ஏகாதிபத்திய சக்திகள் ஜி7 மற்றும் நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்களின் உச்சிமாநாட்டில் உலகளாவிய போரைத் தீவிரப்படுத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகளின் அச்சு நாடுகள், வெள்ளிக்கிழமை (ஜூன் 14) ஜி 7, நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டம் மற்றும் உக்ரேன் தொடர்பான தொடர்பு குழு ஆகியவற்றை உள்ளடக்கிய உச்சிமாநாட்டின் ஒரு பரபரப்பான வாரத்தை நிறைவு செய்தன. இவை அனைத்தும், ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக அச்சு நாடுகள் தொடுத்து வருகின்ற உலகப் போரை பெரிதும் தீவிரப்படுத்தும் விளைவைக் கொண்டிருந்தன.

ஜனாதிபதி ஜோ பைடென் மற்றும் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி ஆகியோர் வியாழக்கிழமை, ஜூன் 13, 2024 அன்று இத்தாலியின் சவெல்லெட்ரியில் G7 இன் ஒரு பகுதியாக பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் கைகுலுக்குகின்றனர் [AP Photo/Alex Brandon]

இந்த உச்சிமாநாடு, வாஷிங்டன் டிசி இல் வரவிருக்கும் ஜூலை 9-11 நேட்டோ உச்சிமாநாட்டிற்கு களம் அமைக்கின்றன. இது உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரில் நேரடி நேட்டோ ஈடுபாட்டின் மட்டத்தில் பண்புரீதியிலான தீவிரப்பாட்டைக் காணுமென எதிர்பார்க்கப்படுகிறது.

பாசிசவாத சர்வாதிகாரியை “ஒரு நல்ல அரசியல்வாதி” என்று பகிரங்கமாக புகழ்ந்துள்ள பெனிட்டோ முசோலினியின் ஒரு சீடரான இத்தாலிய பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனியின் (Giorgia Meloni) அனுசரணையின் கீழ், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் தலைவர்கள் இத்தாலியில் சந்தித்த ஜி7 கூட்டம் இவ்வார உச்சிமாநாடுகளில் மிகவும் உயர்மட்டமாக இருந்தது.

இந்த உச்சிமாநாடு உலகெங்கிலும் உள்ள ரஷ்ய சொத்துக்களை நேரடியாக பறிமுதல் செய்வதை நோக்கி நகர்ந்தது; பறிமுதல் செய்யப்பட்ட ரஷ்ய சொத்துக்கள் மீதான வட்டியில் இருந்து போர் முயற்சிகளுக்காக உக்ரேனுக்கு 50 பில்லியன் டாலர் வழங்குவதாக உச்சிமாநாடு உறுதியளித்தது. “ரஷ்யாவுக்கு எதிராக ஒரு நீண்டகால பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், உக்ரேனின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மற்றும் உக்ரேனின் நலனுக்காக ஜி7 அசாதாரண வருவாய்களைப் பயன்படுத்துவதை விரைவுபடுத்துவதன் மூலமாக கடன்களைத் தொடங்கும், இதன் மூலம் இந்தாண்டின் இறுதிக்குள் உக்ரேனுக்கு சுமார் 50 பில்லியன் டாலர் கூடுதல் நிதியுதவியை கிடைக்கச் செய்யும்” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

ஜி7 உச்சிமாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஆகியோர் 10 ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர், இது ரஷ்யாவுடனான போரில் வாஷிங்டனின் ஈடுபாட்டை மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்த ஒப்பந்தத்தை அறிவித்த பைடன், “புட்டினுக்கு மற்றொரு நினைவூட்டல்: நாங்கள் பின்வாங்கப் போவதில்லை” என்று அழைத்தார்.

அதே தொனியில், ஜி7 உச்சி மாநாட்டின் அறிக்கை அறிவித்தது, “ரஷ்யாவின் கொடூரமான மற்றும் நியாயப்படுத்த முடியாத ஆக்கிரமிப்பு போருக்கு எதிராக உக்ரேன் அதன் சுதந்திரம், இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாத்து வருகிறது.”

