முன்னோக்கு

மக்ரோனின் திடீர் தேர்தல் அழைப்புக்குப் பிறகு, நவ-பாசிசம் மற்றும் போருக்கு எதிராக முன்னோக்கி செல்லும் பாதை எது?

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த சனிக்கிழமையன்று, பிரான்ஸ் முழுவதிலும் உள்ள நகரங்களில் நூறாயிரக்கணக்கான மக்கள் அதிதீவிர வலதுசாரிகளுக்கு எதிராக அணிவகுத்துச் சென்றனர். ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜூன் 9 ஐரோப்பிய தேர்தல்களில் தீவிர வலதுசாரிக் கட்சிகள் பெற்ற ஆதாயங்களுக்கு எதிர்வினையாற்றிய பின்னர், பிரெஞ்சு பாராளுமன்றத்தை கலைத்து ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆகிய தேதிகளில் திடீர் தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்தார். நவபாசிச தேசிய பேரணியின் (RN) வளர்ச்சி குறித்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே பெருகிய கவலை உள்ளது.

தேர்தல் நடந்த அன்றிரவு, கட்சியின் தலைமையகத்தில் பிரெஞ்சு அதிதீவிர வலதுசாரித் தலைவர் மரீன் லு பென் பேசும்போது, பிரெஞ்சு அதிதீவிர வலதுசாரி தேசிய பேரணியின் தலைவரான ஜோர்டான் பார்டெல்லா அருகிலிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறார். [AP Photo/Lewis Joly]

தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட உடனேயே, அடிபணியாத பிரான்ஸ் (LFI) கட்சியின் தலைவரான ஜோன்-லுக் மெலன்சோன், “புதிய மக்கள் முன்னணியை” உருவாக்குவதாக அறிவித்தார். இந்த புதிய மக்கள் முன்னணி, அதிதீவிர வலதுசாரி மற்றும் பொலிஸ் அரச இராணுவவாதத்தின் எழுச்சியைத் தடுக்க முயல்பவர்களுக்கு ஒரு அரசியல் பொறியாகும். முதலாளித்துவ சோசலிஸ்ட் கட்சி (PS), ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மற்றும் பசுமைவாதிகள் போன்ற முதலாளித்துவ ஆளும் கட்சிகளுடன் ஒரு பலவீனமான கூட்டணிக்குள் தொழிலாளர்களை அடிபணிய வைப்பதன் மூலம் சோசலிசத்திற்கான போராட்டத்தைத் தடுப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஊழல்பிடித்த கட்சிகள் தங்கள் ஆதரவாளர்களை பேரழிவுக்குள் மட்டுமே கொண்டு செல்ல முடியும்.

PS மற்றும் PCF உடனான தனது கூட்டணி பற்றிப் பேசிய மெலன்சோன் ஜூன் 10 அன்று பின்வருமாறு கூறினார்:

ஐரோப்பிய தேர்தல் முடிவுகள் மற்றும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க சூழ்நிலையை எதிர்கொள்ள இன்று பேசினோம். மனிதநேய தொழிற்சங்க, அரச சார்பற்ற மற்றும் குடிமக்களிலுள்ள அனைத்து இடதுசாரி சக்திகளையும், முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய மக்கள் முன்னணியின் அரசியலமைப்பிற்கான ஒன்று கூடலுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

1944 ல் நாசி-ஒத்துழைப்பு விச்சி ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் முதல் முறையாக, அதிதீவிர வலதுசாரிகள் பிரான்சில் ஒரு அரசாங்கத்தை அமைக்க தயாராக உள்ளனர். நேட்டோ சக்திகள் காஸாவில் இனப்படுகொலையை ஆதரித்து வருவதாலும், சோவியத் யூனியனுக்கு எதிரான நாசிக்களின் அழித்தொழிப்பு போருக்குப் பிறகு, ரஷ்யாவிற்கு எதிரான முதல் போரை கட்டவிழ்த்துவிட்டுள்ள நிலையிலும், அதிதீவிர வலதுசாரிகள் அதிகாரத்திற்கு மேலும் நெருக்கமாக நகர்கின்றனர்.

