பிரான்சின் முன்கூட்டிய தேர்தல்கள்: புதிய மக்கள் முன்னணி மற்றும் நவ பாசிஸ்டுகளின் எழுச்சிக்கு மத்தியில் மக்ரோனின் கட்சி வீழ்ச்சியடைந்தது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐரோப்பியத் தேர்தல்களில் அவரது கட்சி தோல்வியடைந்த பின்னர், மக்ரோன் அழைப்பு விடுத்திருந்த தேர்தல்களின் முதல் சுற்றிலேயே நேற்று அவர் மற்றொரு அவமானகரமான பின்னடைவைச் சந்தித்தார். நவ-பாசிசவாத தேசிய பேரணி (Le Rassemblement national - RN) மற்றும் அதன் கூட்டாளிகள் 33 சதவீத வாக்குகளையும், ஜோன்-லூக் மெலோன்சோனின் புதிய மக்கள் முன்னணி (NFP) 28 சதவீத வாக்குகளையும் பெற்றது. மக்ரோனின் ஒன்றிணைந்த கூட்டணி 21 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது வாக்குச் சீட்டை போட்டார், ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 30, 2024 [AP Photo/Yara Nardi]

ஜூலை 7 ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்தலில் யார் இடங்களை வெல்வார்கள் என்பதற்கான கணிப்புகள் நிச்சயமற்றவை, பெரும்பாலானவை RN 577 இடங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் முழுமையான பெரும்பான்மையைப் பெறுவதற்குத் தேவையான 289 இடங்களைப் பெறத் தவறியதைக் காட்டுகின்றன. ஆனால், அது 230 முதல் 280 இடங்கள் வரை வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. NFP 125 முதல் 165 இடங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் குழுமம் கட்சி 70 முதல் 100 இடங்களுக்குள் குறையும். 6.9 சதவீத வாக்குகளைப் பெற்ற வலதுசாரி Les Républicains-LR கட்சி 40 முதல் 60 இடங்களைப் பெறும்.

இது மக்ரோனை கடுமையாக நிராகரிப்பதாகும். அவர் NFP மற்றும் RN இன் “தீவிரங்களுக்கு” எதிராக ஜனநாயகத்தின் ஒரு பாதுகாவலராக பிரச்சாரம் செய்தார். ரஷ்யா மீது போர் தொடுக்க உக்ரேனுக்கு தரைப்படை துருப்புகளை அனுப்ப அறிவுறுத்தினார். இந்த வாதங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை.

மக்ரோன் பெருவாரியான மக்கள் எதிர்ப்பை மீறி மக்களுக்கு எதிராக ஆட்சி நடத்தி வருகிறார் என்பதையும், நேட்டோவுடனான அவரது போர் திட்டங்கள் ஒரு பேரழிவுகரமான தீவிரப்பாட்டின் அபாயத்தை முன்னிறுத்துகின்றன என்பதையும் தொழிலாளர்கள் அறிவார்கள்.

66 சதவீத வாக்குப்பதிவுடன் - ஒரு பாராளுமன்றத் தேர்தலில் 30 ஆண்டுகளில் மிக உயர்ந்தது - வாக்காளர்கள் அவரது கட்சியை பாராளுமன்றத்தில் ஒரு எஞ்சிய பகுதிக்கு குறைத்தனர். ஞாயிற்றுக்கிழமை தேர்தல்களில் இருந்து வெளிப்படும் எந்தவொரு வருங்கால அரசாங்க கூட்டணியிலும் அவரது கட்சி ஒரு துணை சக்தியாக இருக்கும் என்பதை அனைத்து கணிப்புகளும் சுட்டிக்காட்டுகின்றன.

அநேகமாக அவர் RN க்கு எதிராக NFP மற்றும் LR உடன் ஒரு கூட்டணிக்கு முனையவிருப்பதாக மக்ரோன் நேற்றிரவு சுட்டிக்காட்டினார். “இந்த பாராளுமன்றத் தேர்தல்களின் முதல் சுற்றில் அதிக வாக்குப்பதிவு நமது அனைத்து சக தேசபக்தர்களுக்கும் இந்த வாக்களிப்பின் முக்கியத்துவத்தையும், அரசியல் நிலைமையை தெளிவுபடுத்துவதற்கான விருப்பத்தையும் நிரூபிக்கிறது,” என்று அவர் கூறினார்.

RN தடுக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்த அவர், “தேசிய பேரணிக்கு முன்னால் ஒரு பெரிய பேரணி தெளிவாக ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் இரண்டாம் சுற்றில் போட்டியிட வேண்டும்” என்று அறிவித்தார்.