முக்கியமாக, ரஷ்யாவுடனான சீனாவின் பொருளாதார உறவுகள் குறித்து, ஜி7 இன்று அதன் மிகவும் வெளிப்படையான கண்டனத்தை வெளியிட்டது, ரஷ்யாவின் போர் எந்திரத்திற்கு அந்நாட்டின் அரசாங்கம் பொருள் உதவிகளை வழங்கி வருவதாகவும், “ரஷ்யா அதன் பாதுகாப்பு தொழில்துறை தளத்திற்கான பொருட்களை கையகப்படுத்துவதற்கு உதவுவதற்கான” முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அது குற்றஞ்சாட்டியது. “ரஷ்யாவுக்கு சீன மக்கள் குடியரசின் ஆதரவு குறித்து நாங்கள் எங்களது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறோம்” என்று அந்த மாநாட்டு அறிக்கை அறிவித்தது.

அதேபோல் காஸாவில், 2023 அக்டோபரில் இருந்து 40,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்களைக் கொன்ற இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு G7 நடைமுறை ஆதரவை வழங்கியது. “நாங்கள் இஸ்ரேலுக்கும் அதன் மக்களுக்கும் எங்கள் முழு ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்துகிறோம், மேலும் அதன் பாதுகாப்பை நோக்கிய எங்கள் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்” என்று அது அறிவித்தது.

அந்த அறிக்கை வெளிவந்த அதேநாளில், வாஷிங்டனில் வரவிருக்கும் நேட்டோ உச்சிமாநாட்டிற்கான களத்தை அமைப்பதற்காக, நேட்டோ கூட்டணியின் பாதுகாப்பு அமைச்சர்களின் ஒரு கூட்டத்தை நேட்டோ நடத்தியது.

நேட்டோ பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் (Jens Stoltenberg) அறிவிக்கையில், உக்ரேனிய போரில் நேட்டோ அதன் ஈடுபாட்டை விரிவுபடுத்துவதிலும் மற்றும் ரஷ்யாவை இலக்கில் வைத்து இராணுவ மீள்ஆயுதமயமாக்கலிலும் “குறிப்பிடத்தக்க முன்னேற்றம்” கண்டிருப்பதாக அறிவித்தார்.

வெவ்வேறு நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான தற்காலிக உடன்பாடுகளுக்கு மாறாக, உக்ரேனுக்கு ஆயுதம் வழங்குவதிலும், அதனை ஒருங்கிணைப்பதிலும் நேட்டோ ஒரு முன்னணி பாத்திரம் வகிக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதே அடுத்த மாத உச்சிமாநாட்டின் முக்கிய இலக்கு என்று அவர் தெரிவித்தார்.

அவர் கூறுகையில் :

பாதுகாப்பு உதவி மற்றும் பயிற்சியின் ஒருங்கிணைப்பை நேட்டோ எவ்வாறு வழிநடத்தும் என்பதை வரையறுக்கும் ஒரு திட்டத்தில் நாங்கள் உடன்பட்டுள்ளோம். நேச நாடுகளில் உள்ள பயிற்சி மையங்களில் உக்ரேனிய ஆயுதப் படைகளின் பயிற்சியை நேட்டோ மேற்பார்வையிடும், நன்கொடைகளைத் திட்டமிடுவதன் மூலமும் ஒருங்கிணைப்பதன் மூலமும் உக்ரேனுக்கு ஆதரவளிக்கும், ஆயுத உபகரணங்களின் பரிமாற்றம் மற்றும் பழுதுபார்ப்பை நிர்வகிக்கும், மேலும் உக்ரேனின் ஆயுதப்படைகளின் நீண்டகால வளர்ச்சிக்கு ஆதரவை வழங்கும்.

பெரிய பொய்யை நடைமுறைப்படுத்திய ஸ்டோல்டென்பேர்க், தனது முன்மொழிவுகளின் மையப் புள்ளியை உறுதியாக மறுத்து, “இந்த முயற்சிகள் நேட்டோவை மோதலில் ஒரு தரப்பாக ஆக்காது,” என்று அறிவித்தார்.