மக்ரோன் இந்தத் தேர்தல்களை, ஜூலை 4ல் பிரிட்டனில் நடக்கவிருக்கும் திடீர்த் தேர்தலுக்கு சற்று முன்பு முதல் சுற்றுத் தேர்தலையும், வாஷிங்டனில் ஜூலை 9 நேட்டோ போர் உச்சிமாநாட்டிற்கு சற்று முன்பாக இரண்டாவது சுற்றுத் தேர்தலுக்கும் அழைப்பு விடுத்தார். உக்ரேனில் ரஷ்யாவுடனான நேட்டோவின் போரை அதிகரிக்க மக்ரோன் மற்றும் பிற அதிகாரிகளின் திட்டங்களை இந்த உச்சிமாநாடு விவாதிக்கும். நேட்டோவின் இந்தத் திட்டங்களை பிரான்சில் 70 சதவீத மக்களும் ஜேர்மனியில் 80 சதவீத மக்களும் எதிர்க்கின்றனர். வெளிநாட்டில் ஒரு ஏகாதிபத்தியப் போரை நடத்தும் வகையில், உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பிற்கு எதிராக போரை நடத்த ஆளும் ஸ்தாபனத்தை தயார்படுத்துவதற்கு இந்த திடீர் தேர்தல்களைப் பயன்படுத்துவதை மக்ரோன் நோக்கமாகக் கொண்டுள்ளார்.

மெலன்சோன் தனது “மக்கள் முன்னணி அரசாங்கத்தின் முதல் 100 நாட்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு, மக்கள் முன்னணி கூட்டணி இப்போது ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும்” என்று உறுதியளிக்கிறார். “ஜனநாயக, சூழலியல் மற்றும் சமூக அவசரநிலைகள் மற்றும் அமைதிக்கு பதிலளிக்கும் வகையில் ஆட்சி செய்வதே எங்களது நோக்கம்” என்று அவர் மேலும் கூறுகிறார்.

ஆனால், மெலன்சோனின் மக்கள் முன்னணியானது, அமைதி மற்றும் ஜனநாயகத்திற்கான சக்தி அல்ல. மாறாக, இந்த மக்கள் முன்னணியின் முன்னோக்கு, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பாதுகாக்கும் முதலாளித்துவ சொத்து உறவுகளின் மீது தாங்கி நிற்கும் அரசாங்கத்தை கொண்டிருக்கிறது. இது, உக்ரேனுக்கான உதவி என்ற போர்வையில் ரஷ்யாவுடனான போரை ஆதரிக்கும் சிக்கனச் சார்பு சோசலிசக் கட்சியுடன் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை கட்டிப்போடுகிறது. சோசலிஸ்ட் கட்சியானது, 1971 இல் முன்னாள் நாசி ஒத்துழைப்பாளர் பிரான்சுவா மித்திரோனால் நிறுவப்பட்டதில் இருந்து அதிதீவிர வலதுசாரிகளுடன் மறைமுக தொடர்புகளைக் கொண்டுள்ளது.

“மக்கள் முன்னணி” என்ற சொல் தொழிலாள வர்க்கத்தினை காட்டிக்கொடுத்த மிக மோசமான துரோகங்களுடன் தொடர்புடையது. 1930 களில் அது, மாஸ்கோ விசாரணைகளின் போது லியோன் ட்ரொட்ஸ்கிக்கு எதிராக ஸ்ராலினிச அவதூறுகளை ஆதரித்ததோடு, 1936 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்தின் போது, தொழிலாள வர்க்கம் சோசலிசத்திற்காக அதிகாரத்திற்கு செல்லும் போராட்டத்திற்கு தடைபோட்டது. இறுதியில், பிரெஞ்சு மக்கள் முன்னணியின் தாராளவாத மற்றும் சமூக ஜனநாயக பாராளுமன்ற உறுப்பினர்கள் 1940 இல், நாசி ஒத்துழைப்புவாதியான விச்சி ஆட்சியின் தலைவர் பிலிப் பெத்தானுக்கு சர்வாதிகார அதிகாரங்களுக்கு வாக்களித்தனர்.

இங்கே, அதிதீவிர வலதுசாரிகளின் எழுச்சி எப்படி நடந்தது என்பதை விளக்குவதுதான், அதனை எதிர்த்துப் போராடுவதில் உள்ள முதல் சவாலாகும். நீண்டகாலமாக ஐரோப்பாவின் மிகவும் இடதுசாரி நாடுகளில் ஒன்றாகக் கருதப்பட்டுவரும், நாசி ஒத்துழைப்பு விச்சி ஆட்சிக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தில் ஆயுதமேந்திய பாரிய எதிர்ப்பு இயக்கம் வளர்ந்த ஒரு நாட்டில், விச்சியின் அரசியல் வாரிசுகள் அதிகாரத்தைக் கைப்பற்றத் தயாராக இருப்பது எப்படி சாத்தியமானது?