வெளியேறவிருக்கும் பிரதம மந்திரி காப்ரியல் அட்டல், “தேசிய பேரணியை தோற்கடிக்கக் கூடிய வேட்பாளர்களின் நலனுக்காகவும், குடியரசின் இன்றியமையாத மதிப்புகளை [குழுமம்] பகிர்ந்து கொள்ளும் வேட்பாளர்களின் நலனுக்காகவும்” கூட்டணிகளை உருவாக்க அழைப்புவிடுத்தார். வேலையின்மை காப்பீட்டை சீர்திருத்தும் தன்னுடைய மிகவும் செல்வாக்கற்ற திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் அவர் அறிவித்தார்.

RN கட்சித் தலைவர் மரின் லு பென்னும் பிரதம மந்திரி வேட்பாளர் ஜோர்டான் பார்டெல்லாவும் இரண்டாவது சுற்றில் RN க்கு அறுதிப் பெரும்பான்மை வழங்குமாறு வாக்காளர்களுக்கு அழைப்புவிடுத்தனர்.

“பிரெஞ்சுக்காரர்கள் 7 ஆண்டுகால அவமதிப்பு மற்றும் அரிக்கும் சக்தியுடன் பக்கத்தைத் திருப்புவதற்கான அவர்களின் விருப்பத்தைக் காட்டியுள்ளனர்” என்று லு பென் கூறினார். “எங்களுக்கு அறுதிப் பெரும்பான்மை தேவை. முதல் சுற்றில் எங்கள் வேட்பாளர்களை நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால் உங்கள் வாக்கை புதுப்பிக்க நான் உங்களை அழைக்கிறேன். நீங்கள் வேறொரு தெரிவை செய்திருந்தால், பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் ஐக்கியத்திற்கான கூட்டணியில் இணைய நான் உங்களை அழைக்கிறேன்,” என்றார்.

“ஜனாதிபதி முகாம் (...) இனியும் வெல்லும் நிலையில் இல்லை,” என்று கூறிய பார்டெல்லா, அதி இடதின் அச்சுறுத்தலுக்கு எதிராக “பிரான்சை வெற்றிபெறச் செய்யக்கூடிய ஒரு தேசபக்த அரணாக” RN ஐ விவரித்தார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், “அரசியலமைப்பு மற்றும் குடியரசின் ஜனாதிபதியின் செயல்பாட்டை மதிப்பார், ஆனால் நாங்கள் செயல்படுத்தும் கொள்கையில் பிடிவாதமாக இருப்பார்” என்று அவர் கூறினார்.

தன்னுடைய பங்கிற்கு NFP இன் தலைவரான ஜோன்-லூக் மெலன்சோன் முன்கூட்டிய தேர்தல்களின் இரண்டாம் சுற்றை தன்னுடைய கூட்டணிக்கும் நவ-பாசிசவாதத்திற்கும் இடையிலான தேர்வாக முன்வைத்தார்.

“நாங்கள் விதிவிலக்கான தீவிரத்தின் இரண்டாவது சுற்றை நோக்கி செல்கிறோம். நாடே தேர்வு செய்ய வேண்டும். சமூக, மத, நிற, புவியியல் ஏற்றத்தாழ்வுகளை அது மேலும் மோசமாக்குமா அல்லது முன் நிபந்தனைகள் ஏதுமின்றி ஒரே மக்களாக ஒன்றிணையுமா? இது இரண்டாவது சுற்றின் தேர்வு. (...) இந்த நிலைமைகளின் கீழ், புதிய மக்கள் முன்னணிக்கு நாம் அறுதிப் பெரும்பான்மையை வழங்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த முன்மொழிவுகளையும், வேறு எந்த நியாயமான கோரிக்கையையும் நம்மால் கொண்டிருக்க முடியாது” என்று அவர் கூறினார்:

நேற்றிரவு, NFP க்குள் மெலோன்சோனின் நிலைப்பாடு, அவரது இரண்டு போட்டியாளர்களின் தேர்தல் தோல்விகளால் ஓரளவு பலப்படுத்தப்பட்டது. ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும், பாதுகாப்பு விடயங்களில் மெலோன்சோனை கடுமையாக விமர்சித்து வந்தவருமான ஃபாபியன் ரூசெல், வடக்கில் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டார்.

அடிபணியாத பிரான்ஸ் இயக்கத்திற்குள்ளாக உக்ரேனிய போரை ஊக்குவித்த பிரான்சுவா ருஃபின், சோம் இல் RN வேட்பாளர் நத்தலி ரிபெய்ரோ-பில்லெட்டுக்கு எதிராக சாதகமற்ற இரண்டாம் சுற்றில் உள்ளார் என்பதோடு, அவர் நாடாளுமன்ற இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள போராடி வருகிறார்.