உண்மை இதற்கு நேர்மாறானது. உண்மையில், ஆயுத தளவாடங்கள், திட்டமிடல்கள், பயிற்சிகள் மற்றும் கட்டளை-மற்றும்-கட்டுப்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதில் முன்னணி பாத்திரம் வகிப்பதன் மூலம், நேட்டோவை அதிகரித்தளவில் மோதலின் ஒரு நேரடி பாகமாக ஆக்குவதே இந்த மாற்றங்களின் மையப் புள்ளியாக இருந்து வருகிறது.

ரஷ்யாவிற்குள் நேரடியாக தாக்குவதற்கு அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரேனுக்கு அமெரிக்கா அங்கீகாரம் அளித்திருப்பதாக கடந்த வாரம் பைடென் அறிவித்ததையும், மற்றும் உக்ரேனுக்கு தரைப்படை துருப்புகளை அனுப்பவிருக்கும் நாடுகளின் ஒரு “கூட்டணியை” உருவாக்க பிரான்ஸ் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நகர்வுகளையும் தொடர்ந்து இந்த உச்சிமாநாடு நடந்தது.

உக்ரேனிய போரில் நேட்டோ அதன் நேரடித் தலையீட்டை அதிகரித்து வருகின்ற அதேவேளையில், அது ஒட்டுமொத்த ஐரோப்பிய கண்டத்திலும் ரஷ்யாவுடன் இன்னும் பரந்த போருக்கான செயலூக்கமான திட்டங்களைத் தயாரித்து வருகிறது. கடந்த ஆண்டு நேட்டோ உச்சிமாநாட்டில் ஸ்டோல்டன்பெர்க், “பனிப்போருக்குப் பின்னர் மிகவும் விரிவான பாதுகாப்புத் திட்டங்களை நேச நாடுகள்” ஒப்புக்கொண்டதாக அறிவித்தார்.

இதற்கான திட்டங்கள் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளன. ஸ்டோல்டென்பேர்க் பின்வருமாறு அறிவித்தார்:

நேட்டோவின் கட்டளைக்கு நேச நாடுகள் பல தசாப்தங்களில் காணப்படாத அளவிற்கு தமது படைகளை வழங்கி வருகின்றன. இன்று நாம் அனைத்து களங்களிலும் 500,000 துருப்புகளை உயர் தயார்நிலையில் வைத்திருக்கிறோம், இது 2022 மாட்ரிட் உச்சிமாநாட்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கணிசமாக அதிகமாகும்.

அவர் மேலும் கூறியதாவது:

நேட்டோ கிழக்கு பக்கவாட்டில் உள்ள போர்க் குழுக்களின் எண்ணிக்கையையும் இரட்டிப்பாக்கியுள்ளது. நமது திறன்களை சோதிக்க கூட்டணி நாடுகளும் பெரிய மற்றும் அதிக தேவைப்படும் பயிற்சிகளில் பங்கேற்கின்றன. இந்த ஆண்டு, Exercise Steadfast Defender ஐரோப்பா எங்கிலும் சுமார் 90,000 துருப்புகளை ஒன்றாகக் கொண்டு வந்தது.

மிகவும் அச்சுறுத்தும் வகையில், ஸ்டொல்டென்பேர்க் “எங்கள் அணுஆயுத திறன்களின் தற்போதைய தழுவல் பற்றியும் நாங்கள் விவாதித்தோம். நாங்கள் ஒரு அணுஆயுதக் கூட்டணி” என்று அறிவித்தார்.

அமெரிக்கா, அதன் இப்போதைய அணுஆயுத தளவாடங்களை நவீனப்படுத்துவதற்கான பல ட்ரில்லியன் டாலர் திட்டத்திற்கும் மேலாக, அது நிலைநிறுத்தும் அணுஆயுதங்களின் மொத்த எண்ணிக்கையை விரிவாக்க திட்டங்களை உருவாக்கி வருவதாக கடந்த வாரம் நியூ யோர்க் டைம்ஸில் வெளியான ஒரு அறிக்கைக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வருகிறது.