நாசிக்களின் பழுப்பு நிற சட்டைகள் அல்லது அதன் பிரெஞ்சு துணை ராணுவ அமைப்புக்கள் தோன்றியதைப் போல, இவை ஒன்றும் பாரிய பாசிச துணை ராணுவ அமைப்புகள் அல்ல. ஆனால், தொழிலாள வர்க்கத்தில் பாரிய கம்யூனிஸ்ட் கட்சிகளை எதிர்த்துப் போராட வேண்டியிருந்த ஹிட்லரின் சகாப்தத்தின் பாசிசத் தலைவர்களைப் போலல்லாமல், இன்றைய அதிதீவிர வலதுசாரிகளுக்கு இத்தகைய இராணுவக் குழுக்கள் வளரத் தேவையில்லை. ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் தொடர்ச்சியான போர்கள், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றில் இருந்து, நவபாசிஸ்டுகள் முதன்மையாக அதன் வலிமையைப் பெறுகின்றனர்.

மேலும், சமூக ஜனநாயகம், ஸ்ராலினிசம் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தினை காட்டிக்கொடுத்த வழித்தோன்றல்களின் பல தசாப்தகால துரோகங்களால் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடையே வளர்ச்சியடைந்துவந்த வெறுப்புக்கள் மற்றும் குழப்பங்களுக்கு நவபாசிஸ்டுகள் உணவளிக்கின்றனர்.

மெலன்சோனின் மக்கள் முன்னணியின் கொள்கைகள் புதியவை என்று அவர் கூறுவது, அவரது மிகப் பெரிய பொய்யாக இருக்கலாம்: அரை நூற்றாண்டு காலமாக மெலன்சோன் செய்ததையே இந்த கொள்கைகள் திரும்பத் திரும்பச் சொல்கின்றன.

உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தலைமையில் இருந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் (ICFI) இருந்து, பியர் லம்பேர்ட்டின் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு (OCI) முறித்துக் கொண்டபோது, மெலன்சோன் OCIல் இணைந்து கொண்டார். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோசலிசக் கட்சிக்கு இடையேயான “இடதுகளின் ஒன்றியத்தை” ஆதரிப்பதற்காக ட்ரொட்ஸ்கிசத்தை OCI நிராகரித்திருந்தது. இதன்பின்பு, மெலன்சோன் 1976 இல் சோசலிசக் கட்சியில் சேர்ந்து கொண்டார்.

1981ல் ஆட்சியை கைப்பற்றிய பிரான்சுவா மித்திரோன், விரைவில் தனது தேர்தல் வாக்குறுதிகளை கைவிட்டு சிக்கன நடவடிக்கைகளை திணித்த பிறகு, மெலன்சோன் செனட்டரானார். சோசலிசக் கட்சி அரசாங்கம் 1990-1991 இல் ஈராக் மீதான அமெரிக்க தலைமையிலான போரில் இணைந்தகொண்ட சமயத்தில், அவர் மித்திரோனுடன் நெருக்கமாக பணியாற்றியதோடு, வணிக சார்பு ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்குவதற்கு அவருக்கு உதவியாக இருந்தார். மித்திரோன் இறந்த பிறகு, மெலன்சோன் 1997 முதல் 2002 வரை சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவான “பன்முக இடதுகளின்” சோசலிசக் கட்சி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார்.

ஸ்ராலினிசம் சோவியத் ஒன்றியத்தினை கலைத்ததிற்கு மத்தியில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் பாரிய தொழிலாள வர்க்க அடித்தளம் சிதைந்தது. இதன் பிறகு, 21 ஆம் நூற்றாண்டில், மெலன்சோன் மார்க்சிஸ்டுகளுக்கு எதிரான நடுத்தர வர்க்க ஜனரஞ்சகக் கோட்பாடுகளின் முன்னணி ஊக்குவிப்பாளராக உருவெடுத்தார்.

2014 ஆம் ஆண்டு, மெலன்சோன் வெளியிட்ட மக்களின் சகாப்தம் என்ற புத்தகத்தில், “ஒரு காலத்தில் இடதுசாரி அரசியலில் ‘புரட்சிகர தொழிலாளி வர்க்கம்’ ஆக்கிரமித்திருந்த இடத்தை இன்று மக்கள் ஆக்கிரமித்துள்ளனர்” என்று எழுதினார். “சோசலிசத்திற்கு அப்பால் செல்ல” அழைப்பு விடுத்த அவர், “இது பழைய சோசலிசப் புரட்சி அல்ல” என்று வலியுறுத்தும் வகையில், “மக்கள் புரட்சியை” ஆதரித்தார்.

