்வுகளை முடிக்க அனுமதிக்கப்படுவார்களா அல்லது பட்டப்படிப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
டெக்சாஸ் வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு ஆதரவாளர்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. வெள்ளிக்கிழமை, பாலஸ்தீன ஒற்றுமைக் குழுவின் ஆஸ்டின் பகுதியானது, பல்கலைக்கழகம் கிளப்பை வளாகத்திலிருந்து இடைநீக்கம் செய்ததை உறுதிப்படுத்தியது. ஒரு அறிக்கையில், PSC-ATX எழுதியது: “பாலஸ்தீன ஒருமைப்பாட்டுக் குழுவை UT ஆனது இடைநீக்கம் செய்திருப்பது, பாலஸ்தீன மக்களுக்கு எதிரான [இஸ்ரேலின்] இனப்படுகொலை தாக்குதலிருந்து திசைதிருப்புவதற்கும் செயல்படுத்துவதற்கும் பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகும்!”
வியாழனன்று ஆஸ்டினில் இருந்து பதிவிடப்பட்ட ஒரு அறிக்கையில், அமெரிக்க துணை ஜனாதிபதிக்கான சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் ஜெரி வைட் மாணவர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தார், அதாவது “இது போராடுவதற்கான இந்த மாணவர்களின் உரிமைகள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, இது தொழிலாள வர்க்கத்தின் உரிமை மீதான ஒரு தாக்குதலாகும்” என்று கண்டித்தார்.
“அது மத்திய கிழக்காக இருந்தாலும் சரி, அல்லது உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக மற்றும் சீனாவுக்கு எதிராக விரிவாக்கப்பட்ட புதிய போர்களாக இருந்தாலும் சரி, இந்த போர்களில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் மகன்களாகவும் மகள்களாகவும் இருப்பார்கள்,” என்று கூறிய வைட், “தொழிலாளர்களுக்கு இந்த போர்களில் எந்த ஆர்வமும் இல்லை, அவற்றுக்கு எதிராக போராடுவதற்கான ஒவ்வொரு ஆர்வமும் உள்ளது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.