மக்ரோனின் கீழ் பிரதம மந்திரியாக இருக்க மீண்டும் மீண்டும் முன்வந்துள்ள மெலோன்சோன், புதிய மக்கள் முன்னணி மக்ரோனின் வேட்பாளர்களை ஆதரிக்கும் என்பதையும் சமிக்ஞை செய்துள்ளார். NFP ஒரு குழும வேட்பாளரிடம் இருந்து வாக்குகளைப் பறித்து அவ்விதத்தில் RN வெற்றி பெற அனுமதிக்க முடியுமானால், “எங்கள் கோட்பாடுகளுக்கு இணங்க, எங்கும் RN வெற்றி பெற நாங்கள் அனுமதிக்க மாட்டோம், அதனால்தான் (...) நாங்கள் 3 வது இடத்திற்கு வந்தால், எங்கள் வேட்புமனுவை வாபஸ் பெறுவோம். எல்லா சூழ்நிலைகளிலும், எங்கள் அறிவுறுத்தல்கள் தெளிவாக உள்ளன: RN க்கு இனி ஒரு வாக்கு கூட வேண்டாம்” என்று அவர் கூறினார்.

யதார்த்தத்தில், மக்ரோனின் போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ் அரசு கொள்கைகளை தொழிலாளர்களும் இளைஞர்களும் பாரியளவில் நிராகரித்திருப்பது மட்டுமே நிலைமையின் ஒரே தெளிவான கூறுபாடாகும். பிரான்சில் நடந்த வாக்களிப்பு வெறுமனே உக்ரேனுக்கு எதிரான இராணுவ தீவிரப்பாடு, காசா இனப்படுகொலை மற்றும் முதலாளித்துவ பொலிஸ் அரசுகளால் திணிக்கப்பட்ட சமூக செலவினக் குறைப்பு கொள்கைகளை சர்வதேச தொழிலாள வர்க்கம் பரந்த அளவில் நிராகரித்திருப்பதன் ஒரு வெளிப்பாடு மட்டுமே.

ஆனால் பிரெஞ்சு அரசியல் ஸ்தாபனம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் இந்த உணர்வுகளை வெளிப்படுத்தவில்லை, மேலும் தேர்தல்களின் முடிவை இன்னும் கணிக்க இயலாது. புதிய மக்கள் முன்னணி மற்றும் குழுமம் கட்சிக்கு (Ensemble) இடையே ஒரு கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்குமாறு மக்ரோன் கேட்டுக்கொண்டால், குடியரசுக்கட்சி (LR) எடுக்கும் நிலைப்பாடு மற்றும் பாராளுமன்றத்தில் இந்த சக்திகளின் சமநிலை தெளிவாக இல்லை,

LR க்குள்ளாக RN உடனான ஒரு கூட்டணியின் ஓர் ஆதரவாளரான எரிக் சியோட்டி, நேற்றிரவு இது தொடர்பாக ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டார்: “இன்றிரவு, நமது தொழிற்சங்கத்திற்கும் அதிஇடதின் இந்த திகிலூட்டும் அபாயத்திற்கும் இடையே ஒரு தெரிவை மறுப்பது இனியும் சாத்தியமில்லை. ஒட்டுமொத்த வலதின் வெற்றியில் குடியரசுக் கட்சியினர் பங்கேற்க வேண்டும்.”

அனைத்திற்கும் மேலாக, ஒரு சாத்தியமான NFP-Ensemble-LR கூட்டணி அரசாங்கம் தொழிலாள வர்க்கத்திற்கு எதையும் வழங்கப் போவதில்லை. அது வெளிப்படையான வலதுசாரி சக்திகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு முதலாளித்துவ அரசாங்கமாக இருக்கும். இதற்கும் கூடுதலாக, உக்ரேனுக்கு துருப்புகளை நிலைநிறுத்துவதற்கும் ஆயுதங்களை வினியோகிப்பதற்கும், மக்ரோனின் ஆக்ரோஷமான, தொழிலாளர்-விரோத திட்டநிரலுக்கு இணக்கமாக இருக்கும் வகையில் பொலிஸ்துறை மற்றும் உளவுத்துறை சேவைகளைப் பலப்படுத்துவதற்கும் புதிய மக்கள் முன்னணியின் வேலைத்திட்டம் பொறுப்பேற்கிறது.

அத்தகைய ஒரு கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்டால், அது பிரெஞ்சு நிதி மூலதனம் தனது ஏகாதிபத்திய நலன்களைத் தொடரும் கருவிகளாக புதிய மக்கள் முன்னணி மற்றும் மெலோன்சோனை அதிகாரத்தின் தாழ்வாரங்களில் நேரடியாக ஒருங்கிணைக்கும் முயற்சியாக இருக்கும். இந்த அரசாங்கம் விரைவில் அல்லது பின்னர் தொழிலாள வர்க்கத்துடன் வெளிப்படையான மோதலில் ஈடுபடும்.

Loading