இந்த தொழிலாளர் விரோத, சோசலிச எதிர்ப்பு மற்றும் ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பு வாதங்கள் கட்டாயமாக நிராகரிக்கப்பட வேண்டும். போரின் அச்சுறுத்தல்கள் மற்றும் நவபாசிச ஆட்சி ஆகியவை முதலாளித்துவம் ஒரு மரண நெருக்கடியில் இருப்பதை மறுக்கமுடியாமல் காட்டுகின்றன. ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் அக்டோபர் புரட்சியின் பாரம்பரியத்துடன், அதன் தொடர்புகளை புத்துயிர் பெறச்செய்வதே முன்னோக்கி செல்லும் வழியாகும். போர் வெறிபிடித்த முதலாளித்துவ பிரபுத்துவம், அணுஆயுத வெடிப்பைத் தூண்டக்கூடிய ஒரு இராணுவ விரிவாக்கத்தில் இறங்குவதற்கு முன், உலகப் பொருளாதாரம் மற்றும் தொழில்துறையின் கட்டுப்பாட்டை தொழிலாளர்கள் கட்டுப்படுத்த வேண்டும்.

அதிதீவிர வலதுசாரிகளின் எழுச்சியானது, சோசலிசத்திற்கான போராட்டத்தின் சாத்தியமற்ற தன்மையை குறிக்கவில்லை, மாறாக அதன் அவசரத்தை குறிக்கிறது. 1930களில் பிரான்சின் பாரிய விவசாயிகளிடையே பாசிசத்திற்கான ஆதரவு வளர்ச்சியின் ஆபத்து பற்றி ட்ரொட்ஸ்கி இந்தக் கருத்தைக் கூறினார்.

ஸ்ராலினிஸ்டுகள், சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் தாராளவாதிகள் இடையேயான மக்கள் முன்னணிக்கு எதிராக நான்காம் அகிலத்தை உருவாக்க அவர் போராடிக் கொண்டிருந்த போது, ​​பிரான்ஸ் எங்கே செல்கிறது என்ற அவரது படைப்பில் பின்வருமாறு அவர் எழுதினார்:

தற்போதைய குட்டி முதலாளித்துவ வர்க்கம் “தீவிர நடவடிக்கைகளுக்கு” அஞ்சுவதால் தொழிலாளர் வர்க்க கட்சிகளுக்கு செல்லவில்லை என்று வலியுறுத்துவது பொய்யானது, மூன்று மடங்கு தவறானது. மாறாக விட்டுவிடுங்கள். அடிமட்டத்திலுள்ள குட்டி முதலாளித்துவ வர்க்கம், அதன் பெரும் மக்கள், தொழிலாளர் வர்க்க கட்சிகளில் பாராளுமன்ற இயந்திரங்களை மட்டுமே பார்க்கின்றது. அவர்கள் தங்கள் வலிமையிலோ, போராடும் திறனிலோ, இம்முறை போராட்டத்தை இறுதிவரை நடத்தத் தயார் என்றோ நம்பவில்லை.

அதிதீவிர வலதுசாரி வாக்குகளின் தற்போதைய அதிகரிப்பு, அடுத்தடுத்து வந்த சோசலிசக் கட்சி அரசாங்கங்களால் தொழில்துறை அழிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் மத்தியில், முக்கியமாக கிராமப்புற தொழிலாளர்கள் வர்க்கப் போராட்டத்தை எதிர்க்கிறார்கள் என்று அர்த்தமல்ல. இவர்கள், சமூக சமத்துவமின்மைக்கு எதிரான 2018-2019 “மஞ்சள் அங்கி” எதிர்ப்பு இயக்கம் போன்ற வெடிக்கும் இயக்கங்களில் பலர் இணைந்துள்ளனர். எனினும், நேட்டோ, மக்ரோன் மற்றும் இன்றைய மக்கள் முன்னணியின் ஊழல் பிடித்த அதிகாரத்துவங்களுக்கு எதிரான உறுதியான, ட்ரொட்ஸ்கிச போராட்டத்தின் அடிப்படையில் மட்டுமே, அவர்கள் தீவிர வலதுசாரிகளிடமிருந்து வெற்றிகளை பெற முடியும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சுப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (PES) பாசிசம் மற்றும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான பரந்த எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை ஆதரிக்கிறது. இராணுவ அதிகரிப்பு மற்றும் சிக்கன நடவடிக்கை மக்ரோனையும் நேட்டோவையும் பிரான்சிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களுடன் மோத வைக்கும். ஆனால், இந்தப் போராட்டத்தைத் தொடர, சோசலிசத்திற்கான சர்வதேச இயக்கத்தில் பாசிசத்தையும் போரையும் எதிர்த்து, தொழிலாள வர்க்கத்திற்குள் சாமானிய போராட்ட அமைப்புகளைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.

Loading