நேட்டோவின் இராணுவ மீள்ஆயுதமயமாக்கலின் விகிதம் மலைப்பூட்டுவதாக உள்ளது. அட்லாண்டிக் கவுன்சில் சிந்தனைக் குழாமின் ஒரு சமீபத்திய அறிக்கை பின்வருமாறு குறிப்பிட்டது:

கிழக்கு பக்கவாட்டில் 2017 இல் ஸ்தாபிக்கப்பட்ட நான்கு போர் குழுக்களின் அளவை இரட்டிப்பாக்க நேட்டோ நடவடிக்கை எடுத்துள்ளதுடன், ஐந்து விமான காவல் நடவடிக்கைகளுடன் சேர்த்து, மேலும் நான்கு குழுக்களையும் சேர்த்துள்ளது. அமெரிக்கா ஐரோப்பாவில் கூடுதல் பிரிகேட் தளவாடங்களையும், ஐரோப்பாவில் இரண்டு கூடுதல் F35 விமான படைப்பிரிவுகளையும் சேர்த்துள்ளது, மேலும் கிழக்கு பக்கவாட்டில் அதன் இருப்பை பிரிகேட் அளவிலிருந்து டிவிஷன் (division) அளவு வரை அதிகரித்துள்ளது. மேலும், இது உதவியாளர்களுடன் கூடிய படையணியை முன்னோக்கி நகர்த்தும் ஒரு தலைமையகத்தால் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வார உச்சிமாநாடு, பாதுகாப்புச் செயலர் லாயிட் ஜே. ஆஸ்டின் ((Lloyd J. Austin) ) தலைமையில் உக்ரேனிய பாதுகாப்புக்கான தொடர்பு குழுவின் மாதாந்திர கூட்டத்தை அடுத்து நடந்தன.

உக்ரேன் மற்றும் அதன் ஆதரவாளர்களால் “ரஷ்ய படையெடுப்பாளர்கள் மீது சுமத்தப்பட்ட அதிர்ச்சியூட்டும் இழப்புகள்” குறித்து ஆஸ்டின் பெருமையடித்துக் கொண்டார். அவர் பின்வருமாறு அறிவித்தார்:

பிப்ரவரி 2022 இல் புட்டினின் முழு அளவிலான படையெடுப்பிலிருந்து, குறைந்தது 350,000 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர். உக்ரேனிய படைகள் கருங்கடலில் 24 ரஷ்ய கப்பல்களை மூழ்கடித்து அழித்துள்ளன அல்லது சேதப்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து —கிரெம்ளின் அதன் புதுப்பிக்கப்பட்ட தாக்குதலைத் தொடங்குவதற்கு சற்று முன்னதாக— ரஷ்யா உக்ரேனில் போர் முன்னரங்க நிலைகள் நெடுகிலும் 2,600 க்கும் அதிகமான போர் வாகனங்களை இழந்துள்ளது.

அமெரிக்க அதிகாரிகளின் ரஷ்ய இழப்புகள் என்று கூறப்படுவது குறித்து இந்த குதூகலம் ஒருபுறம் இருந்தாலும், உக்ரேனுக்கான இராணுவ நிலைமை பேரழிவுகரமானதாக உள்ளது. போர்முனையில் நூறாயிரக்கணக்கான சிப்பாய்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தும், சர்வாதிகார ஜெலென்ஸ்கி அரசாங்கத்திற்கும் மற்றும் நேட்டோ தலைமையிலான கடைசி உக்ரேனிய போருக்கும் எதிராக அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்தும், நாடு ஒரு பெரிய கட்டாய இராணுவ சேவை நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்த இராணுவப் பேரழிவு, அமெரிக்காவும் நேட்டோவும் போரில் தங்கள் தலையீட்டை விரிவுபடுத்த மேற்கொள்ளும் நகர்வுகளின் பின்னணியை உருவாக்குகிறது. இந்தப் போர், விரைவில் கட்டுப்பாட்டை மீறிப் பரவி ஐரோப்பா முழுவதையும் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதையும் சூழ்ந்துகொள்ளும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

Loading